ராவணா 12

பரந்தாமனோ இதற்கு மேல் தாங்க முடியாது என்கிற நிலையில்,

“உனக்கு என்ன வேணும்? ஏன் இப்படி பண்ற? என்னை விட்று” என வார்த்தைகளை கோர்த்து பேச முடியாது மிகவும் தடுமாறியவர் கடினப்பட்டு ஒருவழியாக பேசி முடித்தார்.

கண்களை மூடிய நிலையில் பரந்தாமனின் அலறலை ரசித்து கொண்டிருந்த ராவணன் அவன் பேசியதை கேட்டு தன் விழிகளை திறந்த, சில நொடிகள் பரந்தாமனை வெறித்து பார்த்தவன்,

“வேணும் தான், ம்ம்”என்று யோசிப்பது போல தனது ஆள்காட்டி விரலால் நெற்றியை தட்டினான். பிறகு யோசனை வந்தவனாய் பரந்தாமனை பார்த்து,

“உன் உயிரை, தரியா?” என இலகுவாக கேட்டு அவனது அதிர்ந்த முகத்தை பார்த்து சத்தமாக சிரிக்க, தான் யார்? தன் செல்வாக்கு என்ன? இவனிடம் எல்லாம் இப்படி சிறைப்பட்டு கிடக்க வேண்டியிருக்கிறதே என்கிற இயலாமையில் அவனை பார்த்து முறைத்தவர்,

“இங்க பாரு திரும்பவும் சொல்றேன், எவ்வளவு பணம் வேணும்னாலும் வாங்கிக்கோ என்னை விட்று. நீ தப்பான இடத்துல மோதிட்டு இருக்க டா, நான் மட்டும் நினைச்சேன் நீ இருக்கமாட்ட” என முதலில் ஆவேசத்துடன் கூறியவர், ‘முடிஞ்சத பண்ணிக்கோடா’ என்னும் தோரணையில், எதற்கும் அசையாது தன்னை திமிரோடு பார்க்கும் ராவணனை பார்த்து மனதளவில் தளர்ந்தவர் ‘இவனிடம் இனி மிரட்டியெல்லாம் ஒன்றும் வேலைக்காகாது முடிந்தளவு பணிந்துவிட வேண்டும், நமக்கான நேரம் கிடைக்கும் பொழுது ஒருத்தனையும் விட கூடாது’ என மனதிற்குள் முடிவெடுத்தவர்,

“நான் உனக்கு என்ன டா பண்ணினேன்? என்கூட உனக்கு என்ன தான் பகை? எனக்கு உன்னை இதுக்கு முன்னாடி பார்த்த மாதிரி கூட நியாபகம் இல்லையே” என சோர்வுடன் சொல்ல, 

“ஓ! நீ என்ன பண்ணினன்னு உனக்கு நியாபகம் இல்லையா?” என்று ஒருவித அழுத்தத்துடன் கேட்டவனிடம் என்ன பதில் கூறுவது என புரியாது விழித்த பரந்தாமன், “ஆமா நியாபகம் இல்லை” என தலையாட்டினான்.

“ம்ம் நியபாகம் இல்லைன்னா, நியாபகம் படுத்திடலாம் பரந்தாமன்” என்ற ராவணனின் குரலில் இருந்த அமைதி பரந்தாமனை மிகவும் அச்சுறுத்த, அவனது விழிகளில் தெரிந்த பயத்தை உள்வாங்கியபடி நாற்காலியில் இருந்து எழுந்து கொண்ட ராவணன், பரந்தாமனின் அருகே வந்து அவனின் வலது கரத்தை வளைத்து பிடித்து, அதை அவனது முதுகுடன் சேர்த்து அழுத்தி, வலியில் அவன் துடித்த துடிப்பை ரசித்தபடி அவனிடம்,

“தப்பான இடத்துல கைவச்சிட்ட பரந்தாமா! அஜூதியாவை யாருன்னு நினைச்ச ஹான்” என்று அவன் பார்த்த பார்வையில் பரந்தாமனுக்கு உள்ளே தட தடத்தது. ஆக அஜூதியாவுக்காக தான் இவ்வளவுமா? ஒரு பெண்ணிற்காகவா! தன்னை படுத்துகிறான்! பரந்தாமன் அதிர்ச்சியுடன் அவனை பார்க்க, அவனது வலது கரத்தை இழுத்து பிடித்த ராவணன் “இந்த கை தானடா” என ஒருகணம் தன் விழிகளை மூடி அஜூதியா கலைந்த சிகையும், கிழிந்த ஆடையுடன் தன்னிடம் காப்பாற்றும் படி ஓடி வந்ததையும், பரந்தாமன் அவளது கரத்தை அழுத்தமாக பிடித்திருந்ததையும், நினைத்து பார்த்தவன் அதன் பிறகு எதை பற்றியும் யோசித்து பார்க்கவில்லை.

