அத்தியாயம் -33

விதுரன் அன்னிக்கு ராத்திரி படுக்கவும் இல்லை. தூங்கவும் இல்லை. அந்த இருக்கையில சாய்ஞ்சு கண்ணை மூடி உட்கார்ந்துட்டான். உலகமே சூனியமாயிருந்துச்சு அவனுக்கு. “இவளும் விரும்பறா-னு நினைச்சு தானே கல்யாணம் வரைக்கும் போனப்போ சந்தோஷமா சரி-னு சொன்னேன். ஆனா ஆயுள் தண்டனை-னு சொல்ற பொண்ணை வாழ்கை முழுக்க கூட வைச்சுக்கிறது எவ்வளோ பெரிய தப்பு. அதுக்கு-னு பிரியவும் முடியாது. இவ இல்லேன்னா எனக்கென்ன இருக்கு? கடவுளே..”-னு மண்டையை பிடிச்சுக்கிட்டான். காலையிலே ஆறு மணிக்கெல்லாம் ரெடியாகி ஆபிசுக்கு போயிட்டான் விதுரன். அதுக்கப்புறம் ஆறரை போல கிளம்பினா மதுரியா. “ரியாம்மா, இன்னிக்கு விடிஞ்சதும் ஆபீஸ் போயிட்டான்… ஏதாவது இம்பார்டண்ட் வர்க்கா?”னு கேட்டார் வேதமூர்த்தி. “தெரியாது மூர்த்திப்பா. நானும் ‘வேதம் டிசைன்’ போய் ரொம்ப நாளாச்சு… கேட்டுக்கறதும் இல்லை”-னு விட்டேத்தியா சொல்லவும் சங்கரியும் நீலவேணியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டாங்க. “சரி ரியாம்மா. உனக்கும் நேரமாகுது பார். நீ கிளம்பு”-னு நீலவேணி அவளை அனுப்பினாங்க.

“என்ன ரிஷிப்பா? ஏதோ பிரச்சினையா அவங்களுக்குள்ளே?”-னு கேட்டாங்க சங்கரி. “ஏதோ பிரச்சினை நிச்சயமா இருக்கு.. புருஷனும் பொண்டாட்டியும் ஒட்டாம சுத்துதுங்களே… ஏதோ சரியில்லை”-னு சொன்னாங்க நீலவேணி. “இருக்கலாம்மா… ரியாவோட படிப்பு முடியறவரை… கொஞ்சம் அப்படி இப்படி இல்லாம இருக்கணும்-னு நினைக்கறாங்களோ என்னவோ?”-னு சொன்னார் வேதமூர்த்தி. “அதுக்குன்னா கூட எதுக்கு இப்படி கீரியும் பாம்புமாவா இருக்கணும்?”னு நீலவேணி கேட்கவும், “அம்மா, பாருங்க! இந்தக் காலத்து பிள்ளைங்க. இதுலே எல்லாம் தலையிட முடியாது. விவரம் புரிஞ்சவங்க. அதனால தானே சரி பண்ணிப்பாங்க. நீங்க உங்க வேலையை பாருங்க. சங்கரி உன்னையும் சேர்த்துத் தான். ரியாவை துருவற வேலை வேண்டாம். விதுரனை துருவற தைரியம் உங்களுக்கு இல்லேன்னு எனக்கு தெரியும்”-னு எந்திரிச்சு போயிட்டார். மாமியாரும் மருமகளும் ஒரு பெருமூச்சு விட்டு வேலையை பார்க்க போயிட்டாங்க.

விதுரனுக்கு வேலையே ஓடலே… சுத்தி சுத்தி மதுரியாவும், அவளோட பேச்சும் தான் நினைப்பு வந்துச்சு. சொல்றதுக்கும் ஆள் இல்லாம பைத்தியம் பிடிக்காத குறைதான். ஒரு நிலையிலே பொறுக்க முடியாம ப்ரதீப்புக்கு போன் பண்ணி, “முக்கியமான லைஃப் டெசிஷன் பத்தி பேசணும். உடனே ஈசிஆர் கபாப் கார்னர் வா”-னு சொல்லவும். “ரியா பத்தினதா?”-னு கேட்டான் ப்ரதீப். “ஆமா… வா… தொண தொண-னு கேட்காதே. எல்லாம் நேர்லே சொல்றேன்…வா”-னு சள்-னு விழுந்து முடிச்சான். ப்ரதீப்புக்கு ஒண்ணும் புரியலே. ஏதோ பெரிய பிரச்சனை-னு யோசிச்சு பரத்தை கூப்பிட்டு அவனையும் வரச் சொன்னான். மூணு பேரும் மீட் பண்ணாங்க. பரத் கையிலே ஒரு பைக் கொண்டுப் போனான். “என்னப்பா? ரெண்டாவது நாளே பிரச்சினை வரும்-னு நினைச்சேன். பத்து நாள் சமாளிச்சிருக்கியே? அடி அவ்வளோ பலமா இல்லையோ?”-னு நமுட்டு சிரிப்பு சிரிச்சான் பரத்.

