அத்தியாயம் 16
அடுத்த நாளே, ரிஷி மற்றும் நீலாவுக்கு திருமணம் செய்ய ஆயத்தங்களை மேற்கொள்ள ஆரம்பித்து இருந்தார்கள்…
சம்பிரதாயத்துக்காக பெண் பார்க்கும் படலமும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க, மோகினி, மந்தாகினி விசாலாட்சி, ரிஷி என அவர்கள் வீட்டுக்கு கிளம்பி இருந்தார்கள்…
இதே சமயம், ராஜதுரை வீட்டில், ராவணன், ஜெகன், காந்தா என்று எல்லாரும் குழுமி இருக்க, பெண் பார்க்க வந்தவர்களை மீனாட்சி மற்றும் ராஜதுரை தான் வரவேற்றார்கள்…
மந்தாகினியின் கையை பற்றிக் கொண்டே மோகினி வீட்டினுள் நுழைந்தாள்…
தழைய தழைய, நீல நிறம் மற்றும் தங்க நிறம் கலந்த புடவை கட்டி, தலையில் பூ வைத்து, நெற்றியில் குங்குமம் வைத்து இருந்தவளை அங்கே இருந்த கதவு நிலையில் சாய்ந்து நின்று பார்த்துக் கொண்டு இருந்தான் ராவணன்.
அவன் வழக்கம் போல கருப்பு நிற ஷேர்ட் மற்றும் ஜீன்ஸ் தான் அணிந்து இருக்க, அவனை ஒரு கணம் கடைக்கண்ணால் பார்த்து விட்டு, ‘இன்னைக்கும் கருப்பு தானா?’ என்று மனதுக்குள் திட்டி இருந்தாள் மோகினி…
அவளை மேலிருந்து கீழ் அளந்தவனின் விழிகள் அவள் கழுத்தில் கிடந்த மாங்கல்யத்தில் நிலைத்தது…
அவன் இதழ்களுக்குள் மெல்லிய புன்னகை…
அப்படியே நடந்து சென்று, அவள் கையை பற்றி இருந்த மந்தாகினியை தூக்கிக் கொள்ள, “அப்பா” என்றபடி பெண்ணவள் அவனை கட்டிக் கொண்டாள்.
அவனும், குழந்தையிடம் கதை கேட்டபடி வீட்டினுள் நுழைய, மோகினிக்கு தன்னை மீறி ஒரு புன்னகை…
இதே சமயம், அங்கே நின்று இருந்த காந்தாவோ, “எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார் பாருங்களேன்” என்று கிண்டல் செய்ய, அவளை திரும்பி பார்த்து முறைத்த ராவணனோ, “கொஞ்சம் வாயை மூடிட்டு இருக்கியா?” என்றான்.
“அட உண்மையை தானே சொல்றேன்” என்று சொன்னவள் ஜெகனை பார்க்க, “நீ சொன்னா சரி தான் மா” என்றான் அவன்…
அங்கே நின்று இருந்த அவர்களது மகன் ஆதவ்வோ, “அம்மாவை பார்த்தா, ஏன் பா உங்களுக்கு இவ்ளோ பயம்?” என்று கேட்டான்…
எல்லாரும் அதனை கேட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஜெகனோ, “பயம் இல்லடா மரியாதை” என்றான் சத்தமாக சிரித்தபடியே…
இப்படி கல கலவென அந்த இடமே மாற, அங்கிருந்த சோஃபாவில் மோகினி அமர்ந்து கொள்ள, அருகே விசாலாட்சி அமர வந்தார்…
இதனிடையே அவ்விடம் வந்த ராவணனோ, விசாலாட்சியை பார்த்து புருவத்தை ஏற்றி இறக்க, “நான் அங்கேயே இருந்திடுறேன் தம்பி” என்று தள்ளி இருந்த சோஃபாவில் அமர்ந்து கொள்ள, ராவணன் சிரித்தபடி குரலை செருமிக் கொண்டே, மோகினியின் அருகே தோள்கள் உரச அமர்ந்தவன், மகளை மடியில் வைத்துக் கொண்டான்.
மோகினி மெதுவாக ஏறிட்டு அவனை பார்க்க, அவன் விழிகளும் அவளை நோக்க, ஒரு கணம் அவர்கள் விழிகள் கலந்து, மீண்டும் இருவரும் வேறு பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டார்கள்…
இதே சமயம், ரிஷி ராவணனுக்கு அடுத்த பக்கம் அமர்ந்து இருக்க, “எப்படி டா இருக்க?” என்று ராவணன் சகஜமாக அவனிடம் பேச, “நல்லா இருக்கேன் மாமா” என்றான் அவன்…
மோகினியை அக்கா என்று அழைப்பதால் என்னவோ இயல்பாகவே மாமா என்று ராவணனை அழைக்க ஆரம்பித்து விட்டான்…
ராவணனுக்கும் அவனை பிடித்து விட்டது…
மென்மையாக சிரித்தபடி அவன் தோளில் கையை போட்டு இருந்தான்.
இதே சமயம், அறைக்குள் ஆலங்காரத்துடன் அமர்ந்து இருந்தாள் நீலா…
பச்சை நிற புடவை கட்டி இருந்தாள்.
