அத்தியாயம் : 24
தேவயானியோடு சேர்த்து அந்த பங்களாவில் இருக்கும் பத்து பேருக்கும் தினமும் அளவு குறையாமல் மிக சரியாக உணவை சமைத்தாள். அதேசமயம் உணவு வீணாகிவிட கூடாது என்பதிலும் கவனமாய் இருந்தாள்.
குறிப்பாக… ராஜகுமாரனுக்கு உப்புமா என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால், உப்புமாவில் என்னவெல்லாம் வித்தியாசமாக சமைக்கலாம் என்று யூடியூபில் பார்த்து விதவிதமான வகைகளை கற்று சமைத்தாள். ரவை உப்புமா, சேமியா உப்புமா மட்டுமல்லாமல், கோதுமை ரவை, அரிசி உப்புமா, காய்கறிகள் சேர்த்த வெரைட்டி உப்புமா என்று ஒவ்வொரு நாளும் ஒரு சுவையில் அசத்தினாள்.
அதே நேரத்தில், மாடியில் அடைக்கப்பட்டிருந்த ஸ்வேதாவிற்கும் அவளது தாய் சரளாவிற்கும் மட்டும் தினமும் பழைய சாதத்தையே, அதுவும் ஒரே ஒரு வேளை மட்டும்தான் ராஜகுமாரன் ஆணைக்கிணங்க குமாரோ அல்லது சங்கரோ கொண்டு சென்று கொடுத்தார்கள். அந்த சமயத்தில் ஒரு அரைமணி நேரம் அவர்களை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டார்கள். அப்பொழுதுதான் அவர்கள் பாத்ரூம் கூட யூஸ்பண்ண முடிந்தது. மற்ற நேரங்களில் சேரில் வைத்து இருவரையும் கட்டியே வைத்திருந்தனர்.
பெருமாள் இல்லாததால், மளிகை சாமான்கள் இதர வீட்டிற்கு தேவையான சாமான்களை லிஸ்ட் போட்டு குமாரிடம் கேட்டு வாங்கி, நேர்த்தியாக வீட்டை பராமரிக்க ஆரம்பித்தாள் தேவயானி.
தேவயானி சமையல் வேலையை மட்டும் செய்துவிட்டு சும்மா இருந்துவிடவில்லை. அந்தப் பங்களாவை தன் சொந்த வீடு போல கருதி, வீட்டின் அமைப்பையும், அழகையும் சற்று மாற்றினாள்.
குமாரிடம் சொல்லி வீட்டின் ஜன்னல் திரைச்சீலைகளை புதிதாக வாங்கி மாற்றம் செய்தாள். மற்ற வீட்டு வேலை ஆட்களிடம், வீட்டை துடைத்து சுத்தப்படுத்தும் வேலையை சரியாக செய்கிறார்களா என்று மேற்பார்வையிட்டாள். காலையிலும் மாலையிலும் தவறாமல் வாசல் தெளித்துக் கோலமிட்டாள்.
அவளது கைவண்ணத்தில் வாசல் மட்டுமல்ல, அந்தப் பங்களா முன்பை விட பிரகாசமாக மாறியது.
தேவயானியின் இந்த செயல்பாடுகளையும், அவள் காட்டும் அக்கறையையும், ராஜகுமாரன் கவனித்து கொண்டேத்தான் இருந்தான். அவளது நல்ல குணமும், பொறுப்புணர்ச்சியும், அவனுக்குள், அவள் மீது மேலும் நற்பெயரை சம்பாதித்து கொடுக்க உடனே, அவளுக்கு ஒரு நல்ல வரன் பார்க்கும் வேலையை தீவிரமாக ஆரம்பித்தான்.
நம்பகமான கல்யாண தரகர் ஒருவரை அழைத்து விவரங்களை கூறியவன், பல வரன்களை பரிசீலித்து ஒரு நல்ல மாப்பிள்ளையை தேர்வு செய்தான். ‘முதலில் அந்த மாப்பிள்ளையிடம் நாமே நேரில் பேசிவிட்டு, பிறகு தேவயானியையும் அவளது வீட்டாரையும் அழைத்து பேச வைக்கலாம்’ என்று திட்டமிட்டான்.
அதற்காக அந்த மாப்பிள்ளையை தன் அலுவலகத்திற்கு வரும்படி அழைத்தான்.
