அத்தியாயம் -8

அடுத்த நாள் நிறைய மன மாற்றங்களோட விடிஞ்சுது. எட்டு மணி போல மதுரியா இறங்கி டிபன் சாப்பிட வந்தா. எல்லாருமே இருந்தாங்க. “என்ன ரியா? இன்னும் குளிக்கலியா? பரத் இன்னிக்கு உனக்கு க்ளாஸ் இருக்கு-னு சொன்னாரே?”-னு கேட்டாங்க சுபத்ரா. “இன்னிக்கா பரத்தப்பா?”-னு கேட்டா. “க்ளாஸ் நாளையிலே இருந்து தான் ரியா. ஆனா இன்னிக்கு 11 மணிக்கு போயி என்ரோல்மெண்ட் ப்ராசஸ் முடிச்சுட்டு வந்துடு… அப்படியே நீயே டைமிங்கும் பேசிக்கோ”-னு சொன்னான் பரத். “பரத்தப்பா, நான் ஸ்கூல் பொண்ணு இல்லே”-னு சிரிச்சா மதுரியா. “அவனுக்கு நிகேஷ் வந்தப்புறம் கூட நீதான் கடைக்குட்டி”-னு சிரிச்சார் நித்தியானந்தம். “ரியா, அப்பா உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும். கேட்கலாமா?”-னு பேசினார் நித்தியவாசன். “உங்களுக்கு எல்லாம் என்ன ஆச்சு? என்னை கண்ணாடிப் பாத்திரம் போல கையாளாதீங்க. அப்புறம் இன்னும் சுருண்டு போயிடுவேன். எப்பவும் போல இருங்க… ப்ளீஸ்”னு அழுத்தமா சொன்னா.

அதை உள்வாங்கிட்டு, “ரியா, நிகேஷுக்கு ஃபர்ஸ்ட் பர்த்டே வருது… அதை நாங்க வீட்டு மட்டுக்கு பண்ணலாம்-னு நினைச்சிருக்கோம். நீ என்ன நினைக்கிறே?”-னு கேட்டார் நித்தியவாசன். “நான் நினைக்க என்னப்பா இருக்கு? எப்போவும் இந்த மாதிரி முடிவுகளெல்லாம் நீங்க, தாத்தா, பாட்டி, அம்மா தானே எடுப்பீங்க?புதுசா கேட்கறீங்க?”-னு இட்லியை சாப்பிட்டுக்கிட்டே கேட்டா. “அதில்லேடா… பரத்-ஆனந்தியா கிட்டேயும் பேசினோம்… சிம்பிளா பண்ணலாம்-னு பரத் சொன்னான்”-னு நித்தியானந்தம் சொன்னார். கற்பகவல்லி சாப்பிட முடியாம தடுமாறுவதையோ நெஞ்சை நீவி கஷ்டப்படறதையோ யாருமே கவனிக்கலே. வீட்டுக் கடைக்குட்டி கல்யாணம் நின்னது, அவ அதனாலேயே வீட்டை விட்டுப் போறதுன்னு முடிவு பண்ணது, சின்ன பொண்ணு மனசுலே ஆசையை வளர்த்து அதைக் கிள்ளி எறிஞ்சுது எல்லாம் சேர்ந்து அவங்களை கொஞ்சம் ஆட்டித்தான் பார்த்தது. அதுலேயும் பேத்தி தான் இனிமே தனியாத்தான் இருக்கப் போறேன்னு சொன்னது ரொம்பவே பாதிச்சுது. மனசை திடமா வைச்சாலும் உடம்பு அவங்களுக்கே தெரியாம பாதிச்சுது. இது தெரியாம மத்தவங்களும் பேசிக்கிட்டே இருந்தாங்க.

