அத்தியாயம் -20

சென்னை வந்தப் போது இருந்த ஆரவாரம் ஏதுமில்லாம அமைதியா அந்த வெள்ளை போலேரோ திரும்பி செங்கல்பட்டை நோக்கி போயிட்டு இருந்துச்சு. மதுரியா பின் சீட்லே உட்கார்ந்து வெட்ட வெளியை வெறிச்சுட்டு இருந்தா. ரெண்டு நாளா அப்படித் தான் இருந்தா. பேச்சில்லே, சிரிப்பில்லே. அதே சமயம் அழுகையும் இல்லே. அழாததுனால பழையபடி மனஅழுத்தம் இருக்கறதை லேசுலே கண்டுபிடிக்க முடியலே. அப்படி என்ன தான் ஆச்சு? ரெண்டு நாளைக்கு முன்னாடி ஜீவா பார்க் வாசல்லே அவ பார்த்தது விதுரனை… அவன் இருந்த கோலம் அவளை அடி ஆழம் வரை உலுக்கிப் போட்டுச்சு. அவ தன்னோட மோசமான கனவுலே கூட அப்படி நினைச்சது கிடையாது. ஒரு அழுக்கு சர்ட், அழுக்கு ஜீன்ஸ், தலைமுடி வெட்டாம பரட்டையா, முகம் மழிக்கப்படாம பல நாள் தாடி, கண்ணுலே உயிர்ப்பு இல்லை. அதை சுத்தி கருவளையம். கண்ணுலே குடியினால ஏறி இருந்த சிவப்பு. நடையிலே தள்ளாட்டம். அது போதையா, பசியா-னு தெரியலே. கால்லே ஏதோ ஒரு செருப்பு. ஆனா பார்த்த உடனே அது விதுரன்-னு தெரிஞ்சுது மதுரியாவோட கண்ணுக்கும் மனசுக்கும். அது கனவோ-னு நினைக்கறதுக்குள்ளே அவனே நின்ன ஆட்டோவை திரும்பிப் பார்த்தான். அவன் கண்ணுலே தெரிஞ்ச வலி. உண்மை மூஞ்சியிலே அறைய கிறுகிறு-னு வந்து மயங்கிட்டா மதுரியா.

“ரியா… ரியா… என்னாச்சு? கண்ணை திறந்து பார்மா… இங்கே பார்”-னு முகத்தை தட்டினான் ப்ரதீப். “என்னாச்சு தம்பி? ஹாஸ்பிடல் போகவா?”-னு பயந்துக் கேட்டார் ஆட்டோ டிரைவர். “இல்லைங்க… நாங்களே டாக்டர் தான். நீங்க நேரா இந்த அட்ரஸுக்குப் போங்க”-னு மதுரியா வீட்டு அட்ரஸை குடுத்தான். வீட்டு வாசல்லே ஆட்டோ நின்னு மதுரியாவை இறக்கவும் அதே நேரம் வெளியிலே வந்த பரத்தும் ஆனந்தியாவும் அதைப் பார்த்து பதறினாங்க. “ஐயோ… ரியாம்மா… என்னடி ஆச்சு?”-னு ஓடி வந்தா ஆனந்தியா. “ஒண்ணுமில்லே அக்கா. முதல்லே உள்ளே கூட்டிட்டு போகலாம்”-னு ப்ரதீப் சொல்லவும், பரத்தும் அவன் கூட சேர்ந்து அவளை உள்ளே தூக்கிட்டு போய் அவ பெட்லே படுக்க வைச்சான். ரீனா ஆட்டோவை செட்டில் பண்ணிட்டு பைகளை எல்லாம் எடுத்துட்டு வந்தவ, மதுரியா வீட்டு சமையலுக்கு உதவறவங்கக் கிட்ட “கலா ஆண்டி… நிறைய உப்பும் சர்க்கரையும் போட்டு லெமன் ஜூஸ் ரியா ரூமுக்கு கொண்டு வாங்க ப்ளீஸ்”-னு சொல்லிட்டு ரியா ரூமுக்கு ஓடினா ரீனா. “என்னாச்சு ப்ரதீப்?”-னு பதட்டமா கேட்டான் பரத்.

