ராவணா 36

ராவணனின் காரை பார்த்ததும் வாயில் காவலன் அவனுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு கதவை திறக்க,

ராவணனின் கார் உள்ளே நுழைந்தது.

வேலாயுதத்தின் குடும்பமும் ராவணனின் சகாக்களும் அங்கே இருந்தனர்.

ராவணனும் அஜூதியாவும் உள்ளே நுழைந்ததும், ராவணனை அணைத்து விடுவித்த வேலாயுதம்,

“வாடா ராவணா… வா மா அஜூதியா” அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.

அங்கே ஏற்கனவே விருந்துக்கான ஏற்பாடுகள் அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருக்க, பொதுவான நலன் விசாரிப்புக்கு பிறகு  குளிர்பானங்கள் பரிமாறப்பட்டன.

வரும் வழியில் இளநீர் அருந்திவிட்டு வந்ததால் அஜூதியாவோ தயக்கத்துடன்,

“இவ்வளவு வேண்டாம் மா இப்போ பசிக்கல கொஞ்சம் போதும்” என்றாள்.

“என்ன இதுக்கே இப்படி சொல்ற முதல் தடவை வந்திருக்க, நல்லா சாப்பிடுமா” என்றார் மீனாட்சி.

அவளோ பாதி குடித்து விட்டு மீதியை வயிற்றுக்குள் தள்ள முடியாது தயக்கத்துடனே அமர்ந்திருக்க அதைப் பார்த்த ராவணனோ,

“போதும்ன்னா வச்சிடு தியா” என்க, 

அஜூதியாவோ, “வேஸ்ட் பண்ண மனசில்லை” என்றாள் புன்னகையோடு.

அவள் சொன்னதை கேட்டு ஒரு கணம் அவளைப் பார்த்த ராவணன், 

“குடு” என்றபடி கிளாசை அவள் கையில் இருந்து வாங்கி தான் குடிக்க போக,

“அச்சோ வேண்டாம் நான் வாய் வச்சி வேற குடிச்சிட்டேன்” என்று சொல்லவும்

அஜூதியாவின் ஈர இதழ்களை அழுத்தமாக பார்த்த ராவணனோ, பார்த்துக்கொண்டே அவள் இதழ் பட்டு அருந்திய அதே பகுதியில் தன் இதழ்களை அழுத்தமாக பதித்து மீதமிருந்த ஜூஸை பருக, 

அந்த நொடி.

அஜூதியாவின் முகம் மொத்தமாக சிவந்துவிட்டது.

‘இவன் இப்படியெல்லாம் செய்வானா…?’

என்று அவள் மனதிற்குள் திணறிக்கொண்டிருக்க, ராவணனோ எதுவுமே நடக்காதது போல ஜூஸை நிதானமாய் அருந்திக் கொண்டிருந்தான்.

இதை அனைத்தையும் கவனித்த வேலாயுதமோ ராவணனை சீண்டும் பொருட்டு,

“அப்புறம் எப்போடா கல்யாணம்?” அவன் ஏதும் தயங்குவான், அதை வைத்து அவனை கேலி செய்யலாம் என்று கேட்க, 

ராவணனோ சற்றும் தயங்காமல், அஜூதியாவை ஒரு கணம் பார்த்துவிட்டு, 

“சீக்கிரமே ஐயா” என்றான். அதை கேட்ட அனைவருக்கும் மகிழ்ச்சி.

அதற்கு வேலாயுதமோ, “பரவாயில்லை மா அடங்காத காலையையும் அடக்கிட்டியே” என்று கூறி சிரிக்க, அனைவரும் சிரிக்க, 

அவரோ விடாமல், 

“இதெல்லாம் பார்த்து அவனை லேசுன்னு நினைச்சிடாத சரியான அழுத்தக்காரன், இவனை விடாத மா, கட்டியா புடிச்சிக்கோ. இல்லைன்னா ஓடிருவான்,” என்று வம்பிழுக்க, அவரது பேச்சில்  அஜூதியாவுக்கும் ராவணனுக்கும் இன்னும் வெட்கமாகிப் போக, அவர்களின் வெட்கத்தை கண்டு அனைவரும் அவர்களை கேலி பேச அங்கே சிரிப்பு சத்தம் மனதை நிறைத்தது.

ராவணனோ சிரித்தபடி வேலாயுதத்தை பார்த்து,

“சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கிறோம் ஐயா,” என்றான்.

அவரும், “அதுதான் நல்லது. இனிமேலும் தாமதம் பண்ணாத.”

“சரி ஐயா.” என்றான்.

சிறிது நேரத்திலேயே அவர்களுக்கு விதவிதமான உணவுகள் பரிமாறப்பட, விருந்து முடிந்ததும்,

ஆண்கள் அனைவரும் வேலைகளை குறித்து பேச, மீராவும் மீனாட்சியும் சமையல்கட்டில் நின்றுக்கொண்டு அரட்டை அடிக்க துவங்கினர்.