மறுநாள், ராஜகுமாரனின் அலுவலகத்திற்கு வந்த அந்த மாப்பிள்ளை அவனுக்கு எதிரே அமர்ந்தான்.
ராஜகுமாரன் எந்தவித மறைவும் இல்லாமல் தேவயானியின் கடந்த காலத்தை பற்றி வெளிப்படையாக கூறினான். “தம்பி… தேவயானி ரொம்ப நல்ல பொண்ணு. அவங்களோட வறுமை நிலை காரணமாவும், அவளது பெரியம்மா பெண்ணான ஸ்வேதாவாலும், கடந்த காலத்துல, அவள் எவ்வளவோ துன்பங்களையும் அவமானங்களையும் அடைஞ்சா. ஆனா… ஸ்வேதா பத்தி நீங்க கவலைப்பட தேவையில்லை. அவள் இனிமேல் தேவயானி வாழ்க்கையில தொந்தரவு செய்ய முடியாதபடி செய்திட்டேன்.”
“…”
“இதை ஏன் நான் உங்ககிட்ட சொல்றேன்னா… நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு அப்புறம் வெளிய போகும்போது, யாராவது ஸ்வேதானு நினைச்சு தேவயானியை தவறா நினைச்சு பேசிடவோ அல்லது நடந்துக்கவோ முயற்சி செய்ய வாய்ப்பு இருக்கு. அந்த சமயத்துல நீங்க அவளுக்கு துணையாவும், பாதுகாப்பாவும் இருக்கணும். அதற்காகத்தான் முன்கூட்டியே, இந்த உண்மையை உங்ககிட்ட வெளிப்படையா சொல்றேன்.”
ஆனால், அந்த மாப்பிள்ளையோ ராஜகுமாரன் சொல்வதைக் கேட்டு முகத்தை சுருக்கினான். சற்றும் யோசிக்காமல், “சாரி சார்… எனக்கு இந்த பெண்ணை கட்டிக்க விருப்பம் இல்லை” என்றான் திட்டவட்டமாக.
அவனது பதிலை கண்டு சற்று அதிர்ந்துபோன ராஜகுமாரன், புருவத்தை உயர்த்தி, “ஏன் தம்பி? நான்தான் சொல்றேனே, அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணுன்னு! அப்புறம் ஏன் யோசிக்கிறிங்க?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.
“சார்… நீங்க நல்ல பொண்ணுனு சொல்றீங்க, ஆனா அவளோட அக்கா நல்லவள் இல்லையே? அதுமட்டுமில்லாம, ரெண்டு பேரும் பார்க்கும்போது ஒரே மாதிரி உருவ ஒற்றுமையோடு இருக்காங்க. இந்த பொண்ணுகிட்ட என்னைக்காவது ஒரு நாள் யாராவது வந்து தவறாக நடந்துக்குவாங்களோனு, நான் எப்பவுமே அவள் பின்னாடியே சுத்தி கவனிச்சுட்டே இருக்க முடியாது சார்.
நான் ஒன்னும் சினிமாவில் காட்டுற ஹீரோ இல்லை. ரொம்ப சாதாரணமான ஒரு வாழ்க்கை வாழ ஆசைப்படுற சாதாரணமான ஆளு. என்னால இந்த ரிஸ்க்கை எடுக்க முடியாது சார், நான் கிளம்புறேன்” எனக் கூறிவிட்டு, இருக்கையை விட்டு எழும்பியவன் விருட்டென்று அறைகதவை திறந்து வெளியேறி சென்றான்.
அவன் பேசிய வார்த்தைகளை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோன ராஜகுமாரன், தேவயானியின் கடந்த கால தழும்புகள், அவளது எதிர்காலத்திற்கு இப்படியா ஒரு முட்டுக்கட்டையாகவா வந்து நிற்கும்? என நினைத்தவன் கோபம் பொங்க, மேஜையின் மீது தனது கைகளை குத்தினான். அவனுள் சொல்லமுடியாத பெரும் கோபமும், ஆற்றாமையும் மனதிற்குள் பொங்கி வழிந்தது.
ஆனாலும் அவன் முயற்சியை கைவிடுவதாக இல்லை. பல தரகர்கள் மூலமாவும், நம்பகமான நண்பர்கள் மூலமாவும் தேவயானிக்கு தகுதியான வரன்களை பார்த்தான்.
