💓அத்தியாயம் 《16》

ஒரு வாரம் கழித்து, அனைவரும் கோவில் திருவிழாவிற்காக ஸ்ரீராமின் சொந்த ஊரான திருப்போரூருக்கு செல்ல முடிவு செய்திருந்தனர். அந்த முடிவு எடுக்கப்பட்ட நாளிலிருந்தே கதிரின்  வீட்டில் ஒரு விதமான உற்சாகம் நிலவியது. குழந்தைகள் தினமும், “எப்போ கிளம்பப் போறோம்?” என்று கேட்டுக்கொண்டே இருந்தனர். பெரியவர்களும் அவர்களின் உற்சாகத்தைப் பார்த்து மகிழ்ந்தனர்.

பயணத்திற்கான நாளன்று, காலையிலேயே அனைவரும் எழுந்து தயாராக ஆரம்பித்தனர். வீட்டில் அங்கும் இங்கும் பரபரப்பு நிலவியது. பெண்கள் தேவையான பொருட்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தனர். குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டு பொருட்களையும் சிறிய பைகளில் அடுக்கிக் கொண்டிருந்தனர்.

கதிர் தனது அறையில் இருந்த நிலாவைப் பார்த்து,

“நிலா, எல்லாம் ரெடி தானே? அங்க போயிட்டு ‘இதைக் காணோம், அதைக் காணோம்’ன்னு சொல்லிட்டு இருக்கக் கூடாது. தேவையானதெல்லாம் எடுத்துவைச்சுக்கோ,” என்றான்.

உடனே நிலா,

“நான் எல்லாமே எடுத்து வைச்சுட்டேன். நீங்க உங்களுக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கோங்க,” என்று சிரித்தபடி கூறினாள்.

“சரி. மித்ராவும் ஆதிரையும் ரெடியாயிட்டாங்களா? குழந்தைகளை வேற காணோம்?”

“குழந்தைங்க  ஆதிரை ரூம்ல தான் இருக்காங்க,” என்றாள் நிலா.

“சரி,” என்று தலையசைத்த கதிர் வெளியே வந்தான்.

 

சிறிது நேரத்தில் கதிரின் குடும்பத்தினர் அனைவரும் தயாராகி வெளியே வந்தனர். அப்போது வீட்டின் முன் ஒரு பெரிய டூரிஸ்ட் வேன் வந்து நின்றது. அந்த வேன் ஆதிரனுடையது.

 

“கதிர், நீ முன்னாடி வாடா,” என்றான் ஆதிரன் 

“சரி,” என்று கூறிய கதிர் முதலில் மித்ராவை கவனமாக வேனில் ஏற்றிவிட்டான். அதன் பிறகு ஆதிரையும் நிலாவும் உள்ளே ஏறினர்.

அனைவரும் அமர்ந்த பிறகு, கதிர் முன்பக்க இருக்கையில் சென்று விக்ரமின் அருகில் அமர்ந்தான்.

பயணம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே வேனுக்குள் கலகலப்பான சூழல் உருவாகிவிட்டது.

அதற்குக் காரணம் கோகுல் தான்

“‘மாமா!’ என்று இரு குழந்தைகளும் கோகுலின் இருபுறமும் ஓடி வந்து கட்டிக்கொண்டனர். கோகுல் சிரித்தபடி அவர்களைத் தூக்கி மடியில் அமர வைத்தான்.

‘நான் சர்வேஷ்க்கு மட்டும் தான் மாமா. உனக்குச் சித்தப்பா,’ என்று யாழினியிடம் கூறினான்.

அவனது வார்த்தைகளைக் கேட்ட யாழினி, ‘சரி சித்தப்பா!’ என்று அழகாகத் தலை அசைத்து கூறினாள்.”

அவன் ஏதாவது ஒரு விஷயத்தைப் பிடித்து பேசிக்கொண்டே இருந்தான். அவனுடைய பேச்சில் இருந்த குறும்பும் நகைச்சுவையும் குழந்தைகளை அவனுடன் சேர்த்துவிட்டது.

 

சிறிது நேரத்தில் வேன் முழுவதும் குழந்தைகளின் சிரிப்புச் சத்தத்தால் நிரம்பியது.

