அத்தியாயம் 32

 

 

 

 

 

 

 

 

 

 

வலி என் உச்சத்தில் இருந்தால் நறுமுகையே

 

 

தினமும் மாலை ஆறு மணி ஆனால் அவள் உடல் நடுங்கத் தொடங்கும்…. அடிவயிற்றின் தொப்புளைச் சுற்றி ஊசி போட இடமே இல்லாத அளவிற்கு நீல நிறத் தழும்புகள் ஆங்காங்கே இடம்பெற்று இருந்தன .…

 

இன்று விக்ரம் ஊசியைச் செலுத்தும் போது, அந்த மருந்தின் எரிச்சல் நரம்புக்குள் தீயைப் பாய்ச்சுவது போல் இருக்க, அவன் சட்டையை இறுகப் பிடித்துக்கொண்டு பற்களைக் கடித்து தன் வலியை பொறுத்துக் கொண்ட நறுமுகை கண்ணீர் குளம் கட்டிய விழிகளால் தன்னவனை ஏறிட்டு பார்த்து,

 

‘இன்னும் எத்தனை ஊசிங்க?’ என கண்களாலேயே  அவள் கேட்கும் போது, பதில் சொல்ல முடியாமல் அவன் கண்கள் கலங்குவது அந்த அறையையே கனக்கச் செய்தது…

 

நறுமுகை தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தன் வயிற்றிலேயே ஊசி போட்டுக்கொள்ள வேண்டும்…. ஆரம்பத்தில் பயப்படுபவள், போகப்போக அதுவே பழகிப்போனது…ஆனால் வலி மட்டும் உயிர் போனது ஒவ்வொரு முறை ஊசியை போடும் போது….. 

 

இப்போது எல்லாம் அவள் வெளியே எங்கேயும் செல்வது இல்லை…வலி அவளை அறைக்குள்ளேயே முடக்கி விட்டிருந்தது…

 

ஆடை அணியும் போது அவளது வயிறு ஊசி போட்ட தழும்புகளாலும், நீல நிற வீக்கங்களாலும் நிறைந்திருப்பதை அவள் கண்ணாடியில் பார்க்கும் போது, 

“ஒரு உயிருக்காக என் உடலையே போர்க்களமாக்கிக் கொண்டிருக்கிறேன்” என அவள் நினைத்து கொள்வாள்…

அது தான் உண்மையும் கூட…

IVF-ன் முதல் படி முட்டைகளை வளர்ப்பதற்கான ஹார்மோன் ஊசிகள்….அதை தாண்டி வருவதற்கே தனி மன தைரியம் வேண்டும்.…

 

எளிதாக சொல்லி விடலாம் ஐவிஎஃப் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டியது தானே என்று…ஆனால் அதை அனுபவிப்பவர்களுக்கு தான் வலி தெரியும்…

 

 

 

பத்து நாட்களுக்கு பின்னர் முட்டை சேகரிப்பதற்கான நாளை குறித்து கொடுத்து இருந்தார் மருத்துவர்….அந்நாளில் அவளுக்கு

பயமும் எதிர்பார்ப்பும் நிறைந்து இருந்தது…

 

இரு வீட்டு பெரியவர்களும் கடவுள் மேல் தான் பாரத்தை போட்டு இருந்தனர்…

 

 

அவளை அழைத்து கொண்டு ஒரு அறைக்கு சென்று படுக்க வைத்தனர்…உள்ளே திக் திக் திக் என ஒவ்வொரு  நிமிடங்களும் கடந்தன..

 

சிறிது நேரத்தில் மருத்துவர் வந்து நறுமுகையை பார்த்து மென்மையாக புன்னகைத்தவர் பின் அவளது வயிற்றில் ஜெல் தடவி ஸ்கேன் செய்யலானார்… 

 

டாக்டர் ஸ்கேன் திரையைப் பார்த்துவிட்டு நறுமுகையை பார்க்க…ஆவலுடன் மருத்துவரை கண்டிருந்தவள் அவரின் முகம் மாறுவதை கண்டு விட்டு கலக்கமாக,

 

“ என்னாச்சு டாக்டர்…??”

 

பெருமூச்சுடன் அவளை பார்த்து,

 

“சாரி… நாம எதிர்பார்த்த அளவுக்கு முட்டைகள் வளரலை’ என்று சொன்ன அந்த நொடி, அவளுக்குப் பூமி நழுவுவது போல் இருந்தது….. 

 

கடந்த பத்து நாட்களாகத் தன் வயிற்றில் இறங்கிய ஒவ்வொரு ஊசியும், அந்த மருந்தின் எரிச்சலும் அவள் கண்களுக்கு முன்னால் வந்து போனது.

