அத்தியாயம் 07
அவன் காரை செலுத்த இவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்
ஆனால் அவளது மனமோ
“எதுக்கு எனக்கு இவ்ளோ துணிமனி”
மனதளவில் அவள் அவளிடமே கேட்டுக் கொண்டாள்.
சிறிது நேரம் சென்றிருக்க வண்டியை ஓரிடத்தில் நிறுத்தினான்.
நிறுத்தி விட்டு திரும்பி இவளைப் பார்த்தான்.
“வண்டிலயே இரு வந்துட்றேன்”
கூறி விட்டு அவளது பதிலைக் கூட எதிர்ப்பார்க்காமல் இறங்கிச் சென்றான்.
இவள் தான் எங்கு வண்டிய நிறுத்தியுள்ளார் எனப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பத்து நிமிடங்கள் கழிய உள்ளே வந்தமர்ந்தான்.
இவள் அவனைக் கேள்வியாகப் பார்க்க அவனோ இவளைப் பார்க்காமலே வண்டியை செலுத்தினான்.
பின் சிறிது நேரத்தில் அவர்களது வீடு அமைந்திருக்கும் அப்பார்ட்மென்ட்டை வந்தடைந்தனர்.
வழமை போல் அவன் முதலில் இறங்கி அவள் இறங்குவதற்கும் வண்டியை திறந்து விட்டான்.
பின்னிருக்கையில் உள்ள ஆடைப்பைகளை எடுத்துக் கொண்டு நிதானமாக அவளுடன் நடந்துச் சென்றான்.
அவர்களது தளத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது அவர்களுக்கு மறுபக்கத்திலிருந்து வந்தான் அவர்களது முன் வீட்டில் இருப்பவன்
இவர்களைப் பார்த்தும் அவனது நடை குறைந்தது.
அக்ஷரனைப் பார்க்க அவனும் முன்னால் இருப்பவனை முறைத்துப் பார்த்தான்.
அவனும் இவனை முறைத்தான்.
இவளுக்குத் தான் இருவருக்குமிடையில் என்ன பிரச்சினை என்று தெரியாமல் விழிக்கும் நிலைமை.
அவனோ அக்ஷரனை முறைத்துக் கொண்டு இவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு செல்ல இவள் அவசரமாகத் திரும்பி கணவனைப் பார்க்க அவனது முகமோ இறுகிப் போய் இருந்தது.
புன்னகைப்பவனைப் பார்த்து புன்னகைக்க முடியவில்லை.
கணவனது முறைப்புக்கு முன்னால்.
அவன் அமைதியாக சென்று வீட்டைத் திறக்க இவளும் பின்னால் சென்றாள்.
உள்ளே நுழைந்தவன் ஆடைப்பையை இவளிடம் நீட்ட தயக்கமாக வாங்கிக் கொண்டாள்.
“நன்றி”
அவள் கூற அவளை அழுத்தமாகப் பார்த்தவன்.
“இது என்னோட கடம”
கூறி விட்டு உள்ளே செல்ல இவளுக்குத் தான் என்னவோ போல் ஆகியது.
மனம் வேறு எதையோ எதிர்ப்பார்த்தோ என்னவோ??
ஆடைப் பையைவைத்து விட்டு முகத்தை கழுவிக் கொண்டு வெளியே வந்தாள்.
அவன் ஹாலில் அமர்ந்து ஃபோன் பார்த்துக் கொண்டிருக்க அங்கு வந்து நின்று கொண்டிருந்தாள்.
இரண்டு நொடிகள் தலையைக் குனித்து ஃபோனைப் பார்த்துக் கொண்டிருந்தவன்.
நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
அவளோ அவனைப் பார்க்காமல் வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனின் பார்வையை உணர்ந்ததாலோ என்னவோ??
எழுந்து அவளிடம் நெருங்கி வர இவளுக்கு பக்கென்றாகியது.
