மூணு நாளைக்கு முன்னாடி…
மதுரியா எக்சாம் முடிஞ்ச அப்புறம்… கவுன்சலிங்… இண்டர்வியூ… காலேஜ்-னு எல்லாத்தையும் தேடிப் பிடிச்சுத் தன்னை வேற விஷயங்கள் மேல ஈடுப்படுத்தி வைச்சுக்கிட்டா. செக்குமாடு மாதிரி இதையே எத்தனை முறை சுத்த முடியும்? மதுரியா ஆர்ட் ஸ்கூல்லே பயிற்சி எடுத்த ஒரு ஆர்டிஸ்ட். நல்லா வரைவா.. சின்ன வயசிலேயே ஆனந்தியாவும் அவளும் ஆர்ட் க்ளாசுக்கு போனாங்க விடுமுறை நாட்கள்-ல. ஆனந்தியாவுக்கும் மதுரியாவுக்கும் அது அவங்கவங்க துறையிலே உதவியும் பண்ணுச்சு. அவங்க நண்பர்களுக்கும் பண்ணிக் குடுப்பாங்க. ஏன்னா அவ்வளோ அழகா வரைவாங்க. ரெண்டுப் பேருக்கும் ஒவ்வொரு விஷயம் நல்லா வரும். ஆனந்தியாவுக்கு சிம்மெட்ரி ஆர்ட்டும் ஆயில் பெயிண்டிங்கும் நல்லா வரும். மதுரியாவுக்கு ஃப்ரீ ஹாண்ட், பென்சில் ஸ்கெட்ச், சார்க்கோல் பெயிண்டிங் எல்லாம் நல்லா வரும். ஆனா இது அவங்க பொழுதுப் போக்கு மட்டும் தான். ஏனோ இந்த பிரிவுக்கு அப்புறம் அவளுக்கு வரையவே முடியலே. ஏறக்குறைய எல்லாத்துலேயும் ஈடுபாடுப் போயிடுச்சு. தன்னை இவ்வளோ பாதிக்கிற சக்தி விதுரனுக்கு இருக்கு-னு அவளால நம்பக் கூட முடியலே. அதுக்காக தன்னையே திட்டிக்கவும் செய்தா. அப்படி ஒரு நாள் சாயந்திரம்…
வேலைக்குப் போனவங்க யாரும் வீட்டுக்கு இன்னும் திரும்பாத நேரம். பெருக்கித் துடைக்க வேலையாள் வந்த சமயம். மதுரியா செய்யறதுக்கு ஒண்ணும் இல்லாம அவ ஸ்டடி டேபிள் சேர்லே உட்கார்ந்திருந்தா. அவளோட போன் அடிச்சுது. யார்னு அலுப்பா பார்த்தா. அவ க்ளோஸ் ஃப்ரெண்ட் நந்திதா. மதுரியாவுக்கு ஸ்கூல் டேஸ்லே இருந்து மொத்தம் மூணு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். ப்ளஸ் டூ வரைக்கும் ஒண்ணா படிச்சாங்க. அப்புறம் காலேஜ் படிப்புக்கு அவங்கவங்க தேடலுக்குப் போனாங்க. நந்திதா சாஃப்ட்வேர் முடிச்சுட்டு இப்போ வேலை தேடறா ஒண்ணரை வருஷமா. அகல்யா எம்.எஸ்.சி முடிச்சு இப்போ டீச்சர்ஸ் டிரெயினிங் படிக்கறா. ரீனா – அவளும் மெடிசின் தான் படிச்சா. ஆனா ரீனா எம்.எம்.சி-யிலே படிக்கிறா; மதுரியா ஸ்டான்லியிலே படிக்கிறா. இப்போ ரீனா அதே செங்கல்பட்டு காலேஜ்லே தான் அனீஸ்தீஷியா சேரப் போறா. இவங்க மூணு பேருக்கும் மதுரியாவோட கல்யாணம் நின்னு போன விஷயம் ஆனந்தியா மூலமா தெரியும். அதனால போயி என்னாச்சுன்னு எல்லாம் கேட்காம, எப்போவும் போல ஜாலியா பேசியே அவளை சரிப் பண்ண முயற்சிப் பண்ணாங்க. அப்படித்தான் அன்னிக்கும் போன் பண்ணா நந்திதா.