“ஏது.. அப்போ நீங்க எதிர்பார்த்தீங்களாண்ணா?”-னு அதிர்ந்தான் விதுரன். “அண்ணாவா?”-னு அதிர்றது இப்போ பரத் முறை. “ஆமா… மனசுலே அப்படித்தான் நினைச்சிருக்கேன்… வாயைத் திறந்து கூப்பிட ஈகோ விட்டதில்லே”-னு அசுவாரசியமா சொன்னான் விதுரன். “அப்போ.. இப்போ மட்டும் எப்படி?”-னு கிண்டலா கேட்டான் ப்ரதீப். “எல்லா ஈகோ, ஹெட்வெயிட், திமிர், தெனாவெட்டு எல்லாத்தையும் அடிச்சு உடைச்சுட்டாளே என் தர்மபத்தினி… அப்புறம் என்ன பந்தா வேண்டி கிடக்கு”-னு கடுப்பா சொல்லி ரெண்டு கையையும் தூக்கி நெத்தியை அழுத்திக் கிட்டான். “என்னாச்சு விதுரன்? ஏன் இவ்வளோ எரிச்சல்?”-னு ப்ரதீப் விதுரனோட தோள்லே கையை வைக்கவும், “இன்னும் என்னடா ஆகணும்? அவளுக்கு என்னை பிடிக்கலையாம். காதலே இல்லையாம்… கல்யாணமே வேண்டாமாம் இப்போ நடந்தது ஆயுள் தண்டனையாம்.. சொல்றா… கத்தறா… அழறா… முக்கியமா என்னை கொஞ்சம் கூட நம்ப மாட்டேங்கறா”-னு புலம்பவும் தான் ‘டா’ சொன்னது நினைப்பு வந்துச்சு. “சாரி ப்ரதீப்.. ஒரு ஃப்ரெண்ட் மாதிரி நினைச்சு அப்படிப் பேசிட்டேன்”-ன்னு வருத்தமா சொன்னான் விதுரன்.

“விதுரன்.. ப்ளீஸ்.. என் சிஸ்டர் ஹஸ்பெண்ட் எனக்கு நல்ல ஃப்ரெண்ட் தான். ஸோ… ஐ டோண்ட் மைண்ட்… நானும் ஒருமையிலேயே பேசறேன்… ஓகே… சொல்லு என்ன நடந்துச்சு?”-னு கேட்டான். “நானும் எதிர்பார்த்தேன் விதுரன். அவளுக்கு எல்லார் மேலேயும் கோபம்”-னு பரத் சொல்லவும், “அதெல்லாம் ஒண்ணும் இல்லேண்ணா… வீட்டுலே எல்லார் கூடவும் நல்லாத்தான் பேசறா”-னு நொடிச்சுக்கிட்டான் விதுரன். “சிரிப்பு வருது… ஆனா சிரிச்சா உனக்கு கோபம் வரும்”-னு சொல்லி சிரிச்சான் ப்ரதீப். ஒரு ஆள் கிடைக்கவும் எல்லாத்தையும் படபடன்னு சொல்லிட்டான் விதுரன். 

