யுகம்-18

வைத்திய சாலையிலிருந்து வந்தவள் ஆத்ரேயன் வீட்டுக்குச் செல்லாமல் தனது வீட்டிலேயே முடங்கி போனாள். யாரும் அவளிடம் அதை பற்றி கேட்கவுமில்லை. சில நேரங்களில் அவனின் கோர முகம் நினைவு வந்து அவளை கொல்லாமல் கொல்லும்… அவன் தன் கணவனல்ல என்று நினைத்து மனதை திடப்படுத்த பழகி இருந்தாள்.

கல்லூரிச் செல்லும் நாளும் வந்தது. கல்லூரிக்கு போவதற்கு முதல் நாள் மாலதியிடமும் கார்த்திகேயனிடமும் சொல்லுவதற்காக கோகிலாவின் கட்டாயத்தின் பெயரில் ஆத்ரேயனின் வீட்டுக்கு வந்தாள். வந்தவள் இருவரிடமும் சொல்லி விட்டு வெளியேற போனாள். அந்நேரம் பார்த்து ஜாகிங் போய் களைத்த ஆத்ரேயனும் வீட்டுக்குள் நுழைந்தான்.

அவனை ஒரு கணம் கண்டு திகைத்தவள், காணாதது போல அவனை தாண்டிச் சென்றாள். அவள் செல்வதை வெறித்து பார்த்தவன் சொடக்கிட்டு அவளை அழைத்தான். “இந்த நெட்டையன் எதுக்கு நம்மள கூப்பிடுறான்?”  என்று முணு முணுத்தவாறே அவனை திரும்பி பார்த்தாள். “மேடம் என்கிட்ட சொல்லிட்டு போக மாட்டாங்களா?” என்று கேலியாக கேட்டவனிடம், “மனசுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் தான் நான் சொல்லிட்டு போக வந்தேன்” என்று ஒரு வார்த்தையில் அவனை எட்ட நிறுத்தி விட்டு திரும்பி பார்க்காமல் தனது வீட்டுக்குச் சென்றுவிட்டாள்.

அவளின் இந்த விலகல் அவனை நிலை குலைய செய்தது. அடித்திருந்தால் திரும்ப அடித்திருப்பான்.  திட்டி இருந்தால் அதற்கும் பதிலடி கொடுத்திருப்பான். ஆனால் வலிக்காத போல ஊசி ஏற்றுபவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் நின்றான்.

‘போடி போ… எத்தனை நாளைக்கு என்று நானும் பார்க்கிறேன், எப்படி இருந்தாலும் என்னட்ட தானே வரணும்… அப்போ இருக்குடி உனக்கு.’ என்று திமிராக நினைத்தவன் தனது வேலையை பார்க்கச் சென்று விட்டான்.

கல்லூரிக்குச் சென்றவள் ஆரம்பத்தில் மனதை ஒரு நிலைப்படுத்த முடியாமல் தடுமாறினாள். ஒரு நாள் அவள் கழுத்தை அவதானித்த சந்தியா, “எங்கடி தாலி?” என்று கேட்க, ‘இவ ஒரு கேள்விக்கு பிறந்தவ’ என்று மனதுக்குள் திட்டியவள் “அரிக்குதுனு கழட்டி  வச்சிட்டேன்” என்றவள் மறந்தும் சந்தியாவை பார்க்கவில்லை. அவளின் பதிலால் ஆடிப்போனவள் அவளை சந்தேகமாக பார்த்தாள். 

சிறிது காலம் ஆத்ரேயன் நினைவால் கஷ்டப்பட்டவள், தனது நண்பர்கள் வட்டத்தை பெரிதாக்கினாள். அது அவளுக்கு ஆத்ரேயனின் நினைவை வரவிடாமல் செய்தது. பின்பு மனதை ஒரு நிலைப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினாள்.

அவள் சென்றதிலிருந்து ஆத்ரேயன் தனது வேலையில் மும்முரமாக ஈடுபட்டான். வைஷ்ணவியை முற்றாக மறந்திருந்தவன், ஒரு நாள் படுத்திருந்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான்.

அவனது பிலே லிஸ்டில் வைஷ்ணவி பாடும் போது அவன் யாருக்கும் தெரியாமல் ரெகார்ட் பண்ணிய பாடல் விழுந்தது. “மழை வரும் அறிகுறி” என்று பாடும் அவள் குரலை கேட்டவன் அதில் மெய் மறந்து போனான்.