“எதுக்கு சிம்பிளா… நம்ம நிக்குக்குட்டியோட ஃபர்ஸ்ட் பர்த்டே… செம்ம கிராண்டா பண்ணலாமே”-னு கேட்டா மதுரியா. சுபத்ராவுக்கு ரொம்ப சந்தோஷம். “நான் தான் சொன்னேன்லே… என் ரியாவை எனக்குத் தெரியும்”-னு சொன்னாங்க. மதுரியாவுக்கு குழப்பம் ஆரம்பிச்சுது. “எனக்கு புரியலே”-னு சொன்னா. “ரியா, நிகேஷ் பிறந்த நாள் பெரிசா பண்ணா வேதமூர்த்தி குடும்பத்தையும் கூப்பிடணும்-லே அதான் பரத் யோசிக்கிறான்”-னு சொன்னார் நித்தியானந்தம். “ஓ… சாரி தாத்தா… நான் இந்த ஏங்கிள்லே யோசிக்கலே. ஆனா, நம்ம குடும்ப நட்பு நல்லா தெரியும். அப்படி இருக்கும் போது சிம்பிளா பண்ணாலும் கூப்பிடாம விடுவோமா? என் பிரச்சினைக்கும் என் அதிர்ஷ்டத்துக்கும் நிக்கு என்ன தாத்தா பண்ணுவான்?”-னு பதில் சொன்னா மதுரியா. “ரியா, ப்ளீஸ் புரிஞ்சுக்கோ… நீ ஃபங்க்‌ஷன்லே அவங்க எல்லாரையும் பார்க்கணும். பேசணும். உன்னால முடியுமா?”-னு கேட்டான் பரத்.  “அதுக்கு நிக்கு பர்த்டேல கை வைப்பீங்களா?”-னு கேட்டா மதுரியா. “கோபப்படாதே ரியா… கொஞ்சம் புரிஞ்சுக்கோ”-னு சொன்னா ஆனந்தியா. “என்னத்தக்கா நான் புரிஞ்சுக்கறது? என் சுயநலத்துக்காக நிகேஷோட பர்த்டேவை குறைப்பீங்க. நான் சும்மா இருக்கணும். அப்படித்தானே?”-னு கோபப்பட்டா. “ஏன்னா எங்களுக்கு நிக்குவும் நீயும் ஒண்ணுதான்”-னு பளிச்-னு சொன்னான் பரத். அதைக் கேட்டு நாலு பெரியவங்களும் ஸ்மைல் பண்ணாங்க.

“ஓஹோ… எனக்கு தெரியாத புது விஷயம் பாருங்க! என்ன பரத்தப்பா? செண்டிமெண்ட் வடையா? ஆனா பருப்பு வேகலே”-னு வெடுக்-னு பேசினா மதுரியா. “இதுதானே எங்க ஒரிஜினல் மதுரியா… இவ்வளோ நாள் இருந்த அழு மூஞ்சி வேற யாரோ”-ன்னு பரத் சொன்னதும் எல்லாரும் சிரிச்சுட்டாங்க. “என்ன? நான் லூசு மாதிரி இருக்கேனா?”-னு சண்டைக்குப் போனா மதுரியா. “இல்லே ரியாம்மா… சந்தோஷம். இந்த ரியாவைத் தான் ஒரு வாரமா தேடறோம்”-னு சொன்னார் நித்தியவாசன். “ஆமா இந்த ரியாவை விதுரன் திருடிட்டு போயிடுவானோ-னு பயம்.. அதோட… வேண்டாம் ரியா.. ஆறிட்டு வர்ற புண்ணை கிளர்றது முட்டாள்தனம். ப்ளீஸ்”-னு சொன்னான் பரத். “ஆறிட்டு வர்ற புண்ணா? அது ஆறாத வடு… எனக்கு பெரிய வலியே முடிஞ்சு போச்சு. இனி புதுசா வர்ற என்ன இருக்கு?”-னு விரக்தியா பதில் சொன்னா மதுரியா. பரத் பேச ஆரம்பிக்கறதுக்குள்ளே கற்பகவல்லி கையிலே இருந்து காபி டம்ளர் டேபிள்லே விழுந்து நங்கு-னு சத்தம் எல்லாரையும் திரும்பி பார்க்க வைச்சுது. எல்லாரும் திகைச்சு போனாங்க.

