“உன் வளர்ச்சிக்குத்தான் டா சொல்றேன். இது கால்குலேடெட் ரிஸ்க் தான். அதோட அந்த கம்பெனியிலே எனக்கு ஆளை தெரியும்”-னு பேசிப் பேசிக் கரைச்சு அந்த ப்ராஜெக்டுக்கு ‘கோட்’ பண்ண வைக்க நினைச்சான் விக்கி. “சரி விக்கி… நீ இவ்வளோ சொல்றேன்னா சரியா தானிருக்கும். நான் அப்பாகிட்ட பேசறேன்”-னு சொன்னான் விதுரன். விதுரனோட பாதி மனசு மதுரியாவால ஆக்கிரமிப்பு பண்ணப்பட்டதால, அந்த விளம்பரத்துல இருந்த சின்ன சின்ன ஓட்டைகளை கண்டுக்காம விட்டான். ஒரு ரெண்டு நாள் பொறுத்து அப்பா – அண்ணாகிட்ட அதைக் காட்டி, இதுக்கான வேலைகளை ஆரம்பிக்க போறதா சொன்னான். ரெண்டுப் பேரும் அதிர்ச்சி அடைஞ்சாங்க. “விதுரா… வெயிட்… என்ன சொல்றே. இது பூரா பூரா கமர்ஷியல் காம்ப்ளெக்ஸ் ப்ரோமோஷன் பண்றது. பில்டிங் கன்ஸ்டிரக்ட் பண்றதுக்கு கன்ஸ்டிரக்ஷன் கம்பெனி வேணும். இது நம்ம கோர் ஸ்டிரெங்த் இல்லை”-னு சொன்னான் ரிஷி. “ஸோ… வாட் ரிஷி? ஹவுசிங் ரெசிடென்ஷியல் பண்ற நம்மனால கமர்ஷியல் முடியாதா. ஹவுசிங்க்கு நித்தியம் மாதிரி கமர்ஷியலுக்கு வேறொரு கம்பெனி கிடைக்கும். இதுக்கு ஏன் டென்ஷன் ஆகறே?”-னு கேட்டான் விதுரன்.
தான் கத்துக் குடுத்து, கொஞ்ச நாள்லே அப்பனுக்கே பாடம் சொன்ன வியாபார மூளை கொண்ட விதுரன் இல்லை இது-னு கண்டுபிடிக்க அதிக நேரம் ஆகலே வேதமூர்த்திக்கு. அது சரியா யூகிச்சவருக்கு, பின்னாடி யார் இருக்கா-னு தப்பு தப்பா யூகம் பண்ணார். காமாலை கண்ணுக்கு கண்டதெல்லம் மஞ்சள்-னு சொல்ற மாதிரி, இவன் பண்ற முட்டாள்தனத்துக்கெல்லாம் சுவாதி தான் காரணம்-னு தப்பா நினைச்சார். “விதுரா.. முதல்லே உட்கார்… பேசலாம். எடுத்தோம் கவுத்தோம்-னு பண்ண முடியாது”-னு சொன்னார் வேதமூர்த்தி. “நானும் அப்படி சொல்லலேப்பா.. பட் எவ்வளோ நாள்தான் இதே ஸ்டேஜ்லே இருக்க முடியும். இதை ஒரு நெக்ஸ்ட் ஸ்டெப்பா எடுத்துப் பண்ணலாமே?”-னு கேட்டான் விதுரன். பேச்சு வளர்ந்துக் கிட்டே போகவும், ரிஷியும் வேதமூர்த்தியும் புரிய வைக்க நினைச்சு தோத்து போனாங்க. ஒரு கட்டத்துலே பொறுமை இழந்த வேதமூர்த்தி, “விதுரன்… எனக்கு இதுலே முழு சம்மதம் இல்லே.. இது தேவை இல்லாத ரிஸ்க். இது சரியா வராது-னு தோணுது”னு ஸ்டிரிக்டா சொல்லவும் விதுரனுக்கு கோபம் வந்துச்சு.
