1.விழி

அம்ருதா வித்யா மந்திர் பள்ளி மைதானம்..

“ நீ தான்டா அதுக்கெல்லாம் காரணம் உன்ன  பாரு நான் என்ன பண்ணப் போறேன்..” என்று ஒருவனும்

“நீ தான்டா காரணம். டேய் உன்ன நான் சும்மா விடமாட்டேன் டா. பாரு நான் என்ன பண்றேன்னு..” என்று அவனும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்..

கிட்டத்தட்ட மைதானத்தில் உருண்டு புரண்டு கொண்டிருந்தனர் இருவரும்..

 அவர்களை சுற்றி அனைத்து மாணவர்களும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, ஒரு ஆசிரியரோ வேகமாக ஸ்டாப் ரூம் இருக்கு நுழைந்தார்..

“மீனா மிஸ்.. மீனா மிஸ்.. தயவு செஞ்சு என்னை காப்பாத்துங்க..” என்றவாறு லட்சுமி உள்ளே நுழைந்தார். 

“என்ன ஆச்சு?” என்றவாறு மீனா கேட்டாள் 

 ஏனென்றால், லட்சுமியின்  பதற்றம் அவ்வாறு இருந்தது..

 சுற்றி உள்ள அனைத்து ஆசிரியருமே “என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு பதற்றம்?” என்றவாறு கேட்க

“ ஐயோ அப்புறம் சொல்றேன்.மீனா மிஸ் நீங்க வாங்க தயவு செஞ்சு..”என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக கூட்டிச் சென்றாள் 

“வரேன் வரேன்..! என்னாச்சுன்னு சொல்லுங்க..” என்றவாறு லட்சுமியிடம் கேட்டுக்கொண்டே அவருடன் சென்றாள்

“ என் கிளாஸ் பசங்க ரெண்டு பேரும் கிரவுண்ட்ல சண்டை போட்டுக்கிறாங்க மி்ஸ்..”என்றதும் அவளின் நடை நின்றது 

“நீங்க தானே அந்த பசங்களோட கிளாஸ் டீச்சர். நீங்க அவங்களை தடுக்காம என்ன கூட்டிட்டு போறீங்க..” என்று மீனா கேட்க 

“அச்சோ இரண்டு பேரும் பயங்கரமா சண்டை போட்டுக்குறானுங்க என்னால தடுக்கவே முடியல. நீங்கதான் இந்த மொத்த ஸ்கூல்லையும் உங்களோட பார்வைல கண்ட்ரோல் பண்ணுவீங்களே. கொஞ்சம் வாங்களேன். அவங்கள என்னன்னு கேளுங்க..” என்று கெஞ்சுதலாக கூற 

சரி என்று தலையசைக்க இருவரும் மைதானத்திற்கு சென்றனர். 

அங்கு சுத்திலும் மாணவர் கூட்டம் நின்று இருக்க, நடுவில் இரண்டு பேரும் கட்டி புரண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்..

 இதில் ஏய் ஓய் என்று சத்தம் வேறு.

 ‘படிப்பது நாலாவது வகுப்பு இதுல இவன்களுக்கு இப்படி ஒரு சண்டை தேவையா..’ என்றவாறு அருகில் சென்று நின்றாள்..

 மீனாவை கண்டதும் சுற்றி இருந்த அனைத்து மாணவர்களும் கப்சிப் என்று அவரவர் வகுப்பிற்கு தப்பித்தோம் பிழைத்தோம் என்று நகர்ந்து விட்டனர்..

“ என்னால முடியல மீனா.  கிளாசுக்குள் இப்படித்தான் சும்மா சும்மா சண்டை போட்டு என்னை டார்ச்சர் பண்ணுவாங்க. இன்னைக்கு என்னன்னு தெரியல பயங்கரமா சண்டை போடுறாங்க. பிரின்ஸ்பல் சார் வர்றதுக்குள்ள தயவுசெஞ்சு பிரிச்சு விடுங்க..” என்று லட்சுமி கேட்க 

மீனாட்சி நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கண் அசைத்துவிட்டு கைதட்டினாள்..

 கைத்தட்டலில் சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள் இருவரும் நிமிர்ந்து பார்த்தனர்..

 மீனாவை கண்டதும் இருவரும் சட்டென்று எழுந்து நின்று பிரிந்து நின்றனர்..

ஏனென்றால் மீனா ஒரு ஸ்டிரிக்ட்டான டீச்சர். தவறு என்று தெரிந்து விட்டால் அது யார் என்றெல்லாம் பார்க்க மாட்டாள், முதலில் அவள் கை தான் பேசும்..

 ஆசிரியர்கள் குழந்தைகளை அடிக்க கூடாது என்று சட்டமே இருக்கிறது. ஆனால், அதை எல்லாம் இவள் பொருட்படுத்தியது இல்லை..