கற்பகவல்லி காபி டம்ளரை கையிலே எடுக்கவும் தலை ‘கிர்ர்’-னு வந்துச்சு. உடம்பு பூரா வியர்த்து ஊத்த ஆரம்பிச்சுது. க்ஷண நேரத்துலே முதல்லே டாக்டரா சுதாரிச்சவ மதுரியா தான். “பாட்டி, என்னாச்சு?”-னு வேகமா கையை கழுவிட்டு அவங்க கிட்ட ஓடினா. மத்தவங்க எல்லாம் பதறி கற்பகவல்லிகிட்ட வந்தாங்க. கையை மெல்ல கழுவி டேபிள் மேலே வைச்சு, சேரை கொஞ்சம் நகர்த்தி அவங்க முகத்தை பார்த்தவ, “அம்மா… ஹால்லே ஏசியை ஆன் பண்ணுங்க. ஃபேனை ஃபுல்லா வைங்க. அக்கா! ரூம்லே இருந்து என் பையை கொண்டு வா. பரத்தப்பா… பாட்டியை மெல்ல தூக்கி ஹால்லே சோஃபாலே படுக்க வைங்க”-னு எல்லாருக்கும் ஆர்டர் பண்ணா மதுரியா. அவ சொன்னதும் ஹெல்புக்கு வந்த நித்தியவாசனை விலக்கிட்டு பாட்டியை ஒரே ஆளா அலாக்காத் தூக்கி ஹால் சோஃபாலே படுக்க விட்டான் பரத். அதுக்குள்ளே சுபத்ராவும் சாய்வா படுக்க குஷனை வைச்சாங்க. “வல்லி, என்னம்மா பண்ணுது?”-னு பக்கத்துலே வந்து உட்கார்ந்து தலையை தடவி கேட்டார் நித்தியானந்தம். அதுக்குள்ளே ஒரு ஈர டவல் எடுத்து வந்து முகம் கழுத்து எல்லாம் துடைச்சுவிட்டு, அவளோட டாக்டர் வேலையை செஞ்சா மதுரியா. முகத்துலே ஈரத்துணியோட சிலுசிலுப்பு, கூட ஏசி எல்லாம் சேர்ந்து ஓரளவு தெளிவடைஞ்சாங்க கற்பகவல்லி. “அம்மா… ஒரு லெமன் ஜூஸ் கம்மி சர்க்கரை போட்டு.. பாட்டிக்கு குடுங்க”-னு சொன்னா மதுரியா.

அதை குடிச்சுட்டு ஓரளவுக்கு தெம்பானவங்க கிட்ட, “எவ்வளோ நாளா இப்படி இருக்கு?”-னு கூர்மையாக் கேட்டா மதுரியா. அவங்க தொடங்கறதுக்குள்ளே, “நாலு நாளா குட்டிம்மா. என்ன-னு கேட்டதுக்கு திடுக்-னு எழுந்தா லேசா அப்படி இருக்கு…. மாத்திரை சாப்பிட்டா அப்படி இருக்கு-னு சொன்னா… நானும் லேசா இருக்கு பார்க்கலாம்-னு இருந்தேன்டாம்மா”-னு சொன்னார் நித்தியானந்தம். “ஓஹோ… இப்போ திடுக்-னு எங்கே எழுந்தாங்களாம்?எப்படியெப்படி? பத்து வருஷமா சாப்பிடற சுகர் மாத்திரைனால இப்போ கிர்ர்-னு வருதாம். என்ன பாட்டி இதெல்லாம்?”-னு கோபமாக் கேட்டா மதுரியா. “நல்லா கேளு ரியா. கிழவி சாப்பாடும் கம்மி பண்ணிட்டா. கேட்டா லங்கணம் (விரதம்) இருந்தா எல்லாம் சரியாயிடுமாம்”-னு தாத்தா பேத்திக் கிட்ட பாட்டியை போட்டு குடுத்தார். “ஆமாமாம்… நீங்கள்லாம் பட்டினி இருந்தே உடம்பை சரி பண்ணிக்கிட்டீங்கன்னா நாங்கள்லாம் படிச்சுட்டு வந்து எதுக்கு உட்காரணும்? என்னம்மா இதெல்லாம்? பாட்டி சாப்பிடறாங்களா-னு பார்க்க மாட்டீங்க?”-னு சுபத்ரா மேலே பாய்ஞ்சா மதுரியா. “ரியா, சுபாவை ஏன் திட்டறே? இவளையே கேளு”-னு மருமகளுக்காக பரிஞ்சு வந்தார் நித்தியானந்தம்.

