போலீஸ் ஸ்டேஷனின் அந்த இருண்ட அறைக்குள்,
அவனது கரங்களோ மேலே இழுத்து கட்டப்பட்டிருக்க, முகத்திலும் நெற்றியிலும் இரத்தக் கசிவுகளுடன் இரும்பு மனிதன் போல நின்றிருந்தான் ராவணன்.
முகத்தில் வன்மம் தாண்டவமாட, லத்தியால் ராவணனின் கன்னத்தில் தட்டிய ஆத்மன்,
“எவ்வளவு திமிர் இருந்தா போலீஸ்காரன் என் மேலயே கையை வைப்ப?” என்று பற்களைக் கடித்தபடி கத்திய அடுத்த நொடி, தன் கையில் இருந்த லத்தியால் ராவணனின் தோள்பட்டையில் பலமாக தாக்கினான்.
‘சளார்’ என்ற சத்தத்துடன் விழுந்த அடிக்கு, ராவணனின் உடல் லேசாக அதிர்ந்ததே தவிர, அவன் உதடுகளிலிருந்து ஒரு முனகல் சத்தம் கூட வரவில்லை.
வலியைத் தாங்கிக்கொண்டு, முகத்தில் வழிந்த வியர்வையையும் இரத்தத்தையும் உதறிவிட்டு, தலையை உயர்த்தி பிணைக்கப்பட்ட தன் கரங்களை பார்த்துவிட்டு, ஆத்மனைப் பார்த்து, அதே தெனாவட்டான சிரிப்பை உதிர்த்தான் ராவணன்.
‘உன்னால் இவ்வளவுதான் முடியுமா ஆத்மன்?’ என்பது போல இருந்த ராவணனின் பார்வையும், உதட்டோரச் சிரிப்பும் ஆத்மனின் ரத்த அழுத்தத்தை ஏகத்துக்கும் அதிகரிக்கச் செய்ய,
“என் கைய கழட்டி விட்டுட்டு ஆம்பளையா நேருக்கு நேர் வாடா அப்போ காட்டுறேன் ராவணன்னா யாருன்னு!” என்ற ராவணனின் குரலில் இருந்த அந்த அசராத கம்பீரத்தில், ஆத்மனின் அகங்காரம் பலமாக அடிவாங்க, அதன் விளைவாக ராவணனின் முதுகில், பல தடித்த செந்நிறக் கோடுகள் தடம் பதிக்க,
அவனது கண்கள் மூடிக்கொண்ட தருணம், அவனுக்கு அவனவளின் நினைவு வர, அந்த வலியிலும் ராவணனின் இதழ்கள் மெல்லப் புன்னகைத்தன.
ஆத்மனுக்கோ ராவணனின் புன்னகை இன்னும் இன்னும் ஆத்திரத்தை கொடுக்க,
“டேய்!” என்று கத்தியபடி, ஆத்மன் மீண்டும் லத்தியை ஓங்கிய அந்தக் கணம், சல்யூட் அடித்தபடி அவன் முன்னே வந்த இன்ஸ்பெக்டர், ஆத்மனின் காதில் ஏதோ சொல்ல ராவணனை அழுத்தமாக பார்த்தவன், ராவணனின் கைகளை அவிழ்த்துவிட்டு, கைவிலங்கிடுமாறு தன் அருகில் இருக்கும் காவலரை பணித்தவன், பல்லை கடித்தபடி லத்தியை வீசிவிட்டு வாசலை நோக்கி சென்றான்.
@@@@@@
பல மணிநேர காத்திருப்புகள், சில பல சிபாரிசுகள் மற்றும் பல பெட்டிகள் பரிமாற்றத்திற்கு பிறகு ராவணனை சந்திக்க அனுமதி கிடைத்திருக்க, வேலாயுதம், சந்துரு, லாயர் மற்றும் இந்திராவின் துணையோடு அஜூதியா ஸ்டேஷனுக்குள் நுழைந்தாள்.