ப்ரதீப்னால பதில் சொல்ல முடியலே… “ப்ரதீப்… உன்னைத் தான்”-னு பரத் உலுக்கவும், “விதுரனை பார்த்துட்டா ரியா இன்னிக்கு”-னு ஸ்டிரெயிட்டா போட்டு உடைச்சான். ரீனாவுக்கு அதிர்ச்சி இவனுக்கு எப்படி அதுதான் விதுரன்-னு தெரியும்னு. “ஓ! பேசினாளா? ஏதாவது பிரச்சினையா?” – பதறினா ஆனந்தியா. “இல்லேக்கா. பேசலே அவரை அந்த நிலையிலே பார்த்ததே அவளுக்கு அதிர்ச்சி. மாம்ஸ்! அவ மனசுலே விதுரன் இவ்வளோ பாதிப்பை ஏற்படுத்த முடியும்கிறது எனக்கே அதிர்ச்சி… அவரை அந்த நிலையிலே பார்த்த அடுத்த கணம் மயங்கி சரிஞ்சுட்டா மாம்ஸ்.. இனி, இது வெறும் நீங்க பார்த்து முடிவு பண்ண பையன் மேலே லவ்வு-னு மட்டும் சொல்ல நான் தயாரா இல்லே… இந்த வெறித்தனமான அன்புக்குப் பின்னாடி வேற ஏதோ காரணம், காரியம் எல்லாம் இருக்கு. அது என்ன-னு தெரியணும்… இல்லேன்னா உங்க மகள் அவனை கடந்து வர போறதில்லே”-னு அழுத்தமா சொன்னான் ப்ரதீப். 

பரத், ஆனந்தியா, ஏன் ரீனாவுக்குமே அதிர்ச்சி. “இ… இப்போ என்ன பண்றது?”னு கேட்டான் பரத். “பார்க்கலாம்…. பேசிப் பேசித் தான் விஷயத்தை சொல்ல வைக்கணும்.. அதுவும் கொஞ்சம் விட்டுத் தான். இப்போ முழு அதிர்ச்சி. அது சரியாகட்டும். இப்போதைக்கு நீங்களும் வீட்டுலே எதுவும் கேட்டுக்காதீங்க”-னு சொல்லும் போதே கலா லெமன் ஜூஸ் கொண்டு வந்தாங்க. ப்ரதீப்பும் ரீனாவும் சேர்ந்து மயக்கம் தெளிய வைச்சாங்க. கண்ணு முழிச்ச மதுரியா முதல்லே பேந்தப் பேந்த முழிச்சா. அப்புறம் இருக்கற இடம், தான் பார்த்தது உணர்ந்தது எல்லாம் நினைப்பு வர அமைதியானா. மனசுக்குள்ளே புயல் அடிச்சுது. “என்ன ரியா? மார்னிங் சாப்பிடலியா?”-னு கேட்டா ரீனா. அதுக்கு பதில் இல்லை. “அதெல்லாம் ஒண்ணும் இல்லே. வெயில்லே சுத்தினது டீஹைட்ரேஷன் ஆகியிருக்கும்.. இதுக்குத்தான் ஷாப்பிங் வேண்டாம்னு சொன்னேன்”-னு அவன் பங்குக்கு சகஜமா பேசினான் ப்ரதீப். 