“உண்மையை சொல்லுங்க பாட்டி. எப்போ இருந்து இருக்கு?”-னு கேட்டுட்டே ரைட்டிங் பேட்லே ஏதோ எழுதினா. “அது… குட்டிப் பையன் குப்புற விழுந்தான்லே அன்னிக்குத்தான் முதல்லே… அப்புறம் ரொம்ப நாள் வரலே… அப்புறம் எப்பவாவது வரும்… இப்போ அடிக்கடி வருது”-னு தயங்கிகிட்டே சொன்னாங்க. “ம்மா ஈஷ்வரி!! ஆறு மாசமாவா? என்ன பாட்டி இது?”-னு திகைச்சா மதுரியா. “வெறும் பித்தம் சின்னக்குட்டி. இதுக்கு போய் பெரிசா சொல்ல என்ன இருக்கு?”னு சமாளிச்சாங்க கற்பகவல்லி. “அதை டாக்டர் சொல்லட்டும்… அப்பா! பரணி அங்கிள் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்குங்க… இன்னிக்கே… இப்போவே… தாத்தாவும் அம்மாவும் கூட போகட்டும்… நானும் க்ளாஸ்லே விசாரிச்சுட்டு நேரா அங்கேப் போறேன். நான் அங்கே போனதும் அம்மா நிக்குவை தூக்கிட்டு வீட்டுக்கு வரட்டும். இந்தாங்கப்பா… இந்த பேப்பரை போட்டோ எடுத்து அங்கிளுக்கு வாட்ஸாப் அனுப்பிடுங்க”-னு வேகமா சொன்னா மதுரியா. அவ சொன்ன மாதிரியே பண்ணாலும், “ரியா, அம்மாவுக்கு ஒண்ணும் இல்லையே. ஆறு மாசமா தலையை சுத்துச்சுன்னு இப்போ சொல்றாங்க”-னு கவலையா கேட்டார் நித்தியவாசன். 

மதுரியாவுக்கு ஒரு சந்தேகம் இருந்துச்சு. ஒரு வேளை அப்படி இல்லாமலும் இருக்குமோங்கற நப்பாசையிலே, “ஏன்பா, ஏன் பயம்?”-னு கேட்டா மதுரியா. “இல்லே… ரியா… இந்த வருஷம் தானே ஏஞ்ஜியோ பண்ணோம்… அதான்”-னு அவரும் பயத்தோட கேட்டார். “பயப்பட வேண்டாம்பா… டிஸ்ஸினெஸ் தான்.. அதை வைச்சு ஒண்ணும் சொல்ல முடியாது. பாட்டிக்கு பிரஷரும் ஏறி இறங்குது. ஒரு வேளை பிபீ-னாலன்னா மெடிசின் குடுப்பார்-லே அங்கிள். அதுதான் போகச் சொன்னேன்”-னு சமாளிச்சா மதுரியா. “ஓ… அப்படியா?”னு ஒரு பெரு மூச்சுவிட்டார் நித்தியவாசன். “நீ வெள்ளை பேப்பர்-லே எழுதி குடுக்கவும் என்னவோ ஏதோ-னு பயந்துட்டேன்”-னு சொன்னார். “அது இங்கே பார்த்த வைடல்ஸ்பா… அங்கிளோட ரெஃபரன்ஸுக்கு”-னு சொல்லி அனுப்பினா.