அந்த குரலின் ஏக்கம் அவனை குடிக்காமலே போதை கொள்ள செய்தது. விடாமல் அந்த பாடலை பத்து தடவைகளுக்கு மேல் கேட்டவனின் உள்ளம் அவளின் அருகாமைக்காக ஏங்க தொடங்கியது.

உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே

அது பாதியில் தொலைந்ததடா

நான் கேட்டது அழகிய நேரங்கள்

யார் தந்தது விழிகளில் ஈரங்கள்?

நான் கேட்டது வானவில் மாயங்கள்

யார் தந்தது வழிகளில் காயங்கள்?

இந்தக் காதலும் ஒரு வகை சித்ரவதை தானே

அது உயிருடன் எரிக்குதடா

 

இந்த வரிகளை திரும்ப திரும்ப கேட்டவன் அதனை அவள் தனக்காகவே பாடியது போல் உணர்ந்தான். அந்த சந்தர்ப்பத்தில் தான் அவன் அவளின் காதலுடன் சேர்த்து தன் காதலையும் உணர்ந்தான். அவளை முதன்முதலில் ரத்த வெள்ளத்தில் பார்த்தது முதல் கடைசியாக வைத்தியசாலையில் பார்த்தது வரை ஒவ்வொன்றாக நினைவு வந்து கொல்லாமல் கொன்றது. என்ன செய்வதென்று தெரியாமல் தலையை பிடித்தவாறு சிறிது நேரம் அமர்ந்திருந்தவனுக்கு “இது தான் காதலடா!” என்று மனசாட்சி அடித்து கூறியது.

அவளை காயப்படுத்தியதை நினைத்து அவனுக்குள்ளேயே மருகி போனான். உண்மையான அன்பை இழந்து விட்ட வலியை உணர்ந்தான்.

அவளுடன் பேச வேண்டுமென மனம் துடிக்க அவளுக்கு அழைத்தான். ஆனால் அவளோ அவன் தொலைபேசி எண்ணை   தடை செய்து வைத்திருந்தாள். அவளின் உதாசீனம் மறுபடி அவனின் ஈகோவை தட்டி எழுப்ப, “நீ என்னடி பிளாக் பண்றது… நான் உன்னை பிளாக் பண்ணுறேன் பார்” என்றவாறே அவளின் நம்பரை தடை செய்தான்.

அவளின் நினைவு தினம் தினம் வாட்ட அதற்காகவே அவன்  ஓய்வில்லாமல் உழைக்க தொடங்கினான். ஓய்வு நேரங்களில் அவளின் அணைப்புக்காக ஏங்கி ஏங்கி தவிக்க தொடங்கினான். அவளை காண வேண்டும் என்று ஒவ்வொரு அணுவும் துடித்தது. கண்ணாடியில் தனது முகத்தை பார்க்கவே விரும்பாமல் இருந்தான். எந்த அழகை வைத்து அவளை கொச்சை படுத்தினானோ அதே அழகை அவன் வெறுத்தான். தாடி  மீசையுடன் சாப்பிடாமல் வேலை வேலை என்று அலைந்தவனை பார்க்க மாலதியின் பெற்ற  வயிறு பற்றி எரிந்தது. கேட்டாலும் அவன் சொல்ல மாட்டான் என்று தெரிந்தும் மன ஆறுதலுக்காக ஒரு நாள் கேட்டதற்கு விரக்தியாக புன்னகைத்து விட்டுச் சென்று விட்டான்.

அருகில் இருந்த போது உணராத காதலை விலகிச் சென்றதும் உணர தொடங்கினான். மனம் கேட்காமல் வைஷ்ணவிக்கு அழைத்த மாலதி, “உனக்கும் ஆத்ரேயனுக்கும் இடையில் என்ன பிரச்சனை ம்மா?” என்று கேட்க… அவளோ சர்வ சாதாரணமாக, “பெருசா ஒண்ணுமில்லை அத்தை விவாகரத்து செய்ய போகிறோம். இனி நீங்க அவரை பற்றி பேச வேண்டுமானால்

எனக்கு எடுக்க வேண்டாம்” என்று கறாராக கூறி வைத்துவிட்டாள்.  விவாகரத்து என்ற வார்த்தையில் ஒடுங்கி போனவர் அவளின் உதாசீனத்தில் நிலை குலைந்து போனார்.

