அத்தியாயம் -34

நாளும் பொழுதும் யாருக்கும் காத்திருக்காம ஓடிடுச்சு. விதுரன் அவன் போட்ட கண்டிஷனை அமலுக்கு கொண்டு வந்தான். ஆனா அந்த முத்தத்துக்கு அப்புறம் எல்லை மீறவே இல்லை. நட்பா ஒரு அணைப்பு, நெத்தியிலே முத்தம்-னு பழக்கத்திலியும் தொடுகைகளிலும் நட்பு மட்டும் தான் இருந்துச்சு. ஆனா பார்வையிலேயும் நினைப்புலேயும் காதல் மட்டும் தான் இருந்துச்சு. பல சமயம் தன்னை கட்டுப்படுத்த ரொம்ப கஷ்டப்பட்டான். மதுரியா முதல்லே அவன் கிட்ட சொன்ன வார்த்தைக்காக கஷ்டப்பட்டுத் தான் சகஜமா பேச ஆரம்பிச்சா. ஆனா ரெண்டு நாள்லே இயல்பாவே வந்துச்சு. அப்படி பேச ஆரம்பிச்சதும் கோபமும், அவனை காயப்படுத்தற மாதிரி பேச்சும் படிப்படியா குறைய ஆரம்பிச்சுது. பாதிக்கு பாதி குறைஞ்சுது. அதுக்கு காரணம் விதுரனின் நட்பை மட்டுமே எதிர்பார்த்து பழகறது தான். காலையிலே கிளம்பி போயி, மதியம் அவன் அலுவலகத்துக்குப் போவா. அங்கேயும் கூட அவ படிப்பு, வேலையை செய்ய சொல்லிடுவான். தேவைப் படற உதவியை மட்டும் பண்ணிட்டு எப்போவும் போல 4 மணிக்கு வீட்டுக்கு வந்துடுவா. அப்புறம் அவன் இரவு வந்ததும் சாப்பிட்டு படுக்கறதுக்கு முன்னாடி ஒரு அரை மணி நேரம் ஏதாவது பேசிட்டு தூங்குவாங்க. அந்த அரை மணி நேரம் சில நாள் வெறும் கதையாய் இருக்கும், சில நாள் பேசக் கூடாததைப் பேசி வாங்கிக் கட்டிப்பான்.

இப்படியே நாள் போக அவங்களோட வரவேற்பு நாளும் வந்துச்சு. அன்னிக்கு ரெண்டுப் பேருமே வீட்ல இருந்தாங்க. “ரியா… ரெடியா? கிளம்பலாமா?”-னு கேட்டுட்டே வந்தா கிருத்திகா. “எங்கே அண்ணி?”-னு கேட்டான் விதுரன். “மதியம் ப்யூட்டி பார்லர் அப்பாயிண்ட்மெண்ட் விதுரன்.. போயிட்டு நேரா ஹாலுக்கு வந்துடுவோம். போலாம் ரியா”-னு கிளம்பினாங்க. “சே… இன்னிக்கு லீவு.. கொஞ்ச நேரம் அவளோட கடலை உடைக்கலாம்னா.. புயீட்டி பார்லராம்.. ஏன்? அவ தான் அழகா இருக்காளே?”-னு புலம்பும்போதே வாசல்லே நின்னாங்க விக்கியும் ரிதேஷும். மதுரியா வெலவெலத்துத்தான் போனா. 

“வா.. வாங்க வாங்க”-னு ரியேக்‌ஷனே இல்லாம கூப்பிட்டா. விக்கிக்கும் அதிர்ச்சியிலே அவ பயத்தையும் தடுமாற்றத்தையும் கவனிக்க முடியலே. “டேய்… வாங்க… வாங்க…”-னு வாய் நிறைய கூப்பிட்டான் விதுரன். வீட்டுலே மத்தவங்களும் கூப்பிட்டாங்க. “விக்கி, எப்போ வந்தே யூஎஸ்லே இருந்து? ரிதேஷ் நீ எப்படி இருக்கே?”-னு கேட்டு சகஜமா பேசினான் விதுரன். “ம்ம்ம்… உன் ரிசப்ஷன் மெயிலை பார்த்ததும் லீவை போட்டுட்டு ஓடி வந்துட்டேன்”-னு சொல்லிட்டே சுதாரிச்சாங்க ரெண்டுப் பேரும். “என்னடா திடீர்-னு கல்யாணம்?”-னு ரிதேஷ் கேட்கும் போதே விக்கியோட பார்வை விதுரனை அளவெடுத்தது. அவன் கடைசியா பார்த்ததுக்கும் இப்போ பார்க்கிறதுக்கும் மலையளவு வித்தியாசம். இன்னும் சொல்லப் போனா இது பழைய விதுரன் கூட கிடையாது. கண்ணுலே கூர்மை, முகத்துலே அனுபவம் குடுத்த முதிர்ச்சி-னு இன்னும் தெளிவா இருந்தான்.

