அத்தியாயம் 21(USAP)

அத்தியாயம் 21(USAP)

 

இங்கு அகச்செழியனுக்கோ அவன் கண்டுபிடித்த விடயங்களால் தலை வலி தான் வந்தது. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளின் தரத்தின் குறைப்பாடுகளை ஆராய வந்த இடத்தில்

 

அகச் செழியனுக்கு அறிய கிடைத்த விடயங்கள் ஒவ்வொன்றும் அவன் கனவிலும் நினைத்துப் பார்க்காத பெரும் குற்றங்களுக்கான தொடக்க புள்ளிகளே,

 

அதை நினைத்தவனுக்கு தலை விண் விண்னென்று தெறிக்க ஜீப்பில் யோசனையுடன் அமர்ந்திருக்க, அச் சமயம் அன்றைய நாளுக்கான வகுப்புகளை முடித்துக் கொண்டு தீவிர சிந்தனையுடன் பிறைமதியும் வெளியே வர,

 

அவனை கண்டுக்கொண்டவளுக்கு எரிச்சல் தான் வந்தது. அவனை கண்டும்காணாது கடந்து செல்ல எத்தனிக்க

 

அசெழியனோ, “ஏய்! ஏய்! கண்ணாடி எங்க போற?”

 

என்று கேட்டுக் கொண்டே ஜீப்பிலிருந்து கீழிறங்க அவளோ அவனை கண்டுக்கொண்டாளில்லை விறுவிறுவென வேகமாக நடக்க அவனோ இரண்டே எட்டில் அவளை நெருங்கியவன் வழி மறித்தபடி,

 

“எங்கடி போற? கூப்பிட்டா பதில் சொல்லிட்டு போ”

 

என்று குறுக்கே நிற்க அவளோ மார்புக்கு குறுக்காக கையை கட்டியபடி,

 

“உங்களுக்கு என்ன வேணும் ஏ.சி.பி சார்? நீங்க எப்படிப்பட்ட ஆள்னு எனக்கு தெரியும் பொண்ணுங்க உங்க பின்னாடி சுத்தி வரணும்னு நினைப்பீங்க நீங்க இப்போ என்

 

பின்னாடி சுத்துறீங்கன்னா என்னால உங்களுக்கு ஏதோ காரண காரியம் ஆகணும் அப்டி தானே”

 

என்று நிமிர்வுடன் கேட்க அகச் செழியனோ, “அப்டி இல்ல, எனக்கு நீயும் முக்கியம் தான்”

 

என்று கூற அவளோ அவனை இடைநிறுத்தி, “அப்போ வேற ஏதோ விஷயமிருக்கு அதான் என்ன தேடி வந்துருக்கீங்க அப்டி தானே”

 

என்றதும் அவனோ சற்று யோசித்து விட்டு ஆமோதிப்பாக தலையசைக்க பிறைமதிக்கு சிரிப்பு தான் வந்தது.

 

அவளை நினைத்து தான் வாழ்க்கையில் ஏமாறலாம் தான் ஆனால் ஒவ்வொரு முறையும் விரும்பியவர்களிடமும் தான் அதிகம் அன்பு செலுத்தியவர்களிடமும் ஏமாற்றமடையும் போது தோன்றும் ஒரு வித வலி கலந்த விரக்தி அவளுக்குள்,

 

அவள் காதுக்குள், “உன் ஸ்டேட்டஸ் என்ன? என் ஸ்டேட்டஸ் என்ன? நான் எப்படி உன்ன போய் ஹா.. ஹா. சில்லி கேர்ள் ஏதோ புத்தகமும் கையுமா படிப்ஸ் போல சுத்துறியேனு விளையாண்டு பார்த்தேன்”

 

என்று கூறி விட்டு செழியன் சிரிக்க அன்று கண்ணீருடன் நின்றிருந்த பிறையோ, இன்று புன்முறுவலுடன் “அட்லீஸ்ட் இப்பயாவது உண்மைய சொன்னீங்களே ஏ.சி.பி சார் அது மட்டும் சந்தோஷம் தான்”

 

என்று கூற செழியனோ, “அது அப்டின்னு முழுசா சொல்லிர முடியாது ஆனா எனக்கு கொஞ்சம் உன் கூட பேசனும் அதுக்கு இங்க”

 

என்று இழுக்க பிறையோ, “வாரேன்” என்று அமைதியாக ஜீப்பில் ஏறி அமர அவர்களது வாகனமும் கிளம்பியது.

