விதுரனும் மதுரியாவும் சந்திச்சப்புறம் காலம் வேகமாத்தான் ஓடிடுச்சு. இதோ மூணு மாசம் முடிந்தது. ஆனா இந்த மூணு மாசத்துலே நிறைய விஷயம் நடந்துப் போச்சு. விதுரன் ஆபீசுலே, அவன் ரூம்லே உட்கார்ந்து ஏதோ படிச்சிக்கிட்டிருந்தப்போ “மது… மது… காட் இட்… காட் இட்”-னு ஓடி வந்து அவளை எழுப்பி குலுக்கினான் விதுரன். “என்னாச்சு? கால்ம் டவுன்..”-னு சிரிச்சா மதுரியா. “XXX பில்டர்ஸோட ப்ராஜெக்ட் கிடைச்சிடுச்சு. Xx லட்ச ரூபா காண்டிராக்ட். செம்ம.. நான் எதிர்பார்க்கவே இல்லை”-னு சந்தோஷத்துலே குதிக்காத குறை தான் விதுரன். அலை அலையா பறக்கற முடி, தாடி, மீசை டிரிம் பண்ணி, ஃபுல் ஃபார்மல்ஸ்லே கண்ணுலே உயிர்ப்பும் சிரிப்புமா அழகனா எதிர்லே இருக்கற விதுரனை ரசிச்சு பார்த்துட்டு இருந்தா மதுரியா. ‘வேதம் கன்சல்டண்ட்ஸ்’ – ஆர்கிடெக்சுரல் டிசைன் ஃபர்ம். விதுரனோட கம்பெனி. அதை ஆரம்பிச்சு இந்த நல்ல நிலைமைக்கு கொண்டு வர அவன் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை. அவனோட சிரிப்புலே மூணு மாசமா என்னவெல்லாம் நடந்துச்சு ஞாபகம் வந்துச்சு மதுரியாவுக்கு.
அன்னிக்கு விதுரன்கிட்ட பேசிட்டு மதியம் போல வீட்டுக்கு வந்த மதுரியா சாப்பிட்டு ஓய்வெடுத்தா. அவளுக்கு ஒரு கோபத்துலே விக்ரம் கிட்ட அப்படி பேசி இருக்க கூடாதோன்னு தோண ஆரம்பிச்சுது. ஆனா அவன் ஏன் நல்லவன் மாதிரி பேசினான்-னு சுத்தி சுத்தி யோசனை. ஒரு நிலைக்கு மேலே பொறுக்க முடியாம ஞாயிறு காலையிலேயே ரீனா வீட்டுக்கு போயிட்டா. “வாடீ… தர்ணா எல்லாம் பண்ணி நினைச்சதை சாதிச்சிட்டியாமே?”-னு கேட்டுட்டு அவ ரூமுக்கு கூட்டிட்டுப் போனா ரீனா. “அதெல்லாம் ஒண்ணுமில்லே. எல்லாம் சொல்லி இருக்கேன். என்ன செய்வாரோ அது விதுரனுக்கு தான் வெளிச்சம்?”-னு சலிப்பா சொன்னா மதுரியா. “என்னாச்சு ரியா? என்ன யோசனை?”-னு ரீனா கேட்டது தான் தாமதம்.. படபட-னு எல்லாத்தையும் சொல்லிட்டா. “உனக்கு ஏதாவது மண்டையிலே அறிவு இருக்கா ரியா? இப்படியா பண்ணுவே?”-னு திட்டினா ரீனா. “சாரி ரீனா… விக்ரமை பார்த்ததும் அப்படி ஒரு கோபம்.. அதுவும் விதுரனோட கதையை கேட்டப்புறம் கொலைவெறின்னே சொல்லலாம்”-னு சொல்லவும், “கோபத்திலே திட்டறவங்களை பார்த்திருக்கேன். இப்படி போய் ப்ளானை உளர்றவ நீ ஒருத்தி தான் டீ. எப்போ தான் இந்த முன்கோபத்தை விடுவியோ”-னு தலையிலே அடிச்சுக்கிட்டா ரீனா.
