அத்தியாயம் : 13
தேவயானியிடம் சென்று மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டாள் செளந்தர்யா. அந்த பரிசோதனையின் முடிவில் தேவயானியின் கூற்றுப்படி, அவள் சுத்தமானவள், ஒரு கன்னிப்பெண் என்று உறுதியானது. இந்த முடிவுகள் அந்த வீட்டில் இருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தின. குறிப்பாக ராஜகுமாரன் அதிர்ந்தான். “நீங்க சொல்றபடி பார்த்தால் ஸ்வேதா இவங்களாக இருக்க முடியாது” என்றாள்.
செளந்தர்யாவின் மூலம் உண்மையை தெரிந்து கொண்டதும், ராஜகுமாரனுக்கு பைத்தியமே பிடிக்கிறது போல இருந்தது. ‘அவளை தவறாக நினைத்து கொடுமைபடுத்திவிட்டோமே?’ என்று குற்றவுணர்வில் தவிக்க ஆரம்பித்தான்.
தேவயானியின் மீதிருந்த கோபம், சட்டென்று வந்த மழை போல, ஒரு நொடியில் அவனுக்குள் அணைந்தது.
கோபம், குற்றவுணர்வு, வருத்தம் என்று உணர்ச்சிகளில் பிடியில் சிக்கி தவித்து கொண்டிருந்தவன், எதார்த்தமாய் எதிரே இருந்த ராஜவர்மனின் புகைப்படத்தை பார்த்ததும், மறுநொடி, அண்ணன், ஒரு மோசமான பெண்ணால் நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டு உயிரை மாய்த்துக்கொண்டான் என்ற பெரும் வலி, அவள் ஸ்வேதாவாக இல்லாமல் தேவயானியாக இருந்தால் என்ன? அவள் ஸ்வேதாவின் தங்கை என்று தானே கூறினாள். அவள் குடும்பத்தில் யாரையும் விட கூடாது என்ற வெறி ஏற்பட, தேவயானி மீது ஏற்பட்ட சிறு இரக்கத்தை சட்டென்று தன்னிடமிருந்து உதறி தள்ளினான். உயிருக்கு உயிரான தன் அண்ணனை இழந்த வலி அவனை நியாயத்தின் பக்கம் நிற்க விடாமல் தடுத்தது.
“ஸ்வேதாவ பத்தி எதுவும் சொன்னாளா?” என்று கோபமாக கேட்டான். சற்று முன்னர் அவனிடம் தென்பட்ட அமைதி மறுபடியும் காணாமல் போனது.
“அண்ணா… நீங்க நிதானமா இல்லை. தேவயானிகிட்ட கொஞ்சம் நிதானமா பேசுங்க. அவங்…க பேச ஒரு சான்ஸ் கொடுங்க. அப்புறம், அவங்க சொல்றது உண்மையா இல்லை பொய்யானு நல்லா விசாரிங்க. அப்பத்தான்… அவங்க மூலமா அந்த ஸ்வேதாவை கண்டுபிடிக்க முடியும்ண்ணா” என்று அறிவுரை கூறுவது போல ஆனால் தன்மையாக கூறினாள் செளந்தர்யா.
அவளின் வார்த்தையில் கட்டுக்கடங்காத கோபத்தின் இடையே ஒரு தெளிவு ஏற்பட “சரிம்மா…” என்றவன், “ரொம்ப தேங்க்ஸ். கூப்பிட உடனே வந்து அந்த பொண்ணுக்கு ட்ரீட்மென்ட் பார்த்ததுக்கு” ஒரு தங்கை உணர்வு அவளிடம் மேலோங்க தன்மையாக பேசினான்.
“நான் படிக்க காரணமே நீங்களும் ராஜா அண்ணணும்தான். அதனால அண்ணன் கூப்பிட்டால் நான் வராமல் இருப்பேனா?” என்று அவர்கள் மேல் தான் வைத்திருக்கிற அன்பை தெரியப்படுத்தும் விதமாக கனிவாக கூற,
அவளின் பேச்சில் சிறிது ஆனந்தமடைந்தான் ராஜகுமாரன்.