நடந்ததை கணவரிடமும் மகனிடமும் கூறி ஒப்பாரி வைக்க, கார்த்திகேயனோ,

“அவங்க வாழ்க்கை நீ தலையிடாதே” என்று கழன்றுக்  கொண்டார். ஆத்ரேயனோ மனதுக்குள், ‘உண்மையாவே நான் அவளுக்கு வேண்டாமா’ என்று வருந்தியவன் ஒரு விரக்தி புன்னகையில் மாலதியை கடந்து போனான். ஆதியையும் வர்ஷினியையும் இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என கார்த்திகேயன் கறாராக சொல்லி விட்டார். மலர்வேந்தனுக்கும் கோகிலாவுக்கும் கூட விஷயம் தெரிவிக்க படாமல்  இருந்தது. அவள் காதலை மறந்தும் இவன் காதலை உணர்ந்தும் ஒரு மாதத்தை கழித்தனர்.

ஒரு மாதம் கழிந்ததும்  வந்து சேர்ந்தது சீனியர்களின் பேர்வெல் நிகழ்ச்சி. அதற்கு  போவதில்லை என்று மனதுக்குள் முடிவெடுத்த  வைஷ்ணவி அதனை வெளியில் சொல்லாமல் மறைத்து வைத்து இருந்தாள். கடைசி நேரத்தில் உடல் நிலை சரி இல்லை என்று காட்டி போகாமலிருக்க திட்டம் போட்டாள்.

எல்லாரும் சந்தோஷமாக நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மேற்கொண்ட போதும் அவள் எதிலும் கலந்துக் கொள்ளாமல் தானுண்டு தனது வேலையுண்டு என இருந்துவிட்டாள். ஆத்ரேயனோ அவளை சந்திப்பதற்கு அவா இருந்தாலும் தன்னால் தன்னை கட்டுப்படுத்த முடியாது என்று தோன்ற வீண் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக போவதில்லை என்று முடிவெடுத்தவன் அதனை கல்லூரி மாணவர்களுக்கும் அறிவித்திருந்தான்.

கல்லூரி மாணவர்கள் ஆகாஷுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆத்ரேயனை கூட்டி வருமாறு கெஞ்சிக் கொண்டிருந்தனர்.

ஆகாஷும்,  “ட்ரை மை பெஸ்ட்” என்று சொல்லி விட்டு வைத்து விட்டான். அவன் வருவானா மாட்டானா என்று குழம்பி தவித்த போது, அந்த செய்தியை கேள்விப்பட்ட சந்தியா வைஷ்ணவியிடம் வந்து, 

“ஆத்ரேயன் சீனியர் நாளைக்கு வரமாட்டாராம்டி கவலையா இருக்கு” என்றாள். ஆனால்  வைஷ்ணவிக்கோ அது இனிப்பான செய்தி அல்லவா அடுத்தநாள் தயாராகி போவதற்கான சேலையை பெட்டியில் தேட தொடங்கினாள்

பேர்வெல் நிகழ்ச்சிக்கு போக விரும்பாமல் இருந்தவனை முதல் நாள் ஆகாஷ் வந்து சந்தித்தான்.

அவனின் சாமியார் கோலம் கண்டு திகைத்தவன், “என்னடா ஆச்சு?” என்று கேட்டு விரக்தி புன்னகையையும்  மௌனத்தையும் பதிலாக பெற்றான்.

வரமாட்டேன் என்று ஆரம்பத்தில் அடம் பிடித்தவன் கடைசியில் ஆகாஷின் வற்புறுத்தலால்  நிகழ்ச்சிக்கு போக சம்மதித்தான். “கொஞ்சம் தாடியை ட்ரிம் பண்ணிட்டு  வாடா முகமே தெரியல.”  என்றவனிடம், “இப்போ நான்  அழகா இல்லையா?” என்று நக்கலாக தான் கேட்டான். ஆனால் உண்மையில் காடு போல வளர்ந்திருந்த தாடி அவனின் அழகை குறைக்காமல் மாறாக கூட்டி  இருந்தது. “நீ எப்படி இருந்தாலும் அழகன் டா” என்று கண் சிமிட்டி தோளில் கை போட்டுச் சொன்ன ஆகாஷை பார்த்து வாய் விட்டுச் சிரித்தான் நிறைய நாட்கள் கழித்து.

