ராவணா 27

இன்று முழுவதும் ராவணனோடு இருக்கப் போகிறோம் என்கிற எண்ணமே பெண்ணவளை வழக்கத்தைவிட நேரமே விழித்துக்கொள்ளச் செய்ய, ஒரு வித இன்பப் படபடப்புடனே ஆசிரமத்தைச் சுற்றி வந்தாள் அஜூதியா.

ஜானகி, மாரி, வேணி என்று ஆசிரமத்தில் உள்ள அனைவரும் வாழ்த்துக்கள் சொன்னாலும், பெண்ணவளின் உள்ளம் நாடியது என்னவோ ராவணனை தான்.

பின்பு ஆசிரமத்தில் வழமை போல தனக்கான பணிகளை முடித்தவள், தன்னவனின் நினைப்போடே  உற்சாகமாக கிளம்ப ஆயத்தமானாள்.

அணிந்து கொள்வதற்காக தன் பிறந்தநாளுக்கென்று ஜானகி வாங்கி தந்த புது புடவையை கட்டுவதற்காக கையில் எடுத்தவள், பின்பு,

“ம்ம்ஹூம்… ராவணா கையால வாங்கி கட்டிக்கலாம்” என்று புன்னகையோடு தனக்கு தானே கூறிக்கொண்டு, தன்னிடம் இருந்த பழைய புடவை ஒன்றைக் கட்டிக்கொண்டாள்.

பிறகு பேருக்கு ஒரு வளையல், ஒரு பொட்டு என்று வழக்கத்தைவிட மிகவும் எளிமையாகவே தயாரானவள், பூ கூட வைத்துக்கொள்ளவில்லை.

அதான் எல்லாம் வாங்கித் தர அவளுக்கென்று ஒருவன் வந்துவிட்டானே, பின் எதற்கு இதெல்லாம் என்று நினைத்தவளோ, இனி எல்லாமே அவன் வாங்கிக் கொடுத்ததையே அணிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆசையோடு அவனைக் காணப் புறப்பட்டாள்.

சாப்பாட்டு மேஜையில் தன் சகாக்களுடன் அமர்ந்திருந்த ராவணனோ,

தன் குரலைச் செருமியபடி,

“இன்னைக்கான அப்பாயிண்ட்மெண்ட்ஸ் எல்லாம் நீங்களே பார்த்துக்கோங்கடா” என்று கூறவும்,

சந்துரு, “என்னாச்சு அண்ணா? ஏதாவது முக்கியமான வேலை இருக்கா?”

என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் கேட்க,

அவனை அழுத்தமாகப் பார்த்துவிட்டு, தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த தன் சகாக்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன்,

“என்னங்கடா பார்வை? சொன்னதை மட்டும் செய்யுங்க” என்றவன் சந்துருவை மட்டும் பார்த்து இன்னும் அதிகமாக முறைத்து,

“உனக்கு இருக்கு டா ஒரு நாள்” என்று மிரட்டும் தோணியில் கூறினான்.

அதற்கு கொஞ்சம் சத்தமாகவே சிரித்துக்கொண்ட சந்துருவோ,

“முக்கியமான வேலை இருக்கான்னு கேட்டா தப்பா பாய்?” என்கவும், அனைவரும் சிரித்துவிட, முறைக்க முயன்று தோற்றுப்போன ராவணனோ வழக்கம் போல தன் கீழ் அதரம் கடித்து புன்னகையை அடக்கிக்கொண்டான்.

இந்த கேளியும் கிண்டலும் ராவணனுக்கு புதிதுதான் ஆனாலும் பிடித்திருந்தது.

எப்பொழுதுமே அங்கே அனைவரிடத்திலும் இருக்கும் இறுக்கமான மனநிலை, நேற்று அஜூதியா வந்து சென்றதில் இருந்தே கொஞ்சம் மாறியிருந்தது. அது அனைவருக்குமே பிடித்திருக்க, முதன்முறையாக அவர்கள் அனைவரும் ஒருவித இதமான மனநிலையுடன் காணப்பட்டனர்.

