எல்லாம் நல்ல படியா போய் அவங்க கல்யாணம் சீக்கிரமே நடந்திருந்தா எல்லாம் சரியா இருந்திருக்கும்… ஆனா நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்-னு சொல்றதுக்கேத்தாற் போல நடந்துச்சு. விதுரன் தன்னைப் பற்றி மட்டுமே நினைக்கிற மனநிலையில இருந்து வெளியே வர்றணும். மதுரியாவும் வாழ்கையில கொள்கைகள் எவ்வளோ முக்கியமோ அதே அளவு தேவைப்படற இடத்துலே நீக்கும் போக்கும் அவசியம்-னு உணர்ற மனநிலைக்கு வர வரைக்கும் ஒண்ணு சேர மாட்டாங்க-னு கடவுள் நினைச்சார். ரெண்டுப் பேருக்கும் பொதுவான உணர்தல் வேணும். ரெண்டுப் பேரும் ஈகோவை பிடிச்சு தொங்கறாங்களே அது மாறணும். சரி… குறி சொல்லிட்டோம். எப்படி நடக்குது-னு பார்க்கலாம். அந்த ஆரம்பக் கட்டத்துக்கு அப்புறம், அவங்க உறவு கீழ்நோக்கிப் போக ஆரம்பிச்சுது. அதோட முதல் படியா சுவாதி, வேதா பில்டர்ஸ்லே பிசினஸ் மேனேஜரா வேலைக்கு சேர்ந்தா.
சுவாதி சராசரி குடும்பத்துலே பிறந்து ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப் படற நவநாகரிக யுவதி. அழகு-னு பெரிசா இல்லே. ஆனா ஆளுங்களோட நாடித் தெரிஞ்சு காயை நகர்த்த தெரிஞ்ச திறமைசாலி. ஆனாலும் புத்திசாலி இல்லை. அதனாலே தானோ என்னமோ ஈர்க்க தெரிஞ்சவளுக்கு, அவங்களை தக்க வைக்க தெரியலே. அவளுக்கும் விதுரன் வயசுதான். அவளுக்கு விதுரனை பார்த்து அவன் ஆளுமையையும், பணச் செழிப்பையும் பார்த்து ஒரு வித மயக்கம். இப்படி ஒரு பணக்காரனை மயக்கினா வாழ்கை சுலபமா போகும்-னு நினைச்சுத் தன் வேலையை அவன் கிட்டத் தொடங்கினா. வலிய பேசி நட்பை வளர்த்தா. விதுரனுக்கு மதுரியா கூட நிச்சயமாகப் போகுது-னு தெரிஞ்ச அப்புறம் கூட அவ எண்ணம் மாறலே. எவ்வளவோ இடத்துல இருக்கிற மாதிரி இவங்களோடதும் உடைஞ்ச உறவா ஆகட்டும் எனக்கென்ன-னு சுயநலமா யோசிச்சா. அவ எதிர்பார்த்தது போல நட்பும் உருவாக ஆரம்பிச்சுது. எல்லா விதத்துலேயும் மதுரியாவை விட தான் மேல்-னு சொல்லாம காட்டிக்க ஆரம்பிச்சா.
