ஒரு வாரம் வேகமா ஓடிப் போச்சு. திங்கட்கிழமையிலே இருந்து ப்ரேம்நாத் கிட்ட இண்டர்னா சேர்ந்துட்டா. சந்திரன் சொன்னதுப் போலவே அவர் கிட்ட நிறைய கத்துக்க முடிஞ்சுது. அவ்வளோ கேஸ் பார்த்தார். அவரும் ரொம்ப ஸ்டிரிக்டா இல்லாம யதார்த்தமா பழகவும், நிறைய சந்தேகங்களும் கேட்டு தெரிஞ்சுக்கிட்டா. அவளோட கத்துக்கற ஆர்வம் பார்த்து டாக்டர்.ப்ரேம்நாத்துக்கு மதுரியாவை ரொம்ப பிடிச்சும் போச்சு. ப்ரேம் அவரோட நாளை ரொம்ப சீக்கிரம் ஆரம்பிப்பார். அதனால மதுரியாவோட நாளும் காலயிலே ஏழு மணிக்கு தொடங்கி, மதியம் ரெண்டு மூணு மணிக்கு முடிஞ்சுது. அதுக்கப்புறம் லைப்ரரி, படிப்பு-னு போய் மாலை ஆறு மணிக்குத் தான் திரும்பி வீட்டுக்கு வருவா.
சென்னையிலே பழைய வாழ்க்கை திரும்ப செட் ஆச்சு. வீட்டுலே இருக்கறவங்களுக்கும் அவ மாற்றம் திருப்தியாத் தான் இருந்துச்சு. பழைய மாதிரி சிரிச்சுக் கலகலப்பா இல்லேன்னாலும் அழுது வடியற மூஞ்சியோட இருக்கலே. அப்பப்போ கலகல-னு பேச்சும் இருந்துச்சு. சுபத்ராவுக்கு பொண்ணு இப்படி இருக்கும் போதே நல்லா ஒரு இடம் பார்த்து கல்யாணம் முடிச்சிடணும்-னு ஆசை. முதல்லே கோபம் வந்த நித்தியவாசனுக்கும் மனைவியோட ஆசை நியாயமாத் தான் பட்டுச்சு. அதனால வரன் பார்க்க சரி-னு சொல்லி, ஆனா மதுரியாவோட முடிவு தான் இறுதின்னும் சொல்லிட்டார்.
இதுலே ஒரு வாரம் குழம்பித் தவிச்சுது ரெண்டு பேர். ஒண்ணு பரத். இன்னொண்ணு ப்ரதீப். ரெண்டுப் பேருக்கும் ஒரே விஷயத்துலே குழப்பம். ஆனா வேறே வேறே மாதிரி. பரத்துக்கு, அன்னிக்கு விதுரனோட கதையை விலாவாரியா கேட்டப்புறம் அந்த நினைப்பே இல்லாத மாதிரி இருக்காளே, எப்படி?-னு. சரி, வீட்டுக்கு தெரியாம போறாளா, பார்க்கறாளா-னு பார்த்தா அதுவும் இல்லை. பின் தொடர்ந்துக் கூட பார்த்தாச்சு. அவ உண்டு அவ வேலையுண்டு-னு இருந்தா. இன்னும் சொல்லணும்னா ப்ரதீப்பைக் கூட பார்க்கவே இல்லை. நந்து, ரீனா யார் கூடவும் போன்லே கூட பேசலே. அவளுக்கு டைம் இல்லையா? என்ன தான் நடக்குது? நம்ம கணிப்பு தவறா?-னு குழம்பி போனான். அதே சமயம் ப்ரதீப்போ ‘என்ன அவ? அவனைப் போய் பார்த்து பேசணும்-னு முடிவு பண்ணி தெளிவா போனா-னு பார்த்தா, இப்போ யார் வீட்டு விருந்தோ-னு இருக்காளே? என்னாச்சு அவளுக்கு? அதுக்குள்ளே வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுச்சா? சாமி!! இவளுக்கு மலையேர்றதை இறக்கியே எனக்கும் ரீனாவுக்கும் வயசாயிடும் போல இருக்கே’-னு சலிப்பா நினைச்சான். ரீனாகிட்டேயும் கேட்டான். அதுக்கு அவ, “அடடா… அவ டிரெயினிங்லே செட்டில் ஆயிட்டுப் போவா தீபு. நீங்க ஏன் இப்படி தவிக்கிறீங்க? தனியா எல்லாம் போக மாட்டா. விடுங்க”-னு அவளும் எரிச்சலா சொல்லவும், அதுக்கு மேலே ஒண்ணும் பேச முடியாம அமைதியானான் ப்ரதீப்.
