அடுத்து வந்த நாட்கள்லே மதுரியா தன்னை தேத்திக்கிட்டா. கவனத்தை முழுசா காலேஜ்க்குப் போகறதுலேயும் ஹாஸ்டல்லெ சேரப் போறதுலேயும் வைச்சிருந்தா. பிரம்ம பிரயத்தனப்பட்டு விதுரனைப் பத்தி பகல்லே நினைக்காம இருந்தா.. முழு நேரமும் நிகேஷ் கூடவே இருந்தா. இப்படியே நாட்கள் கடந்து அவ கிளம்பற நாளும் வந்துச்சு. வீட்டுலே எல்லாருக்கும் அவ இந்த மாதிரி நிலையிலே போறது ரொம்ப வேதனையா இருந்துச்சு. ஆனாலும் யாரும் தடுக்கலே. சுபத்ராவும் கற்பகவல்லியும் ரீனா மாதிரி இவளையும் ‘டே-ஸ்காலரா’ போயிட்டு வர சொன்னாங்க. ஆனா மதுரியா முடியவே முடியாது-னு சொன்னப்புறம் அவளை ஃபோர்ஸ் பண்ணலே. “கண்டிப்பா வாரக்கடைசியிலே வந்துடணும்”-னு மட்டும் சொன்னாங்க. ஒரு புன்னகையோடக் கிளம்பிப் போனா. தினமும் ரீனாவும் அவளோடு பேசினா. சிரிப்பை மறந்த உதடுகளும் ஜீவனே இல்லாத கண்ணும் பார்க்க பார்க்க ரீனாவுக்கு விதுரன் மேலே கொலை வெறி வந்துச்சு. ஆனா அவன் மேலே கோபப்படறதை விட மதுரியாவை மாத்தற முயற்சியிலே இறங்கினா.
ரெண்டு வாரம் ஓடிப் போச்சு மதுரியா காலேஜ்லே சேர்ந்து. அவளுக்கு கோர்ஸ், ஆசிரியர், தினசரி வேலைகள் எல்லாம் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. படிப்பு எதிர்பார்த்ததை விட கஷ்டமா இருக்கவும் அவளோட ஆடிப் போன மனசுக்கு ஆக்கிரமிப்பா இருந்துச்சு. எந்நேரமும் படிப்பு, லைப்ரரி-னு சுத்தினா. நைட் எட்டு மணி வரைக்கும் டிபார்ட்மெண்ட் லைப்ரரியிலே தான் பழியா கிடந்தா. சும்மா இருக்கற மனசை படிப்பிலே நிரப்பினா. அதெல்லாம் நொந்த மனசுக்கு ஆறுதலா இருந்துச்சு. அதே வீட்டுக்கு வந்தா அந்த ரெண்டு நாள் ஏதோ ஒரு வகையிலே எல்லாத்தையும் நினைவுபடுத்தி சேர்த்து வைச்ச சக்தியை அழிச்சுது.
அவளுக்கு முழு ஒத்துழைப்பா இருந்த அக்காவும் மாமாவும் இதை கவனிச்சு, டயர்டா இருந்தா எல்லா வாரமும் வரலேன்னாலும் பரவாயில்லே-னு நித்தியவாசன் கிட்ட பேசிட்டு அவளுக்கு சொன்னாங்க. அவங்களுக்கு தெரியாதா அவங்க எல்லாருக்காகவும் தான் அவ வாரக் கடைசியிலே ஓடி வர்றா-னு. அதை விட முக்கியமா, வேதாசலம் நினைவா நித்தியவாசனும் வேதமூர்த்தியும் சேர்ந்து ‘வேதநித்தியம்’-னு ஒரு டிரஸ்ட் ஆரம்பிக்க முடிவு பண்ணாங்க. அதோட திறப்பு விழா, விவானோட பர்த்டே ரெண்டும் வரிசையா வேதமூர்த்தி வீட்டுலே ஃபங்க்ஷனும் வருது. மதுரியா ஊர்லே இருந்தா வராம இருக்க முடியாதுங்கறது இன்னொருக் காரணம்.
