அத்தியாயம் 05

அத்தியாயம் 05

 

இவள் எழுதி முடித்து விட்டு அந்த பேப்பரில் தான் எழுதியுள்ளவற்றை மீண்டும் வாசித்துப் பார்த்தாள்.

கண்கள் அனுமதியின்றி கலங்கியது கலங்கிய விழிகளை துடைக்க மாத்திரமே முடிந்தது அவளால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

பின் ஒரு பெருமூச்சொன்றை விட்டவள் அந்த பேப்பரை மடித்து வைத்தாள்.

காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.

“அவங்க வந்துட்டாங்களா”

மதியம் பன்னிரெண்டு மணி எனக் காட்டியது கடிகாரம்.

யோசனையாக கதவின் அருகே சென்றவள்.

அதை திறக்க கதவின் கைப்பிடியில் கைவைத்தவள்.

எதற்கும் குனிந்து கதவின் துளையினூடாகப் பார்த்தாள்.

அவளது கணவனின் எச்சரிக்கைக்கு அமைய.

வெளியே ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள்.

என்ன நினைத்தாளோ மறுகணம் கதவைத் திறந்தாள்.

அவளுக்கு முன் அழகான இளம்பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்.

வயிற்றில் தனது வலது கையை வைத்துக் கொண்டு இடது கையில் ஏதோ லன்ச் பொக்ஸ் போல் ஒன்றை வைத்துக் கொண்டு இவளை பார்த்து சிரித்தாள்.

“என்ன உள்ள கூப்ட மாட்டியா”

அவள் உரிமையாக கேட்க.

“உள்ள வாங்க”

இவள் வழி விட்டு அவளை வரவேற்றாள்.

அவள் உரிமையாக உள்ளே வந்து அங்கிருந்த ஸோபாவில் அமர்ந்தாள்.

நேத்ராவோ அங்கே நின்று கொண்டிருந்தாள் வந்திருந்த புதியவளைக் கேள்வியாகப் பார்க்க.

“இந்தா உனக்கு தான்”

அவளிடம் நீட்ட இவள் வாங்காமல் இவளை கேள்வியாகப் பார்த்தாள்.

“என்ன பாக்குறா ஓஹ் ஆமால்ல நா யாருன்னு தானே பாக்குற”

“ஆமா”

தயக்கமாகக் கூறினாள்.

“என்கிட்டயே கேக்கலாமே நா இங்க தான் உன்னோட முன் வீட்டுல தான்  தங்கியிருக்கேன்”

“உன்னோட புருஷன் காலங்காத்தால மொறச்சிகிட்டு நின்னாரே ஒருத்தர அவரு தான் என் புருஷன்”

மேலதிக தகவல் கூறினாள் அப்புதியவள்.

நேத்ராவிற்கோ பக்கென்று இருந்தது கணவன் முறைத்துப் பார்த்தவரைப் பார்க்கவே பயமாக இருந்தது.

இதில் அவருடைய மனைவி வேறு வீட்டில் வந்திருக்க என்ன செய்வதென்று தெரியவில்லை.

“ஹேய் எதுக்கு இவ்ளோ பயப்பட்ற உன்னோட புருஷன் நா இங்க வந்ததுக்கு ஒன்னும் சொல்ல மாட்டாரு அதே போல தான் என்னோட புருஷனும் என்ன ஓகேவா”

புதியவள் கூற தலை ஆட்டி வைத்தாள்.

“ச்ச்சோ ச்சுவீட்”

அவளைக் கொஞ்ச அப்பாவியாக புன்னகைத்தாள் நேத்ரா.

“இந்தா இப்பவாச்சும் இத வாங்கு”

தனது கையிலிருந்ததை அவளது கைக்குள் திணித்து விட்டாள்.

“என்னதிது”

“இது ரசகுல்லா நானே செஞ்சது”

அவள் பெருமையாகக் கூறினாள்.

“ஆஹ் உங்க பேரு என்ன”

“என்னோட பேரு தேவிப்பிரியா நீ என்னைய  தேவின்னும் கூப்டலாம் பிரியான்னும் கூப்டலாம்”

அவள் நட்பாக பேச இவளுக்கும் சற்று தயக்கங்கள் தகர்ந்த உணர்வு.

“ஆமா உன்னோட பேரு என்ன”

சாய்வாக அமர்ந்து கொண்டு அவள் கேட்டாள்.