“அவ மறைக்கிறா விதுரன்.. உங்களை ரொம்ப லவ் பண்றா”-னு பரத் சொல்லவும், “அதெல்லாம் அப்போ. இப்போ எதுவுமே இல்லை… நானே அழிச்சுட்டேன்”-னு சொன்னான் விதுரன். “இல்லை விதுரன்… இதைப் பார்.. நான் இதெல்லாம் உனக்கு பாடம் படிப்பிக்கணும்-னு எடுத்து வைச்சது. ஆனா நீயே எனக்கு சகலையா வருவே-னு நினைக்கலே… இதெல்லாம் பார்த்ததுக்கு அப்புறம் தான் ரியாவால உன்னை மறக்கவே முடியாது-னு புரிஞ்சுக்கிட்டோம்.. அதனாலேயே உங்க பேர்லே எனக்கு ரொம்ப கோபம். ரியா உங்க மேலே இருந்த அன்பை வெளியிலே சொல்லலே… கல்யாணத்துக்கு அப்புறம் சொல்லி, இதெல்லாம் குடுத்து ஆச்சர்யப்படுத்தணும்-னு நினைச்சா… ஆனா அவ கண்ணு மறைக்கவே இல்லை விதுரன். அதை ஒரு ஆணா நீங்க எப்படி பார்க்க தவறினீங்க-னு எனக்கு கோபம், வருத்தம், ஆதங்கம் எல்லாம். அதனால தான் வேணும்-னு சீண்டினேன்… தவிக்கவிட்டேன். ஆனா எல்லாம் போய், ரியா உங்களால மட்டும் தான் நல்லா இருக்க முடியும்-னு நம்ப ஆரம்பிச்சேன், அவளுக்கு நல்ல வரன் பார்க்கணும், ப்ரதீப் தான் சரியான ஆளு-னு நீங்க சொன்னப்போ உங்க மாற்றத்தை உணர்ந்தேன். சாரி, விதுரன்”னு எல்லாம் சொல்லி அந்த ப்ளேக் பேக்கை விதுரன் கிட்டக் குடுத்தான் பரத்.

பேக்கை திறந்தவன் திகைச்சு போனான். அவனோட படம் ரெண்டு கேன்வாஸ்லே. ‘தி மேன் ஐ அட்மயர்’, ‘தி ஸ்மைல் ஐ லாஸ்ட் மை செல்ஃப்’-னு பார்த்து விழி விரிச்சான். அவ்வளோ தத் ரூபமா இருந்துச்சு. “இதெல்லாம் நாங்க மீட் பண்ணப்போ போட்டிருந்த டிரெஸ்.. போட்டோ கூட இல்லாம எப்படி இப்படி தத்ரூபமா வரைஞ்சா?”-னு சிலிர்த்துப் போனான் விதுரன். மூணாவது படம் மதுரியா மண்டியிட்டு கீழே உட்கார்ந்து நிக்கற விதுரன் கையிலே முத்தமிடறது போல இருந்துச்சு. “அது என்ன.. டி யாமோ-னு எழுதி இருக்கு? அப்படீன்னா?”-னு கேட்டான் ப்ரதீப். “அவர் தான் கண்டுபிடிக்கணும்… அவருக்குத் தான் ஹோம் வர்க்”-னு பரத் சிரிச்சான். ஆனா விதுரன் கண்ணுலே இருந்து தண்ணி வழிஞ்சுது. “இந்த அன்புக்கு நான் தகுதியானவன் தானா?”-னு கேட்டான் விதுரன். “விதுரன்… ப்ளீஸ்… இப்போப் புரிஞ்சுக்கிட்டதே நல்ல தொடக்கம் தானே? கடைசி கிஃப்டையும் பாருங்க”-னு சொன்னான் பரத். அழகான டிசைன்லே சில்வர் ப்ரேஸ்லெட் விது/மது-னு டாலர்லே போட்டு இருந்துச்சு. அதை நெஞ்சோடு அணைச்சான். “பொறுமையா போகணும் அதே சமயம் கொஞ்சம் அடாவடியும் பண்ணணும். உங்க அன்பு புரியணும்.. அப்போ தான் கோபம் போய் உங்க விளக்கத்தை கேட்பா.. ரொம்ப அன்பு வைச்சிருக்கா. அதான் இவ்வளோ கோபம்”-னு சொன்னான் பரத்.

