அத்தியாயம் 29

திருமணம் முடிந்து ஒரு வருடம் கழிந்து விட்டிருந்தது… முதல் திருமண நாளைக் கூட வெகு சிறப்பாக கொண்டாடி இருந்தனர் விக்ரமும் நறுமுகையும் …

 

ஒரு வருடம் பொறுத்திருந்த சுகன்யா அதன் பின் வாய் விட்டே கேட்டு விட்டிருந்தார் மகனிடம் …

 

அன்று காலையில் விக்ரம் உணவு மேசையில் அமர்ந்து உண்டு கொண்டிருக்க நறுமுகையோ சமையலறையில் இருந்தாள்.. தேசிங்கன் அன்று சீக்கிரம் கடைக்கு சென்று விட்டிருந்தார்.. 

 

சுகன்யாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஒரு மிடறு தண்ணீரைக் குடித்தவர் பிறகு உணவில் கவனம் பதித்தவாறு,

 

” கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆயிடுச்சு விக்ரம் …எப்போ நல்ல செய்தி சொல்ல போறீங்க..?”  என நேரடியாகவே கேட்டுவிட்டு இருந்தார்…

 

உணவை வாயில் அதக்கி இருந்த விக்ரம் அன்னையின் கேள்வியில் சட்டென மென்பதை நிற்பாட்டி விட்டு தாயை விழிகள் சுருக்கி பார்த்திட… சுகன்யா அசராது மகனைப் பார்த்தவர்,

 

” குழந்தையை தள்ளி கிள்ளி போட்டு இருக்கீங்களா என்ன..??”  என்றதும் தாயை நிதானமாக ஏறிட்டவன்,

 

” அப்படி எல்லாம் எதுவும் இல்லம்மா ..நீங்களா எதுவும் நினைச்சுக்காதீங்க ..” என பொறுமையாகவே எடுத்துரைத்தான்…

 

பெரு மூச்சு விட்ட சுகன்யாவும்,

 

” உனக்கு அப்புறம் கல்யாணம் ஆன உங்க அப்பாவோட பெரியப்பா பேரனுக்கு இப்ப குழந்தை பிறந்து பெயர் வைக்கற விழாக்கு  நம்மளை கூப்பிட்டு இருக்காங்க…” என்றதும் தாயை இப்போது வெளிப்படையாகவே அழுத்தமாய் பார்த்து வைத்த விக்ரம்,

 

” அவங்க குழந்தை பெத்துக்கிட்டாங்கறதுக்காக நாங்களும் பெத்துக்கணுமா.. நாங்க ரெண்டு பேரும் ஹெல்தியா தான் இருக்கோம்.. தள்ளி போடுற ஐடியா எல்லாம் எங்களுக்கு இல்லை ..” என உறுதியாகவே கூறினான்…

 

பொறுமை இழந்த சுகன்யாவோ,

 

” அப்புறம் ஏன் இன்னும் நிக்கல..?”  என்ற கேள்வியை முன் வைத்ததும் அதில் சிறு சலனம் விக்ரமின் மனதில் எழுந்து அடைந்தது …

 

 

“மாம்… இது என்ன கேள்வி நம்ம கையில எதுவும் இல்லை..”  என இப்போது பேச்சில் சிறு தடுமாற்றம் தென்பட்டது…

 

சுகன்யாவும் சலிப்பாக மகனைப் பார்த்தவர் ,

 

“ஒருமுறை வேணா டாக்டர்கிட்ட ரெண்டு பேரும் செக் பண்ணிட்டு வாங்களேன் ..”

 

“ம்மா எதுக்கும்மா அதெல்லாம்..? நார்மலா இருக்கிற உடம்பை மெடிசின்ஸ் போட்டு கெடுத்து விட்டுடுவாங்க ..” என விக்ரம் மறுத்து விட சுகன்யாவிற்கு அதற்கு மேல் அவனை வற்புறுத்திட மனம் வரவில்லை அமைதியாகிவிட்டார் .‌

அதன் பின் விக்ரமும் அப்பேச்சனை கருத்தில் கொள்ளாது விட்டு விட்டான்..

அப்படியானதொரு நாளில் தான் குடும்பத்தினர் நால்வருமாய் தேசிங்கனின் பெரியப்பா பேரனுக்கு குழந்தை பிறந்து உள்ளதால் பெயர் சூட்டு விழாவிற்கு சென்றிருந்தனர்…

 

அனைவரும் அவர்களை மரியாதையுடனே நடத்தினர்.. சுகன்யாவும் அங்கு இருந்தவர்களுடன் நல்லபடியாகவே பேசிக் கொண்டிருந்தார்..

