மதுரியா ஒரு மாதிரி சுதாரிச்சு, தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு ஹாஸ்பிடல்லே இருந்து கிளம்பி வீட்டுக்குப் போனா. அவ வீட்டுக்கு உள்ளே நுழையும் போது பாட்டியைத் தவிர மத்த எல்லாரும் அவ வருகைக்காகத் தான் காத்திருந்தாங்க. “வாடா, ரியா”-னு கூப்பிட்டார் நித்தயவாசன். “ம்ம்ம்… பாட்டி எங்கே?”-னு கேட்டா மதுரியா. “டயர்டா இருக்கு-னு படுத்துட்டிருக்காங்க. ரிப்போர்ட் என்னாச்சு ரியா?”னு கேட்டாங்க சுபத்ரா. “சொல்றேன் மா… முதல்லே ஃப்ரெஷ் ஆகி வர்றேன். ஒரு காஃபி மட்டும்.. டிபன் வேண்டாம்.. அப்புறம் எல்லாரும் கொஞ்சம் டைனிங் ஹாலுக்கு வாங்க. பேசணும்”-னு சொல்லிட்டு போனா மதுரியா. அவ பேச்சுலே இருந்து யாருக்கும் எதையும் யோசிக்க முடியலே. “என்னப்பா இது? இன்னும் ஏதாவது டெஸ்ட் ரிசல்ட் வரலியா?”-னு கேட்டா ஆனந்தியா. “இருக்கலாம்டா… அவளும் மனசளவுலே ஒடிஞ்சிருக்கறதனால, உடம்பும் சீக்கிரம் டயர்டாயிடுது போல இருக்கு. சரி ஆயிடுவா”-னு சொன்னார் நித்தியவாசன். “சுபா, சின்னவளுக்கு சூடா காஃபி போட்டு கொஞ்சம் டிபனும் கொண்டு வா. பசியே பாதி அசதி”-னு சொன்னார் நித்தியானந்தம்.
மதுரியா குளிச்சுட்டு நைட்டி சகிதம் வந்து உட்காரவும், “என்னம்மா காஃபி மட்டும் போதும்னு சொன்னேனே?”னு சலிப்போட கேட்டா மதுரியா. “அரைக் கை உப்புமா சாப்பிட முடியாதாம்மா உன்னால?”-னு கேட்டார் நித்தியானந்தம். “ம்ம்ம்… பாட்டி ரிப்போர்ட்”-னு ஆரம்பிச்சவளை, “முதல்லே சாப்பிடு. அப்புறம் பேசலாம்”-னு சொல்லிட்டார். அவ சாப்பிட்டதும், “இப்போ சொல்லுடா”-னு கேட்டார் நித்தியவாசன். “இதுதான் பாட்டியோட ரிப்போர்ட். நான் சொல்ல போறதை எமோஷனலா கேட்காம கொஞ்சம் அப்ஜெக்டிவ்வா கேளுங்க. பாட்டிக்கு சி.ஹெச்.டி – கொரோனரி ஹார்ட் டிசீஸ். பரணி அங்கிள் எல்லா டெஸ்டும் எடுத்து கன்ஃபர்ம் பண்ணிட்டார். அது மட்டுமில்லே… கார்டியாலஜிஸ்ட் அப்பாயிண்ட்மெண்டும் வாங்கிட்டார்”-னு சொன்னா மதுரியா. எல்லாரும் கொஞ்சம் பயந்து தான் போயிட்டாங்க. “ரியா, புரியற மாதிரி சொல்லு, சி.ஹெச்.டி-ன்னா என்ன?”னு கேட்டா ஆனந்தியா. “அக்கா, இதயத்துக்கு போற ரத்தக்குழாய் எல்லாம் சுருங்கி போயிருக்கு… அதனால போற ரத்த ஓட்டம் தடைப்படுது… ஆக்ஸிஜன், ரத்தம் எல்லாம் மூளைக்கு கம்மியா போகிறதால தலை சுத்துது. மூச்சுத் திணறல் வருது”-னு விளக்கமா சொன்னா மதுரியா.
