கேண்டீன்லே உட்கார வைச்சு டீ வாங்கி முன்னாடி டொக்னு வைச்சான். “ம்ம்ம்ம்… குடி… அதுக்கு முன்னாடி மூஞ்சியை கழுவு”-னு கோபம் குறையாம சொன்னான். அவன் சொன்னதை செஞ்சாலும் அவளுக்குள்ளும் கோபம் கனன்றது. அவ கொஞ்சம் சுதாரிக்கவும், “கொஞ்சமாவது அறிவிருக்கா? சீக்கிரமா ரெஃபரன்ஸ் வேலை முடிஞ்சா ரூமுக்கு போய் தூங்க வேண்டியது தானே? அதை விட்டுட்டு முட்டுச்சந்து, குறுக்குத் தெரு-னு சுத்திட்டு இருக்கே?”-னு எகிறினான் ப்ரதீப். “எல்லாம் உங்களால தான்… நீங்க என்னை ஃபாலோ பண்றீங்களே-னு உங்களை அவாய்ட் பண்ணத்தான் அதெல்லாம் பண்ணேன. ஏன் பண்றீங்க? வை டோண்ட் யூ லீவ் மி அலோன்?”-னு கத்தினா மதுரியா. “நீ என்னை தப்பா நினைக்கிறியா மது?”-னு வலியோட கேட்டான் ப்ரதீப். “இல்லை… ஆனா இப்படி என் பின்னாடி வந்தீங்கன்னா நாலு பேர் நம்மளை தப்பா நினைப்பாங்க… கிசுகிசுவாகிடும்… இருக்கிற பிரச்சினைகளே எனக்கு முடியலே.. இதுலே புதுசா எதுக்கு?”ன்னு சொல்லவும் தான் மூச்சை வெளியே விட்டான் ப்ரதீப்.
மதுரியாவும் மூச்சு எடுத்துவிட, “சொல்லுங்க… ஏன் ஃபாலோ பண்றீங்க? ரெண்டு வாட்டி என்னை சேவ் பண்ணி இருக்கீங்க.. நான் உங்களுக்குக் கடமைப் பட்டிருக்கேன். ஆனா நீங்கப் பின்னாடியே வர்றது ஒரு மாதிரி இருக்கு.. எனக்கு புரியலே… பயமா இருக்கு. தயவு செய்து சொல்லுங்க ப்ளீஸ்”-னு அலுப்பும் கோபமுமா கேட்டா. “எனக்கே புரியாம இன்னும் அதிசயமா இருக்கறதை நான் என்ன-னு சொல்லுவேன் மது?”-னு ஒரு சின்ன சிரிப்போட கேட்கவும், “ப்ளீஸ்… ப்ளீஸ்… என்னை ரியா-னு கூப்பிடுங்க… வேறே எப்படி வேணும்னாலும் கூப்பிடுங்க.. ஆனா மது-னு மட்டும் வேண்டாம்… ப்ளீஸ்”-னு கெஞ்சலா சொன்னா மதுரியா. “ஓகே… ஓகே… ரியா… போதுமா? நான் காணறது கனவா நனவா-னு தெரியறதுக்குத் தான் உன் பின்னாடி வர்றேன்.. தட்டி விழிச்சா கனவா போயிடுவியோ-னு ஒரு பயம். கனவில்லே நிஜம்-னு உறுதிப் படுத்திக்கத்தான் அப்பாவையும் கூப்பிட்டு காமிச்சேன்… யூ நோ வாட். நீ கனவில்லே.. நிஜம்”-னு சிரிச்சான் ப்ரதீப். மதுரியாவுக்கு இவன் தண்ணியை போட்டுட்டு உளர்றானோன்னு சந்தேகம்.
அவ பார்வையை பார்த்து கடகட-னு சிரிச்சு, “நான் டீ-டோடலர் மா. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது”-னு சொன்னான். ‘நீயே சொல்லி முடி’-னு பார்த்தா மதுரியா. “சாரி ரியா… நான் முதல்லே என்னைப் பத்தி சொல்றேன். அப்போ தான் உனக்கு எல்லாம் புரியும்.. எங்களோடது நாலு பேர் கொண்ட அழகான குடும்பம்.. குடும்பமா இருந்தோம்”-னு விரக்தியா சிரிச்சான். அவனோட ‘இருந்தோம்’ங்கற வார்த்தை மதுரியாவுக்கு சுருக்-னு வலிச்சுது.