விக்ரம் மற்றும் நறுமுகையிடம் கூட சொந்த பந்தங்கள் வந்து பேசினர்.. அப்போது வயதான பெண்மணி ஒருத்தர் ,

 

“என்ன விக்ரம் உனக்கு அப்புறம் கல்யாணம் பண்ணின உன் அண்ணனுக்கு

குழந்தை பிறந்து பெயரே வெச்சாச்சு.. நீங்க எப்போ நல்ல செய்தி சொல்ல போறீங்க..?”  என்றதும் சட்டென ஒரே ஒரு நொடி நறுமுகையின் முகம் வாடிவிட்டது …

 

தடுமாற்றத்துடன் தன்னவனை பார்த்திட அதே நிலை தான் விக்ரமிற்கும் ..இருவரும் ஒரு நொடியில் பார்வைகளை பரிமாறிக் கொண்டு சுதாரித்து விட… விக்ரம் தான்  சிரித்தவாறே,

 

“கூடிய சீக்கிரமே சொல்றோம் பாட்டி..”  என்று விட்டான்…

பலபேர் சுகன்யா மற்றும் தேசிங்கனிடம் கூட விக்ரமிற்க்கு இன்னும் குழந்தை உண்டாகவில்லையா என்று கேட்டு விட்டு இருந்தனர்..

ஏதேனும் விழாவிற்கு சென்றால் இது போல் ஒரு பேச்சுக்களை சந்திக்க தானே செய்ய வேண்டும்.. அதை தேசிங்கன் இயல்பாக எடுத்துக் கொண்டார்… ஆனால் சுகன்யாவிற்கு தான் மனம் பொறுக்கவில்லை… 

 

விழாவும் முடிந்து நால்வரும் காரில் வந்து கொண்டிருந்த சமயம் சுகன்யா தான்,

 

” எல்லாரும் உங்க மருமக மாசமா இருக்காளானு கேட்கிறாங்க.. என்ன பதில் சொல்றதுன்னு தெரியல..”  என்றதும் சுகன்யாவின் பேச்சில் திக்கென்று ஆனது நறுமுகைக்கு…

 

வண்டியை செலுத்திக் கொண்டிருந்த விக்ரம் ஏதோ பேச வாய் எடுக்க முன் தேசிங்கன்,

 

” இதுல அவங்க முடிவு எடுக்க என்னடி இருக்கு ..நம்ம பசங்களுக்கு எப்ப தோணுதோ அப்பதான் பெத்துக்க முடியும்.. மத்தவங்க கேக்குறதுக்காக பெத்துக்கணும்னா இது என்ன சொப்பு சாமா விளையாட்டா… விடுடீ…”  என அசில்ட்டாக கூறி விட்டார் …

 

தான் பதிலளிப்பதற்கு முன் தந்தையே தங்களுக்கு சாதகமாய் பேசிடவும் மனதார தந்தைக்கு  நன்றி தெரிவித்து விட்டிருந்தான் விக்ரம்…

 

ஆனால் நறுமுகைக்குத் தான் மனம் எதிலும் ஈடுபட முடியவில்லை…. உறவினர்கள் பல பேர் அவர்களுக்கு முகத்திற்கு நேராகவே கேட்டது அவளுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது…

இப்போது சுகன்யா வேறு இவ்வாறு கேட்கவும் இன்னும் சோர்ந்து போய் விட்டிருந்தாள்…

 

அறைக்கு  தளர்ந்து போய் மெத்தையில் அமர்ந்த மனையாளை கண்ட விக்ரம் அவள் தோளில் கரம் போட்டு,

 

“ப்ச்… என்னடி..?”

 

“ இல்ல நம்மளுக்கும் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆயிடுச்சு இன்னும் ஏன் நமக்கு குழந்தை தங்கலை…?”

 

“இது என்ன கேள்வி.. ?? ஒரு சில பேருக்கு சீக்கிரமா நிற்கும் ஒரு சில பேருக்கு கொஞ்சம் நாள் ஆகும்..  எல்லாம் நடக்கும் போது நடக்கும் ஃப்ரீயா விடு ..”

 

என்றதும் கணவனின் அன்பில் இதமாய் உணர்ந்தவள் அவனது தோள் சாய்ந்து கொண்டாள்… 

நாட்கள் சென்று இப்போது இரண்டு வருடம் ஆயிற்று ..

நறுமுகை இப்போது கடையில் அத்தனை பொறுப்பாய் செயல்பட துவங்கி இருந்தாள்…

 

அதனால் அவளுக்கு என்று ஒரு பொறுப்பையும் தந்து விட்டிருந்தார் தேசிங்கன்.. கூடவே அவளுக்கென்று சம்பளமும் ..

தேசிங்கன் பலமுறை அவளிடம் தெரிவித்து இருந்தார்,

 

” உனக்கு எப்போ காசு வேணும்னாலும் கேளு ..” என்று..

ஆனால் அவள் தான் நேரடியாக கேட்க தயக்கப்பட்டு கொண்டு எதுவும் கேட்டுக் கொள்வதில்லை..