“நேத்ரா”

பள்ளி மாணவி போல் கூறினாள் நேத்ரா.

“ஸ்வீட் நேம் அப்பிடியே உன்ன போல”

தேவிப்பிரியா கூற இவள் சிரித்தாள்.

அதில் வலியா விரக்தியா ஏதோ ஒன்று..!!

“நீங்க மாசமா இருக்கிங்களா”

தேவிப்பிரியாவின் சற்று மேடிட்ட வயிற்றினைப் பார்த்து விட்டு நேத்ரா கேட்டாள்.

சட்டென செவ்வந்திப் பூவாக மாறிய கன்னம் எடுத்துக் கூறியது அவளது வெட்கத்தை.

“ஆமா அஞ்சு மாசம்”

வெட்கப்பட்டுக் கொண்டு அவள் கூற இவளும் சந்தோஷப்பட்டாள்.

“நீ இந்த வாங்க போங்கன்னுறத விட்டுட்டு நீ வா போன்னே கூப்டு அப்போ தான் எனக்கும் பழகுறதுக்கு கன்ஃபடபளா இருக்கும்”

தேவிப்பிரியா கூற இவள் புன்னகைத்துக் கொண்டே தலையசைத்தாள்.

“அப்புறம் எப்போ கல்யாணமாச்சு”

“நேத்து தான்”

எனக் கூறியவளை அதிசயமாகப் பார்த்தாள்.

அவளது பார்வையை உணர்ந்தவள்.

“என்ன அப்பிடி பாக்குறிங்க”

“இல்ல நேத்து தான் கல்யாணமாச்சுன்னு சொல்ற ஆனா உன்னோட புருஷன் அதுக்குள்ள உன்ன இங்க விட்டுட்டு வேலைக்கு போய்ட்டாரு நீயும் அத ஃப்ரியா விட்டுட்டு இருக்க என்ன பொண்ணுமா நீ”

அவள் அதிசயமாகக் கூறி கன்னத்தில் கை வைத்துக் கேட்டாள்.

“அது அவங்களுக்கு முக்கியமான வேல அதான் போனாரு”

கணவனை இன்னுமொருவரிடம் விட்டுக் கொடுக்க முடியவில்லை.

“ஓஹ் மரியாத வேறயா”

தேவிப்பிரியா சிரிக்க இவளும் புன்னகைத்தாள்.

“சரிடா நா கெளம்புறேன் டைமாச்சு”

தேவிப்பிரியா எழும்ப

“இருங்க காபி குடிச்சிட்டு போங்களேன்”

நேத்ரா கூற தேவிப்பிரியா முறைத்தாள்.

அவளது முறைப்புக்கு அர்த்தம் தெரியாமல் அவளை அப்பாவியாக பார்த்தாள் நேத்ரா.

“உனக்கு சொன்னேன்ல இந்த ங்க போட்றத நிறுத்துன்னு”

அவள் உரிமையாக இடுப்பில் கை வைத்து மிரட்ட இவள் விழித்தாள்.

“இந்த இன்னஸன்ட் லுக்கே போதும் ஆள சாய்க்க உன்னோட புருஷனும் அதுல தான் மயங்கியிருக்கனும்”

தேவிப்பிரியாக் கூற இவள் சிரித்தாள்.

அவளாவது அவளது புருஷனை மயக்குவதாவது.

அவன் மயங்கியது அவளிடமில்லையே அவளது பெயரில் இருக்கும் சொத்திடம் தானே.

இதை நினைத்ததும் விரக்திப் புன்னகை ஒன்று தான் இதழில் குடி கொண்டது.

“நம்மகிட்ட அவங்கள மயக்க என்ன இருக்கு”

இது தான் அவளது எண்ணவோட்டம்.

“சரி ஓகே நா கெளம்புறேன் அப்புறம் ஒரு நாளைக்கு வந்து விருந்தே சாப்ட்றேன் கண்டிப்பா நீயும் என்னோட வீட்டுக்கு வா ஏதாச்சும் ஹெல்ப்ன்னா கண்டிப்பா கேளு நா இங்க தான் இருப்பேன் ஓகே பாய்”

கூறியவள் வெளியேற அவளது ஆறுதலான பேச்சே இவளுக்கு சற்று தெம்பளித்தது.

ஏதோ இடியுடன் கூடிய மழை பெய்து முடிந்தது போல் இருந்தது தேவிப்பிரியாவின் வருகை.