அப்புறம் எல்லாம் விறுவிறு-னு நடந்துச்சு. தாத்தா, பாட்டி, அம்மாவை பரத் கார்லே டாக்டர் கிட்ட அனுப்பினா. நித்தியவாசன் ரெண்டு மகள்களையும் கூட்டிட்டு கிளம்பினார். மதுரியாவை ஆர்ட் க்ளாஸ்-லே விட்டுட்டு, ஆனந்தியாவை கூட்டிட்டு ஆபீஸ் போயிட்டார். ஹாஸ்பிடல்லே டாக்டர்.பரணிதரன் கிட்ட மதுரியா குடுத்த பேப்பரை குடுத்தாங்க சுபத்ரா. பரணிதரன் குடும்ப டாக்டர் மட்டும் இல்லே, குடும்ப நண்பரும், மதுரியாவோட மருத்துவ படிப்புக்கு முழுக்க முழுக்க கைட் பண்றதும் அவர்தான். அந்த பேப்பரை பார்த்துட்டு, கசக்கி போட்டுட்டு, கற்பகவல்லியை செக் பண்ணார். “வல்லிம்மா, கொஞ்சம் டெஸ்ட் எல்லாம் எடுக்கணும், நர்ஸ் கூட போங்க. அங்கிள்! நீங்க ரொம்ப சிரமப்பட வேண்டாம். வெயிட்டிங் ஏரியாவுலே இருங்க. வல்லிம்மா டெஸ்ட் முடிஞ்சு வருவாங்க. சுபாம்மா… ரியாகிட்டே குட் ஜாப்-னு சொன்னேன்-னு சொல்லுங்க”-னு அனுப்பி வைச்சார். ஏறக்குறைய ரெண்டு மணிநேரம் ஆச்சு கற்பகவல்லிக்கு டெஸ்ட் எல்லாம் முடியறதுக்கு. மதுரியாவாலேயும் சொன்னாப் போல வர முடியலே – அன்னிக்கே ஃபர்ஸ்ட் க்ளாஸ். டெஸ்ட் முடிஞ்சு மூணு பேரும் டாக்டர் பரணி ரூமுக்கு போனாங்க.

“பரணி, வல்லிக்கு என்னாச்சுப்பா? இவ்வளோ சோர்ந்து போய் அவளை நான் பார்த்ததில்லே”-னு பதறிப் போனார் நித்தியானந்தம். “பதறாதீங்க சார். வல்லிம்மாவுக்கு பயப்படற மாதிரி ஒண்ணும் இல்லே. சில ரிப்போர்ட் இன்னும் வரணும்”-னு சொல்லும் போதே, கதவை தட்டிட்டு உள்ளே வந்தா மதுரியா. “பாட்டி, எப்படி இருக்கீங்க?”-னு பாட்டிகிட்ட கேட்டுட்டே வந்தா. நிறைய டெஸ்ட் பண்ண அசதியிலே இருந்தாங்க கற்பகவல்லி. “சார், நீங்க வல்லிம்மாவை கூட்டிட்டு கிளம்புங்க. டெஸ்ட் எல்லாம் முடிஞ்சுது. ப்ளட் டெஸ்ட் ரிசல்ட் மட்டும் வரணும். ரியாகிட்ட டிஸ்கஸ் பண்ணி மருந்து குடுத்து அனுப்பறேன்”-னு சொல்லி அனுப்பினார் பரணி. ஒரு மணி நேரம் வெயிட் பண்ண அப்புறம் டாக்டர் பரணி உள்ளே கூப்பிட்டார். ஒருவித டென்ஷன்லே தான் உள்ளே போனா மதுரியா. “அங்கிள்… பாட்டிக்கு என்ன?”ன்னு கேட்டா. “ம்ம்ம்… உன் கெஸ் கரெக்ட்… அன்ஃபார்ச்சுனேட்லி உன் ஃபர்ஸ்ட் டயக்னாசிஸ் கரெக்ட்”-னு ரிப்போர்ட்டை அவ பக்கத்திலே நகர்த்தினார். “அப்போ… பாட்டிக்கு அதானா?”-னு ரிப்போர்ட்டை பிரிச்சவ கண்ணுலே பொல பொலனு தண்ணி வந்துச்சு.