 

அவர்களை உலவு பார்த்தபடி நின்றிருந்த ஒற்றனோ, “பாஸ் பிறை மேடம் அந்த ஏ.சி.பி கூட கிளம்பி போறாங்க”

 

என்று கூற அப்பக்கம் அதை கேட்டுக் கொண்டிருந்தவனோ, “அவள விடு அந்த சின்ன பொண்ணு மீனா தான் என் டார்கெட் அவள தூக்கு என்னோட லக்கி சார்ம்”

 

என்று துண்டித்து விட இங்கு யமகனின் வீட்டில் என்றுமில்லாத அமைதி குடிக்கொண்டிருந்தது. எப்போதும் ஆரவாரமாக திரியும் அவனது பணியாளர்கள் மேற்பார்வையாளர்கள்

 

என்று யாருமே அங்கில்லை யமகனின் கண்களில் எதையோ இழந்த பாவனை இடையில் வெள்ளை வேட்டி மாத்திரம் வீற்றிருக்க உடலில் ஆங்காங்கே திருநீறு பூசப்பட்டிருந்தது.

 

கைகளில் உயர்ரக மதுபானம் குடித்து குடித்து சிவந்து போன உடலும் கண்களும் கூட அவன் ஆண்மையை மெருகேற்றிக் காட்டியது.

 

கையிலிருந்த புகைப்படத்தை ஏக்கமாக பார்த்தவன், “யாழு உன்ன அப்டியே விட்ருக்க கூடாதுடா இந்த பாவிய மன்னிச்சிருடா”

 

என்று அழ அப் புகைப்படம் வேறு யாருடையதுமல்ல யாழினியின் புகைப்படம் ஆம் பிறைமதியின் அண்ணன் பிரணவனின் மனைவியும் யமகனின் காலஞ்சென்ற தங்கையுமான யாழினியின் புகைப்படம் தான்,

 

சிறு வயதில் அன்னையை இழந்தவன் தான் யமகன், தந்தை அரிச்சந்திரனுக்கு எங்கே வேற்று இன பெண்ணை திருமணம் செய்தால் தனக்கு கிடைக்க வேண்டிய குடும்ப சொத்துக்களும் உரிமைகளும் கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயம்

 

ஆனால் யமகனின் அன்னையான சரோஜினியை விட்டு விடவும் அவருக்கு மனமில்லை.

 

அதனால் யாருமறியாது சரோஜினியை திருட்டுத்தனமாக மணம் முடித்தவருக்கு அவரை ஒரே ஊரில் வைத்துக் கொண்டு தினசரி பயத்தில் வாழ எண்ணமில்லை.

 

அதனால் துரிதமாக செயற்பட்டவர் தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் தங்க வியாபாரங்களை பார்த்து பராமரிப்பதாக ஊருக்கு கூறி விட்டு

 

தென் ஆப்பிரிக்காவிற்கு சரோஜினியை அழைத்து சென்றவர் வியாபாரத்தை நடத்திக் கொண்டே இல்லறவாழ்வில் முக்குளிக்கவும் தொடங்கி விட்டார்.

 

அவர்களின் காதலுக்கு சாட்சியாக பிறந்தவன் தான் யமகன், ஜனிக்கும் போதே அரிச்சந்திரனின் தந்தை சுந்தரத்தின் உயிர் லாரி ஆக்சிடண்டில் பிரிய

தனது வாழ்க்கையின் மிகப் பெரிய தடைக்கல்லான தந்தையின் உயிரையே மகன் பலியெடுத்து விட்டதாக நினைத்த அரிச்சந்திரனுக்கு

 

எமனே மகனாக பிறந்தது போல் மாய விம்பம் அதனால் மூத்தவனுக்கு யமகன் என்று பெயர் சூட்டினார்.

