ஸ்டேஷனில் இருக்கும் தன் அறைக்குள் வேகமாக நுழைந்த ஆத்மனுக்கு இன்னுமே வெறி அடங்கவில்லை.
ஜன்னலின் கம்பிகளை இறுக்கமாக பிடித்திருந்தவனை அவனது நினைவுகளோ பின்னோக்கி இழுக்க, முகம் இறுக நின்றிருந்தான்.
ஆத்மன் பணியில் அமர்ந்து ஒரு வருடம் ஆன நிலையில், பணி மாற்றம் பெற்று இங்கே வந்திருந்தான்.
அவனுக்கென்று யாரும் கிடையாது. தாய் சிறு வயதிலேயே இறந்திருக்க, தந்தையும் ஐந்து வருடங்களுக்கு முன்புதான் உடல்நலக்குறைவால் இறந்து போனார்.
அவனுக்கு ஒரு தாய் மாமா உண்டு. அவர் காவல் துறையில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். அவரது சிபாரிசில்தான் இவனுக்கு இந்த வேலையே கிடைத்தது என்று ஆரம்ப கட்டத்தில் அவன் பணிபுரிந்த காவல்துறை வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட்டது.
அதே நேரம், எல்லாவற்றையும் விடுத்து வேலாயுதமும் தன் குடும்பம், பிள்ளைகள் என்று அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்க, மீரா கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள்.
சந்துருதான் தினமும் மீராவை கல்லூரிக்கு காரில் அழைத்துச் சென்று, பிறகு வீட்டுக்கு அழைத்து வருவான்.
மீராவுக்கோ கண்ணைத் தாண்டி பேசாத சந்துருவைப் பார்த்ததுமே காதல்.
அவள்தான் முதலில் தன் காதலை அவனிடம் சொல்லியிருந்தாள்.
சந்துருவுக்கும் அவளைப் பிடித்திருந்தது.
ஆனால் வேலாயுதத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்ய விரும்பாதவன், அவளது காதலை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட, அடுத்து அவள் நேரே சென்று நின்றது தன் தந்தையிடம் தான்.
தன் மகளின் வாயாலேயே அனைத்தையும் அறிந்த வேலாயுதமோ, சந்துரு தன் கண் முன்னே பார்த்து வளர்ந்த பையன், போதாக்குறைக்கு ராவணனும் இருக்கிறான் பார்த்துக்கொள்வான் என்பதால், அவர்களின் காதலுக்கு சம்மதம் சொல்லிவிட்டார்.
அதன்பிறகு இருவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி.
காதலுக்குச் சம்மதம் கிடைத்த பிறகு, வேலாயுதத்தின் நம்பிக்கையைப் பொய்யாக்கிவிடக் கூடாது என்பதை மனதில் வைத்து, சிறு சிறு பார்வைப் பரிமாற்றங்கள் மூலம் இருவரும் கண்ணியமாகவே காதலித்து வந்தனர்.
அப்படியிருக்க,
ஒரு நாள் கல்லூரி ஆண்டு விழா முடிய நேரமானதால், இரவு நேரம் கடந்து மீராவுடன் சந்துரு வந்து கொண்டிருந்தான்.
அப்பொழுது அந்த நேரத்தில் ரோந்து பணியில் இருந்த ஆத்மனின் கண்களில் அவர்கள் பட்டனர்.
ஏற்கனவே அன்று கொஞ்சம் அளவுக்கு அதிகமாக போதையில் இருந்த ஆத்மனுக்கு, காரில் ஒரு ஆணும் பெண்ணும் இருப்பது வேறு விதமாகத் தோன்ற, உடனே வண்டியை நிறுத்தியவன், போதையின் பிடியில் மீராவைப் பார்த்து,
“என்ன ரேட்?” என்று இகழ்ச்சியான சிரிப்போடு வார்த்தையை விட்டுவிட்டான்.
அவ்வளவுதான், கொந்தளித்த சந்துரு, காரை விட்டு இறங்கி வந்து ஆத்மனின் சட்டை காலரை பற்றிக்கொண்டு எச்சரிக்க, நிதானத்தை மொத்தமாக இழந்த ஆத்மன் சந்துருவை அடித்துவிட்டு, போதையின் காரணமாக மீராவிடம் தவறாக நடந்து கொள்ள பார்க்க,
விடுவானா என்ன? கோபம் தலைக்கேற ஆத்மனை பிடித்து தள்ளிவிட்டான் சந்துரு.
கீழே விழுந்ததில் தன்மானம் சீண்டப்பட்ட ஆத்மனுக்கு அவர்கள் மீது வெறி ஏறியது.
