திருவிழாவிற்கு இன்னும் இரண்டே நாட்கள். நள்ளிரவு பன்னிரண்டு மணி… ஊரே நிசப்தத்தில் ஆழ்ந்திருக்க, சக்கரவர்த்தியின் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்ற சத்தம் மட்டும் கேட்டது.
கதவைத் திறந்து கொண்டு ஆரியன், ருத்ரன் மற்றும் மித்ரன் உள்ளே நுழைந்தனர். அங்கே அவர்களைப் புன்னகையுடன் வரவேற்று நின்றார்கள் அவர்களது அம்மாக்கள்.
“என்னம்மா… இன்னும் தூங்காம முழிச்சிட்டு இருக்கீங்களா?” என்று ஆச்சரியமாகக் கேட்டான் ஆரியன்.
“இல்லப்பா… நீங்க வருவீங்கன்னுதான் பார்த்துட்டுப் படுக்கலாம்னு இருந்தோம்,” என்றார் வல்லியம்மை.
“நாங்க வர்றதுக்கு லேட் ஆகும்னுதான் சொன்னேனே…” என்று ருத்ரன் சொல்ல,
“பரவாயில்லை தம்பி. திருவிழா வேலைன்னா வீடு முழுக்க ஓட்டம்தான். அதையெல்லாம் முடிச்சுட்டு படுக்கப் போறதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க. நீங்க வந்தது மனசுக்கு நிம்மதியா இருக்கு. போய் ரெஸ்ட் எடுங்க,” என்று சொல்லிவிட்டு கீதா உள்ளே சென்றார்.
மூவரும் தத்தமது அறைகளை நோக்கி நடந்தனர்.
ஆரியன் தன் அறைக்குச் செல்லும் வழியில், யஷ்வியின் அறைக் கதவின் முன் அப்படியே நின்றான்.
சில விநாடிகள் அவன் மனதுக்குள் ஒரு பெரிய யுத்தமே நடந்தது.
‘பார்க்கணுமா… வேண்டாமா…?’
இறுதியில் மனதின் பேச்சைக் கேட்டு, மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே சென்றான்.
ஜன்னல் வழியாக நிலவொளி உள்ளே விழுந்து, யஷ்வியை மென்மையாகத் தழுவிக் கொண்டிருந்தது. அவள் எந்தச் சலனமும் இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
அவளருகே சென்ற ஆரியன், அவளது சாந்தமான முகத்தை ரசித்துப் பார்த்தான். மும்பையில் இருந்த அந்த ஒரு வாரமும், அவன் மனம் அவளிடமே தஞ்சம் புகுந்திருந்ததை இப்போது முழுமையாக உணர்ந்தான்.
“உன்னை விட்டுத் தூரமாப் போனா, உன்னை மறந்திடலாம்னுதான் நினைச்சேன்… ஆனா போன இடமெல்லாம் உன் நினைவுதான் என்னைச் சூழ்ந்திருந்தது…” என்று மிக மெல்லிய குரலில் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த யஷ்வியைத் தொந்தரவு செய்யாமல், அவளது நெற்றியில் இதமாக ஒரு முத்தமிட்டான்.
“நல்லாத் தூங்கு…” என்று முணுமுணுத்துவிட்டு, ஒரு திருடனைப் போல அமைதியாக வெளியே வந்தான்.
மறுபுறம், ருத்ரன் எந்தத் தயக்கமும் இல்லாமல் நந்திதாவின் அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.
சத்தம் கேட்டு அதிர்ந்து எழுந்து அமர்ந்தாள் நந்திதா.
முன்னால் நின்றிருந்த ருத்ரனைப் பார்த்ததும், அவள் கண்கள் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் விரிந்தன.
“நீங்க… நீங்க என்ன பண்றீங்க இங்க? இது என் ரூம்!” என்று படபடப்பாகக் கேட்டாள்.
