“டேய் அண்ணனுக்குத்தானடா பொண்ணு பார்க்கப் போறோம் நாம ஏன்டா இதெல்லாம் பண்ணிட்டு இருக்கோம்?” என்று தன் தாடியடர்ந்த கன்னத்தை கண்ணாடியில் தடவியபடி வினவினான் தேவராஜ்.
“ஏன்? அதை நீ போய் கேக்குறது?” என்ற ராஜிடம்,
“அதை கேக்க முடியாமத்தானே நிக்கிறேன்,” என்ற தேவராஜுக்கு, தாடியில்லாது தன் முகத்தை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.
தேவராஜ் மட்டும் அல்ல அங்கிருந்த அனைவருமே இதையே எண்ணிப் புலம்பிக்கொண்டிருக்க,
“என்னால தாடியெல்லாம் எடுக்க முடியாது டா”, என்று வீராப்பாகச் சொன்ன தேவராஜ்,
“என்ன அண்ணா பேசிட்டே இருக்கீங்க சீக்கிரம் ரெடியாகுங்க?” என்ற அஜூதியாவின் குரல் கேட்ட மறுகணம்,
“சரி மா இதோ, ரெடியாகிட்டே இருக்கேன்” என்று சொல்ல, அனைவரும் தேவராஜைப் பார்த்து வாயை மூடிக்கொண்டு சிரித்தனர்.
இதில் மஹந்த் மட்டும் பாவம் போல முகத்தை வைத்து கொண்டு,
“ம்மா தாடி மட்டும் இருக்கட்டுமே”, என்று சொல்ல,
அவளோ அவனை முறைத்துப் பார்க்க,
“ஊர்ல ஒரு பையன் கூட பயப்பட மாட்டான்மா” என்று அவனுக்கு துணைக்கு சந்துருவும் கெஞ்சினான்.
உடனே அஜூதியாவோ,
“அப்போ இந்தத் தங்கச்சிக்காக இது கூட செய்ய மாட்டீங்களா?” என்று பாவம் போல அவள் கேட்க,
“வர வர எங்கள நல்லா ஏமாத்துற மா” என்றவர்களுக்கோ அதன் பிறகு அவளிடம் மறுத்து பேச தோன்றவில்லை.
அவளோ விடாமல், “அப்புறம் இந்த ஸ்கூல் யூனிஃபார்ம் போல எல்லாரும் ஒன்னு போல கருப்புல வந்து நிக்காதீங்க.” என்று சொல்ல அதற்கும் அனைவரும் வேறு வழியில்லாமல் தங்களது தலையை ஆட்ட,
“சரி சரி நீங்க ரெடியாகுங்க. நான் உங்க பாய் என்ன பண்றாருன்னு பார்த்துட்டு வரேன். அவரை சமாளிக்கிறதுதான் ரொம்பக் கஷ்டம்”, என்று சலிப்புடன் கூறிவிட்டு அவள் மேலே சென்றாள்.
மேலே வேகமாக செல்லும் அஜூதியாவை பார்த்தபடி விக்கியின் தோள் மீது கரம் போட்ட இமானோ,
“சேட்டைய பார்த்தியா டா அவரை சமாளிக்கிறதுதான் கஷ்டமாம். சும்மா நிக்கப் போற நமக்கே இந்தப் பாடுன்னா, அண்ணனோட நிலைமையை யோசிச்சிப் பாரு”, என்று சொல்ல அதைக்கேட்ட அனைவரும் சத்தமாகச் சிரித்தனர்.
@@@@@@
அதே நேரம் தன் முன்னால் இருந்த லைட் பிங்க் நிற சட்டையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த ராவணனுக்கு, அந்தச் சட்டையில் தன்னை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.
தன் இடுப்பில் கைவைத்துக்கொண்டு ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவன்,
“நமக்கு இதெல்லாம் செட் ஆகாது. கருப்பே போடுவோம். நம்ம தியா தானே பார்த்துக்கலாம்”, என்றபடி அந்த சட்டையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, தனக்குப் பிடித்த கருப்பு சட்டையை அணிந்து முடித்த நேரம், அவனது அறையின் கதவு வேகமாகத் திறக்கப்பட்டது.
கதவு திறக்கப்படவும் தான் நின்ற இடத்தில் இருந்து ராவணன் தன் தலையை மட்டும் சற்றுப் பக்கவாட்டாகச் சரித்துப் பார்க்க, அஜூதியா வேகமாக உள்ளே வந்தாள்.
