அத்தியாயம் 10

அத்தியாயம் 10

அவன் அவளை பார்க்க அவளும் அவனைத் தான் பார்த்தாள்.

பதில் கூறாமல்.

என்ன பதில் கூறுவாள்.

அவள் தான் கூறி விட்டாளே இங்கிருந்து செல்ல முடியாது அத்தை மாமாவுக்காக இவனுடன் இருப்பதாக மீண்டும் ஊருக்குக் கிளம்புகிறாயா?

என அவன் கேட்டால் என்ன பதில் தான் அவளும் கூறுவாள்.

“சொல்லு கொஞ்ச நாள் ஊருக்குப் போய் இருந்துட்டு வரியா”

மீண்டும் கேட்டு விட்டு பதிலுக்காக அவள் முகத்தைப் பார்த்தான்.

“இல்ல நா இங்க இருக்கேன்”

அவள் உறுதியாகக் கூற அவனது கண்களிலோ சிறு மின்னல் வெட்டு அதை அப்பேதை காணவில்லை. காணுமளவு அவன் விடவுமில்லை.அதை ஒரு நொடியில் மறைத்துக் கொண்டு

“யேன் இங்க தனியா தானே இருக்க அங்க போனா உன்னோட அத்த மாமா கூட இருக்கலாமே”

குரலில் அளவுக்கதிகமாக கேலி குவிந்திருந்து.

அவனை முறைத்துப் பார்த்தாள்.

“என்ன பேசுறிங்க அவங்ககூட போய் தங்கினா அவங்க என்ன நினைப்பாங்க”

அவனிடம் அவள் கேட்க அவனோ தோள்களை குலுக்கினான்.

“என்ன நினைப்பாங்க”

அவன் அவளிடமே கேட்டான்.

“அது நாம சந்தோஷமா இல்லன்னு நினைப்பாங்க”

அதைக் கூறும் போது விழிகள் தானாக தரையை நோக்கின.

அவனோ அவளை அழுத்தமாகவும் மிக நிதானமாகவும் பார்த்தான்.

“உண்ம அது தானே”

அவன் கூற என்ன பதில் கூறுவதென்று அவளுக்கும் தெரியவில்லை.

ஏனெனில் அது உண்மை என அவளும் அறிவாளே.

மறுபடியும் அவளிடம் எதுவும் பேசாமல் எழுந்து அறையை விட்டு வெளியே சென்றான்.

அவளும் அப்பொழுது தான் இழுத்து மூச்சை விட்டாள்.

“எனக்கு என்னாச்சு மயங்கி விழுந்தேன் அப்புறம் என்னாச்சு”

அவன் சென்றதன் பின்னர் தான் அவனிடம் கேட்க நினைத்தது நினைவில் வந்தது.

அவன் இங்கிருந்து சென்று விடு எனக் கூறியதும் வந்த கோவத்திற்கு அளவே இல்லை.

ஆனால் அது மனைவியாக அவனிடம் கேட்ட உரிமையா இல்லை அவளது அத்தை மாமாவுக்காக கேட்ட உரிமையா அவளே அறிவாள்.!?

கொஞ்ச நேரத்தில் சாப்பாட்டு தட்டுடன் உள்ளே வந்தான்.

இவள் அப்பொழுதும் கட்டிலை விட்டு எழுந்திருக்கவில்லை.

உடல் சோர்வுற்றிருக்க எழுந்து நிற்கக் கூட திராணியற்று இருந்தாள்.

“சாப்டு”

தட்டை அவளிடம் நீட்டி விட்டு பக்கத்தில் உள்ள ஸோபாவில் அமர நீட்டிய தட்டை பெற்றுக் கொண்டு சாப்பிட்டாள்.

அவள் சாப்பிட்டு முடித்ததும் தண்ணீரை அவளிடம் நீட்ட அதையும் குடித்தாள்.

பின் அவளது தட்டை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல எத்தனிக்க.

“நீங்க சாப்டிங்களா”

அவளது கேள்வியில் ஒரு நொடி நடை தடைப் பெற்றது.