விதுரன் யோசிக்கவும், “ஆமா விதுரன்.. அவ காலேஜ்லே சேர்ந்ததுலே இருந்து எப்போதும் சோகம் தான்… உன் கிட்ட பேச ஆரம்பிச்ச அப்புறம் தான் கலகலப்பா மாறி இருக்கா. இவ்வளோ ஏன்.. நீ மது-னு கூப்பிடறே-னு வேற யாரையும் கூப்பிட விட மாட்டா. என் ஃப்ரெண்ட் அசோக், அவளோட சீனியர் பையன் தெரியாம கூப்பிட்டான்-னு அவனை அங்கேயே உரிச்சு தொங்கவிட்டுட்டா”-னு ப்ரதீப் சொல்லவும் தன்னை மீறி ஸ்மைல் வந்துச்சு விதுரனுக்கு. “கவலைப்படாதீங்க… நான் ஹாண்டில் பண்ணிக்கிறேன். நான் அவ அன்பை புரிஞ்சுக் கிட்ட மாதிரி, என் அன்பை புரியவைக்க சீக்கிரமே கடவுள் ஒரு சந்தர்ப்பம் குடுப்பார்… கொஞ்சம் வேலையிருக்கு.. நான் கிளம்பறேன்”-னு எந்திரிச்சான். அவனுக்கு தெரியலே… அந்த சந்தர்ப்பத்தை கடவுள் குடுத்ததுக்காக கடவுளையே நொந்துக்கப் போறான்-னு.

******************************************************************************************

அன்னிக்கு ஆபீசுலே இருந்து பெரிய பெரிய அட்டைப் பெட்டியோட சீக்கிரமே வந்தான் விதுரன். வந்தவன் நேரா மேலே அவன் ரூமுக்கு மதுவை பார்க்க போனான். “ஹாய் மது… ஹவ் வாஸ் யுவர் டே?”-னு சாதாரணமா கேட்டவனை ‘என்ன?’-னு பார்த்தா மதுரியா. “என்னடா? பதிலே காணோம்?”-னு சட்டையை கழட்டிக் கிட்டே கேட்கவும், “என்ன பண்றீங்க?”-னு அதிர்ந்தா. “டிரெஸ் மாத்தறேன்… குளிக்க போறேன்.. என்ன?”-னு திரும்பக் கேட்டான். “ஓ காட்..”னு திரும்பிக்கிட்டா.. நமுட்டு சிரிப்போட பக்கத்துலே வந்தவன், “லுக் மது… உன் காதலையோ நம்பிக்கையையோ நான் எதிர்பார்க்கலே… அது எப்போ வருதோ வரட்டும்… வரவே இல்லேன்னாலும் ஐ டோண்ட் மைண்ட்… என் அன்பை உனக்கு காட்டறதுக்கு அது எனக்கு தடையில்லே.. உனக்கே பிடிக்கலேன்னாலும் காட்டுவேன். பிகாஸ் ஐ லவ் யூ”-னு அழுத்தமா சொன்னான். “இதை நான் நம்பமாட்டேன்”-னு முடிக்கறதுக்குள்ளே அவ உதட்டுல அவளோட வார்த்தைகளை விட அழுத்தமா முத்தம் பதிச்சான். மதுரியா திகைப்புலே சிலையானா.

அவளை கொஞ்ச நேரத்துலே விடுவிச்சவன், “இனி நம்பலே… நம்ப மாட்டேன்.. அன்பு தேவையில்லை.. ஏத்துக்க மாட்டேன்-னு எனக்கு தெரிஞ்சதையே திரும்ப திரும்ப சொன்னா, இது தான் தண்டனை. எங்கே வைச்சு சொன்னாலும் செய்வேன்.. என்னை சீண்டாம இருந்தா நானும் குட் பாய்… ஓகே… டீல்.. மத்த படி உன் மனசு மாறாம எதுவும் நடக்காது. சாரி மது… என்னை புரிய வைக்க உன்னை கொஞ்சம் ஓபன் மைண்டெடா மாத்த எனக்கு வேறே வழி தெரியலே.. ஏன்னா உனக்கும் லவ் இருக்கு.. ஆனா அடம் பிடிக்கறே”-னு அவ கன்னத்தை தட்டினான். அவன் முத்தமும் பேச்சும் தந்த கோபம், “அப்படீ-னு யார் சொன்னா?”னு சீறினா. “நிறைய ப்ரூஃப் இருக்கு. அதுல ஒண்ணு.. உன்னை மது-னு நான் மட்டும் கூப்பிடறது”-னு சிரிச்சுட்டே குளிக்கப் போனான். 