இன்னொரு மூணு நாள் நகரவும், அந்த வெள்ளிக்கிழமை காலையிலே பத்து மணி போல மதுரியா ப்ரதீப்புக்கு போன் பண்ணா. “சொல்லுங்க மேடம்.. பத்து நாளாச்சு பேசி. அம்னீஷியாவோ-னு கூட டவுட்டு”-னு கிண்டல் பண்ணான் ப்ரதீப். “விளையாடாதீங்க தீப். ஓ.டி.க்கு ஓடணும் இன்னும் கொஞ்ச நேரத்துல நானு. டீ ப்ரேக் இப்போ. சரி லிஸன். இன்னிக்கு மத்தியானம் மூணு மணிக்கு ஃப்ரீயா?”-னு கேட்டா மதுரியா. “ம்ம்ம்… ஃப்ரீ தான். சீனியர் ஊர்லே இல்லே. ஸோ, ஓ.பி.யும் ஒரு மணிக்கு முடிஞ்சிடும். என்னம்மா விஷயம்?”-னு கேட்டான் ப்ரதீப். “குட்.. அப்போ இன்னிக்கு மீட் பண்றோம் மூணு மணிக்கு. லொகேஷன் ஷேர் பண்றேன். அங்கே பார்க்கலாம். ஓகே.. ஸீ யூ.. பை”-னு கட் பண்ணிட்டா.
“அவங்க மீட் பண்ண போறாங்க. பெரிய இணை பிரியா ஜோடி”-னு எரிச்சலா உணர்ந்தான் அசோக்… எங்கே-னு தெரியாம போனது அடுத்த எரிச்சல். சரி.. பேச்சுக் குடுத்து அந்த இடத்தை தெரிஞ்சுட்டு, தானும் அங்கே போய் அவங்க தனிமையை கெடுத்து எரிச்சலாக்கலாம்-னு நினைச்சான். பேச்சு குடுக்க தைரியம் வந்ததுக்குக் காரணம் மதுரியா தான். முதல் வாட்டி மாதிரி கடிக்கறது இல்லை. ஆனா ஃப்ரெண்ட்லியா நெருங்கவே முடியாது. ஹலோன்னா ஹலோ அவ்வளவு தான். அவளா போய் அவன் கிட்ட பேசவே மாட்டா. ஆனா முகத்தை திருப்பலே-னு தைரியப் படுத்திக்கிட்டு அவனா வலிய போய் பேசுவான் அசோக். சில சமயம் பதில் கிடைக்கும். பல சமயம் ‘பல்ப்’ கிடைக்கும்.