 

கண்ணீர் சட்டென வழிந்திட,

 

” இன்னும் வளரலையா டாக்டர்? நான் கரெக்டா தானே மருந்து எடுத்துக்கிட்டேன்?” என்று அவள் கேட்கும் போது, அவளது குரல் நடுக்கத்தில் ஆயிரம் ஏமாற்றங்கள் ஒளிந்திருந்தது….. 

மருத்துவரால் என்ன பதில் அளிக்க முடியும்..

 

ஒரு கரத்தால் தன் வயிற்றைத் தடவிப்பார்த்து,

 

‘நீயும் உன் அம்மா மாதிரி பாதியா போயிட்டியா?’ என்று அவள் மனதுக்குள் கேட்கும் போது, அந்த மருத்துவமனையின் ஏசி குளிரிலும் அவளுக்கு வியர்த்து கொட்டியது..

 

ஏமாற்றம்.…

 

அவளால் இந்த நொடியை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.…

 

‘முட்டைகள் போதிய அளவில் வளரவில்லை’ என்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவள் காதில் ரீங்காரமிட்டது…

 

மருத்துவர் சொன்ன அந்தத் தருணம், பெண்ணவளுக்கு இடி விழுந்தது போல ஆனது…

 

ஏனெனில், அவள் அத்தனை நாட்கள் அனுபவித்த உடல் வலியும், மன அழுத்தமும் வீணாகிவிட்டதோ என்ற அச்சம் அவளைச் சூழ்ந்து கொண்டு ஒருவித அழுத்தத்தை உண்டாக்கியது…

 

அதையும் மீறி அவளது மனம் மீண்டும் ஊசியை போட வேண்டுமா? என்கிற மிகப்பெரும் கேள்வி அவள் முன்பு எழுந்து பெண்ணவளை அச்சுறுத்தியது…

 

மருத்துவர் விக்ரமை அழைத்து வர சொன்னார்…செவிலியர் சென்று அவனை அழைத்து வந்தார்…

 

என்னவோ ஏதோ என்று பதற்றத்தில் வந்த விக்ரம் அங்கு மெத்தையில் கண்ணீருடன் படுத்து இருந்தவளை கண்டதும் அவனது உயிர் நாடியை ஆட்டம் கண்டது…

 

“நறு…”என அவள் அருகே சென்று கையை நீட்டிட….அவனது கரத்தை பிடித்துக் கொண்டு இன்னும் கண்ணீர் வடித்தவளை கண்டு அவனது இதயம் அதிவேகமாக துடித்தது…

 

மருத்துவர் இருவரையும் பார்த்து விட்டு,

 

“மிஸ்டர் விக்ரம்…முட்டைங்க இன்னும் வளரனும்….க்ரோத்(growth ) பத்தலை…”என்றதும் விக்ரம் அயர்ந்து போய் மருத்துவரை பார்த்து,

 

“அப்போ திரும்பவும் முதல்ல இருந்து பிராசஸ் ஸ்டார்ட் பண்ணனுமா..??” என கேட்கும் போதே அவனுக்கு மூச்சு வாங்கியது பதற்றத்தில்…

 

பின்னே இந்த பத்து நாட்களாய் மனையாள் பட்ட வலியையும் வேதனையையும் உடன் இருந்து பார்த்தவன் ஆயிற்றே..‌.இப்போது முட்டைகள்  வளரவில்லை என்று மீண்டும் முதலில் இருந்து ஊசி போட சொன்னால் அவள் எப்படி தாங்கிடுவாள்…

அவனது வேதனையை கண்டு மென்மையாய் அவனை பார்த்த மருத்துவர் ,

 

“முட்டைகள் ஓரளவிற்கு வளர்ந்திருக்கு…, ஆனா இன்னும் கொஞ்சம் வளர்ச்சி தேவைப்படுது அதனால ஹார்மோன் ஊசிகளோட அளவை (Dosage) அதிகரிச்சு இன்னும் சில நாட்களுக்கு மட்டும் ஊசிகளைப் போட்டுக்கனும்…தென் ஸ்கேன்  எடுத்து பார்த்துட்டு தான் முட்டைகளை எடுக்க முடியும்…” என கூறி முடித்ததும் நறு மற்றும் விக்ரம் இருவருக்கும் மனதின் ஓரம் நிம்மதி படர்ந்தது…

 

அதன்பின் அவர்கள் காத்திருக்க அவர்களிடம் வந்த செவிலியர்,

 

“‘முட்டைங்க வளர இன்னும் மூனு நாளைக்கு கூடுதல் டோஸ் ஊசி போடணும் சார்’ என்று  சொல்லி விட்டு சென்ற போது, நறுமுகைக்கு  அழுகை முட்டிக்கொண்டு வந்தது.…

 

வீட்டிற்கு வந்து விஷயத்தை சொன்னதும் சுகன்யா தனது அதிருப்தியை முகத்திலேயே காட்டி விட்டு சென்று விட்டார்…

