“சே… இவனை யார் இப்போ வெளியே வரச் சொன்னது?”-னு திட்டிக் கிட்டே ரெகார்ட் ஆகிட்டிருந்த வீடியோவை அணைச்சா. மதுரியா ரெகார்ட் பண்ணணும்-னு யோசிக்கவே இல்லே. இவங்க ரெண்டுப் பேரும் அவளைப் பத்தி பேசவும் அதை ப்ரதீப்புக்கு காட்டணும்-னு பண்ணா. ஆனா அவங்க பேசின விஷயத்தோட வீரியத்துல அணைக்கவேத் தோணலே. இப்போவும் அடியெது, நுனியெது-னு தெரியாத குழப்பம். இவங்க ரெண்டு பேரால விதுரனுக்கும் ப்ரதீப்புக்கும் ஆபத்து. இவங்களை அழிக்க முயற்சிப் பண்றாங்க. ஆனா ஏன், எப்படி, என்னங்கற விவரம் தெரியலே. வேற எதுவும் தெரியலே… ‘இவனை யார் இப்போ வரச் சொன்னது.. நண்பனாம் நண்பன்… நண்பன் யார் துரோகி யார்-னு கூட தெரியாத கழுசடைங்க ரெண்டும். சே! ஆனா விக்கிக்கும் அசோக்குக்கும் நம்ம மேலே என்ன கோபம்? நமக்காக ஏன் இவங்களை அழிக்கணும்? இலக்கு நானா? இவங்களா? விதுரனுக்கும் எனக்கும் நடந்ததுக்கு காரணம் சுவாதி தானே? அவன் சபல புத்தி. ஏமாத்தினான். இவன் எங்கே வந்தான்? விதுரனோட இன்னிக்கு நிலைமைக்கு இவன் காரணமா? எப்படி? நந்தினி, ப்ரதீப்பை விட்டு பிரிஞ்சதுக்கு இந்த அசோக் காரணமா? எப்படி?. அவங்க தான் இங்கே இல்லவே இல்லையே. ப்ரதீப் சொல்லறதை பார்த்தா பிரிவுக்கு முழுக்க முழுக்க தப்பான புரிதல் தான் காரணம்…. கடவுளே’-னு நொந்து போனா மதுரியா.
அவ யோசனை சங்கிலியை பாதியிலேயே தடுத்துச்சு மதுரியாவோட போன் சத்தம். “சொல்லித் தொலைடா..”-னு இருந்த கடுப்புலே ப்ரதீப் காலை எடுத்து சொன்னா. “ஏது? ‘டா’வா? பல்லை தட்டிடுவேன் ராஸ்கல்! எங்கே இருக்கே நீ?”-னு அதட்டலா கேட்டான் ப்ரதீப். “ஆத்தாடீ… சாரி… சாரி… தீப்… நீங்க-னு தெரியாம சொல்லிட்டேன்”-னு நாக்கை கடிச்சுக்கிட்டு சுதாரிச்சா. “ஆமா.. பப்ளிக் பூத்லே இருக்கேப் பாரு! யாரு பேசறாங்க-னு தெரியாம போக?எங்கே இருக்கே நீ?”-னு கோபம் குறையாம கேட்டான் ப்ரதீப். “உங்க பின்னாடித் தான்”-னு சொல்லவும் திரும்பி பார்த்தான். “சாரி தீப்… ஐ டிட்ண்ட் மீன் டூ… எதோ நினைப்புலே சொல்லிட்டேன்”-னு தழைஞ்சு போயி சொல்லவும் தான் விட்டான். “பொழைச்சுப் போ”-னு விட்டுட்டு பீச்சுக்கு போனாங்க. சதா சர்வ காலமும் யோசனைதான் மதுரியாவுக்கு.
