அத்தியாயம் : 25
இதுவரை எந்த ஒரு காரியத்தையும் நொடியில் யோசித்து துணிச்சலாக செயலாற்றும் ராஜகுமாரன், தன் திருமணத்தை செயலாற்றும் விவகாரத்தில் மட்டும், ஏதோ பாதசாரிகள் சாலையை கடக்க பயப்படுறது போல திணறினான்.
அன்று இரவு முழுவதும் அவனால் நிம்மதியாக தூங்கவே முடியவில்லை. படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தவன், கண்களை மூடினால் தேவயானியின் முகமும், அவள் மீது மல்லிகை பூ விழுந்த, அந்த தருணமும்தான் நினைவிற்கு வந்தது.
விடியற்காலை வரை கண்ணை மூடாமல் யோசித்து கொண்டிருந்தவன், விடிந்ததும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்தான்.
தன் செல்போனை எடுத்து வெங்கடேசனுக்கு தொடர்பு கொண்டான்.
அழைப்பு ஏற்கப்பட்டதும் வழக்கமான நலம் விசாரிப்புக்கு பின்னர், ராஜவர்மன் இறந்த காரணத்தை கண்டறிய தான் நடத்திய தேடுதல் வேட்டையில் இருந்து, தற்போது தேவயானியை கரம் பிடிக்க நினைப்பது வரை கூறிமுடித்தவன், “அண்ணன் இப்ப நம்ம கூட இல்லை. அவனுக்கு அடுத்த மாசம் ஒரு வருட திதி வருது. அந்த திதியை கொடுத்த பின்னாடி தேவயானி வீட்டுல, என் சார்புல நீங்கத்தான் மாமா பேசணும். அவங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டா… ஜோசியர்கிட்ட கேட்டு, ஒரு நல்லநாள் பார்த்து கல்யாணத்தை வச்சுக்கலாம்” என்றான் தழுதழுத்த குரலில்…
“நீ ராஜா இல்லைனு
வருத்தப்படாதப்பா… உன் கல்யாணத்தை முன்ன நின்னு நடத்த வேண்டியது என் பொறுப்பு. அடுத்த மாசம் நான் நேருல வரும்போது கல்யாணத்தை பத்தி மத்ததெல்லாம் பேசிக்கலாம். ஆனா… நீ சொன்னதை கேட்டு கேட்டு எனக்கு மனசே ஆற மாட்டிங்கிதுப்பா. பெருமாளா இப்படியெல்லாம் பண்ணாரு. கண் இமைக்கும் நேரத்துல, நம்ம ராஜா உயிரு அநியாயமா போயிருக்கே! அவன் வாழ வேண்டியவனேப்பா. எவ்வளவு உழைச்சான், இப்ப நல்லாயிருக்கிற சமயம் இப்படியா ஆண்டவன் அவன் உயிரை எடுத்துக்கணும்” என்று சொல்லி போனில் அழுதார்.
அவர் அழுகுரல் கேட்டு ராஜகுமாரன் மனம் சொல்லாலென வேதனையில் துடிக்க ஆரம்பிக்க, அவனும் அழ ஆரம்பித்தான். “அண்ணன் இறந்து ஒரு வருஷமாக போகுது மாமா. ஆனா… அவன் அநியாயமா இறந்து போனதையும், அவன் இல்லாததையும் என்னால இன்னும் ஏத்துக்க முடியலை. தினமும் மனசுக்குள்ள கதறிட்டு இருக்கேன். எப்படியாவது அண்ணன் திரும்பி வந்திட மாட்டானானு துடிக்கிறேன்” என்று சொல்லி அழுதான்.
ஒரு நிமிடம் கடந்தது.
“சாரீப்பா… நானும் உணர்ச்சிவசப்பட்டு உன்னையும் கண் கலங்க வச்சிட்டேன். எங்க கடையில இருக்கீயா?” என்று தன்னை சமாதானப்படுத்தி கொண்டே கேட்டார்.
“ஆமா மாமா. கடைக்கு வந்திட்டேன். நீங்க ஆபிஸ்ல இருக்கிங்களா?” அவனும் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டே கேட்டான்.
“இல்லைப்பா இன்னைக்கு லீவு போட்டுட்டேன். பேங்குக்கு போகணும். அடகு வச்ச நகை ஒன்னை மீட்கணும். அதுக்குத்தான் கிளம்பிட்டு இருந்தேன்”
“சரிங்க மாமா அப்ப… நீங்க நேருல வாங்க, நாம பேசிக்கலாம். போனை வைக்கிறேன்” எனக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தவன், கண்களை துடைத்துவிட்டு வேலையில் ஈடுபட தொடங்கினான்.