முதல்லே பெரிய பாதிப்பு இல்லேன்னாலும் சூழ்நிலைகள் அதற்கான சந்தர்ப்பத்தை குடுக்க ஆரம்பிச்சுது. ரெண்டாவது அடி… வேதாசலத்தோட மரணம்… இதோ நாளைக்கு ‘நித்தியவாச’த்துக்கு போய் பூ வைச்சு நிச்சயம் பண்ண போற நிலையிலே.. அன்னிக்கு காலையிலே ஏதோ வேலையிலே ஆழ்ந்து இருந்தவர், தலை சுத்தி வியர்த்து நடுக் கூடத்திலே மயங்கி சரிஞ்சார். பதறி போய் ஹாஸ்பிடல்லே சேர்த்து, அவரை பார்க்க நித்தியவாசிகளும் வந்தாங்க. அவரை அட்மிட் பண்ண அதே ஹாஸ்பிடல்லே தான் ஹவுஸ் சர்ஜனா ஸ்டார்ட் பண்ணி இருந்தா மதுரியா. வேதாசலம் கூடவே இருந்தா. ஆனா அவருக்கு பார்வையை தவிர வேறே எந்த ஸ்மரணையும் இருக்கலே. அசைக்க முடியாத கையால மதுரியாவை கெட்டியா பிடிச்சு அவளையே இமைக்காம பார்த்துட்டு இருந்தார். அதை கூட இருந்த நீலவேணியும் பார்த்தாங்க. நீலவேணிக்கும் மதுரியாவுக்கும் அதற்கான அர்த்தம் புரியவில்லை. கொஞ்ச நேரத்தில் மூச்சுத் திணறல் வரவும் நீலவேணியும் கூட இருக்க முடியாம, ஐசியூவுக்கு மாத்தினாங்க. அதே போராட்டம் தொடர அடுத்த 4 மணிநேரத்துலே இறந்தும் போனார். டாக்டர்கள் சொன்னதை ஒருத்தராலேயும் நம்ப முடியலே. எல்லாரும் இடிஞ்சுப் போனாங்க விதுரன் உள்பட. அவனாலயும் நிதர்சனத்தை ஒத்துக்கவே முடியலே. “ரியா… என்னாச்சு… ஏன் இப்படி ஆச்சு?”-னு ஷாக்லே அவளை பிடிச்சு உலுக்கினாங்க நீலவேணி.
“பாட்டி, தாத்தாவுக்கு ப்ரஷர் அதிகமாகி, ஹெமரேஜ் ஆயிடுச்சு. நாலு இடத்துலே ரத்தக்கசிவு இருந்ததால ஒண்ணும் பண்ண முடியலை”னு அவங்க மேலேயே சாய்ஞ்சு அழுதுட்டா மதுரியா. அதுக்கப்புறம் ரெண்டு குடும்பத்தினர் வீட்லியும் சோகம் வியாபிச்சுது. நீலவேணியை கற்பகவல்லி தூக்கி நிறுத்தினாங்கன்னா வேதமூர்த்தியை நித்தியானந்தமும் நித்தியவாசனும் தூக்கி நிறுத்தினாங்க. விதுரனுக்கு எல்லா வகையிலும் மதுரியா சப்போர்ட் பண்ணா. அவனை தாத்தாவோட மறைவு நினைச்சதை விட அதிகமாகவே பாதிச்சுது.
அடுத்த ஒரு மாசம் மதுரியா விதுரனுக்கு மாரல் சப்போர்ட் பண்ணி, அவனை ஏறக்குறைய நார்மல் ஆக்கினா. அங்கே இருந்து தான் பிரச்சினைகள் ஆரம்பிச்சுது. இதுக்கப்புறம் மதுரியானால நட்புங்கற கோட்டுக்குள்ளே இருக்க முடிஞ்சுது. ஆனா விதுரனால முடியலே. அவளை நெருங்க ஆரம்பிச்சான். காதலனா உரிமை எடுத்து நெருக்க ஆரம்பிச்சான். அந்த நெருக்கமே அத்து மீறலாவும் தப்பாவும் தெரிய ஆரம்பிச்சுது கொள்கையோடப் பிடிப்புல இருந்த மதுரியாவுக்கு. அதனால கஷ்டப்பட்டு சந்திப்புகளையும் போன் கால்களையும் அளவுக் கோலுக்குள் கொண்டு வந்தா. அதை வெட்கமா நினைச்சு விதுரனுக்கு அது கூட உல்லாசமாத்தான் இருந்துச்சு.