சோர்வாக வந்து ஸோபாவில் அமர்ந்தாள் 

தேவிப்பிரியா குடுத்து விட்டுச் சென்ற ரசகுல்லா இருக்க அதை எடுத்து வாயில் வைத்தாள்.

இனிப்பாக இருந்தது..

இவளுக்கு இனிப்கென்றால் அலாதிப் பிரியம்

“நல்லா இருக்கே”

சப்புக் கொட்டியபடி சாப்பிட்டுக் கொண்டிருக்க மீண்டும் காலிங் பெல் அடித்தது.

“இப்போ யாரு”

யோசித்துக் கொண்டே எழுந்து சென்று முன்னர் போல் கதவு துளையினூடாகப் பார்த்தாள்.

வந்திருந்தது அவளது கணவன் தான்.

அவசரமாக கதவைத் திறக்க உள்ளே நுழைந்தான் அவன்.

இவளோ எதுவும் பேசாமல் அங்கேயே நின்றிருந்தாள்.

உள்ளே வந்தவன் கதவைத் தாளிட்டு விட்டு வந்தான்.

இவள் என்ன செய்வதென்று தெரியாமல் கைகளைப் பிசைந்துக் கொண்டிருந்தாள்.

அவன் அவளை நோக்கி வர இவள் தலையைக் குனித்துக் கொண்டாள்.

எதற்காக தன்னை நோக்கி வருகிறான்.

அவள் தலையைக் குனித்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருக்க அவன் அவளை நெருங்கி நின்றிருந்தான்.

இவள் மெதுவாக தலை உயர்த்தி அவனைப் பார்க்க இருவருக்குமிடையில் இன்னும் மீதமாக இருந்த இரண்டடி தூரத்தையும் குறைத்து ஓரடித்தூரத்தின் அரைவாசியாக்கி அவளை நெருங்கியவன் அவள் என்னவென்று உணரும் முன் அவளது இருபக்க கன்னங்களையும் தன் கைகளில் ஏந்தி அவளைப் பார்த்தான்.

 

அவளுக்குத் தான் அதிர்ச்சியாக இருந்தது இவனது இந்த அடாவடிச் செயலை அவள் சற்றும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை என்பது அவளது விரிந்த விழிகளில் அப்பட்டமாக தெரிந்தது.

அவனைத் தள்ளி விட்டு தூரமாக போக வேண்டும் என்பதெல்லாம் அவளது எண்ணத்தில் வரவில்லை.

மொத்தத்தில் அவனது அருகாமையில் அவள் தன்வசமிழந்தாள்.

அக்ஷரனோ அவளது கண்களையே பார்த்திருந்தான்.

அவளது விழிகளில் தனது விழிகளை கலக்க விட்டான்.

அவனது பார்வையோ அவளிடம் எதையோ உணர்த்தப் பார்த்தது.

அதை உணர்ந்துக் கொள்ள முடியாமல் அவனையே புரியாத பார்வை பார்த்தாள் பாவை.

ஓரிரண்டு நொடிகள் அவளது கண்களையேப் பார்த்திருக்க இவளும் அவனது கைக்குள் அடங்கியிருந்தாள்.

என்ன நினைத்தானோ பின் அவளை விட்டவன் அவளைப் பார்க்காமலே அறைக்குள் நுழைந்தான்.

இவள் தான் ஸ்தம்பித்துப் போய் நின்று கொண்டிருந்தாள்.

எதற்கு அவன் தன்னை நெருங்கினான்,எதற்கு அவன் தனது கன்னத்தை ஏந்தினான்,அவனது பார்வை என்ன அந்த பார்வைக்கு அர்த்தம் என்ன???

ஏகப்பட்ட வினாக்கள் இவளுள் ஆனால் விடைகள் அனைத்தும் அவனிடம் அல்லவா??

இதில் அவனது கைப்பட்ட கன்னம் வேறு  குறுகுறுத்தது.

அதை தனது கைகளால் தேய்த்து விட்டுக் கொண்டாள் ஆனாலும் அந்த குறுகுறுப்பு அடங்கவில்லை.

ஒரு பத்து நிமிடங்களில் அறையை விட்டு வெளியே வந்தான்.

குளித்திருப்பான் போல் வேறு உடையில் தான் இருந்தான்.