 

அவளது தயக்கத்தை புரிந்து கொண்டவர் அவராகவே அவளுக்கென்று சம்பளம் என தந்துவிட அவளது முகம் மலர்வதை கண்டு கொண்டவருக்கு திருப்தியாக இருந்தது…

 

அதே போல தேசிங்கனுக்கு நறுமுகை அத்தனை உதவியாக இருந்தாள் எனலாம்…

சுகன்யா கூட ஒரு சில நேரங்களில் கால் வலிக்கிறது என்று எங்கும் வர மாட்டார்… அதனால் தேசிங்கன் மருமகளை அழைத்துக் கொண்டு தான் புதுப்புது டிசைன்களை எல்லாம் தேர்வு செய்ய சொல்லுவார் கடைக்கு…

 

அவளும் ஒவ்வொன்றையும் நுணுக்கமாக பார்த்து ஒவ்வொன்றும் கேட்டு அறிந்து தங்கள் கடைகளுக்கு என்று தேர்வு செய்வாள்..

 

அதனாலேயே தேசிங்கனுக்கு மருமகளை பிடித்து விட்டிருந்தது …மகன் தான் பொறுப்பேற்கவில்லை…

மருமகள் பொறுப்பை ஏற்று இருப்பதுடன் அதற்கு ஏற்றாற் போல் செயல்படுவது அவருக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது…

 

ஸ்டாக் ஒவ்வொன்றும் அவளுக்கு அத்துப்படி…உண்மையில் நறுமுகைக்கே தன்னை எண்ணி அத்தனை ஆச்சரியம்…

என்னத்தான் விக்ரமுடன் திருமணம் நடந்து இருந்தாலும் மனதின் ஓரம் ஒருவித தாழ்வு மனப்பான்மை அவளுக்கு எப்போதும் இருக்கும்…

விக்ரமின் அறிவுக்கும் திறமைக்கும் தான் கொஞ்சம் தான் தகுதி ஆனவள் என அவளாகவே  எண்ணி கொள்வாள்…

 

அப்படி இருக்கையில் இப்போது தன் மாமனார் தன் மேல் நம்பிக்கை வைத்து பொறுப்பை ஒப்படைத்தது மிகப்பெரும் ஆச்சரியத்தையும் தன்னம்பிக்கையையும் தந்து இருந்தது…

 

அப்படி இருக்கையில் சுகன்யா  அவ்வப்போது தன்னவரிடம் மகனுக்கு இன்னும் குழந்தை இல்லையே  என ஆதங்கப்படுவார்..

 

ஆனால் தேசிங்கன் அதெல்லாம் கண்டுகொள்ள மாட்டார் …இப்போது இருப்பவர்களுக்கு சற்று தாமதமாக தானே குழந்தை பேரு கிடைக்கிறது அதனால் தேவையில்லாமல் அவர்களை மன உளைச்சலில் ஆளாக்க வேண்டாம் என எண்ணியிருந்தார் தேசிங்கன்…

  அதனால் மனையாலின் பேச்சை அவர் கண்டு கொள்வதாய் இல்லை…

சுகன்யா முன்பெல்லாம் அவ்வப்போது குழந்தை பற்றிய பேச்சை எடுப்பவர் இப்போது நறுமுகையிடம் நேரடியாகவே கேட்க தொடங்கிவிட்டார் ,

 

“தள்ளி போற்ற பிளான்ல இருக்கிறீங்களா முகை..?”  எனக் கேட்டதும் மாமியாரின் கேள்வியில் திணறியவளும்,

 

” அப்படி எல்லாம் எதுவும் இல்லை அத்தை…” 

 

“இரண்டு பேரும் ஒருமுறை டாக்டர்கிட்ட போயிட்டு வாங்களேன்.. என்ன ஏதுனாவது தெரியும்ல..?”  என தன்மையாகவே சொன்னார்…

 

நறுமுகைக்கு செல்லலாமா வேண்டாமா என்கிற குழப்பம் ..!

 

அவளது குழப்பத்தை இன்னும் அதிகப்படுத்தும் விதமாய் அன்று அவளது அன்னை சுரதை அழைத்து இருந்தார்…

 

அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் சில பல நல விசாரிப்புகளுக்கு பின்னர் சுரதை தான் தயக்கமாக பேச்சினை எடுத்தார்,

 

” ஹாஸ்பிடல் செக்கப் ஏதாவது போனியாடா..?”  என கேட்டதும் அதில் அயர்ந்து  போனவள் கண்களை மூடி திறந்து,

“ப்ச்…ம்மா நீயுமா..?” 

 

“இல்லடா இரண்டு வருஷம் ஆயிடுச்சு.. டாக்டர்கிட்ட போய் என்ன ஏதுன்னு பார்க்கலாம்ல …”

“அம்மா நான் நல்லா தான் இருக்கேன்.. பீரியட்ஸ் கூட எனக்கு நார்மலா தான் வருது.. தள்ளி தள்ளிலாம் வந்தது இல்லை …”

 

“சரிடா நார்மலா தான் இருக்கு… இருந்தாலும் ஒருமுறை போய் பார்த்துட்டு தான் வாங்களேன்..”  என்றதும் நறுமுகைக்கு ஐயோடா என்றானது …

 

இரு வீட்டு பெண்மணிகளின்  தொந்தரவு தாங்காது நறுமுகை விடாப்பிடியாய் நின்று விக்ரமை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள்…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top