விதுரன் குளிச்சுட்டு கீழே வந்தப்போ, விவானும் மதுரியாவும் ஒண்ணா உட்கார்ந்து வரைஞ்சுகிட்டு இருந்தாங்க. விதுரன் சோஃபாலே உட்கார்ந்து ஸ்நேக்ஸ் சாப்பிடும் போது தான் கவனிச்சான். விவான் அவளை ‘மது மது’-னு தான் கூப்பிட்டான். “ஏது? மதுவா?”-னு விதுரன் கேட்கவும், “ஆமாபா கல்யாணம் முடிஞ்சதுலே இருந்து அவனும் அப்படித்தான் கூப்பிடறான்… அந்த நண்டு தியாவோட பையனும் அப்படித்தான் கூப்பிடுது. ரியாவும் விடுங்க பாட்டி-னு சொல்லிட்டா”-னு சிரிச்சுட்டே சொன்னாங்க நீலவேணி. மதுரியா அவனை கிண்டலா பார்த்து யாருக்கும் தெரியாம புருவத்தை தூக்கினா. விதுரன் சொக்கித்தான் போனான். நமுட்டு சிரிப்போட, ‘மவளே இப்போ வைக்கிறேன்டீ வேட்டு’-னு கறுவினான். “விடுங்க பாட்டி… எனக்குத் தான் அவ மதுக்குட்டி, கண்ணம்மா தானே? இவனுங்க அப்படி கூப்பிட்டா பரவா இல்லே”-னு விதுரன் சொல்லவும் பே-னு ஆச்சு மதுரியாவோட முகம். அதைப் பார்த்து அவனுக்கு பயங்கர சிரிப்பு.

“ஆமா… இதென்ன விதுரன்? இவ்வளோ பெரிய பார்சல்?”-னு கேட்டா கிருத்திகா. “ம்ம்ம்… எல்லாம் என் காதல் மனைவியோட பரிசுகள்… இன்னிக்குத் தான் ரெடியாச்சு. மேடம் வாங்கிட்டு வரச் சொன்னாங்க. வாங்கிட்டு வந்தேன்”-னு குண்டைத்தூக்கி போடவும் வெடவெடத்து எந்திரிச்சா. “நான்… நானா?”-னு திக்கவும், “ஆமாடீ தங்கம்.. சொன்னா போல வாங்கிட்டு வந்துட்டேன்… பிரிக்க போறேன்”-னு சாப்பிட்ட ப்ளேட்டை எடுத்துக்கிட்டு உள்ளே போனான். “ரொம்ப பெரிய கிஃப்டா இருக்கு. என்ன ரியா அது?”-னு கேட்டா கிருத்திகா. மதுரியாவுக்கு எதுவுமே புரியலே. முதல்லே இது தான்னு ஜ்வெல் பாக்ஸை ஓபன் பண்ணினான். ப்ரேஸ்லெட் பார்க்கவும்… “இது… இது.. உங்க கிட்ட எப்படி? எங்கே?”-னு பதறிப் போனா. “உன் சர்ப்ரைஸ் செம்ம கண்ணா.. இட் லுக்ஸ் லவ்லி”-னு சொல்லி எல்லாருக்கும் காட்டினான். சங்கரிக்கும் நீலவேணிக்கும் அவ்வளோ சந்தோஷம். “இந்தா… போட்டு விடு”-னு அவ கையிலேயே குடுத்தான். அவளுக்கும் மறுக்க தோணலே. ஏன்னா அவ்வளோ குழப்பம். இது இப்படி இங்கே… இவன் கிட்டே… இது எப்படி சாத்தியம்-னு அதே யோசனை. “தேங்க்ஸ் மது.. தேங்க் யூ ஸோ மச்”-னு கொஞ்சிக்கிட்டே அவ ரெண்டு கன்னத்தையும் பிடிச்சு அழுத்தமா நெத்தியிலே முத்தம் குடுத்தான். நடு வீட்டுலே செய்யறான்-னு கூட உறைக்கலே அவளுக்கு.