“ஆனா ரியா, அம்மா நல்லா இருந்தாங்களே? ரொம்ப பார்த்துத்தான் சாப்பிடுவாங்க… நடை, வேலைன்னு சுறுசுறுப்பா இருக்கறவங்க.. இவங்களுக்கு எப்படி?”-னு கலங்கிப் போயிக் கேட்டாங்க சுபத்ரா. “அம்மா, அப்படியில்லை… சுருக்கத்துக்கு நிறைய காரணங்கள் இருக்கு.. கொழுப்பு படியலாம்.. சர்க்கரை படியலாம்.. குழாய் சுவரே வீங்கிடலாம். சதை வளர்ந்து மூட முயற்சி பண்ணலாம். இப்படி நிறைய காரணங்கள் இருக்கு. இதுக்கெல்லாம் மேலே, வயசும் ஒரு காரணமா இருக்கலாம். பரணி அங்கிளும் இது ஜெரியாடிரிக் சி.ஹெச்.டி-னு (Geriatric CHD – வயோதிகக் காரணமா வர்ற இருதய நோய்) தான் சந்தேகப் படறாரு. அதோட பாட்டிக்கு பன்னிரண்டு வருஷமா டயாபடிஸ் இருக்கு. எல்லாமும் தான் காரணமா இருக்க முடியும்… மத்தபடி உடம்புலே வியாதி ஏன் எப்படி வந்துச்சு-னு யாரால சொல்ல முடியும்?”-னு கேட்டா மதுரியா. “ஏன் குட்டிம்மா இதுக்கு டிரீட்மெண்ட் இல்லையா? வல்லி இப்படியே கஷ்டப்படணுமா?”-னு கேட்டார் நித்தியானந்தம். “டிரீட்மெண்டை பத்தி கேட்கத்தான் நாளைக்கு டாக்டர்.ஆகாஷை பார்க்கப் போறோம் தாத்தா”-னு அவர் கையை பிடிச்சு சொன்னா மதுரியா. “ஏண்டா ரியா? ஆபரேஷன் செய்யலாம் இல்லே? ஸ்டெண்ட் வைக்கறது-னு சொல்லுவாங்களே?”-னு கேட்டார் நித்தியவாசன். “ஆமாப்பா.. நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு. ஆனா பாட்டியோட ரிப்போர்ட்டை பார்த்துட்டு கார்டியாலஜிஸ்டே சொல்லட்டும். ஒரு வேளை மருந்தே போதும்-னு கூட சொல்லலாம். அதோட பாட்டி ஒரு மாசத்துக்கு நாலு விரதம் இருக்காங்க. அதெல்லாம் மொத்தமா நிறுத்தி உடம்பை தேத்தினா தான் கத்தி வைக்க முடியும்”-னு சொன்னா மதுரியா. “சொன்னா எங்கே கேட்கிறா.. அவ பிடிவாதம் எங்கே கொண்டு வந்து விட்டிருக்கு பாரு?”-னு வருத்தமா சொன்னார் நித்தியானந்தம்.
அப்புறம் கொஞ்ச நேரம் அமைதி. “அப்பா, பாட்டிகிட்ட நம்ம யாரும் எதுவும் சொல்ல வேண்டாம். டாக்டரே சொல்லட்டும்”-னு சொன்னா மதுரியா. எல்லாருக்கும் அது சரின்னு படவும் ஒத்துக்கிட்டாங்க. அன்னிக்கு ராத்திரி நிறைய கவலைகள். வருத்தங்கள், பிரார்த்தனைகள்-னு முடிஞ்சுது எல்லாருக்கும்.
