பேசும் போது வைஷ்ணவி கார்த்திக்கின் பேச்சை எடுத்தாள். கீர்த்தனாவோ, “அந்த தடியனை தானே நீ லவ் பண்ணுற” என்று கூறி கண் சிமிட்டி சிரித்தாள்.
“சும்மா இருடி” என்று அவள் முதுகில் அடி போட்டவள்,
“உனக்கு உண்மையாவே அவனை பிடிக்கலையா ??” என்று கேட்டாள்.
“பிடிக்கல என்று இல்ல ஆனா அவன் பண்ணின வேலைக்கு கொஞ்ச நாள் நல்லா அவஸ்த்தை படணும்… நீங்க உங்க நடிப்பை தொடருங்க” என்றாள் குறும்பாக… வைஷ்ணவியும் அவளுடன் சேர்ந்து சிரித்தாள்.
அனாமிகா ஆத்ரேயனை எப்படி காதலிக்க வைப்பது என்று யோசித்தே அலுவலகத்தில் காலம் கடத்தினாள். அவனுக்கு எப்படி நடந்தால் பிடிக்கும் என்றும் அவளுக்கு தெரியவில்லை. அவன் ஃபிளர்டிங் டைப் உம் இல்லை என்று யோசித்தவள் அதற்கான திட்டத்தை அமுல்படுத்த தொடங்கினாள்.ஆத்ரேயன் அறைக்குள் சென்றவள் சம்பந்தமில்லாமல் பேசி அவன் வேலைகளை குழப்பியபடி இருந்தாள். அவனுக்கு எரிச்சலாக இருந்தாலும் எதுவும் சொல்ல முடியாமல் கோப்புகளை புரட்டியபடி இருந்தான். அந்நேரம் பார்த்து அவனுக்கு சாதகமாக வைஷ்ணவியின் பேச்சு வந்தது. கோப்புகளை அப்படியே தூக்கி போட்டவன் சுவாரசியமாக கேட்க தொடங்கினான்.
“அந்த வைஷ்ணவியும் கார்த்திக்கும் லவ் ஆமே… எல்லாரும் பேசிக்கிறாங்க அவங்க ரெண்டு பேரும் ஒன்றாக இருந்து தான் சாப்பிடுறாங்களாம். கீர்த்தனாவையும் கழட்டி விட்டிட்டாங்களாம். அந்த பொண்ணுக்கு நீங்க தந்த பெர்போர்மன்ஸ் வார்னிங் லெட்டரும் கொடுத்தேன். இப்படி ஆபீஸ்ல கொஞ்சிக்கிட்டு இருந்தா எப்படி ஒழுங்கா வேல பார்க்க முடியும் ?? நீங்க கொஞ்சம் வார்ன் பண்ணி விடுங்க” என உண்மை பாதி பொய் பாதியென கூறி முடித்தாள்.
இது தான் சந்தர்ப்பம் என்று யோசித்தவன் வைஷ்ணவி கார்த்திக் இருவரையும் வர சொல்லி உத்தரவிட்டான். ‘என்ன குண்டை தூக்கி போட போகிறானோ?’ என்று பயத்துடனேயே வைஷ்ணவியும் கார்த்திக்கும் உள்ளே நுழைந்தனர்.
இருவரையும் பார்த்து கேலியாக புன்னகைத்தவன், “வெல் Mr. கார்த்திக் அண்ட் மிஸ் ஆர் மிஸ்ஸஸ்?” என்று அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டு கேட்க அவளும், “மிஸ். வைஷ்ணவி” என்றாள் அவன் கண்ணை பார்த்தபடியே… இரு கண்களையும் விரித்து உதட்டை பிதுக்கியவன், “ஓகே மிஸ்.வைஷ்ணவி நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுறதாக கேள்விப்பட்டேன். தட்ஸ் யுவர் பர்சனல்… அதில தலையிட எனக்கு எந்த அதிகாரமும் இல்ல. பட் உங்க காதலால் வேலைக்கு எந்த இடைஞ்சலும் வர கூடாது. அத சொல்ல தான் கூப்பிட்டேன். உங்க ரொமான்ஸ் எல்லாம் வெளிய வச்சுக்கோங்க” என்றவன் கார்த்திக்கை பார்த்து புன்னகைத்தபடி, “எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கீங்க???” என்று கேட்டான்.