இதை எப்படி கையாளறது. பேசாம பிரதீப் கிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாமா-னு முணுவாட்டி யோசிச்சு, அந்த யோசனையை கை விட்டா. போதுமான ஆதாரமில்லையே-னு நினைச்சு கடைசியிலே ரீனாகிட்ட பேசலாம்-னு முடிவுக்கு வந்தா மதுரியா. ப்ரதீப் இறங்கி ஐஸ்க்ரீம் வண்டிக் கிட்ட இருக்கவும், ரீனாவுக்கு போன் அடிச்சா. “ரீனா… உனக்கு எவ்வளோ வேலை இருந்தாலும் நாளைக்கு காலையிலே பத்து மணிக்கு ஆவின் பார்க்குக்கு வர்றே… நம்ம மீட் பண்ணியே ஆகணும்”-னு மொட்டையா சொன்னா. “நான் ஒண்ணும் விளையாடலே.. நம்ம லைஃப் மேட்டர் ரீனா. இட்ஸ் டெஃபனெட்லி வொர்த் இட்”-னு போனை கட் பண்ணா. அதே நேரம் ப்ரதீப்பும் வந்தான். ஐஸ்க்ரீமை சாப்பிட்டுட்டு வீட்டுக்கு கிளம்பினாங்க. சந்திரனையும் நாளைக்கு வந்து பார்க்கிறேன்-னு சொல்லிட்டா. ப்ரதீப்பும் துருவி கேட்காம சரி-னு சொல்லி அவளை வீட்டுலே விட்டுட்டு கிளம்பினான்.
அந்த ஆவின் பார்க்குலே பத்து மணி வெயில்லே ஐஸ்க்ரீமை உருக விட்டு ‘பே’-ன்னு உட்கார்ந்திருந்தாங்க ரெண்டுப் பேரும். மூணாவது வாட்டியா மதுரியா ரெகார்ட் பண்ண விடியோ ஓடி முடிஞ்சுது. “யார் ரியா இந்தக் கழிசடைங்க? இப்படி எல்லாரோட வாழ்கைலியும் ஆட்டமா ஆடறாங்க? இவனுங்களை எல்லாம் அடிச்சே கொல்லணும்”-னு கொந்தளிச்சா ரீனா. “அதனால எதுவும் சரியாகாது. நாம தான் தீப் கிட்ட கெட்ட பேர் வாங்கணும். எனக்கு ஆத்திரம் கோபம் ஆதங்கம் எல்லாம் ரெண்டு ஆண் சிங்கம் மேலேதான். கூட இருக்கறது சிங்கமா, குள்ள நரியா-னு கூட தெரியாதா?”னு கோபமா சொன்னா மதுரியா. “அதுவும் கரெக்ட் தான்… நம்ம கிட்ட முழு விஷயமும் இல்லாததால யார் கிட்டேயும் ஹெல்புக்கு போக முடியாது… லீகல் ஏக்ஷனும் எடுக்க முடியாது. என்னதான் பண்றது?”-னு கேட்டா ரீனா. “ரீன்ஸ்… இவங்க ரெண்டுப் பேரும் சேர்ந்து எனக்கு, விதுவுக்கு, தீப்க்கு பண்ணது பச்சை துரோகம்… ஏதோ வகையிலே விது, தீப் வாழ்க்கையிலே நடந்த சரிவுக்கு நானும் காரணம்… எனக்கு அந்த குற்றவுணர்ச்சியில தூக்கமே வரலே. ஏதாவது பண்ணியே ஆகணும். ஆர் யூ வித் மீ?”-னு கேட்டா மதுரியா.
ரீனாவுக்கு ஃப்ரெண்டோட மனசு நல்லா புரிஞ்சுது. ரீனாவுக்கும் மதுரியாவுக்கும் இருக்கற ஒத்துமையான குணம் இந்த தைரியமும், வந்த வம்பை விடாம இறங்கி அடிக்கற துணிச்சலும் தான்.. அதனால அதை ரீனாவால துல்லியமா புரிஞ்சுக்க முடிஞ்சுது. அது மட்டுமில்லாம விதுரன் கூட பிரிவு ஆனப்புறம் முகத்துலே எப்பவும் இருக்கற சோகம், வெறுமை போயி இப்போ இருக்கற தெளிவு, உறுதிப் பார்த்து இதுக்காகவே உதவணும்-னு முடிவு பண்ணா. “இது என்னடி கேள்வி? தட்டித் தூக்கறோம்… அம் வித் யூ அல்வேஸ்”-னு தோளைத் தட்டி சொன்னா ரீனா. “தேங்க்ஸ் ரீனா. நம்ம அவங்களை தேடிப் போக முடியாது. அவங்களையே தான் சொல்ல வைக்கணும். கையும் களவுமா புடிக்கணும்… அப்புறம் என்னால சரிவை சந்திச்ச ரெண்டு பேரோட லைஃபையும் சரி செய்யணும். ஏக்சுவல்லி ரெண்டும் லிங்க்ட்… இவங்க சரிவை சரி பண்ணா அந்த ஆத்திரத்திலே அவங்களே வெளியே வந்து மாட்டுவாங்க”-னு சொன்னா மதுரியா. “நல்ல யோசனைதான்… நம்ம நெக்ஸ்ட் ஸ்டெப்ஸ்?”-னு கேட்டா ரீனா. “முதல் ஸ்டெப்… சந்திரன் அங்கிளோட பேசி உங்க ரெண்டுப் பேரோட மேரேஜை நடத்தறது”னு குண்டைத் தூக்கிப் போட்டா மதுரியா. “என்ன?”-னு ரீனா பேயறைஞ்ச மாதிரி ஆனா.