அடுத்த நாள் காலையிலே எல்லாரும் சேர்ந்து கார்டியாலஜிஸ்ட் பார்க்க ஹாஸ்பிடலுக்கு கிளம்பினாங்க. டாக்டர்.ஆகாஷை பார்க்க பாட்டி, தாத்தா, அப்பா கூட மதுரியாவும் உள்ளே போனா. டாக்டர் ஆகாஷுக்கு ஒரு 40 வயசு இருக்கும். கனிவும் தீர்க்கமும் சேர்ந்த ஒரு கார்டியாலஜிஸ்ட். இன்னும் சில டெஸ்ட் எடுக்க சொன்னார். “அதெல்லாம் ப்ளாக்கோட அளவை கணிக்கறதுக்கு”-னு சொன்னார். மதுரியா பாட்டியை கூட்டிட்டு போய் எல்லா டெஸ்டும் பொறுமையா எடுத்துட்டு கூட்டி வந்தா. ரிசல்ட் எல்லாம் வந்ததும் மறுபடி டாக்டர்.ஆகாஷ் முன்னாடி உட்கார்ந்தாங்க. டாக்டர் ஆகாஷ் எந்த கலக்கமும் இல்லாம கலகலனு பேசினார். இதெல்லாம் ஒரு விஷயமே இல்லேங்கற மாதிரி பேசினார்னே சொல்லலாம். “நீங்க தான் பரணி சொன்ன டாக்டர்.ரியாவா?”-னு மதுரியாவை பார்த்து கேட்டார். அவ திகைச்சு, “ஆ… ஆமா..”னு தடுமாறவும், “ரிலேக்ஸ், நீங்கக் குடுத்தக் குறிப்போட தான் ஃபைல் வந்துச்சு”னு ஸ்மைல் பண்ணார் ஆகாஷ். “குட் ஜாப். கார்டியாலஜியா படிக்கிறீங்க?”-னு கேசுவலா கேட்டார். “இல்லே சார், பிஜி இப்போ தான் சேரப் போறேன்”னு எந்த ரியேக்ஷனும் இல்லாம பதில் சொன்னா.
“ஓகே… ஓகே… நான் மிஸஸ்.கற்பகவல்லியோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் பார்த்தேன். பரணி சொன்னது போல இது சி.ஹெச்.டி தான். அவங்களுக்கு பெரிஃபெரல் ஆர்ட்டெரியிலே, அதாவது இருதயத்துக்கு அடுத்த சுத்துல இருக்கிற ரத்தக் குழாயை பெரிஃபெரல் ஆர்ட்டெரின்னு சொல்லுவாங்க. அதுல தான் ப்ளாக் இருக்கு. 25-30% ப்ளாக். லைஃப் திரெடனிங்கா ஒண்ணும் இல்லே. ஆனா இனிமே கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்கணும். ரெகுலரா மெடிசின்ஸ் சாப்பிடணும். டைமுக்கு சாப்பிடணும். உப்பு, எண்ணெய், சர்க்கரை சுத்தமா குறைக்கணும். சிரமமான வேலைகள எதுவும் செய்யக் கூடாது. சொல்லப் போனா அவங்க தன்னை களைப்பாக்காம இருக்கறது பெட்டர். இப்போதைக்கு மெடிசின்ஸ் 15 நாளைக்கு தர்றேன். எப்படி பொருந்துது-னு பார்த்துட்டு அடுத்து ஒரு மாசத்துக்கு ஸ்டார்ட் பண்ணலாம்”-னு நீளமா பேசி முடிச்சார். “டாக்டர் சர்ஜரி எதுவும் பண்ணனுமா?”-னு கேட்டார் நித்தியவாசன். “அதுக்கு இப்போ அவசியமில்லே. 30% ப்ளாக்குக்கு சர்ஜரி பண்ண வேண்டாம். அதோட அவங்க வயசும் அவங்க உடல்நிலையும் வைச்சு பார்க்கும் போது சர்ஜரி இப்போ ரொம்ப கஷ்டம். ஒன் மோர் திங். அவங்களுக்கு இனிமே எங்கேயும் அடிபடாம பார்த்துக்கோங்க. ரத்தம் அவ்வளோ சீக்கிரம் உறையாது. மத்தபடி நார்மல் லைஃப் தான்”-னு ஸ்மைல் பண்ணார் டாக்டர் ஆகாஷ்.