“சரிப்பா… இதை முழுக்க முழுக்க நானே பண்ணிக்கிறேன். என் அட்டெம்ப்ட் சரியா நடந்தா அப்புறம் பிசினஸ்லே நான் சொல்றதுக்கு எந்த மறுப்பும் இருக்கக் கூடாது”ன்னு அழுத்தமா சொல்லவும், “ஓ கே… உன் இஷ்டம். உன் ரிஸ்க் எங்களை, ஐ மீன், மத்த டொமைன்ஸ் பாதிக்காம இருந்தா, கோ அஹெட்”னு சொன்னார் வேதமூர்த்தி. விதுரன் புயல் மாதிரி வெளியேறவும், “என்னப்பா நீங்களும் இப்படிப் பேசறீங்க?”-னு ரிஷி இழுக்கவும், “அடிபட்டு வரட்டும். அந்த சுவாதி பேச்சை கேட்டு ஆடறான்”-னு கோபத்துலே பொங்கினார் வேதமூர்த்தி.
விதுரனும் அதே கோபத்தோட போய் எல்லாத்தையும் விக்கியிடம் சொல்லவும், “ஓ… அங்கிள் சுதாரிச்சுட்டாரோ??. தப்பாச்சே”-னு மனசுலே நினைச்சவன், “நீ இதை எடுத்து செய்டா. நான் ஹெல்ப் பண்றேன்.. சக்சஸ் ஆனா அங்கிளே பாராட்டுவார். அவரைப் பத்தி தான் உனக்கு தெரியுமே?”-னு சொல்லி அரை மனசா இருந்தவனை ப்ரெயின் வாஷ் பண்ணி சம்மதிக்க வைச்சான்.
நாளும் ஓட ஆரம்பிச்சது.. விதுரனை ஒரு ஃபினான்ஷியர்கிட்ட அறிமுகம் பண்ணி வைச்சு, கடன் வாங்க வைச்சான். அதுவும் ஒரு பெருந்தொகையா அதிக வட்டிக்கு. காரணம் டெண்டர் போடறதுக்கு, அந்த ப்ராஜெக்டுக்காக குடுக்கப் போற பணக் கணக்குக் காட்டணும்-னு ஒரு கண்டிஷன் அந்த விளம்பரத்துல இருக்கு. விதுரனுக்கு கொஞ்சம் உள்ளே உதறலெடுத்தாலும் ப்ராஜெக்ட் கிடைச்சதும் திருப்பி குடுத்துட போறோம், நம்ம இன்வெஸ்ட்மெண்ட் வெறும் ரெண்டு மாச வட்டின்னு மனசுலே நினைச்சான். ஆனா விக்கி அறிமுகம் பண்ண ஃபினான்ஷியர் ஒரு மோசடி பேர் வழி. விதுரனுக்கு போதுமான டைம் தேடுதலுக்கு இல்லாததுனால அவனுக்கு தெரியாம வலையிலே விழுந்தான். அதுக்கப்புறம் அடுத்த கண்டிஷன் படி, அந்த ப்ராஜெக்டை எடுத்துப் பண்ண தனி குழு வேணும். ரிதேஷ் பரிந்துரை பண்ணி நாலு பேரை, ப்ராஜெக்ட் ஆரம்பத்துலே இருந்தே வேலை செய்ய,வேலைக்கு சேர்த்தான்.
விதுரனுக்கு தான் செய்யறதுலே ஏதோ சுணக்கம் இருந்துட்டே இருந்துச்சு. ஏன்-னு புரியலே. ஆனா விட முடியாம உயிரும் உணர்வும் போட்டு உழைச்சான். புதுசா வேலைக்கு சேர்ந்த நாலு பேரும் கத்துக்குட்டிங்க. அவன் தான் எல்லாதையும் செய்ய வேண்டி இருந்துச்சு. கமர்ஷியல் பில்டிங்லே அவனுமே ஒரு கத்துக்குட்டிங்கறதால நிறைய தடுமாற்றம் இருந்துச்சு. அதனால விதுரனோட நேரம் மொத்தமும் அதுக்குத்தான் போச்சு. எந்நேரமும் பயம், பதட்டம், அழுத்தத்துலியெ இருந்தான்.
