ராவணா 18

அங்கே அலைபேசியில், “அஜூ லைன்ல இருக்கியா” என கேட்டு ஓய்ந்து போன இந்து, தன்னை யாரோ அழைக்கவும் ‘சிக்னல் கிடைச்சிருக்காது நைட் பேசிக்கலாம்’ என அலைபேசியை அணைத்துவிட, இது எதுவுமே தன் கருத்தில் பதியாது அந்த கண்ணாடி அறையின் வாசல் முன்பு வந்து நின்றாள் அஜூதியா.

இதயம் வேகமாக துடிக்க துவங்க, மனதில் ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டது . நேற்று  வேணி பேசும் பொழுது, எப்போது இவன் முகம் மனதில் மின்னலென வெட்டி மறைந்ததோ அப்பொழுது அவளுக்குள் எழுந்த பதட்டம் இப்பொழுது மீண்டும் அவளுடன் ஒட்டிக்கொள்ள, துடிக்கும் தன் இதயத்தை தன் கரம் கொண்டு அழுத்தி பிடித்து மூச்சை வெளியிட்டு தன்னை நிதானப்படுத்தியவள்.  பாதி திறந்திருந்த அந்த அகலமான கண்ணாடி கதவு வழியாக தன்னவனை தேடி அறையை நோட்டமிட்டாள். அப்பொழுது அவளது  பார்வை நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவனின் முகத்தின் மீது படர்ந்து அப்படியே உறைந்து விட்டது. தன்னை பகல் இரவென்று கூட பார்க்காது மாயங்கள் காட்டி ஒரு பாடு படுத்திய தன் மாயவனின் முகத்தை பார்த்ததும் அவனிடம் இருந்து தன் கண்களை பிரிக்க முடியாமல் சிலையாக நின்றுவிட்டாள்.

“யார் நீங்க? இங்க என்ன பண்றீங்க?” என்ற முரட்டு குரலில், திடுக்கிட்ட பெண்ணவள் தன் எதிரே நின்றிருந்த ஆணவனை, “ஹான்”என கேள்வியாக பார்த்தாள்.

“உங்களை தான் என்ன வேணும் இங்க என்ன பண்றீங்க”

“பார்க்கணும்” 

“யாரை” என்றவனிடம் உள்ளே இருந்த ராவணனை கைகாட்ட, 

“அந்திரன் சாரையா?”

“ம்ம்” 

“அவர் பேர் அந்திரனா?” கண்களில் ஆர்வம் மின்ன கேட்டாள்.

“ம்ம் அந்திரன் ராவண ஈஷ்வரன்” என ராவணனின் முழு பெயரையும் கூறினான். ஆனால் அதில் ராவணன் என்ற பெயர் மட்டும் அஜூதியாவை வெகுவாய் கவர்ந்தது. அவன் ஒருதடவை தான் கூறினான் ஆனால் பெண்ணவள் பலமுறை தனக்குள் தன்னவனின் பெயரை சொல்லி பார்த்துக்கொண்டாள். அந்த ஆடவனோ அஜூதியாவை ஒருகணம் பார்த்துவிட்டு  யோசனை வந்தவனாய், “தெரியும் சொல்றீங்க ஆனா பேரு என்கிட்ட கேட்குறீங்க” என்று கேட்க,

“பேர் தெரியாது ஆன அவங்களை தெரியும் அவங்களுக்கும் என்னை தெரியும் ப்ளீஸ் உள்ள விடுங்க பேசிட்டு போய்டுறேன்” என்று கெஞ்சி கேட்க, அவள் கெஞ்சவும் இறக்கமுற்றவன் போதாக்குறைக்கு ராவணனை தெரியும் அவனுக்கும் தன்னை தெரியும் என்று அவள் சொன்னதில், “சரி பார்த்துட்டு வாங்க” என உள்ளே அனுப்பிவைத்தான்.

அஜூதியாவோ சுற்றம் முற்றம் என எதை பற்றியும் யோசிக்காது தன்னவனிடம் பேச போகும் மகிழ்ச்சியில் கதவை திறந்தாள்.

உள்ளே “பணம் எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை. எனக்கு எப்படியாவது முடிச்சு கொடுத்திருங்க  அவ்வளவு தான் ராவணன்” என்றவரிடம்,

“ம்ம் வேலை முடிஞ்சதும்  தகவல் சொல்றேன்” என்ற ராவணன் தன் எதிரில் இருந்தவரிடம் கைகுலுக்கிவிட்டு தன் இருக்கையில் இருந்து எழவும், அஜூதியா உள்ளே வரவும் சரியாக இருக்க, அனைவரின் பார்வையும் உள்ளே நடந்து வரும் அவள் மீது இருந்தது. ஆனால் பெண்ணவளின் பார்வை மொத்தமும் அங்கு இறுகிய முகத்துடன் இறுக்கி பிடித்த கருப்பு நிற மடக்கிவிடப்பட்ட ஷர்ட்டில் கிரேக்க சிலை போல நின்றிருந்த ராவணன் மீது பதிந்திருக்க, அவள் தன்னை நோக்கி நெருங்க நெருங்க அதீத கோபம் தனக்குள் முகிழ்த்த பொழுதும் அதை அனைவரின் முன்பு காட்டாதவன், அவளை அழுத்தமாக பார்த்தபடி “செக்யூரிடி” என்றான் சத்தமாக.