கார்த்திக் திகைத்து போனான். ‘விளையாட்டு விபரீதம் ஆகி விட்டதே… இப்போ என்ன பண்றது?? பேசாம சார் கிட்ட உண்மையை சொல்ல வேண்டியது தான்’ என்று நினைத்தவன், “அப்படி இல்ல சார்…” என்று தொடங்க போனான். அந்நேரம் பார்த்து ஆத்ரேயன் பேச்சினால் வைஷ்ணவிக்கு கோபம் சிலிர்த்தெழ அவனை காயப்படுத்தும் நோக்கத்தோடு கார்த்திக்கை முந்திக் கொண்டு, “அது எங்க தனிப்பட்ட விஷயம் சார். அத உங்க கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லை… எங்க காதலால் உங்க ஆபீஸ் வேலை தடைபடாது. ஒன்லி ஆஃபீசியல் விஷயம் மட்டும் எங்க கிட்ட பேசலாம்… நீங்க
சி.இ. ஓ நாங்க எம்ப்லாயி… எங்க கல்யாணம் உங்களுக்கு தேவையில்லாத விஷயம்.” என்றாள் கடுமையான குரலில். இவையனைத்தையும் ஆத்ரேயன் மேசையில் கை குற்றி நாடியை நீவியபடி உணர்ச்சியற்ற முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான். இது ஆத்ரேயனுக்கு அதிர்ச்சி அளித்ததை விட கார்த்திக் ஸ்தம்பித்து நின்றான். ‘இவ என்ன இப்படி பேசுறா?’ என்று யோசித்தபடி நிக்க பக்கத்திலிருந்த அனாமிகா கோபத்துடன் விறு விறுவென அவளை நோக்கி வந்தவள், “ஹொவ் டேர் யூ?? இப்படி தான் மரியாதையில்லாம பேசுவியா ?? அவர் ஸ்டேட்டஸ் என்ன பவர் என்ன என்று உனக்கு தெரியுமா? நீ லோ கிளாஸ் தானே… உன் திமிருக்கு உன்ன வேலைய விட்டு தூக்கிருவேன்… மைண்ட் இட்” என்று சீறியவளை வைஷ்ணவி முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
நிலைமை மோசமாவதை அறிந்த ஆத்ரேயன் அனாமிகா தோள் மேல் கை போட்டு தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன், “ரிலாக்ஸ் அனாமிகா. எதுக்கு இப்படியான இடியட்ஸ் கிட்ட பேசணும்.? ஜஸ்ட் லீவ் இட்” என்றதும் அவன் அணைப்பில் கோபத்தை மறந்து உருகியவள் அவன் மார்பிலே பட்டும் படாமலும் சாய்ந்துக் கொண்டாள்.
அவர்களின் நெருக்கம் வைஷ்ணவிக்கு இனம் புரியாத பதட்டத்தை உருவாக்க அதை கட்டுப்படுத்தியவள் அவர்களை நேராக பார்த்து நின்றாள்.
இடையில் கலங்கி நின்ற கார்த்திக்கை பார்த்த ஆத்ரேயன், “ஹொவ் கேன் யூ மேரி திஸ் கைண்ட் ஆஃப் ஷிட் ?” என்றான். அதுக்கு கார்த்திக் வாய் திறந்து உண்மையை கூற வர மீண்டும் முந்திக் கொண்ட வைஷ்ணவி, “தட் இஸ் ஹிஸ் ப்ரோப்லேம் நோட் யூர்ஸ்” என்றபடி கார்த்திக்கின் கையை பிடித்தாள்.
‘ஐயோ இவளுக்கு என்னாச்சு?? முந்திரி கொட்டை போல எல்லாத்துக்கும் முந்திக் கொண்டு ஏதேதோ பேசுறா லூசா இவளுக்கு??? இல்ல உண்மையாவே என்னை லவ் பண்ணுறாளோ ??’ என்றெல்லாம் தாறுமாறாக கார்த்திக் யோசித்தான்.
கார்த்திக் அவளிடமிருந்து கையை விலக்க வெகுவாக போராடினான். அவன் கையை இன்னும் இறுக்கி பிடித்தவள், ‘இந்த தடியன் வேற எல்லாத்தையும் சொதப்ப போறான்.’ என்று மனதுக்குள் கார்த்திக்கை கடிந்தபடி நின்றாள்.