ஆகாஷுடன் அன்று காலை வந்து இறங்கிய ஆத்ரேயன் விடுதியில் ஓய்வெடுத்துவிட்டு மாலையானதும் பேர்வெல் நிகழ்ச்சிக்குச் செல்ல தயாரானான்.

கருப்பு நிற முழுக்கை சட்டை அணிந்து முதலிரு பட்டன்களை திறந்து விட்டவன், அதனை முழங்கை வரை மடித்தான். அதற்கு பொருத்தமான கருப்பு நிற ஜீன்ஸ் உம் பெல்ட்டும் அணிந்தவன் ஷர்ட்டை இன் பண்ணி விட்டு கருப்பு நிற ஷூசும் அணிந்துக் கொண்டான். மேலும் கையில் கருப்பு நிற டைட்டன்  கைக்கடிகாரத்துடன் நிகழ்ச்சிக்கு கிளம்பியிருந்தான். அனைத்தும் கரிய நிறமாக அணிந்தவனின் முகத்தை மூடுமளவுக்கு வளர்ந்திருந்த தாடியும் மீசையும் அவனுக்கு அழகை கூட்டியதே தவிர கொஞ்சம் கூட குறைக்கவில்லை. அவன் முகத்தில் மாத்திரம் இனம் புரியாத வேதனை படர்ந்திருந்தது.

வைஷ்ணவியோ ஆத்ரேயன் வரமாட்டான் என்ற நிம்மதியுடன் வான் நீல நிற கல் வேலைபாடுடைய ஷிபான் புடவை அணிந்தவள் எந்த வித மேக்கப் உம் இல்லாமல் முடியை பின்னி விட்டிருந்தாள். சிறு தங்க தோடும் மாலையும் மட்டும் அணிந்திருந்தாள். அவளின் எளிமையே அவளை மிக அழகாக காட்டியது.

அவளின் எளிமையை பார்த்த சந்தியா வைஷ்ணவியிடம்,

“கொஞ்சம் மேக்கப் போட்டுக்கடி” என்றவளின் முகம் அடையாளம் காண முடியாதவாறு மேக்கப் இனால் நிரம்பி இருந்தது. அவளின் மாறுவேஷத்தை பார்த்து வந்த சிரிப்பை கட்டுப்படுத்தியவள், “ஏன் என்ன யாரும் அடையாளம் காண கூடாது என ஆசைப்படுறியா?” என்று குறும்புடன் கேட்டாள்.

“உன் கிட்ட போய் சொன்னேன் பாரு” என்று சலித்துக் கொண்டவள் தனது மாறு வேஷத்தை தொடர்ந்தாள்.

அவளை பார்த்து கண்ணுக்கெட்டாத சிரிப்பை சிரித்தவள் போவதற்கு ஆயத்தமாகி முப்பது நிமிடங்களுக்கு முன்னரே வந்து சேர்ந்தனர்.

சந்தியாவுடன் சென்று அனைவருக்கும் வெல்கம் ட்ரிங்க் கொடுக்க தொடங்கியவள் நண்பர்களின் கலகலப்பில் காயங்களை மறந்து போனாள். அதற்குள் அவள் நிம்மதியை குலைப்பதற்காகவே அவளது நண்பன் ஒருவன், “ஆத்ரேயன் அண்ணா வந்திருக்காருடா… செம ஹாண்ட்சம் ஆக இருக்கார். வாடா சீக்கிரம்” என்று அழைக்க அவள் கால்கள் தன்னை அறியாமல் நிலை கொள்ள முடியாமல் நடுங்கியது.

‘இவன் வரமாட்டேன் என்று தானே சொன்னான்… எதுக்கு வந்திருக்கிறான்?’ என்று அவனை கண்ட மேனிக்கு திட்டியவள் மேல் அடுத்த இடி விழுந்தது. “வைஷு இங்க வந்து இவர்களுக்கும் கொடும்மா” என்று அவள் நண்பன் அழைக்க அவன் சொன்ன மேசைக்கு தலையை குனிந்தபடி வந்து பரிமாற தொடங்கினாள்.

வைஷு என்ற பெயரில் ஆத்ரேயன் மனது சில்லிட கையில் தட்டுடன் மெல்லிய கொடி போல் நடந்து வந்தவளை கண் வெட்டாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். தட்டை ஆத்ரேயனிடம் நீட்டியவள் அவனின் கையை வைத்து அவனை அடையாளம் கண்டுக் கொண்டவள் மறந்தும் நிமிர்ந்து பார்க்கவில்லை.

