மதுரை மாநகரின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது அந்தப் பிரம்மாண்டமான மாளிகை. அந்த வீட்டின் தலைமைச் சக்கரம், வீரன் சக்கரவர்த்தி. அவரது கௌரவத்திற்கும் சொல்லுக்கும் ஊரே கட்டுப்பட்டு நின்றது. அவருக்குத் துணையாக இல்லத்தரசி காமாட்சி. இந்தத் தம்பதியருக்கு மூன்று மகன்கள்.
மூத்த மகன் சக்திவேல் மற்றும் அவரது மனைவி வள்ளியம்மை. இவர்களுக்குப் பிறந்த முதல் வாரிசுதான் ஆரியன். அந்த ஒட்டுமொத்தக் குடும்பத்தின் செல்லப்பிள்ளை மட்டுமல்ல, அசைக்க முடியாத அதிகார மையமும் அவன்தான்.
ஆரியனின் வார்த்தைக்கு அந்த வீட்டில் மறுபேச்சு கிடையாது. அவன் எதைச் சொல்கிறானோ, அதுவே அந்தப் பெரிய குடும்பத்தின் இறுதித் தீர்மானம். லண்டனில் தனது உயர்கல்வியை முடித்துவிட்டு ஊர் திரும்பிய ஆரியன், தனது குடும்பத் தொழில்களைக் கையில் எடுத்தான்.
அவர்களின் சொத்துக்களுக்கு அளவே இல்லை.
பாரம்பரியமான நகைக்கடைகள்,
பரந்து விரிந்த துணிக்கடைகள்,
தொழிற்சாலைகள்,
ஏக்கர் கணக்கில் பசுமை போர்த்திய தோட்டங்கள்…
என எண்ணிலடங்காத தொழில்களைத் தந்தை மற்றும் சித்தப்பாக்களுடன் இணைந்து ஆரியன் நிர்வகித்தான். அவன் களம் இறங்கிய பிறகு, அந்தக் குடும்பத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தது.
இந்தியாவின் டாப்-10 பணக்காரர்களில் ஒருவராக ஆரியன் உயர்ந்து நின்றான்.
அவனிடம் அபாரமான தொழில் திறமை இருந்தது. கூடவே பிறவிப்பயனாய் வந்த ஒரு கம்பீரமும், காண்போரைக் கவரும் அழகும் அவனிடம் குடிகொண்டிருந்தன.
ஆனால், இவற்றுடன் சேர்த்து ஒரு படி மேலாகவே அவனிடம் ‘திமிர்’ எனும் குணமும் ஒட்டிக்கொண்டிருந்தது.
அழகும் அந்தஸ்தும் அவனைச் சுற்றிப் பெண்களை மொய்க்க வைத்தன. ஆனால், அவன் யாரிடமும் கெஞ்சிக் கொண்டு பின்னால் போவதில்லை. தன்னைத் தேடி வரும் உறவுகளைத் தனக்குரிய பாணியில் கையாண்டான்.
வார இறுதி நாட்கள் வந்துவிட்டால், ஆரியன் முற்றிலும் வேறு மனிதன். தனது நண்பர்களோடு பீச் ரிசார்ட்டுகளில் தஞ்சமடைவான். அங்கு வரும் பெண்களுடன் மதுவும் மாதுவுமாய் இரண்டு நாட்கள் முழுக்கத் தன்னை மறந்த சுகவாழ்க்கையில் மூழ்கிக் கிடப்பான். அந்த இரண்டு நாட்கள் முடிந்ததும், மீண்டும் பழைய கம்பீரமான பிசினஸ் மேக்னட்டாகத் தனது சாம்ராஜ்யத்திற்குத் திரும்புவான்.
ஆரியனின் கம்பீரத்திற்கு மத்தியில், அந்த வீட்டின் மென்மையான தென்றலாய் விளங்கியவள் அவன் தங்கை மீனாட்சி. மதுரை மாநகரையே தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து, வீரத்தோடும் கருணையோடும் ஆட்சி செய்தவள் அரசி மீனாட்சி. அதே பெயரைக் கொண்ட இந்த மீனாட்சியும், சக்கரவர்த்தி குடும்பத்தின் இளவரசியாகத் திகழ்கிறாள்.
கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் சுறுசுறுப்பான பெண். வீட்டின் கடைக்குட்டி என்பதால் ஒட்டுமொத்தக் குடும்பத்தின் செல்லம் அவள்தான். ஆனாலும், ஊரே வியந்து பார்க்கும் தன் அண்ணன் ஆரியனைக் கண்டால் மட்டும் அவளுக்கு ஒருவித அச்சம் கலந்த மரியாதை உண்டு. அவள் படிப்பு முடிந்ததும் ஒரு நல்ல இடத்தில் அவளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான் வீரன் சக்கரவர்த்தியின் இப்போதைய இலக்கு.
வீரன் சக்கரவர்த்தியின் இரண்டாவது மகன் வெற்றிவேல் – அவர் மனைவி கீதா. அவர்களுக்கு மகள் ரேவதி, சுரேஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு ஒரு மகனுடன் (ராகேஷ்) மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறாள்.
மூன்றாவது மகன் கதிர்வேல் – ஜானகி தம்பதியரின் ஒரே மகன் தான் ருத்ரன்.
ருத்ரனும் அவனது உயிர் நண்பன் மித்ரனும் சென்னையில் படிப்பை முடித்துவிட்டு, மேல்படிப்பிற்காக அமெரிக்கா பறந்தனர். வசதியான குடும்பப் பின்னணி என்பதால், அங்கே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கித் தங்கள் கனவுகளைத் துரத்திக் கொண்டிருந்தனர்.
அமெரிக்கா சென்ற இரண்டாம் ஆண்டில், அவர்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. தற்செயலாக ஒரு தமிழரைச் சந்தித்தார்கள். அவர் மிகவும் கனிவாகவும் நட்பாகவும் பழகினார். ஆனால், ஒரு விஷயத்தை ருத்ரனும் மித்ரனும் கவனித்தார்கள்;
அவர் தினமும் கல்லூரி வாசலிலேயே நின்று கொண்டிருப்பார்.
ஒருநாள் ஆர்வத்தை அடக்க முடியாமல், “என்ன அங்கிள், தினமும் காலேஜுக்கே வர்றீங்க?” என்று கேட்டான் ருத்ரன்.
“என் பொண்ணு யஷ்வி இங்கேதான் பா படிக்கிறா…” என்று சிரித்தபடியே சொன்னார் அவர்.
“அப்படின்னா அவளை விட்டுட்டு நீங்க கிளம்ப வேண்டியதுதானே?” என்று ருத்ரன் கேட்க, அந்த மனிதரின் முகம் சற்றே வாடியது.
“நான் போனா… அவளும் என்னோட வந்துடுவா தம்பி…” என்றார் ரகசியமான குரலில்.
புரியாமல் திகைத்த மித்ரன், “என்ன அங்கிள் சொல்றீங்க?” என வினவ, அவர் தனது கடந்த காலத்தின் கதவை மெதுவாகத் திறந்தார்.
“ஆமாம் தம்பி… அவள் என் தம்பி பொண்ணு. ஆனா அவ பிறந்த ஒரு மாசத்திலேயே நான் அவளை இங்கே தூக்கிட்டு வந்துட்டேன். நான் இங்கே ஒரு பெண்ணைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா ஒரு விபத்துல அவ என்னை விட்டுட்டுப் போயிட்டா. அதுக்கப்புறம் மறுமணத்துல எனக்கு விருப்பமே இல்லை.
அப்போ ஒருமுறை நான் ஊருக்குப் போயிருந்தப்போதான், அங்கே யஷ்வி பிறந்திருந்தா. அந்தச் சின்னப் பிஞ்சை விட்டுட்டு வர எனக்கு மனசே இல்லை. என் தம்பிகிட்டப் போய்க் கேட்டேன்… அவனும் மனமுவந்து அவளை என்கிட்டயே கொடுத்துட்டான். அப்போதிலிருந்து அவதான் என் உலகம்!”