சில நிமிஷத்துக்கு அப்புறம், “உனக்கென்ன பைத்தியமா? அப்படி என்னடி அவசரம்? இன்னும் தன்னோட லவ்வே சொல்லலே தீபு.. நீ வேறே”-னு எரிச்சலானா ரீனா. “நான் இதை விட சீரியஸா என் லைஃப்லே இருந்ததே இல்லை. நம்ம ஃபீல்ட்லே படிக்கும் போது கல்யாணம் பண்றது ஒண்ணும் அதிசயம் இல்லை…. அதோட உன் தீபு லவ்வை சொல்லாததுதான் பிரச்சினையே. அந்த அரை வேக்காடு அசோக், நானும் உன் தீபுவும் லவ் பண்றதா நினைச்சுக்கிட்டு இருக்கான். அப்படியே அவனை திசையத் திருப்பி உங்க மேரேஜை முடிச்சா, நீ இருக்கேன்-னு நம்பி நான் என் நெக்ஸ்ட் ஸ்டெப் பார்க்க போவேன்லே?”-னு கேட்டா மதுரியா. “ஏனாம்? அந்த நந்தினி மாதிரி நாங்களும் உங்க அண்ணாத்தையை விட்டு போயிடுவோம்-னு பயமாக்கும்?”-னு நக்கலா சொன்னா ரீனா. “இல்லே… தீப் உன்னை விட்டுட்டு போயிடுவாரோ-னு பயம் ரீனா. அசோக் கொஞ்சம் ஸ்மெல் பண்ணா கூட அதையும் இதையும் சொல்லி அவரோட மனசை கெடுத்திடுவான். ஹீ கேன் டூ இட் அண்ட் ஹீ வில் டூ இட். அவன் ஒரு விஷ பாம்பு”-னு சீரியஸா சொல்லவும் ரீனாவுக்கு மறுக்க முடியலே.
ஒரு பெருமூச்சு விட்டு, “சரி ரியா. இதை எப்படி செய்யப் போறே?”னு கேட்டா ரீனா. சந்திரன் அங்கிள் கிட்டப் பேசப் போறேன் ரீனா. அங்கிளுக்கு நந்தினி கூடவான லவ் ஃபெயிலியர் ஆச்சு-னு மட்டும் தெரியும்.. அங்கிளும் புள்ளையோட மனசு மாறணும்-னு காத்திட்டு இருக்கார். அது மட்டுமில்லே ப்ரதீப்புக்கு உன் மேலே பிடித்தம் நிச்சயமா இருக்கு.. ஆனா பாஸ்ட்னால தயங்கிட்டு இருக்கார். அதை உடைக்கணும். நீ கவலைப்படாதே. தட்ஸ் மை ஜாப்”-னு சொன்னா மதுரியா. “நைட் ஃபுல்லா யோசிச்சு ஏக்ஷன் ப்ளானே ரெடி போல… கேடி டீ நீ”-னு சிலாகிச்சுட்டு, “சரி, அதுக்கப்புறம்?”-னு கேட்டா ரீனா. மதுரியா கொஞ்ச நேரம் ஒண்ணும் பேசலே. “என்ன ரியா? ஏன் அமைதி ஆயிட்டே?”-னு கேட்டா ரீனா. “ஒண்ணுமில்லே… முதல்லே பரத்தப்பா, அப்பா, தாத்தாக் கிட்ட பேசி விதுரனுக்கு என்ன நடந்துச்சு? எப்படி இப்படியானார்-னு தெரிஞ்சுக்கணும். அட்ரஸ் வாங்கி விதுரனை பார்க்கப் போகணும். அவரோட தோல்விக்கான காரணம் புரிஞ்சுக்கணும். ஏன்னா எனக்கு தெரிஞ்ச விதுரன் பிசினஸ்லே ரொம்ப ஷார்ப். அப்புறம் எப்பாடுப்பட்டாவது அவரை பழைய நிலைமைக்கு அதே கம்பீரத்தோட முன்னை விட அதிக வீர்யத்தோட அந்த விக்கி முன்னாடி நிறுத்தணும். அவனால இழந்ததை எல்லாம் விதுரனுக்கு திருப்பி குடுக்கணும். எனக்கு தெரியும் ரீனா… இது ஈஸி இல்லை. ஆனா இதை செய்யலேன்னா என் மனசு என்னை நிம்மதியாவே விடாது”-னு சொன்னா மதுரியா.
