அத்தியாயம் : 7
அன்று காலையில் ராஜவர்மனின் அறைக்குள் நுழைந்தவன், மதியம் வரை ராஜவர்மன் சடலமாக படுத்திருந்த இடத்திற்கு அருகில், ஏதோ அண்ணன் படுத்திருப்பதாக எண்ணியவாறு கண்ணீர் விட்டு கொண்டிருந்தான் ராஜகுமாரன்.
சுமார் மூன்று மணியளவில், ராஜகுமாரனை தேடி ராஜவர்மனின் அறைக்குள் நுழைந்த சமையல்காரரான பெருமாள், அவன் கண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, “தம்பி சாப்பிட வாய்யா” என்று, அன்பாக அவனது தோள் தொட்டு அழைத்தார்.
கண்களை திறக்காது அவரின் குரலில் நிகழ்காலத்தை உணர்ந்தவன், “நீங்க போங்க மாமா நான் வர்றேன்” என்றான் கரகரத்த குரலில்.
“நீ காலையில இருந்து சாப்பிடலை. வாய்யா வந்து சாப்பிடு” என்று அக்கறையாய் அவனை பார்த்தவாறு கூறினார்.
“வர்றேன் நீங்க போங்க மாமா” என்று துக்கத்தின் பிடியில் மீள முடியாது, சன்னமான கோப குரலில் கூறினான்.
ராஜகுமாரன் இவ்வாறு அடம்பிடிப்பது புதிதா? எப்பவும் படிப்பு, வேலை என்று தானே இருப்பான். அவனை அதட்டி ராஜவர்மன்தானே சாப்பிட வைப்பான் என்பதை நினைத்து பார்த்துவிட்டு, “நேத்து என் கனவில் ராஜா வந்தான். அவன் சாப்பிட உட்காரும் போது, ஒவ்வொரு தடவையும் தம்பி சாப்பிட்டானானு கேட்டுட்டுத்தான் சாப்பிடுவான். அதே போல சொல்லிட்டு, தம்பியை நல்லா பார்த்துக்கங்க மாமா. அவன் மெலிஞ்சி தெரியுறானு சொன்னான். நான் அப்படியா தம்பினு கேட்கிறேன். அவனுக்கு பிடிச்சதை நல்லா செஞ்சி கொடுத்து அவனை சாப்பிட வைங்க மாமா சொன்னான்.
அடுத்த கணம் கனவு கலைஞ்சி எனக்கு முழிப்பு தட்டிருச்சி. பட்டுன்னு தூக்கத்தில் இருந்து முழிச்சிட்டேன். அடுத்த நிமிஷம் ஒரு மாதிரி வேர்த்து கொட்ட ஆரம்பிச்சிருச்சி. அவன் நம்மளையெல்லாம் விட்டு போய், எட்டு நாளாச்சி, இன்னைக்கு நம்ம கனவுல வந்திருக்கானேனு யோசித்திட்டு இருந்தேன்.
பொதுவாக இறந்தவங்க கனவில் வந்துதான், எதாவது சொல்வாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். அதை நினைச்சிட்டு இருக்கும்போது, நாளைக்குதான சின்ன தம்பி வீட்டுக்கு வருது. அதான் நம்ம கனவுல பெரிய தம்பி வந்திருக்கோனு நானே எனக்குள்ள நினைச்சுகிட்டேன்.
காலையில நீ வீட்டுக்குள்ள நுழையும்போது பார்த்தேன், பெரிய தம்பி சொன்னது போல, நீ மெலிஞ்சி போயிட்டப்பா. உன்னை நல்லா பார்த்துக்க சொல்லத்தான், என் கனவுல பெரிய தம்பி வந்திருக்கு”என்று கூறி வருத்தப்பட்டவர், “பெரிய தம்பி உன்னை விட்டு எங்கையும் போக மாட்டான். உன் கூடவேதான் இருப்பான் வாப்பா. வந்து சாப்பிடு. நீ சாப்பிட்டு நல்லா இருந்தால்தான் அவன் மனசு சாந்தியடையும்” என்று ஆறுதலாக பேசி, ராஜகுமாரனின் கைப்பிடித்து எழுப்ப முயன்றார்.
மெல்ல கண்கள் கலங்கி கொண்டே அவரின் கைப்பிடித்து எழுந்து நடந்தவன், அவரின் துணையுடன் நாற்காலியில் அமர்ந்தான். “இந்தாப்பா இந்த தட்டில் கை கழுவிக்க” என்றவர், மற்றொரு தட்டில் சாப்பாடு வைத்து கொடுத்து, அவனை சாப்பிட வைத்தார் பெருமாள்.