“ஹை… நந்து சொல்லு”-னு போனை எடுத்து பேசினா மதுரியா. “ஹாய்.. ரியா பேபி.. என்ன பண்றே?”னு கேட்டா நந்திதா. “ஒண்ணும் பண்ணலே சும்மாத்தான் இருக்கேன்”னு சலிப்பா வந்துச்சு பதில். “அப்போ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுடீ பேபி… ப்ளீஸ்”னு கெஞ்சினா. “சொல்லு நந்து”-னு கேட்கவும், “என் அண்ணன் பையன் யது இருக்கான் இல்லே? அவன் ஸ்கூல்லே ‘மை ஃபேமிலி’ டாபிக்லே ஏதோ படம் வரையணுமாம். நான் ஐடியா தேடலாம்-னா நாளைக்கு எனக்கு இண்டர்வியூ. எனக்காக கொஞ்சம் வரைஞ்சு வாட்ஸாப்லே அனுப்பு டீ… ப்ளீஸ்”-னு சொன்னா நந்திதா. “நல்லா இண்டர்வியூ அட்டெண்ட் பண்றே போ… ரெண்டு வருஷமா மேலேயும் படிக்காம டிமிக்கி குடுக்கறே.. ஒரு நாள் அங்கிள்கிட்ட மாட்டப் போறே பாரு”-னு கேலி பேசினா மதுரியா. “இந்த ஆனந்த் சீக்கிரம் வேலையிலே செட்டில் ஆனா நிம்மதியா கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிடுவேன்”-னு சிரிக்கவும், மதுரியாவுக்கு எதுவும் ரசிக்கலே. “சரி, அனுப்பறேன். நீ போய் ஒழுங்கா இண்டர்வியூவுக்கு ப்ரிபேர் பண்ற வழியை பாரு”-னு பேச்சை முடிச்சா. “தேங்க் யூ பேபி..உம்மாஅ”-னு அவளும் வைச்சா.
கூகுள்லே தேடி ஒரு படத்தை பிடிச்சு வரைய ஆரம்பிச்சு… ஒரு பத்து நிமிஷம் வரி வடிவம் குடுத்து, வீட்டுத் தலைவருக்கு முக-அமைப்பு குடுக்கற வரைக்கும் எல்லாம் சரியா இருந்துச்சு. அதை இன்னோரு முறை எடுத்து பார்த்த மதுரியா முகம் வேதனையிலே சுருங்கிச்சு. அதே நேரம் தான் ஆனந்தியா தங்கையை பார்க்க மேலே வந்தா. அந்த வீட்டுத் தலைவனோட முகம் தத்ரூபமா விதுரனின் முகம். அவளையும் அறியாம வந்த படம் அது. “சே..”ன்னு அந்த பேப்பரை கசக்கி வெளியே தூக்கி எறிஞ்சா. அதைப் பார்த்து ஆனந்தியா வேகமா தங்கைகிட்ட போக எத்தனிச்சா. ஆனா பரத் அவ தோள்லே கையை வைச்சு “வேண்டாம்”-னு சைகைக் காட்டினான். இது எதையுமே உணராத மதுரியா, போனை எடுத்து, “சாரி நந்து… என்னால வரைய முடியலே. ஃபோகஸ் பண்ண முடியலே”-னு படபட-னு சொன்னா. “ரிலேக்ஸ் ரியா.. இட்ஸ் ஓகே…. என்னடா ஆச்சு? நீயும் ரீனாவும் தான் நம்ம செட்லேயே ரொம்ப மெச்சூர்ட்… மறக்க முயற்சி பண்ணு பேபி. நோ ஒன் ஈஸ் வர்த் திஸ் சஃபரிங்”னு சொன்னா நந்திதா. “ம்ம்ம்… பண்றேன் நந்து”னு சொல்லிட்டு வைச்சா.