“எங்கப்பா… டாக்டர் சந்திரன்.. ஒரு கார்டியாலஜிஸ்ட்… சென்னையிலே எங்களுக்கு ஒரு நர்சிங் ஹோம் இருக்கு. இன்னமும் மல்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல் கார்ப்பரேட்டுக்கு விலை பேசாம, காசுக்காக மட்டுமில்லாம திருப்திக்காகவும் எங்கப்பா நடத்திக்கிட்டிருக்கார். என் எண்ணமும் அதுதான். கடவுள் தேவைக்கு அதிகமாகவே பணம் குடுத்து இருக்கான் ரியா.. அது போதும்… எங்கம்மா வத்சலா.. ஒரு ஃபிஸியோதெரப்பிஸ்ட்… எங்க நர்சிங் ஹோம்லேயே தான் ப்ராக்டிஸ் பண்ணாங்க. என் தங்கை.. ஒரே தங்கை.. என்னைவிட ரெண்டு வயசு சின்னவ… அவளுக்கும் மெடிசின் தான் ஆசை. என் காலேஜ்லேயே தான் கிடைச்சுது. எங்க சந்தோஷத்துக்கு அளவே இல்லே. நினைச்சதெல்லாம் நடந்துச்சு.. கேட்டதெல்லாம் கிடைச்சுது… அப்போவே புரிஞ்சிருக்கணும்… கடவுள் எங்க தலையிலே தாங்க முடியாத இடியை இறக்கப் போறான்”-னு… அப்படீன்னு சொல்லி கண்ணை இறுக்க மூடி உணர்வுகளை அடக்கினான்.
அவனோட நிலை மதுரியாவுக்கு ரொம்ப சங்கடமாயிருக்கவும், “தீப்..”-னு கூப்பிட்டு அவன் தோள்லே கையை வைக்கவும், டக்-னு கண்லே மின்னலோட அவளை பார்த்து, “எப்போவெல்லாம் நீ பொய்யோ-னு தோணும் போதெல்லாம், இல்லை-னு சொல்லாம சொல்றா மாதிரி தான் உன் வார்த்தைகள் அமையுது ரியா. எங்கம்மாவும் என் தங்கையும் என்னை தீப்-னு தான் கூப்பிடுவாங்க”-னு நிறைவா ஸ்மைல் பண்ணான். மதுரியா முகத்துலே தன்னால புன்னகை வந்துச்சு. “ஆமா ரியா… ஆறு வருஷத்துக்கு முன்னாடி, நான் எம்.பி.பி.எஸ் செகண்ட் இயர் படிக்கும் போது, அவளுக்கும் அட்மிஷன் கிடைச்சு சேர்றதுக்கு முன்னாடி ஒரு கோரமான ஏக்சிடெண்ட்லே எங்கம்மாவையும் அவளையும் இழந்துட்டேன்… ரெண்டு பேரும் ஸ்பாட்லேயே இறந்துட்டாங்க.. ரொம்ப நொறுங்கிப் போனோம் நானும் அப்பாவும்… துக்கம் தாங்காம நான் செத்துக்கூட போயிடலாம்-னு நினைச்சேன். ஆனா அப்படி எல்லாம் போக முடியாதுல்லே… எனக்கும் அப்பாவுக்கும் ஒருத்தரை ஒருத்தர் விட்டால் வேறு யாரும் இல்லை. ஒருத்தருக்காக இன்னொருத்தர் வாழ ஆரம்பிச்சோம். நாளடைவுலே பழைய அமைதி வந்துச்சு. இதோ இப்போ வரைக்கும் சந்தோஷமா இருக்க டிரை பண்றோம்… ஆனா உன்னை பார்த்ததும் எனக்கு குழப்பம். சந்தோஷம்… ஆச்சர்யம் எல்லாம் வருது. அதை விட… இது எப்படி-னு அதிசயம் தான்…. எனக்கு மட்டுமில்லே… அப்பாவுக்கும் தான்”-னு நிறுத்தினான் ப்ரதீப்.
