அத்தியாயம் 33
தொலைக்காட்சியில் கூறப்பட்ட செய்தியில் உயர் வோல்ட் மின்சாரம் தாக்கப்பட்டது போல் திகைத்துப் போனாள் நேத்ரா.
“அவங்களா.. எப்பிடி”
நேற்று பார்க்கும் போது நன்றாக இருந்தவர் இன்று உயிருடன் இல்லை எனக் கூறினால் எப்படி இருக்கும் அவ்வுணர்வில் தான் இருந்தாள் நேத்ரா.
“எப்பிடி”
தர்ஷனிடம் அழைப்பேசி வழியாகக் கேட்டாள்.
“யாருக்குத் தெரியும்.. எல்லாருக்கும் ஷாக் தான்.. ”
அவன் கூறி பெருமூச்சு விட இவளுக்கு கவலையாக இருந்தது.
“பாவம் தான் அவங்களுக்கு என்ன பிரச்சினையோ”
இவள் கூறினாள்.
“யாருக்குத் தெரியும்.. உயிரோட இருக்குற காலம் நல்லது ஒன்னும் செய்யல்லயே.. யாருகூட வம்பு வெச்சிக்கிட்டாங்களோ யாருக்குத் தெரியும்”
அவனது குரலில் சற்று அலட்சியம்.
“என்ன பிரச்சினையா இருந்தாலும் தற்கொல அதுக்கு தீர்வு இல்லையே..”
“சரி சரி செத்தவக்கிட்ட நா போய் சொல்லிட்டு வாரேன்.. இப்போ ஃபோன வைக்குறேன் இன்னும் bபொடி ஹாஸ்பிட்டல்ல தான்”
அவன் கூறி விட்டு அழைப்பேசியை துண்டித்தான்.
“ஐயோ கடவுளே அவங்களோட எல்லா பாவத்தையும் மன்னிச்சிடு”
கடவுளிடம் ஒரு வேண்டுதலை வைத்தாள் நேத்ரா.
அக்ஷரன் அறையில் இருந்து வந்தான்.
அவளுக்கு அருகில் வந்தவன்.
“என்ன வாயப் பொலந்துக்கிட்டிருக்க காஃபி எங்க”
அவன் கேட்டான்.
அவனைப் பாவமாகப் பார்த்தவள்.
“நேத்து உங்ககிட்ட அடி வாங்கினாங்களே அவங்க செத்துட்டாங்க”
இவள் இன்னும் மாறாத அதிர்ச்சியில் கூறினாள்.
பெருவிரலால் புருவத்தை நீவி விட்டவன்.
“ஓஹ்… ஓகே ஓகே.. நீ காஃபி போட்றியா.. இல்ல நானே போடட்டுமா”
அவன் சொல்ல இவள் தான் என்ன மாதிரியான மனிதன் இவன் என்ற ரீதியில் பார்த்து வைத்தாள்.
“என்ன பாக்குற”
அவளது பார்வையை உணர்ந்து அவன் கேட்க.
“அவங்க செத்துட்டாங்கன்னு சொல்றேன் நீங்க என்னன்னா காஃபி கேக்குறிங்க”
ஆதங்கம் அவளது குரலில்.
“அப்புறம் அவ செத்ததுக்கு நா விரதம் இருக்கனுமா என்ன”
புருவம் உயர்த்தி அலட்சியமான குரலில் சொன்னான் அவளது கணவன்.
“ஆனாலும்..”
இவள் இழுக்க.
“ஆனாலும் போனாலும் எனக்கு காஃபி தான் முக்கியம் அதோட அவ ஒன்னும் அவ்ளோ உத்தமி இல்ல”
இவன் கூறி விட்டு சமயலறைக்குள் நுழைய அவனுக்குப் பின்னால் சென்றவள் அவனது கையில் இருந்து காஃபி கப்பை வாங்கி எடுத்து இருவருக்கும் சேர்த்து காஃபி ஊற்றினாள் நேத்ரா.
அவன் அங்கிருந்து அகன்றான்.
அவனுக்கு ஹாலில் கொண்டு வந்து காஃபியை குடுக்க வீட்டு காலிங் பெல் சத்தம் கேட்டது.
“காலைலயே யாரு”
இவள் கூறிக் கொண்டு சென்று கதவைத் திறந்தாள்.
வெளியே நின்றுக் கொண்டிருந்தாள் ஶ்ரீஜா.