 

யமகனின் பிறப்பு தொழிலில் வகை தொகையற்ற வெற்றியை கொடுத்தது என்றால் சரோஜினியின் அக்கறை அன்பு பாசம் நேசம் எல்லாம் அவருக்கு இனிமையான மனநிலையை கொடுத்தது.

 

என்றும் கணவனை அதிர்ந்து பேசாதவர் சரோஜினி, அவரது பணிவு அன்பு கனிவு அக்கறை என தெளிந்த நீரோடை போல் சென்றுக் கொண்டிருந்த அரிச்சந்திரனுக்கு அவரது வாழ்க்கையில் கிடைத்த சொத்துக்களும் வெற்றியும் போதவில்லை.

 

ஒரு முறை தொழில் நிமித்தமாக சென்னையில் நடந்த விருந்துக்கு சென்றிருந்தவர் தனது தொழில்முறை நண்பனின் தங்கையான சைந்தவியை கண்டவருக்கு அவரது ஆளுமையிலும் திறமையிலும்

 

அதை விட அவரது பணத்திலும் மோகம் உண்டாக ஊருக்காக யாரையாவது திருமணம் புரிய வேண்டும். அது ஏன் இவளாக இருக்க கூடாது என நினைத்தவர் சைந்தவியை

 

படாதபாடுபட்டு காதல் வலையில் வீழ்த்தி அவரையே ஊரறிய திருமணம் செய்துக் கொண்டவருக்கு இப்போது ரெட்டிப்பு மகிழ்ச்சி சொத்து சமூக அந்தஸ்த்து வெற்றி என எல்லாம் தன் காலடியில் என்ற சந்தர்ப்பத்தில்

 

அடுத்தடுத்து சைந்தவி இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுக்க அரிச்சந்திரனுக்கு எதிலும் ஏறு முகம் தான் மூன்று மாதங்கள் தென்ஆப்பிரிக்காவிலும்

 

மீதி நாட்களை சென்னையிலுமாக தான் நினைத்தது போல கடத்தி வந்தவருக்கு பேரிடியாக அமைந்தது தங்கை சகுந்தலாவின் காதல் திருமணம்,

 

அப்போதெல்லாம் சத்யசீலன் ஒன்றும் மிக பெரிய பணக்காரரோ தொழில் ஜாம்பவானோ கிடையாது., அவர்கள் தோட்டக் காணிகளில் கணக்கு வழக்கு

 

பார்க்கும் சாதாரண கணக்காளர், ஒரே ஜாதியை சேர்ந்தவர்களே தவிர வேறு எந்த வகையிலும் அரிச்சந்திரனின் குடும்பத்துக்கு இணையானவர் கிடையாது.

 

தங்கையின் திருமணத்தை வைத்து பெரும் பெரும் கோட்டைகளை கட்டி இருந்தவருக்கு சத்யசீலனுடனான திருமணம் தலைவலியாக அமைய சகுந்தலாவுக்கு சேர வேண்டிய சொத்துக்களை கூட கொடுக்காது இருவரையும் துரத்தியடித்து விட்டார்.

 

இப்படியான நிலையில் தனக்கான அமைதியை நாடி தென் ஆப்பிரிக்காவுக்கு வர

 

யமகனுக்கோ தந்தையின் செயலில் சிறிது சிறிதாக சந்தேகம் முளை விட தொடங்கியது. சிறு வயதிலேயே அதிக புத்திக் கூர்மை கொண்டவன் தந்தையை கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தான்.

 

“ஏன் இன்னும் உங்க வீட்ல எங்களை பத்தி சொல்லல?, ஏன் நாங்க உங்க கூட ஒன்னா சென்னைக்கு வரக் கூடாது?”

 

என்று கேள்விகளை அடுக்க முதலில் திணறினாலும் பின்பு சரோஜினியை வைத்தே யமகனை முடிந்தளவு சமாளித்தார்.

