நம்ம ரொம்ப நேரமா மதுரியாவோட வாழ்கையைதானே பார்த்தோம்? நம்ம ஹீரோவை கொஞ்சமே கொஞ்சம் பார்ப்போமா??
விதுரன்… ரெண்டு வாரம் முன்னாடி மதுரியாகிட்ட பிரிவைப் பத்தி பேசணும்-னு முடிவு பண்ணப்போ ஏதோ தூசியை உதறி விட்ட உணர்வுதான். ஆனா செம்மொழி பூங்காவுலே இருந்து புயலா மதுரியா வெளியே போனப்போ தான், ஏதோ காலியாகிற உணர்வு முதல் முதலா வந்துச்சு. ஆனா அது கூட சுவாதியோடான அவனோட அடுத்த அத்தியாயம் துவங்கற வரை தான். அடுத்த அத்தியாயம் ஆரம்பிச்ச உடனே அவனுக்கு எதுவுமே நினைப்புலே இல்லை. தான் என்ன சொன்னாலும் மண்டையை ஆட்டி, தான் சிரிச்சா சிரிச்சு, தான் திட்டினாலும் வாங்கிக்கிட்டு இருந்த சுவாதியை முதல்ல அவனுக்கு பிடிக்கிற மாதிரிதான் இருந்துச்சு. அவ கொஞ்சம் சுமாரா இருந்தாலும், அதிகம் படிக்கலேன்னாலும், வசதி கம்மியா இருந்தாலும் அவ தான் அவனுக்கு சரியானவ-னு நம்பினான். வேலை, ப்ராஜெக்ட், சுவாதி-னு சந்தோஷமா திரிஞ்சான். ஆனா என்ன பண்ணியும் மதுரியாவோட இடத்துல அவளை வைச்சுப் பார்க்க முடியலை அவனால. அந்த வீம்பு தான், ஒரு நாள் காஃபி ஷாப்புக்கு போனப்போ மதுரியாவைப் பார்த்தான். அவகிட்ட சுவாதியை காட்டி பெருமை பீத்திக்கணும்னும் அவ ஈகோவை உடைக்கணும்னும் நெருக்கமா இருக்கிற மாதிரி நடிச்சான். ஆனா மதுரியாவோட கலங்கின கண்ணும், வலியால வீங்கின முகமும் அவனை ரொம்ப பாதிச்சுடுச்சு.
அப்போ இருந்து மதுரியா அவனை ரொம்பத் தொந்திரவு பண்ண ஆரம்பிச்சா. அவனோட ஈகோ அதை ஒத்துக்க விடலே. ஆனா அதுக்கப்புறம் திரும்ப அவ நினைப்பு பின்னுக்குப் போயிடுச்சு. அதுக்குக் காரணம் அவனோட அதிகப்படியான வேலை. இதுக்கிடையே சுவாதியை ஒரு நாள் வீட்டுக்கு கூட்டிட்டு போனான் அவ நச்சரிப்புத் தாங்க முடியாதக் காரணத்துனால. சுவாதிக்கு இவன் இந்த அளவுக்கு வந்துட்டான்னா தன்னை விடமாட்டான்-னு ஒரு மிதப்புலே அவ இவ்வளோ நாள் கையாண்ட நடிப்பை கொஞ்சம் தளர்த்தினா. அவளோட அந்த மாற்றம் விதுரனை முகம் சுழிக்கத்தான் வைச்சுது. சுவாதி புத்திசாலித்தனமும் அழுத்தமும் இல்லாத ஆளுமையைக் காட்டினா. அது அவளை முட்டாளாத் தான் காட்டுச்சு-னு அவ புரிஞ்சுக்கவே இல்லே. அவளோட குண மாற்றம்தான் விதுரனை ஒவ்வொரு விஷயத்துலேயும் அவளை மதுரியாவோட ஓப்பிட்டுப் பார்க்க வைச்சுது. செய்யக்கூடாது-னு நினைச்சாலும் தன்னை மீறி செஞ்சான். இப்படி செஞ்சது, அவன் மனசுலே இது நட்பை தாண்டின எந்த ஒரு நிலையான உறவும் இல்லையோ-னு யோசனையை கிளப்பிச்சு. கொஞ்சம் நிதானிக்கணும்-னு முடிவும் பண்ணான்.