மூணு மாசம் ஓடிப் போன நிலையிலே வீட்டுமட்டுக்கு பூ வைச்சு பேசி வைச்சிருந்தாங்க. வேதம், நித்தியம் குடும்பங்களும் இன்னும் யாருமே வேதாசலத்தோட மறைவுலே இருந்து மீளாததுனால ஒரு ஞாயித்துக்கிழமை காலையிலே சாதாரணமா ரெண்டு குடும்பங்கள் மட்டும் சந்திச்சு நடந்துச்சு இந்த வைபவம். ரெண்டு குடும்பமும் ஏக மனதா வேதாசலம் இறந்து ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம்னு முடிவு பண்ணாங்க. விதுரனுக்கு இதிலே பெரிய ஏமாற்றம். அவனால ஒத்துக்கவே முடியலே. மதுரியாவுக்கு இதுலே எந்த பிரச்சினையும் இருக்கலே. அதுவும் விதுரனுக்கு ஏமாற்றம். கொஞ்சம் கடுப்பானான்.
அவன் கடுப்பை அதிகப்படுத்தற மாதிரி பேசினாங்க சுவாதி, விக்கி, ரிதேஷ் எல்லாம். “என்ன சார்? வீட்லே வயசானவங்க-னு இருந்தா இப்படி நடக்கறது தான். அதுக்கு-னு சின்னவங்க ஆசையை புதைச்சுடுவாங்களா?” – இது சுவாதி. “உன் கல்யாணமே உன் கையிலே இல்லையே மச்சான்?” – இது விக்கி. “ரியா சிஸ்டர் ஒண்ணும் சொல்லலியா?” – இது ரிதேஷ். இப்படி கோபத்துலே இருந்தவனை மதுரியாவோட அளவு பேச்சு இன்னும் கோபப்படுத்துச்சு. இப்படியே மனக்குழப்பத்திலே கோபத்துலே நாட்கள் போக, அந்த நிலையை தனக்கு சாதகமா பயன்படுத்திக்க நினைச்ச சுவாதி, விதுரனோட குழம்பின மனசுலே விஷத்தை விதைக்க ஆரம்பிச்சா.
“விதுர்… ஊர்ப்பக்கம் சொல்லுவாங்க… கட்டிக்கற பெண்ணுக்கு அதிர்ஷ்டம் இல்லைன்னா சந்தோஷமே இருக்காது”-னு மெதுவா சொன்னா சுவாதி. “வாட் டு யூ மீன்?”-னு கூர்மையா கேட்டான் விதுரன். “நான் மதுரியாவை ப்ளேம் பண்ணலே. ஆனா விஷயம் இல்லாமலா சொல்லுவாங்க?”-னு சொல்லிட்டு விட்டுட்டா. ஆழ் மனசுலே அவனோட சந்தோஷம் இல்லாத நிலைக்கு மதுரியா தான் காரணம்-னு விதை நல்லா முளைக்க ஆரம்பிச்சுது. இன்னொரு பக்கம் விக்கியும் ரிதேஷும் சேர்ந்து அவன் ஈகோவை வளர்த்தற மாதிரி சொல்லவும் அவனோட ஈகோ கூட சேர்ந்து செல்ஃப் ரெஸ்பெக்டும் முழிச்சுக்கிச்சு. போன்லேயே ஆர்க்யூமெண்ட், சண்டைன்னு ஆச்சு. அந்த சண்டைக்கு அப்புறம் அவன் சமாதானம் பண்ண போனா, அதை செவ்வனே விக்கியும் சுவாதியும் ஆளுக்கொரு பக்கம் தடுத்தாங்க. இவங்க ரெண்டு பேருக்கும் காரணம் தான் வேறே. இலக்கு ஒண்ணு தான்.
இந்த நிலையிலே தான் சுவாதி தந்திரமா அடுத்த கட்டத்துக்கு காயை நகர்த்தினா. நட்பை தாண்டிப் போனா. ஆறுதல் சொல்றேன்-னு பேசிப் பழகற நேரத்தை அதிகப் படுத்தினா. தன்னுடைய காதலை சொல்லாம சொன்னா. ஆனா விதுரன் மனசுலே ஒழுக்கமானவன். அவனுக்கே தெரியாம மதுரியாவை ஆழமா நேசிக்கறவன்.. நியாய தர்மம் புரிஞ்சவன். அவனோட ஒரே தப்பு தான்கிற அகந்தையும் ஈகோவும் தான். ஆழ் மனசு தன்னைத் தேடி மதுரியா வரணும்-னு எதிர்பார்த்துச்சு. இதுலே சுவாதி ஏத்தி விட்டதுலே காதலே பிரச்சினை-னு நினைச்சானே தவிர, அவ இல்லேன்னா இவ-னு நினைக்கலே. அதனாலேயே அவன் பழக்கம் நட்பு தாண்டவே இல்லை ஆனா அதை மதுரியா அனர்த்தமா எடுக்கும் போதுத் தடுக்கவும் இல்லை.