மதுரியாவுக்கும் அதுவே வசதியா போகவும் ரெண்டு வாரத்துக்கு ஒரு வாட்டி வீட்டுக்கு வந்தா. அப்போவும் அவ வராத வாரம் யாரோ ஒருத்தரோ ரெண்டுப் பேரோ அவளை ஹாஸ்டலுக்கு போய் பார்த்துட்டு, அவளோட ஒரு நாள் இருந்துட்டு வந்தாங்க. போய் பார்த்தவங்களுக்கு அங்கே இருக்கும் போது அவ முகத்துலே இருக்கற தெளிவு புரிஞ்சுது. அப்படி என்ன லவ்வோ அவன் மேலேனு ஆளுக்காளு சலிச்சுக்கிட்டாலும், இருக்குங்கறதை ஒத்துக் கிட்டே ஆக வேண்டிய கட்டாயம். மதுரியாவுக்கு குடும்பத்து மேலே அன்பு போலவே அவ ஆசிரியர்களோட அன்பும் கிடைச்சுது. படிக்கற பொண்ணை எந்த ப்ரொஃபசருக்குத்தான் பிடிக்காது. கூட படிக்கறவங்க கூட பெரிசா ஒண்ணும் நட்பு பாராட்டலே… ஆனா முகமும் திருப்பிக்கலே. கேட்கிற உதவியை தயங்காம பண்ணுவா. அதனால அவங்களுக்கும் அவளை பிடிச்சுது. ஆனா யார்கூடவும் ஒட்டாம தனியா இருக்கறதனால நிறைய பேர் அவளைப் பத்தி நினைக்கறது – திமிர் பிடிச்சவ, தலைகனம் பிடிச்சவ அப்படீ-னு தான். மதுரியாவுக்கு இது எதுவும் தெரியாது. தெரிஞ்சாலும் கவலை படற நிலைமையிலே அவ இல்லே.
அப்படித்தான் அன்னிக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு லைப்ரரியிலே இருந்து வர்றப்போ எம்.பி.பி.எஸ் மூணாவது வருஷம் படிக்கற பசங்க அவளை யூ.ஜி ஃபர்ஸ்ட் இயர்னு நினைச்சு ரேக்கிங் பண்ண ஸ்டார்ட் பண்ணாங்க. மாத்தி மாத்தி கேள்வி கேட்டு தொந்தரவு பண்ணாங்க. அப்போ ரீனாவோட சீனியரும், சீனியரோட ஃப்ரெண்டும் – விஷ்வாவும் ப்ரதீப்பும் கொஞ்ச தூரத்துலே வந்தாங்க. “டேய், அந்த பொண்ணு பிஜியில்லே? இவனுங்க எதுக்கு அவளை கலாட்டா பண்றாங்க?”-னு மதுரியாவை நோக்கி போன ப்ரதீப்பை பிடிச்சு நிறுத்தினான் விஷ்வா. “இருடா… ஏன் துள்ளறே? பார்ப்போம்…. இவ பிஜி-னு சொன்ன அவனுகளே விட்டுடுவானுங்க. ஆனா இது வாயே திறக்காம பேசாமலே இருக்கு. வாயை திறந்து நான் பிஜின்னு சொன்னா முத்து உதிர்ந்திடுமோ?”-னு கடுப்பா கேட்டான் விஷ்வா.
நிமிர்ந்த முதுகும் அசையாத உடம்பும் மதுரியாவுக்கு பயம்கிற உணர்வே இல்லே-னு காட்டுச்சு. ஆனா ரெண்டுப் பேருக்கும் அவ முகமே தெரியலே. “பேச மாட்டாங்களா?”-னு கேட்டான் ப்ரதீப். “பேசவே பேசாது… எல்லார் கிட்டேயும் ஒரு பார்வை, ஒரு ஒட்ட வைச்ச புன்னகை.. அவ்வளோ தான். அவ குரலை கேட்க கூடியவங்க ஒண்ணு என் ஜூனியர் ரீனா… அவளோட க்ளோஸ் ஃப்ரெண்ட். அப்புறம் அவ டிபார்ட்மெண்ட் ஸ்டாஃப். அவ்வளோ தான்”-னு தோளை குலுக்கினான் விஷ்வா.
