8 மாதம் முன்னர்.. நிகெஷ் பிறந்த நாள் விழா இரவு…
மதுரியா அன்னிக்கு ராத்திரி கண்ணீரிலே கரைஞ்சா. நிகேஷ் பிறந்த நாள் விழா குடுத்த உற்சாகத்தை சுத்தமா வழிச்செடுத்துடுத்தது விதுரனோட பேச்சு. “ஏன் விதுரன்?… நீங்களா இப்படி சொல்றீங்க?”-னு அழுதவ எண்ணமெல்லாம் பின் நோக்கி போச்சு… ஒரு வருஷம் முன்னாடி… அவ விதுரனை சந்திச்ச நாள்.. காதல் ரெண்டுப் பேருக்கும் மலர்ந்த நாள்..
காலையிலே பரபரப்பா காலேஜ் கிளம்பிட்டிருந்தா மதுரியா. சுறுசுறுப்பா சிரிப்பும் கேலிப் பேச்சுமா இருப்பா. “அம்மா… டைம் ஆகுது.. டிபன் ரெடியா?”-னு கத்திக்கிட்டே வந்தா. “வர்றேன்… வர்றேன்.. ஒரு பத்து நிமிஷம் முன்னாடி எந்திரிச்சா என்ன?”-னு சலிச்சுட்டே இட்லியை தூக்கிட்டு வந்தாங்க சுபத்ரா. “இன்னிக்கும் அவிச்சு கொட்டியாச்சு. ஏன் மா?”-னு சலிச்சுக்கவும் தொண்டை கனைப்போட வந்தார் நித்தியவாசன். கூடவே நித்தியானந்தம். அப்புறம் கூட ஏதோ சலம்பிக்கிட்டே சாப்பிட்டா. அவ தட்டுலே சத்தமில்லாம ரெண்டு தோசை வந்து உட்கார்ந்துச்சு, கற்பகவல்லி உபயத்துலே! பாட்டியும் பேத்தியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கண்ணடிச்சுக்கிட்டாங்க. “ஏன்மா இவ்வளோ செல்லம்?”-னு சிரிச்சாலும் அலுப்பா கேட்டார் நித்தியவாசன். “விடு வாசு… எல்லாம் கல்யாணம் பண்ணி போற வரைக்கும் தானே? குட்டிமா! நம்ம மூர்த்தியோட ரெண்டாவது பையனுக்கு உன்னை பேசலாமா-னு யோசிக்கிறோம்.. நீ என்ன நினைக்கறே?”-னு கேட்டார் நித்தியானந்தம். மதுரியாவுக்கு அந்தக் கணமே புரையேறிச்சு.
“ஹேய்… பார்த்து… மெதுவா தான் சாப்பிடேன் டீ”-னு தலையை தட்டினாங்க சுபத்ரா. “என்ன தாத்தா, திடீர்-னு என்னை பேக் பண்ணி அனுப்ப யோசிக்கிறீங்க? அவ்வளோ தொல்லை பண்றேனா?”-னு சிரிக்காம கேட்கவும், மத்தவங்க எல்லாரும் சிரிச்சாங்க. “வாலு, என்ன பேச்சு? பாருங்கம்மா”-னு அவ தலையை தட்டினா ஆனந்தியா. “ரியா! போதும் விளையாட்டு”-னு சீரியசா சொன்னார் நித்தியவாசன். “என்னப்பா திடீர்-னு? இன்னும் ஒரு வருஷம் படிப்பிருக்கே?”-னு கேட்டா மதுரியா. “அதெல்லாம் பேசிடலாம் குட்டிம்மா.. ஒண்ணும் தடை வராது… நீ நினைக்கற மாதிரியே தொடரலாம்”-னு சொன்னார் நித்தியானந்தம். “ஆனா… நான் கல்யாணத்துக்கு தயாரா? நான் தியா மாதிரி முதிர்ச்சியான பொறுமைசாலி இல்லே தாத்தா. அது… எப்படி சொல்ல-னு தெரியலே… ஆம் ஐ ஓல்ட் இனஃப் டு கெட் மேரீட்?”-னு கேட்டா மதுரியா. தாத்தாவும் பாட்டியும் சிரிச்சாங்க. “சரியா போச்சு போ.. உன் வயசுலே நீ எனக்கு பொறந்தாச்சு… நீ என்னடான்னா இப்படிக் கேட்கிறே?” சலிச்சுக்கிட்டாங்க சுபத்ரா.