ஏதோ பேசும் போதே நண்பர்களை விட்டு எல்லாம் நகர்ந்தாங்க. மதுரியாவும் கிருத்திகாவும் கிளம்பறதுக்கு எடுத்து வைச்சிருந்தாங்க.. “திடீர்-னு பண்ண வேண்டிய ஃபேமிலி சிச்சுவேஷன் டா.. அதான்.. எனக்கு வெட்டிங் சிம்பிளா போதும்-னு தோணுச்சு”-னு ஸ்மைலோட சொன்னான். “அதுக்கு-னு வேண்டாம்-னு சொன்னவளோடேயேவா?”-னு விக்கி ஸ்டார்ட் பண்ணவும், “சே.. சே.. ஐ லவ் ஹர் மேன்.. நான் இப்போ தான் புரிஞ்சுகிட்டேன்”-னு சொன்னான் விதுரன். “இவன் என்னடா நம்மகிட்டேயே அளக்கிறான்?”-னு ரிதேஷ் சொல்லவும், “நாரதனுங்க.. இவங்களை எப்படியாவது விரட்டணுமே?”-னு கறுவினா மதுரியா. அப்போ தான் அந்த யோசனை வந்துச்சு. “அக்கா, இந்த டெம்பிள் ஜ்வெல்லரி செட் உங்க ரூம்லே இருக்கு. கொண்டு வர்றீங்களா? விது, நீங்களும் எங்க கூட வாங்க. உங்க ரிசப்ஷன் ஷர்வாணியோட பாண்ட் ஆல்டரேஷன் குடுத்து வாங்கிடலாம்.. ரிஷி அண்ணாவும் கூட வருவாங்க.. ப்ளீஸ். சாரி ப்ரதர்ஸ்! ஈவினிங் ரிசப்ஷன் வேலை. அது முடிஞ்சா ஹீ ஈஸ் ஆல் யுவர்ஸ்”-னு கிருத்திகா கிட்ட ஆரம்பிச்சு விக்கி கிட்ட முடிச்சா. அவ பேச்சு சுருக்-னு இருந்ததுன்னா, விதுரனோட ரியேக்‌ஷன் அதிர்ச்சியா இருந்துச்சு விக்கிக்கு.

அவ கூட நேரம் கிடைக்காதான்னு ஏங்கினவனுக்கு அவளே கூப்பிடவும் ஒரே சந்தோஷம். அவனை பொறுத்த வரைக்கும் விக்கியும் ரிதேஷும் சொன்னா புரிஞ்சுப்பாங்க. அது மட்டுமில்லாம மதுரியாவுக்கு அவங்க யாரும் அவன் தோல்வி அப்போ கண்டுக்கலே-னு கோபம் இருக்கு. அதனால் அவளை சமாதானம் பண்றது தான் முக்கியம்-னு நினைச்சு, “ஓகே மேடம்.. சாரிடா பசங்களா.. இப்போ மது கூட போயே ஆகணும். நம்ம வர்ற வீக் எண்ட்லே பேசுவோம். போலாம் மதுக்குட்டி. டூ மினிட்ஸ்”-னு மாடிக்கு ஓடவும், ‘பே..’-னு பார்த்தாங்க ரெண்டுப் பேரும். இந்த சமயம் மதுரியாவை பார்த்து மனசளவுலே கறுவத்தான் முடிஞ்சுது விக்கினால. 