“பேபி… என்னை எப்போ உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்க?”-னு நச்சரிக்க ஆரம்பிச்சா சுவாதி. ஒரு நாள் அது தாங்காம கூட்டிட்டு போனான். தி நகர்லே ப்ரைம் ஸ்பாட்லே இவ்வளோ பெரிய வீடா-னு வாயை பிளந்தா சுவாதி. இவன் பணக்காரன்-னு தெரியும்.. ஆனா இவ்வளோ-னு நினைக்கலே. ம்ம்ம்… விக்னேஷ் மாதிரியே தான் போல.. பரவாயில்லே… நம்ம சேஃப் தான்.. சீக்கிரமே இதுங்களை எல்லாம் ஓட்டிட்டா இந்த பணம் பூரா நமக்குத்தான்-னு தயிர்க்காரி மாதிரி கனவு கண்டா சுவாதி. தனக்காக நிச்சயமான கல்யாணத்தையே நிறுத்தி இருக்கான். ஃபேமிலியை விரட்டறது சுலபம்-னு நினைச்சு தான் போனா.. வீட்டுக்குக் கூட்டிட்டு போனப்போ கிருத்திகா, சங்கரி, நீலவேணி யாருமே முகம் திருப்பலே. ரொம்ப இனிமையாத்தான் வரவேற்த்தாங்க. ஆனா அதே சமயம் நீ வெறும் விருந்தாளி, அதைத் தாண்டி வராதே-னு உணர்த்தவும் மறக்கலே. அது ஆணான விதுரனுக்கு புரியலே. ஆனா சுவாதிக்கு நல்லா புரிஞ்சுது. அதுவும் நீலவேணி வேடிக்கையா பேசறாப் போலவே சுவாதிக்கு மட்டும் புரியறாப் போல ஊமை குத்தாக் குத்தினாங்க. சுவாதி கொஞ்சம் கொந்தளிச்சுத்தான் போனா. விதுரனும் பாட்டி கூட சேர்ந்து சிரிக்கவும், இன்னும் காட்டமானா. எதுவும் புரியாத விதுரனுக்கு வீட்லே லேடீஸ் சுவாதியை அக்செப்ட் பண்ணதுலே சந்தோஷம்.
ஒரு மாதிரி எப்போடா கிளம்புவோம்-னு தவிச்சு, லேட் ஆகுதுனு கிளம்பிட்டா சுவாதி. அவளை டிராப் பண்ண போனான் விதுரன். “பேபி, என்ன? உங்க வீட்டுலே எல்லாரும் இப்படி பேசறாங்க? என்னை பிடிக்கலே-னு தெரியுது”-னு ஸ்டார்ட் பண்ணா. “எதை வைச்சு சொல்றே சுவாதி? இன்னிக்குத்தான் அவங்களை எல்லாம் முதல் தடவை பார்க்கறே”-னு யோசனையா கேட்டான். “உங்க அண்ணி எவ்வளோ கீழே பார்க்கறாங்க.. உங்க பாட்டியெல்லாம்.. அம்மாடீ.. எவ்வளோ திமிர்”-னு சொல்லவும் சர்னு கோபம் ஏறிடுச்சு விதுரனுக்கு. “ஸோ.. இப்போ அதுக்கு என்ன பண்ணலாம்கிறே?”-னு சுருக்னு கேட்டான். அவன் குரல் மாறவும், சுதாரிச்ச சுவாதி, அவன் தோள்லே கையை போட்டு, “என் மனசுலே பட்டதை சொன்னேன் பேபி. நம்மளோ கல்யாணம் ஆயிட்டு தனியா போகப் போறோம்… வை டு வொர்ரி”-னு கொஞ்சலா சொன்னா. அந்தோ பரிதாபம்!!! விதுரனுக்குப் பின்னாள்-ல ஆப்பு வைக்க வழிப் பண்ணா மாதிரி இந்த காட்சியைத்தான் பரத் பார்த்தான். அந்த மெயின் ரோட்லேயே வண்டியை ஓரம் கட்டி நிறுத்தினான் விதுரன். “சுவாதி, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீ இங்கேயிருந்து ஆட்டோவிலே போய்க்கோ”-னு சொன்னான்.