 அப்படி ஏதும் பெற்றோர்கள் வந்து கேள்வி கேட்டால் , “ஆசிரியரிடம் அடி வாங்காத எந்த பிள்ளையும் ஒழுங்காக வளராது. ஒழுக்கத்தை நீங்கள் சொல்லிக் கொடுங்கள், இல்லை என்றால் எங்களை சொல்லிக் கொடுக்க விடுங்கள். இரண்டையும் தடை போட்டால் நாளை உங்கள் பிள்ளை உங்களுக்கானவன் இல்லை. அதன் பின்பு அழுது ஒரு பிரயோஜனம் இல்லை. பார்த்துக் கொள்ளுங்கள்..” என்று கூறி விடுவாள் 

பிரின்ஸிபல் எவ்வளவோ கூறிவிட்டார். ‘இப்படி நடந்து கொள்ளாதே இதனால் பெரிய பிரச்சனை வரும், யாராவது ஒருத்தர் கம்ப்ளைன்ட் செய்தால் உனக்கு தான் பிரச்சனை.’ என்று 

“வருவது வரட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன்.  இந்த பள்ளி இல்லை என்றால் வேறு ஒரு பள்ளிக்கு நான் செல்வேன். ஆனால் நான் சென்று விட்டால், என்னைப்போல ஒரு ஆசிரியர் இங்கு இருக்க மாட்டார்..” என்று தைரியமாகவும், திமிராகவும் கூறுவாள் 

பிரின்ஸிபல்லுக்குமே தெரியுமே இவள்  பள்ளிக்கு சேர்ந்து இந்த மூன்று வருடத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களும், 12-ஆம் வகுப்பு மாணவர்களும் ஒருவரும் கணித பாடத்தில் தேர்ச்சி பெறாமல் இல்லையே. அனைவருமே பாஸ் ஆகி உள்ளனரே..

 கணிதம் கடினமான பாடம். அதனை எளிய முறையில் நடத்தி மாணவர்கள் அனைவருக்குமே பிடித்த பாடம் கணித பாடம் என்று கூறும் அளவிற்கு நடத்துவாள்..

அனைத்து மாணவர்களிடமும் அவள் கூறுவது “மத்த பாடத்தை ஒப்பிடுகையில் கணக்கு மிகவும் எளிமையான பாடம். அதனைப் புரிந்து கொண்டாலே போதும். அதில் மார்க் வாங்குவது அவ்வளவு எளிது. மத்த பாடங்களில் ஒரு நாலு தவறு செய்து விட்டால் மார்க்க குறையும். ஒரு சிலர் மொத்தமாக அடித்து விட்டு செல்ல வாய்ப்புகள் இருக்கு. ஆனால், கணிதத்தில் அவ்வாறு செய்ய இயலாது. ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் மதிப்புகள் உண்டு. நீ கணக்கை மொத்தமாக சரியாக செய்து விட்டு கடைசியில் பதில் மட்டும் தவறாக இருந்தால், ஸ்டெப்புக்கு மார்க் உண்டு. பதிலுக்கு மட்டும் மார்க் குறைப்பார்கள். இப்படி நீ மார்க் வாங்க அதிக வாய்ப்புகள் உள்ள பாடம் கணக்கு மட்டுமே. அதனால், புரிந்து படியுங்கள்..” என்று கூறுவாள்

 முடிந்து மட்டும் பத்து மேல் மாணவர்கள் ஆவது சென்டம் எடுத்து விடுவார்கள் இவளது பாடத்தில் மட்டும்..

 அப்படி இருக்க பிரின்ஸிபல்லும் இவளை அனுப்ப முடியாது நிலையில் தான் உள்ளார். அதனால் பெற்றவர்கள் ஏதேனும் கம்ப்ளைன்ட் செய்தால் இவரே முதலில் பேசி சமாதானம் படுத்தி விடுவார். அதன் பின்பு தான் மீனாவிடம் பேசுவார்..

முதலில் பெரிதாக யாரையும் திட்டுவதோ, அடிப்பதோ இவள் வழக்கம் இல்லை. கையை கட்டிக்கொண்டு ஒரு பார்வை தான்.

 அந்தப் பார்வைக்கே அனைத்து மாணவர்களும் அடங்கிப் போவர்.

அதையும் மீறி தவறு இழைத்தால் மட்டுமே அவளது கை பேசும்..

 வராண்டாவில் நடந்து செல்லுகையில் ஏதேனும் வகுப்பறையிலிருந்து சத்தம் வந்தால் உள்ளே சென்று அனைத்து மாணவர்களையும் ஒரு பார்வை தான் பார்ப்பாள்..

அனைவரும் கப்சிப் என்று அமர்ந்து விடுவர்கள்.  எதுவும் பேச மாட்டாள் வகுப்பறையை விட்டு வெளியேறி விடுவாள்..