ஆனால் ருத்ரன் அவளுக்குப் பதில் சொல்லும் மனநிலையில் இல்லை.
அவன் கையில் இருந்த பையை சோபாவில் வீசிவிட்டு, அதிலிருந்து டவல் மற்றும் மாற்று ஆடைகளை எடுத்துக்கொண்டு, தன் சொந்த அறைக்குச் செல்வது போல இயல்பாகக் குளியலறைக்குள் நுழைந்தான்.
நந்திதா அவனைப் பார்த்தபடியே சிலையாக நின்றாள்.
‘இவனுக்கு என்ன பைத்தியமா? ஏன் இப்படிப் பண்றான்?’ என்று அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன.
சில நிமிடங்களில் ஈரத் தலையோடு வெளியே வந்த ருத்ரன், டவலால் தலையைத் துடைத்தபடி அவளைத் தீர்க்கமாகப் பார்த்தான்.
அந்தப் பார்வையில் அதிகாரமும் உரிமையும் கலந்திருந்தது.
கையில் இருந்த துண்டை அலட்சியமாகச் சோபாவில் போட்டுவிட்டு, கட்டிலின் ஒரு பக்கத்தில் வந்து சரிந்தான்.
அவன் படுத்த வேகத்தில்,
“அய்யோ!” என்று அலறியபடி, நந்திதா மின்சாரம் தாக்கியவளைப் போலக் கட்டிலைவிட்டு துள்ளி எழுந்து நின்றாள்.
ருத்ரன் மெல்லத் தலைசாய்த்து அவளைப் பார்த்தான்.
“என்ன… இன்னும் தூங்கலையா?” என்று, ஏதோ பூங்காவில் அமர்ந்து பேசுவது போல மிகச் சாதாரணமாகக் கேட்டான்.
நந்திதாவோ கோபத்தில் கொதித்துப் போனாள்.
“உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? எதுக்காக இங்கே வந்து படுக்குறீங்க? முதல்ல எழுந்து உங்க ரூமுக்குப் போங்க!” என்று சீறினாள்.
அவன் முகத்தில் குறும்புச் சிரிப்பு அரும்பியது.
“நான் ஒண்ணும் தெரியாத அந்நியன் ரூமுக்கு வரலையே… என் பொண்டாட்டி ரூமுக்குத்தானே வந்திருக்கேன்!” என்றான் உரிமையோடு.
அந்த ‘பொண்டாட்டி’ என்ற ஒரு வார்த்தையே நந்திதாவின் கோபத்தில் எண்ணெய் ஊற்றியது.
“இங்க பாருங்க… அந்த அவசரக் கல்யாணத்தை என்னால ஏத்துக்க முடியாது. அப்பாவுக்காகத்தான் அன்னைக்கு மௌனமா இருந்தேன். இங்க வந்தது கூட எங்க அம்மாவுக்காகத்தான். இப்போ உங்க வீட்ல உங்களுக்கு வேற கல்யாணம் பேசிட்டு இருக்காங்கல்ல… பேசாம அவங்களைக் கட்டிக்கிட்டு உங்க வாழ்க்கையைப் பாருங்க!” என்று கறாராகச் சொன்னாள்.
அமைதியாக அவள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ருத்ரன், சட்டென்று எழுந்து அவள் கையைப் பற்றி இழுத்தான்.
அந்த வேகத்தில் நிலைதடுமாறி, அவன் மார்பில் வந்து விழுந்தாள்.
அவளைத் தன் அணைப்பிற்குள் சிறைபிடித்த ருத்ரன், அவள் காதோரம் மெல்லிய குரலில்,
“இங்க பாரு நந்திதா… நம்ம கல்யாணம் முடிஞ்ச விஷயம் முடிஞ்சது. இந்தத் திருவிழா முடிஞ்சதும், நான் எல்லார்கிட்டயும் உண்மையைச் சொல்லிடுவேன். அவங்க ஒத்துக்கிட்டா இங்கேயே இருப்போம்… இல்லைன்னா, நமக்கான உலகத்தை நாமளே தேடிக்கலாம். இதுதான் என் முடிவு,” என்றான் உறுதியாக.