“ரியா… கண்ட் ரோல் யுவர்செல்ஃப். இதை வீட்டுலே சொல்லி, நாளைக்கே டாக்டர்.ஆகாஷ், கார்டியாலஜிஸ்ட் கிட்ட கூட்டிட்டு வரணும்… எல்லா சந்தர்ப்பங்களையும் அலசி ஆராயணும். இப்படி மனசு விட்டா என்ன பண்றது டாக்டர்.மதுரியா? இப்போதைக்கு சிம்ப்டம்ஸை குறைக்க மருந்துக் குடுத்திருக்கேன்… ஆனா நாளைக்கே டாக்டர்.ஆகாஷ் பார்த்து டிரீட்மெண்டை உடனே ஸ்டார்ட் பண்ணணும். கஷ்டப்பட்டு நாளைக்கே அவர் கிட்ட பதினொரு மணிக்கு அப்பாயிண்ட்மெண்டும் வாங்கிட்டேன்”-னு பரணிதரனும் சொல்லவும், தன் பொறுப்பு உணர்ந்து நிமிர்ந்தா மதுரியா. “நான் மேனேஜ் பண்ணிக்கறேன் அங்கிள்… நாளைக்கே அவர்கிட்ட கூட்டிட்டு வர வேண்டியது என் பொறுப்பு”-னு தைரியமா சொல்லிட்டு கிளம்பினா. ஆனா மனசு தன்னோட பாட்டிக்கா இப்படி-னு நிலையை தாண்டி வர கஷ்டப்பட்டது. மனசு கஷ்டத்துலே, கை தானா விதுரனுக்கு டயல் பண்ணிச்சு. அவன் அந்த பக்கத்துலே “ஹாய் மது… ஹவ் ஆர் யூ?”-னு ஸ்டைலா கேட்க, அந்த கணம் தான் பண்ண முட்டாள் தனத்தை உணர்ந்தா.

‘சே’-னு மனசுலே நினைச்சு உடனே சுதாரிச்சவ, “சாரி விதுரன்… உங்களுக்கு கால் பண்ண நினைக்கலே. தப்பா கூப்பிட்டேன்”-னு சொல்லி வைச்சா. அவ குரலும், வரவழைக்கப்பட்ட அலட்சியத்துலே உண்மையிலேயே ராங் கால் மாதிரி தெரிஞ்சுது. விதுரனோட முகம் சின்னதாப் போச்சு. விதுரனும் மதுரியாவும் கடந்த ஒரு வருஷத்துலே நல்ல நண்பர்களா இருந்தாங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் எல்லாம் ஷேர் பண்ணிக்கிட்டாங்க… சப்போர்ட் பண்ணிக்கிட்டாங்க. அவங்க பிரச்சினையே விதுரனுக்கு இது நட்புலே இருந்து அடுத்த கட்டத்துக்கு போகணும்-னு, அதே மாதிரி, தான் காலால சொல்ற வேலையை மதுரியா தலையால செய்யணும்கிற நினைப்பும் தான். இன்னிக்கு சாய ஒரு தோள் தேவைப்பட்டப் போது தன்னையும் அறியாம அவனுக்கு போன் பண்ணா. ஆனா அது அதை விட வலிச்சுது. “ஈஸ்வரி… இன்னும் என்னென்ன சோதனையை எனக்கு வைச்சிருக்கே? போயும் போயும் அவனை கூப்பிட வைச்சுட்டியே?”-னு மனசுலே புலம்பிக்கிட்டே ஹாஸ்பிடல்லே இருந்து கிளம்பினா.