“அந்த ஸ்வேதா சீக்கிரம் கிடைக்கணும்னு நானும் காத்திட்டு இருக்கேண்ணா. அவளுக்கு நிச்சியம் தண்டனை கிடைக்கணும். ஆனால், அவளை கண்டுபிடிக்க போய் ஒரு அப்பாவி பெண் பாதிக்கபடுறதை என்னால ஏத்துக்க முடியலை. நீங்க ஸ்வேதாவை தண்டிக்கிறதா நினைச்சி இந்த பொண்ணை மேலும் தண்டிச்சிடாதிங்க” என்று தேவயானிகாக பரிந்து பேசினாள்.
“சரிம்மா நான் அந்த பொண்ணுகிட்ட கோபப்படாம நிதானமா பேசறேன். நீ போயிட்டு வா” என்று சிரித்தமுகமாக ராஜகுமாரன் கூறவும்,
“ராஜா அண்ணாவுக்கு அடுத்து நீங்கதான் எங்க எல்லாருக்கும் இருக்கிற ஒரே அண்ணன். எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். ராஜா அண்ணா கூட இரண்டு வார்த்தையோட பேச்சை நிறுத்திருவாங்க. ஆனால், நீங்க என்மேல ரொம்ப அக்கறை எடுத்து பேசுவாங்க. எதாவது ஒரு உதவி கேட்டால் அது எதுக்குனு யாருக்கு கேட்காமல் கூட, உடனே செய்து கொடுப்பிங்க. உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கணும்.
நீங்க கல்யாணம் பண்ணி மனைவி குழந்தைங்கனு சந்தோஷமா வாழ்றதை பார்த்து நாங்க எல்லாரும் சந்தோஷப்படனும். ஸோ… உங்க பர்சனல் லைஃப்க்கும் கொஞ்சம் இம்பார்டன்ட் கொடுங்கண்ணா.
ராஜா அண்ணனை நாம இழந்ததுக்கு காரணமா ஸ்வேதாவை நிச்சியம் தண்டிக்கணும்தான். ஆனால் அதுனால உங்க வாழ்கையும் அநியாயமாக வேற யாரோட வாழ்கையும் பாதிக்கபட்டிட கூடாது. அதில், நீங்க தெளிவா இருக்கணும்.
என்னடா நமக்கே அட்வைஸ் பண்றாளேனு நினைக்காதிங்க. உங்க தங்கச்சியா, உங்ககிட்ட உரிமை இருக்கிறதா நம்பி, உங்ககிட்ட ஒரு ரெக்வஸ்ட்டா கேட்கிறேன். நீங்க சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும். பொண்ணு நீங்க பார்க்கிறிங்களா இல்லை நான் பார்க்கவா?” எனக் கேட்டாள்.
“அண்ணாவுக்கு ஒரு வருஷமாகாமல் மேரேஜ் பண்ண கூடாதும்மா. அதுக்குள்ள அந்த ஸ்வேதாவை கண்டுபிடிச்சிருவேனு நினைக்கிறேன். ஸோ… ஒரு வருஷம் கழிச்சி நீயே எனக்கு பொண்ணு பாரு சரியா?” என்று சற்று சிரித்தமுகமாக கூறினான்.
அவன் முகத்தில் புன்னகையை பார்த்ததும்தான் செளந்தர்யாவிற்கு நிம்மதி வந்தது. “ராஜா அண்ணா எங்கையும் போகலை. உங்க கூடவேதான் இருக்காங்க. அதனால அவங்க கூட இருக்கிறதா நினைச்சி நீங்க பழையபடி ஆக்டிவ்வா மாறணும். அப்போதுதான் நம்ம கண்ணுக்கு தெரியாமல் இருக்க ராஜா அண்ணணும் உங்களை பார்த்து சந்தோஷபடுவாங்க” என்று சிரித்தமுகமாக கூறினாள்.