கண்களை மூடிய நிலையில் தன் மறு கரத்தை மட்டும் சந்ருவை நோக்கி நீட்டியவன் அவன் கொடுத்த அகன்ற கூர்மையான அமைப்பை கொண்ட கத்தி ஒன்றை பெற்றுக்கொண்டு, பரந்தாமனை  தீக்கங்கை போல பார்க்க, “ராவணா வேண்டாம் …”, “ஏய் வேண்டாம் டா” வரதன் மற்றும் பரந்தாமனின் குரல்கள் ஒன்றாக கேட்க, தடுக்கும் தனது ஆட்களை தள்ளிவிட்டு உள்ளே வந்த வரதனை ஒருபார்வை பார்த்துவிட்டு பரந்தாமனை பார்த்தவன், அஜூதியாவை எண்ணியபடி, நொடி தாமதிக்காது ஆயுதம் ஏந்தியிருந்த தன் கரத்தை ஓங்கி வீசியவன், முகத்தில் தெறித்த ரத்த துளிகளுடன் அகோரனாய் காட்சியளித்தான் அந்திரன் ராவண ஈஷ்வரன்.

கொலைகள் ஒன்றும் வரதனுக்கு புதிதல்ல, இதை விட பலமடங்கு செய்துவிட்டு தான் இப்பொழுது இந்த நிலையில் இருக்கிறான், இருந்தும் கத்தியை ஓங்கியபடி ராவணன் அவரது விழிகளை நேருக்கு நேர் பார்தானே அகோர பார்வை அதில் ஆடி போனவருக்கு, அதற்கு மேல் அங்கு நிற்க தோன்றவில்லை. தடுமாறிய தன்னை நிலை படுத்தி கொண்டவர், விறுவிறுவென அங்கிருந்து கிளம்பியிருந்தார்.

காரில் போகும் வழியெல்லாம் அவரது சிந்தனை ராவணனை பற்றி தான் இருந்தது. அப்பொழுது “அண்ணா அந்த ராவணன் நாம நினைச்சதை விட ரொம்ப ஆபத்தானவன்” என விக்ரம் சிறு அதிர்ச்சியுடன் சொல்ல, அவனை நிமிர்ந்து பார்த்த வரதன்,

“ஆனா நான் அவனை விட மோசமானவன்” என தன் பற்களை நர நரத்தபடி கூறியவர் மேலும் தொடர்ந்து, “அந்த பொண்ணு அதான் அஜூதியா, அவ யாருன்னு விசாரி, அதுக்கு முன்னாடி நம்ம ஆளுங்க எத்தனை பேரை வேணும்னாலும் கூட்டிட்டு போ, சரக்கு நாளைக்கு காலையில குள்ள கைக்கு வந்தாகணும். குறுக்க எவன் வந்தாலும் விட்றாத. அவன் வந்தாலும்!” என்று இறுதி வாக்கியத்திற்கு அழுத்தம் கொடுத்து கூற, விக்ரம் ஆமோதிப்பதாக தலையசைத்தான்.

@@@@

வேண்டாம் ப்ளீஸ், யாரவது வாங்க” உறக்கத்தில் தேகம் தூக்கி போட, கண்கள் மூடிய நிலையிலே, கண்ணீர் வடித்த அஜூதியாவை நெருங்கி வந்த அவளது தோழி இந்திரா, “அஜூ” அவளது தோளை தொட்டு அவளை உறக்கத்தில் இருந்து எழுப்ப முயன்றாள்.

அஜூதியாவின் அலறல் இன்னும் அதிகமாகவும், ஏதோ கெட்ட கனவு போல என்று எண்ணிய இந்திரா இன்னும் உரக்க அழைக்க, கண் திறந்த அஜூதியா தன் எதிரே இருந்த இந்திராவை பார்த்து மலங்க மலங்க விழித்தவள், சில நொடிகள் கடந்த பிறகே தான் கண்டது நேற்று இரவு நடந்த சம்பவத்தின் தாக்கத்தில் வந்த கெட்ட கனவு தானே தவிர நிஜம் ஒன்றும் இல்லை, என்பதை புரிந்து கொண்டு ஆசுவாசமாக மூச்சை இழுத்து விட, அவளது முதுகை வருடிய இந்திரா,

“என்னாச்சு டி ஒருமாதிரியா இருக்க? எதுவும் கெட்ட கனவா?” அக்கறையுடன் வினவினாள்.