முதல் இருந்த சங்கடம் எல்லாம் ரிஷியின் அணுகுமுறையில் காணாமல் போயிருந்தது…
இப்போதல்லாம் அவனை பார்க்கும் போதெல்லாம் அடி வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்க ஆரம்பித்து இருந்தது…
அவனுக்கு தான் அதெல்லாம் புரியவில்லை…
மீனாட்சியும், “வாம்மா” என்று அழைக்க, எழுந்து வந்தவள் கையில் காஃபி தட்டை கொடுத்தார் மீனாட்சி…
பெண்ணவளும் முன்னறைக்கு வந்து, காஃபியை வரிசையாக கொடுத்து முடிய, விசாலாட்சியோ, “இங்க உட்காரும்மா” என்று அவளை இழுத்து அருகே வைத்துக் கொண்டார்.
அப்படியே நிற்க சங்கடப்படுவாள் என்று அவருக்கும் தெரியும்…
அவளுக்கோ அந்த அணுகுமுறை மிகவும் பிடித்து இருக்க, அவரை மென் சிரிப்புடன் பார்த்தவள், “எப்படி அத்தை இருக்கீங்க?” என்று கேட்டாள்.
“ரொம்ப நல்லா இருக்கேன், சீக்கிரமே கல்யாணம் வச்சுடலாம்” என்று சொன்னவர், “கல்யாணத்தை ரொம்பவே தள்ளி போட வேணாமே” என்றார் சபையில்…
எல்லாருக்குமே அது தானே எண்ணம்…
ராவணன் வரும் வரை காத்திருந்தார்கள்.
அது தான் வந்து விட்டானே…
இனி தாமதிக்க காரணமே இல்லை…
“அடுத்த மாதமே வச்சுடலாம்” என்றார் ராஜதுரை…
நீலாவோ ஏறிட்டு ரிஷியை பார்க்க, அவனோ ராவணனுடன் பேசிக் கொண்டு இருந்தான்.
அவனை பார்த்ததுமே தன்னை மீறி ஒரு வெட்க புன்னகை இதழ்களில் அவளுக்கு சூழ்ந்து கொண்டது…
அதனை தொடர்ந்து எல்லாரும் கிளம்ப ஆயத்தமானார்கள்…
மந்தாகினி ராவணனை கட்டிக் கொள்ள, மோகினியோ, “வீட்டுக்கு வாம்மா” என்று அழைக்க, “இல்ல மாட்டேன்” என்றாள் அவள்…
ராவணனும், “நீ கிளம்பு, நான் கொண்டு வந்து விடுறேன்” என்று சொல்ல, மோகினிக்கும் ஏனோ மறுப்பு சொல்ல தோன்றவில்லை…
அவன் தானே அப்பா, இத்தனை வருடங்கள் பிரித்து வைத்து விட்டாள்.
இனி எதற்கு என்கின்ற எண்ணமும் வர, “ம்ம்” என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டாள்.
அன்று இரவு எட்டு மணியாகி விட்டது…
ராவணனும் மந்தாகினியும் வந்த பாடு இல்லை…
‘இவ்ளோ நேரம் ஆச்சு’ என்று முணுமுணுத்துக் கொண்டே, ராவணனுக்கு அழைத்து இருந்தாள் மோகினி…
அவனும், அலைபேசியை காதில் வைத்து, “சொல்லுடி” என்க, “இன்னும் வீட்டுக்கு வரலையே” என்றாள்.
“அவ தூங்கிட்டா, நீ வேணும்னா வா” என்று சொன்னவன் அலைபேசியை வைத்து விட்டான்.
அவளுக்கு கடுப்பாகி விட்டது…
கொண்டு வந்து விடும் எண்ணம் அவனுக்கு இல்லை என்று புரிய, கடுப்புடன் தான் ஜீப்பை எடுத்துக் கொண்டே அவன் வீட்டுக்கு சென்றாள்.
வாசல் கதவை திறந்து கொண்டே உள்ளே சென்ற சமயம், அறைக்குள் இருந்து வெளியே வந்தான் ராவணன்.
“மந்தாகினி எங்க?” என்று கேட்டவளை, மேலிருந்து கீழ் பார்த்தவன், “உன்னை வீட்டுக்கு வர வைக்க, என்ன எல்லாம் பண்ண வேண்டி இருக்கு?” என்று சொன்னபடி, அவளை இழுத்து, இடையணைத்து ஏதோ பேச வந்தவளது இதழ்களை கவ்வி இருந்தான்…
அவன் முத்தம் அவளுக்கு கசக்குமா என்ன?