மணக்கோலத்திலேயே, கலைந்த தலைமுடியில் சூடியிருந்த மலர்கள் வாடியிருக்க, வெளிறிய முகத்துடன், அஜூதியா உள்ளே வருவதைப் பார்த்த அங்கிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், எதற்கும் கட்டுப்படும் நிலையில் அஜூதியா இல்லை.
“அவர் எங்க?” என்று பதற்றத்துடன் அவள் வேகமாக உள்ளே வர, மூடியிருந்த விசாரணை அறையிலிருந்து லத்தி சத்தமும், ஆத்மனின் ஆத்திரக் குரலும் கேட்டு அஜூதியாவின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.
கதவைத் தள்ளிக்கொண்டு அவள் உள்ளே நுழைய முயன்ற பொழுது, கதவை திறந்து கொண்டு ஆத்மன் வெளியே வர, அவனை பார்த்ததும் அஜூதியாவின் கண்கள் கோபத்தில் சிவந்தன.
அறைந்து தள்ளும் அளவுக்கு கோபம் இருந்தாலும் அதை இப்பொழுது காட்ட விரும்பாதவள் அவன் முகத்தை கூட பார்க்க விரும்பாது உள்ளே நுழைய முனைந்த பொழுது தன் கரம் நீட்டி தடுத்தவன்,
“எப்படி மா இருக்க கல்யாண பொண்ணு” அஜூதியாவின் தலை முதல் கால் வரை தன் பார்வையால் அளந்த படி நக்கலாக கேட்டான்.
“நான் போகணும் வழி விடுங்க” நிமிர்ந்து அவன் முகத்தை கூட பார்க்காது கூறினாள் அஜூதியா.
அவளை வக்கிர புன்னகையுடன் பார்த்த ஆத்மன்,
“போலாம், சரி அடுத்து என்ன பண்ண போற? ராவணனும் இனிமே வர மாட்டான் உன்னை பார்த்தாலும் பாவமா இருக்கு. ஒன்னும் சொல்லட்டா” என்றவன் குனிந்து அவள் காதில்,
“நான் வேணும்ன்னா உன்னை வச்சிக்கவா?” என்று கேட்டு முடிப்பதற்குள்,
“ஏய்” என்று கண்கள் சிவக்க கத்திய அஜூதியா ஆத்மனின் சட்டையை கொத்தாக பிடித்து,
“நீயெல்லாம் ஒரு ஆம்பளையாடா?” என்ற அஜூதியாவின் குரலில் அத்தனை அருவருப்பும் அவ்வளவு ஆத்திரமும் சேர்ந்தே இருந்தது.
அவள் அப்படி கேட்டதில்,
“என்னடி திமிரா? என் மேலேயே கை வைப்பியா?” என்று தன் பற்களைக் கடித்த ஆத்மனோ அவள் கழுத்தை பிடித்து நெரித்துச்சுவற்றோடு சாய்த்து விட, வலியில் அவள் தவித்து விட்டாள்.
அந்நேரம், “டேய் விடு டா” என்று ஓடி வந்த சந்துருவை தொடர்ந்து அங்கே வந்த அனைவரும் ஆத்மனின் பிடியில் இருந்து அஜூதியாவை விடுவிக்க முயற்சி எடுக்க அப்பொழுது,
“மிஸ்டர் ஆத்மன்! அவங்க ஒன்னும் கைதி இல்ல, கையை எடுங்க. இப்படி பண்ணுனீங்கன்னா நடக்குறதே வேற!” என்று சத்தமாக மிரட்டினார் ராவணனின் அட்வகேட்.