 

இச் சந்தர்ப்பத்தில் சரோஜினி மீண்டும் கருவுற்றிருக்க யமகனோ முதலில் மேலோட்டமாக கேள்வி கேட்டவன் இப்போது தூண்டி துருவ கடைசியில்

 

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கமைய தந்தையின் இன்னொரு குடும்பத்தை பற்றி அறிந்துக் கொண்டவன், நேரே அரிச்சந்திரனிடம் சென்று

 

அவரது குடும்ப புகைப்படத்தை அவர் மீது தூக்கி வீசியவன், “என்ன இதெல்லாம்? எங்க அம்மாவுக்கு துரோகம் பண்ண உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு?”

 

என்று கத்தி சண்டையிட அரிச்சந்திரனோ முதலில் தன்மையாக, “இங்கே பாருடா தம்பி இதெல்லாம் பெரிய இடத்துல சாதாரணம், அம்மாகிட்ட இதெல்லாம் சொல்லக் கூடாது”

 

என்று கூற அவனோ, “எங்க அம்மாவுக்கும் எனக்கும் கிடைக்க வேண்டிய இடம் வேறொரு பொம்பளைக்கு கிடைக்குறத பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது”

 

என்று திமிறிக் கொண்டு நிற்க அரிச்சந்திரனோ, “எனக்கு தெரியும் எதை எங்க வைக்கணும்னு உங்க அம்மா ஆஃட்ரோல் வில்லேஜ்ல அஞ்சுக்கும் பத்துக்கும் நாத்து நடுற அன்னக்காவடி, அநாதை, கீழ் ஜாதிக்காரி அவளை கொண்டு போய் கோபுரத்துல ஏத்தி வச்சா என் ஸ்டேட்டஸ் என்ன ஆகும்?”

 

என்று கேட்க யமகனோ பாசமாக அன்னையின் தலையை கோதி கொடுக்கும் தந்தையா இது? என்பது போல் அதிர்ந்து பார்க்க அவரோ தொடர்ந்து,

 

“ஆமாடா அழகா வெள்ள தோலோட பளபளன்னு இருந்தா அந்த அழக வேற யாருக்கும் விட்டுக் கொடுக்க மனசில்ல வச்சுக்கிட்டேன் அதுக்குன்னு சமூகத்துல இவ தான் என் பொண்டாட்டின்னு நாலு பேருக்கு அறிமுகப்படுத்த முடியுமா? சொல்லு”

 

என்றதும் யமகனோ பதின்பருவத்தின் தொடக்கத்தில் நிற்கும் கட்டிளங்காளையாக சிலிர்த்துக் கொண்டு, “அம்மா கையால சாப்பிடும் போது தெரியாத அவங்க அந்தஸ்த்து அவங்க கழுத்துல திருட்டுத்தாலி கட்டி குடும்பம் நடத்தும் போது தெரியாத அந்தஸ்த்து இப்போ தான் உங்க கண்ணுக்கு தெரியுதோ”

 

என்று எகிறிப்பாய, “ஆமான்டா காதல் வேற கல்யாணம் வேற உங்க அம்மாவால சைந்தவி மாதிரி இங்கிலிஷ் பேச முடியுமா? இல்ல அவ அளவுக்கு தான் சொத்துபத்து இருக்கா? நான் இல்லாட்டி இன்னைக்கு பத்து பேரோட சீரழிஞ்சு”

 

என்று சொன்னது தான் தாமதம் யமகன் அவர் சட்டையை பிடித்து அடிக்க பாய அதே சமயம்,

 

“ராஜா அவர் சட்டையை விடு” என்ற கனிவான உறுதியான குரல் கதவருகிலிருந்து எதிரொலிக்க யமகனின் கை தளர்ந்தது என்றால் அரிச்சந்திரனின் முகமோ கருத்து போனது.

 

ஒரு பக்கம் பயம் ஒரு பக்கம் குற்றவுணர்வுடன் சரோஜினியை ஏறிட,

 

சரோஜினியின் முகமோ வலியில் கசங்கி இருந்தது. அவரால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

 

எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம் என்று நினைக்க நினைக்க ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது. ஆனால் என்றும் அதிர்ந்து கூட பேசியறியாதவர்,

 

அதே அமைதியுடன் கண்களில் கண்ணீர் பொங்க,

 