“சரிங்க மேடம்” என்றவன், “சாப்பிட்டிங்களா?” எனக் கேட்டான்.
“இல்லைண்ணா… வாங்க இரண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடலாம்” என்றவள், சாப்பாடு மேஜை அருகில் சென்றாள். அன்று, சற்று மனதிற்குள் நிம்மதியை உணர்ந்தவனாக அவளுடன் பேசியபடி சாப்பிட்டு முடித்தான் ராஜகுமாரன்.
அவனின் கடும் கோபத்திற்கும், கட்டுக்கடங்காத அவனோட காவலுக்கும் மத்தியில் சிறிய அதிசயம் ஏற்பட்டு, ஒரு நியாயமான விசாரணைக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இங்கிருந்து தப்பித்து, தனது வாழ்க்கையை நல்லபடியாக மீட்டெடுக்க வேண்டும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தாள் தேவயானி.
மாலையில்… அவளிடம் நிதானமாக விசாரித்தால், அண்ணனின் மரணத்திற்கு பின்னால் உள்ள உண்மை வெளி வரும் என்று எண்ணியவனாக அவள் இருக்கும் அறையை அடைந்தான் ராஜகுமாரன்.
தேவயானி, சோர்வுடன் படுத்திருந்தாள். அவனைக் கண்டதும் பயத்துடன் எழுந்து அமர முயற்சி செய்தாள்.
“ஹே ப…படு எழுந்திரிக்க வேணாம்” என்று ஒட்டாத பாவணையுடன் கூறினான். ஆனால், அவனது கண்களில் கோபமோ, வெறுப்போ இல்லை. ஒருவித வருத்தம் தெரிந்தன.
அதனை உணர்ந்த தேவயானி, ‘இப்போதாவது என்னை தேவயானினு நம்புறார் போல’ என்று மனதிற்குள் சிறிது ஆறுதல் அடைந்தாள். ஆனாலும் அவனின் ஆக்ரோஷமான கோபத்தை கண்டவளால், இயல்பாக அவன் முன்னால் பயமின்றி இருக்க முடியவில்லை. மனதிற்குள் அவன்மீது ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது.
“நீ ஸ்வேதா இல்லைன்னா அப்ப… ஸ்வேதா எங்க இருக்கானு உண்மையை சொல்லு?” என்று தனிவான குரலில் கேட்டான் ஆனால், ஸ்வேதா பெயரை கூறும்போது அவனது முகத்தில் அப்பட்டமாய் கோபம் வந்து மீண்டு சென்றது.
“நான் வந்ததில் இருந்து உண்மையைத்தான் சொல்லிட்டு இருக்கேன் சார்” என்றாள் பயந்தகுரலில்…
அவளின் குரலில் ஏதோ நக்கல் இருப்பதை போல உணர்ந்தவன், அவளது கண்களை கோபமாக பார்த்தவாறு, “அவளை பத்தி உனக்கு தெரிந்த எல்லா உண்மையும் எனக்கு தெரியணும். அவள் எங்க எப்படி பிறந்தாள், வளர்ந்தாள்னு எல்லா விபரமும் தெரியணும். எல்…லா விபரமும் ஒன்னு விடாமல் தெரியணும். அப்பத்தான் அவளை நான் சீக்கிரம் கண்டுபிடிக்க முடியும்” என்றான்.
அவனின் பார்வைக்கு அஞ்சியவள், “அவ…ள் பத்தி எனக்கு தெரிஞ்ச விபரத்தை சொல்றேன் சார்” என்றவள் தயங்கியவண்ணம் தக்கி தினறி பேச ஆரம்பித்தாள்.
அவளை கண் இமைக்காமல் கவனிக்க ஆரம்பித்தான் ராஜகுமாரன்.