“மா… நீ தியா எல்லாம் பொறுமைசாலிங்க.. ஆனா நான் அப்படி இல்லே… ப்ராக்டிஸ் பண்ணலாம்னா இன்னும் சொதப்புது…. கண்ணாடி மாதிரி முகம்… என்ன நினைக்கிறேன்னு என் முகரக்கட்டையை பார்த்தே எல்லாம் சொல்றாங்க”-னு போலியா அலுத்துக்கிட்டா மதுரியா. “அது சரி…. ஏன் ரியா? மூர்த்தி அங்கிள், சங்கரி ஆண்டி, பாட்டி எல்லாம் உனக்கு புதுசா?”-னு கேட்டான் பரத். “அவங்க, அப்புறம் கிருத்திகா அக்கா கூட புதுசு இல்லே. ஆனா ரிஷி, விதுரன்… அவ்வளோ பழக்கம் இல்லையே… ரிஷி அண்ணா கூட ஃபங்க்ஷன்ஸ், பார்ட்டிலே பார்த்து ஹலோ சொல்ற அளவுக்கு பழக்கம்.. ஆனா விதுரன்…”னு இழுத்தா மதுரியா. “ரியா, இந்த கல்யாணம் நடந்தா நீ நல்லா இருப்பே-னு நாங்க நம்பறோம்… உனக்கு விதுரனை பிடிக்கலேன்னா ஃபோர்ஸ் பண்ண மாட்டோம்”-னு சொன்னார் நித்தியவாசன்.
விதுரன்-னு பேர் கேட்டவுடனே மதுரியா முகத்துலே ஒரு சின்ன சிரிப்பு. “அப்படியெல்லாம் இல்லேப்பா… உங்களுக்கு நல்லது-னு படறதை செய்ங்க.. நீங்க முடிவு பண்றது எனக்கு சம்மதம்”-னு சொன்னா மதுரியா. எல்லாருக்கும் சந்தோஷம். அதுக்கப்புறம் எல்லாம் வேகமா நடந்துச்சு. ஒரே வாரத்துலே பூ வைக்கறதுக்கு வேதமூர்த்தி குடும்பம் வந்து இறங்கறதா முடிவு ஆச்சு. விதுரனுக்கும் பெரிய எதிர்ப்போ பிரச்சினையோ இல்லாததால சரி-னு சொன்னான். அவன் மனசுலே நினைச்சது டாக்டர் படிக்கற பொண்ணு, நல்லா மாடர்னா தன்னோட எண்ணப் போக்குக்கு ஏத்த மாதிரி இருப்பா-னு நம்பினான். ஆனா அவங்க பேசப் போறதுக்கு முன்னாடி ஒரு முறை மதுரியாவை சந்திக்கணும், பேசிப் பார்க்கணும்-னு கண்டிஷனா சொன்னான்.
அன்னிக்கு கோயில்லே வேதாசலம், நீலவேணி, நித்தியானந்தம், கற்பகவல்லி நாலுபேரும் இதைப் பத்தி பேசி முடிவு பண்ணாங்க. “கடவுள் கடைசிக்கும் வல்லிக்கு நன்றிக்கடன் தீர்க்க ஒரு வழி குடுத்தான்”-னு உணர்வு பூர்வமா பேசினார் வேதாசலம். “என்னண்ணா பேச்சு இது? நன்றி அது இதுன்னு… நட்பாயிருந்த குடும்பம் உறவாக அந்த மகேசன் காட்டற வழி”-னு சொன்னாங்க கற்பகவல்லி. “இல்லேம்மா.. நீயும் வாசுவும் எங்க குடும்பத்துக்கு செஞ்ச உதவியை மறந்தா நான் மனுஷனே இல்லே”-னு அன்னிக்கு நிறுத்தாம பேசிட்டே வந்தார் வேதாசலம். “வேதா, என்ன ஆச்சு உனக்கு? ஏதேதோ பேசறே? பேர பிள்ளைங்களுக்கு கல்யாணம் பேசப் போறோம்… இப்போ போயி நன்றி அது இது-னு… இதைப் பத்தி பேசவே கூடாது-னு நினைச்சோமே, மறந்துட்டியா?”-னு அதட்டலா முடிச்சார் நித்தியானந்தம். அவருக்கு தெரியலே அன்னிக்குத்தான் நண்பனை கடைசியா பார்க்கிறார்-னு. வேதாசலத்துக்கு ஏதோ தோணுனா போல பழசு எல்லாம் உணர்ச்சிப் பெருக்குலே பேசிட்டு இருந்தார். எல்லாரோட வாழ்கைலியும் இந்த முடிவு எடுத்த நாள்லே இருந்து விதி ஆட்டம் போட ஆரம்பிச்சுது.