சாப்பிட்டு மீண்டும் ராஜவர்மன் அறைக்குள் சென்று படுத்து கொண்டான்.
அவனது நடவடிக்கையை பார்த்து கொண்டிருந்த சங்கர், சிவா, குமார் மூவரும் அவனுக்கு எப்படி சமாதானம் அளிப்பது என்று தெரியாது இருந்தார்கள்.
ஏனெனில் வீட்டிற்கு நுழைந்ததும், இவ்வளவு நாள் அந்த வீட்டையே ஆண்ட ஒருவர். கூடவே இருந்த ஒருவர் இல்லை என்பதை ஏற்று கெள்ளவும் முடியவில்லை. இனி அவரை பார்க்கவும் முடியாது என்ற உண்மையை ஜீரணிக்கவும் முடியவில்லை.
சிறிது நேரத்தில் சூரியன் முழுவதுமாக மறைந்து, இருள் சூழ்ந்தது. ராஜகுமாரனின் வாழ்க்கை இருளில் மூழ்கியது போல உணர்ந்தான். ஆனால், அந்த இருளில்தான், அவனுக்குள் ஒரு புதிய ஒளி தோன்றியது.
‘நான் மெலிஞ்சி போயிட்டதா பெருமாள் மாமா கனவுல வந்து சொல்லிட்டு போயிருக்கான். அப்படி என்மேல உயிரா இருக்கிறவன், எதற்காக தற்கொலை பண்ணிருக்கணும்? என்னை விட்டு போக அண்ணனுக்கு சத்தியமா மனசு வந்திருக்காது. ஆனால், தற்கொலை பண்ணிக்கிட்டான்னா… அவனுக்கு என்ன பிரச்சனையா
இருக்கும். எதற்கு அவன் அளவுக்கு அதிகமாக ட்ரிங் பண்ணணும்?’ என்று யோசித்தான் ராஜகுமாரன்.
ராஜவர்மனின் திடீர் மரணம், காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் ஐவுளி வணிக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அது மட்டுமல்லாமல் ஒரு பெரிய சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
‘ராஜா டெக்ஸ்டைல்ஸ்’ போன்ற ஒரு பிரம்மாண்டமான நிறுவனத்தின் இளம் உரிமையாளர், எந்தக் காரணமும் இன்றி தற்கொலை செய்துகொண்டது, பலருக்கும் நம்ப முடியாத ஒன்றாக இருந்தது. ஊர் மக்கள் பலவிதமாக பேசத் தொடங்கினர்.
தொழில் வட்டார கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த, ராஜகுமாரனிடம் ஆறுதலாக பேசுகிறேன் என்ற பெயரில், அவர்களது வன்மத்தை கொட்டினார்கள்.
“என்னப்பா, ராஜவர்மன் இப்படி பண்ணிட்டான்? அவனை பத்தி எனக்கு தெரியும். ரொம்ப தைரியமான பையன் ஆச்சே!” ஒரு வயதான வியாபாரி ராஜகுமாரனை பார்த்து பரிதாபமான குரலில் பேசினார்.
“ஆமாமா.. நல்லா வியாபாரம் போயிட்டிருந்தது. அரண்மனை மாதிரி வீடு கட்டினாங்க. ஆனால், திடீர்னு இப்படி ஒரு முடிவு எடுக்கணும்னா ஏதோ பெரிய காரணம் இருக்கும்” என்று இன்னொருவர் முணுமுணுத்தார்.
“அண்ணன்-தம்பி சண்டைதான் காரணம்னு சொல்றாங்க. ரெண்டு பேரும் பிரியணும்னு நினைச்சதாவும், ராஜவர்மன் அதனால ரொம்ப மன உளைச்சல்ல இருந்ததாவும் பேச்சு!” என்று ஒரு சிலர் கண்ணில் பார்க்காமலே அவர்கள் கற்பனை செய்ததை முணுமுணுத்தனர்.
‘என் அண்ணனை என் உயிருக்கும் மேலாக நான் நேசித்து கொண்டிருக்கிறேன். எங்களுக்குள் சண்டை என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படியிருக்க, எப்படி எல்லாம் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள்’ என்று மனதிற்குள் எண்ணியவாறு மெளனமாக நின்றிருந்தான். இது போன்ற அபத்தமான குற்றச்சாட்டுகள் அவனது மனதை நோகடிப்பதை காட்டிலும் கோபத்தை வர வழைத்தது.