முதலில் தயங்கினாலும் கொஞ்ச நேரத்தில் அஜூதியா அவர்களோடு நன்றாக ஒன்றிக்கொள்ள மீனாட்சிக்கும் மீராவுக்கும் அஜூதியாவை ரொம்பவே பிடித்து விட்டது.

“என்ன இருந்தாலும் நாம அந்த விக்ரமை விட்ருக்க கூடாது அண்ணா.” மஹந்த் கோபமாக சொல்ல மீதமிருந்த எட்டு பேரும் ஆமோதிப்பதாய் தலையசைத்தனர்.

அதை கேட்ட வேலாயுதமோ, “டேய் சும்மா இருங்க டா வாழ வேண்டாமா உங்களுக்கு, குத்திகிட்டே இருக்க போறீங்களா ஹான். கல்யாணம் பண்ணிட்டு வாழ்க்கைய வாழுங்க டா. பகைய ஓரம் வச்சிட்டு உங்கள பாருங்க டா” என்க அவர்களாலும் எதிர்த்து பேச முடியவில்லை, எனவே அவர்கள் சரி என்பதாய் தலையசைத்தனர்.

அதன் பிறகு சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு, ராவணன் அஜூதியா மற்றும் அவனது சகாக்கள், வேலாயுதம் மற்றும் மீனாட்சியிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டனர். 

அவர்கள் கிளம்பியதும் மீனாட்சி தன் கணவர் வேலாயுதத்திடம்,

“ஏங்க ராவணன் கிட்ட சொல்லாம விட்டுடீங்க” என்க அவரோ,

“எப்படி சொல்றது பாத்தல்ல இப்போ தாண்டி மனசார சிரிச்சிருக்கான், அதை ஏன் கெடுக்கணும்ன்னு தான் சொல்லல. அதுவும் இல்லாம சொல்ற அளவுக்கு என்ன பிரச்சனை நடந்துட்டு. அவன் மறுபடியும் டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருக்கான் அவ்வளவு தான”

“ஆனா அந்த ஆத்மன் சும்மா இருப்பான்னு எனக்கு தோணல. நிச்சயம் பிரச்சனை பண்ணுவான்” கவலையுடன் கூறினார் மீனாட்சி.

“என்ன பெரிய ஆத்மன், அவன் போலிசுன்னா நாமளும் ஒன்னும் சும்மா இல்லை, பாத்துக்கலாம் மீனா” என்றார் வேலாயுதம்.

ராவணனோ தன் சகாக்களிடம் பேசிவிட்டு காரில் ஏறி அமர, அவர்களின் கார் ஊரை நோக்கி புறப்பட, ராவணன் அஜூதியாவுடன் கடற்கரை வீட்டை நோக்கி பயணித்தான்.

@@@

சில மணி நேரப் பயணத்தின் முடிவில் மீண்டும் வீட்டிற்குத் திரும்பினர்.

வீட்டிற்குள் வந்த சிறிது நேரத்தில், 

“நீ ரெஸ்ட் எடுமா இன்னைக்கு விடியற்காலாமே நம்ம ஊருக்குக் கிளம்பலாம்.” என்று ராவணன் சாதாரணமாக சொல்ல,

அத்தனை நேரமும் அவளது முகத்தில் இருந்த மகிழ்ச்சி அப்படியே காணாமல் போனது.

“ஏன்… சீக்கிரமே?”

“உன் ஆசிரமத்துல உன்னைத் தேட மாட்டாங்களா?”

“தேடுவாங்க… ஆனா இன்னும் ரெண்டு நாள் கழிச்சு போவமா?” கெஞ்சலுடன் அவனைப் பார்த்தாள்.

“ஆனா தியா அது சரி வருமா” 

“அதெல்லாம் வரும்,  நான் அஞ்சு நாள் கழிச்சுதான் வருவேன்னு சொல்லிட்டு வந்தேன். சோ பிரச்சனை இல்லை.”

அவன் யோசிக்கவும் சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், அவனருகில் வந்து அவன் புஜத்தை இறுக்கமாக பிடித்து கொண்டு,

“எனக்கு இங்கேயே உங்க கூட இருக்கணும்.” சிறு பிடிவாத்தத்துடன் கூறினாள்.

“வேலை இருக்குமா” 

“ஊருக்கு போனா… நீங்க இப்போ பேசுறது கூட பேச மாட்டீங்க.”

அவளது குரல் சற்றே தாழ்ந்தது. அவன் அமைதியாக அவளைப் பார்த்தான்.