“ரியா பாப்பா.. இதைக் குடி… கொஞ்ச நேரத்துலே சாப்பாடு தயார் ஆயிடும்”-னு சொன்னாங்க கலா. “வேண்டாம் கலாம்மா”-னு யார் முகத்தையும் பார்க்காம சொன்னா. “குடி ரியா… அடம் பிடிக்காதே. குடிச்சுட்டு ரெஸ்ட் எடு. நான் போயிட்டு ஒரு மீட்டிங் மட்டும் அட்டெண்ட் பண்ணிட்டு வந்துடறேன்… நல்ல வேளை காண்டிராக்ட் எடுக்க வீட்டுக்கு வந்தோம்”-னு சொன்னா ஆனந்தியா. அதுக்கப்புறம் எல்லாம் இயந்திர கதியிலே நடந்துச்சு மதுரியாவுக்கு. அவ யார் கிட்டேயும் பேசலே. சரியா சாப்பிடலே. அதே நிலையிலே காலேஜுக்கும் கிளம்பிட்டா ப்ரதீப், ரீனா கூட. ப்ரதீப்பும் பெரிசா அவளை நோண்டலே. அதிர்ச்சியிலே இருந்து மீள அவகாசம் குடுத்தான். அதுக்காக தனிமையும் குடுக்கலே. ஏதோ சகஜமா பேசினான். ஆனா மதுரியா எல்லாத்துக்கும் ஒத்த வார்த்தையிலே ஒத்த வரியிலே பதில் சொன்னா. அவ மனசுலே என்ன ஓடுது-னு கண்டே பிடிக்க முடியலே யாராலேயும். 

காலேஜ்லேயும் நாட்கள் இப்படித்தான் போச்சு. படிப்பு-னு ஒண்ணு இல்லேன்னா எப்போவோ பைத்தியம் ஆகியிருப்பா மதுரியா. திரும்ப பழைய மாதிரி ஆயிட்டா. பேச்சில்லே. சிரிப்பில்லே. இந்த வாட்டி சாப்பாடும் அடி வாங்கிடுச்சு. மனசு இருந்தா சாப்பிடுவா. இல்லேன்னா அதுவும் இல்ல. காலேஜ், லைப்ரரி, ஹாஸ்டல் தான் வாழ்க்கை. கூட இருந்த ரீனாவையும் ப்ரதீப்பையும் கூட மறந்துட்டா. அவங்களுக்கும் அவங்க படிப்பே சரியா இருந்துச்சு. ப்ரதீப் கோர்ஸ் முடிஞ்சுக் கிளம்பறான். அதனால வேலைபளு. ரீனாவுக்கும் டிரெயினிங் தொடங்கப் போகுது. அவளுக்கு கொஞ்ச நாள் காலேஜ்லே. கொஞ்ச நாள் வெளி ஹாஸ்பிடல்லே-னு போக வேண்டியது இருந்ததால இன்னும் வேலை. ஆனா கண்ணெதிரிலே கரையற மதுரியாவை என்ன பண்றதுன்னு தெரியலே.

“என்ன பண்றது தீபு இவளை?”ன்னு இயலாமையிலே அன்னிக்கு மத்தியானம் ப்ரதீப்பை மீட் பண்ணும் போது கேட்டா ரீனா. “ஏதாவது பண்ணணும். பேசாம தூக்கிட்டு போய் விதுரன் முன்னாடி நிறுத்தணும்-னு யோசிக்கிறேன்… அப்படியாச்சும் சரியாகிறாளா-னு பார்க்கலாம்”-னு ஆதங்கமா சொன்னான் ப்ரதீப். “பேசிப் பாருங்க தீபு”-னு சொன்னா ரீனா. “இந்த வீக்-எண்ட் வெளியே கூட்டிட்டு போகலாம்”-னு சொன்னான் ப்ரதீப். “இல்லே தீபு.. டிரெயினிங் விஷயமா சென்னை போறேன்”-னு சொல்லவும், “ஓ.. ஐ வில் மிஸ் யூ”-னு முணுமுணுத்தான் ப்ரதீப். அது ரீனா காதுலே விழுந்து அவ கண்ணுலே மின்னல். ஆனா பன்னிப் பன்னி அதையே பேசினா பழைய நிலைக்கு போயிடுவான்-னு அப்படியே விட்டுட்டா. ஆனா ப்ரதீப்புக்கு ரீனாவோட எதிர்பார்ப்பில்லாத அன்பு புரிஞ்சு தான் இருந்துச்சு. பிடிச்சிருந்துச்சு. ஆனா நந்தினியை மறக்கவும் முடியலே. அந்த மடையனுக்கு அவனையும் அறியாம ரீனாவை விரும்ப ஆரம்பிச்சுட்டான்-னு புரியலே. தற்சமயம் தான் ரீனாவை விரும்பாதது தான் அவளுக்குத் தான் செய்யற நல்லது-னு நம்பினான். “குட் லக்! நான் ரியாகிட்ட பேசறேன்”-னு சொல்லிட்டுக் கிளம்பினான்.