சுவாதி திகைச்சா. “பேபி… என்னாச்சு?”-னு ஸ்டார்ட் பண்றதுக்குள்ளே… “ஏய்.. வேலையிருக்குன்னு சொல்றேன். வளவள-னு பேசிட்டிருக்கே? இறங்கு முதல்ல. என்னம்மோ இவளோட கார் மாதிரி என்னை கேள்வி கேட்கிறா” சள்-னு விழுந்தான். பயந்து இறங்கிட்டா சுவாதி. “எடுத்த எடுப்புலே என் வீட்டைப் பத்தி பேசறா.. மது ஒரு நாள் கூட குறை சொன்னது இல்லையே? அவளுக்கு மட்டும் இவங்க கூட பர்ஃபெக்டாவா ஒத்துப் போயிருக்கும்?”-னு கடுப்புலே கார் அவன் கையிலே பறந்துச்சு. அதுக்கப்புறம் அந்த இன்சிடெண்டை பத்தி நினைக்க முடியாத அளவு வேலை. சுவாதி தான் பாவம். இவன் சமாதானம் பண்ண வருவான்-னு எதிர்பார்த்து ஏமாந்துப் போனா. போர்ட் மீட்டிங், க்ளையண்ட் மீட்டிங், அப்பா கூட மீட்டிங்-னு பயங்கர பிசியா இருந்ததுனால, அவ மூஞ்சியை தூக்கி வைச்சுக்கிட்டு பாவமா சீனை போட்டதும் கூட அவனுக்கு தெரியாம போச்சு. அந்த பிசியிலே ஒரு நாள், “சுவாதி, அந்த அகோரம் பில்டர்ஸ் பத்தி இந்த ப்ராஜெக்டுக்கு தேவையான டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி கொண்டு வா”-னு சொன்னான். சுவாதி அதிகம் அலட்டிக்காம கூகுள்லே இருந்து எடுத்து வந்து குடுக்கவும், கடுப்பானான் விதுரன்.
“என்ன இது?”-னு கேட்டான். “அகோரம் பில்டர்ஸ் டீடெயில்ஸ் பேபி… கேட்டீங்களே?”-னு சொன்னா சுவாதி. “இந்த காண்டிராக்டுக்கு தேவையான-னு சொன்னேனே?”-னு ஒரு மாதிரியா கேட்டான். “ஓ.. நான் தான் படிக்கவே இல்லையே”-னு பெருமையா சொல்லவும், அவ கிட்ட வாங்கின பேப்பரை வீசி எறிஞ்சு, “டேக் தட் அண்ட் கெட் லாஸ்ட்”-னு சள்-னு விழுந்துட்டு வேலையிலே ஆழ்ந்தான். வேலை சார்ந்த விஷயங்கள்லே மதுரியாவை மிஸ் பண்ணான். அவ டாக்டரா இருந்தாலும் அவன் பேசறதை புரிஞ்சுக்கிட்டா. கவனமா கேட்டா. சென்சிபிளா சஜஷன்ஸ் குடுத்தா. ஒரு வேளை முடியலேன்னா பாசிடிவா பேசுவா. அவன் கூடவே வேலை செய்யற சுவாதி கிட்ட கொஞ்சம் அதிகமாவே எதிர்பார்த்தான் விதுரன். ஆனா அவ கிட்ட இந்தத் துறைக்கு அடிப்படைப் புரிதலே பிரச்சனை. விதுரனுக்கு மதுரியா கூட இருந்த போது அவளைப் பத்தின குறைகள் தான் பூதாகாரமா தெரிஞ்சுது. ஆனா அவளை விட்டு விலகின அப்புறம் தான் நல்ல விஷயங்கள் நிறைய புரிய ஆரம்பிச்சுது.