இவள் அவளைப் பார்க்க,
“உள்ளே வரலாமா”
அவள் அனுமதி வேண்ட,
நேத்ரா திரும்பி அக்ஷரனைப் பார்த்தாள்.
அவனுக்கும் ஶ்ரீஜா வந்திருப்பது புரிந்தது இருந்தும் எதுவும் பேசாமல் நிதானமாக காஃபி அருந்திக் கொண்டிருந்தான்.
“ம்ம் வாங்க”
அவள் கூற ஶ்ரீஜா உள்ளே வந்தாள்.
“இப்போ என்ன செய்யனும்”
நேத்ரா அவர்கள் இருவரையும் தயக்கமாகப் பார்த்தாள்.
“நா உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்”
ஶ்ரீஜா அக்ஷரனிடம் கூற அவன் தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தான்.
“அது எப்போ நீங்க டைவோர்ஸ் வாங்குவிங்க”
அவள் கேட்டிட. இவன் திரும்பி நேத்ராவைப் பார்த்தான்.
“அது… அடுத்த வருஷத்துல கெடச்சிடும்”
நேத்ரா தான் பதில் கூறினாள்.
“ம்ம்.. உங்களுக்கே தெரியும் இப்போ தான் ரெண்டு மாசம் இன்னும் கொஞ்ச நாள் போனா வயிறு வெளில தெரியும் அதான்…”
இவள் இழுக்க நேத்ராவினது கண்கள் கலங்கியது.
திரும்பி அக்ஷரனைப் பார்த்தாள் அவனோ என்றும் போல் நிதானமாக காஃபியை அருந்திக் கொண்டிருந்தான்.
“என்ன இவங்க இப்பிடி இருக்காங்க.. கொஞ்சம் கூட உறுத்தாம”
அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
குற்றம் உள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும் என்ற பழமொழி நேத்ராவிற்கு நினைவில் இல்லையோ என்னவோ..!!
“என்னோட கவல ஒரு பொண்ணா உங்களுக்கு புரியும் ப்ளீஸ்..”
நேத்ராவின் கைகளைப் பிடித்து ஶ்ரீஜா கூறிட இவளது மனமோ உருகி விட்டது.
“கண்டிப்பா.. உங்களுக்கான அங்கீகாரத்த நா வாங்கி கொடுப்பேன்”
அவள் உறுதியாகக் கூற ஒரு முறை தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்து விட்டு காஃபியை அருந்தினான் அக்ஷரன்.
“தேங்க்ஸ்”
கலங்கிய விழிகளை துடைத்துக் கொண்டு ஶ்ரீஜாக் கூற கடினப்பட்டு புன்னகைத்தாள் நேத்ரா.
பின் ஶ்ரீஜா அக்ஷரனைப் பார்த்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
அக்ஷரன் அப்பொழுது தான் காஃபியை அருந்தி விட்டு எழுந்தான்.
நேத்ரா ஏதோ கூற வர அவளை கை நீட்டி தடுத்தவன்.
“என்ன சொல்ல வர்ரன்னு புரியுது.. மேடம் நீங்க முடிவு பன்னிட்டிங்கள்ல.. அப்புறம் என்ன.. கண்டிப்பா என்னோட லவ்வர கல்யாணம் பன்னிப்பேன் நீங்க ஃபீல் பன்னாதிங்க”
அவன் கூறி விட்டு உள்ளே சென்றிட இவளுக்குத் தான் இதயத்தில் ஏதோ பாறங்கல்லை வைத்து அழுத்தியது போல் வலித்தது.
“உனக்கானது இல்ல… நீ அவருக்கு பொருத்தமானவரு இல்ல புரிஞ்சிக்க அவர் நல்லா இருக்கனும்”
இவள் ஏதோ கூற வந்த மனசாட்சியை இழுத்து மூடி விட்டாள்.
பின் காஃபியை அருந்த பிடிக்காமல் கடினப்பட்டு அதை குடித்து விட்டு அறைக்குள் சென்றாள்.
தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளிவர தேவகியிடம் இருந்து அழைப்பு வந்தது.
“என்ன அத்த சொல்லுங்க”
அவள் கேட்க.
“இல்லடா கண்ணு.. அடுத்த வாரம் சனிக்கிழம உங்க ரெண்டு பேரோடயும் ரிசப்ஷன் வைக்குறன்னு அக்ஷரன் சொன்னான்.. அதான் உன்னோட ஃப்ரன்ட்ஸ் யாருக்காச்சும் சொல்லனுமா”
அவர் கேட்க இவள் திகைத்தாள்.