அவங்க சென்னை போயிட்டு வந்து ஒரு வாரம் ஆன நிலையிலே, அந்த சனிக்கிழமை ஈவினிங் லைப்ரரியிலே இருந்து வந்த அவளை பக்கத்திலே இருந்த கோயிலுக்கு கூட்டிட்டு போனான் ப்ரதீப். ரீனாவும் ஊருக்கு போயிருந்தா. “என்ன தீப்? ஹாஸ்டலுக்கு போகலாம்.. எனக்கு டயர்டா இருக்கு”-னு சொன்னா மதுரியா. “ஓ.. மேடம் பேசக் கூட செய்வீங்களா?”-னு நக்கலா கேட்டான். “இப்போ உனக்கு என்ன வேணும் ரியா? வா… நாளைக்கே கூட விதுரனை பார்க்க போகலாம். ஆனா இப்படி இருக்காதே”-னு சொன்னான் ப்ரதீப். “ஏன்? போய் என் மிச்சம் மீதி தன்மானத்தையும் அந்த ஆள் கால்லே போட்டு பொசுக்கவா? அதுக்கு பேசாம உயிரை விடலாம்”னு கோபமா சொன்னா மதுரியா. “ம்ம்ம்… இன்னும் கொஞ்ச நாள் இப்படியே இருந்தா அதுதான் நடக்கும். உயிரை விடறதைச் சொன்னேன்”-னு அவளுக்கும் குறையாத கோபத்துலே சொன்னான் ப்ரதீப். ஒரு பெரு மூச்சு விட்டு, “தீப், நான் என்னை நானே தண்டிச்சிக்கிறேன் நான் மாறதுக்காக”-னு அடங்கிப் போன குரல்லே சொன்னா. “எதுக்கு ரியா உனக்கு தண்டனை? என்ன நினைக்கிறியோ அதை சொன்னாத் தானே தெரியும்?”-னு பொறுமையாவே கேட்டான்.

அப்புறம் கொஞ்ச நேரம் அமைதி. “நான் என்னோடேயே போராடி அலுத்துப் போறேன் தீப். அந்த நிலையிலே விதுவை பார்த்த கணமே மனசு உடைஞ்சுப் போச்சு. அவரைப் போய் தாங்கி ஆறுதல் சொல்லி பழைய படி மாத்தணும்-னு மனசுத் தவியா தவிக்குது. ஆனா கடைசியிலே அந்த நாள்லே பேசிட்டு வந்ததுக்கு அப்புறம் என்னால பேச முடியாது. நான் மாட்டேன். எனக்கும் தன்மானம் இருக்கே! அதோட என்னத்துக்குப் போகணும்? அது தான் ஒரு மகராசியை கட்டி இருக்காரே, அந்தம்மா பார்த்துக்கட்டும். எனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?துரோகிங்களுக்கெல்லாம் இப்படித்தான் நடக்கும். கலியுகத்துலே கை மேலே பலன் கிடைக்கும்”-னு கோபமா சொன்னா மதுரியா. “அதை விடு ரியா.. சும்மா டென்ஷன் ஆகாதே. எதுவானாலும் நாங்க எல்லாரும் சப்போர்ட் பண்ணுவோம்”-னு சமாதானம் பண்ணி கூட்டிட்டுப் போனான் ப்ரதீப். அன்னிக்கு ராத்திரி பேசின வரைக்கும் எல்லாத்தையும் ரீனாகிட்ட சொன்னான். “புத்திக்கும் மனசுக்கும் நடக்கறப் போராட்டத்துலே தவிக்கறா. ஏதோ ஒண்ணு ஜெயிக்கும். பார்ப்போம்”-னு சொன்னான் ப்ரதீப். “அதுவரைக்கும் இப்படியே இருந்தா, சாப்பிடாம காத்துலே போயிடுவா”-னு அலுப்பா சொன்னா ரீனா.