ஒரு பெருமூச்சு விட்டு, “சாரி ரீன்ஸ்.. வேணும்-னு பண்ணலே.. இப்போ என்ன பண்ணலாம்? ஐடியா குடு.. ஒண்ணும் தோண மாட்டேங்குது”-னு தலையை பிடிச்சுக்கிட்டா. “சரி ரியா… அதையே யோசிக்காதே. போனது போகட்டும்.. இவங்க தலையீடெல்லாம் வர்றதுக்குள்ளே அண்ணாவோட கேரியரை சரி பண்ணணும். அதான் இப்போ ப்ரையாரிடி.. அதுலே ஃபோகஸ் பண்ணு”-னு ஃப்ரெண்டை தேத்தினா ரீனா. “ஆமா ரீனா… அது தான் முக்கியம்… அப்படியே இந்த அசோக் கிட்ட பேச்சுக் குடுத்து ஃப்ரெண்டாகி விஷயத்தை கறக்க பார்க்கட்டுமா?”-னு செஞ்ச தப்பை சரி செய்யற நோக்கத்துலே கேட்டா. “யார்? நீ? அப்படியெல்லாம் நடந்துட்டா உலகம் அழிஞ்சுடும்”-னு கிண்டலா சொல்லவும் அவளை முறைச்சா மதுரியா. “வேறென்ன ரியா? உனக்கு விதுரன், ப்ரதீப் அவங்க ஃப்ரெண்ட்ஸ் பார்த்தாலே அடி வயித்துலே இருந்து கோபம் வருது.. அவங்கள ஓங்கி ஒரு அறை விடாம இருந்தாலே பெரிசு. இதுலே அசோக் கூட ஃப்ரெண்ட் ஆகிறேன், விஷயத்தை கறக்கிறேன்-னு காமெடி பண்றே. விடு.. ஃபர்ஸ்ட் திங்ஸ் ஃபர்ஸ்ட். அதைப் பண்ணு. மத்தபடி இந்த அசோக் கிட்டே இருந்து கொஞ்ச நாள் விலகியே இரு”-னு சொன்னா ரீனா. குழப்பத்தோட வந்த மதுரியாவும் தெளிவோடப் போனா.
அந்த நாள்லே இருந்து மதுரியாவுக்கு அவ படிப்பைத் தவிர இருந்த ஒரெ குறிக்கோள், விதுரனை பழைய படி மாத்தறது தான். ஆனா அது அவ்வளோ சுலபமா இருக்கலே. ஒவ்வொரு அடியும் கஷ்டப்பட்டுத் தான் எடுத்து வைச்சாங்க. அதுலே விதுரன் துவண்டு போகாம பார்த்துக்கறது இன்னொரு பெரிய வேலையா இருந்துச்சு. அவ சொன்ன மாதிரி திங்கட்கிழமை காலையிலே வேலைக்குப் போனா. அவளுக்கு அந்த ஹாஸ்பிடல் ப்ரிமைசஸ்லே நுழைஞ்சு டாக்டர் ப்ரேமை மீட் பண்ற வரை தான் மனசு அலைபாஞ்சுது. அதுக்கு அப்புறம் படிப்பு, டிரெயினிங்-னு கவனம் சிதறவே இல்லை. அதுக்கு அப்புறம் எல்லாம் முடிஞ்சு, ஸ்கூட்டியை எடுத்துட்டு நேரா ஆர்லேண்டோவுக்கு போனா. அவன் வீட்டுக்குள்ளே போன நேரம் நியூஸ் பேப்பர், வெள்ளை பேப்பர், லேப்டாப் சகிதம் உட்கார்ந்திருந்தான் விதுரன். “ஹேய்… மது… வா… வா”ன்னு கூப்பிட்டான். “ம்ம்ம்…வர்றேன்.. சாப்பிட்டீங்களா?”-னு கேட்டுட்டே உள்ளே போனா. அவன் வீட்டு வாசக்கதவு எவ்வளவுக்கு எவ்வளவு மூடி இருந்துச்சோ, அவ்வளவு இப்போ திறந்தே இருந்துச்சு.