கடைசியிலே ரெண்டு மாச உழைப்பும் கஷ்டத்துக்கும் அப்புறம், அந்த ப்ராஜெக்டுக்கு ப்ரோபோசல் குடுத்தான். எப்போவும் ப்ரோபோசல் குடுத்தா கிடைக்குமா-னு யோசனை இல்லாம இருந்த விதுரனுக்கு, இந்த வாட்டி வேலை முடிஞ்சும் டென்ஷன், நிலை இல்லாமை, பரபரப்பு தான். அந்த நிலையே நிரந்தரம் போல, அவன் அவ்வளோ கஷ்டப்பட்டும் அந்த ப்ராஜெக்ட் கையை விட்டு போச்சு. வேதமூர்த்தி தொழில் ரீதியா நடந்த சறுக்கல்லே விதுரனை ரொம்ப திட்டினார். விதுரனுக்கும் அவனோட தன்னம்பிக்கை, சுயமரியாதை, ஈகோ எல்லாம் அடிவாங்கவும் ரொம்ப ஆடிப் போயிட்டான். ஆனா அவனை ஆசுவாசப் படுத்திக்க விடாம, அவன் அந்த ப்ராஜெக்டுக்காக செஞ்ச ஏற்பாடுகள் அவனை துரத்த ஆரம்பிச்சுது. அந்த ஃபினான்ஷியர் முதல்லே.. அவன் கிட்ட பணத்தை திருப்பவும், பேசினதை விட அதிக வட்டி கேட்டு தகராறு பண்ணி, வேதம் ஆபீசையே நாறடிச்சான். அப்புறம் வேறே வழியில்லாம அவன் சேமிப்புல இருந்து எடுத்து அதை சரி பண்ணான். அடுத்த ரெண்டு நாள்லே வேலைக்கு சேர்ந்த நாலு பேரும் ரிசைன் பண்றதா சொன்னாங்க. திரும்ப அவன் சேமிப்புலே இருந்துப் பணத்தை எடுத்து செட்டில் பண்ணி அனுப்பினான். அவனோட கையிருப்பு முக்கா வாசி காணாம போச்சு.
இதெல்லாம் ஒரு பக்கம்னா அனுபவம் இல்லாம செஞ்ச அகலக்கால் வேலையினால அவன் பேரும், வேதம் பேரும் கெடவும் பிசினஸ்லே அடி விழ ஆரம்பிச்சுது. அப்பா உயிரை குடுத்து வளர்த்த பிசினஸ்க்கு தன்னால அடி விழ வேண்டாம்-னு பிசினஸை விட்டும், குற்ற உணர்ச்சி, விரக்தி இவைகள்-னால வீட்டை விட்டும் வெளியேறினான். வாழ்க்கை மேலே பிடிப்பு போய் தன்னைத் தானே அழிச்சுக்க ஆரம்பிச்சான்.
மதுரியாவுக்கு விதுரனோட கதையிலே இருந்து விக்கி எப்படி திட்டம் போட்டு வீழ்த்தி இருக்கான்-னு புரியவும் உள்ளே கோபம் பொங்க ஆரம்பிச்சுது. “எங்கேத் தப்பு நடந்துச்சு விதுரன்? எப்படி?”-னு கேட்டா மதுரியா. “எல்லாமே தப்புங்கறப்போ எதை-னு சொல்றது? எனக்கு அவ்வளோ தான் திறமை”-னு தன்னையே நொந்துக்கிட்டான். “ஏனாம்? அவ்வளோ உதவி பண்ண உங்க ஃப்ரெண்ட்ஸ் எங்கே? அப்புறம் உங்க… ம்ம்ம்… வந்து… சுவாதி எங்கே?”-னு கேட்டா மதுரியா. அவ முகத்தை தன் பக்கம் திருப்பி, “சாரி மது,,, நான் உன்னை படுத்தின பாட்டுக்கான தண்டனை இது”-னு உணர்ந்து சொல்லவும், உள்ளே உருகிப் போனா மதுரியா. “பாஸ்ட் ஈஸ் பாஸ்ட் விது. நம்ம நட்பு மாறலே.. அடுத்து என்ன-னு பார்ப்போம்”-னு சொன்னா. “தேங்க்ஸ்”-னு கண்ணும் கண்ணும் பார்க்க, கன்னத்துலே இருந்த கை கீழே இறங்கலே. “ம்ம்ம்.. கேட்ட கேள்விக்கு பதில்”-னு கேட்டா மதுரியா. “ம்ம்ம்… சுவாதி நான் இந்த ப்ராஜெக்ட் எடுக்கறதுக்கு முன்னயே ரிசைன் பண்ணிட்டா. இன்ஃபாக்ட் இதோட ரிசல்ட் வர்றதுக்கு முந்தின நாள் அவளுக்கு லாஸ்ட் டே. ரிஷி தான் சொன்னான்”-னு சொல்லும் போதே அவங்க மயக்கத்தை ஒரு தொண்டை கனைப்பு கட் பண்ணுச்சு.