விதுரன் கீழே வந்து மதுரியா தோள்லே கையை போட்டு கூடப் போறதை இயலாமையோட பார்த்தான் விக்கி. அப்போ மட்டுமில்லே.. ரிசப்ஷன்லே அடர் பச்சை நிறத்துல பொறுத்தமான ஜோடியா மேடையிலே நின்னு சகஜமா பேசி, சிரிச்சு, புகைப்படம் எடுக்கும் போதும், கூட போஸ் குடுத்து வாய் வலிக்கறப்போ மதுரியாவோட தாடையை இயல்பா விதுரன் தடவி பிடிச்சு விட்டப் போவும் கூட விக்கினால ஒண்ணுமே பண்ண முடியலை. ஆனா விதுரன் அதை ஒரு நட்புணர்வோட செஞ்சதால மதுரியாவுக்கும் தப்பாத் தெரியலே.

ரிசப்ஷன் அமோகமா நடந்து முடியவும் ரெண்டுக் குடும்பத்துக்கும் அவ்வளோ சந்தோஷம். விதுரன் – மதுரியாவோட எல்லா நண்பர்களும் வந்தாங்க. அவளோட சீனியர் டாக்டர் ப்ரேம்நாத்தும், அசோக்கும் வந்தாங்க. நந்திதாவும் அகல்யாவும் வந்தாங்க. சொல்ல தேவையில்லாம ரீனாவும் ப்ரதீப்பும் வந்தாங்க. ஒரே சிரிப்பு, கலாட்டாவா இருந்துச்சு. இவ்வளவுலேயும் அசோக் – விக்கி கண்ணுலே இருந்த கோபம், பழி உணர்ச்சி ரீனா – மதுரியா கண்ணுலே இருந்து தப்பலே. “இவனுங்களை சீக்கிரம் பிடிக்கணும் ரீனா”-னு பக்கத்துலே இருந்தவ காதுலே கிசுகிசுத்தா மதுரியா. “பண்ணலாம்டீ. ரிசப்ஷன் மேடையிலே நின்னுட்டு பேசற பேச்சா இது?”-னு கேட்டா ரீனா. 

அப்புறம் வர்றவங்களை பார்த்து, கேக் வெட்டி, சாப்பிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தப்போ மணி பன்னிரண்டு. அவ்வளோ அலுப்பு. அடுத்த நாள் காலையிலே விதுரன் கண் முழிச்ச போது மணி 8. அவன் பக்கத்துலே பூனை மாதிரி தூங்கிட்டு இருந்தா மதுரியா. “மது… உனக்கென்னடா கோபம் என் மேலே? ஏன் அதை மட்டும் சொல்ல மாட்டேன்கிறே? அதை நினைக்கும் போது எல்லாம் உன் கண்லே தண்ணி கோத்து நிக்கலேன்னா ஃபோர்ஸ் பண்ணி கேட்டுடுவேன். ம்ம்ம்… சீக்கிரமே என் அன்பை புரிய வைக்கிற சந்தர்ப்பம் கிடைக்கும்… லவ் யூ மது… எப்போவும்”-னு நெத்தியிலே முத்தம் குடுத்துட்டு எந்திரிச்சு போனான்.

அதே நேரம் விக்கியும் அசோக்கும் ஒரு க்ளப்லே சிகரெட் ஊதி தள்ளிட்டு பீரோட உட்கார்ந்திருந்தாங்க. “நம்ம ஒண்ணு நினைச்சா வேறே ஒண்ணு நடக்குது? எப்படி? நான்… அவ ப்ரதீப்பை லவ் பண்றா-னு நினைச்சேன் விக்கி”-னு சொல்லவும், “ஆமா அப்படித் தான் நினைச்சேன். நினைச்சு இவ பின்னாடி சுத்தினா, புதுசா வேறே ஒருத்தி முளைக்கிறா. லவ்வாம்…. மதுரியாவோட க்ளோஸ் ஃப்ரெண்டாம். அந்த நந்தினி மாதிரி தத்தி-னு பார்த்தா படு உஷாரா இருக்கா ப்ரிதீப்போட ரெண்டாவது வைஃப்”-னு சிடுசிடுத்தான் அசோக். “ஆமா அசோக்! ப்ரதீப்பை வைச்சு நம்மால எந்த கலகமும் பண்ண முடியாது. அவனுக்கும் விதுரனுக்கும் நடுவுலே பலமான நட்பு இருக்கு. அதை விட சண்டை கோழிங்க மாதிரி இருந்த விதுரன் – மதுரியா.. அவங்களோட கல்யாணம், விதுரனோட புது தொழில், வளர்ச்சி, வீட்டோட சேர்ந்தது எல்லாமே மர்மமா இருக்கு அசோக். எங்கேயோ எதையே மிஸ் பண்றோமா? இல்லே எல்லாமே கோயின்சிடென்சா?”-னு கேட்கும் போதே விக்கியோட போன் அடிச்சுது. 