மதுரியா விதுரன் சந்திப்பு நீண்ட நாள் கழிச்சு வந்துச்சு. ரெண்டுப் பேருக்கும் கல்யாண பேச்சு ஆரம்பிச்ச பின் சந்திக்கறது வித்தியாசமான அனுபவமா இருந்துச்சு. விதுரன் அன்னிக்கு ஆபீஸ் வேலையை சீக்கிரமா முடிச்சு, மதுரியாவோட காலேஜுக்கு போனான். அன்னிக்கு காலேஜ்லே ஏதோ ஃபங்க்ஷன் முடிஞ்சு ரீனாகிட்ட பேசிட்டே வெளியே வந்த மதுரியா விதுரனைப் பார்த்து திகைச்சுப் போனா. “விதுரன்..”-னு முணுமுணுத்தா. ப்ளாக் கேசுவல் ஷர்ட் ப்ளூ ஜீன்ஸ்லே ஹீரோ கணக்கா, கார் மேலே சாய்ஞ்சு போஸ் குடுத்தவனை பார்த்து மதுரியாவோட இதயம் தாளம் தப்புச்சு. “ரியா… வாவ்… ஹீரோ மாதிரி இருக்கார் டீ”-னு சொன்னா ரீனா. “ம்ம்ம்..”-னு சொல்லி அவனை நோக்கிப் போனாலும் போட்டோவை விட நேர்லே அழகாத்தான் இருக்கார்-னு நினைச்சுக்கிட்டா. விதுரனுக்கு நேவி ப்ளூ அனார்கலி சுடிதார்லே, தலை முடி அசைய நடந்து வர்றவளை பார்த்து திகைப்பு தான். ஆனா அவன் அடிச்சுப் பார்க்கறதை வெளியே தெரியாம காப்பாத்துச்சு அவன் சன் க்ளாஸ்.
“ஹாய் விதுரன்… எப்படி இருக்கீங்க?”-னு பேசினா மதுரியா. “அம் குட் மது. ஹவ் அபௌட் யூ?”-னு இயல்பா பேசினான் விதுரன். இடைஞ்சலா இருக்க வேண்டாம்-னு நினைச்சு ரீனா, பேச்சுக்கு ஹலோ சொல்லிட்டுக் கிளம்பினா. “மது, நம்ம கொஞ்சம் வெளியே போய் பேசலாமா? இன்னிக்கு ஈவினிங் கொஞ்சம் ஃப்ரீ. அதான் வந்தேன்”-னு சொன்னான். தன்னோட வசதி கேட்கணும்-னு தோணலியே அப்படீ-னு ஒரு நிமிஷம் சுருக்-னு தான் இருந்துச்சு மதுரியாவுக்கு. ஆனா அந்நேர மயக்கம் அதைப் பெரிசா கண்டுக்கலே. “ஓ.. ஷ்யூர்.. காபி ஷாப்-ல உட்கார்ந்து பேசலாமா?”-னு கேட்டா மதுரியா. “நோ ப்ராப்ளம்… கார்லே ஏறு”-னு கூப்பிட்டான். “தேங்க்ஸ்… ஆனா நான் என் வண்டியிலே தான் காலேஜ் வந்தேன்.. அதுலேயே வந்துடறேன்”-னு சொன்னா மதுரியா. “ஆல்ரைட்! எங்கே மீட் பண்ணலாம்? பை தி வே… போட்டோலே இருந்ததை விட நேர்லே இன்னும் அழகா இருக்கே”-னு சொல்லவும் பே-னு பேச்சில்லாம நின்னுட்டா மதுரியா.