அதுக்கு சொந்தக்காரன் விக்ரம். “என்ன காரியம் பண்ண இருந்தோம்?”-னு தன்னையே திட்டிக்கிட்டா மதுரியா. “ஃப்ரெண்ட்ஸ் கிட்ட பெரிசா எந்த எதிர்பார்ப்பும் இல்லே. வந்துப் பார்த்தா தான் அன்பா? இதோ இவன் தான் அப்பப்போ வருவான்.. வாடா”-னு கூப்பிட்டான். விக்ரமுக்கு, மதுரியா அங்கே இருக்கறது, வீட்டோட சுத்தம், விதுரனோட மாற்றம், அவன் வரும் போது அவங்க இருந்த நிலை எல்லாமே ஆச்சர்யம். ஆனா மதுரியாவுக்கு விதுரனோட நண்பர்கல்னாலே எட்டிக்காயா இருந்துச்சு. அதுவும் விதுரனோட கதை கேட்கவும் கோபாக்னி திகுதிகு-னு எரிஞ்சுது. “மது.. விக்ரமை ஞாபகம் இருக்கு தானே?”-னு கேட்டான். “ம்ம்ம்… மறக்க முடியுமா? ஆனா அவர் தான் என்னை இங்கே எதிர்பார்க்கலே போலருக்கு”-னு அலட்சியமா சொல்லி புருவம் தூக்கினா. “நானே எதிர்பார்க்கலே.. அப்புறம் அவன் எப்படி?”-னு சிரிக்கவும், “அதுக்குன்னு இப்படி பேயை பார்த்த மாதிரி பார்க்கிறார்?”-னு குத்தலா சொல்லவும், ரெண்டுப் பேருக்குமே அவ கோபம் புரியலே. “சரி.. சரி.. விடு போயி காபிப் போட்டு எடுத்துட்டு வர்றேன்”-னு எந்திரிச்சான் விதுரன். “ஏது? நீயா? காபி போடறியா?”-னு சுகமா அதிர்ந்தான் விக்ரம். “ஒரு காபிதான் போடறார். அதுக்குப் போய் இப்படி ஒரு ரியேக்ஷனா?”-னு புருவம் சுருக்கவும் விதுரன் ஒரு ஸ்மைலோட உள்ளே போனான்.
“என் மேலே என்னம்மா கோபம்?”-னு நேரடியா கேட்டான் விக்ரம். மதுரியாவும் நேரடியா, “கோபமா?கொலைவெறி!! விதுவை இப்படி நடுத்தெருவுலே நிறுத்தினதுக்கு உங்க மூணு பேரையும் கொல்லணும்-னு வெறி வருது”-னு மெதுவாகவும் ஆனால் முழு ஆத்திரத்தையும் குரல்லே தேக்கி சொன்னா. “நாங்களா? நாங்க அப்படி என்ன பண்ணோம்?”-னு கோபமா கேட்டான் விக்ரம். “கரெக்ட்.. கரெக்ட்… டைரக்டா பண்ணது அந்த விக்கி. நீங்க அவன் கைக்கூலி. நட்புன்னா கிலோ என்ன விலை-னு கேட்கிற அசிங்கம் புடிச்ச ஜென்மம் நீங்க எல்லாம்”-னு ஆத்திரமா பேசினா. “ஹேய்..”-னு கத்தி அவளை தரதர-னு இழுத்துட்டு வெளியே வந்தான். “என்ன… மிரட்டிட்டா வேலை முடிஞ்சுடுமா? அந்த விக்கி முட்டாள். எனக்கு எதுவும் தெரியாது-னு நினைச்சிட்டிருக்கான். என்கிட்ட இப்போ இருக்கற எவிடென்ஸ் போதும் அவனை ஜெயில்லே தள்ள. இன்னும் மொத்தமா கலெக்ட் பண்ணி என் விது லைஃபை கெடுத்த அந்த சனியனை என்ன பண்றேன்-னு பாருங்க”-னு மூச்சு வாங்க சொன்னவளை பார்த்து பேரதிர்ச்சி விக்ரமுக்கு.