லாயரின் தலையீட்டால் அஜூதியாவின் கழுத்திலிருந்த தன் கையை எடுத்த ஆத்மன்,
“இனிமே மேல கை வச்ச பொம்பளைன்னு எல்லாம் பாக்க மாட்டேன் அவனைப் போல உன்னையும் தூக்கி உள்ள வச்சிருவேன்” என்று அஜூதியாவை எச்சரித்து விட்டு,
“இது என்ன சந்தை கடையா, பார்த்துட்டு சீக்கிரம் கிளம்ப சொல்லு” என்று தன் அருகில் இருந்த SIயை பார்த்து கூறியவன் வேலாயுதம் மற்றும் சந்துருவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான்.
@@@@@
அறைக்குள் ராவணனின் கைகள் ரெண்டும் விலங்கிடப்பட்டிருக்க, தன் சட்டை கிழிந்து, முகமெல்லாம் ரத்தக் கறைகளுடன் நின்றிருந்த ராவணனோ வாசலில் அஜூதியாவின் நிழல் தெரிந்ததும் மிகவும் தவித்தான்.
தனது தற்போதைய கோலத்தை அவளுக்குக் காட்ட அவன் கொஞ்சமும் விரும்பவில்லை. ஆதலால் உடனே சுதாரித்தவன், தன் கிழிந்த சட்டையையும் தன் காயங்களையும் அவளுக்கு தெரியாதவாறு மறைப்பதற்காக தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு கண்ணாடி ஜன்னலின் முன்னால் வந்து தலை கவிழ்ந்த நிலையில் வந்து நின்றவன், உடனே பேசி அவளை அனுப்பி வைத்து விட வேண்டும் என்று எண்ணிகொண்டிருந்தான்.
அப்பொழுது, சில சம்பிரதாயங்களை முடித்துவிட்டு ராவணனைப் பார்க்க உள்ளே அழைத்து வரப்பட்டாள் அஜூதியா.
தன் முகம் கூட பார்க்காது ஜன்னல் பக்கம் திரும்பி நிற்கும் தன்னவனை பார்த்த படி வந்த அஜூதியா,
“ராவணா” என்று உயிர் உருக அழைத்தவள் அவன் தோளில் கைவைத்த கணம் உடனே விலகியவன்,
“எதுக்கு இங்க எல்லாம் வர உடனே கிளம்பு” என்று அவள் முகம் பார்க்காது கூறவும், தன்னவனின் ஒட்டுதல் இல்லாத பேச்சில் கோபம் கொண்டவள்,
“ஏன் வந்தன்னா, நான் வராம யார் வருவா” என்றபடி அவன் முன்னால் வந்தவளுக்கு பேரதிர்ச்சி.
அவளுக்கு ராவணன் அடி வாங்கிய விஷயம் எதுவும் தெரியாது. விசாரணைதான் அடிக்கவெல்லாம் மாட்டார்கள் என்று தான் சந்துருவும் கூறியிருந்தான்.
அந்த நம்பிக்கையில் தான் அவளும் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தாள்.
ஆனால் தன்னவனை அப்படி பார்த்ததும் அஜூதியாவின் உலகம் அப்படியே சுக்குநூறாக உடைந்து விட்டது.
அஜூதியா பார்த்த அந்த முதல் நொடியில், ராவணனின் உதட்டோர ரத்தமும், கண்ணத்தின் வீக்கமும் அவளது பார்வையில் விழுந்திருக்க, அவளது கால்கள் அப்படியே அந்த இடத்திலேயே உறைந்து போயின.
இதயத் துடிப்பு நின்று போவது போன்ற ஒரு நடுக்கம் அவளுக்குள் பரவியது.
“என்ன பா இது” என்று உடைந்த குரலில் கேட்டவள், நடுங்கும் கைகளால் தன் மார்பை அழுத்தி பற்றிக் கொண்டாள்.
அவளது கண்கள் கலங்கி, கண்ணீர் மளமளவெனக் கன்னத்தில் வழிந்தது.
