ராவணா 31

“என்ன வரதா இதெல்லாம், பொண்ணுங்க கிட்ட பிரச்சனை பண்ணிக்கிட்டு.” கோபத்துடன் வினவினார் வேலாயுதம்.

வரதனால் எதுவும் பேச முடியவில்லை, தன் தமையனின் செயலில் ஆத்திரத்துடன் நின்றிருந்தவர்,

“ஏதோ போதையில தெரியாம பண்ணிட்டான் ஐயா, இனிமே நான் பார்த்துகிறேன்” என்றார்.

“அவன்கிட்ட சொல்லி வை வரதா இனிமே இப்படி கேள்விப்பட்டேன் வச்சு பேசிட்டு இருக்க மாட்டேன்” என்று எச்சரித்தவர், நேராக ராவணனின் சகாக்களிடம் வந்து,

“இவ்வளவு நடந்திருக்கு என்கிட்ட ஏன்டா சொல்லல” என்று கேட்டார்.

“அது அண்ணா சொல்லாம எப்பிடி அய்யா” என்றான் சந்துரு. 

அதைகேட்டு பெருமூச்சை வெளியிட்ட வேலாயுதம்,

“சரி நேரம் ஆகிட்டு எல்லாரும் ரெஸ்ட் எடுங்க நாளைக்கு கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் பேசிக்கலாம்” என்றவர் உள்ளே செல்ல, தன்னையே இமை தட்டாமல் பார்த்து கொண்டிருந்த மீராவை ஒருகணம் பார்த்த சந்துரு பின்பு அனைவரையும் பார்த்து, 

“சரி டா பாருங்க, தேவா கால் பண்ணினான் நான் அவனை கூட்டிட்டு வந்திடுறேன். நீங்க தூங்குங்க” என்று பொதுவாக கூறியவன், மண்டபம் விட்டு வெளியேறி தன் காரின் மீது சாய்ந்து நின்றான்.

அப்பொழுது தன் பின்னால் மிக நெருக்கமாக கேட்ட கொலுசொலியில் பக்கவாட்டாக திரும்பி பார்த்து புன்னகைத்தவன்,

“தூங்கலையா” என்று வினவினான்.

அதற்கு மீராவோ,

“ம்ம் வருவேன்னு தானே வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க அப்புறம் என்ன கேள்வி” என்றவள், அவன் முன்பு வந்து,

“ராவணன் அண்ணன் அந்த பொண்ணை தான் விரும்புறாரா?” ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“ம்ம்”

“பொண்ணு எப்டி”

“ரொம்ப நல்ல பொண்ணு மீரா குழந்தை மனசு. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் அவ்வளவு விரும்புறாங்க”

“அப்புறம் ஏன் இப்படியெல்லாம்” 

“அண்ணன் அவரால அஜூதியாவுக்கு ஏதும் ஆகுமோன்னு பயப்படுறாரு”

“ரெண்டு பேருமே பாவம் தான் சந்துரு ஆனா இனிமே கவலை வேண்டாம் அப்பாக்கு தெரிஞ்சிடுச்சில இனிமே அவர் பார்த்துக்குவார். எப்படியோ இனி நம்ம ரூட் கிளியர் ஆகிடும்” புன்னகையுடன் சந்துருவின் கரத்தை தன் கரங்களுக்குள் பிணைத்து கொண்டபடி கூறியவள் அப்படியே அவன் தோளில் சாய்ந்து கொள்ள, சந்துருவின் இதழும் அழகாய் புன்னகைத்து கொண்டது.

@@@@

ருத்ர மூர்த்தியாக மருத்துவனைகுள் நேரே விக்ரமை அட்மிட் செய்திருக்கும் அவசர சிகிச்சை பிரிவுக்குள்ளே  வந்த வரதன், கொஞ்சமும் இரக்கம் பார்க்காது விக்ரமின் கன்னத்திலே ஓங்கி விட்டவர்,

“பொறுக்கி பொறுக்கி எனக்குன்னு வந்து வாச்சிருக்கியே, அவன் தான் அவளுக்கு ஒன்னுன்னா வெறி புடிச்ச போல ஆகிடுவானே அப்புறமும் ஏன் அவகிட்ட போய் ச்ச பொம்பள பொறுக்கி?” என்று  மீண்டும் அடித்தவர் விக்ரம் வலியில் கெஞ்சுவதை பார்த்து,

“இனிமே நீ அவ பக்கம் போன உனக்கு இருக்குடா” என்று எச்சரித்து விட்டு அங்கிருந்து சென்றார். 