“ஐயோ இப்போ எதுக்கு கிட்ட வாராங்க”
மனதுக்குள் அலறியவள் வெளியே திரு திருவென விழித்தாள்.
வந்தவன் அவளைப் பார்த்துக் கொண்டே நெருங்கி வர இவள் பின்னால் நகர்ந்தாள்.
இவளது விழியோடு அவனது விழியைக் கலக்க விட்டு எதையோ அவளுக்கு உணர்த்த அப்பார்வையின் அர்த்தம் அறியாமல் பாவம் பாவையவள் குழம்பிப் போய் தலையைக் குனித்துக் கொண்டாள்.
இரண்டு நிமிடங்கள் அவன் அவ்வாறே இருக்க இவளும் தலையைக் குனித்துக் கொண்டிருந்தாள்.
“இந்தா”
அவனது குரலில் தலையை நிமிர்த்தி பார்த்தாள்.
அவனது கையில் இருந்தது ஒரு சிறிய பெட்டி.
அதை இவளிடம் நீட்ட இவள் அதை வாங்காமல் அவனைப் பார்த்து விழித்தாள்.
“என்ன எப்போ பார்த்தாலும் சின்ன பசங்க மாதிரி முழிச்சிட்டிருக்க இத வாங்கு”
கட்டளையிட அவனது கடுமையான குரலில் அவசரமாக அந்த பெட்டியைக் கையில் எடுத்தாள்.
“பிரிச்சிப் பாரு”
அதற்கும் கட்டளையாகக் கூற அவசர அவசரமாகப் பிரித்தவளது விழிகளோ விரிந்தது ஆச்சரியத்தில்.
அது அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வளையல் செட்.
இவள் அதைக் கையில் எடுத்து சுற்றி சுற்றி ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஏனெனில் அவளுக்குத் தான் வளையல்கள் என்றால் கொள்ளைப் பிரியம் ஆயிற்றே..!!
அதை அவளது கையில் இருந்து எடுத்தவன் தானே அவளுக்கு சிறு பிள்ளைக்கு போட்டு விடுவது போல் பொறுமையாக மிக நிதானமாக ஒவ்வொரு வளையலாகப் போட்டு விட அவளுக்குத் தான் அதிர்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை.
அவன் வளையல்கள் வாங்கிக் கொடுத்தது ஒருபுறம் அதிர்ச்சியைக் கொடுத்தது என்றால் அவனே அவளுக்குப் போட்டு விடுவது மறுபறம் அதிர்ச்சியைக் கொடுத்தது.
அவனோ அவளது முகத்தைப் பார்க்கவில்லை கண்ணும் கருத்துமாக வளையல்களை அணிவித்துக் கொண்டிருக்க இவளுக்குத் தான் அவஸ்தையாகியது.
கையை அவனிடம் இருந்து எடுக்கப் பார்க்க அவனோ அழுத்தமாக கையைப் பிடித்துக் கொண்டே வளையல்களைப் போட்டு விட்டு அவளது முகத்தைப் பார்த்தான்.
“அது நன்றி… உங்களுக்கெப்டி தெரியும் எனக்கு வளையல்ன்னா புடிக்கும்ன்னு”
தயக்கமாக் கேட்டாலும் குரலில் இருந்த ஆர்வத்தை அவளால் மறைக்க முடியவில்லை
“உனக்கு புடிக்குதா இல்லையான்னு எனக்குத் தெரியல ஆனா என் வீட்டுல என்னோட பொண்டாட்டியா இருக்குறப்போ இப்பிடி மொட்டையா இருக்கக் கூடாது அதுக்காகத் தான் வாங்கிக் கொடுத்தேன்”
அழுத்தம் திருத்தமாக அவன் கூற சோகமாக தலையசைத்தாள்.
“ஹ்ம்ம்”
ஆனாலும் மனதில் அவன் தனக்கு வாங்கிக் கொடுத்த அனைத்திலும் இந்த வளையல்களே முன்னின்றது.