அதுவரை அனைத்தையும் பொறுத்து கொண்ட ராவணனுக்கோ அஜூதியா
அழத் தொடங்கியதும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அவனது விழிகளும் சட்டென்று கலங்கிவிட,
கண்ணீர் வழியாமல் தன் இமைகளை தட்டி சரி செய்து கொண்டவனுக்கு தன்னவளை இந்த இரவு நேரத்தில் இந்தத் கோலத்தில், இங்கே இப்படி கண்ணீரோடு பார்த்ததும் நெஞ்சில் பாரம் ஏறிகொண்டது.
“தியா ஏன்மா அழாத டா ப்ளீஸ், முதல்ல போப்பா, நான் சீக்கிரம் வந்திடுவேன்” தவிப்புடன் கூறினான்.
“யா.. யாரு உங்களை இப்படி பண்ணுனது? ஏன் இப்படி அடிச்சிருக்காங்க?” என்று விம்மியவள், அவனது காயம்பட்ட கன்னத்தை மிக மென்மையாக தன் நடுங்கும் கரங்களால், வலித்துவிடுமோ என்ற பயத்தோடு தொட்டாள்.
“தியா அழாதடா. எனக்கு ஒன்னும் இல்ல. சும்மா சாதாரண விசாரணைதான்” என்று தன் வலியையெல்லாம் மறைத்து, அவளைத் தேற்றப் புன்னகைக்க முயன்றான்.
“எல்லாம் நான் தான் காரணம். நான் ஒரு ராசி இல்லாதவ. என்னை நேசிக்கிறவங்க எல்லாருக்கும் என்னால கஷ்டம் ” என்று அஜூதியா தன்னைத்தானே நொந்துகொண்டு கதற,
ராவணனோ அவளது கையைத் தன் முகத்தோடு சேர்த்து இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு,
“தியா! என்ன பேசிட்டு இருக்க, நீ என் வரம்டி இனிமே இப்படி பேசாத, என் கண்ணைப் பாரு. உன் ராவணனை அவ்வளவு சீக்கிரம் யாரும் அசைச்சிட முடியாது. இது சின்னக் காயம் தான், சரியாயிடும். நீ தைரியமா இருந்தாதான் நான் இங்க நிம்மதியா இருக்க முடியும். வீட்டுக்குக் கிளம்புடா,” என்றான் கூறினான்.
அவன் அவ்வாறு கூறவும், “ஆனா எனக்கு பயமா இருக்கு ராவணா எல்லாரும் என்னலாமோ சொல்றாங்க” விம்மலுடன் கூறினாள்.
“இனிமே நீ இந்த ஸ்டேஷன் பக்கமே வராத தியா. நான் பார்த்துக்கிறேன், நீ கிளம்பு” என்று அவளது அழுகையைத் தாங்க முடியாமல் ராவணன் முகத்தைத் திருப்பிக் கொள்ள,
“வராத வராதன்னா நான் எங்க போவேன்?உன்னை பார்க்காம எப்படி என்னால இருக்க முடியும்.?” என்றாள் அஜூதியா.
“வேற வழியில்லை மா நீ இருந்து தான் ஆகணும் கொஞ்ச நாள்ல எல்லாம் பழகிடும்” எங்கோ வெறித்தபடி கூறினான்.
“என்ன பழகிடும்” அவனை பார்த்து கொண்டே வினவினாள்.
அவன் பதில் சொல்லாமல் இருக்க வலுக்கட்டாயமாக அவன் முன்னால் வந்து நின்றவள்,
“இன்னைக்கு என்னை கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னீங்க ஆனா பண்ணல, அதுக்கு என்ன முடிவு பண்ணிருக்கீங்க” கொஞ்சம் கோபமாகவே கேட்டாள்.
“அத முடிவு பண்ற மனநிலைல நான் இல்லை. அதெல்லாம் இப்போ எதுக்கு? நீ அஷ்ரமம் போ, ஜானகி மா என்ன சொல்றாங்களோ அது படி செய் அவங்க உன் நல்லதுக்கு தான் சொல்லுவாங்க” தொண்டை அடைக்க திணறளுடன் கூறியவனால் அவள் முகம் பார்க்க முடியவில்லை.