 

நறுமுகைக்கு சுருக்கென்று ஆனது…விக்ரம் பெருமூச்சுடன் மனைவியை பார்த்தவன் அவளது தோளில் கரம் போட்டு தங்களது அறைக்கு அழைத்து சென்றான்…

 

கண்ணீர் குளம் கட்டிய விழிகளை பார்த்தவன் அவளை தன் நெஞ்சோடு சேர்த்தணைத்திட…அதற்காகவே காத்திருந்தது போல அவளது கண்ணீர் உடைப்பெடுத்தது…

 

“நம்பிக்கையை விட்டுடாத நறு..இன்னும் மூனு நாள் மட்டும் தான்…கண்டிப்பா நமக்கு பேபி வரும்…அழாதடீ…”என கூறும் போதே அவனது குரல் உடைந்து வெளி வந்தது.…

அன்று மாலை தன் ஆடையை தளர்த்தி விட்டு ஏற்கனவே ஊசி போட்ட தழும்புகளை பார்த்தாள்…

 

நன்றாக கறுத்துப்போய், தொட்டால் கூட உயிர் போகிற வலி உண்டானது…

 

அந்நேரம் விக்ரம் அவளை பார்த்தவாறு  ஊசியைத் கையில் எடுக்கும் போது ,தன்னிச்சையாக நறுமுகையின் உடல் பயத்தில் நடுங்கியது…

 

தன்னவனை கண்ணீருடன் பார்த்து,

 

“வேண்டாம் விக்ரம்… என்னால முடியல… விட்டுடுங்க’ என  அவள் கதறியதும், மனதை கல்லாக்கி கொண்டு,

 

“இன்னும் கொஞ்சம் தான்… நறு பொறுத்துக்கோ” என  அவளை அணைத்துக்கொண்டு, நடுங்கும் கைகளுடன் மீண்டும் அதே புண்ணான இடத்தில் ஊசியைச் செலுத்தும் போது இருவருக்குமே வலித்தது…

 

அவள் வலியில் வாய்விட்டு அலறினாள்…ஆணவனோ சத்தமின்றி கண்ணீரை சிந்தினான்…

 

அவளது பாதி கர்ப்பப்பை அவளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி இருந்தது…முன்பு போல மாமியாரிடம் கூட அவளால் இயல்பாக பேசிட முடியவில்லை…

 

விஷயம் கேள்விப்பட்டு  பாவம் நறுமுகையின் பெற்றோரால் கண்ணீர் மட்டுமே விட முடிந்தது…

 

  இந்த மூன்று நாட்களும் அவளுக்கு மீண்டும்  உடல் வலியைத் தான் தந்தன…

 

மூன்று நாட்கள் கழித்து மீண்டும் ஸ்கேன் செய்து பார்த்திட முட்டைகளின் வளர்ச்சி போதிய அளவில் உள்ளது. மருத்துவர்  கூறியதும் தான் இருவருக்கும் உயிரே வந்தது…

 

முட்டை சேகரிப்பது என்பது  ஒரு சிறிய அறுவை சிகிச்சை போன்றது…. நறுமுகை ஆபரேஷன் தியேட்டருக்குள் செல்லும் போது அவளையே வலியுடன் பார்த்து இருந்த விக்ரமின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டவள்,

 

” கடவுள் என்னை கைவிடமாட்டார்ல விக்ரம்?” என வலியுடன்  அவள் கேட்கும் கேள்வி ஆணவனை உள்ளுக்குள் இதயத்தை யாரோ ஓங்கி குத்துவது போல் இருந்தது.…

 

உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளியே,

 

“கைவிட மாட்டார் நறு..தைரியமா போயிட்டு வா…” 

என தன்னவளுக்கு தைரியமூட்டியவன் மனதிற்குள் கோழையாகி தான் போனான்…

அவளுக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு முட்டைகளை சேகரித்துவிட்டிருந்தனர்…

 

 

மயக்கம் தெளிந்து மெல்ல விழிகளை திறந்து பார்த்தாள் நறுமுகை… அப்போது  அடிவயிற்றை யாரோ கத்தியால் கிழிப்பது போன்ற ஒரு குடைச்சல்.…

 

அவளால் நேராக நிமிர்ந்து கூட படுக்க முடியவில்லை…. பாதி கர்ப்பப்பை என்பதால் அந்தத் தசைநார்கள் இழுபடும் வலி இன்னும் அதிகம். 