“மத்தவங்ககிட்டேப் பேச மாட்டாங்களா?”-னு கேட்டான் ப்ரதீப். “யார் கிட்டேயும் பேசறதில்லே. சிரிப்பும் கிடையாது.. அந்த இத்துப் போன புன்னகையை தவிர வேற எதுவும் கிடையாது”-னு சொன்னான் விஷ்வா. “என்ன வலியோ? என்ன கஷ்டமோ? எனக்கு பாவமாத் தான் இருக்கு.. வா… போயி ஹெல்ப் பண்ணலாம். இந்த தன்ராஜ் குரூப்பும் கொஞ்சம் மோசம் தான்”-னு ரெண்டு பேரும் அவளை நோக்கி போனாங்க. அதுக்குள்ளே மதுரியாகிட்ட வேறே ஒரு லெக்சரர் வரவும் சரியா இருந்துச்சு. “ஏண்டா? நீங்களெல்லாம் டாக்டர் மாதிரியா பிஹேவ் பண்றீங்க?மூணாவது வருஷம் வந்தும் சீரியஸ்னெஸ் வராதா?”-னு அவங்களை திட்டிட்டு, “நீங்க போங்கம்மா”-னு மதுரியாவை அனுப்பி வைச்சார். “மச்சான்… இந்த அனாடமி விஜயனை கவனிச்சுட்டு அந்த ஊமைக் குசும்பியை பார்த்துக்கலாம்”-னு கறுவிட்டு போனாங்க. விஷ்வாவும் ப்ரதீப்பும் தோளை குலுக்கிட்டுப் போயிட்டாங்க. அதுலே இருந்து ஒரே வாரத்துலே ப்ரதீப்பும் மதுரியாவும் சந்திச்சாங்க.
அந்த வெள்ளிக்கிழமை சாயந்திரம் ஒரு ஆறு மணி இருக்கும். ரெஃபரன்ஸ் வேலையை முடிச்சுட்டு லைப்ரரியை விட்டு வெளியே வந்தா மதுரியா. ரூமுக்கு போயி விட்டத்தை பார்த்துட்டு படுக்க பிடிக்காம, ஆனந்தியா சொன்ன மாதிரி கேம்பஸை விட்டு வெளியே வாக் போகலாம்-னு நினைச்சுப் போனா. அங்கே வந்ததிலே இருந்து கேம்பஸை விட்டு வெளியே போகவே இல்லை அவ. அவங்க காலேஜ், ஹைவேலே ஊருக்கு வெளியே இருந்துச்சு. ஓரளவு ஆள் நடமாட்டத்தோட ஒண்ணு ரெண்டு வண்டிங்க போயிட்டு இருந்துச்சு. அந்த சாயங்கால நேரம் கொஞ்சமா காத்து அடிச்சுக்கிட்டு, நடக்க நல்லா இருந்துச்சு. கொஞ்ச நேரத்துலே கால் தன் போக்குலே நடந்துச்சுன்னா மனசு அது போக்குலே ஏதோ யோசிச்சுது. “ரியா… நீ செய்யறது சரியா டீ? பாட்டியை பார்த்து ரெண்டு வாரமாகுது. அவங்க உடம்புக்கு எப்படி இருக்கோ?”-னு யோசிக்கும்போதே ரெண்டுக் கை அவளை வேகமா அவளை ஒரு பெரிய மரத்துக்கு உள்ளே இழுத்துப் போட்டுச்சு. இழுத்த வேகத்துலே ஒரு உருவத்து மேலே வேகமா மோதி நிமிர்ந்தா. நிமிர்ந்த நேரம் மதுரியாவுக்கு பெரிய அதிர்ச்சி. அவ மோதின உருவத்துக்கும் அவளைப் பார்த்து இன்ப அதிர்ச்சி.