மதுரியா தனக்கு சரியானவளா-னு யோசிச்ச மனசு, சுவாதியை அந்த இடத்துக்கு சம்பந்தப்படுத்திக் கொஞ்சம் கூட யோசிக்கலே. ஆனா சுவாதியும் விக்கிரமாதித்தன் வேதாளம் போல அவ முயற்சிகளை நிறுத்தவே இல்லை. விக்ரம் ஒரு மௌன சாமியார் மாதிரி அத்தனையையும் வேடிக்கை பார்த்தான். முதல்லே அவனால முடிஞ்ச வரைக்கும் விதுரனுக்கு அட்வைஸ் பண்ணான். ஆனா ரெண்டுப் பேரோட தப்பு போதனையிலே ஊறியிருந்த விதுரன் மனசுக்கு நல்ல விஷயம் ஏறவே இல்லை. அப்புறம் அவன் விதி-னு இருந்துட்டான். அதுக்கு இன்னொரு காரணம், நினைச்சதை சாதிச்சு பழக்கப்பட்ட விக்கி, ஏதோ ஒரு காரணத்துக்காக இவங்க பிரியணும்-னு நினைக்கிறான். அது ஏன்-னு தெரியாத வரை ஒண்ணும் பண்ண முடியாது-னு தெரிஞ்சுது. அவனால முடிஞ்சுது ரிதேஷை மிரட்டி இதுக்கு துணை போகாம இருக்க வைச்சதும், ரிஷிநந்தன் கிட்டேயும் வேதமூர்த்திகிட்டேயும் சுவாதியைப் பத்தி சொல்லி வார்ன் பண்ணதும் தான்.
ரிஷிநந்தனுக்கும் வேதமூர்த்திக்கும் விதுரனோட நடத்தையிலே பெரிய அதிர்ச்சி. இப்படியொரு தப்பு நடக்கும்-னு அவங்க நினைச்சு கூட பார்க்கலே. விதுரனோட குணத்துக்கு நேரடியா எதுவும் செய்ய முடியாது. அதனால மறைமுகமா செஞ்சாங்க. சுவாதியை தன்னோட டொமைனுக்கு மாத்தினான் ரிஷி. பேச்சு வார்த்தை குறையற மாதிரி பிசியாவே வைச்சிருந்தான். விதுரனுக்கு எமோஷனலா எந்த பாதிப்பும் இல்லே… ஆனா சுவாதியும் லேசு பட்டவ இல்லே… அவன் கூட போன் கால் தொடர்ந்துச்சு. ப்ரேக்லே சந்திக்கறதும் தொடர்ந்துச்சு. அது போன விதம் அண்ணனும் அப்பாவும் இயலாமையிலே திகைச்சாங்க. இந்த நிலையிலே தான் வீட்டுலே சங்கரி, நீலவேணி,கிருத்திகாவுக்கு இந்த விஷயம் சொல்லப்பட்டுச்சு. “பொண்ணுங்க ஒண்ணும் ஆணுங்களை திருத்தி வழிக்கு கொண்டு வர கரெக்டிவ் செண்டர் கிடையாது”-னு நினைக்கிற குடும்பம் தான்னாலும், விதுரனை மதுரியாவைத் தவிர வேறே யாராலும் வழிக்கு கொண்டு வர முடியாது-னு அவங்க எல்லாரும் நம்பினாங்க. அவன் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன நாளிலே இருந்து அவன் மாற்றங்களை கண்ணால பார்த்தவங்க ஆச்சே.