மீண்டும் தன்னிலை மறந்து அவன் கரத்திலேயே உருகி போனாள் பெண்ணவள்…
எப்படியோ அழைத்து வர நினைத்தான், அழைத்து வந்தும் விட்டான்…
அவர்கள் வாழ்க்கை அங்கே அழகாக நகர ஆரம்பித்து இருந்தது…
இப்படியே நாட்களும் நகர, ரிஷி மற்றும் நீலாவின் திருமண நாளும் நெருங்கி இருந்தது…
காலையிலேயே தங்க நிற புடவை அணிந்து திருமணத்துக்கு தயாராகி இருந்தாள் நீலா…
முதல் எல்லாம் திருமணம் என்றாலே தவிப்பாக இருக்கும், அவளுக்குள் ஒரு வித நெருடல் இருக்கும், பழைய நினைவுகளின் வடுக்கள் இருக்கும், ஆனால் ரிஷி மூன்று வருடங்களில் எதுவுமே இல்லாமல் மாற்றி விட்டானே…
நண்பனாக தான் பழகி இருந்தான், ஆனால் அவள் மொத்தமாக அவனில் விழுந்து விட்டாள்.
இதே சமயம் ரிஷியோ, வெண்ணிற வேஷ்டி சட்டை என்று தயராகி இருந்தவனும் கோவிலுக்கு கிளம்பி இருந்தான்.
அவன் மனதில் எந்த சலனமும் இல்லை…
அவனுக்கும் பெண்ணவளை மிகவுமே பிடிக்கும்…
ஆனால் கொஞ்சம் தயக்கம் இருந்தது…
தாம்பத்யத்துக்கு வறுபுறுத்தி, அவளின் பழைய ரணங்களை கிளறி விடுவோமோ என்று பயமாக இருந்தது…
அதனாலேயே நண்பன் என்கின்ற கோட்டை தாண்டி அவன் செல்ல எத்தனிக்கவே இல்லை…
அன்று எல்லாரும் கோவிலுக்கு நேரத்துக்கே வந்து விட, மணமேடையில் அமர்ந்து கொண்டார்கள் ரிஷி மற்றும் நீலா…
எல்லோருடைய மனதிலும் அவ்வளவு சந்தோஷம்…
நீலாவுக்கு நல்லது நடக்க வேண்டும் என்கின்ற வேண்டுதல் நிறையவே இருந்ததே…
அதனை தொடர்ந்து, ஐயரும் மந்திரத்தை உச்சரிக்க, ரிஷி மாங்கல்யத்தின் இரு முடிச்சுகளை நீலா கழுத்தில் கட்ட, மூன்றாவது முடிச்சை மோகினி போட, ரிஷி நீலாவை தனது சரிபாதி ஆக்கி இருந்தான்…
அதனை தொடர்ந்து, விருந்து முடித்து விட்டு, ரிஷியின் வீட்டுக்கு கிளம்பி இருந்தாள் நீலா…
அவளை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்த மோகினியோ, சாமி அறைக்குள் விளக்கை ஏற்ற வைக்க, அவளும் விளக்கை ஏற்றி விட்டு, மோகினியை கண் கலங்க பார்க்க, “ரொம்ப நல்லா இருப்ப நீலா” என்று அவளை அணைத்து சொல்லி இருந்தாள் மோகினி…
அன்று இரவு முதலிரவுக்கு ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார்கள்…
ரிஷிக்கு பெரிதாக இஷ்டம் இல்லை என்றாலும், வீட்டில் எப்படி சொல்வது என்று தடுமாற்றத்துடன் அவன் அறைக்குள் அமர்ந்து இருக்க, பால் செம்புடன் அறைக்குள் வந்தாள் நீலா…
உள்ளே வந்ததுமே, “சாப்பிட்டியா?” என்று தான் கேட்டான்.
அவளும் அவனை ஏறிட்டு பார்த்து, “ம்ம்” என்க, “சரி பாலை குடிச்சிட்டு தூங்கலாம்” என்றான்.
அவளுக்கு சப்பென்று ஆகி விட்டது…
என்னென்னவோ எதிர்பார்த்து வந்திருக்க, அவனோ தூங்கலாம் என்கின்றானே…
காதலை போட்டு உடைக்கவும் பெண்ணவளுக்கு தெரியவில்லை…
ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டே, “தூக்கம் வருதா என்ன?” என்று கேட்க, “இல்லையா பின்ன? எவ்ளோ டயர்ட்” என்று சொன்னவன் அவள் கையில் இருந்த பாலை வாங்கி குடிக்க, அவளோ, பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டாள்.
பாதி பாலை குடித்தவன், மீதியை நீட்ட, அவளோ, “இல்ல, நீங்களே குடிச்சு முடிங்க” என்று சொல்லி விட்டு, மறுபக்கம் வந்து அவனுக்கு முதுகு காட்டி படுத்து இருக்க, அவனும் லைட்டை அணைத்து விட்டு படுத்து விட்டான்…
அவளுக்கோ அவனை இழுத்து வைத்து சப்பென்று அறைந்தால் என்ன என்று தோன்றியது…
அவளுக்கு சம்மதமா என்று கேட்டு இருந்தால் கூட அவள் மனம் புரிந்து இருக்கும், அவனாக என்னென்னவோ கற்பனை செய்து கொண்டு, முதலிரவை தள்ளி போட்டு விட்டான்…
‘என்னென்னெவோ நினைச்சுட்டு வந்தேனே, இப்படி ஆயிடுச்சே’ என்று மனதிற்குள் புலம்ப தான் பெண்ணவளுக்கு முடிந்தது…