அவள் நிமிராமல் இருப்பது மனதை உறுத்த வேண்டுமென்றே எடுக்க போன கிளாசை அவளை நோக்கி தெளித்து விட்டான்.

அது அவள் புடவையிலும் பட்டது. அவன் வேண்டுமென்று செய்ததை அறிந்தவள் அவனை நிமிர்ந்து முறைத்து பார்த்தாள். அவளின் பார்வைக்காக ஏங்கியவன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாது கண்களில் மட்டும் ஏக்கத்தை தேக்கி வைத்து அவளை நோக்கினான்.

உடனே அங்கிருந்த மாணவன், “வைஷு பார்த்து கொடுக்க மாட்டியா?” என்று அவளை திட்ட போக, அவனை பார்த்து ஆத்ரேயன் முறைத்ததில் அவன் குரல் தானாக அடங்கியது.

“சாரி  இது என் தப்புதான்” என்று ஆத்ரேயன் அவன் வாழ்க்கையில் முதல் முறை அவளிடம் மன்னிப்பு யாசித்தான். சுற்றி இருந்தவர்களுக்காக, “இட்ஸ் ஓகே” என்றவள் தட்டை எடுத்துக் கொண்டு விறு விறுவென சென்று விட்டாள். சென்றவள் மனதுக்குள், ‘அவன் மனம் போல் அவன் உடை’ என்று சொல்லிக் கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து  தட்டோடு வந்த சந்தியா ஆத்ரேயனுக்கு ட்ரிங்க் வழங்கிச் சென்றாள். சென்றவள் வைஷ்ணவியிடம்,

“வரமாட்டார் என்று  நினைச்சேன் வந்துட்டார்டி, தாடி எல்லாம் வளர்த்து செம ஹாண்ட்ஸம் ஆக இருக்கார்  சான்சே இல்ல…” என்று புகழ்ந்து தள்ளியவளிடம், “பாம்பு கூட அழகு தான்” என்று ஒற்றை சொல்லை உரைத்தவள் மன நிம்மதியை தேடி எதிலும் ஈடுபடாமல் தள்ளி போய் நின்றுக் கொண்டாள்.

நிகழ்ச்சி தொடங்கிய போது சந்தியா கூப்பிட்டும் முன்னே செல்லாமல் ஒரு ஓரமாக இருந்த மேசையில் அமர்ந்திருந்தாள். அவளை காணாமல் தேடிய ஆத்ரேயனின் காதல் கண்கள் அவளை கண்டதும் ஆசுவாசமடைந்தது.

அவளோ யாரையும் பார்க்காமல் மேடையை வெறித்து பார்த்தபடி இருந்தாள். இருவரும் அமர்ந்திருந்த தோரணையை பார்த்த ஆகாஷ், “என்னடா புருஷனுக்கும் பொண்டாட்டிக்குமிடையில ஏதும் சண்டையா?” என்று கேட்க  வெற்று பார்வை பார்த்தவன் சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்தான்.

“நீ சொல்ல மாட்ட… அந்த பொண்ணுக்கிட்டயே கேட்டுக்கிறேன்” என்று கூறியபடி எழுந்தவனை பரிதாபமாக பார்த்தவன், ‘உன் தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்?’ என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

தன்னை நோக்கி வந்த ஆகாஷை பார்த்த வைஷ்ணவி, ‘இந்த வில்லங்கம் நம்ம கிட்ட எதுக்கு வருது?’ என்று நினைத்துக் கொண்டாள். அவள் இருந்த மேசையில் உட்கார்ந்தவன், “எப்படிம்மா இருக்க?” என்று கேட்க. “நல்லாயிருக்கிறேன் அண்ணா” என்றவள் அவனை பார்க்காமல் தவிர்த்தாள். அவளின் ஒதுக்கத்தை அறிந்தவன், ‘இந்த பொண்ணுக்கு நம்ம மேல என்ன கோபமோ?’ என்று யோசித்து விட்டு, “உனக்கும் ஆத்ரேயனுக்கும் என்னம்மா பிரச்சனை?”  என்று நேரடியாக கேட்டான்.