அப்பொழுது காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்கவும், எழுந்துகொண்ட டேவிட்,

“நான் போறேன்” என்றவன், யார் என்று பார்ப்பதற்காக கதவை நோக்கிச் சென்றான்.

டேவிட் செல்லும் பொழுதே அவர்களுள் ஒருவனான இமானுக்கு வாயில் காவலாளியிடமிருந்து யார் வந்திருக்கிறார்கள் என்ற செய்தி வந்துவிட, அதை அவன் சொன்னதும் ராவணன் துவங்கி அனைவரின் முகமும் தீவிரமடைந்தது.

@@@@@

வாசலில் மிடுக்காக, கையில் ஆயுதம் ஏந்திய காவலர்களுடன் வாயில் சுருட்டைப் புகைத்தபடி சக்திவேல் நிற்க, அவருடன் வரத பெருமாளும் விக்ரமும் வேறு வந்திருக்க,

அவர்களை அங்கே எதிர்பார்க்காத டேவிட்டோ குழப்பத்துடன் அவர்களைப் பார்க்கும் பொழுதே,

“என்ன தம்பி, உங்க பாய் இருக்காரா?” என்று வினவினார் சக்திவேல்.

அதைக் கேட்ட டேவிட்டோ அவருக்குப் பதில் கூறுவதற்குள், வாசலைத் தாண்டி அனைவருடனும் உள்ளே நுழைந்த சக்திவேலின் பார்வை, அங்கிருந்த ஒவ்வொருவரையும் ஒருமுறை அளந்துவிட்டு இறுதியாக ராவணனில் வந்து நிலைத்தது.

ராவணனும் நாற்காலியில் இருந்து மெதுவாக எழுந்திருக்க, அவன் முகத்தில் இருந்த அத்தனை இலகுத்தன்மையும் நொடியில் மறைந்துவிட, இப்பொழுது வழக்கத்தை பல மடங்கு இறுக்கத்தோடு காணப்பட்டவன்,

“என்ன விஷயம்?” என்று நேரடியாக வினவினான்.

பரந்தாமன் பிரச்சனையின் பொழுது சக்திவேலும் ராவணனும் பேசிக்கொண்டதோடு சரி, இன்று தான் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்கின்றனர். சூழ்நிலை அவ்வளவு இலகுவாக இல்லை என்பதைப் புரிந்துகொண்ட வரதனோ, சூழ்நிலையை கொஞ்சம் இலகுவாக்கும் பொருட்டு,

“முக்கியமான ஒரு டீல் பேசணும் ராவணா, அதை நீ தான் பண்ணனும்னு சக்திவேல் சார் நினைக்கிறாரு. அதான் அவரே உன்னை பார்க்க வந்திருக்காரு” என்க,

“வரதா” என்று வரத பெருமாளைத் தடுத்த சக்திவேல்,

“நான் பேசிக்கிறேன்” என்றவர் ராவணனைப் பார்த்து,

“பழசை மறந்திடுவோம்” என்றவர் தன் கரம் நீட்டி,

“நான் சக்திவேல்” என்று கூறி நட்புக் கரம் நீட்ட,

பிரச்சனை பண்ண விரும்பாத ராவணனோ சக்திவேலின் கரத்தை ஒரு நொடி இறுக்கமாகப் பற்றி விடுவித்தவன்,

“இங்க வேண்டாம், உள்ள வாங்க. ஆபிஸ் ரூம்ல வச்சி பேசலாம்” என்றான்.

அஜூதியா எந்த நொடி வேண்டுமானாலும் வரக்கூடும் என்கின்ற நிலையில், இவர்கள் இங்கே இருப்பது ராவணனுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

அஜூதியாவை இவர்கள் பார்ப்பதில் துளியும் விருப்பமில்லாத ராவணன், எப்படியாவது இவர்களை அலுவல் அறையில் வைத்து பேசி அனுப்பிவிட வேண்டும் என்று எண்ணியவன், அவர்களை அங்கே அழைத்தான்.