@@@@

ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த தேவா கவனமாக வண்டியை ஒட்டிக்கொண்டிருக்க, கார் கரடு முரடான பாதையை தாண்டி ஒரு மூன்று மணிநேர பயணத்தின் முடிவில் கடற்கரை ஓரத்தில் வந்து நின்ற கொஞ்ச நேரத்தில் சந்துருவின் காரும் வந்துவிட, இமையோரம் ஒற்றை துளி கண்ணீர் தேங்கி நிற்க எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்த அஜூதியாவை வருத்தத்துடன் பார்த்துவிட்டு சந்துருவும், தேவராஜும் ராவணனுக்கு ஒரு தலையசைப்பை கொடுத்துவிட்டு சந்துரு வந்த காரில் சென்றுவிட்டனர்.

பின்பு அஜூதியா அமர்ந்திருக்கும் பக்கம் வந்து கதவை திறந்தான் ராவணன்.

அவளிடம் அசைவில்லை!

“தியா” என்று அழைத்தான்.

இப்பொழுது அவளது விழிகள் அவனது விழிகளைப் பார்க்க, அவளை பார்த்து கொண்டே அவளை நோக்கி தன் கரம் நீட்டினான் ராவணன்.

சுற்றும் முற்றும் எதுவும் பார்க்க வில்லை அவன் விழிகளை மட்டும் பார்த்தபடியே நடுங்கும் கரத்தை அவனது கரத்தில் வைத்து காரில் இருந்து இறங்கியவள் அவனுடன் இரண்டு அடி தான் எடுத்து வைத்திருப்பாள் மறுகணமே செருப்பில்லாமல் ஓடியதால் ஏற்பட்ட காயத்தின் காரணமாய் பாதங்கள் இரண்டிலும் ரத்தம் கசிந்து வலியெடுக்கவும்,

“ஆ” வலியில் முகம் சுருங்க அவள் அப்படியே நின்று விட்டாள்.

உடனே அவளது முகத்தையும் அவளின் பாதத்தில் இருந்த காயத்தையும் பார்த்தவன். 

எதுவும் யோசிக்காது அடுத்த நொடி அஜூதியாவை தன் கரங்களில் ஏந்தி கொள்ள, அவனது கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டவளின் உடல் இப்பொழுது குலுங்கியது.

அழுகிறாள்! தெரிந்தது இருந்தும் தேகம் இறுக அவளை ஏந்தி கொண்டே நடந்தான்.

பின்பு சில நிமிடத்தில் அவனை நோக்கி வந்த படகோட்டி ராவணனை பார்த்து  தலையசைத்துவிட்டு தன் முன்னால் இருந்த அதி நவீன இயந்திர படகின் இஞ்சினை இயக்க ஆரம்பிக்க, குளிர்ந்த கடல் காற்று தன் முகத்தில் வந்து மோத, ராவணனின் முகத்தை பார்த்து கொண்டே அஜூதியா கட்டிலில் அமர்ந்திருந்தாள்.

அவனோ அவள் முன் தன் ஒரு முழங்காலை தரையில் ஊன்றி அவள் பாதத்தை தன் தொடை மீது வைத்து கொண்டு அவளின் கால் பாதங்களின் காயத்தை ஆராய்ந்தவன் அதற்கு மருந்து போட்டு விட்டு,

“தூங்கு மா எப்படியும் இன்னும் டைம் ஆகும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்த கணம் ராவணனின் கரத்தை தன் நடுங்கும் கரம் கொண்டு இறுக்கமாக பிடித்து  கொண்டாள் அஜூதியா.

விழிகளில் இருந்து வேறு கண்ணீர் வழிய துடைத்துக்கொண்டே அவன் முகம் பார்த்தாள். அவனும் அவளை பார்த்துக்கொண்டே அவள் அருகே படுக்கையில் அமர்ந்தவன்,

“நான் இங்கேயே இருக்கேன் நீ தூங்கு மா” அவள் சொல்லாமலே புரிந்துகொண்டு கூறினான். 

உடனே அவளோ ராவணனின் வெற்று மார்பில் முகம் புதைத்து கொண்டு அவனை அணைத்து கொள்ள, அவளை ஒருகணம் பார்த்தவனோ, எட்டி அருகே இருந்த ட்ராயரை திறந்து அதில் இருந்த ஷர்டை எடுத்து அணிந்து கொள்ள பார்த்த பொழுது, நிமிர்ந்து  ராவணனின் முகம் பார்த்துக்கொண்டே அவனது கையில் இருந்த ஷர்டை வாங்கியவள், வேண்டாம் என்பது போல தலையாட்டி,

“இப்படியே இருங்க ப்ளீஸ்” என்று கூறி மீண்டும் அவனை இன்னும் இன்னும் உரிமையோடு அணைத்து கொள்ள, இப்பொழுது அவளை அப்படியே தன்னோடு காற்று கூட நுழைய முடியா நெருக்கத்துடன் அணைத்து கொண்டான் ராவணன்.