இவ நிலைமை இப்படின்னா, தானா பிரிஞ்சா கூட பிரிவுக்கு அப்புறம் அப்படியொண்ணும் சந்தோஷத்துலே துள்ளி குதிச்சுட்டு இருந்துடலே விதுரனும். முதல்லே சுவாதி கூட ஜாலியா போன லைஃப் கொஞ்ச நாள்லேயே போர் அடிக்க ஆரம்பிச்சுது. முதல்லே க்யூட்டா இருந்த சுவாதி இப்போ தலையாட்டி பொம்மையா தெரிஞ்சா. அதனாலேயே நட்பைத் தாண்டிப் போறதைப் பத்தி கொஞ்சம் நிதானிக்கவும் செஞ்சான். மதுரியா தப்பா கால் பண்ண அன்னிக்கு ஆபீஸ்லே “யாரு பேபி போன்?”-னு கேட்டா சுவாதி. அவளை ஒரு பார்வை பார்த்து, திரும்ப லேப்டாப்பை பார்த்தான். “பேபி, கிளம்புங்க… இன்னிக்கு எங்கேயாவது வெளியே போகலாம்”-னு அவன் தோள்லே தொங்கினா. “சுவாத்தீ… இது ஆபீஸ்… பிஹேவ் யுவர்செல்ஃப்”-னு சீறினான். அப்புறம், “அந்த பெரிய ப்ராஜெக்ட் இந்வைட்-ஐ பார்த்தியா. என்ன புரிஞ்சுக் கிட்டே?”-னு கேட்டான் விதுரன். “என்ன பேபி, விளையாடறீங்க? அதை பார்த்தா எனக்கு ஒண்ணுமே புரியலே… அதனால அதை அப்படியே வைச்சுட்டேன்”-னு ஏதோ ஹாஸ்யம் மாதிரி சிரிச்சுட்டே சொன்னா.

விதுரனோட ஈகோ ஒத்துக்கலேன்னாலும் மதுரியாவோட புத்திசாலித்தனம், இந்த கன்ஸ்டிரக்‌ஷன் ஃபீல்ட்லே அவளோட அறிவு, எல்லாத்துக்கும் மேலே தேவைப்படும் போது அவனுக்கு அவ குடுத்த சப்போர்ட் இதெல்லாம் தன்னைப் போல நினைப்புக்கு வந்துச்சு. முதல் தடவையா சுவாதி சரியான சாய்ஸ் இல்லையோ-னு யோசிக்க ஆரம்பிச்சான். “விதூ..”-னு தயக்கமா கூப்பிட்டா சுவாதி. “விதுரன்-னு கூப்பிடு”னு அழுத்தமா சொன்னான். “ஏன் உங்க மது மட்டும் தான் அப்படி கூப்பிடணுமா?”-னு கேட்க வந்ததை முழுங்கினா சுவாதி. ஒரு வேளை விதுரன் ஆமா அப்படித் தான்-னு சொல்லிட்டா கஷ்டமே-னு யோசிச்சா. விதுரனும் ஒரு மாதிரி வீம்பு புடிச்சவன் தான். அதோட அந்த மது அவன் மனசை விட்டு இன்னும் முழுசா போகலேயே… அவ போன் பண்ணாலோ… பார்த்தாலோ நம்மளை தீயா காயறானே. மனசுலே இன்னும் தாக்கம் இருக்கப் போய் தானே இப்படி. அதோட அவ இவ்வளோ அழகாவா இருந்து தொலைக்கணும்-னு யோசிச்சுக் கிட்டு இருந்தா சுவாதி.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top