“போலீஸ் மேலேயே கை வைக்கிறியா?” என்று கத்தியவன், இருவரையும் ஏதோ தவறான செயலில் ஈடுபட்டவர்கள் போல பேசி, சந்துருவின் கையில் விலங்கு மாட்டி வலுக்கட்டாயமாக ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றான்.
சந்துரு, மீரா எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.
மீரா, தான் வேலாயுதத்தின் மகள் என்பதை சொன்னதும்,
“ஓ உன் அப்பா என்ன பெரிய இவனா? பழைய ரவுடி தானே! வரட்டும் வரட்டும் போலீஸுன்னா என்னன்னு காட்டுறேன். பொண்ணை ராத்திரில மேய விட்டுட்டு நீ வீட்ல என்ன கிழிக்கிறன்னு நானும் கேக்குறேன்” என்றவனுக்கு நிதானம் கொஞ்சமும் இல்லை.
“சார் என்னை என்ன வேணும்னாலும் பண்ணுங்க. அவளை விட்டுருங்க” சந்துரு எவ்வளவோ கெஞ்சியும் கேட்காதவன், அவனை லாக்கப்பில் அடைத்து வைத்தான்.
அதோடு நிறுத்தாமல் சந்துருவை தன் ஆத்திரம் தீரும்வரை அடித்துவிட, மீராதான் தன்னவனின் வேதனை தாங்காது கதறிவிட்டாள்.
ஆத்மன் செய்வதை எல்லாம் பார்த்த மற்றக் காவலர்களோ, பிரச்சனை பெரிதாகிவிடும் என்று எவ்வளவோ தடுத்தும் அவன் கேட்காது வெறிபிடித்தவன் போல நடந்து கொண்டான்.
இதற்கிடையில் அவர்களை ஆத்மன் ஸ்டேஷனுக்கு அழைத்து வரும் பொழுதே ராவணனுக்கு வேண்டப்பட்ட இடைநிலைக் காவலன் ஒருவன் அவனுக்கு அழைத்து அனைத்தையும் கூறிவிட்டிருக்க, இனி அவன் சும்மா இருப்பானா என்ன? கிட்ட தட்ட ஒரு சூறாவளி போல ஸ்டேஷனுக்குள் நுழைந்தான் ராவணன்.
அதன்பிறகு நடந்த அத்தனையும் அதிரடிதான்.
ஆத்மனை வெளுத்து வாங்கிய ராவணனுக்கு அவ்வளவு ஆவேசம்.
தன் தங்கை போல நினைக்கும் மீராவிடம் தவறாக நடந்து கொண்டதையும், சந்துருவை அடித்ததையும் அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
ஆத்மனைக் கொண்டே லாக்கப்பைத் திறக்க வைத்தவன், ஆத்மனின் சட்டையைப் பிடித்து இழுத்து அவனை உள்ளே தள்ளி லாக்கப்பிற்குள் வைத்து பூட்டிவிட்டு,
“உன்னை விடமாட்டேன் டா” என்று எச்சரித்துவிட்டு, மீராவையும் சந்துருவையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.
ஆத்மன் டூட்டியில் இருக்கும் பொழுதே, அவன் பணிபுரியும் ஸ்டேஷனுக்குள்ளேயே வைத்து அவனை அடித்து, லாக்கப்பில் போட்டு பூட்டிவிட்டு ராவணன் சென்றிருக்க, லாக்கப்பிற்குள் நின்ற ஆத்மனின், கண்களில் அவமானம் என்னும் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது.
அந்த அவமானத்தை ஆத்மனால் ஜீரணிக்கவே முடியவில்லை.
அவனுக்குள் இருந்த கொதிப்பு அடங்குவதற்குள்ளேயே, ராவணன் தான் விடமாட்டேன் என்று சொன்னது போலவே ஆத்மனை அதோடு விடவில்லை.
ராவணன் அடுத்ததாக செய்த காரியம்தான் ஆத்மனின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியது.
ஆத்மன் அன்றைய இரவு போதையில் இருந்தது, மீராவிடம் அவன் நடந்துகொண்டது, சந்துருவை காரணமின்றி தாக்கியது, மேலும் இதுபோல பணி நேரத்தில் போதையில் மற்றவர்களிடம் நடந்து கொண்டது என அவன் செய்த அனைத்தும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒரு கடையின் CCTV கேமராவில் பதிவாகி இருந்தது.
உடனே அந்த ஆதாரங்களை கைப்பற்றிய ராவணன், அதில் சம்பந்தப்பட்ட பெண்கள் இருக்கும் காட்சிகளை தவிர்த்து, மற்ற அனைத்தையும் காட்டி ஆத்மனின் மேல் புகார் கொடுக்க, அவனின் மேல் அதிகாரி அவனை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார்.