“அப்பாடி! கோயிலுக்கு போகலாம், விரதம் இருக்கலாம்”னு கற்பகவல்லி இன்னோஸெண்டா சொல்லவும், “ஓஓ… தாராளமா போகலாம். கூட்டம் இல்லாத கோயிலுக்கு.. நார்மலா இருக்கலாம்மா.. உங்களை நீங்களே டயர்டாக்கிக்காதீங்க. அவ்வளோ தான். உப்பு, ஒறப்பு கம்மி பண்ணி சாப்பிடறதே தினமும் விரதம் தானே? தனியா விரதம் எதுக்கு?”-னு சிரிச்சுட்டே சொன்னார். எல்லாம் முடிஞ்சு கிளம்பினாங்க. தாத்தாவும் பாட்டியும் வெளியே போனதும், “மிஸ் ரியா… ஒரு நிமிஷம். இது ஆஞ்ஜினா (மூச்சுத் திணறல், தலை சுத்து) வந்தா குடுக்க வேண்டிய டேப்ளெட்ஸ். ஒரு நாளைக்கு ஒண்ணு தான் மேக்சிமம் டோஸ். ஸோ… தேவைப்பட்டா அரை டேப்ளெட் குடுங்க. அதுக்கப்புறம் 4 – 5 ஹவர்ஸ் கழிச்சும் ரிலீஃப் கிடைக்கலேன்னா அட்மிட் பண்ணணும். இதை அவங்களை பார்த்துக்கறவங்க கையிலே வைச்சுக்க சொல்லுங்க. டேக் கேர்”-னு அனுப்பினார். ஆகாஷ், மதுரியா கிட்ட பேசறதை நித்தியவாசனும் கேட்டார்.
எல்லாரும் திரும்பி போகும் போது குழப்பமான மன நிலையிலே இருந்தாங்க. பெரிசா எதுவும் இல்லே-னு நிம்மதியா இருக்கறதா, இல்லே நல்லா இருந்தவங்களுக்கு இப்படி வந்துடுச்சே-னு வருத்தப்படறதா-னு தெரியலே. ஆனா கற்பகவல்லி ஒரு நாள் ரெஸ்ட்லே ஓரளவுக்கு பழைய நிலைக்கு வந்ததே நிம்மதியை குடுத்துச்சு எல்லாருக்கும். அந்த நாள் அதிக கலகலப்பு இல்லாம போச்சு. எல்லாரும் வற்புறுத்தி கற்பகவல்லியை சீக்கிரமே தூங்க அனுப்பினாங்க. அவங்க இல்லை-னு உறுதிப்படுத்திக்கிட்டு, “ரியாம்மா டாக்டர் ஏதோ மருந்து கொடுத்தாரே, என்ன அது?”ன்னு கேட்டார் நித்தியவாசன். “ம்ம்ம்… இதோ… வாங்கிட்டேன்பா”-னு ஒரு பழுப்பு கவரை குடுத்தா. “நான் சொல்றதை கவனமா கேளுங்க.. இந்த மருந்து எப்போவும் பாட்டி கூட யார் இருக்கீங்களோ அவங்க கிட்ட கண்டிப்பா இருக்கணும்… அவங்களுக்கு நெஞ்சு வலி, தலை சுத்து, மூச்சுத் திணறல் வந்தா, அரை மாத்திரை குடுங்க… சரியாகலேன்னா உடனடியா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும், புரியுதா? ஃபர்ஸ்ட் டைம் வந்ததுமே எனக்கு கால் பண்ணுங்க… நான் வந்திடறேன்”-னு சொன்னா மதுரியா.