நீர் வழியற கண்ணை துடைச்சு, “உங்க மனசுலே வாழறவங்களை நான் ஏதோ ஒரு வகையிலே நினைவுப் படுத்தறேன்-னு தெரியுது… ஆனா நல்ல வழியிலா… கெட்ட வழியிலான்னு தெரியலே”-னு சொன்னா மதுரியா. ப்ரதீப் சிரிச்சுட்டே அவன் மொபைல்லே ஒரு போட்டோவை காட்டினான். “இதைப் பார்… எந்த வழியிலேன்னு புரியும்”-னு சொன்னான் ப்ரதீப். ப்ரதீப்போட அம்மா வத்சலா, நல்ல நிறமா, களையா, அழகா நிறைவான வாழ்க்கையோட சந்தோஷம் முகத்துலே பிரதிபலிக்க சாந்தமான சிரிப்போட இருந்தாங்க… ஆனா ப்ரதீப்போட தங்கை போட்டோவை பார்த்து திகைச்சு போனா. பேச்சே வரலே… “இது… இவங்க… உங்க தங்கச்சியா? இவங்க.. இது.. இது எப்படி சாத்தியம்?”-னு திக்கித் திணறிப் போனா மதுரியா. “ஆமா… அதே ஷாக் தான் எங்களுக்கும்… ஆனா நேச்சருக்கு என்ன விளக்கம் நம்மால குடுக்க முடியும்?”-னு கேட்டான் ப்ரதீப். அப்படி அவங்க திகைக்க காரணம், ப்ரதீப்போட தங்கை அச்சு அசலா மதுரியாவைப் போலவே ஜாடையிலே இருந்தா. அவங்க ரெண்டுப் பேருக்கு நடுவே மூணு வித்தியாசம் தான். அவ மதுரியாவை விட உயரம். போட்டோலே ஏறக்குறைய ப்ரதீப்போட உயரம் இருந்தா. நல்ல நிறம் வத்சலா போல. அப்புறம் சின்ன கண்ணு. மத்தபடி ரெண்டுப் பேரையும் பக்கத்துலே நிறுத்தினா அக்கா-தங்கை மாதிரி தான் இருந்தாங்க. இது எப்படி சாத்தியம்-னு இயற்கைதான் சொல்லணும்.
மதுரியாவுக்கு ப்ரதீப்போட மனநிலை நல்லா புரிஞ்சுது. தன்னோட தங்கையாவே நினைச்சு தான் அன்பு காட்டறான். இன்னும் சொல்லப் போனா மொத்தமா எடுத்துக்கிட்ட கடவுள் பாதியாவது கண்ணுலே காட்டின சந்தோஷம். அப்பாவும் சரி.. மகனும் சரி யதார்த்தம் மறந்து கனவுலே வாழ தயாரில்லை. அவங்க வீட்டுப் பொண்ணு உயிரோட இல்லே-னு உணர்ந்தே இருந்தாங்க. ஆனா அவளைப் போலவே இருந்த மதுரியா மேலே ரெண்டுப் பேருக்கும் ஒரு அழகான அன்பு வந்ததும் உண்மை. “என்னால நம்பவே முடியலே தீப்… நிஜமா?”-னு சொன்னா மதுரியா. “அவ பேர் என்ன-னு தெரியுமா? மதுரீமா.. மதுரீமா சந்திரன்… வீட்டுலே கூப்பிடறது மாதுரி”-னு சொல்லவும், “ஹாங்..”-னு வாயை பிளந்தா மதுரியா. “ஹேய்… முழிச்சுக்கோ… ஹாஸ்டலுக்கு போகணும் ரெண்டுப் பேரும்… இல்லேன்னா வார்டன் ரெண்டு பேரையும் பின்னிடுவாங்க”-னு சிரிச்சுக்கிட்டே உலுக்கினான் ப்ரதீப். “உனக்கும் அவளுக்கும் கேரக்டர்லே மலையளவு வித்தியாசம் ரியா. நீ தைரியசாலி, தெளிவானவ, உன்கிட்ட ஒரு ஆர்ப்பாட்டமில்லாத பேச்சு, மனசுலே இருக்கறதை நேரா சொல்ற குணம் எல்லாம் இருக்கு… மாதுரி உனக்கு நேர் எதிர் குணம்… பயந்தாங்குள்ளி, பேச்சுல ஓட்டை சல்லடை”-னு சொல்லவும் ரெண்டுப் பேரும் சிரிச்சாங்க.