“ம்ம்”

கூறி விட்டு அறையை விட்டு வெளியேறினான்.

சிறிது நேரத்தில் அறைக்குள் நுழைந்தான்.

இப்பொழுது அவளது உடல் கொஞ்சம் தேறியிருந்தது சாப்பிட்டதன் விளைவாக.

அவள் கட்டிலை விட்டு இறங்கி அறையை விட்டு வெளியேறப் போக.

“உனக்கு என்ன பிரச்சின”

அவனது கேள்வியில் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்து அறை முழுவதையும் நோட்டம் விட்டாள்.

“உன்கிட்ட தான் கேட்டேன் பதில் சொல்லு”

மார்புக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக் கொண்டு அவளது விழிகளை பார்த்து அவன் கேட்டான்.

ஆனால் அவளால் தான் அவனது விழிகளை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் போனது.

“சொல்லு உனக்கு என்ன பிரச்சின”

“எனக்கு  எ..ன்ன     ஒ..ன்னுமில் லையே..”

அவளிடமிருந்து வெளிவந்த வார்த்தைகள் கேட்டவன் வேறு எதுவும் பேசாமல் அவளைப் பார்த்தான்.

அவனது பார்வைக்குத் தான் பாவைக்கு அர்த்தம் தெரியவில்லை.

என்ன மாதிரியான பார்வை அது.

உயிரின் ஆழம் வரை சென்று தாக்கி வருகின்றது.

அவனது பார்வைக்கான அர்த்தத்தை அவனிடமே கேட்டு அறியலாமா? எனக் கூட தோன்றியது காரிகைக்கு ஆனால் கேட்கவும் தயக்கம்.

மெதுவாக அறையில் இருந்து வெளியேறினாள்.

அவன் அதன் பின் அவளிடம் கேட்கவில்லை.

கூறுவதற்கு அவளுக்கு விருப்பமில்லையென்றால் அவளிடம் வம்படியாக கேட்பதற்கும் அவனுக்கும் விருப்பம் இல்லை போல்.

அவளோ நேராக வந்தது பால்கனிக்குத் தான்.

மெதுாக அங்கிருந்த ஓர்கிட் பூக்களுக்கு அருகில் முட்டிப் போட்டு அமர்ந்தவள் அவற்றைத் தடவிக் கொடுத்தாள்.

எதுவும் பேசவில்லை என்பதை விட எதுவும் பேசத் தோன்றவில்லை என்பதே உண்மை.

“என்னால அவர்கிட்ட உண்மைய சொல்லலாமா சொன்னதுக்கப்புறம்”

அதை நினைக்கும் போதே உடல் அதிர்ந்து அடங்கியது பயத்தால்.

கொஞ்ச நேரம் யோசனையாக அப்பூக்களின் இதழ்களை தடவிக் கொடுத்தவள் அவளது கணவனது குரலில் திரும்பினாள்.

எங்கோ வெளியே செல்லத் தயாராகி வந்திருக்கிறான் போல்.

“எனக்கு கொஞ்சம் வேர்க் இருக்கு நா வெளில போறேன்”

தகவலாக அவளிடம் கூறியவன் அவளின் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காமல் வெளியேறினான் அங்கிருந்து.

அவளோ போகும் அவனையே பெருமூச்சொன்றை விட்டபடி பார்த்தாள்.

பின் அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள்.

வானமோ தெளிவாக இருந்தது.

மேகங்களோ அங்கும் இங்கும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது.

அனைவரது வாழ்வும் அவ்வானம் போல் தானே!!

தெளிவாக இருக்கும் ஆனால் மேகங்களைப் போல் சோகங்களும் ஓடிக் கொண்டிருக்கும்.

ஆனால் இவளது வாழ்க்கையில் தெளிவும் இல்லை.

மேகங்களைப் போல் ஓடும் சோகங்களும்  இல்லை.

நிலைத்திருக்கும் சூரியனைப் போல் அல்லவா சோகம் நிறைந்திருக்கிறது.

அவள் இவ்வாறு நினைத்துக் கொண்டிருக்க

ஆனால் அவள் நினைக்க மறந்த ஓர் விடயம்.

