8 – விதி விளையாடிய விநாடி!

அத்தியாயம் : 8

ஒருவாரம் கழித்து… 

கடற்கரைக்கு அருகில், நவீன கலை நுட்பத்துடன்  காட்சியளித்த ராஜகுமாரனின் வீட்டினுள் பொழுது விடிந்து சூரியன் ஒளி, நுழைந்து, தூக்கத்தில் இருந்த ராஜகுமாரனை எழுப்பிவிட்டது. 

கண்களை விழித்தும், அண்ணனின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற வெறியுடன் எழுந்தவன், தன்னை சுத்தப்படுத்தி கொண்டு, பால்கனியில் ஒரு தரைவிரிப்பை விரித்து, கண்களை மூடியபடி, சூரியனை நோக்கி அமர்ந்தான். 

சில வினாடியில் அவன் முகம் நிதானத்திற்கு வந்தது. 

சுவாசத்தை சீராக்கி, அவன் வெளியிடும் மூச்சுகாற்று அதிகாலை பொழுதின் அமைதியுடன் ஒன்றிப்போனது. 

ஆழ்ந்த தியானத்தை நோக்கிச் சென்றவன், மனதை  ஒருமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டான். ஒருபுறம் அவனுக்குள் இருந்த புயலை அடக்கும் முயற்சியாகவும், மறுபுறம் ஒரு புதிய மாற்றத்திற்கான தேடலாகவும், அவை மாற முயற்சிக்கும்போது, ஏனோ, அடுத்த நொடியில் பட்டென்று கண்களைத் திறந்தான். 

அவன் மனத்திரையில் வந்து விழுந்த ராஜவர்மனின் முகத்தை கண்டதும் மனம் தளர்ந்து போனான். மீண்டும் மனதை கட்டுப்படுத்தி தியானபயிற்சி செய்ய முயற்சித்தான். ஆனால், அவனால் முடியவில்லை.

மனதை அமைதிப்படுத்தும் அவனது முயற்சி, இப்படியாக ஒரு வாரமாக தோல்வியை தழுவின. விரக்தியாக கண்களைத் திறந்தவன், ஏதோ உலகமே இருளாகத் தோன்றியது போல உணர்ந்தான். 

தூரத்தில் கடற்கரையின் அலைகள் கரையைத் தொடும் மெல்லிய சத்தம், காலை நேர இதமான காற்று, வீட்டு தோட்டத்தில் பூத்துக் குலுங்கிய ரோஜா பூக்களின் நறுமணம் என்று, அவன் பார்க்கும் அனைத்தும் அவன் மனதை அமைதிப்படுத்தவில்லை. 

அவன் முயற்சி தோல்வியை தழுவவும், வெளி உலகின் அமைதிக்கும், அவனது உள் மனதின் கொந்தளிப்புக்கும் இடையே… ஒரு பெரிய மன போராட்டத்தில் சிக்கி தவித்தான். 

அவன் ஒன்றும் சாதாரணமானவன் அல்ல. சிறுவயதில் இருந்தே, மிகப்பெரிய போராளி. கடினமான உழைப்பாளி. எத்தனையோ சவால்களை சந்தித்து, எத்தனையோ சோதனைகளை தன் அண்ணணுடன் கடந்தவன்தான், ஏனெனில், அவன் பிறக்கும்போதே  பரம்பரை பணக்காரக் குடும்பத்தை சேர்ந்தவன் இல்லை. அடிமட்டத்தில் இருந்து தொழிலை கற்றுக்கொண்டு, படிப்படியாக வாழ்வில் உயர்ந்து, பணக்கார கூட்டத்தில் முக்கிய நபராக மாறிய கெட்டிக்காரனாயிற்றே. 

அப்போதெல்லாம் அவன் துவண்டுவிடவில்லை. எத்தகைய இடர்களை கண்டும்  அசரவில்லை.  பாறையைப் போல உறுதியான மனோதிடத்துடன் இருந்தான். காரணம் தன் உயிருக்கு மேலான தன் அண்ணன் கூட இருந்து வழிகாட்டி கொண்டிருக்கிறான்  என்பதால், 

ஆனால், ராஜவர்மனின் மரணத்திற்கு பிறகு அவனது உலகத்தையே புரட்டிப் போட்ட தவிப்பை நொடிக்கு நொடி உணர்ந்து கொண்டே இருந்தான். அந்த தவிப்பை அடக்கி,  அண்ணனது மரணத்திற்கான காணத்தை கண்டறிய வேண்டும் என்று தனக்குள் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பை, எப்படி சரியான திசையில் செலுத்தி விடையை கண்டுபிடிப்பது என்று தவித்து கொண்டிருந்தான். 