ஒன்றரை மாசம் ஓடிப் போச்சு. மதுரியா கிட்ட எந்த மாற்றமும் இல்லே. ப்ரதீப் கோர்ஸ் முடிச்சு ஜூனியர் சைக்கியாட்டிரிஸ்டா அவன் கனவை தொடர்ந்தான். ரீனாவும் மதுரியாவும் காலேஜ்லே இருந்தாங்க. இப்போ மதுரியா கிளம்பற நாளும் வந்துச்சு. ஒவ்வொரு நாளும் ப்ரதீப்பும் ரீனாவும் போன்லே பேசும் போது அவங்க சொல்லிக்கற விஷயம் இப்படி உள்ளேயே வைச்சு மறுகறதுக்கு, ஒரே ஒரு வாட்டி மதுரியா விதுரனை பார்த்து பேசினா அவ பாரம் குறையும்-னு தான். ஆனா என்னவானாலும் அதுக்குத் தான் தயாரில்லே-னு உறுதியா இருந்தா மதுரியா. இந்த ஒண்ணரை மாசத்துலே அந்த கோபம் குறைஞ்சாலும் அந்த உறுதி கொஞ்சம் கூட குறையலே. அந்த உறுதியோட விளைவு, கலகலப்பு இல்லாம, சீரியஸ் முகம். சாப்பாடு அடி வாங்கினதால கண் கூடா தெரிஞ்ச மெலிவு. இதோட தான் கிளம்பி சென்னை போனா. 

சனி, ஞாயிறு ரெண்டு நாளும் ஒரு டைவர்ஷனுக்கு அவளை வெளியே கூட்டிட்டு திரிஞ்சான் ப்ரதீப். “என்னை ஏன் இப்படி இழுத்துட்டு சுத்தறீங்க தீப்?”-னு சலிப்பா சொன்னா மதுரியா. “ஏன்? வீட்டுலே விட்டத்தை பார்த்துட்டு உட்கார்ந்து எல்லாரையும் டென்ஷன் பண்ணணுமா? இல்லே என் கூட வெளியே வர்றது உனக்குப் புதுசா?”-னு கேட்டான் ப்ரதீப். “ஓ காட்… இப்போ எங்கே போறோம்?”-னு கேட்டா. “ம்ம்ம்…பார்க் ஹோட்டல்லே ப்ரேம் அங்கிளோட அறுபதாவது பர்த்டே பார்ட்டி. நான் போய் விஷ் பண்ணணும். பண்ணிட்டு இன்னிக்கு பீச் போகலாம். கொஞ்ச நேரம் அங்கே இருந்துட்டு வீட்டுக்குப் போகலாம். அதுக்குள்ளே அப்பாவும் வந்திருப்பார்”-னு சொல்லவும், “சரி நான் ஃபங்க்‌ஷனுக்கு வரலே. வெளியேவே இருக்கேன்”-னு சொல்லவும், இடம் வலமா தலையை ஆட்டிக்கிட்டே காரை ஓட்டினான்.