“அத்தான்னு உங்கள கூப்பிட்டது சரியா போச்சு என்கிட்ட இருந்த சுயமரியாத தன்மானம் கவுரவம் விருப்பு வெறுப்பு எல்லாத்தையும் என்கிட்ட இருந்து அத்து

 

எறிஞ்ச மாதிரி என் உரிமையையும் அத்து எறிஞ்சிட்டிங்கள்ல வலிக்குது அத்தான் வலிக்குது உயிரே போற மாதிரி வலிக்குது”

 

என்று கண்ணீர் வடிக்க அவரோ, “அப்படியில்ல சரோ எங்க அம்மா தான்”

 

என்று சமாளிக்க பார்க்க அவரோ அதைக் கண்டுக்கொள்ளாமல், “நான் குப்பை தான் அத்தான் கோபுரத்துல இருக்க ஆசைப்பட்ருக்க கூடாது ஆனா நீங்க வாழ்க்கை கொடுக்காட்டி பத்து பேர் கூட போறவ இல்ல அத்தான் பத்து பாத்திரம் தேய்ச்சாவது என் வயித்த கழுவ எனக்கு தெரியும்”

 

என்று கூற அரிச்சந்திரனோ, “நான் அப்டி சொல்ல வரல சரோ” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே

 

சரோஜினியோ இடுப்பை பிடித்துக் கொண்டு, “ஆஆஆ.. ஸ்ஸ்” என்று அலற அப்பாவும் மகனும் ஒரு கணம் தடுமாறி தான் போயினர்.

 

பேறுகாலத்துக்கு இன்னும் இரண்டு வாரங்கள் வரை கால அவகாசம் இருக்க அதிகப்படியான மன அழுத்தம் அதிர்ச்சியினால் வலி வந்திருந்தது.

 

ஒரு பக்கம் கணவன் கொடுத்த மரண வலி இன்னொரு பக்கம் மகள் கொடுக்கும் உடல்வலியில் அப்படியே கீழே சரிந்து விழப் போக அவரை தாங்கிப் பிடித்துக் கொண்ட யமகனோ,

 

“சீக்கிரம் வண்டிய எடுங்க” என்று கத்திக் கொண்டே,

 

“அம்மா அம்மா பாருங்க ம்மா நம்ம பாப்பாக்கு நீங்க வேணும்மா அந்த ஆளோட எதுவும் நமக்கு வேணாம் நான் கோல்ட் மைனிங் போய் சம்பாரிக்கிறேன் உங்கள நல்லா பார்த்துக்குவேன் ப்ளீஸ்மா பாருங்கம்மா”

 

என்று சரோஜினியை உலுக்க அவரோ, “மன்னிச்சுருப்பா அம்மா உன்னையும் சேர்த்து சவகுழிக்குள்ள தள்ளிட்டேன் இந்த முட்டாள மன்னிச்சிருப்பா”

 

என்று கண்ணீர் வழிய கூறியவருக்கு உறுதியாக தெரிந்தது தான் தனது கடைசி நிமிடங்களை நோக்கி நகர்கிறோமென்று ஆனால் யமகனோ,

 

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லம்மா நான் உங்கள பார்த்துக்குறேன் ப்ளீஸ் மா உங்கள விட்டா எனக்கு யாரும்மா இருக்கா? அம்மா அம்மா”

 

என்று கன்னத்தை தட்ட அவரோ கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழந்துக் கொண்டிருந்தார். இருப்பினும் வைத்தியசாலைக்கு போகும் வழியில் எங்கே மகன்

 

தவறான முடிவெடுத்து படிப்பை விட்டு விடுவானோ என்ற பயத்தில் தான் இனி ஒரு போதும் திரும்பி வரப்போவதில்லை என்பதை அறிந்தவராக அத்தனை வலியிலும்

 

தன் மகனிடம், “ராஜா அம்மா இல்லாட்டியும் தங்கச்சிய நீ தான் நல்லா பார்த்துக்கனும் நல்லா படி எக்காரணம் கொண்டும் அப்பா வேணாம் சொத்து வேணாம்னு

 

தங்கச்சியோட தனியா பொழைச்சுக்குறேன்னு போயிராத நீ படிக்கணும் உன் தங்கச்சியையும் படிக்க வைக்கணும்

 