உண்மை என்னன்னா விக்ரமுக்கு அவ சொன்னது எதுவுமே புரியலே. விக்கி, ரிதேஷ் கிட்ட ஏதோ தப்பு இருக்கு-னு மட்டும் யோசிச்சான். ஆனா உயிர் நண்பனான விதுரனுக்கு குழி வெட்டுவாங்க-னு நினைக்கவே இல்லை. முதல்லே மதுரியா கோபத்துலே பேசறா-னு மட்டும் தான் நினைச்சான். ஆனா ஆதாரம்-னு சொன்ன உடனே ஐயோ-னு ஆயிடுச்சு. “எனக்கு எதுவும் நிஜமா தெரியாதும்மா. நான் அவனுங்க கிட்ட பேசி மாசக் கணக்காகுது. என்னை விட்டு ஏன் விலகினாங்கன்னே இப்போத் தான் எனக்கு விளங்குது. சத்தியமா இதை நான் எதிர்பார்க்கலே”-னு வருத்தமா சொன்னான் விக்ரம். “ஆமா… விக்கி மாதிரி ஒரு முகரக்கட்டைக் கிட்டே இருந்து வேறே என்னத்த எதிர்பார்ப்பீங்க? போய் அவன் கிட்டே சொல்லுங்க. நேரம் கூடி வரும் போது அந்த சனியன் என் காலடியிலே கிடக்கும்-னு… என் விதுவுக்காகக் கண்டிப்பா அதை செய்வேன். சே.. உங்க முகத்துலே எல்லாம் விழிச்சாலே பாவம் வந்து சேரும். நீங்க பேசிட்டு போனப்புறம், நான் உள்ளே வர்றேன்”-னு மொத்தமா வெளியே போய் காம்பவுண்டுக்குப் பக்கத்திலே இருக்கற திண்டுலே வெயில்லே உட்கார்ந்தா மதுரியா. விக்ரமுக்கு ஜீரணிக்கவே முடியலே. என்ன செய்யறது-னு தெரியாம உள்ளே போகவும், விதுரன் காபியோட வர்றதுக்கும் சரியா இருந்துச்சு. “என்ன? முகத்தை திருப்பிட்டு போயிட்டாளா?”-னு கேட்டுட்டே காபியை குடுத்தான். அப்புறம் காபியை குடிச்சுட்டே ஜெனரலா பேசிட்டு, “அவங்க கோபம் ஓரளவு நியாயம் தான் விதுரா. நீ சமாதானம் பண்ணு. நம்ம இன்னொரு நாள் பேசலாம்”-னு கிளம்பினான் விக்ரம்.
விதுரனுக்கு கொஞ்சம் கஷ்டமா போச்சு. “சாரி, விக்ரம்.. மதுவுக்கு நீங்கல்லாம் என்னை தனியா விட்டுட்டீங்க-னு நினைச்சு ஏதோ சின்ன பிள்ளைத்தனமான கோபம்”-னு தடுமாற்றமா சொன்னான். “அது உண்மை தானேடா?இப்போ அது முக்கியம் இல்லே. நீங்க திரும்ப ஒண்ணு சேர்ந்தது தான் சந்தோஷம்”-னு விக்ரம் சொல்லவும், “அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லே… வெறும் நட்பு மட்டும் தான்”-னு சொன்னான் விதுரன். “அடப் பாவி”-னு மனசுலே நினைச்சுட்டே போனான். போற வழியிலே, “ரியா நீங்க சொன்னது எதுவுமே எனக்கு தெரியாது நீங்க நம்பலேன்னாலும் அது தான் உண்மை. கண்டிப்பா நீங்க சொன்ன எதையும் நான் விக்கிக்கு சொல்ல மாட்டேன். அவன் தப்பு பண்ணி இருந்தா நிச்சயம் தண்டனை அனுபவிச்சுத் தான் ஆகணும். அதுக்கு என் உதவி தேவைப்பட்டா என்னை தாராளமா காண்டேக்ட் பண்ணுங்க. அப்புறம் எவிடென்ஸ் இல்லேன்னாலும் ரிதேஷை நம்ப வேண்டாம்”-னு சொல்லிட்டு விறு விறு-னு போயிட்டான்.