அடுத்து வந்த மூணு பாக்ஸையும் பிரிக்கும் போது, அப்படியே பூமி ரெண்டா பிளந்து தான் புதைஞ்சு போயிடமாட்டோமா-னு நினைச்சா மதுரியா. சந்தேகமில்லாம, அந்த மூணு பாக்ஸ் அவ விதுரனை வரைஞ்ச கேன்வாஸ் தான். அதை அழகா ஃப்ரேம் பண்ணியிருந்தான் விதுரன். மூணுலே ஒண்ணு பெட் ரூம்லே, ரெண்டு ஹால்லே மாட்டறதா முடிவு பண்ணான். ஆளுக்காளு பாராட்டவும் கிண்டல் பண்ணவும் வெட்கத்திலேயும் தர்ம சங்கடத்துலேயும் சிவந்து போனா மதுரியா. “அடேங்கப்பா… செம்ம லவ் போல ரியா? பார்த்து கத்துக்கோங்க ரிஷி”-னு கிருத்திகா கலாட்டா பண்ணவும், “நானில்லேம்மா. நீ தான் புருஷனை எப்படி சர்ப்ரைஸ் பண்ணணும்-னு கத்துக்கணும்.” அப்படீ-னு ரிஷியும் கிண்டல் பண்ணவும் எல்லாரும் சிரிச்சாங்க. மதுரியாவும் கஷ்டப்பட்டுச் சிரிச்சா. பெரியவங்க மனசுலே சந்தேகம் பறந்து போச்சு. ஆனா மதுரியா மனசு முழுவதும் வெறும் குழப்பம். அப்புறம் மேலே ரூமுக்கு போனப்புறம், “எனக்கு ரெண்டு விஷயம் கேட்கணும்… பேசணும்”-னு  மொட்டையா சொல்லவும், விதுரன் கையிலே இருந்த புத்தகத்துலயருந்து நிமிரவே இல்லை. “உங்க கிட்ட தான்… ஹலோ… உங்களைத் தான்”-னு கத்தியும் திரும்பவே இல்லை.

“விதுரன்! உங்களைத் தான்..”-னு சொன்னதும், “யெஸ்… சொல்லுடா”-னு கனிவா கேட்டான். “ரெண்டு விஷயம்… இதெல்லாம் உங்களுக்கு எப்படி கிடைச்சுது? அப்புறம் அந்த… ரெண்டு டிராயிங்கும் ஹால்லே மாட்டக்கூடாது”-னு சொன்னா மதுரியா. “ம்ம்ம்… இது ரெண்டுக்கும் பதில் வேணும்னா எனக்கும் ரெண்டு கண்டிஷன்ஸ் இருக்கு. செஞ்சு காமிச்சா பதில் சொல்றேன். ஒண்ணு என் அன்பை ஏத்துக்கணும்.. ரெண்டு என் கிட்ட முன்னே மாதிரி ஃப்ரெண்ட்லியா பேசிப் பழகி ஆபீசுக்கு வரணும்”-னு சொல்லவும், “இதெல்லாம் ஃபோர்ஸ் பண்ணி வரவைக்க முடியாது”-னு சொல்லி முகத்தை திருப்பினா. “அப்போ நானும் சொல்லமாட்டேன்.. போடீ”-ன்னு சொல்லிட்டு திரும்பவும் புத்தகத்தை எடுக்கவும், “விது… ப்ளீஸ்.. எனக்கு டிரெயினிங் பிஸியா போகுது. நான் எப்படி வர முடியும்?”-னு கேட்டா மதுரியா. “இவ்வளோ நாள் எப்படி வந்தியோ அப்படித் தான்”-னு சொன்னான் விதுரன். அந்த மண்டை உடையற குழப்பம் தாங்க முடியலே. “சரி.. சரி… முயற்சி பண்றேன். ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட். நானும் மனுஷி தான். எனக்கும் எமோஷன்ஸ் ஃபீலிங்ஸ் இருக்கு”-னு அழுத்தமா சொன்னா.

ஒரு பெருமூச்சு விட்டு, “தேங்க்ஸ்… முதல்ல நடக்கட்டும்… இப்போதைக்கு இறங்கி வந்ததுக்காக ஒரே ஒரு பதில் தான். இன்னொரு பதில் அப்புறம் தான்… சரியா… குட் நைட் கண்ணம்மா”னு புத்தகத்தை மூடிவைச்சுட்டு படுத்துட்டான். மதுரியாவும் அவனை திட்டிட்டுப் போய் படுத்தா. ஆனா மண்டையில ஒரு மூலையில ‘பொன்னம்மா தூக்கி போட்டது இவனுக்கு எப்படி கிடைச்சுது?’ன்னு ஓடிட்டே இருந்துச்சு.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top