“ஓகே, அங்கேயே பேசலாம்” என்று சக்திவேல் சொல்லவும், கால் கொலுசு சிணுங்க அஜூதியா முகம் கொள்ளா புன்னகையுடன் அங்கே வரவும் சரியாக இருக்க, அனைவரின் பார்வையும் அஜூதியாவின் மீது தான் பதிந்திருந்தது.

பிங்க் நிற பிளேன் ஸ்பேஸ் சில்க் வகை புடவை, யார் கண்ணையும் உறுத்தாதபடி நேர்த்தியாகத்தான் கட்டியிருந்தாள். ஆனால் இங்கு இருக்கும் அனைவரும் ஒன்றும் ராமன் இல்லையே.

விக்ரம் ஒருமாதிரி பார்த்தான் என்றால், சக்திவேலின் பார்வையை வர்ணிக்கவே முடியாது. மொத்தப் பார்வையிலும் வக்கிரம் வழிந்தோட, ராவணனின் பார்வையில் தீப்பொறி பறக்கவில்லை அவ்வளவு தான். மற்றபடி சக்திவேலை இங்கேயே வெட்டிப்போடும் ஆத்திரத்தில் நின்றிருக்க,

இது எதைப் பற்றியும் அறியாத பெண்ணவளோ, அனைவரையும் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்தவள், தன் கையில் கொண்டு வந்த பார்சலை அப்படியே அருகில் இருந்த டேபிளில் வைத்து விட்டு, நேரே ராவணனை நோக்கி வந்தவள், அவன் கையைப் பிடித்துக்கொண்டு அவனை காதலாய்ப் பார்க்க,

ஜோடி பொருத்தம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் ரசிக்கும் மனநிலையில் யாருமே அங்கே இல்லை.

அந்நேரம் தான் ராவணன் பார்வை வேறு எங்கோ இருப்பதை கண்டவள், அவன் பார்வை இருக்கும் திசையைப் பார்க்க, புதியவர்கள் அங்கே இருப்பதையே அப்பொழுது தான் பார்த்தவளோ, அவர்கள் அனைவரும் ராவணனுக்கு வேண்டியவர்கள் என்று எண்ணி,

“ஹாய்” என்றாள் சிநேகமாக.

“யார், ராவணன் இது?” எதுவுமே தெரியாதது போல சக்திவேல் கேட்க, ராவணனின் தாடை இறுகியது.

அப்பொழுது தேவராஜை பார்த்து கண்ணைக் காட்டிய சந்துரு, அஜூதியாவை அழைத்துச் செல்லுமாறு செய்கை செய்ய,

“அஜூதியா, புது ஃபிஷ் டேங்க் இருக்க. நீ இன்னும் பார்க்கலல? வா மா, போய் பார்க்கலாம்” என்றதும், அஜூதியாவும்,

“சரிண்ணா” என்று அவனுடன் சென்றுவிட,

செல்லும் அவளையே பார்த்துக்கொண்டிருந்த சக்திவேலை எரிச்சலுடன் பார்த்த சந்துருவோ,

“வாங்க, உள்ளே போய் பேசலாம்” என்றவன், ராவணனின் காதில்,

“வாண்ணா, அங்க போய் பேசிக்கலாம்” என்க, முகம் இறுக தன் சகாக்களுடன் சென்றான் ராவணன்.

@@@@@@

போன வேகத்தில் உள்ளே வரும் ராவணனைத் தூரத்திலிருந்தே புன்னகையுடன் பார்த்த அஜூதியா,

“இதோ வந்துடுறேன் தேவ் அண்ணா…” என்றவள், தான் கொண்டு வந்த பார்சலைத் திறந்து, அதிலிருந்த கேக்கைத் தன் கையில் எடுத்துக்கொண்டு ராவணனின் முன்னே சென்று அதை அவனிடம் நீட்டியபடி,

“சீக்கிரம் விஷ் பண்ணிட்டு எனக்கு கேக் ஊட்டி விடுங்க. நீங்க தான் ஃபர்ஸ்ட்டா ஊட்டி விடணும்ன்னு நான் பச்ச தண்ணி கூட குடிக்கல” செல்லம் போல கொஞ்சினாள்.