  அதன் பின்பு தான் பிரைமரி மாணவர்கள்,” ஆமா இவங்க யாரு? எதுக்கு வந்தாங்க? இவர்களை பார்த்து நம்ம ஏன் பயப்படுறோம்..” என்றவாறு கேள்விகளே கேட்பர்.. 

அந்த அளவுக்கு மொத்த பள்ளியையும் தன் கண் அசைவில் அடக்கி வைத்திருப்பாள்  நம் கதையின் நாயகி மீனா என்கிற மீனாட்சி..

கைகளை கட்டிக்கொண்டு இரு மாணவர்களையும் பார்த்துக் கொண்டிருக்க அவர்களே பேச தொடங்கினர்..

 “மிஸ் இது என்னோட பேனா மிஸ் அவனோடதுன்னு சொல்லி சண்டை பிடிக்கிறான்..” என்றான் ஒருவன் 

“இல்ல இது எங்க அப்பா எனக்காக வாங்கி கொடுத்தாரு. அதை இவனுடையது தான் சொல்லி சண்டை பிடிக்கிறான் மிஸ்..” என்றான் மற்றொருவன் 

இருவரையும் ஆழ்ந்து பார்த்தவள்,          “ நீங்க எத்தனாவது படிக்கிறீங்க..” என்று கேட்க 

நான்காவது என்றனர் இருவரும்..

 “அப்போ நீங்க பென்சில்ல தானே எழுதணும். பேனா எப்படி வந்துச்சு..” என்று கேட்க

“பேனாவில் எழுத ஆசையா இருந்தது. அதோடு இந்த பேனாவும் பார்க்க ரொம்ப அழகாக இருந்தது. அதனால, அப்பா கிட்ட கேட்டேன், வாங்கி கொடுத்தார்..” என்றான் ஒருவன் 

“நீ..” என்று கேட்க

“ நானும் தான் மிஸ். இவன் வாங்கினதை பார்த்து நானும் எங்க அப்பா கிட்ட கேட்டேன்.  வாங்கி கொடுத்தாரு..” என்றான்

“ஆறாவதுல தான் பேனாவில் எழுத போறீங்க . அப்படி இருக்கப்ப இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு. அதுக்குள்ள நீங்க கேட்ட உடனே உங்க அப்பா வாங்கி கொடுத்துட்டாங்களா..” என்றதும் இருவரும் ஆம் என்று தலையசைக்க 

“சரி அந்தப் பேனாவை என்கிட்ட கொடு..” என்று மீனா கேட்க 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மீனாவை பார்த்தனர்..

 அவர்களிடமிருந்து பேனாவை வாங்கியவள் “இன்னும் ரெண்டு வருடம் இருக்கிறது பேனாவில் எழுத..

 நான் எங்கும் போகப்போவதில்லை. இதே பள்ளியில் தான் வேலை பார்க்கப் போகிறேன். நீங்களும் இங்கேதான் இருக்கப் போகிறீர்கள்..

 அதனால், ஆறாவது வரும்போது இந்த  பேனாவை என்னிடமிருந்து கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்..  அப்ப இந்த சண்டையை கண்டினியூ பண்ணுங்க..” என்றவாறு பேனாவை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டு மீனா நிற்க

 திமிராகவே இருவரும் “வாங்கிக்கோங்க எங்களுக்கு வேணும்னா நாங்க இன்னொரு பேனா வாங்கிக்கிறோம்..” என்றனர்

“என்னன்னு சொல்லி வாங்குவீங்க..” என்று மீனா கேட்க 

“கொண்டு போன பேனா தொலைந்துவிட்டது என்று சொல்லி புது பேனா கேட்போம்..”

“வாங்கி கொடுப்பாங்களா..?” என்றாள் சந்தேகமாக

“ கண்டிப்பா வாங்கி தருவாங்க. நாங்க கேட்டு அவங்க எதுவுமே இல்லன்னு சொன்னது இல்ல..”  அப்போதும் அதே திமிரோடு இருவரின் பதிலும் வர கையை மடக்கி தன் கோபத்தை கட்டுப்படுத்தினாள்

 

 சிறுவர்களுக்கு அடி கொடுக்க முடியாதே. ‘பிள்ளைகள் கேட்டால் உடனே உடனே வாங்கி கொடுத்து பழகிவிட்டு இருக்கிறார்கள்.