அவன் வாங்கிக் கொடுத்திருந்த ஃபோனை அவளது கையில் கொடுத்தான்.
“ஃபோன கண்ட எடத்துல போட்டு வைக்காதே”
அதையும் கடுமையாகக் கூற அதற்கும் ஒரு தலையசைப்பே அவளிடமிருந்து.
“எங்க நா ஃபோன் யூஸ் பன்னுற முறைய சொல்லிக்கொடுத்தெல்லாத்தையும் திரும்ப சொல்லு”
மார்புக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக் கொண்டு வாத்தியார் போல் அவன் கேட்க முதலில் விழித்தவள் அவனது பார்வையில் அவன் சொல்லிக் கொடுத்த விஷயங்களை அச்சுப்பிசகாமல் அழகாகக் கூற இவன் தலையசைத்தான்.
“குட்”
கூறி விட்டு சமயலறைக்குள் நுழைய இவளோ தனது கையில் வீற்றிருக்கும் வளையல்களை ஆசையாக வருடிக் கொடுத்தாள்.
வெள்ளை நிறக் கையல்ல ஆனாலும் அவ்வளையல்கள் அவளது கையில் இருக்கும் போது மிக அழகாக இருந்தது.
அத்துடன் கையில் இருந்த ஃபோனில் சேமிக்கப்பட்டுள்ள தேவகியின் எண்ணுக்கு அழைத்தாள் சந்தோஷமாக.
ஓரிரண்டு ரிங்க்ஸ்க்குப் பின்னால் அழைப்பு ஏற்கப்பட்டது.
“ஹெலோ யாரு”
மறுபக்கத்தில் தேவகிக் கேட்க அவரது குரலைக் கேட்டதும் இவளுக்கு கண்கள் கலங்கியது அனுமதியின்றி.
“அத்த நான் தான்”
கலங்கிய குரலில்க் கூறினாள்.
“அம்மாடி நேத்ரா எப்பிடி ராசாத்தி இருக்க”
அவரும் கண்ணீருடன் பேசுவதை உறுதிப்படுத்தியது அவரது கலங்கிய குரல்.
“நா நல்லா இருக்கேன் அத்த நீங்க எப்பிடி இருக்கிங்க மாமா எப்பிடி இருக்காரு”
“நாங்க நல்லா இருக்கோம்மா அவன் எங்க உன்ன நல்லா பார்த்துக்குறானா”
தாயாக மாறி கேட்டார் தேவி.
“ம்ம் ஆமா அத்த இன்னைக்கு கூட்டிட்டுப் போய் துணிமனியெல்லாம் வாங்கி கொடுத்தாரு அதோட புது ஃபோனும் வாங்கித் தந்தாரு அதுல இருந்து தான் உங்கள கூப்டிருக்கேன்”
“சரிம்மா எப்டியோ ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா போதும் அத தான் நா முருகன்கிட்ட வேண்டிக்குறேன்”
“நா ரொம்ப நல்லா இருக்கேன் அத்த”
“சரிம்மா சாப்டிங்களா ரெண்டு பேரும்”
“இன்னும் இல்ல அத்த அதோட எனக்குத் தான் சமைக்கத் தெரியாதே அவங்க தான் சமைக்குறாங்க”
தயக்கமாகக் கூறினாள்.