அதுக்கப்புறம் ரெண்டுப் பேரும் இயல்பாவே பழகினாங்க. நட்பும் பாசமும் கலந்த நிலை வளர ஆரம்பிச்சுது. அந்த வாரக் கடைசியிலே வந்த பரத் – ஆனந்தியாகிட்ட விஷயத்தை சொல்லவும் ரொம்ப நன்றி சொன்னாங்க. வீட்டுலே சொல்லி பெரியவங்க நாலுப் பேரும் கூட ப்ரதீப்கிட்ட பேசினாங்க. மதுரியா ப்ரதீப்பை ரீனாவுக்கும் அறிமுகம் பண்ணா. ஆனா ப்ரதீப்பும் மதுரியாவும் அதிகமாவே நேரம் செலவழிச்சாங்க. அதை பல கண்கள் என்னடா-னு பார்த்துச்சு. அடுத்த வாட்டி சென்னை போனப்போ சந்திரனை மீட் பண்ணா மதுரியா. அவரும் நிறைய பேசினார். கார்டியாலஜி படிக்கறான்ன உடனே அவங்க பேச்சு சுவாரசியத்துலே ப்ரதீப்பையே மறந்துட்டாங்க. இவ்வளோ எல்லாம் நடந்தாலும் மதுரியா ஒண்ணும் மாறிடலே. பழையதைக் கடந்தும் போகலை. ப்ரதீப் கிட்ட இயல்பா பேசினாலும் அது கலகலப்பா இருக்கலே. கண்ணுலே எப்பவும் ஒரு சோகம், வெறுமை இதெல்லாம் மாறாம அப்படியே இருந்துச்சு.
ஒரு சனிக்கிழமை.. பக்கத்துலே கோயிலுக்கு போயிட்டு பிராகாரத்துலே உட்கார்ந்து சும்மா பேசும் போது, “ரியா, உனக்கென்ன ப்ராப்ளம்? மறந்து போய் கூட மனசு விட்டு சிரிக்கறதில்லே? ஏன்? வம்பு பேச கேட்கலே… உதவ முடியலேன்னாலும் ஒரு வடிகாலா இருக்கட்டும்-னு கேட்கிறேன்”-னு கேட்டான் ப்ரதீப். “பிரச்சினை தான். ஆனா நீங்க அனுபவிச்ச பிரச்சினைக்கு முன்னாடி இதெல்லாம் பிரச்சினை-னு சொல்லிக்கவே அசிங்கமா இருக்கு”-னு சிரிச்சா மதுரியா. அது கண்ணை கூட எட்டாத சிரிப்பு. “ஓஹோ… ஒட்ட வைச்சா மாதிரி சிரிக்க வைக்கற கஷ்டம் சின்னது… நீயே ஓவர் ரியேக்ட் பண்றேன்-னு சொல்றே. அப்படித்தானே?”-னு கிண்டலா கேட்டான். “சொல்றேன் தீப்! மறைக்கணும்-னு தேவையே இல்லை. சென்னையிலே நித்யா கன்ஸ்டிரக்ஷன்ஸ் கேள்விப்பட்டிருப்பீங்க இல்லே?”ன்னு கேட்டா மதுரியா. “ம்ம்ம்… ஓரளவு பெரிய கம்பெனி.. டியர் 2-லே டாப்பர். ஏன்?”-னு கேட்டான். “அதோட ஃபவுண்டர்/எம்.டி தான் எங்க அப்பா நித்தியவாசன். போர்ட் டைரக்டர் எங்க தாத்தா நித்தியானந்தம். ‘நித்தியா’வோட ப்ரோமோட்டிங் பார்ட்னர் பில்டர் – அதாவது நித்தியாவோட 90% ப்ராஜெக்ட் பில்டிங் அண்ட் ப்ரோமோடிங் வேலை பண்றது ‘வேதம் பில்டர்ஸ்’. அவங்க க்ளோஸ் ஃபேமிலி ஃப்ரெண்ட்.. மூணு தலைமுறை நட்பு. ரெண்டு ஃபேமிலிக்கும் ரெண்டு பேருக்கும் ஒருத்தர் இன்னொருத்தர் சுத்தியிருக்கற ரிலேடிவ்ஸை விட க்ளோஸ்”-னு நிறுத்தினா மதுரியா.