அவன் கடுமையா நடந்துக்கிட்ட அடுத்த நாள் சுவாதி கண்ணீரும் கம்பலையுமா விதுரன் ரூமுக்கு வந்தா. “ஏய்… சுவாதி.. என்னாச்சு… ஏன் அழறே?”னு கன்சர்னா கேட்கவும், “பயமா இருக்கு பேபி.. இப்போ எல்லாம் உங்களுக்கு கோபம் வர்ற மாதிரி நடந்துக்கிறேன்.. அதனால என்னை விட்டு விலகிப் போயிடுவீங்களோ-னு பயமாயிருக்கு”-னு எமோஷனலா சொன்னா. அவ எதிர்பார்த்தது “ஓ… ஸ்வீட் ஹார்ட்… சாரி… ஐ மேட் யூ ஃபீல் ஸோ… இனிமேல் திட்டவே மாட்டேன்”-னு உருகலான காதல் மொழிகள். ஆனா அதை செஞ்சா அவன் விதுரனே இல்லையே!
விதுரன் அவளை ஏற இறங்க பார்த்து, “அதுக்கு இப்போ என்ன பண்ணணும்னு சொல்றே?”னு கேட்டுட்டு வேலையை தொடர ஆரம்பிச்சான். சுவாதி அவனை பே-னு பார்த்தா. அவளுக்கு அந்த நேரடியான கேள்விக்கு எப்படி பதில் சொல்றதுன்னே புரியலே. “என்ன சொல்றீங்க விதுரன்? அப்படீன்னா… நீங்க?”-னு தடுமாறினா. “உனக்கு பயம்னா அதை நீதான் சால்வ் பண்ணிக்கணும். நான் என்ன செய்ய முடியும்?”-னு கேட்டுட்டே அந்த நாளோட வேலையை முடிச்சுட்டு கிளம்ப ரெடியானான். “ஊப்ஸ்..”னு பெருமூச்சு விட்டா சுவாதி. “பேபி, இன்னிக்கு வெளியே போகலாமா? ரொம்ப நாளாச்சு நம்ம வெளில போயி”-னு கொஞ்சலா சொன்னா சுவாதி. “ம்ம்ம்… போகலாமே.. எனக்கும் ஒரு ப்ரேக் வேணும்”-னு அவன் சிரிக்கவும், அவன் தோள்லே தொங்கிக்கிட்டு கிளம்பிட்டா. இப்படி ஏத்த இறக்கமா போச்சு சுவாதி – விதுரன் நடுவுலே. சுவாதியும் தன்னோட வாலை சுருட்டி, பழையபடி அவனுக்கு ஆமா போட்டு அவன் கிட்ட சரியா நடக்க ஆரம்பிச்சா. அதுக்கப்புறம் எல்லாமே சுமுகமா போனதா சுவாதி நினைச்சா, இப்போ மதுரியாவோட போன் வர்ற வரைக்கும்.