மதுரியா எவ்வளோ தூரம் அங்கே இருக்கக்கூடாது-னு நினைச்சாளோ அதுக்கு நேர் எதிரா கடவுள் போக முடியாம முட்டுக் கட்டைப் போட்டார். “என்ன குட்டிம்மா சொல்றே? உன்னை கூப்பிடறதா?”-னு கேட்டார் நித்தியானந்தம். “ஆமா தாத்தா… நான் என் பிஜியை ஒரு வருஷம் தள்ளி வைக்கிறேன்… பாட்டியை இப்படி விட்டுட்டுப் போக முடியுமா?”-னு கேட்டா. “நல்லாச்சு போ.. அவ கிழவி… வயசாகுது.. ஏதோ ஒண்ணு வரும். அதுக்கு-னு உங்க படிப்பு வேலை எல்லாம் விட்டு போட்டு இருந்தா எங்க காலத்துக்கு அப்புறம் என்ன பண்ணுவீங்க?”-னு அழுத்தமாவே சொன்னார் நித்தியானந்தம். “நான் படிச்சுது உங்களுக்கே யூஸ் ஆகலேன்னா எப்படி தாத்தா?”-னு கேட்டா மதுரியா. “குட்டிம்மா, நீ எங்களுக்காகவா படிக்கறே? நீயே இப்படி பேசலாமாடா?”-னு கேட்டார் தாத்தா. “உங்களுக்காகவும் தான்”-னு கையை பிடிச்சு சொன்னா. “இப்போ என்ன.. வல்லியை பார்த்துக்கணும், அதானே? நீ அவசரத்துக்கு குடுத்து இருக்கற மருந்தே தேவைப்படாத அளவுக்கு நானும் சுபாவும் பார்த்துக்கறோம் போதுமா? 57 வருஷமா எனக்கு பொண்டாட்டி. நான் பார்த்துக்க மாட்டேனா? ம்ம்ம்?”-னு கேட்டு சிரிச்சார் நித்தியானந்தம்.
அதுக்கு அப்புறம் ரெண்டு நாள்லே எல்லாம் நார்மலுக்கு வந்துடுச்சு. தாத்தாவும் பாட்டியும் காலையிலே கோயிலுக்கு போற நடை, இப்போ ஆட்டோவா மாறுச்சு. சாப்பாட்டுலே கண்ணும் கருத்துமா இருந்தாங்க சுபத்ரா. கற்பகவல்லிக்கும் உடம்பு சுறுசுறுப்பானதும் சங்கடப்படாம பத்திய சாப்பாடு சாப்பிட்டாங்க. எல்லாம் சரியா இருந்தாலும் பரத் இன்னும் நிகேஷ் பிறந்த நாளை பத்தி யோசனையிலேயே இருந்தான். அன்னிக்கு ராத்திரி சாப்பிட்டு டிவி பார்க்க வந்தா மதுரியா. கொஞ்ச நேரத்துலே பாட்டி வரவும் அவங்க உட்கார இடம் குடுத்து எப்போவும் போல அவங்க காலடியிலே உட்காரவும் அலையடிக்கறாப் போல விதுரனோட நினைவுகள்… ஒரு நிலைக்கு மேலே தாள முடியாம மொபைல் நோண்டிக்கிட்டே எந்திரிச்சுப் போனா. எல்லாரும் போன் பேசப் போறா-ன்னு நினைச்சாங்க. ஆனா பரத்தும் ஆனந்தியாவும் அவளை பின் தொடர்ந்தாங்க. அவ அவளோட ரூமுக்கு போகாம மொட்டை மாடிக்கு போய், வானத்தை வெறிச்சுட்டு இருந்தவ தோள்லே விழுந்தது பரத்தோட கை. “பரத்தப்பா… நீங்க… இங்கே எப்படி?”-னு தடுமாறினா. “உன் பின்னாடிதான் வந்தோம் ரியா”-னு சொன்னா ஆனந்தியா. “ம்ம்ம்”னு திரும்பி வானத்தை வெறிச்சா.