அதற்கு அவளோ“ப்ளீஸ்…” என்று விழிகளை சுருக்கி கெஞ்ச, 

அதன் பிறகு அவன் எங்கிருந்து மறுக்க,

மீதமிருந்த இரண்டு நாட்களுடன் சேர்ந்து இங்கு அவர்கள் இருந்த இந்த மொத்த ஐந்து நாட்களும், அவர்களது வாழ்க்கையில் மிக மிக அழகான நாட்களாக மாறின.

அவளுக்காக சின்னச் சின்ன விஷயங்களைக் கூட பார்த்துப் பார்த்துச் செய்தான்.

அவன் தான் சமைப்பான்.

அவள் காலையில் கண்விழிக்கும் நேரத்திற்கு அவளுக்காக காஃபி தயாராக இருக்கும்.

பெண்ணவளை அப்படி தாங்கினான்.

ஒன்றாகக் கடைத்தெருவுக்குச் சென்றார்கள்.

பீச்சில் இரவு நேரங்களில் மணி கணக்கில் நடந்தார்கள்.

கடலில் அலையோடு அவள் குழந்தையைப் போல விளையாட, அவனும் அவள் கரத்தை பற்றிக்கொண்டு கால் நனைத்தான்.

ஒவ்வொரு இரவும்…

தன்னவனின் கைவளைவில்…

அவனது வெற்று மார்பில் தன் முகத்தைப் புதைத்தபடி, அவனின் இதயத்துடிப்பைத் தாலாட்டாய் கேட்டுக் கொண்டுதான் உறங்க, உடையவனுக்கோ இன்ப அவஸ்தை.

முத்தங்கள் அவர்களுக்குள் வாடிக்கையானது.

அணைப்புகள் அத்தியாவசியமானது.

அங்கே தேகம் தாண்டி மனதளவில் இருவரும் இன்னும் நெருக்கமானார்கள்.

@@@@@@@@@@

அன்று.

ஐந்தாவது நாள் இரவு.

மறுநாள் ஊருக்குக் கிளம்ப வேண்டும்.

அஜூதியா ராவணனின் மார்பில் தலைவைத்து கண் மூடி படுத்திருக்க, அவன் அவளது சிகையை வருடிக் கொண்டிருந்தான்.

சில நொடிகள் அமைதியாக இருந்தவன், அப்படியே தன்னவளின் சிகையை வருடிக்கொண்டே பேசத் தொடங்கினான்.

“இப்படியெல்லாம் என் வாழ்க்கையில நடக்கும்னு நான் நினைச்சுக் கூட பார்த்ததில்ல.”

“ம்ம்” என்று புன்னகைத்த அஜூதியா அவன் மார்பில் முகம் புதைத்தபடி கேட்டுக் கொண்டிருந்தாள். 

“முன்னாடி எல்லாம்” 

என்று ஆரம்பித்த ராவணன், சொல்ல வந்த வார்த்தைகளைத் தொலைத்து விட்டு தேடுவது போல சில நொடிகள் அமைதியாக இருந்தவன், தன் குரலை செருமிக்கொண்டே,

“மத்தவங்களைப் பார்க்கும் பொழுது நமக்கும் இது போல ஏன் வாழ்க்கை அமையலன்னு ரொம்ப ஏக்கமா இருக்கும்.” என்க, 

மூடியிருந்த அவள் விழிகள் இப்பொழுது மெல்ல திறந்து கொள்ள,

அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று, அவளது இதயத்தை அழுத்தியது.

“அப்புறம் இதுக்கெல்லாம் நமக்கு குடுப்பணை இல்லன்னு மனசை இறுக்கமா வச்சுக்குவேன்.” என்று சொல்லும் பொழுதே கடைசி வார்த்தைகள் அவனது தொண்டைக்குள் சிக்கியது போல, குரல் சற்றே தழுதழுக்க,

அஜூதியா மெதுவாகத் தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.

அவனது முகத்தில் வழக்கமாக இருக்கும் அந்தக் கம்பீரம் இல்லை.

அவள் இதுவரை பார்த்திராத ஒரு ராவணனை அந்த நொடியில் பார்த்தாள்.

சில நொடிகள் எதுவும் பேசாமல் இருந்தவன், அவளது விழிகளைத் தவிர்த்து எங்கோ வெறித்துப் பார்த்தபடி,

“உன்னைப் பார்த்ததுக்கப்புறம்” என்றவன் சில கணங்கள் அமைதிக்கு பின் இப்போது அவளது விழிகளை பார்த்து, 

“என் வேதனையும் ஏக்கமும் அதிகமாச்சு.” என்றான்.

அவன் குரலில் இருந்த வலி அவளையும் கலங்கடிக்க கனத்த இதயத்துடன் அவனை பார்த்தவளின் விழிகள் அவனிலே நிலைத்திருந்தது.