வெறும் உள்நாட்டு வியாபாரத்தோடு நின்றுவிடாமல், உலக அரங்கில் தங்கள் பாரம்பரிய பட்டுச்சேலைகளின் சிறப்பை பறைசாற்ற வேண்டும் என்ற அவனின் நீண்ட நாள் கனவை செயல்வடிவில், செயல்படுத்தும் வேலையை கையில் எடுத்தான்.
உலகெங்கிலும் உள்ள ஜவுளிசந்தைகள், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்களின் விருப்பங்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தவன், குறிப்பாக பட்டிற்கு மட்டுமே இருக்கும் உலகளாவிய தேவையை கண்டறியும் பணியை முதலில் முன்னெடுத்தான்.
ஒரு வாரத்தில் அனைத்து தகவல்களையும் ஒன்று திரட்டிய பின்னர், எந்த நாட்டில் முதலில் வியாபாரத்தை ஆரம்பிக்கலாம் என்று யோசித்தான்.
கனடா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பா, இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில், இந்திய பட்டுச்சேலைகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதை புள்ளி விபரங்கள் தெரிவிக்க,
வெளிநாட்டில் கடை ஆரம்பிப்பதற்கான திட்டத்தை முன்னெடுத்து செல்ல, ஒரு நம்பிக்கைக்குரிய அனைத்து விபரங்களும் தெரிந்த ஒரு குழுவை உருவாக்கினான்.
அவர்கள் மூலம் சர்வதேச பட்டுசேலை கண்காட்சிகளில் பங்கேற்பது, ஆன்லைன் விற்பனை அதிகரிக்க, வெளிநாட்டு செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுப்பது, வெளிநாட்டு முகவர்களை நியமிப்பது எனப் பல வழிமுறைகளை ஒவ்வொரு நாளாக செயல்படுத்தி கொண்டிருந்தான்.
அப்பொழுது ஒரு முகவர் மூலம் அமெரிக்காவில் நியூயார்க் நகரில், ஒரு சர்வதேச ஜவுளி கண்காட்சி நடக்கவிருப்பதை தெரிந்து கொண்டான். அதில் பங்கேற்க முடிவு செய்தவன், தன்னுடைய ‘ராஜா டெக்ஸ்டைல்ஸ்’ நிறுவனத்திற்கு கிடைத்திருக்கும் ஒரு பொன்னான வாய்ப்பாக எண்ணி, தன் நிறுவனத்தின் திறமையான வடிவமைப்பாளர்களையும் விற்பனைப் பிரதிநிதிகளையும் அழைத்து கொண்டு, அமெரிக்காவுக்கு பயணமானான்.
நியூயார்க் நகரத்தின் பரபரப்பான சூழலும், உலகெங்கிலும் இருந்து வந்திருந்த மக்கள் கூட்டத்தையும் கண்டு, அவனுக்குள் இருந்த மன அழுத்தம் குறைந்து, ஒரு புத்துணர்ச்சி பிறந்தது. எப்படியாவது தன்னுடைய நிறுவனத்தின் பெயரை இங்குள்ள மக்கள் மனதில் பதித்துவிட்டுத்தான், திரும்பி இந்தியா செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தான்.
கண்காட்சி அரங்கில் ‘ராஜா டெக்ஸ்டைல்ஸ்’ ஸ்டால் மிகவும் கம்பீரமாக அமைக்கப்பட்டது. காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு, சில்க் காட்டன் சேலை என்று வண்ணமயமான பட்டுச்சேலைகளும், நேர்த்தியான வேலைப்பாடுகளும் கொண்ட டிசைனர் சேலைகளும் பார்வைக்கு வைக்கப்பட்டன. ஏராளமான மக்கள் கண்காட்சிக்கு வந்தனர். இங்கே நம் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது, நிச்சயம் தன் வாழ்வில் நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நம்பினான். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு முதல் நாள் வியாபாரம் சொல்லி கொள்ளும்படி இல்லை.
முதல் நாள் கண்காட்சி முடிந்ததும், தன் குழுவினரை அழைத்து பேசினான். “இன்னும் கொஞ்சம் வித்தியாசமா யோசிக்கணும். இவங்களுக்கு டெய்லி சேலையை கட்டிக்கிற பழக்கம் கிடையாது. நம்ம நாட்டைவிட, இங்க சேலை கட்டுற பழக்கம் கம்மி. சிலர் மட்டும்தான் கல்யாணம், ஃபங்ஷன்னா சேலை கட்டுவாங்க. அதனால நம்ம மார்க்கெட்டிங் ஸ்டைலை மாத்தி சேலை கட்டாதவங்களை கூட, நாம சேலை வாங்க வைக்கணும்” என்றவன், அடுத்தநாள், ஒரு புதிய முறையை கையாண்டான்.