அவன் சொன்னதோட தாக்கம் காபி ஷாப்-ல போய் உட்கார்ற வரைக்கும் இருந்துச்சு. “எனக்கு ஒரு கப்புச்சினோ… உனக்கு?”-னு கேட்டான் விதுரன். “எனக்கு ஒரு ஃப்ரெஷ் லெமன் ஜூஸ்”-னு ஆர்டர் பண்ணி வர்ற வரைக்கும் ஜெனரலா பேசினாங்க. “மது… எனக்குப் பெரிய எக்ஸ்பெக்டேஷன்ஸ் எதுவும் இல்லே.. என்னோட லைஃப் பார்ட்னருக்கு நான் தான் ஃபர்ஸ்ட் ப்ரையாரிடியா இருக்கணும். என் சந்தோஷம் முக்கியமா இருக்கணும்…அவ்வளோ தான். எக்ஸ்பெக்டேஷன்ஸ் எதுவும் இல்லாததனாலேயோ என்னமோ உன்னை மறுக்க எந்த ரீசனும் இல்லை”-னு கர்வமும் அலட்சியமுமா சொன்னான். மதுரியா அவனை யோசனையா பார்த்தா. “என்ன? உனக்கு ஏதாவது எக்ஸ்பெக்டேஷன்ஸா?”-னு புருவம் தூக்கி கேட்டான். “என் படிப்பு… பிஜி வரைக்கும் படிச்சு இந்த ஃபீல்ட்லே அச்சீவ் பண்ணணும்கிறது என் கனவு… அதைத் தவிர வேறெதுவும் இல்லை”-னு சொன்னா மதுரியா. “நாட் அ ப்ராப்ளம் மது. இன் ஃபாக்ட் என் வைஃப் ஒரு டாக்டர்-னு என் சர்க்கிள்லே சொல்லிக்கறது என் கெத்தை இன்னும் அதிகம் பண்ணும்”-னு சொன்னான் விதுரன். மதுரியா புன்னகைச்சா. அவ மனசுக்கு விதுரனை பிடிச்சாலும், இவன் குணத்துக்கும் நம்ம இயல்புக்கும் ஒத்துவருமா-னு பயம் வந்துச்சு.
ஆனா அந்த எண்ணமே தப்புங்கறா போல பேசினான் விதுரன். அவனோட கொஞ்சமே கொஞ்சம் எல்லை மீறின உரிமையான பேச்சுலேயும் நட்பிலேயும் இருபதுகள்லே இருக்கற பருவ மங்கையான மதுரியா கவிழ்ந்தா. “ஆல் ரைட்… இன்னியிலே இருந்து நம்ம கோர்ட்ஷிப் ஸ்டார்ட் ஆகுது.. மேரேஜ் வரைக்கும் ஜாலிதான். நிறைய பேசலாம்… புரிஞ்சுக்கலாம்”-னு கண்ணடிச்சு அவ கை மேலே அவனோட கையை வைச்சான். இயல்பா வர்ற வெட்கமும் கூச்சமும் வர, அவ கையை உருவிக்கிட்டா. அடக்கின சிரிப்போட, “இன்னிக்கு மட்டும் ரெண்டாவது வாட்டி”-னு சொன்னான் விதுரன். “என்னது”-னு பார்க்கவும், “நீ இப்படி ப்ளஷ் பண்றது”-னு சிரிச்சான். மதுரியாவும் அழகா சிரிச்சா. “சரி, டைம் ஆகுது… கிளம்பலாமா?”-னு தடுமாறி கேட்டா. “ம்ம்ம்… உன்னைப் பத்தி ரெண்டு விஷயம் தெரிஞ்சுக்கிட்டேன் இன்னிக்கு”-னு நடந்துக்கிட்டே சொன்னான் விதுரன். “என்ன?”-னு கேட்டா மதுரியா. “ம்ம்ம்… வெட்கம் வந்தாலும் அழகா சமாளிக்க தெரிஞ்ச கெட்டிக்காரி. சினிமா ஹீரோயின் மாதிரி நாணி கோணி அசடு வழியற ஆளில்லே… ரெண்டாவது டாக்டர் மேடம் காஃபி ப்ரிஃபர் பண்ண மாட்டீங்க”-னு சொல்லவும் நல்லாவே சிரிச்சா மதுரியா.
அடுத்த நாள் மத்தவங்களுக்கு எப்படியோ… விதுரனுக்கும் மதுரியாவுக்கும் சந்தோஷமும் பேச்சுமா போச்சு. விதுரன் அன்னிக்கே சம்மதம் சொல்ல, பெரியவங்க வேலையும் ஜரூரா போச்சு. ரெண்டுப் பேருமே பகல்லே பிஸினால ஈவினிங்க்லே ஒண்ணு இல்லே ரெண்டு மணிநேரம் பேசினாங்க. உருப்படியாவும் பேசினாங்க. விதுரன் தொழில் ரீதியா பேசற விஷயமும் மதுரியாவுக்கு புரிஞ்சுது. ஐடியா சொல்ல முடிஞ்சுது. மதுரியா மெடிசின்ஸ் படிச்சாலும், தாத்தா, அப்பா, பரத் ஆனந்தியா பேசறதை கேட்டே வளர்ந்ததால சராசரியை விட அதிகமாவே அந்த தொழிலை சார்ந்த அறிவு இருந்துச்சு. விதுரனுக்கும் அவன் ப்ரொஃபஷன் மேலே தீராக் காதல் தான். அதனாலேயே நெருக்கம் வர ஆரம்பிச்சுது. ஆனா விதுரன் தன்னைப் பத்தி மட்டுமே யோசிச்சான். மதுரியாவோட படிப்போ, வேலையோ பத்தி அதிக ஆர்வம் காட்டிக்கலே. அது மதுரியாவுக்கு வருத்தம் தான்னாலும் நாள் பட மாறிடுவான்-னு நம்பினா.