அவளையே கூர்மையா பார்த்த ரீனா, “இந்த விதுரனை எதால செஞ்சு அனுப்பி இருப்பார் கடவுள்? இவ மனசுலே இன்னும் நடு நாயகமா உட்கார்ந்திருக்கான்”-னு நினைச்சா. “விதுரன் உன்னையும் சேர்த்துத்தான் இழந்திருக்கார். அந்த நினைப்பு இருக்கு தானே?”-னு கேட்டா ரீனா. “இல்லே… என்னை இழந்தது அவரோட ரெட்டை வேஷத்துனால. சபல புத்தியினால. மலருக்கு மலர் தாவற வண்டு குணத்தால… அதனால அது முடிஞ்சுப் போச்சு. நீ நினைக்கிறது நடக்க வாய்ப்பே இல்லை”-னு அழுத்தமா சொல்லி திகைக்க வைச்சா. “ஓஹோ.. துரோகிக்கு கடவுள் குடுத்த தண்டனை-னு அப்படியே விட்டுடறது தானே? ஏன் போயி சரி பண்ணணும்?”-னு கேட்டா ரீனா. “அது வெறும் நட்பு தான். அதோட என்னால தான் இந்த நிலைமை-னு எனக்கு கில்ட்”-னு தடுமாற்றத்தை மறைச்சு சொன்னா. “அடேங்கப்பா! நீ யாரை ஏமாத்த டிரை பண்றே ரியா? உன்னை நீயேவா? இல்லை என்னையா?எங்கே? என் முகத்தைப் பார்த்து சொல்லு.. வேறே எந்த நண்பனுக்கு இப்படியானாலும், அவங்க விதுரன் இடத்துலே இருந்தா இதே அளவு கோபம், வைராக்கியம் வரும்-னு?” பொட்டுலே அடிச்சா மாதிரி கேட்டா ரீனா.
மதுரியா பெருமூச்சுவிட்டு, “வராது தான்.. என்ன பண்ணலாம்?”-னு சலிப்பா கேட்டா. “அப்போ ஒத்துக்கோ. உனக்கின்னும் லவ் இருக்கு-னு. அந்த லவ்லே தான் இதெல்லாம் பண்றே-னு” சொன்னா ரீனா. “ஆமா ரீனா… லவ் இருக்கு. நிச்சயமா இருக்கு. சாகிற வரைக்கும் இருக்கும். அதனால தான் வேறே லைஃபை பத்தி யோசிக்க தைரியமே வரலே. இதை நான் எப்போ மறுத்தேன் ரீனா?”-னு கேட்டா மதுரியா. “அப்போ விதுரன் இன்னும் சிங்கிள்-னா கல்யாணம் பண்ணிப்பியா. பண்ணிக்கிட்டு அந்த விக்கி முகத்துலே கரியை பூசுவியா?”-னு கேட்டா ரீனா. “எனக்கு லவ் இருக்கு-னு தான் சொன்னேன். தன்மானம் இல்லே-னு சொன்னேனா?”-னு சூடா பதில் வந்துச்சு. “ரியா, நீ என்ன சொல்றே?”-னு கேட்டா ரீனா. “ம்ம்ம்.. சுவாதி அல்லது மதுவான்னு என்னால இருக்க முடியாது-னு சொல்றேன். எப்போ அவ பின்னாடி போவாரோ-னு காலம் பூரா பயத்தோட வாழ முடியாதுன்னு சொல்றேன். என்னோட உண்மையான காதலை பெற விதுரனுக்கு தகுதி இல்லே-னு சொல்றேன். ப்ளீஸ் ரீனா ஒரு வாட்டி ஏமாந்த வலியே இன்னும் போகலே”-னு கோபமா ஆரம்பிச்சு தழுதழுக்க முடிச்சா.