வேலாயுதமும் ராவணனும் கொடுத்த நெருக்கடியில் ஆத்மன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவன் சஸ்பெண்ட் செய்யப்பட, ஆத்மனுக்கு அதைவிட பெரிய அவமானம் வேறு இருக்க முடியுமா என்ன?
ஆனால் இருக்கிறதே என்பது போல,
விசாரணையின் முடிவில் அவன் குற்றம் நிரூபணமானால் வேலையே போய்விடும் என்கிற நிலையில், அடுத்த இடியாக, அவனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணமும் நின்றுபோனது.
பெண் வீட்டாரோ வீடு தேடி வந்து அவனைத் திட்டித் தீர்த்துவிட்டு சென்றுவிட, மொத்தமாக அசிங்கப்பட்டுப் போனான் ஆத்மன்.
அனைத்தும் இழந்த நிலையில் இருந்தவனுக்கு அன்றிலிருந்து அவனது மனதிற்குள் பழிவெறி என்கிற நெருப்பு எரியத் துவங்க,
“வாங்கினதை வலிக்க வலிக்க திருப்பிக் கொடுப்பேன் ராவணா. நிச்சயம் கொடுப்பேன் விடமாட்டேன்” என்று தனக்குள்ளே சூளுரைத்தான் ஆத்மன்.
பழிவாங்க வேண்டும்! அதற்கு முதலில் தன் வேலையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணியவன், அடுத்து சென்றது அவனது தாய் மாமாவிடம் தான்.
ஒரு மூச்சு திட்டித் தீர்த்தவர், அடுத்து வேலாயுதத்தை, ஆத்மனுடன் சந்தித்து பேசினார்.
ஆத்மனை கண்டதும் ஓங்கி அவன் உதடு கிழிய, செவிப்பறை அடைத்துக்கொள்ளும் அளவிற்கு ஒரு அறை அறைந்த வேலாயுதத்திற்கு, அவனை கொன்று போடும் அளவிற்கு ஆத்திரம் வந்தது.
ஆனாலும் ஆத்மனின் தாய் மாமாவின் பதவியை கருத்தில் கொண்டு பொறுமை காத்தார் வேலாயுதம்.
ஆத்மனை விடும் எண்ணம் அவருக்கும் இல்லைதான். ஆனால் அவர்கள், ராவணன் ஸ்டேஷனுக்குள் புகுந்து ஆத்மனை தாக்கிய வீடியோவை காட்டவும் வேலாயுதத்தால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை.
ராவணனின் தொழில் முறைக்கு அவன் இப்படி போலீசைப் பகைத்துக் கொள்வது சரிவராது என்று எண்ணியவர், ஆத்மனை எச்சரித்துவிட்டு, ராவணன் ஆத்மன் மீது கொடுத்திருந்த கேஸை வாபஸ் வாங்கச் சொன்னார். ஆனால், அவன் முதலில் சம்மதிக்கவே இல்லை.
பிறகு ஒருக்கட்டத்தில் வேலாயுதத்தின் பேச்சை மீற முடியாது சம்மதிக்க, ஆத்மனின் பதவி எப்படியோ காப்பாற்றப்பட்டது.
அதன்பிறகு தன் செல்வாக்கு மூலம் உடனே ஆத்மனுக்கு வேறு இடத்திற்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்க வேலாயுதம் ஏற்பாடு செய்திருக்க, ஆத்மனோ ராவணனை வீழ்த்த வேண்டும் என்பதை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு செயல்பட்டவன், எந்த எதிர்வினையும் காட்டாது அமைதியாகவே இருந்தான்.
ஆத்மனை பொறுத்தவரை அதிகாரத்தை அடைய வேண்டும்!
ராவணனை தன் காலடியில் நிறுத்த வேண்டும்!
அதற்காகவே வெறியோடு படிக்கத் துவங்கியவன், தனக்கான நாளுக்காக காத்திருந்தான்.
வருடங்கள் செல்ல, அன்று ஒரு சாதாரண போலீஸ் அதிகாரியாக அவமானப்பட்டு லாக்கப்பிற்குள் நின்ற அதே ஆத்மன்,
இன்று உயர்ந்த பதவியில் அமர்ந்து, ராவணனை வீழ்த்தத் துடித்துக் கொண்டிருக்கிறான்.
விடக்கூடாது! இனி அந்த ராவணன் எழுந்து கொள்ளவே கூடாத அளவு அடிக்க வேண்டும் என்று தனக்குள் கூறிக்கொண்ட ஆத்மனுக்கு, தன் சிவந்த மணிக்கட்டை பார்க்கப் பார்க்க, அவனது மனம் தானாக அஜூதியாவை நினைவுபடுத்தியது.