மூணு நாள்லே “மது, விது”-னு கூப்பிடற அளவுக்கு நெருங்கினாங்க. மதுரியாவோட கொள்கைப் படி கல்யாணத்துக்கு முன்னாடி அழகான ஆழமான நட்பு தான் எதிர்பார்த்தா. காதல் நிச்சயமா கல்யாணத்துக்கு அப்புறம் தான் வெளிப்படுத்தணும்-னு எழுதப்படாத விதி. ஆனா அவ விதிகளுக்கு உட்பட்டு அவ மனசு நடக்கும். ஆனா விதுரனோட மனசு? முதல்லே தன் மனசுக்கு அவ எப்படி விதிமுறை வைக்கலாம்-னு சண்டை போட்டு இருப்பான் தெரிஞ்சு இருந்தா!
மூணாவது நாள் சாயந்திரம் காலேஜ் விட்டு எப்பவும் போல ஸ்கூட்டர்லே வெளியே வந்தவ, விதுரன் அப்புறம் அவன் கூட மூணு பேர் இருப்பதை பார்த்து ஷாக் ஆனா. “ஹேய் மது… என்ன ஷாக் ரியேக்ஷன் குடுக்கறே?”-னு கையாட்டவும் அவன் பக்கத்துலே கிராஸ் பண்ணி வண்டியை கொண்டு போனா. “ஹாய்… நீங்க வர்றதா நேத்திக்கு கூட சொல்லலியே? சர்ப்ரைஸ் விசிட்”-னு சிரிச்சுட்டே சொன்னா. அதை அவ சொல்லவும் கூட இருந்தவன் அதிர்ந்து போனான். அவனோட அளவெடுக்கற பார்வை, அவளை அன்கம்ஃபர்டபிள் ஆக்கிச்சு. அவன் முகத்துலே ஒரு கணம் பொறாமை ஜ்வாலையா பத்தி எரிஞ்சுது. அதையும் மதுரியா பார்த்துட்டா. அடுத்த கணமே அது பொய்யோ-னு நினைக்கற மாதிரி அது காணாம போச்சு.
“சாரி… நாங்க தான் இழுத்துட்டு வந்தோம்”-னு திருவாய் திறந்து பேசினான். “ஆமா மது… என் ஃப்ரெண்ட்ஸ்… உன்னை மீட் பண்ணணும்-னு ஒரே ரகளை.. அதான் வந்தேன். ஒரு டென் மினிட்ஸ் க்விக் காஃபி ப்ளீஸ்”-னு சொன்னான் விதுரன். “என்னடா கெஞ்சறே? செய்-னா செய்யப்போறாங்க”-னு சொன்னான் அந்த கூர் பார்வைக்காரன். “ஓ… விதுரன் கிட்ட இருக்கற இந்த நல்ல குணத்துக்கு காரணம் இந்த சகவாசம் தானா?”-னு மதுரியா நினைச்சா. ஆரம்பமே அந்த ஆளை அவளுக்குப் பிடிக்காம போச்சு.