“சே… ஏண்டா என்னை இப்படி வதைக்கிறே? உன்னை நான் பார்த்தே இருக்கக் கூடாது. உன்னை நேசிச்சிருக்க கூடாது. நரகமா இருக்குடா.. உள்ளே எல்லாம் வலிக்குதுடா.. வலி தாங்காம ஏதாவது ஆயிடுமோ-னு பயமா இருக்குடா”-னு வாயால புலம்பி அழுதவ அவ ஷெல்ஃபை திறந்து அதுலே இருந்த மூணு கேன்வாஸ் ரோல், ஒரு ஜ்வெல் பாக்ஸ் நாலையும் தூக்கி ரூமை விட்டு வெளியே எறிஞ்சு, கதவை அடிச்சு சாத்தினா. அதை ரூம் வாசல்லே நின்ன பரத் – ஆனந்தியா மொத்தமா எடுத்துட்டு, நேரா அவங்க ரூமுக்கு எடுத்துட்டு போனாங்க.
ஒரு கேன்வாஸ்லே ‘தி மேன் ஐ அட்மயர்’-னு போட்டு விதுரனோட படம். இன்னொண்ணுலே ‘தி ஸ்மைல் ஐ லாஸ்ட் மைசெல்ஃப்’-னு அவன் புன்னகை முகம். மூணாவதுலே மதுரியா மண்டியிட்டு, நேரா நிக்கற விதுரன் கையிலே முத்தமிடற மாதிரி ஒரு படம். அந்த படத்துக்கு கீழே ‘டி யாமோ’-னு எழுதி இருந்துச்சு. அப்படீன்னா ‘ஐ லவ் யூ’-ன்னு அர்த்தம் ஸ்பானிஷ் மொழியிலேJ படத்தை பார்க்கறவங்களுக்கு அதுக்கான விளக்கத்தை சொல்ல தேவையே இல்லை. கடைசியா அந்த ஜ்வெல் பாக்ஸை திறந்தா அதுலே ஒரு சில்வர் ப்ரேஸ்லெட் இருந்துச்சு. அதுலே தொங்கின சின்ன டாலர்லே ‘விது-மது’னு இருந்துச்சு. ப்ரேஸ்லெட் டிசைனும் பின்னல் பின்னலா அழகா இருந்துச்சு. அது ஒரு தனிப்பட்ட ஆர்டர்-ல செய்த ப்ரேஸ்லெட்னு பார்த்த உடனேயே தெரிஞ்சுது. அப்புறம் இப்போ கசக்கி போட்ட பேப்பர். ஒரு சின்ன குடும்பம். அப்பா, அம்மா, ரெண்டு குழந்தைங்க வரி வடிவத்துலே. அந்த அப்பாவோட முகத்துலே விதுரன் இருந்தான். “இவளாலே எப்போவாவது இதையெல்லாம் மறந்து வெளியே வரமுடியுமா பரத்?”-னு அழுதா ஆனந்தியா. “தெரியலே தியா. ஆனா நம்ம மாரல் சப்போர்ட் கண்டிப்பா அவளுக்கு இப்போ தேவை… மத்தபடி மறக்கடிச்சு வெளியே கொண்டு வர எவனாவது பிறந்துதான் வரணும்”-னு ஆதரவா ஆனந்தியாவை அணைச்சு சொன்னான்.
பரத் எல்லாத்தையும் சொல்லவும் இல்லை. காட்டவும் இல்லை. கசக்கிப் போட்ட பேப்பரை மட்டும் தான் காட்டினான். அது அவங்க கிட்ட இருக்கு-னு மதுரியாவுக்கு தெரியலை. அன்னிக்கு பத்து நிமிஷம் அழுதுட்டு கதவை திறந்துட்டு வந்தப்போ அவ ரூம் வாசல்லே இருந்து ‘மாப்’-போட போன பொன்னம்மாவை பார்த்தா. பொன்னம்மா – அந்த வீட்டுலே இருபது வருஷத்துக்கும் மேலே வேலை செய்யற வயசான அம்மா. “பொன்னம்மா! என் ரூம் வாசல்லே சாமான் காணோமே? பெருக்கிட்டீங்களா?”-னு கேட்டா மதுரியா. “குப்பையா பாப்பா?”னு கேட்டாங்க பொன்னம்மா. “இல்லை… அது… ஆ… ஆமா… குப்பை தான்”-னு தடுமாறி சொன்னா மதுரியா. அரசல் புரசலா எஜமானி அம்மாகிட்டே இருந்து விஷயம் தெரிஞ்ச பொன்னம்மாவுக்கும் அந்த பொண்ணை பார்க்க பாவமா இருந்துச்சு. “அப்போவே பெருக்கிட்டேன் பாப்பா”னு கனிவா சொல்லிட்டு போயிட்டாங்க. முதல்லே ஐயோ-னு இருந்தாலும், அப்புறம் குப்பையா வெளியே போனாலாவது மனசு நிம்மதி அடையுதான்னு பார்க்கலாம்னு நினைச்சு விட்டுட்டா. அவளோட எண்ண ஓட்டம் புரியலேன்னாலும் அவ பொன்னம்மாகிட்டே பேசினதை பார்த்தான் பரத்.