“ஹாய்! மார்னிங்லே இருந்து பார்க்கவே முடியலே? பிஸியா?”-னு அங்கே வந்தான் அசோக். “நீங்க எதுக்கு என்னை பார்க்கணும்?”-னு கேட்டா. இதுக்கு என்ன பதில் சொல்லுவான். திரு திரு-னு முழிச்சான். கேசுவலா கேட்டேன் “ரியா… ஏன் இப்படி? ஒரு நட்புக்கு கூட பஞ்சமா?”-னு பாவமா கேட்டான். ‘இது உலக மகா நடிப்புடா சாமி’-னு மனசுலே நினைச்சா மதுரியா. “அசோக், நட்பு தன்னைப் போல வரணும். ஃபோர்ஸ் பண்ண முடியாது. நான் இண்டிரோவர்ட்(introvert). அதனால தப்பா எடுத்துக்காதீங்க”-னு சொன்னா மதுரியா. “ம்ம்ம்ம்… அப்பா உங்களைப் பத்தி ரொம்ப பெருமையா பேசறார்.. அதான் வந்து பேசினேன்”-னு சொல்லவும், ‘ஈ..’ன்னு இளிச்சு வைச்சா. அப்புறம், “ப்ரதீப்பை மீட் பண்ண போறீங்களா? கேன் ஐ ஜாயின் யூ?”-னு கேட்டான். “வாட்??”-னு பார்த்தா. “இல்லே… நானும் ப்ரதீப்பை மீட் பண்ணி நாளாச்சு”-னு சமாளிச்சான். “ஓ… உங்களுக்கு உங்க ஃப்ரெண்டை மீட் பண்ணணும்-னா கோ அஹெட். பட் டோண்ட் ரூயின் மை ப்ரவேட் டைம். அது எனக்கு பிடிக்காது… சாரி”-னு சொல்லிட்டு வாட்சை பார்த்துட்டே நிக்காம போயிட்டா. அவமானத்துலே அசோக்கோட முகம் செங்குரங்குப் போல மாறுச்சு.
யாராவது பார்க்கறாங்களான்னு பார்த்துட்டு, “ரொம்ப துள்ளாதே டீ. உன்னை லவ் பண்ணதை விட பைத்தியமா சுத்தின நந்தினியையே பிரிச்ச எனக்கு நீ எம்மாத்திரம். நீ அழற அன்னிக்கு வர்றேன்”-னு கறுவும் போதே அவன் போன் அடிச்சுது. அசோக்கோட வைஃப் தான். அதைப் பார்த்த அவன் முகத்துலே குரோதம் கலந்த ஏதோ சாதிச்ச சிரிப்பு.
மதுரியா ஷேர் பண்ண லொகேஷனுக்கு அவனோட கார்லே வந்து இறங்கினான் ப்ரதீப். அவனுக்கும் முன்னாடி அவளோட ஸ்கூட்டியிலே வந்து வெயிட் பண்ணிட்டு இருந்தா மதுரியா. அது சிஐடி நகர்லே கொஞ்சம் உள்ளே போனா, அந்த இடத்துக்கு கொஞ்சமும் பொறுத்தமில்லாத ஆடம்பர வாசம் அதிகம் வீசற ‘ஆர்லேண்டோ பாரடைஸ்’-னு போர்டை தாங்கற ஒரு கேடெட் கம்யூனிடி ரெசிடென்ஷியல் காம்ப்ளெக்ஸ். நவீன முறையிலே வடிவமைப்பு செஞ்சு, பார்க்கவே பள பள-னு பளிச்-னு இருந்துச்சு. அந்த காம்ப்ளெக்ஸுக்குள்ளே ஜிம், ஸ்விம்மிங் பூல், ப்ளே ஸ்கூல்-னு மேற்கத்திய மாடல்லே கட்டப்பட்டு இருந்துச்சு. அதுக்குள்ளேயே அடுக்கு மாடி, தனி வீடு, ட்யூப்ளெக்ஸ், ரோ ஹவுஸ்-னு கலந்து இருந்துச்சு. உள்ளே 500 குடும்பங்கள் இருக்கும். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இதை முடிக்கும் போது அப்பர் மிடில் க்ளாஸ்-னு சொல்லப்படற உயர்-மத்திய வர்க்கத்துக்கு கனவு இல்லம். உண்மையிலேயே அது ‘வேதம்-நித்தியம்’ குடும்பங்களுக்கு ரொம்ப தனித்துவமானது. ஏன்னா இதை பேசி ப்ரோமோட் பண்ணி வித்தது வேதம்னா, அழகான டிசைன்லே கட்டிக் குடுத்தது நித்தியம். அதை பார்த்துக்கிட்டே மதுரியாகிட்ட வந்தான் ப்ரதீப்.