‘எனக்குத் தெரியாமல் அண்ணன் எதையாவது மறைத்திருக்கிறானா? ஒருவேளை காதல்? இது போன்ற வேறு எதுவுமா?’ எது என்றுதான் அவனுக்கு புரியாத புதிராக இருந்தது. இந்த ஒற்றை கேள்வி அவனது நெஞ்சிற்குள் அனலாய் எரிந்தது.

‘ஒருவேளை அண்ணனுக்குக் காதல் என்ற ஒன்று இருந்திருந்தால், என்னிடம் சொல்லாமல் இருப்பானா?’ எதுவும் புலப்படாத குழப்பத்தில் தவித்து கொண்டிருந்தான். 

“ஏன் அண்ணா? ஏன் இப்படி செய்தாய்?” இந்த ஒற்றைக் கேள்வி, அவனது இதயத்தை கேட்டு கேட்டு துளைத்து, ஒவ்வொரு கணமும் அவனை வாட்டி வதைத்து கொண்டிருக்க, நடந்த உண்மை தெரியாமல், அண்ணனின் இழப்பை மட்டுமே அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

விடை தெரியாத இந்த கேள்வி அவனது மனதை போட்டு குடைந்து, ஒரு கட்டத்திற்கு மேல் சீராக  மூச்சுகூட விட முடியாத அளவிற்கு கனத்த பாரத்தை அவனது இதயத்திற்குள் ஏற்படுத்திவிட்டது. 

வேலையாட்கள் உதவியுடன் மருத்துவமனை சென்று திரும்பியவன், மருத்துவரின் அறிவுரையின்படி மூச்சுப்பயிற்சி செய்ய முயற்சித்தான். அவனால் அண்ணனின் மரணத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியத்தை அறியாமல் நிம்மதியாக மூச்சு கூட விட முடியவில்லை. 

“சிவா, குமார், சங்கர்” என்று வீட்டே அதிரும்படியாக கத்தினான். 

அவன் அழைப்பைக் கேட்டு  பதறிக்கொண்டு ஓடி வந்தவர்கள், “சொல்லுங்கண்ணா?” என்று பணிவுடன் கேட்டார்கள்.

நெற்றியைத் தடவிக்கொண்டே, அனைவரையும் ஏறிட்டவன், “அண்ணனுக்கு என்னடா ஆச்சி? அன்னைக்கு என்னத்தான் நடந்தது?” என்று தாங்கமுடியாத மன போராட்டத்தில் இடையே கத்தினான். 

சிவா திகைப்புடன், “எண்ணைக்குண்ணா?” என்று கேட்டான்.

“அண்ணன் இறந்த அன்னைக்கு!” என்று கர்ஜித்தவன், துளைத்தெடுக்கும் பார்வையால் மூவரையும் நோக்கினான்.

மூவரில் குமார் மட்டும் திருதிருவென முழிக்க, அவனது பார்வையின் மாறுபாட்டைக் கண்டவன், சட்டென அவனின் அருகே சென்று, “சொல்லுடா என்னாச்சு?” என்று கோபமாக கேட்டான். 

சிறிது கரகரத்த குரலில், “அண்ணன்… ஒரு பொண்ணை லவ் பண்ணாரு. அந்தப் பொண்ணு அண்ணாவை ஏமாத்திட்டாண்ணா” என்றான் குமார்.

இந்த அதிர்ச்சிகரமான தகவலைக் கேட்டதும்,  சட்டென அவனது சட்டையைப் பிடித்து உலுக்கினான். “ஏன்டா இந்த விஷயத்தை நீ முதல்லையே என்கிட்ட சொல்லலை?” என்று கர்ஜித்தான். 

“அண்ணன்தான், தம்பிக்கு இப்போதைக்கு விஷயம் தெரிய வேணாம். அவள் வீட்டில் எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதும், தம்பிக்கிட்ட சொல்லுவோம். என்மேல உள்ள பாசத்துல அவங்க வீட்டுக்குப் போய் பேசுறேன்னு கிளம்பிருவான். அவள் நானே வீட்டில் பக்குவமா பேசி சம்மதம் வாங்குறேன்னு சொல்லிருக்கான்னு சொன்னாங்கண்ணா”

“அப்புறம் என்ன நடந்தது?”

“அண்ணன் இறக்கிறதுக்கு ஒரு வாரம் முன்னாடி, அந்த பொண்ணை பார்க்க போனாரு. அப்ப… அங்க…” என்றவன், மேற்கொண்டு பேசுவதற்குத் தடுமாறினான்.

பொறுமையிழந்த ராஜகுமாரனோ, குமாரின் கழுத்தைப் பிடித்து உலுக்கி, “என்ன நடந்தது? உண்மையை மறக்காமல் சொல்லு!” என்று அழுத்தமான குரலில் கேட்டான்.