அந்த பேப்பரை பார்த்த பெரியவங்க கொஞ்சம் மிரண்டு தான் போனாங்க. “என்ன பரத் இது? நான் இப்படின்னு நினைக்கலையே? கடவுளே”-னு பதறினாங்க சுபத்ரா. “ஆமா, அவ விதுரனை விரும்பறா… அவளே நினைச்சதை விட அதிகமா…. ஆனா தான்தோன்றித்தனமா இல்லே… நம்ம பார்த்து முடிவு பண்ணி, இவன் தான் உன் புருஷன், இவனைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்ன அப்புறம்”-னு பரத் அழுத்தமா சொல்லவும் சரேல்-னு நிமிர்ந்தாங்க சுபத்ராவும் நித்தியவாசனும். “சாரி அத்தை, உங்களை குத்திக் காட்டலே… பொண்ணு பார்த்துட்டு போயி வேண்டாம்-னு சொன்னா வர்ற வருத்தத்துக்கும் கல்யாணம் முடிவாகி நின்னு போனா வர்ற வருத்தத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்குன்னு புரிய வைக்கத் தான் அப்படிச் சொன்னேன். இது நம்மளும் விதுரனும் பண்ண தப்பு. சுதந்திரமா சுத்தி சந்தோஷமா இருந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ-னு நாம தான் சொன்னோம். ஒரு வருஷத்துலே கல்யாணம், நீ பேசி, பழகி, புரிஞ்சுக்கோ-னு நம்ம தான் சொன்னோம். எல்லாம் நம்ம பண்ணோம். இதுலே அவ தப்பு என்ன அத்தை?”-னு கேட்டான் பரத். “மாமா… இவ்வளோ நடந்தப்புறம் கூட உங்களால தான்-னு நம்ம கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருப்பாளா? அவளோட உணர்வுகளை அவளுக்கு-னு வைச்சுக்கும் போது, நம்ம அதை மதிக்கலேன்னா கூட பரவாயில்லை… ஆனா நம்மளே உதாசீனம் பண்ணா எப்படி? சொல்றதுக்கு வருத்தமாத்தான் இருக்கு… ஆனாலும் உண்மையை சொல்லியே தான் ஆகணும்… நம்மளே உதாசீனம் பண்ணா நம்மளை விட்டு கொஞ்சம் கொஞ்சமா போயிடுவா”-னு முடிச்சான் பரத்.
“இல்லேப்பா! அப்படி நடக்காது. நான் தான் ஏற்கனவே சொன்னேனே. நான் அவளுக்கு எல்லா வகையிலேயும் சப்போர்ட் பண்ணப் போறேன்”-னு சொன்னார் நித்தியவாசன். “அதனாலே தான் சொல்றேன் பர்த்டே வேண்டாம்”-னு என்றான் பரத். “பரத், நான் அவ வேதனையை நல்லா புரிஞ்சுக்கிட்டேன். நான் யோசிச்ச விஷயம் தப்புத்தான். என் பொண்ணு சந்தோஷமா இருக்கணும்.. அதானே எனக்கும் வேணும்? ஆனா நான் என்ன சொல்றேன்னா.. எவ்வளோ அன்பு இருந்தாலும் அது இனிமேல் நடக்காது தானே?”-னு முழுசா சொல்ல தயங்கினாங்க சுபத்ரா. “சொல்லு சுபா..”ன்னு கேட்டாங்க கற்பகவல்லி. “அது, நம்ம நட்பு தொடர போகுதுன்னா ரியாவும் இதை எல்லாம் ஏத்துக்க பழகணும் தானேம்மா? அதுக்கு இந்த ஃபங்க்ஷன் ஏன் ஒரு சந்தர்ப்பமா நினைக்கக் கூடாது?”-னு கேட்டாங்க சுபத்ரா. “சுபி, அது அவ முடிவு பண்ணணும். இன்னும் பச்சை ரணமா இருக்கறதை கீறி வைத்தியம் பார்க்க முடியாது. பரத்.. நான் அவ கிட்ட பேசறேன்.. அவ முடிவு பண்ணட்டும். நீங்க என்னப்பா சொல்றீங்க?”னு எல்லார் கிட்டேயும் கேட்டார் நித்தியவாசன். “எனக்கும் சின்னவ கிட்ட கேட்டுட்டு முடிவு பண்ணலாம்னு தான் தோணுது”னு சொன்னார் நித்தியானந்தம். பிறந்த நாள் கொண்டாட்டத்தைப் பத்தி மதுரியாகிட்ட பேசணும்னு முடிவு பண்ணிட்டு எல்லாரும் படுக்க போனாங்க.