சுதாரிச்சு விலகறதுக்குள்ளே டமால்னு சத்தத்தோட கோணலா போயி ஒரு மரத்து மேலே மோதிச்சு ஒரு சின்ன லாரி. அதுக்குள்ளே இருந்து அதை ஓட்டிட்டு வந்த டிரைவரும் குதிச்சிட்டான். சுத்தி இருந்தவங்கள்லே ஒருத்தர், “ஏன்மா? வண்டி தாறு மாறா வருது.. விலகிப் போ-னு கத்தறோம்… டிரைவரும் ஹார்ன் அடிக்கறார்… எந்த உலகத்துலே இருக்கே? அந்த லாரி அடிச்சிருந்தா என்ன ஆகி இருக்கும்?”-னு திட்டினதும் தான், தனக்கு என்ன நடந்திருக்கும்-னு புரிஞ்சு அதிர்ச்சி அதிகமாச்சு மதுரியாவுக்கு. “சாரி..”-னு திக்கித் திணறினா. “என்ன சாரியோ… உயிர் போனா வருமாம்மா?”-னு கோபமாவே கேட்டார் அந்த மனுஷன். “விடுங்கண்ணா… ஒண்ணும் ஆகலியே”-னு சமாளிச்சான் விஷ்வா. இருந்தா பிரச்சினை ஆயிடும்-னு வேகமா கேம்பஸ்க்குள்ளே கூட்டிட்டுப் போயிட்டாங்க. ப்ரதீப்புக்கு மதுரியாவை பார்த்து ஒரே ஆச்சர்யம், சந்தோஷம்.. அவன் கண்ணுலேயும் முகத்துலேயும் அப்படி ஒரு அன்பும் உரிமையும் பொங்கி வழிஞ்சுது.
உள்ளே போய் தண்ணி வாங்கி குடுத்து குடிக்க வைச்சான். “ஆர் யூ ஓகேம்மா?”-னு கேட்டான். அதுலே தான் அவ்வளோ கனிவு. மதுரியாவுக்கு அது வித்தியாசமா தெரிஞ்சாலும், “ம்ம்ம்… உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப தேங்க்ஸ்… எவ்வளோ சொன்னாலும் பத்தாது.. என் உயிரை காப்பாத்தி இருக்கீங்க”-னு கைகூப்பி கண் கலங்க சொன்னவளை பார்த்ததும் இவளையா திமிர் புடிச்சவ-னு சொல்றாங்கனு இருந்துச்சு. “சே… சே… என்ன இது?யாரானாலும் பண்ணி இருப்போம்”-னு கூப்பின கையை கீழே இறக்கினான் ப்ரதீப். கையை வெடுக்னு உருவினா மதுரியா. “அதை மறந்திடுங்க சிஸ்டர்”-னு விஷ்வாவும் சொன்னான். ஃப்ரெண்டுக்கு அந்த பொண்ணு மேலே இருக்கற ஆர்வத்தை பார்த்து, “நாங்களும் உங்களை ஹலோ, ஹாய்-னு கூப்பிட்டது உங்களைத்தான்-னு உங்களுக்கு புரிஞ்சு இருக்காது… ஒரே காலேஜ் தானே… என் பேர் விஷ்வஜித்.. அனீஸ்தியாலஜி செகண்ட் இயர். இவன் என் ஃப்ரெண்ட் ப்ரதீப். சைக்கியாட்டிரி செகண்ட் இயர். நீங்க என்ன படிக்கறீங்க?”-னு கேசுவலா இண்ட்ரோட்யூஸ் பண்ணான்.
கொஞ்சம் அமைதிக்கு அப்புறம், “சாரி, என் பேர் மதுரியா… கார்டியாலஜி முதல் வருஷம்”-னு மதுரியா சொல்லவும், திரும்பவும் முகத்துலே அப்படி ஒரு சந்தோஷம் ப்ரதீப்புக்கு. “நம்ம சந்திச்சது கடவுள் செயல். உன்னை மீட் பண்ணதுலே ரொம்ப சந்தோஷம். ஐ கன்சிடர் இட் ஏஸ் மை லக்கி ஸ்டார்ஸ்”-னு உணர்ச்சி வசப்பட்டு பேசினான். “வாட்? என்னாச்சு? எக்ஸ்க்யூஸ் மீ!! சேவ் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.. நான் வர்றேன்”-னு வெடுக்னு கிளம்பினா மதுரியா. “டேய்… லூசு… பிடிச்சிருந்தாலும் இப்படியாடா நடந்துப்பே? விட்டா இன்னிக்கே ப்ரோபோஸ் பண்ணிடுவே போல?”-னு திட்டினான் விஷ்வா. “ஏது? ப்ரோபோஸா? ஓங்கி ஒரு அறைவிட்டா கன்னம் திரும்பிடும். அரை வேக்காடு”-னு கோபப்பட்டான் ப்ரதீப். “வேறே என்ன? லவ் பண்ற மாதிரி பேசிட்டு, இப்போ அடிக்க வர்றே?”-னு கேட்டான் விஷ்வா. “லவ் தான் விஷ்வா… ஆனா நினைக்கற மாதிரி கிடையாது… இது வேறே.. வா சொல்றேன்”னு நண்பனை கூட்டிட்டு போனான் ப்ரதீப்.