“எதுக்கு இங்கே வந்தோம்? யார் வீடு ரியா?”-னு புரியாம கேட்டான் ப்ரதீப். “எப்படி இருக்கு? செம்ம கான்ஸெப்ட் இல்லே? பரத்தப்பாவோட ஹார்ட் வர்க். தியாவோட ஐ.டி வேலை”னு சொன்னா மதுரியா. “அதைக் காட்டத் தான் சைட் ஸீயிங் கூட்டிட்டு வந்தியா?”-னு கடுப்பா கேட்டான் ப்ரதீப். “ம்ம்ம்.. ஆமா… அது மட்டுமில்லே.. விதுரனோட ஃபர்ஸ்ட் மேஜர் ப்ராஜெக்ட்”-னு ஸ்மைலோட சொல்லவும், “ஓஹோ…”.னு இழுக்கும் போது தான் அவ சொல்ல வர்றது புரிஞ்சுது. “ஏய், நீ என்ன சொல்றே?”-னு கேட்டான் ப்ரதீப். “இப்போலேயிருந்து நமக்குள்ளே நடக்கறது சீக்ரெட். வெளியே சொன்னீங்க? சாவடிச்சுடுவேன்”-னு மிரட்டினா மதுரியா. “புண்ணியவதி யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன் சத்தியம் போதுமா?”-னு சிரிச்சான் ப்ரதீப். “குட்… விதுரன் இந்த காம்ப்ளெக்ஸ்லே தான் இருக்கார். ஆனா எங்கே-னு தெரியாது”-னு மதுரியா சொல்லவும், “இப்போ நான் உன்னை சாவடிக்க போறேன். 500 வீட்டுக்கும் மேலே இருக்கும். வீடு வீடா போய் தேட சொல்றியா? அந்த செக்யூரிடி நம்மளை போலீஸ்லே புடிச்சு குடுத்துடுவான் தெரியுமா?”-னு கேட்கவும், ‘என்ன பண்ணலாம்?’னு யோசிச்சா மதுரியா.
“என்ன யோசிக்கறே? வா போகலாம்”-னு கூப்பிட்டான் ப்ரதீப். “எது? போறதா? கஷ்டப்பட்டு, விக்கி வீட்டு வேலையாளுக்கு காசு குடுத்து அவன் ஊருக்கு போற நாள் தெரிஞ்சுக்கிட்டு, அவன் போனப்புறம் வந்தது இப்படி சும்மா திரும்பி போகவா?”-னு மனசுலே நினைச்சவ, வாய் விட்டே “நோ வே”-னு சொன்னா. “தலையெழுத்து!! உன் கூட இப்படி இங்கே வந்து தவம் கிடக்கணும்-னு. நீ எவ்வளோ நேரம் தவம் இருந்தாலும் தேடி கண்டுப்பிடிக்கற ஐடியா எல்லாம் வர்க் அவுட் ஆகாது”-னு தலையிலே அடிச்சுக்கிட்டான். “கம் ஆன் ரியா… யோசி… ஏதாவது வழி இருக்கும்”-னு தனக்கு தானே சொல்லிட்டு யோசிச்சா. “தாத்தா ஆர்லேண்டோ ப்ராபர்டி-னு சொன்னார். அப்புறம் ஏதோ சொன்னாரே?? கம் ஆன் ரியா!!!”னு மூளைய கசக்கினா. ஆனா நினைவு வரலே… “ஹேய்… லூசு அங்கே பார். மொத்தம் 534 வீடு, அப்பார்ட்மெண்ட்ஸ், வில்லா, ட்யூப்ளெக்ஸ், ரோ ஹவுசஸ்-னு. எப்படி தேட முடியும் ரியா. அடம் பண்ணாதே. வா போகலாம்… வேறே வழி யோசிக்கலாம்”-னு 15 நிமிஷ முடிவுலே சலிச்சுக்கிட்டு சொன்னான் ப்ரதீப்.