யார்னு பார்த்து கட் பண்ணான். “யாருடா? பேசு..”-னு அசோக் சொல்லவும், “அப்பா தான்.. எல்லாம் அவரால தான்.. ரிதேஷை சென்னையிலே விட்டிருந்தா ஸ்டார்டிங்லேயே கலைச்சிருக்கலாம். அவனை எங்கேயோ அனுப்பிட்டு என் ப்ளானை கெடுத்துட்டார்”-னு கோபமா சொன்னான். “ம்ம்ம்ம்… எவ்வளோ நாள் லீவு? எப்போ போகணும்?”-னு அசோக் கேட்கவும், “லீவா? கோர்ஸை ஒன் இயருக்கு டெஃபர் பண்ணிட்டு வந்து இருக்கேன். அதுக்குள்ளே இவனுங்களை சரி பண்ணிடணும். இல்லேன்னா எங்கப்பா உண்டு இல்லை-னு பண்ணிடுவார்”-னு சொன்னான் விக்கி.

“ம்ம்ம்… சரி.. என்ன பண்ணலாம்?”னு அசோக் கேட்கவும், “முதல்லே புருஷன் பொண்டாட்டியை பிரிப்போம். நீ அந்த பொண்ணு கிட்ட அவ இருக்கறப்போ நந்தினியை பத்தியே பேசு… நான் சுவாதியை உள்ளே இழுத்து விடறேன். விதுரன் – மதுரியா ரெண்டுப் பேருக்குமே ஈகோ ஜாஸ்தி. லேசு பாசா பண்ணாலே சண்டை வந்துடும்.. என்ன முதலிலேயே பிரிச்சிருந்தா இவ்வளோ சேதாரம் இல்லே. அவ அதிர்ஷ்டம்”-னு தோளை குலுக்கி ப்ளான் பண்ணாங்க. ஆனா மதுரியாவும் ப்ரதீப்பும் சந்திச்ச நாள்லே இருந்தே அவங்க வீழ்ச்சி ஆரம்பம்-னு புரியலே.

ரிசப்ஷன் முடிஞ்சப்புறம் திரும்ப நாள் பழைய படி ஓட ஆரம்பிச்சுது. மதுரியா அவ டிரெயினிங் கடுமையாவும் அதிக களைப்பானா. சர்ஜரி அதிகமாக, நிறைய நேரம் நின்னு கால் வலி வர ஆரம்பிச்சுது. அதை விதுரனும் உணர்ந்தான். ஒரு நாள் தூங்க முடியாம புரண்டப்போ மதுரியாவோட காலைத்தூக்கி மடியிலே வைச்சு பாதம், கணுக்கால்-னு பிடிச்சு விட ஆரம்பிச்சான். பதறி எழுந்து “என்ன பண்றீங்க? கொஞ்சம் பேச ஆரம்பிச்சா அட்வாண்டேஜ் எடுத்துக்கிறீங்களா? எனக்கு இதெல்லாம் பிடிக்காது. இதெல்லாம் பண்ணிட்டா மட்டும் நான் உங்களை நம்பிடுவேனா?”னு முடிக்கறதுக்குள்ளே மிச்ச வார்த்தைகள் எல்லாம் அவன் உதட்டுக்குள்ளேயே அடங்கி போச்சு. கண்ணு திகைப்புலே விரிஞ்சு தன்னை போல மூடவும் ஒரு திருப்தியோட சிரிப்போட விதுரன் கண்ணும் மூடுச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு அவளை விடுவிச்சவன், “ம்ம்ம்… படுக்கிறியா? இல்லே இன்னும் தண்டனை வேணுமா?”-னு புருவத்தை தூக்கி கேட்கவும், “சே..”-னு படுத்துட்டா. அதுக்கப்புறம் கால் அழுத்தற சுகத்துலேயே தூங்கியும் போனா. இதுவே வழக்கமாவும் போச்சு. விதுரன் மேலே தனக்கு பயமா இல்லே அவன் அன்புக்கு கொஞ்சம் கொஞ்சமா மயங்கறேனா-னு குழம்ப ஆரம்பிச்சா.