அதை கவனித்த ஆத்ரேயன், “என்னம்மா நீ தான் எல்லாம் பேசிட்டு இருக்க… உங்க மாப்பிள வாயே திறக்க மாட்டிங்குறார்… அவருக்கும் சேர்த்து நீயே பேசிருவியோ?” என்றான் நக்கலாக… இது தான் சந்தர்ப்பம் என்று, “சார்…” என்றபடி பேச தொடங்கிய கார்த்திக்கை இடை மறித்தவளாக, “ஆமா சார் அவர் நினைக்கிறதெல்லாம் நானே பேசிவிடுவேன். அவ்வளவு ஸ்ட்ரோங் லவ்.” என்றாள். ‘கிழிஞ்சிது போ… என்ன பேசவே விடமாட்டியா??? இவ நமக்கு எதோ பெரிசா ஆப்பு வைக்க பிளான் பண்ணி இருக்கா …’ என்று கார்த்திக் யோசிக்க, அவளை கூர்ந்து ஆத்ரேயன் பார்த்த, “ஓஹோ” என்றபடி அனாமிகா மீதான தன் அணைப்பை இறுக்கினான். அனாமிகாவுக்கோ ஒன்றும் ஏறவில்லை. ஆத்ரேயனை பார்வையாலே பருகிக் கொண்டிருந்தாள். அதனை ஆத்ரேயனும் அறிவான். அனாமிகா தோளிலிருந்த ஆத்ரேயன் கையை பார்த்து அனல் பார்வை வீசியவள் இல்லை என்று சொல்லுவான் என்ற நம்பிக்கையில், “வேற ஏதும் பேசணுமா சார்?” என்றாள். ஆத்ரேயனோ, “கண்டிப்பா” என்று சொல்ல அவளுக்கோ திண்டாட்டமாகி விட்டது. ‘என்ன பேச போறானோ?’ என்று பயந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஆனா உங்க கிட்ட இல்ல வைஷ்ணவி கார்த்திக் கிட்ட. சோ” என்றவன் தனது சுட்டுவிரலை வாய் மேல் வைத்து காட்டினான். அவன் பேசியதில் கார்த்திக் நிம்மதியடைய வைஷ்ணவி பதட்டமானாள்.
“கார்த்திக் உங்க காதல் ஐ மீன் கள்ள காதல் வைஷ்ணவி கணவருக்கு தெரியுமா?” என்று கேட்க அவன் தலை சுற்றி விழாத குறைதான்.
‘காதலே இல்ல இதுக்குள்ள கள்ள காதலா?’ என்று அதிர்ந்தவன் திரும்பி அதிர்ச்சியாக வைஷ்ணவியை பார்த்தான். ஆத்ரேயன் இப்படி கேட்பான் என்று எதிர்பார்க்காத அவளோ சங்கடப்பட்டுக் கொண்டு கார்த்திக்கை பார்த்தவள் ஆத்ரேயனிடம் திரும்பி, “என்னை பற்றி அவதூறு பரப்ப வேண்டாம் சார்” என்றபடி திரும்பியவள், ‘தடியன உளறாம கண்ட்ரோல் பண்ணுவேனா இல்ல அந்த நெட்டையனை உளறாம கண்ட்ரோல் பண்ணுவேனா?’ என்று யோசித்தவள், இதுக்கு மேல் அங்கே நின்றால் பிரச்சனை ஆகிவிடும் என்று பயந்து விறு விறுவென வெளியேறி விட்டாள்.
அவள் வேகமாக செல்வதை பார்த்தவன் வாய் விட்டு சிரித்தபடி “கார்த்திக் ஏதோ சொல்ல நிறைய நேரமா ட்ரை பண்ணுனீங்க?இப்போ சொல்லுங்க தடங்கல் போய்விட்டது” என்றான். மனதில் கொஞ்சம் நிம்மதி பரவ, “லவ் எல்லாம் இல்ல சார்.. சும்மா விளையாட்டுக்காக தான் ” என்றான். அதை கேட்ட ஆத்ரேயன் மனதில் ஒரு வித நிம்மதி பரவ,
“இப்படியெல்லாமா விளையாடுவாங்க?” என்று கேட்டான் கேலி குரலில்.