பார்க் ஹோட்டல்லே நுழைஞ்சதும் இவங்க ரெண்டுப் பேர் உள்ளே வர்றதை பார்த்து அதிர்ந்தாங்க பார்ட்டி ஹால் வாசல்லே இருந்த ரெண்டுப் பேர். அது வேறே யாரும் இல்லே. அசோக்கும் விக்கியும். “இவ… மதுரியா இல்லே?இவ இவன்கூட என்ன பண்றா?”-னு கேட்டான் விக்கி. “ம்ம்ம்… இந்த சனியனோட புது கேர்ள் ஃப்ரெண்ட்”-னு சொன்னான் அசோக். “ஏது? கேர்ள் ஃப்ரெண்டா?”-னு அதிர்ந்தான் விக்கி. அதுக்குள்ளே ரெண்டுப் பேரும் பக்கத்துலே வரவும், முகத்தை மாத்தி ஹலோ சொன்னாங்க. “ஹாய்… ஹவ் ஆர் யூ?”-னு சகஜமா பேசினான் அசோக். “என்னை ஞாபகம் இருக்கா?”-னு இழுத்தான் விக்கி. “ம்ம்ம்.. விதுரனோட ஃப்ரெண்ட் தானே?”-னு நேரடியா கேட்டா மதுரியா. மறைப்பா, மழுப்புவான்னு எதிர்பார்த்த விக்கிக்கு அது ரெண்டாவது அதிர்ச்சி. “யா… நல்லா இருக்கீங்களா?”-னு அதை மறைச்சு சகஜமா கேட்டான் விக்கி. “நல்லயிருக்கேன்… தேங்க்ஸ்!”னு வெட்டி விடறாப் போல பேசிட்டு, “தீப்… நீங்கப் போயிட்டு வாங்க. நான் லான் ஏரியாலே வெயிட் பண்றேன்”-னு சொன்னா. அவங்களும் டீசண்டா விடைக் குடுத்தாங்க. அப்புறம் கொஞ்ச நேரம் ப்ரதீப் நின்னு பேசிட்டு இருந்தான்.

ரெஸ்ட் ரூமுக்கு போயிட்டு புல்வெளிக்கு போகலாம்-னு நடந்த மதுரியாவுக்கு மனசுலே யோசனை. இவங்க ரெண்டுப் பேரும் ஃப்ரெண்ட்ஸா? எப்படி? தற்செயலா? இல்லே ஆதாயத்துக்காக நண்பர்களா? இல்லையே… ஃபங்க்‌ஷனுக்கு ஒரே மாதிரி சூட் போட்டு இருப்பதை பார்த்தா ரொம்ப க்ளோஸ் மாதிரி தெரியுதே.. எப்படி? என்னமோ சரியில்லையே?-னு யோசிச்சுட்டே திரும்பி வந்தவளுக்கு அவங்க பேச்சை கேட்டு தலையிலே இடியே விழுந்துச்சு. “ஏண்டா இவ எவ்வளோ பேர் லைஃபை கெடுக்க போறா? சுத்தி சுத்தி நம்ம கிட்டேயே வர்றாளே? முதல்லே அந்த விதுரன்.. இப்போ இந்த ப்ரதீப்.. இவளுக்கு வேறே ஆளே கிடைக்காதா?”-னு சிடுசிடுத்தான் விக்கி. “விடுடா டென்ஷன் ஆகாதே. நந்தினியை பிரிச்ச மாதிரி இவளையும் பிரிச்சு சுத்தல்லே விட்டா போச்சு”-னு சிரிச்சான் அசோக். 