விதுரன் வேலை செய்யும் போதுதான் மதுரியாவோட போன் வந்துச்சு. ஒரு நிமிஷம் உண்மையிலேயே சந்தோஷமானான். அகமும் புறமும் மலர வந்த வார்த்தைகள் தான், “ஹாய் மது… ஹவ் ஆர் யூ?”-னு. ஆனா அதுக்கப்புறம் இருந்த மௌனம்… குரல் சரி இல்லைன்னாலும், ராங் கால்-னு சொன்னப்போ இருந்த அழுத்தம் அவனுக்குள்ளே ஒரு அதிருப்தியை குடுத்துச்சு. இவளால நம்மளை மிஸ் பண்ணாம இருக்க முடியலே. ஆனாலும் எப்படி கெத்தா திமிரா சமாளிக்கறா. கண்ணுலே அந்த திமிர் ஜொலிக்கும் போது என்ன ஒரு அழகு. யப்பா-னு ஒரு புன்னகையோடு யோசிக்கும் போது அபஸ்வரம் மாதிரி, “யார் பேபி… முகத்துலே இவ்வளோ சந்தோஷம்?”னு இன்செக்யூர்டா கேட்டா சுவாதி. “ம்ம்ம்… அது தெரிஞ்சுட்டு உனக்கு என்ன ஆகப் போகுது? என்னை கேள்வி கேட்கிற இடத்துலே நீ இல்லே. என் தனிப்பட்ட இடத்துக்கு வர நினைக்காதே”-னு வெடுக்-னு பதில் சொன்னான் விதுரன். “இதுக்கு ஏன் விதுரன் கோபம்? சொன்னா கேட்டுட்டு போறேன்”-னு கனிவா சொன்னா. “ம்ம்ம்”-னு மட்டும் சொல்லிட்டு வேலையை தொடர்ந்தான். ஆனா மனசுலே மறுபடியும் மதுரியா வந்து உட்கார்ந்தா.
அப்போதைக்கு விட்டாலும் சுவாதிக்கு அது மதுரியானு தெரிஞ்ச அப்புறம் அவளால நிம்மதியா இருக்க முடியலே. கொஞ்ச நேரம் பொறுத்து, “ஏன் பேபி? அவ எதுக்கெடுத்தாலும் உங்களை கூப்பிடறா?”-னு மெதுவா ஸ்டார்ட் பண்ணா. சுவாதிக்கு மதுரியாவால ரொம்ப பாதுகாப்பின்மை வந்துச்சு. முதல்லே சுண்டி இழுக்கற அவ அழகு. அப்புறம் படிப்பு. அவளோட புத்திசாலித்தனம். இதெல்லாத்துக்கும் மேலே அவங்க குடும்பத்துக்குள்ளே இருக்கற நெருக்கம். இதெல்லாம் சந்தேகத்தை அதிகப்படுத்திச்சு. அதே மேலும் அதிகரிக்கறாப்போல இருந்துச்சு விதுரனோட குடும்பம் நடந்துக்கிட்ட விதம். விதுரன் ஒத்துக்கலேன்னாலும் அவங்க யாருக்கும் தன்னை கொஞ்சம் கூட புடிக்கலேனு சுவாதிக்கு நல்லா புரிஞ்சுது. சரி… இந்த குடும்பம் அந்த குடும்பத்தோட நட்பு இதுலே இருந்தெல்லாம் அவனை வெளியே கூட்டிட்டு போயிடலாம்-னு பார்த்தா அவனை நெருங்கவே முடியலியே-னு யோசிக்கும் போது தான் ஒரு பெரிய உண்மை முகத்துலே வந்து அடிச்சுது. விதுரன் ஒரளவுக்குப் பழகறான் தான். ஆனால் ப்ரோபோஸ் பண்ணதே இல்லே. அடுத்த கட்டத்துக்கு போகவும் இல்லை. அதைப் பத்தி பேசவும் இல்லே. நட்பு மீறின ஒரு நெருக்கம் இருந்தா மாதிரி இருந்தது… ஆனா அதுக்கப்புறம் முன்னேற்றம் ஏதுமில்லை. அவ கூட வெட்டிகிட்டதோட சரி. நம்ம அந்த இடத்துக்குப் போகலே.. அப்படீன்னா-னு யோசிக்கும் போது ரொம்ப பயம் வந்துச்சு. அவன் கிட்ட கண்டிப்பா பேசிடணும்-னு முடிவு பண்ணிட்டுத்தான் ஆரம்பிச்சா.