“இண்டரஸ்டிங்… நானும் அங்கிள், ஆண்டி, பரத் கூட பேசியிருக்கேன். இன்னிக்குத் தான் முழு விவரம் தெரியும்.. சொல்லு”-னு கேட்டான். “இவங்களுக்குள்ளே நட்புங்கறதை தாண்டி சம்பந்தம் பண்ணணும்-னு நினைச்சாங்க. அதுக்கு ரெண்டு வீட்டு மூத்த பிள்ளைங்களும் ஒத்துக்கலே. ரெண்டு பேரும் வேறே ஒருத்தரை விரும்பினாங்க. கொஞ்ச நாள் கழிச்சு எனக்கும் விதுரனுக்கும் சம்பந்தம் பேசினாங்க”-னு கதையை தொடங்கினா. எல்லாமே சொன்னா. “ஆனா.. நீ போனப்போ என்ன தான் நடந்துச்சு விதுரன் ரூம்லே?”-னு கேட்டான் ப்ரதீப். “சாரி தீப்… அதை சொல்ல முடியாது. அது என்னோடவே முடிஞ்சு போகப் போற ஒண்ணு”-னு வழிஞ்ச தண்ணியை துடைச்சு அழுத்தமா சொன்னா. “அட பைத்தியமே.. அது தான் உன் மனசை உருக்கி வாட்டற விஷயம். அதை சொல்லாம உன்னை மீட்கவே முடியாதே”-னு மனசுலே நினைச்சான். “ரியா, நீ ஏன் உன் அன்பை விதுரன் கிட்ட சொல்லலே?”-னு கேட்டான் ப்ரதீப். “அது தப்பு தீப். அங்கீகாரம் வர்றதுக்கு முன்னாடி சொந்தம் கொண்டாட நினைக்கறது தப்பு. அந்த அன்புக்கே மரியாதை இல்லாம பண்றா மாதிரி.. அதோட நடக்காம போனா இன்னும் வலிக்கும்”னு சொன்னா மதுரியா.
பெருமூச்சு விட்ட ப்ரதீப், “இப்போ மட்டும் வலிக்காம குளுகுளு-னு ஜாலியா சுத்திக்கிட்டிருக்கேயாக்கும்?நம்ம தலையெழுத்து இதுலே கூடவா ஒரே மாதிரி இருக்கணும்?”-னு தலையிலே அடிச்சுக்கிட்டான். “தீப்..என்ன சொல்றீங்க?”-னு அதிர்ந்தா மதுரியா. ப்ரதீப்புக்கு ஒரு ஆணா விதுரனோட ஏக்கம், அவனுக்கு மதுரியா மேலே இருந்த வெறித் தனமான அன்பு, அதோட பிரதிபலிப்பு எதிர்பார்த்து அது கிடைக்காத ஏமாற்றம் எல்லாமே புரிஞ்சது, அதுல பண்ணக் கூடாதது எல்லாம் பண்ணிட்டான்-னு புரிஞ்சுது. அதே மாதிரி மதுரியா தனக்கு-னு லைன் போட்டு அதுக்குள்ளேயே இருந்துட்டான்னும் புரிஞ்சிகிட்டான். ரெண்டுப் பேர்லே யாராவது ஒருத்தர் கொஞ்சம் இறங்கி இருந்தாக் கூட இவளுக்கு இந்த வேதனை இருந்திருக்காது-னு வருத்தப்பட்டான் ப்ரதீப். ஆனா பேசி பயன் இல்லை. இவ சொல்றதை பார்த்தா அவனுக்கு இந்நேரம் அந்த சுவாதி கூட மேரேஜ் ஆகியிருக்கும்-னு நினைச்சு விட்டுட்டான். “ஆமா.. ஏன்? எங்களுக்கெல்லாம் லவ், பார்ட்னர் எல்லாம் இருக்கக் கூடாதா?”-னு கிண்டலா கேட்டான் ப்ரதீப்.