அன்னிக்கு ராத்திரி நிகேஷை தூங்க வைச்சுட்டு அவங்க ரூமுக்குள்ளே குளிச்சுட்டு, டிரெஸ் மாத்தறது, துணியை அடுக்கறதுனு சுத்திட்டு இருந்த பரத்தை வைச்ச கண் வாங்காம பார்த்துட்டு இருந்தா ஆனந்தியா. “என்னடி பொண்டாட்டி, நாலு வருஷம் கழிச்சு இப்படி சைட் அடிக்கிறே?”-னு கேட்டு கண்ணடிச்சான் பரத். கன்னம் சிவந்தாலும், “எப்போ முழு விஷயம் சொல்லுவீங்க-னு பார்க்கறேன்”-னு சொன்னா ஆனந்தியா. “ம்ம்ம்ம்… தியா சொன்னா நம்ப வேண்டியதுதான். ஆனா பொய் பேசும் போது முகமும் ஒத்துழைக்கணும்”-னு அவ சிவந்த கன்னத்தை தடவினான். “சூ… ஃபர்ஸ்ட் திங்ஸ் ஃபர்ஸ்ட்!” அப்படீ-னு கன்னத்தை தடவின கையை பட்னு தட்டிவிட்டா ஆனந்தியா. “இது என்னடா திடீர்னு… போதாக் குறைக்கு உன் பாடி-காட் வேறே இன்னிக்கு இங்கேயே இருக்கான்”-னு கேட்டான் பரத். “அவன் ஒரு வாரமா இங்கே தான் தூங்கறான்… என்ன பண்றது-னு புரியலே”ன்னு வருத்தமா சொன்னா ஆனந்தியா.
ஆனந்தியா முதுகை ஆதரவா தடவிக் குடுத்து, “என்ன பண்றது சொல்லு? சரியாகும்னு வெயிட் பண்ணலாம்.. நீ தான் அவ தூக்கி எறிஞ்சதை எல்லாம் பார்த்தே தானே? காயம் பெரிசு… ஸோ… வெயிட் பண்ணி தான் ஆகணும்”-னு அவன் தலையணையிலே படுத்து தலைக்கு மேலே கையை வைச்சு விட்டத்தை வெறிச்சவன், ஒரு பெருமூச்சு விட்டான். லைட்டை அணைச்சு மகனை அணைச்சு படுத்த ஆனந்தியா, “பரத்… நீங்க தப்பு பண்றீங்க… ரியாவோட பர்சனல் திங்ஸை மறைச்சு வைக்கறீங்க”-னு தயங்கி சொன்னா. “ஆமா, எடுத்து வைச்சிருக்கேன்.. விதுரனுக்கு பாடம் கத்துக்குடுக்க”-னு உறுதியா சொன்னான் பரத். ஆனந்தியா அதிர்ந்துப் போனா. “பரத் என்ன சொல்றீங்க?”னு பதறிப்போய் கேட்டா.