“யாரை கேட்கிறே?”னு கேட்டான் விதுரன். “மதுரியாவைத்தான்”-னு சொன்ன சுவாதி. “அப்போ யார்-னு தெரிஞ்சுட்டே தான் போன்-ல யார்னு கேட்டியா?”-னு அவ எதிர்பார்க்காத கேள்வியை கேட்டான் விதுரன். “பேபி, நான் என்ன கேட்கிறேன்? நீங்க என்ன சொல்றீங்க?”னு குரல் உயர கேட்டா சுவாதி. “என்ன? சத்தமெல்லாம் பலமா இருக்கு?”-னு ஒத்த புருவத்தை தூக்கி எகத்தாளமா கேட்டான். “சாரி, விதுரன். பட் நீங்க இன்னும் அவளோட பேசறது எனக்கு பிடிக்கலே”-னு நேரடியா சொன்னா சுவாதி. ஆனா அவனோ எந்த விளக்கமும் குடுக்காம, “ஸோ?”-னு அலட்சியமா கேட்டு அவ பீபியை ஏத்தினான். “விதுரன், என்ன பேசறீங்க? அவ யார் உங்களுக்கு?எதுக்கின்னும் அவ கூட டச்லே இருக்கீங்க?”-னு கொந்தளிச்சா. “சுவாதி, வாட்ஸ் ஆல் திஸ்.. நீ எங்கே போறே, யார் கூட பேசறே. எப்படி பழகறே-னு நான் எப்போவாவது கேட்கிறேனா? நான் டீசண்டா இருக்கேன்லே? யூ ஆர் இன்வேடிங் மை ஸ்பேஸ்”-னு விதுரனும் கோபமானான். மதுரியா அவனுக்கு குடுத்த ஸ்பேஸ், ஒரு நாள் கூட யார், என்னா-னு கேட்காதது எல்லாம் முகத்துலே வந்து அடிச்சுது. எவ்வளோ நாள் அவ மீட் பண்ணும் போது சுவாதி போன் பண்ணி இருக்கா. இவனும் பேசி இருக்கான். ஆனா ஒரு நாள் கூட அவ யார், ஏன் பேசறே-னு கேட்டதில்லே.
“பேபி, ப்ளீஸ்… புரிஞ்சுக்கோங்க… அவ உங்க எக்ஸ்… அவ கூட நீங்க இன்னும் பேசினா எனக்கும் கஷ்டமா இருக்கு”-னு இறங்கி வந்தா சுவாதி. அவளுக்கு எப்படியாவது இன்னிக்கு அவன் கிட்டே இருந்து ஒரு ப்ரோபோசலை வாங்கிடணும்-னு முடிவு பண்ணி பேச்சை ஸ்டார்ட் பண்ணா சுவாதி. “சுவாதி, அவ எக்ஸும் இல்லே, ஒய்யும் இல்லே. டோண்ட் கீப் சேயிங் இட்… ஐ ஹேட் தோஸ் வர்ட்ஸ்.. மது எனக்கு வீட்டுலே பார்த்த அலையன்ஸ்… அவ்வளோ தான்”-னு கடுப்பா சொன்னான் விதுரன். “அவ்வளோ தான்-லே? இன்னும் ஏன் பேசிட்டு இருக்கீங்க?”-னு குரல் உசத்தி கேட்டா. “ஏன்னா… ரெண்டு ஜெனரேஷன் ஃப்ரெண்ட்ஷிப்… விட முடியாது.. உனக்கே புரிஞ்சு இருக்கணும்”-னு சொன்னான் விதுரன். “ஓ..காட்… இந்த ஃப்ரெண்ட்ஷிப். கல்யாணம் நிச்சயமாகி ப்ரேக் ஆனவங்களுக்குள்ளே இந்த ஃப்ரெண்ட்ஷிப், மண்ணாங்கட்டி எல்லாம் சாத்தியமே இல்லை”-னு சொன்னா சுவாதி. “உன் அசட்டுத் தனத்துக்கெல்லாம் நான் ஒண்ணும் பண்ண முடியாது”-னு விதுரன் வேலையை பார்க்க ஆரம்பிக்கவும், “பேபி, எனக்காக கூட பண்ணமாட்டீங்களா? என் அமைதி உங்களுக்கு முக்கியமில்லையா? நம்ம வாழ்கை சந்தோஷமா இருக்க வேண்டாமா?”-னு அவன் தோள்லே கையை வைச்சு கேட்டா. விதுரன் அதிர்ந்து அவளை பார்த்தான்.