கல்யாணம் நடந்தா எல்லாம் சரியாயிடும்-னு குருட்டு நம்பிக்கைலே அவங்க நாட்களும் நகர்ந்துச்சு. பேரன் கல்யாணத்தை தள்ளி போட்டது தப்போ-னு நினைச்ச நீலவேணி குற்றவுணர்வு காரணமா வேதாசலம் படத்துக்கு முன்னே அடிக்கடி நிக்க ஆரம்பிச்சாங்க. இப்படியே ஏறா மேடு பாயா தண்ணி-னு ஒரு வருஷம் முடியறதுக்கு நெருங்கி வந்துச்சு. மதிரியா – விதுரன் உறவு முறை நிறைய படிகள் பின்னோக்கி போச்சு. விதுரனுக்கு அவளை நினைச்சாலே எரிச்சலும் கோபமும் தான் வந்துச்சு. ஆனாலும் அவளை விட மனசு மட்டும் வரலே. அவங்களோட உறவை முடிவுக்கு கொண்டு வர்றதுக்குன்னே வந்துச்சு விக்கியோட பர்த்டே. ரொம்ப நாள் கழிச்சு அதுக்குத் தான் ரெண்டு பேரும் மீட் பண்ணாங்க. ஒரு டிஸ்கோ க்ளப்லே பார்ட்டி வைச்சான் விக்கி. அங்கே போய் க்ளப்லே ஒரே டான்ஸ் ஆட்டம்-னு இருந்தப்போ, விதுரன் மதுரியாவை கூட்டிட்டு டான்ஸ் ஃப்ளோருக்கு போனான். அவன் கூட ஒட்டி உரசி ஆட முடியாம தவிச்சா. ஆனா அவனுக்கு அதெல்லாம் இல்லை. இன்னும் சொல்லப் போனா, அவளுக்கு பிடிக்கலேன்னு தெரிஞ்சு வேணும்னே அதிகம் சீண்டினான். ஒரு கட்டத்துலே அவனை தள்ளிட்டு வந்து உட்கார்ந்தா.
எரிச்சலும் கோபமுமா வந்து அவ பக்கத்துலே உட்கார்ந்தான். அதுக்கப்புறம் கேக் கட் பண்ணி எல்லாரும் வாழ்த்து சொன்னாங்க. ரிதேஷ் அவனோட காதலியைக் கூட்டிட்டு வந்தான். அந்த பொண்ணுக்கு கை குலுக்கி தேங்க்ஸ் சொன்ன விக்கி, மதுரியா வாழ்த்து சொன்னதுக்கு, நட்போடக் கட்டிப் புடிச்சு தேங்க்ஸ் சொன்னான். ஒரு நிமிஷம் அதிர்ந்து நின்ன மதுரியா விறுவிறு-னு கிளம்பிப் போயிட்டா. அதே ஆத்திரத்தோட விதுரனும் கிளம்பிட்டான். அன்னிக்கு ராத்திரி போன்லே ரெண்டுப் பேருக்குள்ளேயும் பெரிய சண்டை. வார்த்தை தடிச்சு கடுமையாகி ஒரு வாரம் ரெண்டு பேரும் பேசிக்கவே இல்லை. ரெண்டுப் பேரும் சமாதானமே ஆகலே. விதுரனை விக்கியும் சுவாதியும் அவங்க பங்குக்கு ஏத்தி விட்டு மொத்தமா அவளுக்கு முழுக்கு போடணும்னும் அவ அவனுக்கு ஏத்தவ இல்லேன்னும் நம்ப வைச்சாங்க. அதோட பலன் அன்னிக்கோட மனசுலே இருந்து அவளை தூக்கி எறிஞ்சான். அதாவது எறிஞ்சதா நினைச்சான்.
