அத்தியாயம் 16

திருமணநாள் நெருங்க நெருங்க அவந்திகாவிற்கு பதற்றம் அதிகமானது… அதையும் மீறி மனம் எல்லாம்  அழுத்தம் அதிகமாகி அவளை தவிப்புறச் செய்தது…

நிம்மதி இன்றி கிடந்தாள் அவந்திகா …வீட்டிலும் அந்த பெண் பாதுகாவலர்களை காண இன்னும் அவளுக்கு அழுத்தம் அதிகமானதே ஒழிய குறையவே இல்லை …

 

என்னை நினைத்தாளோ அன்று விடுமுறை தினம் என்பதால் தான் வளர்ந்த ஆசிரமத்தை காண கிளம்பி விட்டிருந்தாள்…

காரில் செல்லாது கேப் ஒன்றை புக் செய்து அதில் ஏறிக் கொண்டாள்…

அவளை அந்த இரு பெண் பாதுகாவலர்களும் பின்தொடர்ந்து வந்திட.. கடுப்பாக இருந்தது அவளுக்கு..

 

ஆசிரமம் வந்ததும் கீழ் இறங்கியவள்  ஏதோ நீண்ட நாட்களுக்கு பின்னர் சுதந்திர காற்றே சுவாசிப்பது போல உணர்ந்தாள்…

 

ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவள் அந்த பெரிய கேட்டினை புன்னகையுடன் பார்த்து விட்டு உள்ளே நுழைந்தாள்..

அதை கண்ட அவளது பாதுகாவலர்கள் வெளியவே நின்று விட்டனர்…

 

உள்ளே வந்த அவந்திகா அலுவலக அறைக்கு தான் முதலில் சென்றாள்… அப்போது அங்கிருந்த மதர் அவந்திகாவை கண்டதும் ஆச்சரியப்பட்டவராய் இருக்கையில் இருந்து எழுந்து வந்து அவளது கைகளை பிடித்துக் கொண்டார்.…

அவளுக்கும் அவரை கண்டது பெரு மகிழ்ச்சியாக இருந்தது..

 

” மதர்..”  என்றவளது கன்னத்தை வாஞ்சையாக  பிடித்தவர்,

 

“ எப்படி இருக்க அவந்தி…??”

 

“நல்லா இருக்கேன் மதர்… நீங்க எப்படி இருக்கீங்க ..??? பசங்க எல்லாரும் எப்படி இருக்காங்க .??”

 

என கேட்டதும் தலை சாய்த்து அவளை பார்த்தவர் ,

“எல்லாரும் நல்லா இருக்காங்க

..ஆனா இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்காங்க..!” என்றதும் அவரை புருவம் சுருக்கி புரியாது பார்த்தவள்,

 

“ஏன்…?? அப்படி என்ன விஷயம் ??”

 

“ஏன் உனக்கு எதுவும் தெரியாதா என்ன‌.??”  என கேட்டதும் அவளுக்கு உண்மையில் எதும் புரியவில்லை…

 

” நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியல..??”  என நேரடியாகவே கூறிவிட்டு இருந்தாள்…

 

அவரும் சிரித்தபடி அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு வெளியே அழைத்து வந்தவர்,

 

” உனக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேன் ..” என்றதும் அதிர்ந்து போய் அவரை பார்த்த அவந்திகா,

 

” உங்களுக்கு எப்படி தெரியும் மதர்..??”  என திணறலுடன் கேட்டவளை மென் புன்னகையுடன் நோக்கியவர்,

 

” நீ சொல்லலனாலும் உன்னை கட்டிக்க போறவரு எல்லாத்தையும் சொல்லிட்டாரு..”  என்றதும் இப்போது அவந்திகாவுக்கு மயக்கமே வராத குறைதான் ..