அடுத்த நாள் சாயங்காலம் அவளைப் பார்க்க வந்த நித்தியவாசன் கிட்ட விஷயத்தை சொல்லவும், விஷ்வாவையும் ப்ரதீப்பையும் பார்த்தே ஆகணும்-னு கேட்டார். “எங்கே போய் தேட முடியும்பா?”-னு இழுக்கும் போதே கனிவான சிரிப்போட எதிரே வந்து நின்னான் ப்ரதீப். மதுரியாவும் நித்தியவாசனுக்கு அறிமுகப்படுத்தி வைச்சா. ஒரு பத்து நிமிஷத்துலே ரெண்டுப் பேரும் சகஜமா நல்லா பேசினதை கவனிச்சா. அவளுக்குள்ளே இன்னும் கடுப்பேறிச்சு. ஆனா, வெளிப்படையா கண்ணியமும் கனிவுமா பழகற ப்ரதீப்பை அவருக்குப் பிடிச்சுப் போச்சு. ரெண்டுப் பேரு கூடவும் பேசிட்டு கிளம்பினார். “உங்க மனசுலே என்ன நினைப்பு?”-னு மதுரியா கோபமா ஆரம்பிச்சு திரும்பும் போது அவன் அங்கே இருக்கலே. “சே..”-னு காலை உதைச்சுட்டு அவ கிளம்பிட்டா. இதே நாடகம் தொடர்ந்துச்சு. காலையிலே சாயந்திரம் ரெண்டு வேளை அவளை பார்க்க வந்தான். சாயங்கால நேரங்களில் அவளுக்கு பாதுகாவலன் ஆனான். பேச்சே இல்லே. வெறும் சிரிப்புத்தான். நாலாவது நாள் அவளைப் பார்க்க ப்ரதீப்போட அப்பா சந்திரன் வந்தார். கண்ணுலே நீர் கோத்து அவ தலையிலே கை வைச்சு ஆசீர்வாதம் பண்ணிட்டுப் போனார்.
மதுரியாவுக்கு நடக்கறதை எல்லாம் பார்த்து பொறுமை போயிட்டே இருந்துச்சு. காலேஜ்லே இந்த ஸ்டாக்கிங் வேறே யாரும் பார்த்தா பெரிய பிரச்சனை ஆகிடும்-னு பயந்தா. விஷ்வாவும் இப்போ எல்லாம் 90% நேரத்துலே கூடவே வந்தான். பார்க்கும் போதெல்லாம் அவன் கேட்கிற ஒரே கேள்வி… “இதெப்படி சாத்தியம்? இது நடக்குமா?”-னு தான். ப்ரதீப் தோளை குலுக்கிட்டு போயிடுவான். “சத்தியமா நடக்கவே நடக்காது. அது எப்படித்தான் பார்த்த உடனே இந்த காதல் கண்றாவி எல்லாம் வருதோ? வந்து வாயை திறக்கட்டும், அப்போ வைச்சுக்கறேன்”-னு மனசுலே கறுவினா மதுரியா. நாளாக நாளாக கொஞ்சம் கடுப்பானவ, போற வழியை மாத்தி போயி அவங்களை அலைய விட்டா. காலேஜ்லே இருந்து தாமதமா கிளம்பினா. கூட நேரம் லைப்ரரியிலே கழிச்சா. கேம்பஸ்க்கு உள்ளே போறதுக்கே, வெளியே போய் முட்டு சந்து வழியா வந்தா. சில நாள் அவளுக்கும் முன்னாடி ஒரு சிரிப்போட போற இடத்துக்கு போயி காத்திருந்தான் ப்ரதீப். சில நாள் தேடி அலைஞ்சான். இதை மதுரியா பண்ண காரணம் இருந்துச்சு. நித்தியவாசன் வந்த அடுத்த வாரம் சென்னைக்கு போக, ப்ரதீப் அவளை சென்னைக்கும் பின் தொடர்ந்தான். அந்த செயல்லே தான் ரொம்ப கடுப்பானா.