ஆனால் அடுத்த கணமே அவள் கையில் இருந்த கேக், சுவற்றில் மோதி கீழே விழ, தான் ஆசையாக வாங்கி வந்த கேக் தரையில் சிதைந்து கிடப்பதை அதிர்ச்சியோடு பார்த்தவள், நிமிர்ந்து ராவணனைப் பார்த்து,

“எதுக்கு இப்படி செஞ்சீங்க?” சிறு கோபத்துடன் வினவினாள்.

அதற்கு, “ஏய்!” என்று உச்சஸ்தாதியில் கத்திய ராவணனோ,

“முதல்ல தள்ளிப் போடி! சும்மா மேல மேல வந்து விழுந்துட்டு, அறிவு இல்லை? ஒரு தடவை சொன்னா புரியாது. இனிமே என்னைத் தேடி வந்த, என் இன்னொரு முகத்தைப் பார்க்க வேண்டியிருக்கும்!” வார்த்தைகளால் தாக்கினான்.

அதைக்கேட்டதும் அஜூதியாவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட, அவனை கண்களில் நீர் கோர்க்கப் பார்த்தவள்,

“என்ன பேசுறோம்ன்னு கொஞ்சமாவது புரிஞ்சிதான் பேசுறீங்களா?” தன் அதரங்கள் நடுங்க, ஆதங்கத்துடன் வினவினாள்.

“எனக்கு புரியுது, உனக்குத்தான் டி புரியல!”

“யாருக்கு எனக்கு புரியலையா? ஹான்… உங்களுக்குத்தான் எதுவுமே புரியல!” உயர்ந்திருந்த போதிலும், அவளது குரல் உடைந்துதான் போயிருந்தது.

அவன் எதுவும் பேசவில்லை!

சில நொடிகள் அவனை அழுத்தமாகப் பார்த்தவளுக்கு அதற்கு மேல் முடியாமல் போக,

“இன்னைக்கு என் பிறந்தநாள், எவ்வளவு ஆசையா உன்னை பார்க்க வந்தேன் தெரியுமா?” கண்களில் இருந்து நீர் வடிய கூறியவள், அவனது முகத்தைப் பார்த்தபடியே,

“எனக்கு கேக் வெட்டுறதுன்னா அவ்வளவு பிடிக்கும். என் அப்பா இருந்த வரைக்கும் ஒவ்வொரு வருஷமும் எனக்காக கேக் வாங்கிட்டு வருவாரு. என்னைக் கடைக்கு கூட்டிட்டு போவாரு. எனக்காக எல்லாம் பார்த்துப் பார்த்து பண்ணுவாரு” தளர்வுடன் கூறியவள்,

“கடைசியா எனக்கு அஞ்சு வயசு இருக்கும் போது கொண்டாடுனது” என்று கண்களை மூடி ஒரு நொடி அமைதியாக நின்றவள், பின்பு கண்ணீரைத் துடைத்துக்கொண்டு,

“அதுக்கப்புறம் இப்போ வரைக்கும் நான் கொண்டாடுனதே இல்லை. ஏன் தெரியுமா?”

அவனிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

“ஏன்னா எனக்குன்னு யாரும் கிடையாது” இன்னும் அழுதாள்.

ஆனால் அவனது முகத்தில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, இரும்பென நின்றிருந்தான்.

“அதனாலயே எனக்கு கொண்டாடுறதுக்குத் தோணுனதில்ல.”

“ஆனா இன்னைக்கு தோணுச்சு.”

“எனக்கு நீ இருக்கன்னு நினைச்சேன்” அவளது குரல் நடுங்கியது.