ஆத்ரேயனை பற்றி பேசி தன் மன உறுதியை குலைக்க விரும்பாதவள், அவனை தவிர்ப்பதற்காக, “மைண்ட் யுவர் பிசினஸ்” என்று ஒன்றை வரியில் அவனை நிலை குலைய செய்தாள். அக்கறையாக வந்தவனின் மனம் கனத்து போனதில் தளர்ந்த நடையுடன் எழுந்துச் சென்றான். அவன் தளர்ந்த நடையை பார்த்து குற்ற உணர்வு மேலிட, ‘ஐ அம் ரியலி சாரி அண்ணா’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். ஆத்ரேயன் மேலுள்ள கோபத்தை அவனை பற்றி பேச வந்த அனைவரிடமும் காட்டினாள்.

தளர்ந்த நடையுடன் வந்த நண்பனை கவனித்தவன் ஏதோ தவறாக பட விசாரித்தான். ஆரம்பத்தில் கூற மறுத்தவன் நண்பனின் வற்புறுத்தலால் அனைத்தையும் உளறிக் கொட்டினான். நண்பன் தன்னால் அவமானப்பட்டதில் கோபம் மேலிட ‘திமிர் புடிச்சவ’ என்று மனதுக்குள் திட்டியவன் அவளிடம் பேசி பயனில்லை என்று அறிந்தவன் நிதானமாக மைக்கை வாங்கியபடி மேடை ஏறினான்.  “குட் ஈவினிங் கேர்ள்ஸ்… நான் இன்று உங்களுக்கு ஒரு குட் நியூஸ் உம்  ஒரு பேட் நியூஸ் உம் சொல்ல போகிறேன்…. முதலில் பேட் நியூஸ்” என்றவன் வைஷ்ணவியை கண் விலகாமல் பார்த்தபடி, “எனக்கு கல்யாணம் ஆயிருச்சு” என்றான்.

அந்த செய்தியில் அனைவரும் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றனர். அங்கிருந்த சில பெண்கள் “நோ” என்று கத்தினார்கள். “கூல் டவுன் பேபிஸ்” என்றவனிடம், “யார் அந்த லக்கி கேர்ள்?” என்று கூட்டத்தில் இருந்த பெண் கேட்க, “நம்ம கல்லூரி தான் உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச பொண்ணுதான்”  என்றான்.

இவையனைத்தையும் கேட்ட வைஷ்ணவி திக் பிரம்மை பிடித்த போல இருந்தாள். மனதுக்குள், ‘வாய  வச்சிட்டு சும்மா இருக்க மாட்டியா? வைஷு… உன் வாயால அவனை சீண்டுறதே வேலையா போச்சு’ என்று மானசீகமாக  தலையில் அடித்துக் கொண்டாள்.

அவன் கூற்றில் எல்லாருக்கும் ஆவல் மேலிட அவனை சொல்லும்படி கெஞ்சினர். “வேற யாரும் இல்ல கைஸ் உங்க பேட்ச் மிஸ்.வைஷ்ணவி மலர்வேந்தன் தான் இப்போ Mrs.வைஷ்ணவி ஆத்ரேயன் ஆகி இருக்காங்க” என்றதும் கூட்டமே சலசலக்க தொடங்கியது.

“காம் டவுன் கைஸ், நல்ல விஷயம்  என்ன தெரியுமா? எனக்கு விவாகரத்து ஆக போகுது” என்றான். அந்த மண்டபமே நிசப்தமாகியது.  என்ன நடக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை. வைஷ்ணவிக்கோ அவன் தன் தலையில் இடை விடாது குண்டு போடுவதை போல இருந்தது.

“ஏன் எதுக்கு என்று உங்களுக்கு நிறைய கேள்வி இருக்கும்… அனைத்தையும் வைஷு கிட்ட கேளுங்க” என்று கூறியவன் அவளை பார்த்து ஏளனமாக சிரித்து விட்டு கீழே இறங்கினான். “ஐயோ… இவன் என்ன பண்ணி வச்சு இருக்கிறான். இத விட நான் ஆகாஷ் அண்ணாகிட்டயே பதில் சொல்லி இருக்கலாம். அவனை பற்றி தெரிஞ்சும் லூசு போல நடந்திருக்கியே” என்று தனக்கு இடை விடாமல் திட்டிக் கொண்டாள். அனைவரினதும் கண்களும் தன்னையே மேய்வது போல் இருக்க பின்னால் இருந்த புதருக்குள் புகுந்தவள் மற்றைய பக்கம் இருந்த ஆற்றோரத்தில் வந்து நின்றுக் கொண்டாள். விடுதிக்குச் செல்ல வேண்டுமானால் மேடையை தாண்டிச் செல்ல வேண்டும் அது இப்போது சாத்தியமில்லை என்றதாலேயே இந்த முடிவை எடுத்தாள்.