குமார் கண்கலங்கினான். “அண்ணாவை அந்த பொண்ணு உண்மையா காதலிக்கலை. அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு அவளுக்கு எண்ணமே இல்லை. அண்ணாவோட பணத்துக்காகத்தான் அண்ணாவை காதலிக்கிற மாதிரி நடிச்சிட்டு இருந்திருக்கிறாள். அண்ணனும் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்திட்டு இருந்தாரு. கார், நகை, பணம்னு அவளுக்கு கிஃப்ட் கொடுத்தாரு. ஆனால், கல்யாணம் பண்ணிக்கலாமானு அண்ணன் கேட்டதும், நான் உங்ககிட்ட ஒரு பிரண்டாத்தான் பழகினேனு சொல்லி அண்ணனை அவாயிட் பண்ண ஆரம்பிச்சா. அண்ணன் அதுனால ரொம்ப வெக்ஸ்ஸாகிட்டாருண்ணா” என்று கரகரத்த குரலில் கூறினான். 

நடந்த விஷயங்களைக் கேட்டறிந்ததும், அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தலையை கோதி கொண்டவன், ‘ஒருத்தர் மேல்  அண்ணன் பாசம் வைத்தார்ன்னா, சாகிற வரைக்கும் அவரோட பாசம் மாறாது. அப்ப… அவளை உயிருக்கு உயிராய் அவர் நேசித்திருக்கணும். அதான், அவள் பணத்துக்காக பழகிட்டு ஏமாத்திட்டான்னு நினைச்சி அண்ணன் மனதிற்குள்ளேயே புழுங்கியிருக்காரு. எவ்வளவு வருத்தப்பட்டாரோ?’ என்று எண்ணிப் பார்த்து வேதனைப்பட்டான்.

குமார் மேலும் தொடர்ந்தான். “அண்ணன் ரொம்ப மனவேதனையில் இருந்தாரு. நான் உங்ககிட்ட சொல்வோம்னு சொன்னேன். ஆனால், தம்பி மனசு கஷ்டப்படுவான். என்மேல சத்தியமா தம்பிக்கிட்ட நடந்த விஷயத்தை நீ சொல்லவே கூடாதுனு சொன்னாரு. ஆனால், அவர் தற்கொலை பண்ணிக்குவாருன்னு நான் நினைக்கவே இல்லைண்ணா. அவள்தான் அண்ணன் இந்த முடிவை எடுக்க காரணம்” 

விபரத்தை கேள்விப்பட்டதும் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய்  நின்றிருந்தார்கள். முக்கியமாக ராஜகுமாரனால் ஒருதுளி கூட நம்ப முடியாத தோரணையுடன் நின்றிருந்தான். 

அண்ணன் எப்போதுமே தைரியமானவன், சவால்களை எதிர்கொள்ளத் தயங்காதவன். அப்படிப்பட்டவன் ஏன் சட்டென்று தற்கொலை முடிவை எடுக்க வேண்டும்? அவளை எதிர்த்து போராடிருக்கலாம். இல்லை என்னிடம் சொல்லிருக்கலாம்,  நானும் அவனும் எத்தனை சவால்களை சேர்ந்து கடந்து வந்திருக்கிறோம். ஆனால், ஏன் அண்ணன் என்னிடம் இந்த விஷயத்தை சொல்லவில்லை?’ என்று வேதனை அடைந்தான் ராஜகுமாரன். 

அனைவரும் அதிர்ச்சியில் வாயடைத்து போனவர்களாக அமைதியாக நின்றிருந்தார்கள். “அவள்தான் நம்ம அண்ணன் இறந்ததுக்கு  காரணம் வேற யாரும் இல்லை!” என்று சொல்லி அழுதான் குமார். 

அவனின் வாயிலிருந்து வந்த உண்மைகள் ராஜகுமாரனின் ரத்தத்தைக் கொதிக்க வைத்தது. அண்ணன் பணத்திற்காக ஏமாற்றப்பட்டது அவனது மனதை உலுக்கியது. அதுவும், ‘காதல் என்ற நாடகமாடி அண்ணன் உயிரை பறித்துவிட்டாளே?’ என்று எண்ணியவன், ஆக்ரோஷமாய்  கைகளால் கதவில் குத்தினான். 