“இல்லங்க, சண்டை எல்லாம் இல்லை. புது பணக்காரன் இல்லைங்களா? பணத்தை எப்படி கையாள்றதுன்னு தெரியாம, ஏதோ கடன்ல மாட்டி தற்கொலை பண்ணிக்கிட்டான்னு சொல்றாங்க. கழுத்தை நெறிக்கும் கடன் போல!” சிலர் பணப்பிரச்சினை இருக்கும் என்ற யுகத்தில் பேசினர்.
‘ராஜா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிதி நிலைமை குறித்து நன்கு அறிந்த ராஜகுமாரனுக்கு இதுவும் ஒரு அபத்தமான குற்றச்சாட்டாக தோன்றியது. தங்கள் வியாபாரம் மிக செழிப்பாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை இவர்கள் முன்னாடி நிருபிக்கவா முடியும்?’ என்று பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு நின்றிருந்தான்.
“இல்லை பொண்ணு சாமாச்சாரமா இருக்கும்” என்றவுடன், இதைக் கேட்டதும் அதிர்ந்துவிட்டான்.
தங்கள் மனம் போன போக்கில், ராஜவர்மனின் மரணத்திற்கு அவர்கள் காரணம் கற்பித்தது அவனுக்குள் ஒரு பெரும் வலியையும், கோபத்தையும் கிளப்பியது.
அவனது அண்ணனை பற்றி தவறாக பேசிய ஒவ்வொரு வார்த்தையும், அவனது காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவது போலிருந்தது. அடுத்த நொடி பொறுமையாக கைவிட்டவனாக, “நிறுத்துங்க” என்று ஓங்கி கத்தினான்.
அவன் கொடுத்த சத்தத்தில் சுற்றியிருந்தவர்கள் ஒரு நொடி மனதிற்குள் பயம் கொள்ள, “என்ன தெரியும் எங்களை பத்தி? உங்களுக்கு தோன்றினதை பேசிட்டு இருக்கிங்க?” என்று சற்று ஓங்கிய குரலில் கேட்டான். கோபத்தில் அவனின் கண்கள் சிவந்தது.
ராஜகுமாரனின் அருகில் நின்றிருந்த சங்கர், “அண்ணா, இவங்க பேசிறதை காதுல வாங்கிக்காதிங்க. அவங்களுக்கு உண்மை தெரியாது. என்ன நடந்ததுனு நமக்கு மட்டும்தான் தெரியும். நீங்க இவங்களோட சண்டை போடுறதால இவங்க வாய்யெல்லாம் அடைக்க முடியாது. ஆனால் உண்மை என்றைக்காவது வெளிவரும். அவங்களே அவங்க பேசினது தப்புனு புரிஞ்சுக்குவாங்க” என்றான். அனைவரின் மத்தியில், ராஜகுமாரனுக்கு உறுதுணையாக வந்து நின்றான்.
ராஜவர்மனுக்கு எப்படி ஒரு விசுவாசமான உதவியாளனாக இருந்தானோ, அதேபோல ராஜகுமாரனுக்கும் தோள் கொடுத்து நின்றான்.
“அப்ப எதுக்கு ராஜவர்மன் இறந்து போனான்? அவனுக்கு என்னத்தான் ஆச்சி?” என்று கூட்டத்தில் ஒருவர் கேட்க,
“இப்போதைக்கு எங்களுக்கே அந்த விடை தெரியாது. ஆனா, நீங்க சொன்ன அத்தனை குற்றசாட்டும் கிடையாதுங்கிறது மட்டும் நூற்றுக்கு நூறு உண்மை. அதை மட்டும் எங்களால உங்ககிட்ட நிருப்பிக்க முடியும். அதுனால, உண்மை தெரிய வரும் வரைக்கும் எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க! அபத்தமா பேசி எங்க நிம்மதியை கெடுக்காதிங்க” என்று இறுதியில் கரகரத்த குரலில் கூறினான்.
அவனின் குரலில் இருந்த வருத்தம் ராஜகுமாரனின் மனதை தொட்டது. ராஜவர்மன் மீது அவன் கொண்டுள்ள அன்பை புரிந்து கொண்டான்.
“அண்ணா வாங்க போகலாம்” என்று சங்கர் அழைக்க, கோபமாக கூட்டத்தில் இருந்து வெளியேறி வாகனத்தை அடைந்தான்.