தன்னவளை கண்டதும் லேசாக புன்னகைத்தவன்,
“அதான இவளைத் தவிர வேற யாருக்குத் தைரியம் இருக்கு? தட்டுற பழக்கமே இல்லை” என்று முணுமுணுக்க,
அவனுக்கு முன்னால் வந்து நின்ற அஜூதியாவோ அவனைத் தீயாக முறைத்தாள்.
தன்னவளின் கோபத்திற்கான காரணத்தை நன்கு புரிந்து வைத்திருக்கும் ராவணனோ, அவளைச் சமாளிக்கும் பொருட்டு,
“என்னாச்சு ஏன் கோபமா இருக்க” என்று கேட்க,
“நடிக்க வேண்டாம் என்ன இது?நான் என்ன சொன்னேன்? நீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்க? பொண்ணு பார்க்க யாராவது கருப்பு சட்டையில வருவாங்களா?” என்று வினவினாள்.
அவனோ, “புரிஞ்சிக்கோ மா எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை.” தன் சரித்திரம் மறந்து தன்னவளிடம் கெஞ்ச,
அவளோ, “பழக்கம் இல்லைன்னா பழகிக்கணும்.” இடுப்பில் கைவைத்து கொண்டு அதிகாரமாய் அவனுக்கு கட்டளையிட, மீற முடியாது முழித்தது முரட்டு காளை.
அஜூதியாவோ தன் பொறுமையை இழந்து,
“என்ன முழிச்சிட்டே இருக்கீங்க, முதல்ல இங்க வாங்க” என்றவள் அவனை அழைத்து கொண்டு ஆளுயற கண்ணாடியின் முன் நிப்பாட்டி,
“நீங்க இருக்குற கோலத்தைப் பாருங்க. தாடில மூஞ்ச தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கு. ப்ளீஸ் ஏன் இப்படி பண்றீங்க? சொன்னா ஏன் புரிஞ்சிக்க மாட்டிக்கிறீங்க? எனக்கு கோபம் வரும் சொல்லிட்டேன்.” என்க,
அவனோ கண்ணாடியில் தன்னை பார்த்து கொண்டே,”அவ்வளவு மோசமாவா இருக்கு?” என்று கேட்க,
சற்றும் யோசிக்காது,”ம்ம் ரொம்ப.” என்றாள் கோபத்தில் முகம் சிவக்க எங்கோ பார்த்தப்படி.
தன்னவளது கோபத்தையும் முகச்சிவப்பையும் சிறு புன்னகையுடன் ரசித்தவன் அப்படியே தன்னவளை பின்னால் இருந்து அணைத்தபடி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து வாசம் பிடித்தவன், மெல்ல அவள் மடலை தன் இதழால் தீண்டி,
“அப்போ உனக்குப் பிடிக்கலையா?” மெல்லிய குரலில் அவளது காதில் காதலோடு வினவினான்.
ஏற்கனவே தன்னவனின் தீண்டலில் மெல்ல கரைந்து கொண்டிருந்தவளோ, அவனது கேள்வியில் கோபம் முற்றும் மறந்து புன்னகையுடன், அவனை பார்த்தபடி திரும்பி நின்று அவன் கழுத்தில் தன் கரங்களை மாலையாக கோர்த்துக்கொண்டு, தனது ஒற்றை கையால் அவனது தாடி அடர்ந்த கன்னத்தை பற்றியபடி மிக மிக அழுத்தமாக அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தவள் தன் விழிகளை தன்னவனின் விழிகளுடன் கலக்க விட்டபடி,
“எனக்கு என் ராவணன் எப்படி இருந்தாலும் பிடிக்கும். இந்த தாடி, கருப்பு சட்டை இப்படி எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிக்கும், ஆனா இன்னைக்கு ஜானகி மாக்கு என் சக்கரைய புடிக்கணுமே அதுக்காக கொஞ்சம் மனசு வைக்க கூடாதா எனக்காக” என்று கேட்டது தான் தாமதம் அவளது சக்கரை இங்கு பாகாக உருக துவங்கியது.
அதன் பிறகு அவள் அவன் கையை பற்றிக்கொண்டு பாத்ரூமிற்குள் அழைத்து சென்றதும் சரி,
அவனின் கருப்பு சட்டை கழட்ட பட்டதும் சரி, அவன் கன்னத்தில் ஷேவிங் க்ரீம் பூச பட்டதும் சரி,
இப்பொழுது பிங்க் சட்டை அவன் மார்பில் தவழ்ந்து கொண்டிருப்பது சரி, அனைத்துமே தெரிந்தும் தெரியாத நிலைதான்.