 அதனால், தான் இவர்களுக்கு இந்த திமிரு..’ என்று நினைத்தவள் அவர்களிடம் “அப்படி என்ன ரெண்டு பேரும் பண்றாங்க..” என்று கேட்டதும் 

ஒருவன் எங்க அப்பா ஜட்ஜ் என்றான். மற்றொருவன் எங்க அப்பா போலீஸ் என்றதும் 

“ஓஹ் சட்டத்தை திருத்துறவர்களா. அப்ப சரி சரி..” என்று மனதில் நினைத்தவள் 

“நீங்க இதுபோல எத்தனை பேனா வேணாலும் வாங்குங்க. அத்தனை பேனாவையும் நான் வந்து வாங்கிக்குவேன். நாளையிலிருந்து உங்க பாக்ஸ செக் பண்றது தான் என்னோட முதல் வேலையே. யாராவது பேனா வைத்திருந்தால் அதனை நான் வாங்கிக் கொள்வேன்.

 40 பேனா சேர்ந்ததும் ஆறாவது ஏழாவது படிக்கிற மாணவர்களுக்கு அதனை இலவசமா கொடுத்து விடுவேன். எப்படி வசதி..” என்று புருவம் உயர்த்தி கேட்க 

“நாங்க வாங்குற பேனாவை, நீங்க ஏன் வாங்குறீங்க..” என்றனர் இருவரும் 

“உங்களுக்கு தேவை பென்சில் தான். அதை நீங்க எவ்வளவு வேணாலும் வாங்கிக்கோங்க. தப்பு இல்ல. உங்களுக்கு தேவை இல்லாத பொருளை நீங்க வாங்க கூடாது. அது தப்பு..”

 “எங்கப்பா கேட்டா, வாங்கி தராரு. அத நீங்க ஏன் தடுக்குறீங்க..” என்றான் போலீசின் மகன் 

“ அப்படித்தான் தடுப்பேன். முடிஞ்சத பாத்துக்கோ. நீ பயன்படுத்தக் கூடாது என்றால் பயன்படுத்தக்கூடாது தான். அதையும் மீறி நீ எடுத்துட்டு வந்தா கண்டிப்பா நான் வாங்கி வைச்சுப்பேன்..” என்றவாறு இருவரையும் முறைத்தவள் 

“இப்ப நீங்க கிளாசுக்கு போகலாம்..” என்றாள். அப்போது ஒரு மாணவன் ஓடி வந்தவன்” மிஸ்.. மிஸ்..” என்று அழைக்க 

லட்சுமி “என்னபா..” என்று கேட்க 

“இதோ இன்னொரு பேனா இருக்கு. அவங்க பெஞ்ச்க்கு அடியிலேயே தான் மிஸ் கடந்தது. அது தெரியாமல் இரண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருக்காங்க..” என்று கூற 

அந்த பேனாவையும் மீனா வாங்கிக் கொண்டாள்.. 

“ 40 பேனாவில் ரெண்டு பேனா கிடைச்சிடுச்சு. மீதி 38 பேனா எனக்கு சேருவதும், சேராம போறதும் உங்க கையில தான் இருக்கு..”  என்று முறைத்தவாறு கூற இருவர்களுமே பயந்து போய் தன் வகுப்பறைக்கு ஓடிவிட்டனர்

“ என்னடா நம்ம வாங்கின பேனாவை இவங்க வாங்கிட்டாங்க..” என்று போலீசின் மகன் கேட்க 

“ பேசாமல் சண்டை போடாம இருந்திருந்தா, நம்மளே தேடி கண்டுபிடித்து , அந்த பேனாவை பத்திரப் படுத்தி இருக்கலாம். இப்போ வாங்கின பேனா போச்சு..” என்று ஜட்ஜின் மகன் கூற 

“விடுடா அப்பா கிட்ட கேட்டு இன்னொரு பேனா வாங்கிக்கலாம்..” என்றான் போலீஸின் மகன் 

“இல்லடா இந்த பேனா வாங்கி கொடுக்கலையே எங்க அப்பா கண்டிஷனோட தான் வாங்கி கொடுத்தாரு..”

“ என்ன கண்டிஷன்..”

‘உனக்கு பேனா இப்ப யூஸ் ஆக போறது இல்ல. ஆறாவது வந்தா தான் உங்க ஸ்கூல்ல பேனா பயன்படுத்தணும். இப்ப எதுக்கு தேவை இல்லாம வாங்குற?  அப்படி நான்  வாங்கி கொடுத்தா நீ பத்திரமா வச்சுக்கணும். அப்படி பத்திரமா வச்சுக்கலைன்னா பேனா மட்டுமல்ல பென்சில் கூட நான் வாங்கித் தர மாட்டேன் என்று கூறினார்..’ என்றான் ஜட்ஜின் மகன்

“அச்சச்சோ இப்ப என்னடா பண்றது. எங்க அப்பா கேட்டா வாங்கி தந்துவிடுவாரு டா. பிரச்சனை இல்ல. ஆனாலும், வாங்கி கொடுத்தத தொலைச்சிட்டா கஷ்டம் தானே..” என்று இருவரும் ஆக பேசிக் கொண்டே தங்கள் அறைக்கு சென்று இருந்தனர்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top