***************************************************************************************

கொஞ்ச நாள் கழிச்சு ஒரு சாயங்காலம் விக்கி, விதுரன் வீட்டுக்கு வந்தான். “விதுர்.. ரொம்ப பிசியா டா? போன் எடுக்க மாட்டேங்கறே?”-னு விக்கி கேட்கவும் மதுரியாவுக்கு பக்-னு ஆச்சு. “ஆமா டா.. ஒரு புது பெரிய ப்ராஜெக்ட்.. அதான்”-னு விதுரன் சொல்லவும் “குட்… குட்.. ரொம்ப சந்தோஷம்டா உன்னை இப்படி பார்க்க.. ஆறு மாசம் முன்னாடி எப்படி இருந்தான் தெரியுமா சிஸ்டர்?”-னு விதுரன் கிட்ட ஸ்டார்ட் பண்ணி மதுரியா கிட்ட முடிச்சான். “உங்களுக்கு தெரிஞ்சுமா அவரை அப்படியே விட்டுட்டீங்க?”-னு கூர்மையா கேட்டா மதுரியா. விதுரன் தர்ம சங்கடமா நெளியவும் விக்கியே பேச்சை மாத்தினான். “என்னவோ பேச வந்துட்டு ஏதேதோ பேசறேன்.. வர்ற சாடர்டே என் பர்த்டே பார்ட்டி டா. நீ மட்டும்னா மெசேஜ் பண்ணி இருப்பேன். சிஸ்டருக்கும் சேர்த்து இன்விடேஷன்.. கண்டிப்பா வந்துடுங்க ரெண்டுப் பேரும். லொகேஷன் டெக்ஸ்ட் பண்றேன்”னு சொல்லவும், “நானா?”-னு மதுரியா இழுக்கவும், “நாங்க நாலு பேர், நீங்க, விக்ரமோட லவர் மட்டும் தான்”-னு சொல்லவும் வேறே வழியில்லாம தலையாட்டினா. அங்கே போனப்புறம் தான் அவளோட புதிர்லே இன்னொரு முடிச்சு அவிழறதுக்கு வழி கிடைக்க போகுது-னு தெரியலே அவளுக்கு.

விதுரனுக்கு என்ன சொல்வாளோன்னு யோசனை. ஆனா அவளே சரினு சொல்லவும் சமாதானமாச்சு. சாயங்காலம் ஒரு ஸ்டார் ஹோட்டல்லே தான் சாப்பாடும் மதுபானமும் ஏற்பாடுப் பண்ணி இருந்தான் விக்கி. அதுக்கு தயாராகிக் கீழே வந்தவளை பார்த்து மூச்சு விட மறந்தான் விதுரன். க்ரே நிற முட்டிக்கு கீழயிருந்த மிடி, அதுக்கு கருப்பு நிறப் பருத்தி டாப்ஸ், கழுத்தை சுத்தின ப்ளேக் ஜெம் ஸ்டோல், ஃப்ரெஞ்ச் ப்ளாட்லே முடி முன்னாடி தொங்குச்சு. அளவான அதே சமயம் அக்கறை எடுத்து பண்ண ஒப்பனை. பொம்மை மாதிரி இருந்தா மதுரியா. “போலாமா?”-னு கேட்டுட்டே நிமிர்ந்தவ விதுரனோட விழுங்கற பார்வையிலே திகைச்சுப் போனா. “விதுரன்! போலாமா?”-னு அழுத்தமா கேட்டா. அவனும் தொண்டையை கனைச்சு “போ… போகலாம்”-னு சொன்னான். 