“நோ ப்ராப்ளம் விது.. டென் மினிட்ஸ் ஷுட் பி ஓகே… நான் காலேஜ்லே படிக்கத்தான் செய்யறேன்… ஆனா உங்க வர்க் லோட் ரொம்ப ஜாஸ்தி… ஸோ ஒன்லி டென் மினிட்ஸ்… அண்ணா நகர் ஐஸ்பர்க்லே மீட் பண்ணலாம்”-னு சொல்லவும் விதுரன் அவ அக்கறையிலே உருகித் தான் போனான். “அடேங்கப்பா… மாப்பிள்ளை!! செம்ம… ஆளும் அழகு.. அறிவு, பேச்சு-னு எல்லாத்துலேயும் உனக்கு செம்ம மேட்சு”-னு பாராட்டினான் இன்னொரு ஃப்ரெண்ட். ஐஸ்பெர்க்லே ஒரு டேபிள்லே உட்கார்ந்து ஏதோ ஆர்டர் பண்ணாங்க. அப்புறம் விதுரன் இண்ட்ரோட்யூஸ் பண்ணான். “மது எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ்னாலும் இவங்க மூணு பேரும்தான் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். விக்கி, ரிதேஷ், விக்ரம்… விக்கியோட அப்பா பெரிய காண்டிராக்டர்… ரிதேஷ் விக்கியோட கம்பெனியிலே வர்க் பண்றான். விக்ரம் நம்ம கம்பெனியிலே.. நாங்க நாலு பேரும் ஒண்ணா பி ஆர்க் படிச்சோம்.. அப்போலே இருந்து க்ளோஸ்”-னு இண்ட்ரோட்யூஸ் பண்ணான். மதுரியா அறிமுகமா புன்னகைச்சா. விக்கியோட பார்வை கூர்மையாகி நார்மல் ஆச்சு.
அவங்க எல்லார் கூடவும் நல்லா இயல்பாவேப் பேசினா. விக்கியோட பேச்சு மட்டும் குதர்க்கமாவே இருந்துச்சு. கொஞ்சம் பொறுத்து மறை முகமாவே திருப்பிக் குடுத்தா. விக்கி பேச்சு உண்மையிலேயே ஃப்ரெண்டுக்கு கல்யாணம் ஆனா இவன் நம்ம கூட டைம் ஸ்பெண்ட் பண்ண மாட்டானோங்கற ரீதியிலேயே இருந்துச்சு. அது மதுரியாவுக்கு சுத்தமா பிடிக்கலே. அதனாலேயோ என்னமோ ரிதேஷையும் விக்ரமையும் இயல்பா அண்ணா-னு கூப்பிட்டு பேசறவ விக்கிகிட்ட பொதுவாத்தான் பேசினா. இதை கூட்டு குடும்பத்துலே வளர்ந்த விக்ரம் கரெக்டா கவனிச்சான். சரி பண்ற நோக்கத்துலே “ஏம்மா.. இன்னிக்கு நைட் டிரிங்க்ஸ் பார்ட்டிக்கு உங்க ஆளை கடன் வாங்கிக்கலாமா?”-னு சிரிச்சுட்டே கேட்டான். “என்னை கேட்கறீங்களே அண்ணா? அவர் தனி மனுஷன் தான்… அவர் விருப்பம்.. எப்படி இருக்காரோ அப்படியே இருக்கட்டும்… நான் வந்தேன்-னு எதுவும் மாறாது”-னு சலாமடிச்சு சொல்லவும், “சூப்பரப்பு… லக்கி மேன் டா நீ”-னு மத்த ரெண்டு பேரும் சேர்ந்து சிரிச்சாங்க. அதே நேரம் அவ போன் அடிக்கவும், “யெஸ் பரத்தப்பா… ஆன் தி வே… யா… யா… விதுவைத்தான் மீட் பண்ண வந்தேன்.. நோ ப்ராப்ளம் சொல்லிடறேன்… ஓகே.. ஓகே… பை”-னு போனை வச்சா.
“விது..”-னு மதுரியா ஆரம்பிக்கறதுக்குள்ளே, “மது! கிளம்பலாம்… இருட்டினா நீ அவ்வளோ தூரம் போறது கஷ்டம்”-னு சொல்லவும் மதுரியா திகைச்சுப் போனா. முதல் வாட்டியா அவளைப் பத்தின உண்மையான அக்கறையிலப் பேசினான். “விதுர்… கார்லே வெயிட் பண்றோம்”-னு மத்த ரெண்டுப் பேரையும் விக்ரம் இழுத்துட்டு போனான். மதுரியாவோட கையை பிடிச்சு, “மது… லெட்ஸ் கெட் மேரீட் சூன். கொஞ்சம் கொஞ்சமா என்னை பைத்தியமாக்கறே”-னு சொன்னான். மதுரியா கலகலன்னு சிரிச்சு, “எல்லாம் நடக்கறப்போ நடக்கும். இப்போ ஃப்ரெண்ட்ஸ் வெயிட் பண்றாங்க. கிளம்புங்க”-னு அனுப்பி வைச்சா. இவ்வளோ சந்தோஷமா இருக்கறவங்க எப்படி பிரிய முடியும். அதையும் பார்ப்போம்!