தனியா பொம்பளை புள்ளைய வச்சு பிழைக்க முடியாதுயா உனக்கு உன் அப்பா மேல கோபமிருக்கலாம் ஆனா அந்த கோபத்துல முடிவெடுத்துறாதையா யோசிச்சு

 

நிதானமா முடிவெடு அம்மா இல்லாட்டியும் உனக்கு அம்மாவுக்கு அம்மாவா சகோதரியா இருக்க தங்கச்சிய விட்டுட்டு போறேன் அவ கைய கெட்டியா புடிச்சிக்கோ”

 

என்று அன்னை கடைசி நிமிடங்களில் கூறிய வார்த்தைகள் யமகன் மூளைக்குள் இன்று மீண்டுமீண்டும் எதிரொலிக்க மதுபாட்டிலை நிலைக்கண்ணாடியில் தூக்கியெறிந்தவன்

 

“அம்மா மன்னிச்சிருங்கம்மா என் தங்கச்சிய என்னால பார்த்துக்க முடியல என் வாழ்க்கையில தோத்து போய்ட்டேன்மா, யாழு என்ன மன்னிச்சிரு யாழும்மா யாழு”

 

என்று கதறி கதறி அழுதவனை தேற்ற ஒரு நாதியில்லை வலித்தது. உயிர் போய் விடாதா என்ற ஏக்கம் அவனுக்குள்,

 

பிறப்பு முதல் இன்று வரை அவன் அனுபவித்தது என்னவோ ஏமாற்றம், துரோகம், இழப்பு மாத்திரமே அந்த வலி தான் இன்று அவனை மிருகமாக மாற்றி விட்டது.

 

அதே சமயம் இங்கு பிறைமதி முன்னால் அமர்ந்திருந்த செழியனோ,

 

“நீ இத நம்புனாலும் நம்பாட்டியும் இது தான் நிஜம் உன் அண்ணன் அன்னைக்கு கெமிக்கல் பேக்டரில நடந்த ப்ளாஸ்ட்ல சாகல உயிரோட இருக்கான் இப்போ நடக்குற நடந்த மெடிக்கல் மாஃபியா இஸ்சுஸ்க்கும் உன் அண்ணனுக்கும் பெரிய சம்பந்தமிருக்கு”

 

என்று அழுத்தமாக கூற பிறைமதியோ, “உங்க அண்ணன காப்பாத்த இல்லாத பொல்லாத பழியெல்லாம் செத்து போன என் அண்ணன் மேல போடுறீங்களா?”

 

என்று கோபமாக பேச, செழியனுக்கு அவ்வளவு நேரமிருந்த பொறுமை காற்றில் பறக்க, “யூ டம் இடியட்,” என்று மேசையில் ஓங்கி ஒரு தட்டு தட்டியவன் கோபத்தில் என்ன பேசுகின்றோம் என்பதை கொஞ்சம் கூட அறியாது

 

“உன் அண்ணன பொறி வச்சு பிடிக்க தான் உன் வாழ்க்கைக்குள்ள வந்தேன் கல்யாணத்தையும் கெடுத்தேன் இவ்ளோ ரிஸ்க் எடுக்க நான் என்ன முட்டாளா?, அது மட்டுமில்ல உன் அண்ணியும் அண்ணனும் வேலை செஞ்சது சயந்தனோட கெமிக்கல் பேக்டரில அங்க பையர் ஆக்சிடண்ட் உண்டு பண்ணதே அவன் தான் அவன நாலு வருஷமா வலை வீசி தேடிட்டு இருக்க என்ன பார்த்தா உனக்கு பைத்தியக்காரன் போல தெரியுதா?”

 

என்றவன் கோணலாக இதழ்வளைத்து சிரித்தபடி,

 

“ஆனா சும்மா சொல்லக் கூடாது உன் அண்ணன் சரியான சுயநலவாதி ஒருத்தன் அவன் தங்கச்சி கல்யாணத்த நிறுத்தி கூட வெளிய வரல பார்த்தியா”

 

என்று கூற பிறைமதிக்கு கோபம் வர கொஞ்சம் கூட யோசிக்காது அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்.

 

                                     தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top