சூரியனும் என்றும் வானத்தில் நிலைத்திருப்பது இல்லையே

அது போல் தான் அவளது வாழ்வில் சோகமும்.

 

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்துஇன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை

துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை

இன்பம் பாதி துன்பம் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம் 

நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் நகையாய் மாறும் தங்கம் தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி 

வெற்றிக்கு அதுவே ஏணியடி

ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ஓ மனமே ஓ

மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன் மழையைத் தானே யாசித்தோம் கண்ணீர்த்துளிகளைத் தந்தது யார்

பூக்கள் தானே யாசித்தோம் கூழாங்கற்களை எறிந்தது யார் 

ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ஓ மனமே ஓ மனமே

 

*******

“எல்லாம் ரெடியா”

இயக்குனர் இயக்குனரிற்கே உரித்தான மிடுக்கில் கேட்க உள்ளே புகைந்தாலும் வெளியே இளித்துக் கொண்டே பதில் கூறினார் இசையமைப்பாளர்.

“ஆமா எல்லாம் ஓகே லாஸ்ட்டா இந்த ஸாங்க கரக்ஷன் பன்னிட்டா அடுத்தது ஸாங்க்ஸ் ரிலீஸ் பன்னலாம்”

“ஓகே இப்போ ப்ரடியூஸர் வாரேன்னு சொன்னாரு பாக்கலாம்”

மற்றைய படங்களைப் போல் அன்றி இப்படத்தில் இயக்குனர் அல்ல அனைத்து முடிவுகளையும் எடுப்பது படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளரே அனைத்து முடிவுகளையும் எடுப்பார்.

இது இயக்குனருக்குக் கடுப்பை வரவழைத்தாலும் வேறு வழியின்றி பொறுத்துக் கொள்வார்.

ஏனெனில் இப்படம் தயாரிக்கும் தயாரிப்பாரிற்கோ  பத்தோடு பதினொன்று ஆனால் இயக்குனர்க்கு முதல் படம் அல்லவா? அது தான்.

சிறிது நேரத்தில் படத்தின் தயாரிப்பாளர் உள்ளே வர மரியாதை நிமித்தம் இசையமைப்பாளரும் இயக்குனரும் எழுந்து நிற்க அவர்களுக்கு ஒரு தலையசைப்பை வழங்கியவன்.

“ஓகேயா”

“ஓகே ஸர் நீங்க கரக்ஷன் பாத்துட்டா அடுத்தக்கட்ட வேலையப் பாக்கலாம்”

இயக்குனர் அளவுக்கு மீறிய பணிவைக் குரலில் கொண்டு வந்து கொஞ்ச நேரத்திற்கு முன்னால் இருந்த மிடுக்கை மொத்தமாக விழுங்கி விட்டு பணிவுடனும் மரியாதையுடனும் தயாரிப்பாளருடன் பேச இசையமைப்பாளரோ வாயில் கை வைக்காத குறையாக இயக்குனரைப் பார்த்தார்.

“உலக மகா நடிப்புடா சாமி”

இசையமைப்பாளரின் எண்ணமோ இவ்வாறு இருந்தது.

ப்ரடியூசரோ பாடல்களை சரிப்பார்த்து திருப்தி கண்ட பின் தான் இயக்குனருக்கு மூச்சு சீரானது 

இல்லையென்றால் ஆயிரத்தெட்டு குறைகளைக் கண்டுப் பிடித்து விடுவானே அப்பயம் தான்.

“அப்போ ஸோங்க்ஸ்ஸ எப்போ ரிலீஸ் பன்னலாம் ஸர்”

இயக்குனர் தயாரிப்பாளரிடம் கேட்க 

“நாளைக்கு”

எவ்வித சலனமுமின்றி தயாரிப்பாளர் கூற நெஞ்சில் கை வைக்காத குறையாக அவனை அதிர்ந்து போய் பார்த்தார் இயக்குனர்.

“எப்பிடி ஸர் நாளைக்கே இன்னும் எந்த அர்ரேன்ஜ்மன்ட்டும் பன்னல்லையே”

இயக்குனர் கூற தோள்களைக் குலுக்கியவன்.