தன்னவளின் விழிகள் பேச துவங்கியபிறகு அங்கு அவனின் வார்த்தைகளுக்கு என்ன வேலை? காதலோடு தன்னவள் தனக்கு செய்த பணிகளை ரசனையோடு ஏற்று கொண்டவன், விழிகளால் அவள் இட்ட கட்டளையை புன்னகையுடன் செய்தான்.
சட்டைக்கு இறுதி பொத்தானை அஜூதியா போட்டு விட்ட பிறகு கண்ணாடியில் தன்னை தாடியில்லாது பார்த்த ராவணனுக்கே புதிதாகத் தோன்ற, அவன் உதட்டின் ஓரம் மெல்லிய புன்னகை மலர்ந்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் கண்ணாடி வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது அவளது கவனம் முழுவதும் அவன் மீதே இருக்கவும், கண்டு கொண்ட ராவணன்,
“என்ன பார்வை பலமா இருக்கு?” என்று தன் ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க,
“ஒண்ணும் இல்லை.” என்றவள் அங்கிருந்து கிளம்பவும், ராவணன் அவளது கையைப் பிடித்தான்.
திரும்பி அவன் முகம் பார்த்தவள், “என்ன?” என்று கேட்க, அப்படி இழுத்து தன்னோடு நெருக்கமாக அணைத்து கொண்டான் ராவணன்,
பின்பு தன் மற்றொரு கரத்தில் இருந்த தன் விரல்களோடு அவளது விரல்களை கோர்த்துக்கொண்டவன், அவளது விழிகளை பார்த்து கொண்டே கோர்த்திருந்த அவளது விரல்களில் இதழ் பதித்து,
“சந்தோஷமா?” என்றான்.
அதற்கு அவளோ அவனது கன்னத்தைத் தன் புறங்கையால் வருடியபடி,
“ம்ம்.” மெல்லிய வெட்கம் வதனத்தில் படர லேசாக தலையசைத்தாள்.
“சரி என் கிஃப்ட் எங்க?” தன்னை வதைக்கும் தன்னவளின் வெட்கத்தை ரசித்துக்கொண்டே கேட்டான்.
அதற்கு அவனைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தவளோ,
“அதான் நான் இருக்கேனே உங்க கிஃப்ட்” என்று சொல்லவும், சில்மிஷ பார்வையுடன் குனிந்து அவள் காதில் இதழ் பதித்தபடி, ரகசியம் பேசியவன், நிமிர்ந்து தன்னவளின் விரிந்த விழிகளை பார்த்து ஒற்றை புருவம் உயர்த்தி, ‘என்ன’ என்பது போல் கேட்டு பெண்ணவளை மேலும் சிவக்க வைக்க,
அவளோ அவன் முகத்தை பார்க்க முடியாது அவனது மார்புக்குள்ளே முகம் புதைக்கவும், அட்டகாசமாக சிரித்தவன் பெண்ணவளை தன்னோடு அணைத்து கொண்டான்.
அவளோ சிரித்து கொண்டிருந்தவனின் மார்பில் ஒரு அடி அடித்து,
“போதும் வாங்க லேட் ஆகுது” செல்ல முறைப்புடன் கூறவும்,
“நீங்க சொல்லிட்டா கேக்காம இருக்க முடியுமா? வாங்க மை குயின்” என்று அவள் முன்பு தலை குனிந்து பணியவும், “உங்களுக்கு வர வர சேட்டை ஜாஸ்தியாகிடுச்சு” என்ற அஜூதியா
அவனை இழுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
@@@@@@
லைட் பிங்க் நிற சட்டையை நேர்த்தியாக இன் செய்து, சிறு ரோமம் கூட இல்லாது நன்கு ஷேவ் செய்து, தலைமுடியை நேர்த்தியாக வாரியபடி வெளியே வந்த ராவணனை அனைவரும் ஆச்சரியமாகப் பார்க்க,
“டேய் நம்ம அண்ணனா இது?” தேவராஜ் வாயைப் பிளந்தான்.
விக்கியோ அதே அதிர்ச்சியோடு,
“சிங்கம் போல இருந்தாரே டா. இப்போ இவரை ரௌடின்னு சத்தியம் பண்ணி சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க டா.” என்க,
இமானோ,
“சிங்கம் சாய்க்கப்பட்டு ரொம்ப நாள் ஆகுது.” என்றதும் தான் தாமதம்
அனைவரும் சத்தமாகச் சிரித்தனர்.