ஸ்டாலுக்கு வருபவர்களை சேலைகளை உடுத்தி பார்க்க சொல்லி உற்சாகப்படுத்தினான். தன்னுடன் வந்த ஃபேஷன் டிசைனரை அழைத்து, சேலைகளை மாடர்ன் உடைகளுடன் எப்படி மிக்ஸ் செய்து அணியலாம் என்று லைவ் டெமோ காட்ட வைத்தான்.
இந்த வித்யாசமான முயற்சி நல்ல பலனை கொடுத்தது. மக்கள் ஆர்வத்துடன் சேலைகளை வாங்கினார்கள். குறிப்பாக, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் ஊர் நினைவாக சேலைகளை வாங்கியதோடு மட்டுமல்லாமல், தங்களுடைய வெளிநாட்டு நண்பர்களையும் சேலை வாங்கும்படி ஊக்குவித்தனர்.
அச்சமயம் அந்த கண்காட்சிக்கு வந்த, ஒரு பிரபல அமெரிக்க ஃபேஷன் பிளாக்கர், ‘ராஜா டெக்ஸ்டைல்ஸ்’ ஸ்டாலை பார்த்துவிட்டு, மற்ற கடைகளில்விட, அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதை புகழ்ந்து தன் இணையத்தில் எழுதினார். இது ராஜா டெக்ஸ்டைல்ஸ்க்கு பெரிய விளம்பரமாக மாறி, அடுத்தடுத்த நாட்களில் விற்பனை அதிகமாகியது.
தொழில் ரீதியாக, அவன் உச்சத்தை தொட்டு கொண்டிருந்தாலும், அவனது மனது மட்டும் எப்போதும் ராஜவர்மனிடமும் தற்போது தேவயானியிடமும் வந்து நின்றது. அவர்களை பற்றி நினைக்காமல் அவனது நாட்கள் முழுமை அடையவில்லை.
அன்று தேவயானியை பற்றிய நினைவு வந்தபோது, ஒருவித தவிப்பும், சொல்ல தெரியாத ஈர்ப்பும் ஒருசேர தோன்ற, அவளுடன் பேசுவோம் என்ற எண்ணத்துடன், வீட்டில் இருக்கும் டெலிபோனுக்கு அழைப்பு விடுவித்தான்.
அவன் நினைத்தது போல அவள்தான் போனை எடுத்தாள். “என்ன பண்ற?” எனக் கேட்டான்.
மறுமுனையில் போனை எடுத்த தேவயானி, எஜமானனின் குரலில் இருந்த அந்த விசேஷமான உரிமையையும் பரிவையும் சட்டென்று கவனித்தாள். முதன் முதலாக முதலாளியிடம் போனில் பேசுகிறோம் என்ற படபடப்பை மறைத்து கொண்டு, “பூஜை பாத்திரங்களை சுத்தம் பண்ணிட்டு இருக்கேன் சார்” என்றாள் அடக்கமான குரலில்.
“சாப்பிட்டீயா???“ என்று அவன் அடுத்ததாக கேட்க,
தேவயானிக்கு தூக்கிவாரி போட்டது. ‘என்ன இது… போன் போட்டு விசாரிக்கிறாரு. அதுவும் சாப்பிட்டீயானு கேட்கிறாரு?’ என்று வியந்துபோனவள், “சாப்பிட்டேன் சார். இன்னைக்கு வத்தக்குழம்பும் முட்டைக்கோஸ் பொரியலும் பண்ணியிருந்தேன். நீங்க… நீங்க சாப்பிட்டீங்களா சார்?” என்று பதிலுக்கு விசாரித்தாள்.
“ம்ம்ம்… சிக்கன், மட்டன், பிஷ்னு இன்னைக்கு ஒரு கட்டு கட்டினேன்” என்றான் சிறிது நகைசுவை கலந்த குரலில்
அவன் ஒரு சிறுவனை போல பேசியதை கேட்டு, சமையலறையில் நின்று கொண்டிருந்த தேவயானி இதழோரமாய் சிரித்தாள்.
“நியூயார்க்ல நீ அருமையா சமைக்கிற மாதிரி சாப்பாடு கிடைக்காதுனு நினைச்சேன்… பட் கிடைச்சது அதான் நல்லா சாப்பிட்டேன்”
அவனின் மறைமுக பாராட்டலில் ஆதீத சந்தோஷமடைந்தவளின் நெஞ்சம் பெருமையால் விம்மியது. இதழோரமாய் சத்தம் வராமல் சிரித்து கொண்டிருந்தாள்.
“நியூயார்க்ல இருந்து வரும்போது உனக்கு என்ன வாங்கிட்டு வரட்டும்?” எனக் கேட்டான்.
‘என்ன என்கிட்டையா கேட்கிறாரு?’ என்று மனதிற்குள் ஆச்சரியமடைந்தவள், “எனக்கா…சார்???” என நலிந்த குரலில் கேட்டாள்.