அவனது கணீர் குரலில் திடுக்கிட்டவளின் பார்வை வட்டத்துக்குள், அப்பொழுது தான் அங்கிருந்த மற்றவர்களும் தெரிய, ‘இத்தனை பேர் இருக்காங்க, ச்ச எதையும் கவனிக்காம வந்துட்டேன்’ என்று எண்ணிய பெண்ணவளின் உடலில் மெல்லிய நடுக்கம் பரவியது, ஆனால் அதெல்லாம் சில நொடிகளுக்கு தான், ‘விட்டால் இனி எப்பொழுது பார்ப்ப, யார் இருந்தால் என்ன? தைரியமா பேசு’ என அவளது காதல் கொண்ட மனம் அவளுக்கு தைரியம் கொடுக்கவும் அவள் பேச வாயெடுப்பதற்குள்,

“உள்ள மீட்டிங் நடக்குதுன்னு தெரியாது, யார் இவங்களை உள்ள விட்டது?” என உள்ளே வந்த சீருடை அணிந்திருந்த செக்யுரிட்டியிடம் ராவணன் கோபமாக கேட்டான்.

“நான் தான் சார் உங்களை தெரியும் சொன்னாங்க” என்றான் செக்யூரிட்டி.

“அப்படி சொன்னா என்கிட்ட கேட்காம கண்டவங்களையும் உள்ள விட்டுருவியா ஹான்? எனக்கு இவங்களை தெரியாது, ஜஸ்ட் டேக் ஹேர் அவே” என்றான் காட்டமாக.

‘இவனுக்கு தன்னை தெரியவில்லையா என்ன? அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டானா!?’ என அவன் வீசிய அந்நிய பார்வையில் ஏற்கனவே குழம்பியிருந்த அஜூதியாவுக்கு அவன் உதிர்த்த வார்த்தையில் முகம் விழுந்து விட்டது.

ஆனாலும் எப்படியாவது பேச வேண்டும் என்ற ஆவலில் “ஏங்க நான் தான், என்னை தெரியலையா? அன்னைக்கு… பரந்த…” என தொடரப்போவதற்குள், “ஷட் அப்” என அடிக்குரலில் கத்தியவன் அனைவரும் தன்னை பார்க்கவும்,

“யாருங்க நீங்க? சும்மா உளறிட்டு கிளம்புங்க” என்றான் எரிச்சலுடன். அஜூதியாவுக்கு கண்களெல்லாம் கலங்கிவிட்டது, ‘நிஜமாகவே மறந்துவிட்டானா என்ன?’ என்று எண்ணியவளுக்குள் தொண்டைகுழி அடைப்பது போல தோன்ற, “என்னை நியாபகம் இல்லையா?” என்றாள் பரிதாபமாக, ராவணன் தன்னிடம் கத்துவது, அனைவரும் தன்னை ஒருமாதிரி பார்ப்பது என தனக்கு நடக்கும் அவமானம் எதுவும் அவள் கருத்தில் பதியவே இல்லை.

காதல் கொண்ட பெண்ணவளின் மனம் தன்னவனை மட்டும் தான் எண்ணி எண்ணி தனக்குள் மறுகியது. அவளுடைய நோக்கம் எல்லாம் அன்று நடந்ததை சொல்லி அவனுக்கு தன்னை நியாபகப்படுத்தி, அவனிடம் எப்படியாவது ஓரிரு வார்த்தையாவது பேசிவிட வேண்டும் என்பதில் மட்டுமே இருந்தது.

ஆனால் அவனோ அவளது கேள்வியில் எரிச்சலுடன் தன் சிகையை அழுத்தமாக கோதி, தன் உணர்வுகளை காட்ட விரும்பாது தனது முகத்தை திருப்ப, “நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க” என்று அஜூதியா விடாப்பிடியாக அவன் முன்னால் வந்து  நிற்கவும், அறையில் சலசலப்பு ஏற்படுவதை கவனித்த ராவணன். “சொன்னா புரியாதா? கெட் லாஸ்ட்” என்று வேகமாக கையசைத்து கத்தியவன் கரம் தவறுதலாக அவள் மீது பட்டு அவளை  தட்டிவிட, நிலைதடுமாறியவள் நாற்காலியில் தன் பெருவிரல் அடிபட கீழே விழ போனவள் இறுதி நொடியில் டேபிளை பிடித்துக்கொண்டு விழாமல் தன்னை சமநிலை படுத்திக்கொள்ள, ராவணனுக்கு நிஜமாகவே ஒருமாதிரி ஆகிவிட்டது. 

அந்நேரம் நிலைமையை கையில் எடுத்துக்கொண்ட சந்ரு,

“சாரி ஏதோ மிஸ்அண்டர்ஸ்டேண்டிங், நான் என்னன்னு பார்க்கிறேன்” என்றவன் ராவணனுக்கு கண்ணை காட்டிவிட்டு,

“வாங்க மேம்” என்று அஜூதியா திரும்பி திரும்பி ராவணனை பார்க்க, வலுக்கட்டாயமாக அவளை அழைத்துக்கொண்டு வெளியேறினான்.

❤️ Loading reactions...
2 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top