“சரிடா அவனுக்கு வெளிசாப்பாடு வயித்துக்கு ஒத்துக்காது அதான் அவனே சமைக்குறான் நீ பொறுமையா சமைக்க கத்துக்கிட்டா போதும் எதாச்சும் தேவைன்னா எனக்கு ஃபோன் போட்டுக் கேளு நீயா தனிய எதுவும் செய்யாதே யாபகம் இருக்கு தானே உனக்கு பதினாலு வயசுல நீ சுடு தண்ணி வைக்குறேன் சொல்லி அத மேல கொட்டிக்கிட்டு ஜொரம் வந்து படுத்த அதுல இருந்து உன்ன சமையல்க்கட்டு பக்கம் அனுப்பக்கூடாதுன்னு சொல்லி தான் உனக்கு சமையல் கத்துக் கொடுக்கல்ல சரி விடு ராசாத்தி அதான் அவன் சமைக்குறானே நீ பொறுமையா சமைக்கக் கத்துக்கிட்டா போதும் நானும் மாமாவும் முடியும்ன்னா அடுத்த வாரம் வாரோம்”
“சரிங்க அத்த மாமாகிட்டயும் சொல்லிடுங்க நா நல்லா தான் இருக்கேன்னு”
“சரிம்மா அப்போ நா வைக்குறேன் எதாச்சும்ன்னா ஃபோன் போடும்மா”
“சரிங்க அத்த”
எனக் கூறி அழைப்பை துண்டித்தவளது மனம் சற்று இலகுவானது போல் உணர்ந்தாள்.
மனதுக்கு நெருக்கமான உறவுடன் ஒரு சில நொடிகள் பேசினாலும் மனதில் இருக்கும் பாரம் அனைத்தும் இறங்கி விடுவது மறுக்க முடியாத உண்மை அல்லவா??
முகம் தெளிவடைந்திருக்க உதட்டிலும் சிறு புன்னகை குடி கொண்டிருந்தது.
அதே புன்னகையுடன் திரும்ப அங்கே பேன்ட் போக்கெட்டில் கைகளை விட்டபடி அவளையே விழியகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அக்ஷரன்.
அவனைப் பார்த்ததும் புன்னகை இதழில் இருந்தாலும் தலையைக் குனித்துக் கொண்டாள்.
அவனது பார்வை வேறு உடலை சிலிர்க்க வைத்தது.
“தோச சுட்டிருக்கேன் வந்து சாப்டு”
கூறி விட்டு அவன் சென்று அமர இவளும் அமைதியாக அவனுக்குப் பக்கத்தில் சென்றமர்ந்து சாப்பிட்டாள்.
இருவரும் எப்பொழுதும் போல் எதுவும் பேசவில்லை மௌனமே ஆட்சிப் புரிந்தது.
நிதானமாக அவன் சாப்பிட வழமை போல் இவள் முதலில் சாப்பிட்டு விட்டு எழுந்து சென்றாள்.
அவள் தட்டைக் கழுவி விட்டு வெளியே வர அவனும் சாப்பிட்டு விட்டு எழுந்தான்.
அவனது தட்டையும் எடுத்துச் சென்று கழுவிவிட்டு அனைத்தையும் அப்புறப்படுத்தி சுத்தப்படுத்தினாள்.
பின் வெளியே வர அவன் வரவேற்பறையில் இருக்கவில்லை
அறையில் எரிந்த விளக்கு உறுதிப்படுத்தியது அவன் அறைக்குள் இருப்பதை.
“எங்க போய் தூங்கனும் தனியா படுக்க முடியாதே”
நினைத்துக் கொண்டு கைகளைப் பிசைந்தாள்.
இவள் இவ்வாறு நினைத்துக் கொண்டு நின்று கொண்டிருக்க அறைக்குள் இருந்து வெளியே வந்தான் அக்ஷரன்.
“போய் படு நா ஃபோன் பேசிட்டு வாரேன்”
அவளது தயக்கத்தை தகர்த்தான் அவன்.
அவனது வார்த்தைக்கு கட்டுப்பட்டு தலையாட்டியவள் உள்ளே நுழைந்தாள்.
நேற்று போல் அந்த போர்வையையும் தலையணையையும் எடுத்தவள் கீழேப் போட்டு படுத்தாள்.
கண்களை மூடியதும் ஏதோ சில உருவங்கள் கண் முன்னே நிழலாட இன்னும் இறுக மூடினாள் கண்களை.
இருந்தும் முடியாமல் கண்களில் இருந்து கண்ணீர் கோடுகள் கன்னத்தில் வழிய எழுந்தமர்ந்தாள்.