“அதான் வேக்கர்ஸ் இருக்காங்களே அவங்கள வெச்சி ப்ரோக்ரம்க்கான அர்ரன்ஜ்மென்ட் பன்னுங்க  நாளைக்கே ஸோங்க்ஸ்ஸ ரிலீஸ் பன்னிடலாம்”

அவன் கூறி விட்டு அங்கிருந்து நகர இயக்குனர் இசையமைப்பாளரைப் பார்த்தார்.

உனக்குத் தேவை தான் என்பது போல் சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு இயக்குனரைப் பார்த்தார் இசையமைப்பாளர்.

*****

கணவன் சென்று கொஞ்ச நேரத்திற்கு பின்னர் உள்ளே வந்தாள் நேத்ரா.

வீடும் வெறுமையாக இருந்தது அவனின்றி அவளுக்கும் தனிமையாக இருந்தது.

அவனுடன் சிரித்துப் பேசியதும் இல்லை வாய் ஓயாமல் பேசியதுமில்லை.

ஆனால் அவன் அருகில் இருக்கும் போது தனிமை என்ற வார்த்தைக் கூட அவளை தீண்டியதில்லை.

இது என்ன மாதிரியான உணர்வு அவளால் உணர்ந்துக் கொள்ளவும் முடியவில்லை புரிந்துக் கொள்ளவும் முடியவில்லை.

ஸோபாவில் சிறிது நேரம் அமர்ந்திருந்தவள்.

“கொஞ்சம் வீட்ட துப்புரவு பன்னுவோம்”

சுத்தமாகவும் நேர்த்தியாகவும் உள்ள அவ்வீட்டை நேரம் கடத்துவதற்காக சுத்தம் பன்ன எண்ணியவள்.

அங்கிருந்த தும்புத்தடியை எடுத்துக் கொண்டு

வீட்டை கூட்டினாள்.

ஒரு பத்து நிமிடங்கள் கழிய காலிங் பெல் சத்தம் கேட்டது.

“அவர் வந்துட்டாரு போல”

கணவன் தான் வந்துள்ளான் என எண்ணியவள் கதவின் துளையினூடாகக் கூட யார் வந்திருக்கிறார்கள் எனப் பார்க்காமல் கதவைத் திறந்தாள்.

வெளியே நின்றுக் கொண்டிருந்ததோ அவளது கணவனல்ல.

ஒரு பெண்.

அதுவும் கவலை தோய்ந்த முகத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றிருக்க இவள் அவளைக் கேள்வியாகப் பார்த்தாள்.

*****

 

அக்ஷரனோ புருவத்தை நீவி விட்டுக் கொண்டு வீட்டினுள் உள்நுழைய பேச்சு சத்தம் கேட்டது.

புருவங்கள் முடிச்சிட வீட்டு வரவேற்பறையில் உள்ளவரைப் பார்த்தான்.

தனது மனைவி இன்னொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்க இவன் அவர்கள் இருவரையும் யோசனையாகப் பார்த்தான்.

கணவன் வந்துள்ளான் என்பதை கதவு திறக்கும் சத்தத்தை வைத்து உறுதிப்படுத்தியவள்.

மெதுவாக அப்பெண்ணினது கையைப் பிடித்துக் கொண்டு அவனுக்கு அருகில் வந்தாள்.

“இவங்க யாருன்னு தெரியுதா”

நேத்ரா கேட்க அக்ஷரன் எதுவும் பேசாமல் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“இவங்க இனிமே இங்க தான் தங்குவாங்க அதுவும் உங்க மனைவியா உங்க குழந்தைக்கு அம்மாவா”

அவள் கூறிக் கொண்டுப் போக கை முஷ்டியை இறுகப் பொத்தி விழிகளையும் ஒரு நொடி மூடித் திறந்தவனது தோரணையில் நேத்ரா இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.

அப்புதியவளோ இருவரையும் பாவமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

*****

தொடரும்..❤

 

💜அஷு💜

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top