“ரியா, நீ என்ன சொல்றே? விதுரன் உன்னை சீட் பண்ணாரா? முழுசா சொல்லு”-னு கேட்டா ரீனா. “என் கிட்ட விவரம் கேட்காதே ரீனா. நான் இவ்வளோ சொன்னதே உன் கிட்ட மட்டும் தான். இதோட விடு.. அவரை என்னோட நிம்மதிக்காக பழைய படி மாத்தணும். அதோட சரி. நத்திங் மோர் நத்திங் லெஸ்”-னு திட்ட வட்டமா சொன்னா மதுரியா.
ரீனாவுக்கு நம்பவே முடியலே. அவளுக்கு விதுரனோட கடுமையான குணம், ஈகோ எல்லாம் தெரியும். ஆனா அவன் ஏமாத்துவான்-னு அவளுக்கு தோணலே. “ரியா, நீ அவசரப்படறே-னு தோணுதுடீ. இதுவும் ஏன் விக்கியோட சதியா இருக்கக் கூடாது. நீ விதுரன்கிட்ட பேசினியா?”-னு கேட்டா ரீனா. “எதுடீ சதி? என்னை வெட்டி விட்ட அடுத்த நாள்லே இருந்து அவ கூட ஜோடி போட்டு சுத்தறதா? இல்ல எந்நேரமும் உரசறதா? இல்லை கைக்கோர்த்து ஊர்லே திரியறதா? இந்த விவஸ்தை கெட்ட விஷயத்துக்கு நான் விளக்கம் வேறே கேட்கணுமா? ஏன்? கேட்டு என்னை இன்னும் காயப்படுத்திக்கவா? விதுரனை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வரணும்-னு நினைக்கறதுக்கு அதுவும் ஒரு காரணம். அவரோட இத்துப் போன ஃப்ரெண்டை பத்தி சொல்லி, அவர் செஞ்ச காரியத்தையும் சட்டையை கொத்தா பிடிச்சு நாலு வார்த்தை நறுக்-னு கேட்கணும். துரோகி! பச்சை துரோகி!!”-னு கோபத்துலே பொங்கினா மதுரியா. ரீனாவுக்கு அந்நேரம் ப்ரதீப் மதுரியாவை பத்தி சொன்னது காதுலே ஒலிச்சுது – “ரியாவுக்கு விதுரன் மேலே எந்த அளவுக்கு காதல் இருக்கோ அதே அளவு கோபம் இருக்கு. ஏதோ நடந்திருக்கு. அது அவங்க ரெண்டு பேருக்குத் தான் தெரியும். விதுரன் தான் சரி பண்ணணும். ஆனா அது நடக்க வாய்ப்பே இல்லை!”
“ரியா… ஒரு வேளை இப்போ மாறி இருக்கலாம். உன் அருமை புரிஞ்சு இருக்கலாம்”-னு ஃப்ரெண்டுக்கு கோபம் குறைஞ்சா, அவ மனசு அமைதியாகி அவ நார்மல் ஆயிடுவா-னு பேசினா ரீனா. “என்னைப் பார்த்தா ரீஹேபிலிடேஷன் செண்டர் மாதிரியா இருக்கு? இல்லை ஏசுநாதர் மாதிரி இருக்கேனா பாவிகளுக்கு மன்னிப்பு வழங்க… ம்ம்?”-னு கேட்டா மதுரியா. “சரி ரியா… நீ யெஸ் சொல்ல வேண்டாம். ஆனா இல்லைன்னும் வைக்காதே. விதுரனுக்கு ஹெல்ப் பண்ணு. மத்ததை அப்புறம் பார்க்கலாம். ஒரு வேளை இல்ல-னு வைச்சு உன் மனசுலே இருக்கற கசடுக்கு வடிகால் கிடைச்சாலும் அது உன் கண்ணுக்கு தெரியாது. ப்ளீஸ் டீ… எனக்காக.. நான் விதுரனுக்கு சப்போர்ட் பண்ணலே… புரிஞ்சுக்கோ”-னு ரீனா சொல்லவும், “புரியுது ரீனா… ஆனா நீ சொல்றது மறுபடித் தப்பான இன்னும் வலிக்கும். இதெல்லாம் தேவையா-னு இருக்கு”-னு சலிப்பா சொன்னா மதுரியா. “நீ இதுக்கும் மேலே இழக்க என்ன இருக்கு ரியா? இப்போ வலிக்கறதை விடவா அது வலிச்சுடப் போகுது. துரோகத்தோட வலியைத்தான் அனுபவிக்கிறியே? வேறெ என்ன தயக்கம்?”-னு ரீனா பன்னி பன்னி பேசவும் மதுரியாவுக்கு ஒத்துக்கறதைத் தவிர வேறே வழியிருக்கலே. கடைசியா அவனுக்கு உதவி பண்றதோட சேர்த்து அவ வலிக்கும் விடை தேடறது-னு முடிவுக்கு வந்தா மதுரியா.