அவனின் செயலால் அதிர்ச்சியடைந்த ஆகாஷ், “என்னடா பண்ணி வச்சு இருக்க?” என்று கேட்க, “உன்ன அவமனப்படுத்துனா தானே நல்லா படட்டும்” என்றான். அவன் அப்படி கூறினாலும் அவன் மனதின் மூலையில் அவள் தன்னவள் என்று அனைவரிடமும் சொல்ல வேண்டுமென்ற ஆசை நிறைவேறிய திருப்தி தோன்றியது.

ஆகாஷோ அவன் நட்பை நினைத்து பெருமை படுவதா? இல்லை அவன் வாழ்க்கையை நினைத்து கவலை படுவதா? என்று தெரியாமல் திண்டாடினான். நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்துக் கொண்டிருந்த போது ஆத்ரேயன் வைஷ்ணவியையே தேடிக் கொண்டிருந்தான். அவன் கண்ணில் அவள் படவே இல்லை… அனைத்து நிகழ்ச்சியும் முடிந்து  அனைவரும் டின்னர் காக அழைக்கப்பட்டனர். அப்போதும் அவள் கண்ணில் படாமலிருக்க அவன் மனதில் பயம் உருவானது. எல்லாரையும் சாப்பிடச் சொல்லி விட்டு அவ்விடமெல்லாம் தேடினான். கடைசியில் புதரால் எட்டி பார்த்தவன் வைஷ்ணவி ஆற்றின் ஓரத்தில் காற்று வாங்கியபடி நிற்பதை கண்டான். சத்தமில்லாமல் அவளருகில் நெருங்கி  போனவன் அவள் காதுக்குள்  குனிந்து, “என்ன செய்கிறாய் இங்கே ?” என்று கேட்க கும்மிருட்டில் மிக அருகில் கேட்ட குரலால் பயந்தவள் துள்ளி பாய்ந்து திரும்ப சமநிலை தவறி ஆற்றுக்குள் விழ போனாள்.

உடனே சுதாரித்த ஆத்ரேயன் அவளிடையை சுற்றி பிடித்திருந்தான். பிடித்தவன் அவளை தன்னுடன் சேர்த்து தள்ளி இழுத்துச் சென்றான். நீண்ட நாள் காணாத ஏக்கம் அவனுள் பல விதமான உணர்ச்சிகளை தோற்றுவிக்க அவளை இறுக்கி அணைத்தவன், அவள் நெற்றியில் தன் முத்திரையை பதித்தான். அப்படியே அவன் அதரங்கள் முகத்தில் ஒவ்வொரு பாகத்தையும் சந்தித்து அவளது அதரங்களை நெருங்கி நின்றது.

அவ்வளவு நேரமும்  விறைப்பாக  இருந்தவள், அவன் இதழ் அருகில் வந்ததும், “ரேட்டை பேசிட்டு தொடருவோமா ?” என்று உணர்ச்சி துடைத்த குரலில் கேட்டாள்.

அவள் கேட்ட கேள்வியில் தீ சுட்டாற் போல அவளை விட்டு விலகி நின்றவன் கண்களில் கோபம் ருத்ரதாண்டவமாடியது. ‘என்ன வார்த்தை சொல்லி விட்டாள் ?’  என்று மனம் தாறுமாறாக அடித்துக் கொண்டது.