மதுரியா கண்ணுலே மின்னல். “இப்போ என்ன சொன்னீங்க. திரும்ப சொல்லுங்க”-னு கேட்டா. “ம்ம்ம்… 534 வீடு இருக்கு”-னு சொன்னேன்-னு முடிக்கறதுக்குள்ளே, “அதில்லே.. அப்பார்ட்மெண்ட்ஸ், வில்லா, ட்யூப்ளெக்ஸ், ரோ ஹவுசஸ்-னு சொன்னே இல்லே அதை கேட்டேன்”-னு கடுப்பானா மதுரியா. “அதை நான் சொல்லலே.. போர்டைப் பாரு”-னு அங்கே இருந்த போர்டை காட்டினான். அதைப் பார்த்துட்டு, “கரெக்ட்… ரோ ஹவுசஸ்… வாங்க வாங்க”-னு உள்ளே போனா. நேரா செக்யூரிடி ஆபீசுக்கு போனவ, “வணக்கம்ணா. இங்கே ரோ ஹவுஸ்க்கு எந்த பக்கம் போகணும்?”-னு பணிவா கேட்டா. “அடிப்பாவி, இன்னிக்கு ஸ்டேஷன்லே சட்டை பாண்ட் இல்லாம உட்கார வைக்காம விட மாட்டா போல இருக்கே?”-னு நினைச்சுட்டு அவ பின்னாடிப் போனான். “நீங்க யாரை பார்க்கணும் மேடம்? எந்த நம்பர். கொஞ்சம் இந்த விசிட்டர் புக்லே எண்டர் பண்ணுங்க”-னு புக்கை நீட்டினான் அங்கே இருந்த செக்யூரிடி. கூட இன்னொருத்தர் இவங்க ரெண்டுப் பேரையும் குறுகுறு-னு பார்த்தார். “ஓ… ஷ்யூர்… அண்ணா அந்த அட்ரஸ் புக்கை எடுங்க”-னு ப்ரதீப் பக்கம் கையை நீட்டிட்டே புக் ஃபில் பண்ண பேனாவை எடுத்தா. “அ….. அட்ரஸ் புக்கா?”-னு ப்ரதீப் தந்தி அடிச்சான்.
அவன் நிலைமை பாவமா இருந்தாலும், “தொலைச்சுட்டியா அண்ணா? வேலை எல்லாம் விட்டுட்டு உன் கல்யாண இன்விடேஷனை குடுக்க வந்தேன் பாரு.. திரும்ப இன்னோரு வெட்டியா வரணும்”-னு அங்கேயே கத்தினா. ப்ரதீப் மேலே மேலே முழிக்கவும், அந்த செக்யூரிடிக்கே பாவமா போச்சு. அண்ணன் தங்கச்சி-னு தெரிஞ்சதும் அந்த குறுகுறுப் பார்வையை விட்டார் அந்த இன்னொரு செக்யூரிடி. “பேர் சொல்லுங்க மேடம்”-னு கேட்டாங்க. “ஓ… தேங்க்ஸ்… இவர் எங்க அண்ணா டாக்டர்.ப்ரதீபன்.. அவரோட ஃப்ரெண்டை பார்த்து கல்யாண இன்விடேஷனை குடுக்க வந்தோம். ஃப்ரெண்ட் பேரு விதுரன். இங்கே தான் ரோ ஹவுசஸ்லெ இருக்கார்-னு சொன்னாங்க”-னு சொல்லவும், செக்யூரிடி ரெண்டுப் பேரும் முகத்தை அஷ்டகோணலா மாத்தினாங்க. “அந்த ஆளா? குடியும் புகையுமா… ரவுடி மாதிரி… குப்பையும் கூலமுமா வீடும் வாசலும்… நல்ல குடும்பத்து பொண்ணுங்க போற இடம் இல்லேம்மா அது”-னு சொல்லவும், “வார்த்தையை அளந்துப் பேசுங்க… அந்த ஆள்… ரவுடி-னு என்னென்னமோ பேசறீங்க? அவர் யார்னு தெரியுமா?”-னு கோபத்துலே படபட-னு பொரிஞ்சா மதுரியா. “என்னமோ நாங்க தப்பு பண்ணா மாதிரி பேசறே? உன் நல்லதுக்கு சொன்னோம்.. போறதுன்னா போ.. அந்த ஆள் வீடு ஆர்-14…. வெஸ்ட் சைட்லே கடைசி வீடு. அதனால மத்தவங்க எல்லாம் பொழச்சோம். கையெழுத்தைப் போட்டுட்டு கிளம்புங்க”-னு இன்னோர் செக்யூரிடி எகிறவும், “சாரி சார்… ஃபேமிலி ஃப்ரெண்ட்.. அதான் அப்படிப் பேசிட்டாங்க. தப்பா நினைக்காதீங்க”-னு மன்னிப்பு கேட்டுட்டுக் கூட்டிட்டுப் போனான் ப்ரதீப்.