சிறிது நேரம் அவளது தவிப்பை ரசித்தவன்,
“ஒரு வாரமா உன்னைப் பார்க்காம எனக்குத் தூக்கமே இல்லை… இப்போ பேசாமத் தூங்கு,” என்று மிரட்டலாகச் சொல்லி, அவளை விடாமல் அணைத்தபடியே கண்களை மூடிக்கொண்டான்.
அவள் எவ்வளவோ போராடியும், அவனது இரும்புப் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை.
அந்த அணைப்பின் கதகதப்பில், அறியாத வயதில் தொலைத்துப் போன பாதுகாப்பு மீண்டும் கிடைத்தது போல, அவளையும் அறியாமல் மெல்ல உறக்கத்தில் ஆழ்ந்தாள் நந்திதா.
மறுநாள் காலை…
நேரம் பத்து மணியைக் கடந்திருந்தது.
அரைகுறைத் தூக்கத்தில் கண்களைக் கசக்கியபடி ஹாலுக்கு வந்தான் மித்ரன்.
அங்கே நின்றிருந்த ஒரு பெண்ணைப் பார்த்ததும்,
“ஹலோ… எனக்கு ஒரு ஸ்ட்ராங் டீ குடுங்க,” என்றான் இயல்பாக.
அந்தப் பெண் அவனைத் திரும்பி முறைத்துப் பார்த்தாள்.
“என்ன முறைப்பு? டீதானே கேட்டேன்…” என்று மித்ரன் விடாமல் கேட்டான்.
அவள் சினத்துடன்,
“என்னைப் பார்த்தா உங்களுக்கு வேலைக்காரி மாதிரியா தெரியுதா?” என்று எகிறினாள்.
மித்ரன் ஒரு நொடி அவளை உச்சி முதல் பாதம் வரை தீர்க்கமாகப் பார்த்துவிட்டு,
“ஆமா… அப்படித்தான் தெரியுது!” என்றான் சற்றும் யோசிக்காமல்.
அந்தச் சமயம் அங்கே வந்த ஜானகி,
“என்ன தம்பி… என்னாச்சு?” என்று கேட்டார்.
உடனே அந்தப் பெண்,
“பாருங்க சித்தி! இவர் என்னை வேலைக்காரின்னு சொல்லி எவ்வளவு திமிராப் பேசுறார்!” என்று புகார் கூறினாள்.
ஜானகி சிரித்துக்கொண்டே,
“ஐயோ தம்பி… இது மீனாட்சி!” என்று அறிமுகப்படுத்தினார்.
மித்ரன் பதறிப்போய்,
“ஐயோ! சாரிங்க… நான் ஏதோ தெரியாம சொல்லிட்டேன்,” என்று தலையைச் சொறிந்தான்.
ஆனால் ஜானகி விடவில்லை.
“பரவாயில்லை தம்பி… இவ இருக்கிற கோலத்தைப் பார்த்தா யாருமே வேலைக்காரின்னுதான் நினைப்பாங்க!” என்று மீனாட்சியைப் பார்த்து,
“என்னடி முறைக்கிற? விடியற்காலையிலேயே எழுந்து குளிக்கச் சொன்னா, இன்னும் நைட்டியோட பேய் மாதிரி சுத்திக்கிட்டு இருக்க! இன்னும் பல்லுக்கூட விளக்கல. அப்புறம் எப்படி மகாராணி மாதிரி தெரிவே?” என்று போட்டுத் தாக்கினார்.
மீனாட்சி மித்ரனை கொலைவெறிப் பார்வையால் முறைக்க, மித்ரன் கமுக்கமாகச் சிரித்துக்கொண்டே அங்கிருந்து நழுவினான்.
தொடரும்…