போற விக்ரமையே திகைச்சுப் போய் பார்த்துட்டு இருந்தா மதுரியா. “மது மேடம்! கோபம் போயிடுச்சுன்னா உள்ளே வரலாமே. இப்படி வெயில்லே ஏன் வத்தல் மாதிரி காயணும்? அப்படி ஏதும் நேர்த்திக்கடன் இல்லையே?”-னு கிண்டலா கேட்கவும், அவனை முறைச்சுட்டே உள்ளே போனா. அதை அடக்கின சிரிப்போட பார்த்தான் விதுரன். “சொல்லுங்க விது… நெக்ஸ்ட் ஸ்டெப்ஸ் என்ன?”-னு கேட்டா. “மது என் கதை மொத்தமும் தெரியும் உனக்கு. அதோட பேரும் கெட்டுப் போச்சு. வேறே கம்பெனிக்கு வேலைக்குப் போனா அப்பாவுக்கு அசிங்கம்… அப்பாகிட்ட போனா வேதம்-கு பிரச்சினை. எனக்கு போறதுக்கு இடமோ வழியோ கிடையாது மது. நான் ஒரு செல்லாக்காசு”-னு விரக்தியா முடிக்கவும், “நீங்க ஆம்பிள்ளை தானே? இப்படி சொல்ல அசிங்கமா இல்லே?”-னு கேட்டா மதுரியா.
ஆறு மாசமா தூங்கிட்டிருந்த ஈகோ திடுக்-னு கண்ணு முழிச்சுது விதுரனுக்கு. “மரியாதையா பேசு மது”-னு உறுமினான். “அதான் செல்லாக்காசு-னு சொல்லிட்டீங்க இல்லே? அப்புறம் எதுக்கு மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்காத கோபம்”-னு மேலே சீண்டவும். “ஏன்னா… இன்னும் சொந்த காசுலே சாப்பிடற மான ரோஷம்”-னு வெடுக்னு பதில் சொன்னான் விதுரன். “எவ்வளோ நாளைக்கு? தீரும் போது மான ரோஷம் போயிடும் தானே?”-னு எகத்தாளமா கேட்கவும் அடிப் பட்ட பார்வை பார்த்தான் விதுரன். “ஏன் விது? அது நடக்காது டீ.. நான் எந்திரிப்பேன்-னு என் தலை முடியை கொத்தா பிடிச்சு சொல்லுங்க விது”-னு இறங்கிப் போன குரல்லே கேட்கவும், ஓடிப் போய் அவளை ஹக் பண்ணான் விதுரன்.
“வேணாம் மது… என்னை சீண்டறதுக்குக் கூட அப்படி பேசாதே. ரொம்பக் கஷ்டமா இருக்கு.. உன்னையும் கோபத்துலே ஏதாவது சொல்லிட்டேன்னா தனியாயிடுவேன்”-னு எமோஷனலா சொன்னான். முதுகைத் தடவி சமாதானம் பண்ணி அவனை விலக்கி நிறுத்தினா. ரெண்டுப் பேருக்கும் அந்த அணைப்புலே எதுவுமே விகல்பமாவோ வித்தியாசமாகவோ தோணவே இல்லை. “சரி.. பேசலே… எனக்கு கொஞ்சம் குடிக்க தண்ணி வேணும்”-னு கேட்டு வாங்கி குடிச்சா. அதுக்குள்ளே அவனும் சுதாரிச்சான். “சரி விதுரன்… நீங்க வேதம் நம்பி பிறக்கலே. ஆரம்ப நிலையிலே இருந்து தான் அதுவும் வந்துச்சு. மூர்த்திப்பா பிசினஸ்மேனா இல்லாம இருந்திருந்தா, நீங்க இதே படிப்பை படிச்சுட்டு என்ன பண்ணி இருப்பீங்க? என்ன இண்டரெஸ்ட் உங்களுக்கு? அதை எப்படி அப்ரோச் பண்ணி இருப்பீங்க? அந்த ஏங்கிள்லே யோசிங்க. சார்ட் அவுட் சம்திங்.. இட்ஸ் நெவர் டூ லேட் டு ஸ்டார்ட் ஃப்ரம் தி ஸ்க்ரேட்ச். அப்புறம், இனி என்னால முடியுமா. நான் வேஸ்ட்.. செல்லாக்காசு-னு டீமோடிவேட் பண்ற தாட்ஸ் தோணவே கூடாது. வி ஆர் கோயிங் டு டூ திஸ் டுகெதர்.. ஐ அம் வித் யூ இன் திஸ்.. டிரஸ்ட் மீ”-னு அழுத்தமா சொல்லவும் ஏதோ ஒண்ணு விதுரனுக்குள்ளேயும் நிமிர்ந்துச்சு. “சரி மது”-னு சொன்னான். “சரி.. ஓகே… நான் நாளைக்கு வர மாட்டேன். டேக் யுவர் டைம் டுமாரோ.. நான் மண்டே ஷிஃப்ட் முடிச்சுட்டு மதியம் வந்து பார்க்கிறேன்”-னு சொல்லிட்டு கிளம்பினா.