“ஆமா தியா. கல்யாணம் நிச்சயம் ஆகட்டும். அவன் என்ன இழந்தான்-னு அவனுக்கு காட்டி அவனை கதற வைக்கிறேன்… ஒரு ஆணுக்கு மிகப் பெரிய தண்டனை அவன் என்ன மாதிரி காதலை இழந்தான்-னு காட்டி, அவன் அதை முழுசா இழந்ததுக்கு அப்புறம் புரிஞ்சுக்கறதுதான். அதுதான் நம்ம ரியா சார்பா நான் விதுரனுக்கு பண்ண போற ரிடேலியேஷன் – பழிவாங்கல்!!!”-னு சொன்னான் பரத். கண்ணு வன்மத்திலே ஜொலிச்சுது. “வேண்டாம் பரத். யாரோ எங்கேயோ நல்லா இருந்துட்டு போகட்டும்”-னு எந்திரிச்சு உட்கார்ந்தா ஆனந்தியா. “சாரி தியா.. இது என் மூத்த மகள் ரியாவுக்காக.. நான் ஒண்ணுமில்லாம வந்தப்போ… அவ அந்த வயசுல எனக்குக் குடுத்த ஆதரவு எப்படியானதுன்னு தெரியுமா? என்ன புரியும் அவளுக்கு அப்போ… ஆனா அப்போலே இருந்து பாசிடிவிடி, சிரிப்பு, தைரியம்னு மட்டும் தான் பார்த்திருக்கேன்… அவளை போயி என்ன பண்ணி வைச்சிருக்கான் இந்த முட்டாள்!! இவனையெல்லாம் சும்மா விட்டா நான் என்ன அப்பா ஸ்தானம்?” அப்படீனு அழுத்தமா சொன்னான் பரத்.
ஆனா ஆனந்தியாவுக்கு இப்படி ஒருத்தரோட லைஃபோட விளையாடறது ஏற்புடையதா இல்லை. “பரத், ப்ளீஸ்… வேண்டாம். An eye for an eye will make the whole nation blind-னு ஒரு பொன்மொழி இருக்கு”-னு சொன்னா ஆனந்தியா. அவளுக்குத்தான் கோபப்படவே வராதே. ஸோ, கெஞ்சல் தான். “அவன் தப்பு பண்ணி இருக்கான்டி செல்லம்”-னு பொறுமையா சொன்னான் பரத். “அப்படிப் பார்த்தா நம்ம ரியா மேலேயும் தான் தப்பு இருக்கு. இது அத்தனையும் அவன் கிட்ட சொல்லி இருந்தா இந்த வரைக்கும் வந்தே இருக்காது”-னு சொன்னா ஆனந்தியா. “தியா, உன்னோட 15 வயசுலே நீ என்னை லவ் பண்ணப்போ, அதை நான் உன் கண்ணைப் பார்த்து கண்டுப்பிடிச்சேன்… கல்யாணம் முடியறவரைக்கும் ரெண்டுப் பேரும் நம்ம அன்பை வெளிப்படுத்திக்கிட்டோமா? ஏழு வருஷம் வாங்கின கிஃப்ட்ஸ் எல்லாம் கல்யாணம் முடிஞ்சப்புறம் தான் குடுத்தேன். அதே நினைப்புலே இருந்த எனக்கு ரியா பண்ணினது தப்பா தெரியலே. தனக்கானவ கண்ணுலே அவனுக்கான காதலை பார்க்க முடியாத அவன் பேர்-லே தான் தப்பு-னு எனக்கு தோணுது”-னு அழுத்தம் திருத்தமா சொன்னான் பரத்.
“ஆனாலும் இது தப்பு”-ன்னு ஆனந்தியா ஆரம்பிக்கவும், “தியா… ப்ளீஸ். நான் அல்ரெடி முடிவு பண்ணிட்டேன். இதுக்கு மேலே நம்ம இதைப் பத்தி பேச வேண்டாம்… குட் நைட்”னு சொல்லி திரும்பி படுத்துட்டான். நித்தியவாசனுக்கும் இதே கோபம் தான். ஆனா விதுரன் நெருங்கிய நண்பனோடப் பையனா போயிட்டான். அதனால எதுவுமே செய்ய முடியலை. அந்த மாதிரி எந்தக் கட்டுப்பாடும் பரத்துக்கு இல்லை. ஒரு அப்பாவா கோபத்தின் வசம் போயிட்டான். ஆனா அவன் பழி வாங்கும் போது விதுரன் செத்த பாம்பா ஆகி இருப்பான்.