உடனே அவனது விரல்கள் தானாக அன்று அவள் அடித்த தன் கன்னத்தைத் தடவ, அவன் உதட்டில் ஒரு குரூர புன்னகை உதித்தது.
பெண் அழகாக இருக்க வேண்டும், யாரும் இல்லாவிட்டால் இன்னும் சிறப்பு. தன்னைத் தாண்டி செயல்பட மாட்டாள், என்ன நடந்தாலும் தன் காலடியிலேயே கிடப்பாள் என்று எண்ணித்தான் அஜூதியாவைப் பெண் பார்க்கப் போனான்.
அங்கே அவள் வேறு யாரையோ விரும்புகிறேன் என்று சொன்னபோது எரிச்சல்தான் வந்தது.
ஆனாலும், ‘போடி’ என்று கடந்து வந்தவனுக்கு, அவள் காதலிப்பது ராவணன் என்று தெரிந்தபின் முடியவில்லை. அவ்வளவு கோபம் வந்தது.
பழிவாங்கத்தான் வந்தான்.
பொறுமையாக காய்களை நகர்த்த எண்ணியிருந்தவனுக்கு, அஜூதியாவுக்கும் ராவணனுக்கும் இடையில் இருந்த உறவும், அவள் அன்று தன்னை அடித்ததும் இன்னும் பழிவெறியைத் தூண்டிவிட, இதோ தன் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டான்.
“அடிக்கவா செய்யிற உன்னை வச்சே அவனை முடிக்கிறேன்” என்றவன், தான் சொல்லிக்கொண்டது போலவே ராவணனை பழிவாங்க வேண்டும் என்கிற முயற்சியில், அடுத்த கட்ட சூழ்ச்சிக்காக தன் அறையை விட்டு வெளியே வந்தான்.
அதன்படி ஏற்கனவே திட்டமிட்டது போல, தான் பிடித்து வைத்திருந்த இரண்டு வடமாநில இளைஞர்கள் முன்பு ராவணனை நிறுத்தி விசாரிக்கத் துவங்கினான்.
அவர்களுக்கு தான் ஏற்கனவே பணம் கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டானே, இனி என்ன?
அவன் சொல்லிக் கொடுத்தபடியே ராவணனை அடையாளம் காட்டியவர்கள்,
“இவர் சொல்லித்தான் கடத்தினோம்” என்று ஒப்புக்கொள்ள,
ராவணன் எதுவுமே பேசவில்லை.
நடக்கும் அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டவன், அமைதியாக ஆத்மனை ஆடவிட்டு வேடிக்கை பார்த்தான்.
சூழ்ச்சி என்று அறிந்த பிறகு கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் நேரம் இது அல்லவே, நிதானமாகவே காணப்பட்டான்.
ஆத்மனின் செய்கையிலே இது இத்துடன் முடியாது என்று கணித்திருந்த ராவணனனுக்கு தான் இப்பொழுது சிக்கிக்கொண்டிருக்கும் சூழலின் தீவிரம் கொஞ்சம் கலங்கடிக்க தான் செய்தது.
பின் போதை மருந்து கடத்தல் வழக்கு என்றால் சாதாரணம் அள்ளவே, பெயில்கூட கிடைக்காது.
மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டால், பல ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
தன்னை எண்ணி அவன் கலங்கவில்லை ஆனால் தன்னவள்? அவளை எண்ணி மனம் கலங்கியது.
அவள் இதையெல்லாம் எப்படி தாங்குவாள் என்று எண்ணியவனோ கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டான்.
அவள்தான் அவன் மனக்கண்ணில் வந்து நின்றாள். அதில் இன்னும் இறுக்கமாக தன் விழிகளை மூடிக்கொண்டவனோ, சில நொடிகள் கழித்து ஒரு முடிவுடன் விழிகளைத் திறந்து, புயலை உள்ளடக்கிய பார்வையோடு தன் முன்னால் இருந்த ஆத்மனை வெறிக்க அவனோ,
“நட, உன் வீடு, உன் ஆபிஸை சேர்ச் பண்ண எனக்கு பெர்மிஷன் கிடைச்சிருக்கு” என்றான் திமிராக.
அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாது கொஞ்சமும் அழட்டிக்கொள்ளாது ராவணன் அவர்களுடன் செல்ல, ராவணனின் முகத்தில் உணர்வுகளை தேடி தோற்று போன ஆத்மனுக்கு ராவணனின் இந்த அமைதி எரிச்சலை கொடுத்தது.