“சாப்பிட்டேன் டா… நீ? என்ன இவ்வளவு சீக்கிரம் வந்து நிக்கறே?”-னு கேட்டான் விதுரன். “ம்ம்ம்… என் நாள் ஆறு மணிக்கு ஆரம்பிக்கும். ஒண்ணரைக்கு முடிஞ்சுடும். சர்ஜரி இருந்தா டிலே ஆகும்”-னு சொல்லிட்டே அவன் முன்னாடி சோஃபாவுல உட்கார்ந்தா. “அவ்வளோ சீக்கிரமா என்ன பண்ணுவீங்க?”-னு சுவாரசியமா கேட்டான். மதுரியாவுக்கு இந்த விதுரன் புதுசு. “டிபெண்ட்ஸ் விது. என் சீனியர் டாக்டர் ப்ரேம். அவருக்கு எப்போவும் மார்னிங் ஃபர்ஸ்ட் சர்ஜரி லைன் அப் பண்ணிக்கணும். அப்புறம் தான் கன்சல்டிங். காலையிலே மூளை ஃப்ரெஷ்ஷா இருக்கறப்போ சர்ஜரி பண்ணிடணும்-னு நினைப்பாரு. அதோட யேர்லி மார்னிங் போனாத் தான் ஏழு மணிக்கு ஸ்டார்ட் பண்ண முடியும்-னு சொல்லுவார். கூட குறைச்சு ஆனாலும் அக்காமடேட் பண்ண முடியும். அப்புறம் ஐசியூ ரவுண்ட்ஸ், ஜெனரல் வார்ட் ரவுண்ட்ஸ், ஓபி டைம்… இதுக்கெல்லாம் எட்டு மணிநேரம் பத்தாது”-னு சிரிச்சுட்டே காலை மடியிலே வைச்சு பாத்தை அமுக்கி விட்டுக்கிட்டா. “வலிக்குதா?”-னு கேட்டான். “ம்ம்ம்… ஃபர்ஸ்ட் டே இல்லே. நாளையிலே இருந்து செட் ஆயிடும்.. சரி இதென்னா.. பயங்கர ஹோம்வர்க் நடக்குது”-னு கேட்கவும், “ம்ம்ம்… ஆமா.. நான் பில்டர்ஸ், டெவலபர்ஸ், ப்ரோமோட்டர்ஸ் ஆக முடியாது மது… வேதம் இருக்கும் போது பண்ணா நல்லா இருக்காது. அதோட அந்த ஃபீல்ட்லே என் தப்புனால யாரும் ஆப்பர்சூனிடி குடுக்க மாட்டாங்க அதனால எனக்கு பிடிச்ச இன்னொரு ஃபீல்ட், ஆர்கிடெக்சுரல் டிசைன் அண்ட் கன்சல்டிங்.. ஒரு வேளை வேதம் இல்லைன்னா அதுதான் பண்ணி இருப்பேன். அதோட அதிக முதல் தேவைப்படாதது”-னு சொன்னான் விதுரன்.