அவனது வெற்று மேனியோடு ஒட்டி கிடந்தாள் அவள். இருவரின் தேகமும் தாராளமாகவே உரசி கொண்டன ஆனால் அதில் துளி கூட காமம் இல்லை.

பிறந்த குழந்தை இந்த உலகை பார்த்து மிரண்டு கொண்டு தாயின் மார்பிலே பதுங்கி கொள்ளுமே அது போல பதுங்கிக்கிடந்தாள் அவள்.

அணைப்பின் இறுக்கத்தில் அஜூதியாவின் உதடுகள் ராவணனின் மார்பில் அழுந்த பதிய, இப்பொழுது மீண்டும் அழுதாள்.

மெதுவாக அவள் முதுகை வருடினான், அதிகமாக அழுதாள்.

விழிகளை தாழ்த்தி அவளை பார்த்தவன் அப்படியே அவள் உச்சந்தலையில் இதழ் பதிக்க, சற்று சத்தமாகவே அழுதாள்.

அழாதே என்று சொல்ல வேண்டும் அதுவும் அவன் தான் சொல்ல வேண்டும் ஆனால் செயல் வீரன் அவனோ  சொற்களை சிரமத்துடன் தேடி எடுத்து,

“நான் இருக்கேன் டி” என்ற நொடி இன்னுமே வெடித்து பெருங்குரலெடுத்து அழுது விட, 

“காம் டவுன் டா ப்ளீஸ் எனக்காக… உன்னை இப்படி பார்க்க முடியல” தொண்டை கறகறக்க கூறினான்.

‘அழுகிறானா என்ன!?’ மெல்ல நிமிர்ந்து அவன் முகம் பார்க்க முனைந்தாள்.

 முகத்தை காட்டாது பக்கவாட்டாக திருப்பி கொண்டு தன் வெற்று தோளிலே துடைத்து கொண்டான்.

உடனே அஜூதியா அவனது முகத்தை வலுக்கட்டாயமாக பிடித்து தன் வதனம் பார்க்க வைத்தவள் அவனது விழிகளை பார்த்து,

“ஏன்” என்றாள்.

“ஏன்னா நீ தான் உயிர், என்ன மூச்சு. நீ அழுதா என்னால தாங்கிக்க முடியாது. நீ தான் எல்லாமே. நீ இல்லைன்னா நான் இல்லை” தவிப்புடன் கூறினான்.

“அப்புறம் ஏன் என்னை வேண்டாம்ன்னு சொன்ன. நீ அப்படி பண்ணலைன்னா இப்போ இப்படி.. இப்படி நடந்திருக்காதே அவன் என்கிட்ட மோசமா..” சொல்ல முடியாது கண்ணீராய் வந்தது.

இதோ இந்த கேள்விக்கு தானே பயந்தான், ராவணனால் பதில் சொல்ல முடியவில்லை அப்படியே அவள் முகத்தை தன் கையில் ஏந்தி கொண்டவன் தன் நெற்றியோடு அவளது நெற்றியை முட்டிக்கொண்டு, 

“சாரி மா சாரி இப்படி நடக்கும்னு நான் நினைக்கல. இதுக்கு காரணமான யாரையும் நான் விட மாட்டேன். சாரி டா இனிமே இப்படி நடக்காது. நீ அழாத ப்ளீஸ் எனக்காக.” துக்கம் தன் நெஞ்சை அடைக்க கோபம் கலந்த வலியுடன் கூறினான். 

அதற்கு அவளது தலையோ மெதுவாக ஆமோதிப்பது போல லேசாக அசைய, இப்பொழுது அவனது கண்ணீர் அவளது விழியோடு கலந்து வெளியேறியது.

ராவணனின் வார்த்தைகள் சொல்லாத அவனது காதலை…அவனின் விழியோரம் கசிந்த ஒற்றைக் கண்ணீர்த்துளி அவளுக்குள் கடத்தியிருக்க, அதில் பெண்ணவளும் பேச வார்த்தைகளின்றித் தவித்து போக, அந்த நொடி இந்த அகிலமே நிசப்தமாக, இருவரின் இதயங்கள் மட்டுமே ஒன்றோடொன்று பேசிக்கொண்டன.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top