இதுக்கு மேல் மறைக்க முடியாது என்று நினைத்த கார்த்திக் உண்மையை உளறிவிட்டான். மனதில் புது வித சந்தோசம் பரவ புன்னகைத்தபடி, “சோ யூ லவ் கீர்த்தனா? ரைட் ?” என்றான். கார்த்திக்கும் ஆம் என்பது போல் தலையை ஆட்டினான். “கங்கிராட்ஸ் யூ கேன் கோ” என்றவனுக்கு அப்போது தான் அனாமிகாவை அணைத்துக் கொண்டு நிற்பது நினைவு வந்தது. “ஷீட்” என்று நெற்றியை நீவியபடி அனாமிகாவை பார்த்தான். அவள் இவ்வுலகில் இல்லை என்று அறிந்தவன் அவளை விலக்கி விட்டு தனது இருக்கையில் அமர்ந்த படி,
“அனாமிகா எனிதிங் எல்ஸ்” என்று கேட்க அவளும் ஆத்ரேயனை தாப பார்வை பார்த்துக்கொண்டு இல்லை என்று தலையை ஆட்டியபடி தனது அறைக்குள் சென்றாள்.
அவனுக்கு அந்த பார்வை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல் தனது பணியை தொடர்ந்தான். வெளியே வந்த கார்த்திக் வைஷ்ணவியை தேட அவளோ பயத்தில் கீர்த்தனாவிடம் தஞ்சம் புகுந்திருந்தாள்.
வைஷ்ணவியின் பதட்டத்தை பார்த்து கீர்த்தனா விசாரிக்க, “கார்த்திக் போய்ட்டானா பாரு?” என்று கீர்த்தனாவை பார்த்தபடி உட்கார்ந்தாள். எட்டி பார்த்தவள், “ஆமாம் போய்ட்டான்” என்றதும் தான் அவளுக்கு மூச்சு வந்தது.
“அப்பாடா” என்றவள் நடந்தது அனைத்தையும் கீர்த்தனாவிடம் கூறினாள். அவள் சொல்வதை கூர்ந்து கேட்டவள் கொடுப்புக்குள் சிரித்தபடி, “கிஸ் ஒன்னு ஜஸ்ட் மிஸ் ஆகிட்டு” என்றாள். அதை கேட்ட வைஷ்ணவி முறைத்தபடி இருந்தாள்.
அலுவலகம் முடிந்து வண்டியில் ஏறியதும் வைஷ்ணவியை பார்த்து முறைத்த கார்த்திக், “ஏன் இன்னைக்கு அப்படி நடந்துக்கிட்ட ? உனக்கு கல்யாணம் ஆயிருச்சா ?” என்று நேரடியாவே கேட்டுவிட்டான். சற்று மிரண்டவள் பின்பு சுதாரித்துக் கொண்டு, “கார்த்திக் அவன் எவ்வளவு பேசுறான் என்று பார்த்த தானே… அதுக்கு அப்படி தான் பதில் சொல்லணும். திமிர் புடிச்சவன். அவன் திமிர அடக்க வேணாமா?” என்று கேட்டவள் மேலும், “அவன் என்ன பத்தி தப்பா சொன்னா நீ நம்பிருவியா ? நான் உன் பிரென்ட் ஆ இல்லை அவன் உன் பிரென்ட் ஆ ?” என்று கேட்டு அவனின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
அவனுக்கு வைஷ்ணவியை நம்புவதா வேணாமா என்று குழப்பமாகவே இருக்க, ‘பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டான்.
ஆத்ரேயன் தன்னுடன் நடந்துக் கொண்டதை வைத்து அவனுக்கு தன் மீது காதல் என்று யூகித்த அனாமிகா, தந்தை தர்மேந்திரனிடம் சொல்லி கல்யாணம் பேச ஆயத்தமானாள். ஆத்ரேயனின் குணத்தை நன்கு அறிந்த அர்ஜுன், “எனக்கு அவன் இவளை காதலிப்பான் என்று நம்பிக்கையில்லை. எதுக்கும் பேசி பாருங்க” என்று தந்தையிடம் சொல்லிவிட்டு விலகிவிட்டான்.
தர்மேந்திரனும் சில நாட்கள் கழித்து லீவு நாளாக பார்த்து மனைவியுடன் ஆத்ரேயன் வீட்டை தட்டினார். லீவு என்பதால் நன்கு தூங்கியவன் அப்போது தான் எழுந்தான். காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறந்தவனுக்கு தர்மேந்திரன் வந்திருப்பதை புருவங்களை சுருக்கி பார்த்தவன், “வாங்க அங்கிள் உட்காருங்க” என்றபடி அவனும் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தான்.
