நீண்ட பயணத்திற்குப் பிறகு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மூவரும் தரை இறங்கினார்கள். வெப்பமும், தமிழ் பேச்சும் அவர்கள் மனதிற்கு ஒரு இதமான உணர்வைத் தந்தன. அங்கே அவர்களுக்காக மித்ரன் வீட்டு ஓட்டுநர் முத்து ஆவலோடு காத்திருந்தார்.
“தம்பி, எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?” என்று மித்ரனைப் பார்த்ததும் முத்துவின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
“நான் நல்லா இருக்கேன் முத்து அண்ணா… நீங்க எப்படி இருக்கீங்க?” என மித்ரன் நலம் விசாரிக்க, அவர் உடனே அவனிடமிருந்த பைகளை வாங்கிக்கொண்டார்.
முத்துவின் அன்பான மறுப்பை மீற முடியாமல், மூவரும் காரில் ஏறி அமர்ந்தனர். கார் மெதுவாகச் சென்னையின் சாலைகளில் நீந்தி மித்ரன் வீட்டை நோக்கிப் பயணித்தது.
மித்ரன் வீட்டின் வாசலிலேயே அவன் அம்மா காயத்ரியும், அப்பா மூர்த்தியும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
கார் கேட்டைத் தாண்டி உள்ளே வந்ததும், காயத்ரியின் முகம் மலர்ந்தது.
“சீக்கிரம் ஆரத்தி தட்டு எடுத்துட்டு வா!” என வேலைக்காரப் பெண்ணைப் பதட்டமாகத் துரிதப்படுத்தினார்.
மித்ரன், ருத்ரன், யஷ்வி என மூவரையும் ஒன்றாக நிற்க வைத்து, திருஷ்டி கழித்து ஆரத்தி எடுத்தார் காயத்ரி.
“கண்ணே பட்டுடும்… அவ்வளவு தூரத்துல இருந்து வந்திருக்கீங்க,” என மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டே அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
வீட்டிற்குள் நுழைந்த அடுத்த நொடியே, அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் வெடிக்க, காயத்ரி தன் மகன் மித்ரனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.
“அம்மா… என்னம்மா இது? நான் தான் வந்துட்டேன்ல… அப்புறம் எதுக்கு அழறீங்க?” என மித்ரன் அவளைத் தேற்றினான்.
“இல்லடா… எனக்கு ரொம்பப் பயமா இருக்கு. மனசுக்குள்ள ஏதோ ஒரு கலக்கம்… ஏதோ விபரீதம் நடக்கப்போகுதோன்னு தோணிகிட்டே இருக்குடா,” என விம்மினார் காயத்ரி.
அருகிலிருந்த மூர்த்தி பெருமூச்சுடன்,
“பார்த்தியா மித்ரன்… இதையேதான் உன் அம்மா கடந்த ஒரு வாரமா சொல்லிப் புலம்பிட்டு இருக்கா,” என்றார்.
மித்ரன் நிதானமாக அம்மாவை சோபாவில் அமர வைத்து, அவர் கைகளைத் தன் கைகளுக்குள் பொதிந்து கொண்டான்.
“அம்மா… நான் வந்துட்டேன்ல? இனி நான் பார்த்துக்குறேன். அக்கா கல்யாணம் எந்தப் பிரச்சனையும் இல்லாம, ரொம்பச் சிறப்பா நடக்கும். நீங்க எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க,” என உறுதி அளித்தான்.
அவன் பேச்சில் இருந்த அழுத்தம் காயத்ரிக்குச் சற்று ஆறுதலைத் தந்தது.
மூர்த்தியும் சிரித்துக்கொண்டே,
“ஆமா காயத்ரி… புள்ளைங்க இப்பதான் வந்திருக்காங்க. அவங்களைக் கவனிக்காம நீ அழுதுட்டு இருக்கலாமா?” என்றார்.
சட்டெனச் சுதாரித்த காயத்ரி,
“ஐயோ… ஆமாப்பா! மறந்துட்டேனே,” என்று கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.
“நீங்க அப்படியே பேசிட்டு இருங்க… நான் எல்லாருக்கும் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வர்றேன்,” எனச் சமையலறை நோக்கி விரைந்தார்.
காயத்ரி கொண்டு வந்த தேநீரை மூவரும் பருகிக்கொண்டிருந்த போது, வாசலில் ஒரு நிழல் ஆடியது. உள்ளே நுழைந்தது நந்திதா. அழகான, அன்பான பெண்.
தன் அக்காவைக் கண்டதும் மித்ரன் உற்சாகத்தில் துள்ளி எழுந்தான்.