அவனோ, “முதல் தடவ நீ உன் காதலை சொல்லும் பொழுது,”என்று சொல்ல அவனது உதடுகளில் மெல்லிய புன்னகை ஒன்று தோன்றி மறைந்தது.

“என் மேல எனக்கு அவ்ளோ கோபம் வந்தது.”

அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனது கண்களின் ஓரத்தில் மெல்லிய ஈரம் படர்வதைப் பார்த்ததும், அவளுக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது.

“என் வாழ்க்கை மட்டும் சரியா இருந்திருந்தா” என்று ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன்,

“எவ்ளோ நல்லா இருக்கும்னு நினைச்சேன்.”

அவனது குரல் இப்போது இன்னும் தாழ்ந்திருந்தது.

அஜூதியா அவனது கரத்தை தன் கரங்களுக்குள் மெதுவாகப் பற்றிக் கொண்டாள்.

அவன் அவளைப் பார்த்தான்.

அந்தப் பார்வையில் பல வருடங்களாக யாரிடமும் சொல்லாமல் அவனுக்குள் புதைந்து கிடந்த,

ஏக்கம் இருந்தது.

வலி இருந்தது.

அதைவிட அதிகமாக, 

அவள் மீது அவன் கொண்ட காதல் இருந்தது.

“ஆனா இன்னைக்கு…” என்று ஆரம்பித்துவிட்டு சில நொடிகள் அமைதியாக அவளது வதனத்தை பார்த்தவன், மெதுவாக அவளது கன்னத்தை வருடி சிறு புன்னகையுடன்,

“நான் அவ்ளோ சந்தோஷமா இருக்கேன்.”

புன்னகைக்கு நடுவே அவளது விழிகள் கலங்கியது.

“எனக்கு நீ இருக்க.” அவனது குரல் சற்றே உடைந்தது.

“இந்த ராவணனுக்கு. என் தியா இருக்கா.” அவளது கண்களில் கண்ணீர் தேங்கியது.

அவனோ அவளது கன்னத்தை வருடியபடியே,

“எனக்கே எனக்காக. என் அம்மு இருக்கா.”

அவ்வளவுதான் அவனது கண்கள் கலங்கி விட, அவனோ அதை மறைக்க முயற்சி செய்வதற்குள், ஒரு துளி கண்ணீர் அவனது விழியைத் தாண்டி கன்னத்தில் இறங்கியது.

அஜூதியாவால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை, அவனது கண்களில் தேங்கியிருந்த கண்ணீரை பார்க்க பார்க்க அஜூதியாவுக்கு இதயம் முழுவதும் ரணமாய் வலித்தது. 

இத்தனை நாட்களாக தன்னவனுக்குள் புதைந்து கிடந்த ஏக்கத்தையும் வலியையும் முழுமையாக அறிந்து கொண்டவளின் உள்ளம் அவனுக்காய் உருகியது.

“தேங்க் யூ. தேங்க் யூ சோ மச். என் வாழ்க்கையில வந்ததுக்கு.” என்று அவன் சொல்லி முடிக்கும் பொழுது அவனது விழியைத் தாண்டி இன்னொரு கண்ணீர் துளி வழிந்தது.

அவளுக்கு பேச்சே வரவில்லை, உயிரானவனின் கண்ணீர் பெண்ணவளின் இதயத்தை வெகுவாய் அழுத்தியது.

அப்படியே அவனது தாடியடர்ந்த கன்னத்தை தன் இரு கரங்களிலும் தாங்கிக் கொண்டு, அவனை ஆதரவாய் வருடியவள், இன்னும் நெருங்கி வந்து,

‘நான் உனக்கு எப்போதும் இருக்கிறேன்’ என்பதாய் ராவணனின் நெற்றியில் தன் இதழ்களை அழுத்தமாக பதிக்க, 

கண்களை மூடி சுகமாய் வாங்கிக் கொண்டான் ராவணன்.

உடையவளின் தந்த அந்த ஒற்றை முத்தமே, ஆடவனுக்குள் இருந்த அத்தனை வலிக்கும் மருந்தாய் மாறியிருக்க,

அவளது விழிகளை ஒரு கணம் ஆழமாகப் பார்த்தான் ராவணன்.

அந்தப் பார்வையில்,

காதல் இருந்தது.

நீ என்னவள் என்ற உரிமை இருந்தது.

இனி எந்த தீங்கும் இவளுக்கு நேரவிடக் கூடாது என்கிற பயம் அதிகமாகவே இருக்க,

அடுத்த நொடி அஜூதியாவின் முகத்தைத் தன் கரங்களுக்குள் ஏந்தி கொண்ட ராவணன்,

அவளது இதழில் தன் இதழைப் பதித்தான்.

ஆழமாக!

அழுத்தமாக!

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top