“இந்து” என கண்ணீர் வடித்த அஜூதியா தாவி தன் தோழியை அணைத்துக்கொள்ள, இந்திராவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அஜூதியாவின் தலையை ஆறுதலாக வருடியவள்.

“என்னாச்சுன்னு சொல்லு டி, ஏன் அழுற? ஏதும் பிரச்சனையா? இன்னைக்கு மார்னிங் தான் வருவன்னு என்கிட்ட சொன்ன, ஆனா நைட்டே வந்திருக்க, அங்க எல்லாம் ஓகே தான” என இந்திரா அஜூதியாவின் கலங்கிய விழிகளை பார்த்து கேட்க, அஜூதியா நேற்றைய நிகழ்வை எண்ணி இன்னும் பதறினாள்.

!!!!

“என்ன விளையாடுறியா வரதா? எலெக்ஷ்ன் வருது அதனால அமைதியா இருக்கேன். அந்த சரக்கோட வேல்யூ என்னன்னு தெரியுமா? நேரத்துக்கு நான் அதை கொடுக்கலைன்னா சிக்கல் ஆகிடும் டா. ஆமா உங்கள யாரு அந்த பரந்தாமனை போட சொன்னது? நான் தான் அவன் மேல யாரும் கை வைக்க கூடாதுன்னு சொன்னேன்ல. இப்போ பாரு அவன் பையன் அப்பன் சாவை காட்டி ஓட்டுக்காக மக்கள் கிட்ட சிம்மதி கிரியேட் பண்ண பார்க்குறான். பத்திரிக்கைக்காரன் வேற எதிர்க்கட்சி சதின்னு கண்டதையும் எழுதி வச்சிருக்கான். வரதா சரக்கு என் கைக்கு வந்தாகணும், எங்க இருக்கு?”

“நான் என்னப்பா பண்றது? அந்த ராவணன் அப்படி பண்ணுவான்னு நினைக்கலையே, சரக்க வச்சிட்டு எதுவும் பேச மாட்டிக்கிறான். சரக்க எடுக்க போன என் ஆளுங்களையும் அடிச்சு போட்டுட்டு என் தம்பியையும் பிடிச்சு வச்சிருக்கான். என்ன பண்றதுன்னு எனக்கே தெரியல” இயலாமையுடன் கூறினான் வரதன்.

“என்ன ராவணன் ராவணன்னு ஓவர் பில்ட்டப்பா இருக்கு யார் அவன்? அவனுக்கு ஃபோன் போடு  நான் பேசிக்கிறேன். பேசுற மாதிரி பேசினா சரக்க தானா தர போறான்” என்று ஆக்ரோஷமாக சொல்ல, வேறு வழியின்றி வரதன் தன் அலைபேசியில் இருந்து ராவணனுக்கு அழைப்பு விடுத்து சக்தி வேலிடம் நீட்டினார். அதை பெற்றுக்கொண்ட சக்தி வேல் அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டு தன் எதிரே இருந்த கண்ணாடி டேபிளில் வைத்துவிட்டு அவன் ஏற்பதற்காக காத்திருக்க, ரிங் போய்க்கொண்டே இருந்தது. கடைசி ரிங்கில் எதிர் தரப்பில் இருந்து அழைப்பு ஏற்கப்பட்டது. ஆனால் அவன் பேச வில்லை என்றதும் வரதனை பார்த்த சக்திவேல் நீண்ட பெருமூச்சை வெளியிட்டு,

“யார் டா நீ? ம்ம் கூலிக்கு வேலை பார்க்குற வேலைக்காரங்கள்ல ஒருத்தன். என்கிட்ட உன்னை மாதிரி பலபேர் இருக்காங்க. ஒரு குரல் கொடுத்தா போதும், உன் தடம் இல்லாம பண்ண முடியும் வேண்டாம்ன்னு பார்க்கிறேன். சரக்கு என்கிட்ட வந்தாகணும், இல்லை உன்னை சும்மா விட மாட்டேன்” சக்தி வேலின் சத்தமான குரல் அறையெங்கும் எதிரொலிக்க, அனைவரும் ராவணனின் பதிலுக்காக காத்திருந்தனர். அப்பொழுது, “தாராளமா” அறையில் நிலவிய அமைதியை உடைத்துக்கொண்டு ஓங்கி ஒலித்தது ராவணனின் கணீர் குரல்.

❤️ Loading reactions...
2 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top