“மாமா, ஒரு பாட்டு பாடுங்க!” என்று  சர்வேஷ் கேட்டான் 

ஒரு பாட்டு மட்டும் தானா?  கச்சேரியே நடத்துறேன் பாருங்க!” என்று கோகுல் கூறியதும் அனைவரும் சிரித்தனர்.

அவன் பாட ஆரம்பித்தான். பாடியபடியே எழுந்து நின்று நடனமும் ஆட ஆரம்பித்தான். குழந்தைகளும் அவனுடன் சேர்ந்து கைத்தட்டி ஆடினர்.

அவர்களின் ஆர்ப்பாட்டத்தைப் பார்த்து பெரியவர்கள் அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.

கடந்த சில நாட்களாக மனதில் பல காயங்களுடன் இருந்த

மித்ராவுக்குக் கூட அந்த சிரிப்புச் சத்தம் மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது.

அவள் அமைதியாக அமர்ந்து கொண்டு அந்த மகிழ்ச்சியான தருணத்தை ரசித்தாள்.

அவ்வப்போது குழந்தைகள் சிரித்துக் கொண்டு ஓடுவதையும், கோகுலின் குறும்புகளையும் பார்த்தபோது அவளது உதடுகளிலும் மெல்லிய புன்னகை மலர்ந்தது.

அதை கவனித்த ஆதிரை மனதிற்குள் மகிழ்ந்தாள்.

இத்தனை நாட்களுக்குப் பிறகு மித்ரா  மனம் விட்டு சிரிக்கிற,’ என்று நினைத்தவள் அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த வேன் மெதுவாக ஸ்ரீராமின் சொந்த ஊரான திருப்போரூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

நகரப் பகுதிகளைத் தாண்டியதும் காட்சி மாறத் தொடங்கியது. இருபுறமும் பசுமையான மரங்கள் வரிசையாக நின்றிருந்தன. சாலையோரங்களில் சிறிய கடைகள், இளநீர் விற்கும் மக்கள், மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த விவசாயிகள் என கிராமப்புற வாழ்க்கையின் அழகு கண்முன் விரிந்தது.

இரண்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு அவர்கள் அந்த ஊரை அடைந்தனர்.

ஊருக்குள் நுழைந்தவுடன் அனைவரின் கண்களும் சுற்றுப்புற அழகில் நிலைத்துவிட்டன.

எங்கு பார்த்தாலும் பசுமை.

பசுமையாக விரிந்து கிடக்கும் வயல்வெளிகள், தென்றல் காற்றில் ஆடும் தென்னை மரங்கள், தொலைவில் தெரியும் சிறிய மலைத் தொடர்கள், சாலையோரம் நின்றிருந்த பெரிய ஆலமரங்கள்—எல்லாமே கண்களுக்கு விருந்தாக இருந்தது.

அதைப் பார்த்த ஆதிரையும் இதுவரை கிராமப்புற வாழ்க்கையை இவ்வளவு நெருக்கமாக அனுபவித்ததில்லை.

அதனால் அந்த இயற்கை அழகு அவர்களின் மனதை முழுவதுமாக கவர்ந்துவிட்டது.

”அண்ணி… எவ்வளவு அழகா இருக்கு இல்ல?” என்று மித்ரா  உற்சாகமாகக் கேட்டாள்.

“ஆமா  மித்து… மனசே ரொம்ப லேசா இருக்குற மாதிரி இருக்கு,” என்று புன்னகையுடன் கூறினாள் ஆதிரை.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, சில சிறுவர்கள் வயல்வெளி அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். சில பெண்கள் தண்ணீர் குடங்களுடன் நடந்து சென்றனர். அந்த இயல்பான வாழ்க்கை முறையே அவர்களுக்கு புதுமையாக இருந்தது.

ஆனால் நிலாவுக்கு அந்த காட்சி புதிதாக இல்லை. அவள் கிராமத்தைச் சேர்ந்தவள் என்பதால் இதுபோன்ற சூழலை ஏற்கனவே பார்த்து வளர்ந்திருந்தாள்.

இருப்பினும் தனது குடும்பத்தினர் அந்த ஊரின் அழகை ரசிப்பதைப் பார்த்து அவளும் மகிழ்ந்தாள்.

சிறிது நேரத்தில் வேன் ஒரு பெரிய பாரம்பரிய வீட்டின் முன் வந்து நின்றது.