 

“என்ன புரியலையா..??? அங்க பாரு ..!” என அவர் காட்டிய திசையில்  தலை திருப்பி பார்த்தாள்…

 

அந்த ஆசிரமத்தில் இருக்கும் அனைத்து சிறுவர் சிறுமிகளுக்கு உணவுகள், ஆடைகள், பரிசு பொருட்கள் என அனைத்தையும் வழங்கிக் கொண்டிருந்தான் அதிரூபன்… 

 

நிம்மதியை தேடி அவள் இங்கு வந்தால் அவளது நிம்மதியை இன்னும் குலைக்கும் விதமாக அவளது மணாளன் இங்கு இருப்பதை கண்டதும் சோர்ந்து போய்விட்டாள் அவந்திகா…. 

 

ஆனால் அதை கவனிக்காத மதர்,

 

” ரொம்ப தங்கமான பையன் அவந்திகா… முதல்ல அவர் யாருனு எங்களுக்கு தெரியல.. அப்புறம் தான் உன்னை கல்யாணம்  பண்ணிக்க போறதை பத்தி சொன்னாரு..

 

நீ உன் கல்யாணத்தை பத்தி எங்க கிட்ட சொல்லாம விட்டது எனக்கு வருத்தம் தான்.. ஆனால் அந்த பையன் உன்னை பத்தி அவ்வளவு பெருமையா சொன்னாரு..

 

ரெண்டு பேரும் லவ் மேரேஜாமே..!  கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஆண்டவர் உனக்கு நல்ல கணவரை தான் தந்திருக்கிறார்.. இந்த வாழ்க்கையையும் அந்த பையனையும் கெட்டியா பிடிச்சுக்கோ …உனக்கு இனி எல்லாம் நல்லதே நடக்கும்..”  என மனதார கூறியவரை கண்கலங்க பார்த்த அவந்திகாவிற்கு தன் நிலையை எண்ணி வேதனையாக இருந்தது …

 

முயன்று அவரை இயல்பாக பார்த்து புன்னகைத்தவள்,

 

” கண்டிப்பா… மதர்…”  என்றதும்,

 

“போ. ….ரெண்டு பேரும் சேர்ந்து கொடுங்க..” என்றதும் அவரிடம் விடைபெற்று அதிரூபன் இருக்கும் இடத்தினை நோக்கி மெல்ல நடை போட்டுச் சென்றாள் …

 

எப்போதும் அவனை கோட் சூட்டில் தான் பார்த்திருக்கிறாள்.. ஆனால் இன்று தனது கோட்டை மட்டும் கழட்டி  வைத்து விட்டு வெள்ளை நிற சட்டையினை முட்டி வரை மடக்கி வைத்து இருந்தவன் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அவர்கள் உயரத்திற்கு குனிந்து பரிசுகளை சிரித்த முகமாய் தந்து கொண்டிருந்தான்…

 

ஏசிலேயே பிறந்து வளர்ந்தவன் ஆயிற்றே… வெயில் அவனது வெளீர் நிற மேனியில் பட்டதும்  சட்டென உருகி விட்டான் போல..

 

முத்து முத்தாய் வியர்வை அவனது  காதோரம் வழிந்து கொண்டிருந்தது …

 

அவ்வப்போது அவற்றையெல்லாம் தனது கைக்குட்டை கொண்டு மெல்ல ஒற்றி எடுத்தவன் தனது முகத்தில் சோர்வையும் களைப்பையும் கொஞ்சமும் காட்டிக் கொள்ளாது ஒவ்வொரு குழந்தைகளிடமும் சிரித்து பேசிக் கொண்டே இருந்தான்…

அந்நேரம் ஏதோ தோன்ற சட்டென தலை திருப்பி பார்த்திட அங்கு அவந்திகாவை கண்டதும் சற்று அதிர்ந்து தான் போனான் அதி ரூபன்…

 

வேகமாக தனது கைபேசி எடுத்து பார்த்தான் அதில் அவளுக்காக நியமிக்கப்பட்டிருந்த பெண் பாதுகாவலர்கள் அவனுக்கு அவள் செல்லும் இடத்தை குறுஞ்செய்தி அனுப்பியிருந்தனர்..