“ஏன் ரியா இப்படி ஆயிட்டே? நீ தேறிட்டே-ன்னு நினைச்சோமேடி? தப்பா?”-னு ஆதங்கமா கேட்டா ஆனந்தியா. “பச்சை ரணமா நடந்தது எல்லாம் இன்னும் வலிக்குதுக்கா. இதுலே எங்கே போய் தேற முடியும்?”-னு கேட்கும் போது தன்னை மீறி கண்ணுலே தண்ணி வந்துச்சு மதுரியாவுக்கு. “ரியா..”ன்னு ஆனந்தியா அவ தோள்லே கை வைக்கவும், “அக்கா, வலிக்குதுக்கா. ரொம்ப வலிக்குது. அதுலேயும் அவங்க ரெண்டுப் பேரும் ஜோடியா இருக்கறதை பார்த்தா ரணமா வலிக்குது. என்னால முடியலே. இங்கேயே இருந்தா பைத்தியமாகி விடுவேனோ-னு பயமா இருக்கு. அதுதான் பிஜிக்கு வெளியே போக நினைச்சேன். ஆனா இப்போ பாட்டியை விட்டுட்டு எப்படிப் போக?ஏன்கா என் லைஃப்லே மட்டும் இவ்வளோ குழப்பம்?”-னு ஆனந்தியா தோள்லே சாய்ஞ்சு கதறிட்டா மதுரியா. ஆனந்தியா கண்ணுலே இருந்தும் தண்ணி வழிஞ்சுது. “போதுமா? இதுக்குத்தான் பர்த்டே பார்ட்டி வேண்டாம்-னு சொன்னேன். அவன் பார்ட்டிக்கே ஜோடியா வந்தாலும் தடுக்க முடியாது.. ரியா… புரிஞ்சுக்கோ”ன்னு சொன்னான் பரத்.
ஆனந்தியா தோள்லே இருந்து நிமிர்ந்த மதுரியா முகத்தை அழுந்த துடைச்சு, “சாரி, பரத்தப்பா… இந்த விஷயத்துக்காக நான் ஃபீல் பண்றது, அழறது, ஏன் யோசிக்கறது எல்லாம் இதுவே கடைசியா இருக்கும்… இவ்வளோ கண்ணீருக்கு எதுவுமே வர்த் இல்லே. நேசமே வாழ்க்கை இல்லை. அது ஒரு பகுதி தான். என் குடும்பம், என் கேரியர் தான் முக்கியம் எனக்கு. குடும்ப நண்பர்களா இருந்துட்டு இப்படி நேர்லே பார்க்கறப்போ எல்லாம் அழுதுட்டு இருப்பது சாத்தியமே இல்லை… வேலைக்கு ஆகாது”-னு தீர்க்கமா சொன்னா. “சொல்றது ஓகே… ஆனா செய்யறது கஷ்டம். வலிக்கும் ரியா”-னு சொன்னான் பரத். “கண்டிப்பா.. வலிதான். நம்ம நேசிச்ச ஒருத்தர் இன்னொருத்தரோட சேரும் போது, அதை பார்க்கும் போது, ரண வேதனை தான். ஆனா அதை ஜெயிக்கணும் பரத்தப்பா. நிமிர்ந்து நிக்கணும். நான் தயார் அதுக்கு”ன்னு தைரியமா சொன்னா. “சரி, ரியா. அதுக்கு பிறந்த நாள் கொண்டாட என்ன அவசியம்?”னு கேட்டா ஆனந்தியா.