ஆனா விதியோட கண்ணாமூச்சி யாருக்கு தெரியும்? எங்கேயோ இருக்கற ப்ரதீப்போட நட்பு, அவன் தங்கையை போலவே மதுரியா இருக்கறது, விதுரனுக்கும் அவனுக்கும் ஒரே மாதிரி பிரச்சினை, அதோட அவங்களுக்குள்ளே பேசறதை மதுரியா கேட்க நேர்ந்தது-னு விதி இன்னொரு பக்கம் அதோட ஆட்டத்தை ஆடிட்டுத் தான் இருந்துச்சு. விக்கி, அசோக்கை தண்டிக்க கிளம்பின ரீனா மதுரியாவுக்கும் அதே விதி இன்னும் என்னவெல்லாம் வைச்சிருக்கோ தெரியலே… பொறுத்துத் தான் பார்க்கணும். “சரி பேசி பேசியே டைம் ஆயிடுச்சு பாரு. கிளம்பு ப்ரதீப் வீட்டுக்கு போகணும்”-னு எந்திரிக்கவும், “ரியா.. அது வந்து… நீ மட்டும் போறியா? எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. ப்ளீஸ்”-னு சொன்னா ரீனா. “ரீனா… படுத்தாதே.. உனக்கு சூழ்நிலை நல்லா தெரியும். நான் ப்ரதீப் விஷயம் உன் கிட்டே விட்டுட்டு ரெண்டு வாரத்துலே விதுரனை பார்க்கணும்… பேசணும். அதுக்கப்புறம் இதைப் பார்க்க முடியாது… கிளம்பு”-னு அழுத்தமா சொல்லவும் வேறே வழி இல்லாம கிளம்பினா ரீனா.
ரெண்டுப் பேரும் ப்ரதீப் வீட்டு வாசல்லே ஆட்டோலே இருந்து இறங்கவும், ப்ரதீப்புக்கு அதிர்ச்சிக் கலந்த ஆச்சர்யம்! ரீனாவை பார்த்து இவ எங்கே இங்கே வந்தா-னு நினைச்சான். அதே சமயம் அவ வந்தது சந்தோஷமாவும் இருந்துச்சு. “வாங்க… வாங்க…”னு ரெண்டு பேரையும் கூப்பிட்டான். “அடடே… வாம்மா ரியா… நேத்திக்கே வருவே-னு நினைச்சோம்… பிஸியா?”-னு கேட்டார் சந்திரன். மதுரியாவும் சகஜமா பேசினா. ரீனாவையும் அறிமுகப்படுத்தினா. ரீனா தான் ரொம்ப டென்ஷனா இருந்தா. அதை ப்ரதீப் கவனிச்சு கண்ணாலேயே “என்னாச்சு?”-னு கேட்டான். அதை சந்திரனும் கவனிச்சார். மதுரியாவும் கவனிச்சா. இதான் சரியான நேரம்-னு முடிவு பண்ணவ, “ஏன் அங்கிள் தீப்புக்கு கல்யாணம் பண்ற ஐடியா இருக்கா? இல்லே அப்படியே தேவதாசாவே சுத்தட்டும்-னு விட்டுட்டீங்களா?”-னு கேட்டு அப்பா பையன் ரெண்டுப் பேரையுமே அதிர வைச்சா.