சற்று தயங்கியபடி “மிஸ்டர். ஆத்ரேயன் என் பொண்ண நீங்க காதலிக்கிறீங்க என்று கேள்விப்பட்டேன். அதை பற்றி பேசிவிட்டு போகலாம் என்று தான் நானும் என் மனைவியும் வந்திருக்கிறோம்” என்றார். அவர் சொல்வதை கூர்ந்து கேட்டவன் தலையை கோதியபடி, “ஒரு திருத்தம் நான் உங்க பொண்ண காதலிக்கவில்லை ஆனா உங்க பொண்ணு என்ன காதலிக்கிறா என்று நினைக்கிறேன்” என்றவன் மேலே சொல்லும்படி சைகை காட்டினான்.
இதனை கேட்ட தர்மேந்திரனுக்கு ஒரே அவமானமாக போய் விட்டது. வெளியில் அதனை காட்டிக் கொள்ளாமல் சமாளித்தவர், “ஓகே என் பொண்ணு உங்களை காதலிக்கிறா. கல்யாணம் பற்றி பேசலாமா ?” என்று கேட்டார்.
அவர் சொல்வதை கேட்டு புன்னகைத்தவன், “என்ன அங்கிள், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே நான் உங்க பொண்ண காதலிக்கவில்லை என்று வெளிப்படையாக கூறினேன். பிறகெப்படி கல்யாணம் எல்லாம்? அந்த பேச்சை விடுங்க… வீட்டுக்கு வந்திருக்கீங்க ஏதும் சாப்பிடுறீங்களா?” என்று புருவத்தை உயர்த்தி கேட்டான். ஒரு சின்ன பையன் முன்னால் கூனி குறுகி நிற்பது அவமானமா இருக்க பல்லை கடித்து பொறுத்துக் கொண்டவர், “இல்லை தம்பி வேணாம்” என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார்.
வீட்டுக்கு வந்ததும், “என்னப்பா ஆச்சு?” என்றபடி ஓடி வந்த அனாமிகாவை பரிதாபப்பட்டு நோக்கியவாறு, “அவர் உன்னை காதலிக்கவில்லையாம்” என்று கவலை தோய்ந்த முகத்துடன் கூறினார்.
அதனை கேட்டு அதிர்ச்சியடைந்தவள், “உண்மையாவா அப்பா? அவர் பொய் சொல்கிறார். எனக்கு நல்லா தெரியும் அவர் என்னை காதலிக்கிறார்.” என்று அழுதபடி புலம்ப தொடங்கினாள். மகளின் நிலையை பார்த்து அவரால் கண்ணீர் விட மட்டுமே முடிந்தது. அங்கு வந்த அர்ஜுன், “நான் சொல்லி நீங்க கேட்கவில்லை. இப்போ நல்லா அனுபவிங்க.” என்று திட்டிவிட்டு தனது வேலையை பார்க்க தொடங்கினான்.
பொறுமை இழந்து விறு விறுவென ஆத்ரேயன் வீட்டுக்கு தனியாகச் சென்றவள் பலம் கொண்டு கதவை தட்டினாள். அப்போது தான் குளித்து விட்டு காற்சட்டையுடன் வந்தவன் கதவு தட்டும் சத்தம் கேட்டு டிஷர்ட் போடாமல் அவசரமாக கதவை திறந்தான். ஏற்கனவே அவன் மீது மயங்கி இருப்பவள் அவனின் முறுக்கேறிய உடற்கட்டை பார்த்து பைத்தியமாகி போனாள். ஒரு கணம் எழுந்த உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு அவனை கண்ணீருடன் நோக்கினாள். அவள் தட்டியதில் அந்த தளத்திலிருந்த அனைவரும் வெளியே வந்து பார்த்தனர், வைஷ்ணவி உட்பட.
அனைவரும் நோக்குவதை உணர்ந்தவன், “இவ வேற நேரம் காலம் தெரியாம ” என்று முணு முணுத்த படி, “இங்கேயே நில்லுங்க வர்றேன்” என்றபடி டிஷர்ட் ஐ போட்டுக் கொண்டு வந்தான். அவனுக்கு தெரியும் அவளை தனியாக உள்ளே அழைத்துச் சென்றால் நிலைமை விபரீதமாகி தன்னை பற்றி அவதூறு வரும் என்று.அதனாலேயே கவனமாக இருந்தான். வெளியில் தன்னை நிற்க வைத்தது அவமானத்தை அதிகரிக்க அவளின் கோபம் பல்கி பெருக தொடங்கியது.