“நீ எனக்கு எல்லாம் பண்ணுவேன்னு நினைச்சேன்” கண்ணீர் வழிய வழிய துடைத்துக்கொண்டாள்.

“ஆனா உனக்கு யாரும் இல்லை, நீ இன்னும் அனாதைதான்னு சொல்லாம சொல்லிட்டல்ல.”

அதை சொல்லும் பொழுது மொத்தமாக உடைந்து போன அஜூதியா, உணர்வுகள் கட்டவிழ்ந்த நிலையில் அனைத்தையும் கொட்டித் தீர்த்தவள், வலித் தாங்க முடியாமல் முகத்தை மூடி அழுதாள்.

பின்பு தன்னை நிலைப்படுத்திக்கொண்டு,

“போ, நான் போறேன்.” கண்ணீரைத் துடைத்தபடி கூறியவள் அவனைப் பார்த்து,

“இனிமே வரல” என்று சில அடிகள் நகர்ந்தவள், மீண்டும் திரும்பிப் பார்த்து,

“ஆனா… என்னை நீ நிஜமா தேடுவ” என்று அழுதுகொண்டே அங்கிருந்து வேகமாக சென்றாள்.

அவள் அப்படி செல்வதைப் பார்த்த அனைவருக்குமே பாவமாக இருந்தது.

ஆனால் யாராலும் ராவணனை மீறி எதுவும் பேச முடியவில்லை.

இறுதியில் மனம் கேளாத சந்துருவோ,

“பாய் பாவம், போய் பேசுங்க” என்றான்.

அதற்கு எந்தப் பதிலும் கூறாத ராவணனோ, உணர்வுகள் துடைத்த முகத்துடன் வேகமாக சென்று தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்ட அடுத்த நொடி, அத்தனை நேரமும் அவன் அடக்கி வைத்திருந்த மொத்த உணர்வுகளும் அவனைத் தாக்கின.

கண்களை இறுக மூடியவன், தன் பின்னந்தலையை அந்த மரக்கதவில் மீண்டும் மீண்டும் மோதிக்கொண்டான்.

“ஆஆ…” தன் நிலையைக் கண்டு தனக்குத்தானே கோபமடைந்தவன், அதே கோபத்துடன் தன் கரத்தை சுவரில் ஓங்கி குத்தினான். தன் வலியைக்கூட பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் குத்தினான்.

ஆனால் அந்தக் காயத்தை விட அவள் சிந்திய கண்ணீர் வலித்தது. அதைத் துடைக்கத் தவறிய தன் கரம் மீது கோபம் வந்தது. அதற்கு காரணமான தன் மீது அவ்வளவு ஆத்திரம் வந்தது.

ஆனால் என்ன செய்ய? அவனுக்கு மட்டும் அவளைக் காயப்படுத்திப் பார்க்க ஆசையா என்ன?

அவனும் அவளைப் போலத்தானே, அவளோடு இருக்கப் போகும் பொழுதுக்காகத்தானே காத்திருந்தான்.

நேற்று அஜூதியா சொல்லும் பொழுது கூட, ‘நாளைக்கு மட்டும் வரட்டும், நல்லா திட்டி அனுப்பிடனும்’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டவன், சந்துரு மூலமாக நாளை அவளது பிறந்தநாள் என்று தெரிந்த பிறகு, நாளை அவள் மனம் நோகும்படி எதையும் செய்து விடக்கூடாது, அவள் ஆசைப்படி அவளைத் தன் கூடவே வைத்து நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றல்லவா எண்ணியிருந்தான்.

என்ன செய்ய? விதி சக்திவேல் ரூபத்தில் வந்து விளையாடும் என்று அவனும் நினைக்கவில்லையே.

புடவை அணிந்து, பாத கொலுசு சிணுங்க அவள் உள்ளே வந்த நொடி, அவன் இதயம் துடிக்க மறந்த கதை அவன் மட்டும் தானே அறிவான்.