அவன் அவளை விலக்கினதும் சுவாதிக்குத்தான் பயங்கர குஷி. அதை முடிவு பண்ண அஞ்சாவது நாள் மதுரியாவை கூப்பிட்டு பேசி உறவை முறிச்சுக்கிட்டான். ஆனா அதனாலே எல்லாம் சுவாதியால அவனை நெருங்க முடியலே. அவளை ஒரு தோழி இடத்துல வைச்சவன் அதுலே இருந்து மாறவே இல்லை. விதுரன் அப்போ பண்ண ஒரே தப்பு அவ அவனை நெருங்கி வரும் போது அவளை அடக்காம இருந்தது தான். அதனால தான் பெரிய வில்லங்கம் எல்லாம் சந்திக்கப் போறான். அவனுக்கு இன்னுமே புரியலே மதுரியா அவன் சொன்னதை எப்படி சுலபமா எடுத்துட்டா-னு.
அதுக்கு காரணம், விதுரன் பிரிவைப் பத்தி சொல்றதுக்கு ரெண்டு வாரம் முன்னாடி அவளோட நீட் மதிப்பெண், ஃபைனல் இயர் ரிசல்ட் எல்லாம் சொல்ல சந்தோஷமா கிளம்பி அவனைப் பார்க்க அவனோட ஆபீசுக்கு போனா. ரிஷி, வேதமூர்த்தி எல்லாம் பார்த்துட்டு அவன் ரூம் கதவை தள்ளினவளுக்கு அவ்வளோ பெரிய அதிர்ச்சி. அவ வாழ் நாளுக்கான மொத்த அதிர்ச்சி. பிரிவோட மொத்த அதிர்ச்சியை அன்னிக்கே அனுபவிக்க தொடங்கிட்டா.
ஒரு நொடிக்கு மேலே அந்த காட்சியை பார்க்க முடியாம, “துரோகி, பச்சை துரோகி..”-னு விதுரனுக்கு ஒரு வர்ணனையை குடுத்துட்டு வந்த சுவடே தெரியாம போயிட்டா. அழுகைன்னாலே என்னன்னு தெரியாத மதுரியா அந்த நாளுக்கு அப்புறம் தான் ரொம்ப பலவீனமானா. அவளால விதுரன் மேலே இருக்கற காதலை, அன்பை மாத்திக்க முடியலே. வெறுக்க முடியலே. ஆனா அவ பார்த்த விஷயம் அவ மனசை ரணப் படுத்திச்சு. துக்கம், துரோகம், வேதனை இதெல்லாம் ஒரு சேர அனுபவிச்சா. பார்த்ததை மறக்க முடியலே. ராத்திரியெல்லாம் கண்ணீர்தான்.
ஒரு வருஷம் முழுசா நடந்ததை இன்னிக்கும் நினைச்சு கண்ணீர் வடிச்சா. “விது… நீங்க இப்படிப்பட்ட… துரோகியா? எனக்கு துரோகம் பண்ண எப்படி மனசு வந்துச்சு? ஒரு வேளை நீங்க என்னை விரும்பவே இல்லையா?நான் தான் பைத்தியம் போல அப்படி நினைச்சு ஏமாந்துட்டிருந்தேனா? ஏன்? ஏன்?”-னு வாய்விட்டு கதறவும் சத்தம் கேட்டு ஆனந்தியாவும் பரத்தும் ஓடி வந்தாங்க. “ரியா…ரியா என்னம்மா? இங்கே பார்”-னு அவ முகத்தை மூடி இருந்த கையை விலக்கினான் பரத். அவன் மேலேயே சாய்ஞ்சு அடி வயித்துலே இருந்து கதறினா மதுரியா. ஆனந்தியா.. பரத் கண்ணுலேயும் தண்ணி வழிஞ்சுது. “ரியா… ப்ளீஸ்… போதும்-டீ! நீ இதெல்லாம் முழுசா மறக்கணும். மறந்துதான் ஆகணும். நீ தேடிப் போக நிறைய கனவுகள் இருக்கு”-னு அவ முகத்தை துடைச்சு சொன்னா ஆனந்தியா. “ஆமா ரியாம்மா… இந்த விதுரன் உனக்கான இலக்கு இல்லடாம்மா. நாங்க எல்லாரும் இருக்கோம். உன் சந்தோஷம் தான் எங்களுக்கு வேணும்”-னு பரத்தும் அவன் பங்குக்கு தேறுதல் சொன்னான்.