முதலிருந்த ஆத்ரேயனாக இருந்திருந்தால் சரி என்று சொல்லி இருப்பான். இப்போது அவன் மனம் முழுதும் அவளல்லவா நிறைந்திருக்கிறாள்.  அவளை கூர்மையாக பார்த்தவன், “ச்ச… என்ன பேச்சு பேசுற?” என்றான். அவளோ எந்த தாக்கமும் இல்லாமல், “நீங்க தானே சொல்லி இருக்கீங்க நான் உங்க மனைவியுமில்லை காதலியுமில்லை என்று… பிறகெப்படி நீங்க என்னோட தவறா நடந்துக் கொள்ள முடியும்? என்ன நீங்க தப்பான பெண்ணா நினச்சு தானே அப்படி நடக்குறீங்க … சோ நான் ரேட் பேசுனதுல தப்பில்ல என்று நினைக்கிறேன்” என்றாள். அவள் ஒவ்வொரு வார்த்தையும் அவனிதயத்தை நெருஞ்சி முள்ளால் குத்தியது. “தன் காதலை உணர்த்தாமல் அவளை அணைத்தது தப்பு” என்றுணர்ந்தவன், அவன் காதலை வெளிப்படுத்தும் பொருட்டு, “இங்கே பார் வைஷு…  நடந்ததெல்லாம் தயவு செய்து மறந்திரு. எனக்கு இப்போ நீ வேணும் ப்ளீஸ்” என்று தனது ஈகோவையும் காதலையும் அவள் காலடியில் சமர்ப்பித்தான்.

அவனை கூர்ந்து நோக்கியவள்,

“நான் ரெடி… எவ்வளவு தருவீங்க?” என்று கேட்டாள்…  அது அவன் கோபத்தை  பன்மடங்காக்கியது. “லூசா நீ? நான் என்ன பேசுறேன் நீ திரும்ப திரும்ப அதையே பேசிட்டு இருக்க?” என்று சினம் கலந்த குரலில் சீறினான். “நான் வேணும் என்று கேட்டீங்க” என்றாள். தான் கேட்டது உண்மையாகவே விளங்கவில்லையா அல்லது நடிக்கிறாளா என்று யோசித்தவன், “ஐயோ புரிஞ்சுக்கோடி… எனக்கு உன் காதல் வேணும்டி… உன் உடம்பல்ல…” என்றான் நிஜமாகவே கவலை தோய்ந்த ஏக்கமான குரலில்.

அவன் சொன்னதை கேட்டு பெருமூச்சு விட்டவள், “இங்கே பாருங்க ஆத்ரேயன்…  என் காதல் செத்து போச்சு… இந்த வார்த்தையை நான் உங்கள காதலிக்கும் போது சொல்லி இருந்தா நான் நம்பி இருப்பேன். செத்த பிணத்திடம் காதலை சொல்லாமல் என்ன விவாகரத்து பண்ணி விட்டு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணுங்க. தயவு செய்து என்ன நிம்மதியா இருக்க விடுங்க… காதல் என்று உங்களையும் ஏமாற்றி என்னையும் ஏமாற்ற வேண்டாம் ப்ளீஸ்.” என்று கை கூப்பி கெஞ்சினாள்.

“கடைசியா  என்ன சொல்ல வர்ற ?” என்று கேட்டவனிடம், “உங்கள சத்தியமா பிடிக்கல… ஐ ஹேட் யூ… ஒரு மிருகத்தோட வாழ வேண்டிய அவசியம் எனக்கில்லை” என்று உறுதியான குரலில் கூறினாள். அவளுக்கோ அவன் சொல்வது உண்மையா பொய்யா என்று ஒரு புறம் சந்தேகம் இருந்தாலும் அவன் மீதான பயமும்  வெறுப்பும் அவனை அவளிடமிருந்து தள்ளி வைத்தது.

ஆத்ரேயன் இவ்வளவு தூரம் இறங்கி பேசியதே பெரிய விஷயமாக இருந்தது. அவளது உதாசீனத்தால் அவன் களைந்து வைத்திருந்த ஈகோவை திரும்ப மாட்டிக் கொண்டான். “சரி தான் போடி… உன்கிட்ட போய் கெஞ்சினேன் பாரு என்ன செருப்பால அடிக்கணும் … நீ இல்லாட்டி இன்னொருத்தி…  உலகத்தில பொண்ணுங்களுக்கா பஞ்சம்? உன்ன விவாகரத்து பண்ணிட்டு உன் கண் முன்னாடியே இன்னொருத்தியை கட்டுறேன் பாரு, தயவு செஞ்சு என் கண் முன்னாடி வந்திராதே” என்று ஆதங்கத்தில் ஏதேதோ பேசியவன் கனத்த மனதுடன் இரவு சாப்பாடு சாப்பிடாமல் வெளியேறினான்.

அவள் கனமான மனதுடன் யாருக்கும் தெரியாமல் கண்ணீருடன் விடுதிக்குச் சென்றாள்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top