மனம் விரும்பிய பெண்ணை முதல் முறை புடவையில் பார்க்கிறான். ரசிக்காமல் இருக்க அவன் முட்டாளா என்ன? உள்ளம் உருக ரசிக்கத்தான் செய்தான்.

எப்பொழுது தலையசைத்துப் பேசினாலும் சேர்ந்தாடும் ஜிமிக்கி இன்று இல்லை, எப்பவும் விழியோரம் தீட்டும் மை இல்லை. ஏன், பூ கூட இல்லை. நேற்று கூட வைத்திருந்தவள், இன்று வைக்கவில்லை. நானே வாங்கித் தர வேண்டும் என்று தான் வைத்துக்கொள்ளவில்லை. பார்த்த சில நொடிகளில் புரிந்துகொண்டவனுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

ஆனால் சக்திவேலும் அவன் பார்வையும், ராவணனால் சகித்துக்கொள்ளவே முடியவில்லையே. கொன்று போடும் அளவுக்கு ஆத்திரம் வந்தது. விட்டால் அதையும் செய்திருப்பான். பரந்தாமனைப் போட முடிந்தவனுக்கு இவன் எம்மாத்திரம்?

ஆனால் எத்தனை பேரைக் கொல்வது? அதற்கென்ன? அவளுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவன் தான்.

அதெல்லாம் அவள் அஜூதியாவாகவும், இவன் ராவணனாகவும் இருக்கும் வரை மட்டுமே சரி.

ஆனால் அவர்கள் இருவரும் புது பந்தத்திற்குள் நுழையும் பொழுது, தன் கையை ஓங்கிக்கொண்டே இருக்க முடியாதே. ஆனால் அதே நேரம் அவன் கரம் தாழும் பொழுது, அவன் இதுவரை சேர்த்து வைத்த அத்தனை கரங்களும் அவன் கழுத்தை நோக்கி எழுமே.

மரணம் கண்டு ஒன்றும் அவன் அஞ்சவில்லை. ஆனால் அவள்? என்னால் அவள் ஏன் கஷ்டப்பட வேண்டும் என்று எண்ணியவன், மனதை கல்லாக்கிக்கொண்டான்.

‘போ’ என்றால் நிச்சயம் போக மாட்டாள். அதனாலே வார்த்தைகளை விட்டுவிட, அவள் கோபப்படுவாள், கொஞ்சம் அழுவாள் என்று மட்டும் எண்ணியிருந்தவனுக்கு, அவள் உதிர்த்த வலி நிறைந்த வார்த்தைகள் அனைத்தும் வலித்தது. அதில் அவள் சொன்ன ‘அனாதை’ என்ற சொல் மிகுந்த வேதனையை கொடுத்தது.

அவள் அப்படி சொல்லும் பொழுது,

‘நீ அனாதை இல்லை, நீ என் கண்மணி. உனக்கு நான் இருக்கேன்’

என்று அவளைத் தன் மார்போடு அணைத்துக்கொள்ள பரபரத்த தன் கரத்தை அடக்க அவன் பட்டபாடு அவனுக்கே தெரியும்.

இதோ, தன்னவளை அணைக்கத் தவறிய கரத்திற்கும், அவளைக் காயப்படுத்தியதற்கும் சேர்த்து இப்படி உட்கார்ந்து தன்னைத் தானே வருத்திக்கொண்டிருக்கிறானே! அவனை என்ன சொல்ல?

மனம் முழுவதும் காதல் இருந்தும், தன்னைச் சார்ந்தவர்களால் அவளுக்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமோ என்னும் ஒரே காரணத்திற்காக,

அவள் ஒருத்திக்காக தன் காதலையே தியாகம் செய்ய முடிவெடுத்துவிட்டான் ராவணன்.

முடிவெடுப்பது எளிது. ஆனால் அதில் நிலைத்திருப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்லவே!

ராவணனின் விலகலை விட ஒரு கொடிய தண்டனை அவனது அஜூதியாவுக்கு யாரும் கொடுக்க முடியாது என்பதை ராவணன் புரிந்துகொள்வானா?

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top