ராவணனோ அவர்களை முறைத்து பார்க்க, அவனுக்குப் பின்னால் நின்றிருந்த அஜூதியாவோ, தன் கையை வாயில் வைத்து சிரிப்பை அடக்கிக்கொண்டிருந்தாள்.
ராவணன் முறைக்கவும் வாயை மூடிக்கொண்டவர்கள் அங்கிருந்து கிளம்பிவிட,
இப்பொழுது அவனோ பக்கவாட்டாக திரும்பி அஜூதியாவை அழுத்தமாக பார்க்கவும், அடக்கப்பட்ட சிரிப்புடன் அவனை பார்த்தவள்,
“என் சக்கர எப்படி இருந்தாலும் அழகு தான்” என்று கூறி அவன் கன்னத்தை கிள்ளவும், அதுவரை இருந்த அழுத்தமும் கோபமும், தன்னவளின் ‘சக்கர’ என்ற செல்ல அழைப்பில் வந்த இடம் தெரியாமல் ஓடி விட, அவளின் கரங்களை பிடித்து கொண்டு புன்னகையோடு கிளம்பினான் ராவணன்.
@@@
அதுவரை ஒன்றும் தெரியாமல் இருந்த அஜூதியாவுக்கு, கார் ஆஷ்ரமத்தை நெருங்க நெருங்க, இதயம் படபடக்கத் துவங்கியது.
அவளது கலங்கிய முகத்தை வைத்தே தன்னவளின் பதட்டத்தைப் புரிந்துகொண்ட ராவணன், அவளது கரத்தைப் பற்றிக்கொண்டு,
“நான் இருக்கேன்.” என்று ஆதரவாக சொல்ல, அவனை நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.
அதே நேரம் கார் ஆஷ்ரமத்தின் முன் வந்து நிற்கவும், ராவணன் கதவைத் திறந்து இறங்க முற்பட்ட நேரம், அவனது கரத்தைப் பற்றி தடுத்தவள், அவனது விழிகளை நேராகப் பார்த்து,
“நான் சொன்னபடியே சொல்லுங்க சரியா எனக்காக ப்ளீஸ், ஜானகி மா என்ன பண்றீங்கன்னு கேட்டா பிஸ்னஸ் பண்றீங்கன்னு மட்டும் சொல்லுங்க. மத்ததெல்லாம் நான் பேசிக்கிறேன்.” என்றாள்.
அஜூதியாவின் பதட்டத்தை உள்வாங்கிக்கொண்ட ராவணனின் இதழ்களில் மெல்லிய புன்னகை மலர, அவளது கரத்தை அழுத்தமாகப் பற்றியவன்,
“நான் பார்த்துக்கிறேன்” என்று கூறிவிட்டு காரிலிருந்து இறங்க, இருவரும் ஒன்றாக ஆஷ்ரமத்திற்குள் நடந்துச் சென்றனர்.
@@@@
ஜானகியின் அறையில் ஒருவித கனத்த மௌனம் நிலவியது.
பத்து பேர்! அந்தப் பத்து பேரும் ஆண்கள்! அவர்கள் மத்தியில் இவள் சென்று வாழப் போகிறாளாம்.
சரி, அவர்களுக்கும் ராவணனுக்கும் என்ன உறவு என்றால், தம்பிகள் போலவாம்.
இது ஒரு குறையாகவே இவளுக்குத் தெரியவில்லையா? இவ்வளவு உற்சாகமாக இருக்கிறாள்? இந்தப் பெண்ணுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்ன?
ஜானகிக்குத் தலையே சுற்றிக்கொண்டு வந்தது.
அனைவரும் இருக்கும் பொழுது தலையில் கை வைக்க முடியாதே, ஆதலால், தன் கலக்கத்தை மறைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக அவர் புன்னகைக்க, அவர் முகத்தில் வந்து போன அனைத்து உணர்வுகளையும் உள்வாங்கியபடி மெல்லிய புன்னகையுடன் அமர்ந்திருந்தான் ராவணன்.
ஜானகிக்கோ இந்த விஷயத்தில் இருந்து வெளியே வர முடியாததால், அடுத்து என்ன கேட்பதென்றே தெரியவில்லை.