வந்தவன், “கீழே வாங்க” என்றபடி முன்னிருந்த பூங்காவுக்கு அழைத்துச் சென்றான். அவனுக்கு தான் தன் பின்னால் சுற்றிய நிறைய பெண்களை மனம் கோணாமல் சமாளித்து பழக்கமாச்சே. அவனுக்கு அப்போது தெரியவில்லை அனாமிகா அவர்களை எல்லாம் விட வித்தியாசமானவள் என்று. அங்கிருந்த கதிரையில் அமர்ந்ததும், “இப்போ சொல்லுங்க” என்று கேட்டவனிடம், “நீங்க ஏன் என்னை காதலிக்கவில்லை என்று பொய் சொன்னீங்க?” என்று கேட்டாள் . “அது பொய் இல்லையே உண்மை தானே.” என்றவன், பெருமூச்சை எடுத்து விட்டவன், “இங்கே பாருங்க அனாமிகா… நீங்க சாதிக்க நிறைய இருக்கு. இப்படி காதல் என்று சுத்துறத விட்டிட்டு உங்க வாழ்க்கைல நல்லா முன்னேறணும். என்னை விட எல்லாத்திலயும் சிறந்த கணவன் கிடைப்பார்” என தனது போதனையை தொடங்கினான்.
தந்தை அண்ணன் சொல்லியே கேட்காதவளுக்கு அவனின் போதனை எரிச்சலை கொடுத்தது. கோபப்பட்டால் காரியம் கெட்டுவிடும் என்று யோசித்தவள் அவன் சொல்லுவதை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தாள்.
எல்லாம் முடிய, “நீங்க காதலிக்கவில்லை என்றால் எதுக்கு அன்று என்னை அணைத்தீர்கள்?” என்று கேட்டாள். ‘அணைத்தேனா எப்போது?’ என்று யோசித்தவன், உடனே நினைவு வர, “ஒரு பிரென்ட் ஆக தான் உங்க கூட பழகினேன்” என்றவனுக்கு தெரியும் ஏற்கனவே தன் மீது மயக்கத்தில் இருக்கும் பெண்ணோடு அன்று நடந்துக் கொண்டது சற்று அதிகப்படி தான் என்று. மேலும் பேச வந்தவளை கை நீட்டி தடுத்தவன், “எனக்கு நிறைய வேலை இருக்கு அனாமிகா… என் மனசில இருக்கிறத சொல்லிட்டேன்… நீங்க போகலாம்” என்றவன் திரும்பி பார்க்காமல் தனது வீட்டுக்கு நடந்தான்.
‘உங்களை அடையாம விடமாட்டேன்’ என்று மனதில் கருவியவளின் காதல் வெறியாக மாறி இருந்தது. வைஷ்ணவி சமைத்துக் கொண்டிருந்தாலும் என்ன நடந்திருக்கும் என்ற எண்ணம் மட்டுமே அவளுக்கு மேலோங்கி இருந்தது.
கஷ்டப்பட்டு அவர்களின் நினைவை ஒதுக்கியவள் வேலையில் கவனம் செலுத்தலானாள். அடுத்த நாள் ஆபீஸ் மீட்டிங்க்கு மிக கவர்ச்சியாக உடை அணிந்து வந்த அனாமிகாவை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். அளவுக்கதிகமான உதட்டு சாயம் மிக உயர்ந்த ஹீல் என வித்தியாசமாக வந்திருந்தாள். “ஆ” வென வாய்பிளந்து அனாமிகாவை பார்த்த கார்த்திகை கண்டு கடுப்பாகிய அவனருகில் இருந்த கீர்த்தனா, “போதும்… வழியுது” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில். நிறைய நாட்களுக்கு பின் அவனுடன் இன்று தான் பேசி இருக்கிறாள். அவள் பேசியது அவனுக்கு சுவாரசியத்தை கூட்ட சாரி கட்டி இழுத்து போர்த்தி இருந்த கீர்த்தனாவை திரும்பி உச்சி முதல் பாதம் வரை பார்த்தவன் உதட்டை பிதுக்கி தலையை ஆட்டியபடி அனாமிகாவை பார்த்து மீண்டும் ஜொள்ளு விட தொடங்கினான்.
அவனது பார்வையில் கோபமடைந்தவள் யாருக்கும் தெரியாதவாறு கையை கீழே கொண்டு போய் அவன் கையில் வலிக்குமாறு கிள்ளி விட்டாள். மீட்டிங் இல் கத்த முடியாமல் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டிருந்த அவளை பார்த்து முறைத்தபடி திரும்பி கொண்டான் கார்த்திக்.