“சரி… சரி… இருக்கலாம்.. சொல்லுங்க. யார், எங்க அண்ணி?”னு சிரிச்சுக்கிட்டே கேட்டா. “அண்ணி இல்லே… எக்ஸ் அண்ணி! தற்சமயம் உன் அண்ணன்காரன் சிங்கிள்”-னு கண்ணுலே சோகத்தோட சொன்னான். “என்னாச்சு?எப்படி?”-னு கேட்டா மதுரியா. “அம்மாவும் மாதுரியும் இறக்கறதுக்கு ஒரு வருஷம் முன்னாடி, ஃபர்ஸ்ட் இயர் சேர்ந்தப்போ தான் நந்தினியை மீட் பண்ணேன். லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்! அவளும் பி.பீ.டி ஃபர்ஸ்ட் இயர் சேர்ந்தா. ஆறு மாசத்திலே ப்ரோபோஸ் பண்ணி பயங்கர லவ் தான். அம்மாவும் மாதுரியும் இறந்தப்போ என்னை ரொம்ப சப்போர்ட் பண்ணா. அவ கோர்ஸ் நாலு வருஷத்துலே முடிஞ்சிருச்சு. அவங்க வீட்டுலே மேற் படிப்பு இல்லே, மேரேஜ்-னு சொன்னாங்க. பிஜி படிக்கறேன்னு யூஎஸ் போனா. எங்க ரெண்டுப் பேரையும் பிரிக்க முயற்சி பண்றாங்களோ-னு பயந்து என் கிட்ட அடம் பண்ணி ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணலாம்-னு சொன்னா. காதல் மயக்கம்… செஞ்சேன்.. நாலாவது வருஷத்துலே கல்யாணம் பண்ணியாச்சு. மனசுலே பாரம் ஏறிடுச்சு. அஞ்சாவது வருஷம் படிப்பும் சீரியஸா போச்சு. அவளும் யூஎஸ் போயிட்டா. அவளுக்கு தேவையான டைம் குடுக்க முடியலே. ஆறு மாசம் நிறைய சண்டை தான். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அவ பேச்சு, கால்ஸ், மெசேஜஸ் எல்லாம் குறைஞ்சு நின்னும் போச்சு. எதோ தப்பு-னு பேசப் போனா, ரிலேஷன்ஷிப் போதும், ஒத்து வராது-னு சொன்னா. நிறைய பேசி கன்வின்ஸ் பண்ணேன்.. ஒத்துக்கலே… சரி நேர்லே பேசிக்கலாம்-னு விட்டுட்டேன். அடுத்த, ரெண்டாவது நாளே நேர்லே வந்தா டைவர்ஸ் அப்ளை பண்ண-னு சொல்லி..”ன்னு அதிரவைச்சான்.
“டைவர்ஸா? ஆறு மாசத்துக்குள்ளேயா?”-னு கேட்டா மதுரியா. “ஆமா.. டைவர்ஸ் அப்ளை பண்ணத்தான் வந்தேன்-னு சொன்னப்போ தான், அவ அதை ரொம்ப தெளிவா முடிவு பண்ணி இருக்கா-னு புரிஞ்சுது. நானும் ஒண்ணும் சொல்லலே. ‘ம்யூச்சுவல் கன்செண்ட்’-லே ஆறு மாசத்துலே டைவர்ஸ் கிடைச்சுது. அலைச்சல் கூட இல்லாம எல்லாம் நந்தினியே பண்ணிக்கிட்டா. எங்கப்பாவுக்கு தெரியாமலே கல்யாணம், டைவர்ஸ் எல்லாம் முடிஞ்சுது… ஒரு வருஷத்துக்கு முன்னாடி நந்தினிக்கு யூஎஸ்லேயே கல்யாணம் முடிஞ்சிருச்சாம். மெயில் பண்ணா. டேக் கேர்-னு ரிப்ளை போட்டு க்ளோஸ் பண்ணிட்டேன்”-னு சொன்னான். “சே… இதெல்லாம் பொண்ணா? மூதேவி”-னு திட்டினா மதுரியா. “ரியா… ப்ளீஸ்… வேண்டாம்”-னு கெஞ்சலா சொன்னான் ப்ரதீப். “ஏனாம்? அந்த கழுதையை சொன்னா உங்களுக்கு ஏன் வலிக்குது?”-னு கடுப்பா கேட்டா மதுரியா. “ஏன்னா என் அன்பு உண்மை… ரொம்ப சின்ன வயதானாலும், அவளை ரொம்ப டீப்பாத்தான் லவ் பண்ணேன். அவ விட்டுப் போன வாய்ட் இன்னும் இருக்கு”-னு சொல்லவும் அவனை பிரமிப்பா பார்த்தா மதுரியா.
அந்த நாளுக்கப்புறம் அவங்க உறவு இன்னும் பலமாச்சு. படிப்பு, வெளியே போறது, லைப்ரரி-னு ஒண்ணா நேரம் செலவழிச்சாங்க. முயற்சிப் பண்ணி மதுரியாவை ஓரளவு சோகத் திரையை விட்டு வெளியே கொண்டு வந்தான். அவ டிரெயினிங்குக்கு டாக்டர் ப்ரேம்நாத்தை பரிந்துரை பண்ணி அனுப்பி வைச்சதே டாக்டர் சந்திரன் தான்.