ஆனால் அவள் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள், அனல் தெறிக்க அவனை பார்த்தவளுக்கு நெஞ்சமெல்லாம் பத்தி கொண்டு வந்தது.
அதாவது, ‘என்னை மறந்துவிட்டு வேறு ஒருவனை மணந்துகொள்’ என்பதைத்தான் அவன் இவ்வாறு சொல்லியிருக்க, அவளால் தாங்க முடியவில்லை.
இப்படி ஒரு பிரச்சனை வந்ததும், அவன் இப்படி எல்லாம் யோசிப்பான் என்று ஏற்கனவே யோசித்திருந்த அஜூதியாவுக்கு, அதை அவனே இப்பொழுது சொல்லும் பொழுது நெஞ்சம் எல்லாம் வலித்தது.
நேற்று இரவு அவளோடு அவன் இருந்த நிலை என்ன? கதைத்ததெல்லாம் என்ன? இன்று இப்படி ஒரு பிரச்சனை வந்ததும் “போ” என்றால், கோபப்படாமல் அவள் என்ன செய்வாள்?
அதே கோபத்துடன் அவனை தீர்க்கமாகப் பார்த்தவள், தன் உள்ளங்கைகளுக்குள் இருந்த பொன்மஞ்சள் தாலியை அவனிடம் நீட்டினாள்.
அவனோ அவளை புரியாமல் பார்க்க,
“கழுத்துல கட்டுங்க! இப்பவே இங்கையே” என்றாள் பிடிவாதமாக.
ராவணன் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து,
“தியா, இங்க வச்சு எப்படி?” என்று இழுக்க,
அஜூதியா தன் இதழ்களை அவனிடம் காட்டி ,
“எத்தனை கொடுத்திருப்பீங்க ஹான், எல்லாம் செஞ்சிட்டு, தாலி கட்ட வேற ஒருத்தனா வருவான்” என்றாளே பார்க்கலாம், அஜூதியாவின் அதிரடியில் அதிர்ந்து விட்டான் ராவணன்.
அவளது வார்த்தைகளில் இருந்த வலியும் வேதனையும் ராவணனின் நெஞ்சை அசைத்தாலும், அடுத்து என்ன என்று உறுதியாக தெரியாத நிலையில் அஜூதியாவின் நிலையை கருத்தில் கொண்டு தயங்கியவன்,
“தியா, நான் வெளில வந்த அப்புறம் நல்லபடியா கட்டிக்கிறேன்டா” மீண்டும் அவளை சமாதானம் செய்ய முயல,
“முடியாது! இங்கிருந்து நான் வெளில போகும்போது உங்க பொண்டாட்டியா மட்டும்தான் போவேன் ராவணா! கட்டு” என்றாள் உறுதியாக.
தன்னவளின் பிடிவாதத்துக்குள் கொட்டிக் கிடந்த அளவில்லா காதலுக்கு முன்னால், ராவணனின் தடைகள் அனைத்தும் தகர்ந்து போக, விலங்கிடப்பட்ட தன் கைகளை நீட்டி, அந்தப் பொன்மஞ்சள் தாலியை வாங்கியவன், தன்னவளின் விழிகளோடு தன் விழிகளை கலக்கவிட்டபடியே அவளது கழுத்தில் மூன்று முடிச்சுகளை போட்டு தன்னவளைத் தன் சரிபாதியாக்கிக் கொண்டான்.
இருவரிடமும் பெரும் அமைதி நிலவியது. என்ன பேசுவதென்றே இருவருக்கும் தெரியவில்லை.
இதோ திருமணம் முடிந்துவிட்டது!
இருவருக்கும் இடையே இருந்த சின்ன இடைவெளியும் இப்பொழுது தகர்ந்து விட, இனி எந்த தடையும் இல்லை என்ற பொழுதும், இருவரும் அணைத்துக்கொள்ளவும் இல்லை, முத்தமிடவும் இல்லை.
ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே நிற்க, சில நொடிகள் கழித்து மெதுவாக தன்னவனின் மேல் இருந்த தன் பார்வையை விலக்கியவள், குனிந்து தன் மார்பில் உரிமையாய் தவிழ்ந்து கொண்டிருந்த தாலியை இறுக்கமாக பற்றிக்கொண்டு, நிமிர்ந்து தன்னவனின் முகம் பார்த்து,
“உன் உடம்புல உயிர் இருக்கிற வரைக்கும் இந்த தாலி என் கழுத்துல இருக்கும், இது என் கழுத்தை விட்டு இறங்கும் போது இந்த அஜூதியாவும் செத்து போயிருப்பா” என்றவள் ராவணனின் அதிர்ந்த விழிகளை பார்த்து கொண்டே,
“சொர்கமோ நரகமோ அங்க நம்மள யாராலையும் பிரிக்க முடியாதுல” என்று கேட்ட கணம், கண்கள் கலங்க தன்னவளை அணைத்து கொள்ள நெருங்கியவனுக்கு கைகள் ரெண்டும் விலங்கிடப்பட்டிருந்ததால் தடுமாற்றமாக இருக்கவும் அவளே குனிந்து அவனது கரங்களுக்குள் நுழைந்து கொள்ள அப்படியே அணைத்து கொண்டவன் தன் முகத்தை அவள் கழுத்து வளைவுக்குள் புதைத்துக்கொள்ள, குலுங்கிய அவன் முதுகை மென்மையாக வருடினாள் அஜூதியா.
ராவணனின் முதுகில் அவள் தன் மென் கரங்களை வைக்கும் பொழுதே, அவனது முதுகில் பதிந்திருந்த தடித்த காயங்கள், இங்கே தன்னவனுக்கு நடந்த கொடுமையை அவளிடம் சொல்லாமல் சொல்ல,
அந்த வலியை தன் மேனியில் உணர்ந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் திரள, அஜூதியாவுக்கு ஆத்மன் மீது இருந்த கோபம் இப்பொழுது உச்சத்தைத் தொட்டது.
அதே கோபத்தோடு தன் கண்களை துடைத்தபடி நிமிர்ந்தவளின் பார்வை கண்ணாடி ஜன்னல் வழியாக தங்களையே வஞ்சகத்தோடு பார்த்து கொண்டிருந்த ஆத்மன் மீது பட, ஏற்கனவே அவன் மீது அவ்வளவு ஆத்திரத்தில் இருந்த அஜூதியாவோ ஆத்மனை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தவள், அவனது விழிகளை நேருக்கு நேர் சந்தித்தபடியே, ராவணனின் அணைப்பில் இருந்து விடு பெற்று அவனின் இதழோடு தன் இதழ் பதித்து ஆழமாக முத்தமிட்டாள்!
ஆக, ‘நீ என்ன செய்தாலும், எங்களை பிரிக்க முடியாது’ என்பதை தன் செயலில்
காட்டியிருந்தாள் அஜூதியா.
நீண்ட நெடிய இதழ் அணைப்பின் முடிவில் மூச்சு வாங்க தன்னவளின் நெற்றியோடு நெற்றி முட்டிய ராவணனின் செங்குருதி அஜூதியாவின் நெற்றி வகிட்டில் குங்குமம் போல பதிந்து விட, பிரியவே மனமில்லாது தன்னவனின் நெற்றியில் இதழ் பதித்து விட்டு, அங்கிருந்து வெளியேறியவள் ஆத்திரத்தின் உச்சத்தில் நின்ற ஆத்மனை ஒரு அற்பப்புழுவைப் போல நிமிர்வுடன் பார்த்துவிட்டு,
கம்பீரமாக அந்திரன் ராவணன ஈஷ்வரனின் மனைவியாக ஆத்மனை கடந்து சென்றாள் அஜூதியா தனிய ஷக்தி.