இவையனைத்தையும் பார்த்த வைஷ்ணவியோ, “க்கும்… க்கும்…” என்று கூறியவள் கீர்த்தனாவை பார்த்து கண்ணடித்து சிரித்தாள். ஆத்ரேயன் வர தாமதமானதால் தான் இவ்வளவும் நடந்துக் கொண்டிருந்தது.
வெண்ணிற முழுக்கை ஷர்ட் அணிந்து அதை முழங்கை வரை மடித்து விட்டிருந்த படி வந்தான் ஆத்ரேயன். மற்றைய கம்பனிக்குச் சென்று வந்ததால் சற்று தாமதமாக வந்தவன் அனாமிகாவின் உடையும் மேக்கப் உம் அருவருப்பை அளிக்க அதை முகத்தில் காட்டாமல், “குட் மார்னிங் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன், சாரி போர் தி டிலே” என கம்பீரமாக கூட்டத்தை தொடங்கினான். அவன் கம்பீரமும் குரலும் எதிரிகளை அடக்கி விடும் வலிமை உள்ளது.
அதில் மயங்கி எல்லா பெண்களும் அவன் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தனர் வைஷ்ணவி உட்பட… வைஷ்ணவியின் பார்வை அவன் மீதிருந்தாலும் அவள் யோசனை முழுதும் அனாமிகா பற்றியே இருந்தது. புவர் பெர்போர்மன்ஸ் வார்னிங் பெற்றவர்களிடம் விளக்கம் கேட்க தொடங்கினான்.
“நெஸ்ட் வைஷ்ணவி” என்று அவன் அழைத்தும் அவள் தன்னிலை அடையாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். புருவத்தை சுருக்கி யோசித்தவன் அவளருகில் வந்தவன் சொடக்கிட திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்து, “என்ன சார்?” என்றாள். எல்லோரும் அவளையே பார்க்க தர்மசங்கடப்பட்டு நெளிந்தவளிடம், “நீங்க உங்க புவர் பெர்போர்மன்ஸ் க்கு ரீசன் சொல்லவே தேவையில்லை. பிராக்ட்டிகல் ஆக செய்தே காட்டிட்டீங்க” என்று நக்கலாக சிரித்தபடி கூறினான். அவன் சிரிக்க அனைவரும் அவனுடன் சேர்ந்து சிரித்தனர். ‘என் மானத்தை வாங்குறானே அவன் ஏதோ பெரிய ஜோக் சொன்ன போல இவங்களுக்கு சிரிப்பு வேற’ என்று மனதுக்குள் திட்டியபடி உணர்ச்சி துடைத்த முகத்துடன் உட்கார்ந்திருந்தாள்.
மீட்டிங் முடிந்ததும் எழும்பி வெளியேற போன ஆத்ரேயனின் கையை பிடித்த அனாமிகா, “உங்க கூட பேசணும்” என்றாள். அவளை பார்த்தவன் சலித்தபடி மீண்டும் உட்கார்ந்தான். இதை கவனித்த வைஷ்ணவியின் இதயம் தாறு மாறாக துடிக்க தொடங்கியது. அதை கட்டு படுத்துவதற்காக அவசரப்பட்டு முதலாவதாக வெளியேறினாள்.
அனைவரும் சென்றதும், “உங்களுக்கு என்னை உண்மையாவே பிடிக்கலையா?” என்று ஆத்ரேயனை பார்த்து கண் சிமிட்டி கேட்டாள்.அவளின் ஏக்கம் கலந்த குரல் கோபத்தை கிளற அதை கட்டுப்படுத்தியபடி எழுந்தவன், “நான் உங்க கிட்ட சொல்லிட்டேன். அப்போ சொன்னது தான் இப்போ சொல்லுறேன். எனக்கு உங்களை கல்யாணம் பண்ண இஷ்டமில்லை” என்றான்.
“ஏன் இஷ்டமில்லை. யாரையாச்சும் காதலிக்கிறீங்களா?” என்று கேட்க அவனுக்கு வைஷ்ணவி முகம் கண் முன்னே வந்து போனது. இல்லை என்று தலையாட்டியவன், “எனக்கு கல்யாணத்துல இன்ட்ரெஸ்ட் இல்லை.” என்று சொல்லியபடி மேசையில் சாய்ந்து கைகட்டி அவளை பார்த்தபடி நின்றான். அவன் நின்ற தோரணை அவன் மீதான மயக்கத்தை கூட்ட தன்னிலை மறந்தவள் அவனருகில் நெருங்கி அவன் தோளை பற்றி எம்பியவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். அதிர்ச்சியடைந்து கன்னத்தை துடைத்தவன் “ஏய்” என்று அவளை திட்ட போகும் போது வாசலை பார்த்தவனுக்கு மயக்கம் வராத குறைதான்.