“அண்ணா” என்று பதறியவர்கள் அவனை தாங்கி பிடிக்க முன்வர,

அனைவரிடம் வேண்டாம் என்பது போல சைகை காட்டியவன், ‘அண்ணனுக்கு எவ்வளவு மனசு வலிச்சிருக்கும்? எவ்வளவு வலியை மனசில் உணர்ந்திருந்தால் அவன் குடித்திருப்பான். இறுதியில் தற்கொலை முடிவையும் எடுத்திருப்பான்? அந்த அளவிற்கு அவள்மேல் உயிரை வைத்திருந்திருக்கிறானே’  இந்த கேள்வி அவனது நெஞ்சில் ஈட்டியாய் பாய, அண்ணனை இழந்து நின்ற அவனுக்கு நடந்த உண்மையை கேட்டு மேலும் வேதனையாக இருந்தது. 

அந்த பெண்ணை பற்றி நினைக்க, நினைக்க, கோபத்தில் அவனது கண்களில் ரத்தம் திரண்டு கண்கள் சிவப்பாக காட்சியளித்தது.  

அந்த பெண்ணை கண்டுபிடித்து, அண்ணனை இழந்து நான் நிற்கும்  தேவனைக்கான தண்டனையை கொடுக்க வேண்டும் என்ற வெறி அவனுக்குள் எழுந்தது.

சிவா, குமார், சங்கர் மூவரும் ராஜகுமாரனின் கோபத்தையும், வலியையும் உணர்ந்தவர்களாக, அவனை கவலையுடன் பார்த்து கொண்டிருந்தார்கள். 

அவர்களின் கண்களிலும் ராஜவர்மன் மீதான பாசமும், தனிமரமாகிவிட்ட ராஜகுமாரனின் மீதான அக்கறையும் கலந்து தெரிந்தது. கூடவே, அந்த பெண்துரோகியின் மீது கோபமும் தோன்றியது. 

அண்ணனின் மரணத்திற்கான உண்மையை  தெரிந்த கொண்ட பிறகு,  முற்றிலுமாக ராஜகுமாரன் நிம்மதி தொலைந்து போய், எதன்மீது தனது கோபத்தை, ஆதங்கத்தை காட்டுவது என்று தெரியாது, “அந்தப் பொண்ணு யாரு? அவள் பெயர் என்ன?” என்று  கத்தி கேட்டான்.  ஒவ்வொரு வார்த்தைகளின் அதிர்வும் நின்றிருந்தவர்களின் மனதிற்குள் பயத்தை கொடுத்தது. 

குமார்… நடுங்கிய குரலில், “அண்ணா… அவள் பெயர்… ஸ்வேதா” என்றான். 

‘ஸ்வேதா!’ என்று, அவளது பெயரை வெறிகொண்ட சிங்கம் போல கர்ஜித்தான். ‘அண்ணனின் உயிரைப் பறித்தவள். இந்த ஒரு வாரமாக என் உறக்கத்தைக் கெடுத்தவள்’ என்று, அவன் மூளையின் ஒவ்வொரு நரம்பிலும் அந்தப் பெயர் இவ்வாறாக நினைவு படுத்த ஆரம்பித்தான். 

“அவள் எங்க இருக்கான்னு தெரியுமா?”

“அண்ணா… அவளை அண்ணன் இறந்ததிலிருந்து நான் பார்க்கலை. அவளோட போன் நம்பர் கூட சுவிட்ச் ஆஃப்ல இருக்கு. நான் அவளைத்தான் வெறி கொண்டு தேடிட்டு இருக்கேண்ணா. அவள் கிடைச்சதும் உங்ககிட்ட நடந்த உண்மையை சொல்லி, அவளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்னு தவிச்சிட்டு இருந்தேன்ணா. 

இந்த விஷயத்தை முன்கூட்டியே உங்ககிட்ட சொன்னால், அண்ணன் மரியாதைதான் கெடும். எல்லாரும் வாய்க்கு வந்ததை பேசுவாங்க. நீங்களே அண்ணனை இழந்து தவிக்கிறங்க. உங்களை மேலும் தவிக்க விட கூடாதுனுதான், நான் அவளை ராத்திரி பகலா தேடிட்டு இருக்கிறேன். அவள் கிடைச்சதும் உங்ககிட்ட வந்து சொல்லலாம்னு இருந்தேன்” என்று  விசுவாசமாகக் கூறினான் குமார்.

ஹாய் ப்ரெண்ட்ஸ்! ராஜவர்மனின் இறப்பிற்கான காரணத்தை ராஜகுமாரனுடன் நீங்களும் கண்டுபிடிக்க தயாரா? இந்த அத்தியாயம் பற்றிய கருத்துகளை கமெண்ட்ஸில் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அப்படியே கதை பிடித்திருந்தால் ஒரு லைக் கொடுத்துவிடுங்கள்.

நன்றி 

அன்புடன் 

சாய்லஷ்மி.

❤️ Loading reactions...
1 Comment
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top