“கொண்டாடணும்கா… பாட்டிக்காக.. பாட்டி இருக்கற நாள் சந்தோஷமா இருக்கணும்”-னு சொன்னா மதுரியா. “என்ன ரியா சொல்றே?”ன்னு பரத்தும் ஆனந்தியாவும் அதிர்ந்தாங்க. “ஆமா சி.ஹெச்.டி உயிருக்கு ஆபத்தான ஒண்ணு தான். ஆஞ்ஜினா(நெஞ்சு வலி) கொஞ்சம் பெரிசா வந்தா கையிலே வைச்சிருக்கற மருந்துக்கெல்லாம் கட்டுப்படாது. அது மட்டுமில்லே. நடமாட்டத்தை குறைக்கணும். அப்போ தான் இருதயத்து மேலே பளு விழாது. எல்லாத்துக்கும் மேலே ஆர்ட்டரி (ரத்தக் குழாய்) முழுசா மூடற அன்னிக்கு.. அன்னிக்குப் பாட்டி நம்ம கூட இருக்க மாட்டாங்க.. நாள் கணக்கு தான் அதுக்கு அப்புறம்… அந்த ஆண்டவனுக்கு மட்டுமே தெரிஞ்சக் கணக்கு”-னு வருத்தமா முடிச்சா.
ஆனந்தியா அழுது மதுரியாவை கட்டிப்பிடிச்சா. “ஏன் ரியா? ஏன் பாட்டிக்கு இப்படி ஆச்சு? 50 வயசுலே அவங்கக் காலை பறிகொடுத்தாங்க. 20 வருஷத்துக்கும் மேலே ப்ரோஸ்தெடிக்லே (செயற்கை கால்), க்ரட்ச் கூட இல்லாம எவ்வளோ கஷ்டப்பட்டு நார்மல் வாழ்கை வாழ்ந்தாங்க? அவங்களுக்கு மட்டும் ஏன் இப்படி உயிர் நிலையிலே அடி விழற மாதிரியே வருது ரியா?”-னு புலம்பினா. “அக்கா ப்ளீஸ்… தைரியமா இரு.. ஒண்ணும் ஆகாது. ஆகக்கூடாது.. விடமாட்டோம்”-னு முதுகைத் தடவி ஆறுதலா சொன்ன மதுரியா. “அதோட இப்படி அழுது பாட்டியோட நிலையை அவங்களுக்கே தெரிய வைக்காதேக்கா.. ப்ளீஸ்”-னு சொன்னா. “ரியா, ஆனா எவ்வளோ நாள் மறைக்க முடியும்?”-னு கேட்டான் பரத். “தெரியாது பரத்தப்பா… எனக்கு அவங்க நாலு பேரு நிம்மதி முக்கியம்-னு நான் சொல்லலே… டாக்டர் ஆகாஷ் சொன்ன விளக்கமும் அவங்களும் கேட்டுக்கலை. அதுவே ஈஸ்வரன் சித்தம்”-னு விட்டுட்டேன்-னு கண்ணுலே தண்ணியோட சொன்னா.
அந்த தண்ணியை ஒரு விரல்லே துடைச்சு அவ கன்னத்தை தட்டின பரத் ஒரு ஸ்மைலோட “எங்க ரியாகுட்டி எப்போ இவ்வளோ பெரிய பொண்ணு ஆனா-னு மலைப்பா இருக்கு. இல்லேடா தியா? எதுன்னாலும் படபடன்னு போட்டு உடைக்கற ரியாவுக்கும் இப்போ எதிர்லெ நிக்கற ரியாவுக்கும் மலையளவு வித்தியாசம்”-னு சொன்னான். “ஆனா எங்களுக்கு பழைய ரியாவைத்தான் பிடிக்கும். அப்படியே இரு ரியா”ன்னு சொன்னா ஆனந்தியா. “அதுக்கென்ன.. கொஞ்ச நாள்லே தேடிப் பிடிச்சுடலாம். அப்புறம் போ-னு நீங்களே சொன்னாலும் போக மாட்டா”னு மதுரியா சொல்லவும், மனசு லேசாகி மூணு பேருமே சிரிச்சாங்க.