அதிர்ச்சியடைந்த படி வைஷ்ணவி அங்கு நின்றுக் கொண்டிருந்தாள். அவளின் வருகை இருவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. வைஷ்ணவியை கூர்ந்து நோக்கியவனிடம், “போன் சார்” என்றபடி அவசரத்தில் விட்டுச் சென்ற தொலைபேசியை எடுத்தபடி தலையை குனிந்தவாறு வெளியேறினாள். எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவளால் தன் கண்ணீரை நிறுத்த முடியவில்லை. வெளியே வந்தவள் கீழே செல்ல மனமில்லாமல் அங்கிருந்த பால்கனியில் வந்து நின்றாள்.
“ஷீட்” என்று நெற்றியை நீவியவன், “பீஹெவ் யுவர் செல்ப்” என்றபடி வாசலை நோக்கி நடக்க தொடங்க அவன் மிக கடினமாக நடந்துக் கொள்ளாதது அனாமிகாவுக்கு தைரியத்தை வரவழைக்க அவன் முன்னே ஓடிச் சென்று அவனை மறித்தவள் அவன் முகத்தை பற்றி எம்பி அவனுதட்டில் முத்தமிடச் சென்றாள். அதுவரை தன்னை கட்டுப்படுத்தி இருந்தவனுக்கு மேலும் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் போக அவள் உதட்டில் கை வைத்து தள்ளியவன் தன் கோபம் முழுவதையும் சேர்த்து அவள் கன்னத்தில் அறைந்திருந்தான். கண்களில் கோபம் கொப்பளிக்க நின்ற அவன் அனாமிகாவுக்கு புதியவன். மேலும் பேசாமல் சுண்டு விரலை காட்டி எச்சரித்தவன் விறு விறு வென வெளியேறினான்.
அவன் அறைந்து உதாசீனப்படுத்தியதில் சிறிது நேரம் அழுதவள் தானாக சமாதானமானாள். அவள் காதலித்து ஒன்றாக வாழ்ந்து நிறைய பேரை ஏமாற்றி இருக்கிறாள்.ஆனால் அவளை முதல் முறை வேணாம் என்ற ஆண்மகன் ஆத்ரேயன் தான். அவள் அழுதது ஏமாற்றத்தினால் ஒழிய காதலினால் இல்லை. அவள் நிறைய பேரை காதலித்தாலும் கல்யாணம் பண்ண ஆசைப்பட்டது இவனை தான்.
அதற்கு காரணம் அவன் தொழில் வெற்றியும் அளவுக்கதிகமான பணம் மற்றும் செல்வாக்கும், கம்பீரமான உடல்கட்டுடன் கூடிய பெண்களை அசரடிக்கும் அழகும். அவள் பார்த்த ஆண்களில் அனைத்து திறன்களும் ஒன்றாக பெற்றிருந்தது ஆத்ரேயன் தான். அதனாலேயே அவனை இழக்க விரும்பாதவள் அவனை அடைய அடுத்த திட்டத்தை யோசித்தபடி தனதறைக்குச் சென்றாள். கோபத்துடன் கீழே தனதறைக்குச் செல்ல விரும்பாதவன் பால்கனிக்கு மனதை சாந்தப்படுத்த வந்திருந்தான்.
வந்தவன் அப்போது தான் பார்த்தான் வெளியழகை ரசித்தபடி வைஷ்ணவி நின்றிருந்தாள். அவளருகில் வந்து நெருங்கி நின்றவனை கலங்கிய கண்களுடன் திரும்பி பார்த்தாள். அவள் மனம் முழுதும் வேதனை சூழ்ந்திருந்தது. அதை அறிந்துக் கொண்டவன் மனதிலும் அதே வேதனை இருந்தது.
சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப முயன்றவளை மறித்தபடி முன்னே வந்து நின்றவன் அவள் முகத்தை பற்றி கண்களினூடு தன் கண்களை காதலுடன் கலக்க விட்டான். தளம்பிய பாரமான மனதிலிருந்த இருவருக்கும் அந்த நொடி மனதுக்கு நிம்மதியை அளிக்க இருவரும் அதை கலைக்க விரும்பாமல் நின்றிருந்தனர்.