‘இது எப்போ’
மனம் அதிர்ந்தது.
“என்னடா லைன்ல இருக்கியா”
இவளது அமைதியில் இரண்டாவது தடவையாக அழைத்திருந்தார்.
“அத்த அது..”
இவள் தயங்கி நின்றாள்.
“சரி டா கெஞ்ச நேரத்துல கூப்ட்றேன் மாமா வந்திருக்காரு சாப்பாடு எடுத்து வைக்கனும்”
அவர் கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தார்.
இவள் தான் என்னடா நடக்குது இங்க என்ற ரீதியில் விழித்துக் கொண்டிருந்தாள்.
“இப்போ தான் டிவோர்ஸ பத்தி பேசிட்டு இருந்தாரு… அத பேசி முழுசா ஒரு மணித்தியாலம் கூட ஆகல்ல அதுக்குள்ள ரிசப்ஷனா”
இவள் நினைத்துக் கொண்டு இருக்க
“சாப்பாடு ரெடி”
அக்ஷரனது குரல் வர டைனிங் டேபளுக்குச் சென்றாள் இவள்.
அவன் சாப்பிட அமர்ந்திருந்தான்.
இவள் அமராமல் அவனையேப் பார்க்க அவளது பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவன் என்னவென்று புருவம் உயர்த்த,
“எதுக்கு இப்பிடி பன்னுறிங்க”
அவள் ஆதங்கமாகக் கேட்டாள்.
“எது… ஓஹ்.. தோசையா இன்னைக்கு இது தான் ஈஸியா இருந்துச்சு நாளைக்கு வேற ஏதாச்சும் செய்றேன்”
அவன் கூறிக் கொண்டு செல்ல.
“அதில்ல.. அத்த கிட்ட எதுக்கு அப்பிடி சொன்னிங்க”
“எப்பிடி சொன்னேன்”
“அதான்.. அடுத்த வாரம் ரிசப்ஷன் இருக்குதுன்னு”
“ரிசப்ஷன் இருக்குறதால சொல்றேன்..”
அவன் தோளைக் குளுக்கி விட்டான்.
“நாம தான் சேர்ந்து வாழப் போறது இல்லையே அப்புறம் எதுக்கு தேவையில்லாத இந்த செலவு.”
அவள் கேட்க அவளை அழுத்தமாகப் பார்த்தவன்,
“இது என்னோட ஃப்ரன்ட்ஸ் கேட்டதால குடுக்குறேன்.. உன்கிட்ட விருப்பமா இல்லையான்னு கேக்கல்ல ஜஸ்ட் கெட் ரெடி ஃபோ தட்”
அவன் அழுத்தம் திருத்தமாகக் கூறி விட அடுத்து அவளுக்கு பேச முடியவில்லை.
“சாப்டு”
அவன் கண்களால் இருக்கையை காண்பிக்க எதுவும் பேச முடியாமல் அமைதியாக அமர்ந்தாள் சாப்பிடுவதற்கு.
சாப்பிட்டு முடிந்த பின்னர் அக்ஷரன் வெளியே சென்றான்.
இவளோ பல்கணிக்குச் சென்றாள்.
அங்கிருந்த ஓர்கிட் மலர்களைத் தடவி விட்டவள்.
“இவங்கள புரிஞ்சிக்கவே முடியல.. அவங்களுக்கு அந்த ஶ்ரீஜாவ தான் புடிச்சிருக்குதுன்னா எதுக்கு என்கூட ரிசப்ஷன் வைக்கனும்”
தனியாக புலம்பினாள் அக்ஷரனது மனையாள்.
சிறிது நேரத்தில் வீட்டிற்குள் நுழைய அறைக்குள் இருந்தான் அக்ஷரன்.
“இவங்க எப்போ போவாங்க எப்போ வருவாங்கன்னே புரிஞ்சிக்க முடியல”
நினைத்துக் கொண்டு ஸோபாவில் அமர காலிங் பெல் சத்தம் கேட்டது.
“இப்போ யாருடா..”
சலித்துக் கொண்டே சென்று கதவைத் திறந்தாள்.
முன்னே ஒரு அழகிய பெண் நின்று கொண்டிருந்தாள்.
புருவம் சுருக்கி அவளைப் பார்க்க,
“அக்ஷரன் ஸர்..”