“ம்ம்ம்… உனக்குத்தான்”
“எனக்கு நீங்களே எதாவது வாங்கிட்டு வாங்க சார்” என்றாள் கூச்சமும் தயக்கமும் கலந்த குரலில்.
“உனக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தெரியாதே? நான் என்ன வாங்கட்டும்?”
“உங்களுக்கு எது பிடிக்குமோ அதையே வாங்குங்க சார்”
“ஓக்கே… வாங்கிட்டு வர்றேன் வீட்டு நிலவரம் எப்படி இருக்கு? எல்லாம் சரியா போகுதா?” அவளிடம் எதாவது பேச வேண்டும் என்பதற்காக கேட்டான்.
“எல்லாம் நல்லா போயிட்டு இருக்கு சார்” என்றவள், “சார்… எதுக்கு ஸ்வேதாவையும் அவள் அம்மாவையும் அப்படியே விட சொன்னாங்க? அவள் கையை கால்லை உடைச்சி அவளை விதீயில பிச்சை எடுக்க விட்டிருக்கலாம்ல சார்?” என்று சற்று குரல் உயர்த்தி கூறினாள்.
அவளது ஆவேசமான குரலை கேட்ட ராஜகுமாரன் மறுமுனையில் அமைதியாக புன்னகைத்து கொண்டே, “அவளை அப்படியே யார் விட்டது???” என்று சற்று நக்கல் கலந்த குரலில் கூறினான்.
“அப்புறம் என்ன தண்டனை சார் அவங்களுக்கு கொடுத்திங்க?” என்று ஆவலோடும் எதிர்பார்ப்போடும் கேட்டாள்.
“இத்தனை நாளும் அவள் சாப்பிட்ட சாப்பிட்டில் மெதுவா வேலை செய்யக்கூடிய விஷம் கலந்து கொடுத்திருக்கு. அது அவளது கையையும், கால்லையும் இன்னும் கொஞ்சநாள் முடக்கிரும். அப்புறம்… எப்படி அவள் உடம்பை வச்சு சம்பாதிப்பாள். கொஞ்சநாள்ல ரோட்டுக்கு வந்திருவா”
“ம்ம்ம்…”
“இப்ப உனக்கு சந்தோஷமா?” என்று மென்மையான குரலில் கேட்க,
“ரொம்ப சந்தோஷம் சார்” என்றாள் திருப்தியான குரலில்…
“ஓக்கே பை… நாளைக்கு கூப்பிடுறேன்” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
போன் துண்டிக்கப்பட்ட பிறகும், அவன் காட்டிய அந்த சிறப்பு அக்கறை தேவயானியின் மனதிற்குள் வட்டமிட்டு கொண்டே இருந்தன.
ஓரிரு நாளில் நியூயார்க்கில் இருந்து இந்தியா திரும்பிய பிறகு அமெரிக்காவில் ஒரு கடை ஆரம்பிப்பது, அவனுக்கு மிகவும் சுலபமானதாக போனது.
அந்த கண்காட்சி நடக்கும் சமயத்திலேயே, கடை ஆரம்பிக்க ஒரு இடத்தை விலைக்கு வாங்கியவன், அந்த நகரில் இருப்பவர்களையே வேலைக்கு எடுத்து கொண்டான். இதனால் மொழி பிரச்சினையை சமாளிக்க முடியும் நம்பினான். அடுத்ததாக போக்குவரத்தில் கவனம் செலுத்தியவன், நம்பகமான ஒரு பெரிய டிராவல் நிறுவனத்தை தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாக சேலைகளை அமெரிக்கா கொண்டு வந்தான்.
ஒரு பக்கம் கடை ஆரம்பிக்கும் வேலை கோலாகலமாக சென்று கொண்டிருந்தது. மறுபுறம் ராஜவர்மனின் ஒன்றாம் வருட திதி அருகில் வந்தது.
வீட்டிற்கு வெள்ளை அடித்துவிட்டு திதி நாளில் ஐயரை அழைத்து ஓமகுண்டம் வளர்த்து, கடலில் சென்று பிண்டம் கரைத்துவிட்டு வீட்டிற்கு வந்ததும், அண்ணனின் புகைப்படத்தை பார்த்து தாரை தாரையாக கண்ணீர் வடித்தான் ராஜகுமாரன்.
கூடியிருந்த அத்தனை நெருங்கிய சொந்தங்கள் அவனுக்கு ஆறுதல் கூறினாலும், அவனால் அவன் அழுகையை கட்டுப்படுத்தமுடியவில்லை.
இந்த அத்தியாயம் பற்றிய உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.
நன்றி
அன்புடன்
சாய்லஷ்மி.