 

அதை கண்டு விட்டு  பேண்ட் பாக்கெட்டில் கைப்பேசியை போட்டவன் அவளையே விழியகலாது பார்த்தவாறு நின்று இருக்க… அவந்திகாவோ கீழே இருந்த புல் தரையை பார்த்தவாறு நடை போட்டு அவன் அருகில் வந்து நின்றாள்…

 

அங்கு இருந்த உதவியாளரும் அவந்திகாவின் கைகளை பிடித்துக்கொண்டு ,

 

“எப்படி இருக்க அவந்தி…?? ரொம்பவே சந்தோஷமா இருக்கு ..உனக்கும் சாருக்கும் கல்யாணம்னு கேள்வி பட்டதேம் எவ்வளவு தெரியுமா சந்தோஷமா இருந்துச்சு எங்களுக்கு..??

 

நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும்.. உன் நல்ல மனசுக்கு ஆண்டவன் உனக்கு நல்ல வாழ்க்கையை தான் கொடுத்து இருக்கான் ..உன்னை மாதிரியே இவரும் நம்ம பசங்களுக்கு நிறைய ஹெல்ப் பண்றேன்னு சொல்லி இருக்காரு..”  என்றதும் அவந்திகாவும் தலையை மட்டும் அசைத்து வைத்தாள்…

 

பின் இருவருக்கும் தனிமை தந்த உதவியாளர்,

 

“சரி இனி‌நீங்களே சேர்ந்து கொடுத்துடுங்க ..நான் மேடமை பார்த்துட்டு வந்துடுறேன் ..”என்று விட்டு அவர் சென்று விட்டார்..

 

பெருமூச்சுடன் அதிரூபனை பார்த்தாள் அவந்திகா… அவனும் பரிசு பொருட்களை ஒவ்வொரு குழந்தையிடமும் கொடுத்தவாறு,

 

” திடீர்னு இங்கு வந்து இருக்க..??”  என கேட்டதும் அவளோ ,

 

“அதே கேள்வி தான் நானும் கேட்கிறேன் ..நீங்க எதுக்கு இங்க வந்து இருக்கீங்க..??”  என நேரடியாக முகம் இறுக கேட்டவளை ஆயாசமாக பார்த்த அதிரூபன்,

 

” இது என்ன கேள்வி..??.. இது ஆசிரமம் யார் வேணாலும் வரலாம் ..உனக்கு என்ன பிரச்சனை ..??” என கேட்டதும் அவனுடன் சண்டை போடும்  மனநிலை அவளுக்கு இல்லாததால் அங்கிருந்த கல் இருக்கையில் அமைதியாக சென்று அமர்ந்து கொண்டாள்… 

 

அங்கிருந்த குழந்தைகள் தங்களுக்கு கிடைத்த பரிசு பொருட்களை ஆவலுடன் பிரித்துப் பார்த்து தனது நண்பர்களுடன் காட்டி மகிழ்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தனர் …

 

அவற்றைக் காணும் போது கண்கள் தானாக கலங்கியது அவளுக்கு… அவளும் இதே போலத்தான் யாராவது ஆஸ்ரமத்திற்கு வந்து பரிசு பொருட்களை தந்து விட்டால் போதும் அவளும் அதை ஆசையாக பிரித்துப் பார்த்து மகிழ்ந்து கொள்வாள்…

 

இப்போது தன்னை போல இருப்பவர்களுக்கு பரிசு பொருட்கள் அளிக்கும் நிலையில் வந்து விட்டிருந்தாலும் ஆண்டவன் தனக்கு சரியான எதிர்காலத்தை மட்டும் தந்திடாது குறை வைத்து விட்டானே என்கிற ஆதங்கம் அவளுக்குள் தீயாய் தகித்தது…

 

அவளது வருங்காலத்தையே கானல் நீராய் ஆன ஏமாற்றத்தை தாங்க முடியாது மெல்ல விழிகளை மூடி சாய்ந்த அமர்ந்திருந்தவளை எதேச்சையாக தலை திருப்பி கண்ட அதிரூபனுக்கு மனம் சற்று கணத்து தான் போனது…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top