ஆனால், ஒவ்வொருவரிடம் பேசி முடிக்கும்போதும் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. யார் வந்து பார்த்தாலும், தேவயானியின் நற்குணத்தை பாராட்டினார்களே தவிர, இறுதியில் சம்பந்தத்தை தவிர்த்தனர். “தவறு செய்தவள் அவளது அக்காவாயிற்றே? அதனால் இந்த பெண்ணை எப்படி ஏற்பது?” என்ற குறுகிய எண்ணமே அனைவரிடமும் எதிரொலித்தது.
இதை கண்டு கடும் கோபமும் ஆற்றாமையும் அடைந்த ராஜகுமாரன், ஒரு நாள் தனது நெருங்கிய நண்பனிடம் தன் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டிருந்தான்.
தேவயானியின் சமையல்திறமை, வீட்டை பாராமரிக்கும் பொறுப்புணர்ச்சி, அவளது புத்திசாலித்தனம் என அத்தனையையும் சிலாகித்துப் பேசியவன், “இவ்வளவு நல்ல பொண்ணுக்கு இப்படிப்பட்ட சோதனையா?” என்று தன் மனவேதனையை கொட்டினான்.
அவனது பேச்சை கவனமாக கேட்டு கொண்டிருந்த அந்த நண்பன், சட்டென்று, “டேய் மச்சான்… உண்மையிலேயே நீ அந்த பொண்ணை கட்டிக்க கொடுத்து வச்சிருக்கணும்டா! உனக்குத்தான் அவளோட அருமை இவ்வளவு நல்லா தெரியுதே…” என்றான் சிறிதும் யோசிக்காமல்,
“என்னடா சொல்ற?” என்று ராஜகுமாரன் திகைத்து கேட்க,
“இவ்வளவு திறமை அந்த பொண்ணுகிட்ட இருக்குன்னா, நீயே அந்த பொண்ணை கட்டிக்கோயேன். ஏன்னா… நீதான் அந்த பொண்ணை ரொம்ப நல்லா புரிஞ்சு வச்சிருக்க. சோ, நீ கல்யாணம் பண்ணிக்கிட்டாத்தான் அந்த பொண்ணும் நல்லாயிருப்பா, நீயும் நல்லாயிருப்பப. சீக்கிரம் உங்க கல்யாண தேதியை எனக்கு சொல்லு” என்று சிரித்துக்கொண்டே கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டான்.
நண்பன் சொன்ன அந்த வார்த்தைகள் மட்டும் ராஜகுமாரனின் காதுகளில் திரும்பத் திரும்ப ஒலித்து கொண்டே இருந்தன. “நீயே அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க… அப்பத்தான்… நீயும் நல்லாயிருப்ப, அந்த பொண்ணும் நல்லாயிருப்பா!” அந்த சொற்கள் அவனது மனதிற்குள் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இதுவரை தேவயானியை ஒரு நல்ல பெண்ணாக மட்டுமே பார்த்தவன், அவளை தன் வாழ்க்கை துணையாக பாவிக்கும் எண்ணத்தை ஒரு விநாடி சிந்தித்து பார்த்தான். அவனுக்குள் ஒரு விவரிக்க முடியாத தயக்கமும், அதே சமயம் ஒரு மெல்லிய மகிழ்ச்சியும் மனதிற்குள் ஊற்றெடுத்தது.
ஆனால், மறுகணம், அவளை திருமணம் செய்யலாமா? வேண்டாமா? என்ன முடிவு எடுப்பது என்று புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தான்.
மறுநாள்… வழக்கம்போல குளித்து முடித்துவிட்டு அலுவலகம் செல்லும் முன்பு, தன் அண்ணனை வணங்காமல் செல்ல மாட்டான். அன்றும், தன் அறையிலிருந்து வெளியே வந்தவன், நேராக சுவரில் மாட்டப்பட்டிருந்த தனது அண்ணன் ராஜவர்மனின் படத்தின் முன்பு வந்து நின்றான்.
அண்ணன் படத்தின் முன் கைகளை கூப்பி கண்களை மூடி நின்றவன், தன் நண்பன் கூறிய அத்தனை வார்த்தைகளையும் மனதிற்குள் அப்படியே அண்ணனிடம் சொன்னான். ‘அண்ணா… எனக்கு இப்ப என்ன முடிவெடுக்கிறதுன்னே தெரியல. என் நண்பன் இப்படி சொல்றான். நான் என்ன பண்றது?’ என்று தன் மனபாரத்தை அண்ணனிடம் இறக்கி வைத்துவிட்டு மெல்லக் கண்களைத் திறந்தான்.