அந்த வீடு மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. பெரிய வாசல், விசாலமான முற்றம், சுற்றிலும் மரங்கள் என பழமையான செழுமையின் அடையாளமாக காட்சியளித்தது.

வீட்டின் முன்புறத்தில் பல வண்ணத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. திருவிழாவை முன்னிட்டு வீடு முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அனைவரும் வேனிலிருந்து இறங்கினர்.

அப்போது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் வேகமாக ஓடி வந்து ஸ்ரீராமை வரவேற்றார்.

“வாங்க ஐயா! நீங்க சொன்ன மாதிரியே எல்லாத்தையும் கிளீன் பண்ணி வைச்சுட்டேன். சமையலும் முடிஞ்சிருச்சு. நீங்க முதல்ல சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. சாயங்காலம் கோவிலுக்குப் போனா போதும்,” என்றார்.

“சரிப்பா,” என்று ஸ்ரீராம் புன்னகையுடன் கூறினார்.

பிறகு அனைவரையும் உள்ளே அழைத்துச் சென்றார்.

வீட்டிற்குள் நுழைந்ததும் அந்த வீட்டின் பிரம்மாண்டம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

பெரிய கூடம், மரத்தால் செய்யப்பட்ட பழமையான பொருட்கள், சுவர்களில் மாட்டப்பட்டிருந்த குடும்ப புகைப்படங்கள், பழங்கால விளக்குகள் என அந்த வீடு ஒரு தனி அழகோடு காட்சியளித்தது.

“வாவ்… இந்த வீடு ரொம்ப அழகா இருக்கு!” என்று குழந்தைகள் ஆர்வமாக சுற்றிப் பார்த்தனர்.

அப்போது ஸ்ரீராம் தனது மனைவி லட்சுமியைப் பார்த்து,

“லட்சுமி, எல்லாருக்கும் ரூம் அரேஞ்ச் பண்ணிக்கொடு,” என்றார்.

“சரிங்க,” என்று கூறிய லட்சுமி அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

பிறகு ஆதிரையையும் மித்ராவையும் பார்த்து,

“ஆதிரை, நீயும் மித்ராவும் இந்த ரூம்ல தங்கிக்கோங்க,” என்று கீழ்தளத்தில் இருந்த பெரிய அறையைக் காட்டினார்.

“சரிங்க அம்மா,” என்று கூறிய ஆதிரை, மித்ராவை அழைத்துக் கொண்டு அந்த அறைக்குள் சென்றாள்.

அந்த அறையும் மிகவும் வசதியாக இருந்தது. பெரிய ஜன்னல்கள், சுத்தமான படுக்கைகள், குளிர்ச்சியான சூழல் என ஓய்வெடுக்க ஏற்ற வகையில் அமைந்திருந்தது.

ஜன்னலைத் திறந்தவுடன் வெளியில் இருந்து வந்த குளிர்ந்த காற்று அறை முழுவதும் பரவியது. தூரத்தில் கோவில் திருவிழாவிற்கான மேளதாள ஒலிகளும் மெல்லக் கேட்கத் தொடங்கின.

அந்த ஒலியைக் கேட்ட குழந்தைகள்,

“எப்போ கோவிலுக்குப் போவோம்?” என்று உற்சாகமாகக் கேட்டனர்.

அடுத்தடுத்த அறைகளில் மற்றவர்கள் அனைவரும் தங்கி கொண்டனர்.

அனைவரும் தங்களது பயணப் பொருட்களை வைத்துவிட்டு சற்று ஓய்வெடுத்த பிறகு, லட்சுமியும் புஷ்பாவும் சேர்ந்து அனைவரையும் உணவருந்த அழைத்தனர்.

நீண்ட பயணத்திற்குப் பிறகு வீட்டில் தயாரிக்கப்பட்ட சுவையான உணவின் மணம் பரவியிருந்தது.

அதை உணர்ந்த அனைவரும் மகிழ்ச்சியுடன் உணவருந்தச் செல்ல, மாலை நடைபெறவிருந்த கோவில் திருவிழாவைப் பற்றிய எதிர்பார்ப்பு அவர்களின் மனதில் மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியது.

அந்த மாலை அவர்களின் வாழ்க்கையில் பல புதிய நினைவுகளை உருவாக்கப் போகிறது என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top