நேராக டைனிங் டேபளை நெருங்கியவன் கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

தட்டை எடுத்து தனக்கு பரிமாறினான்.

பின் அவளைப் பார்த்து.

“காலைல சாப்டியா”

“அது இல்ல”

தயங்கிக் கொண்டு அவள் கூற அவளை முறைத்தான்.

“உனக்கு ஒரு தடவ சொல்லிட்டேன் எனக்கு சாப்பாட்ட வேஸ்ட் பன்னா புடிக்காதுன்னு இனிமே இப்பிடி நடந்துக்க மாட்டேன்னு நினைக்குறேன்”

கட்டளையாக அவன் குரல் வர சம்மதமாக தலையசைத்தாள் அவள்.

“இப்போ வந்து சாப்டு”

எனக் கூற அவசரமாக டைனிங் டேபளை நெருங்கியவள்.

கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்து தட்டை எடுத்து தனக்கு பரிமாறினாள்.

அவள் தனது தட்டில் கையை வைத்ததும் தான் இவன் சாப்பிட ஆரம்பித்தான்.

நிதானமாக சாப்பிட இவளும் மெதுவாக சாப்பிட்டாள்.

“நீங்க குடிப்பிங்களா”

மெதுவான குரலில் தயங்கிக் கொண்டு  அவள் அவனிடம் கேட்க அவளை அழ்ந்து பார்த்தவன்.

“இல்லன்னு சொல்ல மாட்டேன்”

கூறி விட்டு அவன் சாப்பிட இவளுக்குத் தான் எதற்கு குடிக்க வேண்டும் இது மட்டும் மாமாவிற்கு தெரிந்தால் என்னவாகும் என ஆயிரத்தெட்டு எண்ணம் மனதில்.

ஆனால் வாயைத் திறந்து அவனிடம் கேட்க முடியாதே.

இதுவே சாதாரண கணவன் மனைவியாக இருந்தால் சண்டையிட்டு அவனைத் திருத்தியிருக்கலாம் ஆனால் இங்கு அப்பிடியில்லையே.

அவனிடம் பேசவே ஆயிரம் தடவை மனதுக்குள் பட்டிமன்றம் நடத்த வேண்டியதாக இருக்கிறது இதில் சண்டை வேறு.

அவனுடன் சண்டையிடுவது போல் நினைத்துப் பார்க்க சிரித்து விட்டாள்.

நினைக்கவே சிரிப்பாக இருந்தது.

இவளது மெல்லிய சிரிப்பு சத்தத்தில் தலையை தூக்கி அவன் இவளைப் பார்க்க இவள் தலையைக் குனித்து தட்டைப் பார்த்தாள்.

அவன் எதுவும் கூறாமல் சாப்பிட இவளும் சாப்பிட்டாள்.

சாப்பிட்டு முடிந்து அவன் எழும்ப இவளும் சாப்பிட்டு முடித்தாள்.

இவன் வரவேற்பறைக்கு வந்து ஸோபாவில் அமர அவள் சமயலறைக்குள் நுழைந்து பாத்திரங்களை கழுவினாள்.

“யாரு வந்தாங்க”

அங்கிருந்த ரசகுல்லா இருந்த பொக்ஸை பார்த்து அவன் அவளிடம் கேட்டான்.

“அது முன் வீட்டுல இருக்குற தேவிப்பிரியா தான்”

தயங்கிக் கொண்டு அவன் எங்கே திட்டி விடுவானோ எனப் பயந்துக் கொண்டுக் கூற  அவன் எதுவும் பேசவில்லை.

அவனது அமைதியே தேவிப்பிரியாவுடன் இவள் பழகுவதற்கு தடையில்லை என்பதை எடுத்துக் கூற மனமகிழ்ந்தாள்.

இவளது தனிமைக்கு கிடைத்த இனிமையான நட்பு அவள் தானே.

ஏனோ அவளது கள்ளங்கபடமற்ற சிரிப்பும் குத்தலற்ற பேச்சுமே இவளுக்கு ஆறுதல் அளித்தது.

“நாலு மணிக்கு ரெடியா இரு வெளில போகனும்”

அவன் கூறி விட்டு எழுந்து அறைக்குள் செல்ல.

“எங்க போகனும்”

எனக் கேட்க நினைத்த கேள்வி மனதுக்குள் மறைந்து போனது.

********

தொடரும்..❤

 

💜அஷு💜

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top