“அக்கா…!” என ஓடிச் சென்று அவளைக் கட்டிக்கொண்டான்.
“எப்படா வந்த? வந்து ரொம்ப நேரம் ஆச்சா?” என நந்திதா தம்பியின் தலை கோதி வாஞ்சையுடன் கேட்டாள்.
“இல்ல அக்கா, இப்பதான் வந்தோம். அம்மா கொடுத்த டீயைக் குடிச்சிட்டு இருந்தேன், நீயும் வந்துட்ட,” என மித்ரன் சொல்ல,
“சாரிடா… நீ வர்றப்போ நான் வீட்ல இருக்கணும்னுதான் நினைச்சேன். ஆனா ஒரு முக்கியமான பிரண்டைப் பார்க்கப் போக வேண்டியதாயிடுச்சு,” என நந்திதா வருத்தத்துடன் சொன்னாள்.
அப்போது அங்கிருந்த யஷ்வி,
“நீங்க எப்படி இருக்கீங்க அக்கா?” எனப் பாசமாகக் கேட்க,
“நான் ரொம்ப நல்லா இருக்கேன் யஷ்வி,” என நந்திதா அவளை அணைத்துக் கொண்டாள்.
“சரி… நீங்க மூணு பேரும் முதல்ல போய் ரெஸ்ட் எடுங்க. ரொம்ப டயர்டா இருப்பீங்க,” என மூர்த்தி சொல்ல, அன்றைய பொழுது அந்தப் பயணக் களைப்பில் அமைதியாகக் கழிந்தது.
அடுத்த நாள் முதல் திருமண வேலைகள் வேகம் எடுத்தன. மித்ரனுக்குத் தோள் கொடுத்து ருத்ரன் ஓடி ஓடி வேலைகளைக் கவனிக்க, யஷ்வி நந்திதாவையே சுற்றி வந்தாள்.
நிச்சயிக்கப்பட்ட அந்தத் திருமண நாள் நெருங்கியது. மண்டபத்திற்குப் புறப்பட வேண்டிய நேரம். வீடே பரபரப்பாக இருந்தது. லக்கேஜ்கள் காரில் ஏறிக் கொண்டிருக்க, மெதுவாக நடந்து வந்தாள் யஷ்வி.
அன்று அவள் அணிந்திருந்த அந்தப் பட்டுச் சேலை, அவளது துருதுருப்பான அழகுக்கு இன்னும் மெருகூட்டியிருந்தது.
அவளைப் பார்த்த ருத்ரனும் மித்ரனும் அப்படியே சில நொடிகள் உறைந்து போனார்கள்.
அவர்களிடம் நெருங்கிய யஷ்வி,
“நான்… சாரில எப்படி இருக்கேன்?” எனத் தயக்கத்துடன் கேட்டாள்.
வழக்கம்போலக் கிண்டல் செய்ய நினைத்த மித்ரன்,
“என்னடி இது கோலம்?” எனச் சொல்ல, யஷ்வியின் முகம் சட்டென வாடிவிட்டது.
அவளது விழிகள் கலங்குவதைக் கண்ட ருத்ரன், மித்ரனை அதட்டினான்.
“டேய்… சும்மா இருடா!” என அவனை அடக்கிய ருத்ரன், யஷ்வியின் பக்கம் திரும்பி மென்மையாகச் சொன்னான்,
“யஷ்வி… நீ ஒரு தேவதை மாதிரி இருக்க.”
ருத்ரனின் அந்த ஒற்றை வார்த்தை யஷ்வியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தைப் பாய்ச்சியது.
மித்ரனைப் பார்த்துக் கோபமாக முறைத்தவள்,
“உண்மையாவா?” என ருத்ரனிடம் மீண்டும் கேட்டாள்.
யஷ்வியின் அந்தச் சிறுபிள்ளைத்தனமான மகிழ்ச்சியைக் கண்ட மித்ரன்,
“சும்மா சொன்னேன்டி… நிஜமாவே ரொம்ப அழகா இருக்க,” எனச் சமாதானம் செய்தான்.
ருத்ரனும் மித்ரனும் ஒரு சேரத் தங்கள் கைகளால் திருஷ்டி கழிப்பது போலச் செய்கை செய்ய, அதைப் பார்த்துக் கொண்டிருந்த காயத்ரிக்கும், மூர்த்திக்கும், நந்திதாவிற்கும் கண்கள் பனித்தன.
இந்த மூவரின் நட்பு இவ்வளவு ஆழமாக இருக்கிறதே என அவர்கள் வியந்து நின்றார்கள்.