“ஆமா, நீ பிரிச்சு அந்த பாரத்தை உன் தலையிலே போட்டுக் கிட்டே. அவனைப் பாரு.. அடுத்த கேர்ள் ஃப்ரெண்டை ரெடி பண்ணி ஜாலியா சுத்தறான். சே.. ஒருத்தனை அடிச்சா அவன் எந்திரிக்க முடியாத படி அடிக்கணும்.. நான் விதுரனை அடிச்ச மாதிரி.. இப்போ அவன் அட்ரஸ் இல்லாத அன்னக்காவடி. எவ்வளோ திமிர். அத்தனையையும் தீ வைச்சு கொளுத்திட்டேன்”-னு சிரிச்சான் விக்கி. “அதுக்குத் தானே உன் லவ்வரை ஏவி விட்டே? ஆனாலும் உன் அளவுக்கு எனக்கு வராதுப்பா”-னு சிரிச்சான் அசோக். “சீ… வாயை கழுவு! அந்த சனியன் எனக்கு லவ்வரா? நீயும் இந்த ப்ரதீப்பை எந்திரிக்க முடியாத அளவுக்கு அடிடா. அப்போதான் இவனுங்க தொல்லை நமக்கு மொத்தமா முடியும். சும்மா பூச்சி புடிக்காதே”-னு அட்வைஸ் பண்ணான் விக்கி.

“ம்ம்ம்… பண்றேன். முதல்லே இந்த ராங்கியை காதல் அம்பு விட்டு பிரிச்சு, அசந்த நேரத்துலே மொத்தமா ஆப்பு வைக்கிறேன்”-னு சொன்னான் அசோக். “இன்னோருத்தியா? அப்போ யூஎஸ்லே இருக்கறவளை என்ன பண்ண போறே?”-னு சிரிச்சான் விக்கி. “அவ கிடக்கிறா லூசு! லவ் லவ்-னு உயிரை வாங்கறா. எங்கப்பன் குடுக்கற குடைச்சலுக்கு கல்யாணம் மட்டும் பண்ணி இருக்கலேன்னா இந்நேரம் அவளை கழட்டி விட்டிருப்பேன். அதுவும் இந்த மதுரியா சந்தன சிலை போல கண்ணு முன்னால சுத்தும் போதெல்லாம் மிஸ் பண்ண ஃபீலிங் தான்”-னு அசோக் புலம்பவும், விக்கி வாய்விட்டே சிரிச்சான். 

“எனிவே நான் 2 வீக்ஸ்லே யூ.எஸ் போறேன். ஆறு மாசம் அசெட்ஸ் மேனேஜ்மெண்ட் கோர்ஸ் படிக்கப் போறேன்”-னு பெருமையா சொன்னான் விக்கி. “அப்போ இனி போய் விதுரனை பார்க்க வேண்டாமா?”-னு கேட்டான் அசோக். “பார்த்து? அது தான் அவன் கதை முடிஞ்சதில்லே இனி யார் வந்து அவனை காப்பாத்த முடியும்?”-னு அலட்சியமா கேட்டான் விக்கி. “சரிதான் ரோஹித் சாரோட ப்ராஜெக்ட் நெக்ஸ்ட் வீக்லே ஸ்டார்ட் ஆகப் போகுது.. இப்போ போய் கிளம்பறே?”-னு கேட்டான் அசோக். “தெரியும் டா… நீ உள் வேலை எல்லாம் முடிச்சு, பிசினஸ் ஸ்டார்ட் பண்றதுக்குள்ளே முடிச்சுட்டு வந்துடுவேன்… ஸ்டார்ட் பண்ணிட்டே இல்லே?”-னு கேட்டான் விக்கி. “பண்ணியாச்சுடா.. ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட்கிட்ட பேசி சர்ஜிகல் விங்லே ஒரு சைட் ரெண்ட் பண்ணியிருக்கேன்”-னு சொன்னான் அசோக்.

அதே நேரம் ஹாலை விட்டு வெளியே வந்தான் ப்ரதீப். “நான் கிளம்பறேன் அசோக்”-னு சொல்லிட்டு கிளம்பவும், சரினு சொல்லிட்டு விக்கியும் அசோக்கும் பேச்சை நிறுத்திட்டு ஹாலுக்கு உள்ளே  போனாங்க. “சே.. அசிங்கம் ரெண்டும்”-னு எரிச்சலானா மதுரியா.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top