“ஸ்வேதா என் அம்மாவோட அக்கா பொண்ணு. அவளோட அப்பா, அவளோட சின்ன வயசுல ஒரு விபத்துல இறந்துட்டாங்க. அவளுக்கு அம்மா மட்டும்தான். அவ…ள் டென்த் படிக்கும்போது, எங்க தெரு கவுன்சிலர் பையனுக்கும் அவளுக்கும் பழக்கம் ஏற்பட்டு… அதுல அவ…ள் அ…வள்” என்று அடுத்து பேசுவதற்கு தயங்கினாள்.
“அவள் என்ன பண்ணாள்???” என்று கர்ஜித்தான்.
“கற்பமானாள்” என்றாள் திடுக்கிடும் குரலில்…
“அப்புறம்” என்று சலிப்பான குரலில் கேட்டான்.
“அதை அந்த பையன்கிட்ட சொன்னதும், என் வீட்டில் நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க. நீ… இந்த கற்பத்தை கலைச்சிருனு சொல்லிட்டான். கற்பத்தை கலைக்க என்கிட்ட பணம் இல்லைனு ஸ்வேதா சொன்னதும் அவன் பணம் கொடுத்திருக்கான். அதிலிருந்து அப்ப…ப்ப அவன்கிட்ட பணம் வாங்க ஆரம்பித்தாள். அவனும் வீட்டில் இருக்கிறவங்களுக்கு தெரியாமல் பணம் எடுத்து கொடுத்திருக்கிறான்.
ஒருநாள் அந்த பையன் அப்பாவுக்கு விபரம் தெரிஞ்சி, இவங்களை கூப்பிட்டு சத்தம் போட்டார். ஸ்வேதா அம்மா… என் மகள் வாழ்க்கைக்கு ஒரு வழி சொல்லுங்க இல்லன்னா… நாங்க போலீஸ்ஸ்டேஷனுக்கு போவோம் சொன்னாங்க.
ஒரு ஐந்து லட்சம் பணம் கொடுக்கிறேன். என் பையனை இனி தொந்தரவு பண்ண கூடாதுனு சொன்னார். இவங்களும் பணத்தை வாங்கிட்டு, அந்த பையனை தொந்தரவு பண்ண மாட்டோம்னு எழுதி கொடுத்துட்டாங்க. அது ஊர்ல இருக்கிற எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சி. அந்த பையனை வெளிநாட்டிற்கு அவங்க அப்பா படிக்க அனுப்பிட்டாங்க. இவங்களும் சென்னைக்கு வந்துட்டாங்க.
இவங்க சென்னைக்கு வந்ததுக்கு அப்புறம் எங்களுக்கு அவங்களை பத்தி ஒரு விபரமும் தெரியாது. ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி, எங்க ஊர்க்கு ரெண்டு பேரும் காரில் வந்தாங்க. எதார்த்தமாய் நானும் அம்மாவும் அவங்களை பார்த்தோம்.
என் பொண்ணு படிச்சி, ஒரு நல்ல கம்பெனியில் வேலை பார்க்கிறாள்னு பெரியம்மா… அவங்களை… அப்படி கூப்பிட எனக்கு பிடிக்கலை” என்று பேச்சை நிறுத்தினாள்.
சட்டென்று அவள் முகத்தில் கோபத்தை கண்டதும் “அப்புறம் என்னாச்சு???” என்று யோசனையாக கேட்டான்.
ஏதையோ ஜிரணிக்க முடியாமல் சிரமப்படுவது போல பேச ஆரம்பித்தாள். “என் அப்பாவுக்கு ஹார்ட் பிராப்ளம் வந்து அவங்க வேலைக்கு போகலை. நானும் அம்மாவும்தான் வேலைக்கு போயிட்டு இருந்தோம். அதை அவங்க தெரிஞ்சிகிட்டு, இந்த சின்ன ஊரில நீங்க வேலை பார்த்து பொழைக்க முடியாது. தேவயானி அப்பாவையும் குணப்படுத்த முடியாது.
