❤️அத்தியாயம்《30》

மதுரையில் வீரன் சக்கரவர்த்தியின் வீட்டில், கல்யாண வேலைகள் மிக ஆடம்பரமாக நடந்து கொண்டிருந்தன. மணப்பெண் மீனாட்சியின் அருகிலேயே யஷ்வியும் நந்திதாவும் இருந்தனர்.

“மீனா, என்ன ஒரு மாதிரி இருக்க? உன் முகத்துல கல்யாணக் கலையே இல்லையே! கல்யாணப் பொண்ணு இப்படியா சோகமா இருப்பா?” என்று கேட்டாள் யஷ்வி.

“ஏன்? நீங்க ரெண்டு பேரும் உங்க கல்யாணத்துல மட்டும் என்ன சிரிச்சுக்கிட்டா இருந்தீங்க?” என்று மீனா திருப்பிக் கேட்டாள்.

“அது எங்களுக்கு எதிர்பாராம திடீர்னு நடந்த கல்யாணம். ஆனா உனக்கு அப்படி இல்லையே… வீட்ல எல்லாரும் பேசி, மாப்பிள்ளை வீட்ல வந்து உன்னைப் பார்த்து சம்மதிச்சு நடக்குற கல்யாணம்தானே? அப்புறம் ஏன் இப்படி இருக்க?” என்றாள் யஷ்வி.

“இல்ல… மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு. உங்க எல்லாரையும் விட்டுட்டுப் போறோமேன்னு நினைக்கும்போதுதான் சங்கடமா இருக்கு. அண்ணி… மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போயிட்டு வருவோமா?” என்று கேட்டாள் மீனா.

“என்ன சொல்ற, தேவா? இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம். இந்த நேரத்துல எப்படி வெளியே போறது? கண்டிப்பா பாட்டி அனுப்ப மாட்டாங்க,” என்றாள் நந்திதா தயக்கத்துடன்.

“ப்ளீஸ் அண்ணி… நம்ம மூணு பேர் மட்டும் போயிட்டு வருவோம்,” என்று மீனா கெஞ்ச, யஷ்வியும் அவளுடன் சேர்ந்து கொண்டாள்.

“ஆமா அக்கா, போயிட்டு வருவோம். கல்யாண வேலை எல்லாம் வீட்டுல இருக்குற பெரியவங்க பார்த்துக்கறாங்க. நமக்கு இங்கே எந்த வேலையும் இல்லை. சும்மா இருக்க போர் அடிக்குது. போயிட்டு வருவோமே!”

“சரி, நான் பாட்டிகிட்ட கேட்டுப் பார்க்கிறேன். சாயங்காலம் போகலாம்,” என்றாள் நந்திதா.

முதலில் வீட்டிலிருந்த பெரியவர்கள், “அதெல்லாம் முடியாது. கல்யாணப் பொண்ணு வெளியே போகக் கூடாது,” என்று மறுத்தனர். ஆனால், யஷ்வியும் நந்திதாவும் பலவிதமாகச் சமாதானம் சொல்லி, ஒருவழியாக அவர்களைச் சம்மதிக்க வைத்தனர்.

மாலை நேரத்தில், மூவரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் புறப்பட்டனர்.

அவர்கள் கிளம்பி அரை மணி நேரம் ஆகியிருந்தது.

அவர்கள் சென்ற காரின் டிரைவரான வேலு, தலையில் பலத்த அடிபட்டு, உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் வீட்டின் வாசலில் வந்து நின்றார்.

அவரைப் பார்த்ததும் பதறிய வீட்டுப் பெண்கள், “ஐயோ! வேலு… உனக்கு என்னாச்சு?” என்று அலறினர்.

அவர்களின் சத்தம் கேட்டு, வீரன் சக்கரவர்த்தி உட்பட வீட்டிலிருந்த ஆண்கள் அனைவரும் வாசலுக்கு ஓடி வந்தனர்.

“என்னாச்சு வேலு? ஏன் இப்படி அடிபட்டு வந்திருக்க? பிள்ளைகள் எங்கே?” என்று இடிமுழக்கக் குரலில் கேட்டார் வீரன் தாத்தா.

“ஐயா… நான் சின்னம்மா மூணு பேரையும் கோவிலுக்குக் கூட்டிட்டுப் போயிட்டு இருந்தேன். அப்போ ஒரு பெரிய வேன் திடீர்னு வந்து எங்க கார்மேல மோதிடுச்சு. என்னை அடிச்சுப் போட்டுட்டு, சின்னம்மா மூணு பேரையும் கடத்திட்டுப் போயிட்டாங்க, ஐயா!

நான் உங்களுக்குத் தகவல் சொல்லிடக் கூடாதுன்னு என் போனை உடைச்சுட்டாங்க. கார் டயரையும் பஞ்சர் பண்ணிட்டாங்க. அந்தப் பக்கம் வாகனங்கள் எதுவும் வராததால இங்க வர்றதுக்குத் தாமதமாகிடுச்சு, ஐயா…” என்று வேலு அழுதுகொண்டே கூறினார்.

டிரைவர் வேலு சொல்லி முடிக்கவும், வீட்டிலிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

ருத்ரனும் ஆரியனும் யாருக்கோ போன் செய்தபடியே, மின்னல் வேகத்தில் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.

வீட்டின் மற்ற ஆண்களும் ஆளுக்கொரு திசையில் பெண்களைத் தேடிப் புறப்பட்டனர்.