மதுரியா அவனை மெச்சுதலா பார்த்துட்டு, “மேலே சொல்லுங்க”-னு கேட்கவும், அவன் எல்லாம் விளக்கினான். அவனோட அபாரமான தொழில் அறிவு, வியாபார மூளை, ஈடுபாடு இதையெல்லாம் பார்த்து வியந்துப் போனா. “இப்படிப் பட்டவனை செல்லாக்காசு ஆக்க நினைச்ச உன்னை சும்மா விட மாட்டேன் விக்கி”-னு மனசுலே கறுவினாள். அவன் எல்லாம் சொல்லி முடிக்கவும், “சபாஷ்..”-னு கையை குலுக்கினா மதுரியா. “தேங்க்ஸ் மது. அடுத்து லோன் வாங்க ஆப்ஷன்ஸ் பார்க்க வேணும். ரெண்டு மூணு ஏஜண்ட்ஸ் மீட் பண்ணி, ஃபார்ம் ஃபில் பண்ணணும்”-னு சொல்லும் போது கனிவா பார்த்தா அவனை. அந்த பார்வையிலே தடுமாறிப் போனான் விதுரன். “எ.. என்ன மது?”ன்னு கேட்கவும் “இந்த பாசிடிவிடி எங்கே போயிருந்தது?”-னு கேட்டா மதுரியா. “தெரியலே மது… நீ தான் அதைக் கூட்டிட்டு வந்தே போல.. நீ போனா அதுவும் போயிடும் போல. நான் எல்லாம் செய்யறதே உனக்காகத் தான். ஆனா ஒண்ணு செஞ்சா அதுலே ஹார்ட் அண்ட் சோல் போட்டு செய்வேன்.. அது என் பழக்கம்”-னு சொன்னான். “கண்டிப்பா கூட இருப்பேன் விது. ஐ அம் வித் யூ இன் திஸ்”-னு ஆத்மார்த்தமா சொல்லவும் மௌனம் காத்தான் விதுரன்.
அந்த வாரம் வேகமா போச்சு. ஏஜண்ட் பிடிச்சு ஃபார்ம் எல்லாம் ஃபில் பண்ணி சப்மிட் பண்றதுலே பிஸியானான் விதுரன். மதுரியா டிரெயினிங்லே பிஸி. டிரெயினிங் முடிச்சு ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம் அவன் கூட இருப்பா. அதுக்கப்புறம் விதுரனே அவ உடம்புக்கும் வேலைக்கும் ஓய்வு அவசியம் அவளை அனுப்பி விடுவான். இப்படியே ஒரு வாரம் ஓட, அடுத்த வாரம் சோதனை நிறைஞ்ச வாரமா இருந்துச்சு. அஞ்சு பேங்க்லே போட்டதுல மூணு அப்ளிகேஷன் ரிஜெக்ட் ஆகி வந்துச்சு. நேர்லே போய் கேட்டதுக்கு உப்பு சப்பில்லாத காரணம் சொல்லவும் கடுப்பானான் விதுரன். அந்த வார நடுவிலே அவங்க ரெண்டு பேரும் அவன் வீட்டுலே இருக்கும் போது நாலாவது ரிஜெக்ஷன் லெட்டர் வரவும், கத்தி கலாட்டா பண்ணி பொருளெல்லாம் போட்டு உடைச்சான் விதுரன். “நான் சொன்னேன்லே? நான் ஒரு ஃபெயிலியர்.. பார்.. பார்”-னு கோபத்துலே மதுரியா தோளை உலுக்கினான். வலிச்சாலும் அவகிட்டே இருந்து எந்த பதிலும் இல்லே. வலியிலே முகம் சுருக்கி கண்ணுலே தண்ணி வழியவும், “சாரி மது… வெரி சாரி.. நீ என்ன பண்ணுவே?”-னு அமைதி அடைஞ்சான். “விது… எனக்காகப் பண்ணுங்க… இன்னும் ஒரு பேங்க் இருக்கு. அதுவும் ரிஜெக்ட் ஆனா நீங்க நினைக்கறதை செய்யுங்க”-னு அவ ஹெல்மெட் எடுத்துட்டு கிளம்பிட்டா. மதுரியா மனசு ஒரு நிலையிலே இல்லவே இல்லை. கண்ணுலே எந்நேரமும் குளம்கட்டித் தண்ணி!