அச்சமயம், ராஜவர்மனின் படத்தில் வைக்கப்பட்டிருந்த மல்லிகை பூ, கீழே வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கினை ஏற்றி கொண்டிருந்த தேவயானியின் தலையின் மீது வந்து விழுந்தது.
உடனே பதறிப்போய் நிமிர்ந்து எழுந்த தேவயானி, வேறொரு மல்லிகை பூக்களை கொண்டு வந்து, மறுபடியும் ராஜவர்மன் படத்திற்கு வைத்துவிட்டு அவசரமாக அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.
ஆனால், அந்த சிறிய நிகழ்வை அசையாமல் பார்த்து கொண்டிருந்த ராஜகுமாரனின் மனதோ முற்றிலும் வேறு ஒரு விடயத்திற்கு சென்றுவிட்டது.
அண்ணன் படத்தின் மீது வைக்கப்பட்டிருந்த மல்லிகைப்பூ அவள்மீது விழுந்தது சாதாரண விபத்து அல்ல என்றும், மறைந்த தன் அண்ணனே, தேவயானியை தனக்கு மனைவியாக தேர்ந்தெடுத்துவிட்டான் என்பதற்கான அடையாளம் என்று முழுமனதாக நம்பியவன், தன் அண்ணனின் ஆசியோடு தேவயானியை கரம்பிடிக்கும், அந்த முடிவை மனதிற்குள் உறுதியாக எடுத்துவிட்டு, சாப்பிடுவதற்காக டைனிங்சேரில் சென்று அமர்ந்தான்.
உடனே அவனுக்கு ஓடி வந்து சப்பாத்தியும் உருளைக்கிழங்கு குருமாவையும் பரிமாறினாள்.
இதற்கு முன்பு வரை அவளை வெறும் சமையல்காரி என்றோ, தன் வீட்டில் வேலை செய்யும், ஒரு சாதாரண பெண்ணாகவோ மட்டுமே பார்த்து கொண்டிருந்த ராஜகுமாரனின் பார்வை இப்போது சற்று மாறியது. ‘இவள் இனி என் மனைவி… எனக்கு வாழ்க்கை துணையாக வரப் போகிறவள்!’ என்ற அந்த எண்ணம் அவனுக்குள் ஓடிய விநாடியில், அவனது இதயம் படபடக்க தொடங்கியது. கை கால்களில் மெல்லிய நடுக்கம் ஏற்பட்டது. இதழில் இத்தனை நாள் அவனறியாத ஒரு வெட்க புன்னகை மலர்ந்தது.
ஏதோ பெயருக்கென சாப்பிட்டுவிட்டு எழுந்தான். “என்ன சார்… இரண்டே இரண்டு சாப்பாத்தியோட எழுந்துட்டிங்க. சப்பாத்தி நல்லாயில்லையா? இல்லை உங்களுக்கு சப்பாத்தி பிடிக்காதா?” என்று அவள் அக்கறையாக கேட்டாள்.
“எனக்கு பசியில்லை காலையில சாப்பிடணும்ங்கிறதுக்காக சாப்பிட்டேன்” என்று ஒரு பொய்யை சொல்லிவிட்டு, வீட்டில் இருந்து வெளியே வந்தவன், தன் வாகனத்தில் அலுவலகம் விரைந்தான்.
‘அண்ணனின் ஆசியோடு தேவயானியை மனைவியாக ஏற்றுக்கொள்வது என்ற முடிவுக்கு வந்துவிட்டவன், ஆனால், இந்த விஷயத்தை எப்படி செயலாற்றுவது? அவளிடம் திடீரென்று நானே நேரில் போய் இதை பத்திப் பேசவா? அப்படி பேசினால், அவள் பயந்துடுவாளா? இல்லை, தன் உயர்ந்த நிலையை நினைத்துத் என்னை திருமணம் செய்ய தயங்குவாளா? அல்லது அவளுடைய அப்பா-அம்மாவிடம் நேரில் சென்று நமது விருப்பத்தை சொல்லி சம்மதம் கேட்கலாமா?’ என்று பலவாறாக அவனது மனம் யோசித்தது.
இந்த அத்தியாயம் பற்றிய உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.
நன்றி
அன்புடன்
சாய்லஷ்மி.