பெண்கள் மட்டும் அழுகையிலும் பயத்திலும் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தனர்.

இங்கே சென்னையில்…

மித்ரன் தன் அலுவலக அறையில் அமர்ந்திருந்தான்.

அவன் நினைவெல்லாம் மீனாட்சியே நிறைந்திருந்தாள்.

அவள் தன் காதலைச் சொன்னபோது அவனுக்குள் எந்தச் சலனமும் இல்லை. ஆனால், இப்போது அவளுக்கு வேறு ஒருவனுடன் கல்யாணம் என்று நினைக்கும்போது, மனதிற்குள் இனம் புரியாத வலி எழுந்தது.

அதை வெளியில் சொல்ல முடியாமல், தனக்குள்ளேயே மருகிக் கொண்டிருந்தான்.

அப்போது அவனது அறைக் கதவு தட்டப்பட்டது.

ஒரு நடுத்தர வயதுடையவர் உள்ளே நுழைந்தார்.

அவரைக் கண்டதும் மித்ரன் எழுந்து நின்று,

“வாங்க மாமா! எப்போ வந்தீங்க?” என்று கேட்டான்.

“இப்பதான்பா வந்தேன். மகனுக்குக் கல்யாணம் வச்சிருக்கேன். அதான் உனக்குப் பத்திரிகை வச்சிட்டுப் போகலாம்னு வந்தேன். வீட்டுக்குப் போனேன். அம்மா அங்க இல்லைன்னு சொன்னாங்க,” என்றார் அவர்.

“ஆமா மாமா. நந்திதா அக்கா வீட்ல ஒரு விசேஷம். அதுக்காகப் போயிருக்காங்க,” என்றான் மித்ரன்.

“ஓ! பொண்ணு கொடுத்த இடத்துல விசேஷம்னா போகத்தானே செய்யணும்? நம்ம வீட்டு விசேஷம் அடுத்த மாசம் தான். நீயும் அம்மாவும் கண்டிப்பா வந்திடணும்.”

“நிச்சயமா வந்துடுறோம், மாமா,” என்றான் மித்ரன்.

“சரிப்பா… அப்போ நான் மதுரைக்குக் கிளம்புறேன்,” என்றார் அவர்.

“மதுரைக்கு எதுக்கு, மாமா?” என்று மித்ரன் வியப்புடன் கேட்டான்.

“என்னப்பா கேள்வி? நந்திதா குடும்பத்துக்குப் பத்திரிகை வைக்கணும்ல?” என்றார் அவர்.

“சரி மாமா… எப்போ கிளம்புறீங்க?”

“இப்பவே கிளம்பணும்பா. காலையிலேயே கிளம்பி இருந்தா பாண்டியனோடயே போயிருப்பேன்.”

“பாண்டியன் கூடவா? அவங்க எப்போ போனாங்க?” என்று மித்ரன் கேட்க,

“உனக்குத் தெரியாதா? பாண்டியனும் அவன் மகனும் மதுரைக்குத்தான் போயிருக்காங்க. இன்னைக்குக் காலையில பாண்டியன் வீட்டுக்குப் பத்திரிகை வைக்கப் போனப்போ, அவங்க சம்சாரம்தான் சொன்னாங்க.

ஏதோ முக்கியமான வேலையா, அவங்க ரெண்டு பேரும் மதுரைக்குக் கிளம்பிப் போயிருக்காங்கன்னு,” என்றார் அந்த உறவினர்.

அவர் சொல்வதைக் கேட்ட மித்ரனுக்குள் சந்தேகம் துளிர்விட்டது.

‘அவர்களுக்கு மதுரையில் என்ன வேலை?’ என்று யோசித்துக் கொண்டே,

“சரி மாமா… நீங்க கிளம்புங்க,” என்று அவரை வழியனுப்பி வைத்தான்.

அவன் அதே யோசனையில் அமர்ந்திருக்க, போன் அடிக்கும் சத்தம் கேட்டு எடுத்துப் பார்த்தான்.

அவன் அம்மாவிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.

போனை ஆன் செய்து காதில் வைத்த அடுத்த நொடி, அந்தப் பக்கம் அவன் அம்மாவின் கதறல் சத்தம்தான் கேட்டது.

மித்ரன் பதறிவிட்டான்.

“அம்மா! அம்மா… என்னாச்சு? ஏன் அழுறீங்க?” என்று பதட்டமாகக் கேட்டான்.

“மித்ரன்… நந்திதா, யஷ்வி, மீனாவை யாரோ கடத்திட்டாங்கப்பா!” என்று தேம்பித் தேம்பி அழுதார் அவர்.

“என்னம்மா சொல்றீங்க!” என்று அதிர்ந்தவன், நாற்காலியிலிருந்து மின்னல் வேகத்தில் எழுந்தான்.

“ஆமாப்பா… கோயிலுக்குப் போறேன்னு கிளம்புனாங்க…” என்று அங்கு நடந்த அனைத்தையும், ஆண்கள் அனைவரும் அவர்களைத் தேடிச் சென்றிருப்பதையும் கூறினார்.

அதைக் கேட்ட மித்ரனுக்குத் தலை சுற்றியது.

“சரிம்மா… நீங்க பதட்டப்படாம இருங்க. நான் உடனே அங்க வர்றேன்!” என்று கூறிவிட்டு, போனை வைத்தவன் தனது காரை நோக்கி வெறிகொண்டு ஓடினான்.

தொடரும்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top