என அப்பெண் இழுக்கவும்.
“ஹாய்.. கம் நேஹா..”
அக்ஷரனது குரல் பின்னால் ஒலித்தது
நேத்ரா திரும்பிப் பார்த்தாள்.
சற்று இதழ் விரித்து புன்னகையுடன் நின்றிருந்தான் அக்ஷரன்.
இங்கு நேத்ராவிற்கோ விரிந்திருந்த அவனது இதழைப் பார்த்ததும் உள்ளுக்குள் ஏதோ எரிந்தது.
“இப்போ மட்டும் சிரிக்குறாங்க”
மனம் குறை பட்டுக் கொண்டது.
அவள் வழி விட்டு நிற்க உள்ளே நுழைந்தாள் நேஹா.
நல்ல அழகியா பெண் தான்.
அவனுடன் கை குலுக்க கை நீட்ட ஒரு நொடி நேத்ராவைப் பார்த்தவன் கையை நீட்டினான் குலுக்குவதற்காக.
நேத்ராவினது இதழோ அவளை அறியாமல் சுழித்தது..
“உட்காருங்க”
நேஹாவிற்குக் கூறி அவனும் அமர்ந்தான்.
பின் நேத்ராவிடம் திரும்பி,
“ஒரு டீ”
கூறி விட்டு நேஹாவின் பக்கம் திரும்பிக் கொள்ள இவளது முகம் இறுகியது.
“நா என்ன வேலைக்காரியா”
வாயில் இருந்து உதிரப் பார்த்த வார்த்தைகளைக் கடினப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டு இருவரையும் முறைத்துப் பார்த்தவள் சமயலறைக்குள் நுழைந்தாள்.
அக்ஷரனோ கடைக் கண்ணால் மனைவியின் முகபாவனைகளைப் பார்த்து உதட்டை மடக்கிக் கொண்டான்..
சிறிது நேரத்தில் நேத்ரா டீயைக் கொண்டு வந்துக் கொடுக்க அதைப் பெற்றுக் கொண்ட நேஹா அக்ஷரனுடன் ஏதோ நுனிநாக்கு ஆங்கிலத்தில் வாதாடிக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்ததும் நேத்ராவிற்கு என்னவோ போல் ஆகியது.
“இவங்களோட தகுதிக்கு சத்தியமா நா பொருத்தமே இல்ல”.
மீண்டும் மனம் சத்தமிட்டு உரைத்து உறுதிப்படுத்தியது.
அந்த டீயைக் குடித்து முடித்ததும் நேஹா எழுந்து நின்றாள்.
“ இவங்களா உங்க வைஃப்”
அக்ஷரனிடம் கேட்க அவன் ஆம் எனத் தலையசைத்தான்.
நேத்ராவிற்கு அருகில் வந்தவள் அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு தனது கைப்பைக்குள் இருந்து அளவுகோலை எடுத்து நேத்ராவினது தோளின் அளவு, இடுப்பின் அளவு, மார்பின் அளவு, கையின் அளவு, அகலம், நீளம் என்பவற்றை அளந்து ஒரு குறிப்பேட்டில் குறித்துக் கொள்ள இவள் தான் மீண்டும் விழித்தாள் புரியாமல்,.
“ஓகே.. அக்ஷரன் அந்த டிசைன்ல தைக்குறேன்.. உங்களோட ரிக்குவஸ்ட்டுக்காகத் தான் என்னோட அசிஸ்டன்ட்டக் கூட அனுப்பாம நானே வந்தேன்.. வந்ததுக்கு வேஸ்ட் ஆகல்ல உங்க வைஃபோட கையால ஒரு ஸ்வீட் டீ கெடச்சது தேங்க் யூ”
நேத்ராவிடம் கூறியவள் அக்ஷரனிடமிருந்து விடைப் பெற்றுச் சென்றாள்.
நேத்ரா தான்,
“எதுக்கு இவங்க இப்போ என்ன அளவெடுத்தாங்க”.
கணவனிடம் கேட்டாள்.
“ ம்ம் வேற வேல இல்லாம வந்து அளவெடுத்துக்கிட்டு போனாங்க”
அலட்சியமாகக் கூறி விட்டு அறைக்குள் நுழைய முதல் முறை தனது கணவனை பல்லைக் கடித்து முறைத்துப் பார்த்தாள்.
அவனது முதுகைத் தான்..
******
தொடரும்..❤
💜அஷு💜