“யாருவேணா என்னவேணா பேசிட்டு போகட்டும் உண்மை என்னென்னு நமக்கு தெரியும். அதனால இந்த மாதிரி அபத்தமான பேச்சுக்கு நீங்க சோர்ந்து போயிட கூடாதுண்ணா. நம்ம அண்ணன் ஆத்மா சாந்தி அடையணும்னா, அண்ணன் கண்ட கனவு போல, நம்ம ராஜா டெக்ஸ்டைல்ஸை, நீங்க உலகறிய கொண்டு செல்லணும். நாங்க உங்களுக்கு துணையா இருப்போம்” என்றவன், “இந்த மாதிரி நேரத்தில்தான் நம்மளை பேசி பேசியே சாகடிக்க பார்ப்பான்க நீங்க சுதானமா இருங்க” என்றான் சற்று கோபமாக
சங்கரின் வார்த்தைகள் ராஜகுமாரனுக்கு சற்று ஆறுதலை கொடுக்க, தனக்கு துணையாக விசுவாசமான ஆட்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வு, அவனுக்கு ஒரு யானை பலத்தை கொடுப்பதாக உணர்ந்தான்.
ஆனால், அத்தனை பேரின் கருத்துகளுக்கு மத்தியில், ராஜகுமாரனின் மனதை அதிகமாக புண்படுத்தியவை. தன் அண்ணனின் இறப்பிற்கான காரணம் தெரியாததுதான்?
ராஜவர்மன் மரணத்திற்கு, வெறும் கடன் தொல்லையோ, அல்லது அண்ணன்-தம்பி சண்டையோ காரணம் இல்லை ஏனெனில், ராஜவர்மனின் இயல்பை பற்றி அவனுக்கு நன்கு தெரியும்.
சிறுவயதிலிருந்தே அவ்வளவு கஷ்டத்திலும், எந்த ஒரு பிரச்சனையையும் தைரியமாக எதிர்கொண்டவன், அப்படிப்பட்ட ஒருவன், எதற்காக தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? அவன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை. தங்களுக்கு கழுத்தை நெறிக்கும் அளவிற்கு எந்த கடனும் இல்லை. மிதமான கடன்கள்தான்.
அப்படியானால் அண்ணனுக்கு என்ன நடந்திருக்கும்? இந்த கேள்விகள் ராஜகுமாரனின் மனதிற்குள் வந்து ஓயாமல் அலைமோத ஆரம்பித்தன.
அண்ணன் இறந்துவிட்டான் என்பதை ஏற்று கொள்ள முடியாமல் இவ்வளவுநாளும் தத்தளித்து கொண்டிருந்தவன், தற்போது அவன் ஏன் இறந்தான்? அதுவும், ஏன் தன்னை தானே சுட்டு கொண்டான் என்று ராஜகுமாரனுக்கு ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்தியது.
ஒருவேளை, அண்ணனுக்கு உடலில் எதுவும் பிரச்சனை இருந்திருக்குமா? ஏனெனில் சிறுவயதில் இருந்து சரியாக சாப்பிடாமல் தன்னை வருத்தி கொண்டு வேலை பார்த்தவன், அதன் விளைவாக எதாவது பெரிய பாதிப்பு இருந்திருக்குமா? அப்படி எதாவது இருந்திருந்தால் மருத்துவ அறிக்கையில் சொல்லியிருப்பார்களே? என்று யோசிக்க யோசிக்க, அவன் மனம் பதைபதைத்தது.
ஊர் மக்களின் பேச்சுக்களையும், தன் மனதின் சந்தேகங்களையும் ஒரு முடிவுக்கு கொண்டுவர துடித்தான். எதற்காக அண்ணன் தன்னை தானே சுட்டுக் கொண்டான்? அண்ணனின் மரணத்திற்கு பின்னால் ஏதோ ஒன்று ஒளிந்திருக்கிறது என்பதை அவனது உள்ளுணர்வு உணர்த்தியது.
அண்ணனின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். ஒருவேளை அவன் மரணத்திற்கு பின்னால் யாராவது இருந்தால், நிச்சியம் அவர்களை வேரறுக்க வேண்டும் என்ற வைராக்கியம் அவனுக்குள் தீ போல, மனம் மற்றும் உடலில் பற்றி கொண்டு எரிய ஆரம்பித்தது.
அண்ணனின் இழப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், தன்னை தானே தயார்படுத்தி கொள்ள வேண்டியது மிக முக்கியம், தன்னை தானே செதுக்கி கொள்ள வேண்டியது அவசியம் என்று முடிவெடுத்தான் ராஜகுமாரன்.
ஹாய் ப்ரெண்ட்ஸ் !
தினமும் ஒரு அத்தியாயம் பதிவிட்டு வருகிறேன். உங்களது கமெண்ட்ஸை தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டு கொள்கிறேன். அப்படியே லைக் கொடுத்துவிடுங்கள்.