வீட்டுக்கு போனவ நேரா போய் கற்பகவல்லி மடியிலே படுத்துக்கிட்டா. “என்னடாம்மா என்னாச்சு?”-னு கேட்டார் நித்தியானந்தம். கண்ணைக் காட்டி அமைதியா இருக்க சொன்னாங்க கற்பகவல்லி. மதுரியா ஸ்கூல்லே படிக்கும் போது மனசு சரியில்லேன்னா இதை செய்வா. அப்புறம் இடையிலே விட்டுட்டா. இன்னிக்கு ரொம்ப நாள் கழிச்சு அதை செஞ்சா. மனசுலே ஏதோ ஒரு கலக்கம், வருத்தம்-னு பெரியவங்களுக்கு புரிஞ்சுது. ஒரு இருபது நிமிஷம் கண்ணை மூடி அப்படியே அமைதியா படுத்திருந்தா. அலைஞ்சு ஓடற மனசு அமைதி ஆச்சு. படபடப்பு குறைஞ்சு நிதானம் வந்துச்சு. தைரியம் வந்துச்சோ இல்லையோ அடுத்து என்ன நடக்கும்கிற பயம் போச்சு. தெளிவான முகத்தோட எழுந்து, “அட்டெம்ப்ட் திரும்ப திரும்ப ஃபெயில் ஆகவும் கலக்கம் வந்துடுச்சு பாட்டி.. இதோ இப்போ தெளிவாகிட்டேன்”-னு சொன்னா மதுரியா. “மக்குப் பொண்ணே, தட்டிப் போனா அதை விட அருமையா நடக்கும்-னு அர்த்தம்… குழப்பிக்காதே”-னு சொன்னார் நித்தியானந்தம். அது நிஜமாவே நடக்கும்னு நினைக்கவே இல்லை மதுரியா.
அடுத்த நாள் ஹாஸ்பிடல்லே வேலை முடிச்சு வண்டியை எடுக்கும் போது வேதமூர்த்தி மதுரியாவுக்கு போன் பண்ணி, “ரியா, விதுரனை கூட்டிட்டு அவன் ப்ரோபோசலையும் எடுத்துக்கிட்டு உடனே ஆபீசுக்கு வாம்மா”-னு சொல்லவும் அதிர்ந்துப் போனா. “மூர்த்திபா.. உங்களுக்கு எப்படி?”-னு தடுமாறினா. “அவன் என் பையன்மா. அவனுக்கு என்ன நடக்குது, அவன் என்ன பண்றான்-னு எனக்கு தெரியாதா? அவனுக்கு கொஞ்சம் முதிர்ச்சி வரணும். பண்படணும் தான் விட்டேன். நீ வந்து நிமிர்த்தினே பாரு. கூட்டிட்டு வாம்மா பேசுவோம்”-னு சொல்லி போனை வைச்சார்.
நேரா வீட்டுக்கு போய் விதுரனை கூட்டிட்டுப் போறதுக்குள்ளே அவளுக்கு உயிரே போயிடுச்சு. அங்கேப் போயும் விதுரன் கெத்து குறையாம தான் பேசிட்டு இருந்தான். ஆனா அப்பா, அவர் பிள்ளை கிட்ட எதிர்பார்த்த பண்பட்ட நிலை வந்திருச்சு. “சரி விதுரா… நீ தனியாவே தொழில் பண்ணிக்கோ.. உன் முடிவை நீ மாத்திக்க வேண்டாம். ஆனா பணத்துக்கு என்ன பண்ண போறே?”-னு டேபிள் வெயிட்டை உருட்டினார். “தெரியலேப்பா. யோசிக்கலே”-னு வேறே எங்கேயோ பார்த்து சொன்னான். “பேங்க் தான் தரணுமா? நான் அதே லோனை குடுக்கிறேன்.. அந்த செக்யூரிடியை எனக்கு குடு”-னு கேட்கவும், “செக்யூரிடியா?”-னு கேட்டான் விதுரன். “ஏன்?பேங்க்னா குடுத்திருப்பே தானே?”-னு பதில் கேட்கவும், “ம்ம்ம்… இப்போ வாழற வீடுதான்”-னு சொன்னான் விதுரன். “ம்ம்ம்… அது சரியா வராதே. வாழற வீட்டை யாரும் ஷ்யூரிடியா எடுக்கறதில்லே. பாங்க்-ல சொல்லிருப்பாங்களே? வேறே ஏதாவது அரேஞ்ஜ் பண்ணு. அப்புறம் உன் கன்சல்டன்சியும் வேதம் கீழே தான் இருக்கும். ஆனா லோன் இண்டரஸ்ட் போக லாபம் எல்லாம் உன்னுதுதான்”-னு பிள்ளையை கார்னர் பண்ணார். அவருக்கு பிள்ளையை பழைய படி தன் கூட சேர்க்கறதுக்கு வேறே வழி தெரியலே.