“நம்ம வாழ்கையா?”னு கேட்டான். “ஆமா பேபி, சீக்கிரம் வீட்டுலே சொல்லி மேரேஜ் பண்ணிக்க போறோம். அப்போ இந்த தொந்திரவு எல்லாம் தேவையா?-னு தேனொழுக கேட்டா சுவாதி. “ஓ… ஓ… ஸ்லோ டவுன்! கல்யாணமா? லுக்… நானும் நீயும் ஃப்ரெண்ட்ஷிப் தாண்டி ஜஸ்ட் ஒரு ஸ்டெப் போக நினைச்சோம். அது லவ் கூட இல்லை. அவ்வளோ தான். நான் எப்போ உன் கிட்ட ப்ரோபோஸ் பண்ணேன்? நீ என்னடான்னா கல்யாணம் பண்ணிக்கற வரைக்கும் பேசறே?”-னு கேட்டு அவ தலையிலே கல்லை போட்டான். “விதுரன், என்ன சொல்றீங்க?அப்போ எனக்கு ஆசை காட்டி பழகினது?”-னு அவனை கார்னர் பண்ணா சுவாதி. “வாட்… ஆசை காட்டி பழகினேனா?வாவ்… உன் கண்ணை தாண்டி உன்கிட்ட பேசி இருப்பேனா? நீ சோஷியல் பிஹேவியர்-னு என் மேலே விழுந்தப்போ கூட, நான் அப்படி ஏதாவது பண்ணியிருப்பேனா? கையை பிடிச்சு பேசறதுக் கூட நீ பண்ணது….. ப்ரோபோஸ் பண்ணேனா? இல்லே மேரேஜ் பத்தி பேசினேனா?”-னு சிரிச்சுட்டே விதுரன் கேட்கவும் பேயடிச்சா மாதிரி ஆனா சுவாதி.
“அப்படீன்னா மதுரியா கூட மேரேஜ் ப்ரேக் பண்ணது?”னு கேட்டா. “அது என் பர்சனல் டிசிஷன்… யார் சொன்னா அதுக்கு நீதான் காரணம்னு. லுக் சுவாதி… நான் ஒரு வாட்டி பட்டதே போதும்… ஐ டூ நாட் வாண்ட் டு ரஷ் ஆன் எனி ரிலேஷன்ஷிப்… இப்போதைக்கு என்ன இருக்குதோ எப்படி இருக்குதோ அதுவே போதும்-னு தோணுது. நெக்ஸ்ட் ஸ்டெப்புக்கு கொண்டு போகணும்-னு ஃபீல் ஆகலே. அப்படி தோணுமோ என்னவோ எனக்கு தெரியாது.. ஐ டோண்ட் நோ…. ஆனா அது வரைக்கும் உன்னை வெயிட் பண்ணவெல்லாம் சொல்ல மாட்டேன்”-னு முடிச்சான். சுவாதி கூர் தீட்டின விதுரனோட ஈகோ கடைசியிலே அவளையே பதம் பார்த்துச்சு!