ஆனாலும் அஜூதியாவின் விருப்பம் இதுவாக இருக்கும் பொழுது, அவரால் என்ன செய்துவிட முடியும்?
தனது விருப்பு வெறுப்பை ஒதுக்கி வைத்தவர் ராவணனிடம்,
“நீங்க பிஸ்னஸ் பண்றீங்கன்னு சொன்னா, என்ன பிஸ்னஸ் பண்றீங்க?” என்று கேட்கவும்,
ராவணன் பதில் சொல்ல வருவதற்குள்,
“இம்போர்ட் எக்ஸ்போர்ட் மா,” முந்திக்கொண்டு அஜூதியா பதில் கூறவும், ஜானகிக்குச் சலிப்புதான் வந்தது.
பின்னே வந்ததில் இருந்து அவரும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார்.
இவர் என்ன கேட்டாலும், அவன் சொல்வதற்குள் இவளே முந்திக்கொண்டு பதில் சொல்ல அஜூதியாவின் இந்த ஆர்வம் இவருக்கு கோபத்தையும் கலக்கத்தையும் சேர்த்து கொடுத்தது.
ஜானகி ஒன்றும் செய்ய முடியாமல் சலிப்புடன் அஜூதியாவைப் பார்க்க,
அந்நேரம் தன் குரலைச் செருமிய ராவணன்,
“உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.” என்றான்.
“என்ன பேசணும்?” சற்று பதற்றத்துடனே வினவினாள் அஜூதியா.
அதற்கு அவளைப் பார்த்துப் புன்னகைத்த ராவணன், தன் சகாக்களை வெளியே இருக்குமாறு கண்ணசைக்க, அவர்களும் அவனது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து உடனே வெளியேறிவிட,
இப்பொழுது அஜூதியாவைப் பார்த்தான் ராவணன்.
@@@@
அதே நேரம் தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததால் பேச வெளியே சென்றிருந்த இந்திரா,
“லீவ்ன்னுதான் பேரு எப்ப வருவ, எப்ப வருவன்னு ஃபோனை போட்டு உயிரை வாங்குறாங்க.” என்று புலம்பிக்கொண்டே படியேறவும்,
கையில் ஜூஸ் கிளாசுடன் தேவராஜ் படியிறங்கவும் சரியாக இருக்க, அவசரத்தில் கவனிக்காமல் வந்த இந்திரா தவறுதலாக அவன் மீது மோதிவிட, அவன் கையில் இருந்த ஜூஸ் கிளாஸ் தவறி அவன் மேலே சிந்தியதில், அவன் அணிந்திருந்த வெள்ளை சட்டை முழுவதும் ஆரஞ்சு நிறமானது.
பதறிப்போன இந்திராவோ,
“சாரி” என்று அவன் முகம் பார்த்த கணம், இன்னுமே பதறிவிட, அவள் கண் முன்னே அன்று நடந்த சேறு சம்பவம் நினைவிற்கு வந்தது.
‘ஐயோ இது அவன்ல!’
என்று எண்ணியவளோ, அன்று தான் சட்டையைக் கழட்டச் சொன்னது போல, இன்று தன்னையும் அப்படி சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று பயந்து தடுமாற்றத்துடன் நின்றாள்.
ஏற்கனவே இவனை ராவணன் கூடப் பார்த்ததில் இருந்தே, ‘ஒரு ரௌடியிடமா சண்டை போட்டோம், பழிவாங்க ஏதாவது பண்ணிட்டா என்ன பண்றது?’ என்ற சிறு பயத்தில் இருந்தவளுக்கு, இப்போது இன்னுமே பதட்டம் சூழ்ந்துகொண்டதால்,
படி குறுகலாக இருந்ததால் யாராவது ஒதுங்கித்தான் செல்ல வேண்டும், என்பதை கூட உணராது அவள் அப்படியே நிற்க,
அதைப் புரிந்துகொண்ட தேவராஜ் தானே சற்று ஒதுங்கியவன்,
“பொண்ணு கிட்ட போட்டிருக்க சட்டையைக் கேக்குற அளவுக்கு நான் ஒன்னும் பொறுக்கி இல்லை. பயப்படாம போ.”என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
அவன் அவ்வாறு கூறிவிட்டுச் செல்லவும், இத்தனை நேரம் பயத்தில் இருந்த இந்திரா போய்க்கொண்டிருந்த அவனது முதுகை வெறித்துப் பார்க்க, இப்பொழுது அவளது இதழ்கள் லேசாக வளைந்தன.