புறங்கையால் கண்ணீரைத் துடைத்து விட்டாள்.
என்ன செய்வதென்று தெரியவில்லை.
அவன் அருகில் இருக்கும் போது வராத அநாவசிய நினைவுகள் அவன் தூரமாகிப் போனதும் அழையா விருந்தாளியாக வருவதை என்ன செய்தால் தகும்..??
பின் மீண்டும் படுத்தவள் இம்முறை விழிகளை மூடவில்லை.
ஒரு இரண்டு நிமிடங்கள் போய் இருக்கும் உள்ளே வந்தான் அவளது கணவன்.
அவன் வரும் சத்தத்தை உணர்ந்து அவசரமாக கண்களை மூடி தூங்குவது போல் பாசாங்கு செய்தாள்.
இருந்து அசைகின்ற கருமணிகள் உணர்த்தியது அவள் இன்னும் உறங்கவில்லை என்று.
அவன் அவளை ஒரு இரண்டு நொடிகள் பார்த்து விட்டு பெருமூச்சொன்றை விட்டு சென்று படுத்தான் கட்டிலில்.
அவளறியாமல் நித்திரா தேவி வந்து அவளை ஆழ ஆழமான தூக்கத்திற்குச் சென்றாள்.
மறுநாள்காலை வழமை போல் குருவிகளது கீச்சிடும் சத்தத்திற்கு விழிப்பு தட்டியது நேத்ராவிற்கு.
கடினப்பட்டு கண்களைத் திறந்து பார்த்தாள்.
அறை இருட்டாக இருந்தது எழுந்து சென்று திரைச்சேலையை விலக்கி விட்டு கட்டிலைப் பார்க்க அவன் இருக்கவில்லை.
பின் சென்று முகத்தைக் கழுவிக் கொண்டு வந்து வெளியே வரவும் அவன் வீட்டினுள் வரவும் சரியாக இருந்தது.
அவன் சமயலறைக்குள் நுழையப் போக.
“நா காஃபி போட்றேன்”
அவள் கூற தோளை குளுக்கியவன் அறைக்குள் நுழைந்தான்.
இவள் அவசரமாக இருவருக்கும் காஃபி போட்டாள்.
ஒரு பத்து நிமிடங்கள் கழிய வெளியே வந்தான்.
கையில் ஏதோ பத்திரம் போல் இருந்தது.
இவள் சென்று காஃபியை அவனிடம் நீட்ட அதைப் பெற்றுக் கொண்டு ஸோபாவில் அமர்ந்தான்
இவளும் ஸோபாவில் அமர்ந்து காஃபியை ஒரு மிடர் அருந்த அவன் கூறியதில் குடித்த காஃபி புரையேறியது
இருமிக் கொண்டே கண்களிலிருந்து கண்ணீர் வழிய அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்.
அவனோ எந்தவித சலனமுமின்றி நிதானமாக அவளைப் பார்த்தான்.
“என்…ன சொ..ன்னி..ங்க”
வார்த்தைகள் திணறியது.
“நா சொன்னது உனக்கு நல்லா கேட்டுச்சின்னு எனக்குத் தெரியும் இன்னொரு தடவ என்னோட வாயால கேக்கனும்ன்னா நோ ப்ரொப்ளம் சொல்றேன்”
எனக் கூறி தோளை குளுக்கியவன்.
“எனக்கு விவாகரத்து பத்திரத்துல சைன் பண்ணிக் கொடு”
தனது கையில் இருந்த பத்திரத்தை அவளிடம் நீட்ட தனது காதில் விழுந்த வார்த்தைகள் பொய்யில்லை என எண்ணியவள் கண்ணீருடன் அவனைப் பார்த்தாள்.
காரிகையவளது கண்ணீர் காளையவனை கரைக்கவில்லை போல்..??
*********
❤தொடரும்❤
💜அஷு💜