மதுரியாவுக்கும் திகைப்புத்தான். ஆனா அவன் மனநிலை தெரிஞ்சவளுக்கு அவர் நினைக்கறது நடக்காது-னு தெரியவும், வேற வழியில்லாம அந்த முடிவை எடுத்தா. “வாழற வீட்டைத் தானே ஷ்யூரிடியா எடுக்க மாட்டீங்க? நான் என் எம்.பி.பி.எஸ் சர்டிஃபிகேட்டை ஷ்யூரிடியா குடுக்கறேன். அதில்லாம எனக்கு வாழ்க்கையே இல்லை… அதனால நான் எங்கேயும் போயிட முடியாது”-னு மெதுவான குரல்லே கேட்கவும் படார்-னு மூணு நாற்காலி ஒரே நேரத்துலே நகர்ந்தது. வேதமூர்த்தி, ரிஷி, விதுரன் மூணு பேரும் சட்-னு எந்திரிச்சாங்க. மதுரியா பயந்து போனா. “ஆத்தி… அவசரப்பட்டுட்டியேடி!! லைவ் ரிலே பண்ணிடுவாங்க போல… கடவுளே… அம்ம்மா கற்பகவல்லி. யோசிக்காம உளறிட்டேனே?!”-னு நினைச்சா. உண்மையிலேயே அந்த வார்த்தைகளை சொல்லணும்-னு நினைக்கலே அவ. மனசுலே இருந்தது எல்லாம் எப்படியாவது விதுரன் அடுத்த படிக்குப் போகணும், அதே சமயம் அவன் திரும்ப குடும்பத்தோட இணையணும், அவன் தடைகள் நீங்கணும்-னு தான். ஒரு மாதிரி சுதாரிச்ச வேதமூர்த்தி. “தாராளமா.. உங்க பார்ட்னர் திரும்ப கட்டலேன்னா உங்க தொழில் போயிடும் பரவாயில்லையா?”-னு கிண்டலா கேட்டார். “பார்ட்னரா?”-னு கேட்டான் விதுரன். “ஆமாம்.. இன்வெஸ்ட்மெண்ட் ஷ்யூரிடிலே இன்வால்வ் ஆகிறவங்க பிசினஸ் பார்ட்னர் தானே?”-னு தோளைக் குலுக்கினான் ரிஷி. “ஏன்பா? ஷ்யூரிடி குடுக்காம ஏமாத்த போறியா? அதுக்கு பார்ட்னர்ஷிப் குடுக்காம இருக்கறது தான் சரி”-னு வேதமூர்த்தி கிண்டல் பண்ணவும், “பார்ட்னர் இல்லே… மது தான் எல்லாத்துக்கும் ஓனர்”-னு எந்த உணர்ச்சியும் முகத்துலே காட்டாம சொல்லி, அவ கையை எடுத்து நெத்தியிலே வைச்சுக்கிட்டான்.
“விது… ப்ளீஸ்…” கையை விலக்கிக்கிட்டா. “நான் நம்பறேன் மூர்த்திபா. என் கேரியருக்கு எதுவும் ஆகாது… ஃபினான்ஸ் விஷயம் பேசிட்டு வாங்க. நான் கிளம்பறேன்”-னு எந்திரிச்சு வெளியே போனா. விதுரனும் பின்னாடியே ஓடறதை நமுட்டு சிரிப்போட வேடிக்கை பார்த்தார் வேதமூர்த்தி. “அப்பா… என்னப்பா நடக்குது?”-னு கேட்டான் ரிஷி. “ஒண்ணுமே நடக்கலே. உணர்றதுக்கு வழி பண்ணணும். பட்… இந்த வாட்டி அவசரப் படறதா இல்லே”-னு சொன்னார் வேதமூர்த்தி.