மெட்ராஸ் வாங்க. ஸ்வேதா ஆபிஸ்லையே தேவயானிக்கு வேலை வாங்கி தர சொல்றேன். தேவயானிக்கு கைநிறைய சம்பளம் கிடைக்கும். அவரையும் குணப்படுத்திடலாம். நாங்க இப்ப நல்லாத்தான் இருக்கோம். நாங்க உங்களுக்கு உதவி பண்றோம்னு எங்களுக்கு ஆசை வார்த்தை காட்டினாங்க.
நாங்களும் அவங்களை நம்பி வீட்டை காலி பண்ணிட்டு அவங்களோட சென்னைக்கு வந்தோம். எங்களை ஒரு பெரிய வீட்டில் தங்க வச்சாங்க. வீட்டை பற்றி கேட்டதுக்கு, லோன் போட்டு வாங்கினதா சொன்னாங்க. நாங்களும் அவங்களை தவறா நினைக்காமல் அப்படியே அவங்க சொன்னதை எல்லாத்தையும் நம்பினோம். அதுதான் நாங்க செய்த தப்பு.
இரண்டு நாள்ல எனக்கு ஒரு கால் சென்டரில் வேலை வாங்கி கொடுத்தாங்க. அடுத்த நாள் அவளே அப்பாவை ஒரு பிரைவேட் ஹாஸ்பிட்டல்ல சேர்த்து விட்டாள். அங்க அப்பாவுக்கு ஆப்ரேஷன் பண்ணணும்னு பத்து லட்ச ரூபா கேட்டாங்க.
நான் லோன் அரேஞ்ச் பண்ணித்தர்றேன். எனக்கு தெரிஞ்ச பேங்க் ஆபிசர் இருக்காரு அவர்கிட்ட பேசி பார்போம். நாளைக்கு நீ லீவு போட்டிரு. நாம அவரை பார்ப்போம்னு சொன்னாள்.
வேலைக்கு லீவு போட்டு வீட்டில் இருந்தேன் அப்ப ஒருத்தர் வந்தார். இவர்தான் பேங்க் ஆபிசர் உன்கிட்ட அவர் பேசணுமாம் நீ பேசிட்டு இரு நான் வர்றேன்னு சொல்லிட்டு என்னை அவரோட ரூம்க்குள்ள வச்சி வெளியில கதவை பூட்டிட்டாள்.
அ…வர் என்கிட்ட த…தவறா நடக்க முயற்சி பண்ணாரு. நான் எவ்வளவு தடவை என்னை காப்பாத்துங்கனு கதவை தட்டியும் அவங்க கதவை திறக்கலை. நா…ன் என்னை காப்பாத்திக்க அவர் தலையில ஃபிளவர்வாஷை எடுத்து அடிச்சிட்டேன். அடுத்த நிமிஷம் அவர் ஸ்வேதாவுக்கு போன் பண்ணதும், கதவை திறந்தாள்.
அவர் தலையில் இரத்தம் கொட்டினதை பார்த்து, என்னை இரண்டு பேரும் அடிச்சாங்க. ஏன்டி இப்படி அவர்கிட்ட நடந்துகிட்டனு, நான் அவர்… என்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தார்னு சொன்னேன். ஏன் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போனால்…தான் என்ன? அவர்தானே உன் அப்பா ஆபரேஷனுக்கு பணம் கொடுக்க போற கடவுள்னு என்னை திட்டினாங்க” அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தோடியது. அவளால் அடுத்து பேச முடியவில்லை. கண்ணீரை துடைத்து கொண்டு மூக்கை உறிஞ்சினாள்.
ஹாய் ப்ரெண்ட்ஸ்! இந்த அத்தியாயம் பற்றிய கருத்துகளை லைக் அண்ட் கமெண்ட்ஸ் மூலம் தெரிவிக்கவும். மீண்டும் அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.
அன்புடன்
சாய்லஷ்மி.