அதைத் தடுக்க அவ தேடிப் பிடிச்ச இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் அவளுக்கே பெரிய ஆபத்தா முடிஞ்சுது. அவ பதுங்கி வர்ற முட்டுச் சந்து, அந்த தேர்ட் இயர் அடாவடி பசங்க ஆறு பேரும் சேர்ந்து காலேஜுக்கு தெரியாம மறைவா தண்ணி அடிக்கற இடம். அன்னிக்கும் தண்ணி அடிச்சுட்டு கிளம்பும் போது தான் குறுக்க மாட்டின பேக்கோட சுத்தி பார்த்துட்டே வந்த மதுரியாவை பார்த்தாங்க. ஒருத்தன் கண்ணை காட்டவும், இவன் வேகமா போய் அவ கையை பிடிச்சு இழுக்கவும், ரிஃப்லெக்ஸ்லே அவன் கன்னம் பழுக்க ஓங்கி ஒரு அறை விட்டா மதுரியா. “ஹேய்… அடிங்க…. யார் மேலே கை வைக்கறே? ஃபர்ஸ்ட் இயர் படிக்கற உனக்கு இவ்வளவு திமிரா?”-னு அத்தனை பேரும் ஓடி வந்தாங்க. நிதானத்துலே இல்லாத ரெண்டு பேரை அடிச்சு வீழ்த்தறது அவளோட தற்காப்புக் கலை-னால முடிஞ்சுது. அதுக்குள்ளே ரெண்டு பேரு ஆளுக்கொரு பக்கம் கையை பிடிக்கவும், எதிர்லே நாலு பேர் கோர முகத்தோட வந்து நிற்கவும் முதல் முறையா பயத்துலே கண்ணு விரிஞ்சுது.
“என்ன ஆடி முடிச்சுட்டியா? இப்போ என்ன பண்ணப் போறே?-னு பேசிட்டே ஒருத்தன் அவ டாப்லே கையை வைக்க போனான். பயத்துலே உதறல் எடுக்க ஆரம்பிச்சுது மதுரியாவுக்கு. கண்ணை இறுக்க மூடிட்டா. “மச்சான், கண்ணை மூடிட்டா டிரெஸ்ஸை உருவிட்டா கூட தெரியாதாமே”-னு சிரிச்சான் தன்ராஜ்.
அப்போவும் வாயைத் திறந்து எதுவும் பேசவே இல்லை… கண்ணையும் திறக்கலே. அதுக்கப்புறம் டமால் டுமீல்னு ஒரே சத்தம். யார் யாரை அடிச்சாங்க எதுவும் தெரியாது மதுரியாவுக்கு. ஆனா கண்ணை திறந்தப்போ இவங்க ஆறு பேரையும் அடிச்சு கிழிச்சிருந்தாங்க விஷ்வா, ப்ரதீப், இன்னும் சில பிஜி படிக்கற ஸ்டூடண்ட்ஸ். அதுலே ரெண்டு மூணு பேர் மதுரியாவோட சீனியர்ஸ் அப்புறம் க்ளாஸ்மேட்ஸ். “எவ்வளோ திமிர்டா உங்களுக்கு? பிஜி பொண்ணு கிட்ட உங்க வேலையை காட்டறீங்க? மூணாவது வருஷம் தானே.. எப்படி கண்டின்யூ பண்றீங்க-னு பார்க்கிறோம்… இடியட்ஸ்”-னு கறுவினாங்க சீனியர்ஸ் எல்லாம்.
வீரமா வசனம் பேசின ஆறு பேருக்கும் போதை தெளிஞ்சதும் நிதர்சனம் புரிய ஆரம்பிச்சுது. பணம் இருக்கற பசங்களைத் தவிர மத்தவங்கெல்லாம் கெஞ்ச ஆரம்பிச்சாங்க. “இந்த அறிவு ஒரு பொண்ணு மேலே கை வைக்கறதுக்கு முன்னாடி இருந்திருக்கணும். ஃபர்ஸ்ட் இயர்னா அப்படி தோணுமா? அதையும் பார்க்கலாம்”-னு மிரட்டவும் மொத்தமா கால்லே விழுந்தாங்க ஆறு பேரும். கடைசியிலே மன்னிப்பு கேட்க சொல்லி மிரட்டி விட்டாங்க. “போகலாம்… நட”-னு மதுரியா கிட்டக் கோபமா சொன்னான் ப்ரதீப்.