 

“அம்மா…” என்று அவள் முனகும் போது, பக்கத்தில் இருந்த செவிலியர் தான்,

 

“தாங்கிக்கோங்கம்மா, ஒரு உயிருக்காகத் தானே”  என்று சொல்லும் போது, அந்த வலிக்கு நடுவிலும் ஒரு மெல்லிய நம்பிக்கை அவளைச் சூழ்ந்தது…

 

அதன்பின்னர் முட்டையை விக்ரமின் விந்தணுவுடன் இணைத்து வளரச்செய்ததும் கருவை நறுமுகையின் கருப்பைக்கு வெற்றிகரமாக மாற்றி இருந்தனர்…

 

கருவை உள்ளே செலுத்திய பிறகு, அந்தப் பாதி கர்ப்பப்பை அதை ஏற்றுக் கொள்ளுமா என்ற பயமே அவளுக்கு பெரிய வலியாக இருந்தது…

 

மறுநாளே வீட்டிற்கு அனுப்பி விட்டிருந்தனர்…

படுக்கையிலேயே கிடப்பது உடல் வலியை விட மன வலியை தான் அதிகம் தந்தது…

 

ஒரு சின்ன அசைவு கூட உள்ளே வளரும் அந்த உயிருக்கு ஆபத்தை தந்துவிடுமோ என்ற பயம் நறுமுகையை இயல்பாக இருக்க விடவில்லை…

 

சிறுநீர் கழிக்கப் போகும் போது கூட, ‘ரத்தத் திட்டுக்கள் ஏதும் தெரிகிறதா?’ என்று ஒவ்வொரு முறையும் அவள் கண்கள் தேடும் அந்தப் பதற்றம் இருக்கிறதே… அது மரண வலிக்குச் சமம். 

 

ஒவ்வொரு நிமிடமும்,

 

‘கடவுளே, என் உடம்புல பாதி கர்ப்பப்பை தான் இருக்கு, ஆனா என் ஆசை முழுசா இருக்கு… ஏமாத்திடாதே’ என்று அவள் உள்ளுக்குள் கதறுவதை வார்த்தைகளால் சொல்லிட முடியாது…

 

தன் மனையாளை குழந்தை போல பார்த்து கொண்டான் விக்ரம்…

 

கரு தங்குமா என்று தெரிய 15 நாட்கள் காத்திருக்க வேண்டும்.…

 

அந்த பதினைந்து நாட்களில்  அவள் சின்னத் தும்மல் போட்டால் கூட, 

 

“ஐயோ கரு கலைந்துவிடுமோ?” என்று பயந்து நடுங்கினாள்…

படுக்கையிலேயே கிடந்து சுவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பாள் நறுமுகை…

 

வாழ்க்கை அவளுக்கு இவ்வளவு விஷயங்களை காட்டிடும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை…

பதினைந்து நாட்கள் கழித்து மீண்டும் மருத்துவமனைக்கு சென்றனர் கணவன் மனைவி இருவரும்…

கரு பதிந்துள்ளதா என டெஸ்ட் செய்தனர்…இருவரது கரங்களும் ஒன்றோடொன்று இறுக்கமாய் கோர்த்து இருந்தது…

 

வேண்டாத தெய்வம் அல்ல…இருவரும் டெஸ்ட் பாஸிட்டிவ் வர வேண்டும் என கடவுளிடம் போராடிக் கொண்டிருந்தனர்…

அவர்களது போராட்டம் கடவுளின் கண்களுக்கு தெரியவில்லை போல

ரிப்போர்ட்டில் ‘நெகட்டிவ்’ என்று வந்ததும் விக்ரமும் நறுமுகையும் இடிந்து போய் விட்டனர்.…

 

அவளுக்கு உடல் வலி தெரியவில்லை. ஆனால், இத்தனை நாட்கள் தன் உடலைச் சிதைத்துக்கொண்ட அத்தனை ஊசிகளும், மருந்துகளும் வீணாகிவிட்டதே என்ற ஏமாற்றம் அவளை அப்படியே உறைய செய்தது.

 

பெண்ணவளது மனமோ,

 

‘என் உடம்பு ஒரு குழந்தையைத் தாங்கக் கூட தகுதி இல்லாததா?’ என்று அவள் தன் நடுங்கும் கரங்களால் வயிற்றை பிடித்துக்கொண்டு அழும் போது, அந்தப் பாதி கர்ப்பப்பை ஒரு குறையாகத் தெரியாமல் அவளது விதியாகத் தெரிந்தது…

 

தன்னவளை கண்ணீருடன் பார்த்த விக்ரமை தேம்பியவாறு நோக்கிய நறுமுகை,

 

“உலகத்துல எல்லாருக்கும் அது ஒரு உறுப்பு விக்ரம்…, ஆனா எனக்கு அது என் குழந்தையோட வீடு… அது ஏன் பாதியா இருக்கு?” என அவன் மார்பிலேயே சாய்ந்து கதறும் மனையாளை பாவம் அவனால் சமாதானம் செய்திட தான் வழியில்லாது தவித்தான்…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top