“மது…… தேங்க் யூ ஸோ மச்.. உண்மையிலேயே நீ இவ்வளோ சீரியஸா இருப்பே-னு தெரியலே.. எப்படியும் நீ நினைக்கற இடத்துக்கு வருவோம்”-னு கையை பிடிச்சு சொல்லவும், “இட்ஸ் ஓகே நீங்கப் போங்க”-னு சொன்னா மதுரியா. “இல்லே… எனக்கு… ஐ நீட் அ ஸ்மோக்”-னு சட்னு வெளியே போகவும், புயல் வேகத்துலே வேதமூர்த்தி ரூமுக்கு போனா மதுரியா.
“மூர்த்திப்பா.. சாரி… நீங்க எதை நினைச்சு செஞ்சீங்க-னு தெரியும். ஆனா தற்சமயம் அது நடக்காது.. அதுக்கு நிறைய காரணம் இருக்கு. உங்க பையன் பெரிய சுழல்லே சிக்கி இருக்கார். அவர் போக்குலே போய் தான் வெளியே எடுக்கணும். எனக்கு தெரிஞ்சு அவர் விட்ட காண்டிராக்ட்.. அதுவே பெரிய ஸ்கேம். எனக்கு டைம் குடுங்க. நான் எல்லாம் சொல்றேன். இப்போதைக்கு ப்ளீஸ் சப்போர்ட் மீ”-னு வாசலை பார்த்துக்கிட்டே சொன்னா. “ஹேய், ரியா நில்லு, தனியா பிரச்சினையிலே எதுலேயும் மாட்டிக்காதே….. அப்பா.. பாருங்க”-னு பதறி எந்திரிச்சான் ரிஷி. “ஐயோ ரிஷி அண்ணா… ப்ளீஸ்.. நான் எதுவும் பிரச்சினை ஆகிற மாதிரி பண்ண மாட்டேன். டிரஸ்ட் மீ. இப்போ பேச நேரமில்லே. உங்க தம்பி எந்த நேரமும் உள்ளே வரலாம். நேரம் வரும் போது எல்லாம் சொல்றேன்”-னு சொன்னா மதுரியா.
அதே நேரம் தூரத்துலே விதுரன் வர்றது தெரியவும் வேகமா பேக்லே இருந்து கர்ச்சீஃப், மொபைல் எடுத்து வெளியே வைச்சு தள்ளி நின்னா. “நாங்க நம்பறோம் ரியாம்மா. உதவி தேவைன்னா ஹெசிடேட் பண்ணாதே”-னு வேதமூர்த்தி சொல்லவும், “நல்லா நம்பினீங்க? இது தானா சார் உங்க டக்”-னு அலுத்துக்கும் போதே கதவு திறக்கற சத்தம் கேட்டுச்சு. சாவதானமா போய் மொபைலையும் கர்ச்சீப்பையும் எடுக்கறவளை யோசனையா பார்த்தான் விதுரன். “இதை எப்போ எடுத்து வெளியே வைச்சே?”-னு கேட்டப்போ மதுரியாவுக்கே உள்ளே உதறல் தான். “போன் வருது-னு எடுத்தேன்.. அப்போ டேபிள் மேலே வைச்சேன்.. நான் வர்றேன்”-னு ஓடிட்டா. “விதுரா, அப்பாவா ஒண்ணு கேட்கலாமா? நீ பண்ண தப்பு புரியுதா?”-னு மதுரியாவை பார்த்துக்கிட்டே கேட்கவும், “நான் தப்பு பண்ணலேப்பா. ஆனா கவனக் குறைவுலே கிடைச்ச வைரத்தை தூக்கி எறிஞ்சுட்டேன்”-னு பெருமூச்சு விட்டான்.