வீட்லே எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு கிளம்பினாங்க ரெண்டுப் பேரும். விதுரனுக்கு மதுரியா மேலே இருந்த கண்ணை எடுக்கவே முடியலே. அவளை பார்த்துட்டே இருந்தான். அவன் பார்வையிலே கன்னம் சிவந்தாலும் “கொஞ்சம் ரோட்டை பார்த்து ஓட்டுங்க. எங்கப்பா அம்மானால நான் இல்லாம இருக்க முடியாது”-னு கடுப்பா சொன்னா. ரொம்ப நாள் கழிச்சு மனசுலே இருந்து கோபமும் வக்கிரமும் அவனை காயப்படுத்தனும்-னு எண்ணமும் மேலே எழும்புச்சு. “எனக்கும் தான் டீ”-னு சிரிக்கவும், “ஆஹா… உங்களுக்கு என்ன… நானில்லைன்னா வேறே ஆளா இல்லே? இப்போவே பார்ட்டி முடிஞ்சு உங்க ஃப்ரெண்ட்ஸ் ஏத்திவிட்டு, நான் உங்க வீட்டுக்கு வரப் போறேனோ இல்லே எங்க வீட்டுக்கு போகப் போறேனோ?”-னு சுருக்-னு சொன்னா. கிரீச்னு சத்தத்தோட கார் நின்னுச்சு. “அப்படியே ஒண்ணு விட்டேன்னா? நீ இல்லைன்னா வேறே ஒருத்தியா? நீ என் பொண்டாட்டி. அப்படி இருந்துமா இப்படி பேசறே? உன்னை எல்லாம் என்ன செய்யட்டும் நான்?”-னு விதுரனுக்கு கோபம் வந்துச்சு. “அடிச்சுட்டா மட்டும் அது இல்லே-னு ஆயிடுமா? ஒரு வருஷம் முன்னாடி இப்படியொரு பார்ட்டிக்குப் போய் உங்க ஃப்ரெண்ட்ஸ் ஏதோ சொல்லித் தானே என் கூட சண்டை போட்டு பிரிஞ்சீங்க? எப்படி பிரிக்கறதோட விட்டாங்களா? இல்லே அந்த கோத்தி தான் உங்களுக்கு சரி-னு சொன்னாங்களா?”-னு ஏளனமா கேட்டா.

விதுரன் வாயடைச்சுத்தான் போனான். அவ சொல்றது நடக்கத்தான் செஞ்சுது. ஆனா அவன் செயலுக்கு வேறே ஒருத்தரை காரணமாக்க அவன் தயாரில்லை. “மது.. ஏன்டி? ஏன்? நீ இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கே-னு உன்னை பார்த்து ரசிச்சேன்.. என் வைஃப்டீ நீ. உன் மேலே அவ்வளோ அன்பு இருக்கு…அதே மாதிரி என் மனைவியான உன் மேலே கட்டுக்கு அடங்காத காதலும் இருக்கு.. ஒரு புருஷனா நான் உன்னை ரசிக்கறதுலே என்ன தப்பை கண்டுட்டே?”-னு சலிப்பா கேட்டான் விதுரன். “என் மேலே மட்டும் இருந்தா நான்… நானும் ரசிப்பேன்”-னு கோபமா கேட்கவும், “அப்படி எத்தனை பேர் கூட நான் சரசமாடி பார்த்தே நீ?”-னு பொறுமை போய் உச்சஸ்தாயியிலே கேட்டான். 

“பார்த்தேன்.. என் கண்ணால.. மனசு நொறுங்க பார்த்தேன்.. இயலாமையிலே இதை மட்டும் தான் பண்ண முடிஞ்சுது”-னு அவ கை முட்டிக்கு மேலே நகத்துலே கீறின காயத்தை காமிச்சா. இப்போ வெறும் தழும்பு தான் இருந்துச்சு. ஆனா நாலு விரல் நகம் கீறின அடையாளம் மதுரியா கண்ணுலே இருந்து பெரிய நீர் மணி உருண்டது. படக்-னு கதவை திறந்து காரை விட்டு வெளியே போய் நின்னா. விதுரனுக்கு அவன் மேலேயே கோபம். கொஞ்சம் அமைதிப் படுத்திக்கிட்டு, ஒரு தண்ணி பாட்டில் எடுத்து அவ கிட்ட நீட்டினான். அவளும் குடிச்சு சமநிலைக்கு வரவும், “போலாம் மது, லேட் ஆகுது”-னு சொல்லி கூட்டிட்டு போனான். வர்ற வேண்டிய இடம் வரவும் இறங்கின மதுரியா அங்கே பார்த்த காட்சியிலே ஆணி அடிச்ச மாதிரி நின்னுட்டா.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top