“ஹேய்… நமக்கு வேலை நடக்கணும். அதை பார்க்கறதை விட்டுட்டு அவங்க கிட்ட சண்டை போடறே?”-னு கேட்டான் ப்ரதீப். “ஆமா.. விதுவைப் பத்தி எப்படி அப்படிப் பேசறாங்க? அவங்களுக்கு என்ன தெரியும்?”-னு கோபம் குறையாம சொன்னா. ‘விது’ங்கற வார்த்தையிலே தன்னால புன்னகை வந்துச்சு ப்ரதீப் முகத்துலே. “ரியா… புரியாம பேசாதே. இப்போ விதுரன் இருக்கற நிலைமை என்னவோ அதை வைச்சு சொல்றாங்க.. நீ ஏன் கேரக்டரை சொல்றதா நினைக்கறே?”-னு கேட்கும் போது தான் மதுரியாவுக்கும் தேவையில்லாம கோபப்பட்டோம்-னு புரிஞ்சுது. “ம்ம்ம்.. யூ ஆர் ரைட்… ஐ அம் ஸோ சாரி” அப்படீன்னு சொன்னா. “எதுக்கு?”-னு கேட்டான் ப்ரதீப். “அது ஒரு ஃப்ளோவிலே ஏக்டிங்காக.. வா.. போ… டானெல்லாம் போட்டு பேசினேன்”-னு மண்டையை சொறியவும், “இயல்புலேயே அப்படி பேசு-னு தான் சொல்றேன்.. நீ தான் ஒரு டிஸ்டன்ஸ்லேயே இருக்கே”-னு சிரிச்சான். “சே.. சே.. இல்லை தீப். நிச்சயமா டிஸ்டன்ஸ் எல்லாம் கிடையாது. என்னோட மூணு ஃப்ரெண்ட்ஸ் மாதிரி தான் நீங்களும். நான் உங்களை என் பிரதர் போல ஐ மீன் தியா போல தான் நினைக்கிறேன். வாங்க போங்க-னு சொல்றதால எந்த டிஸ்டன்ஸும் கிடையாது”-னு சொன்னா மதுரியா. “தெரியும் ரியா. உன்னோட அக்கறை அன்பு எல்லாம் தெரியும்.. இயல்பா அதுவா வர்றதை தடுத்து வலுக்கட்டாயமா வாங்க போங்க-னு சொல்லாதே. அதுவே போதும்”-னு சொன்னான் ப்ரதீப்.
அப்படியே பேசிட்டே ரோ ஹவுசஸ் வரிசையோட கடைசிக்கு வந்தாங்க. ‘ஆர்-14’ தான் கடைசி வீடு. வீட்டுக் காம்பவுண்டுக்கு வெளியே க்ளீனாவும் உள்ளே இலையும் சருகுமா பெருக்கி ரொம்ப நாளானது தெரிஞ்சுது. அந்த வீட்டு வாசல்லே நின்னிருந்த நீல நிற ‘ஃபோர்ட் எண்டேவர்’ கார் தூசி படிஞ்சுக் கேட்பார் இல்லாம கிடந்துச்சு. ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டேப் போனாங்க… வீட்டு வெராண்டா தூசியும் குப்பையுமா ஐயோ-னு இருந்துச்சு. அப்படியே மெல்ல உள்ளே போன ஒரு டீனேஜ் பையன் வாசல் பெல்லை அடிக்கலாமா வேண்டாமா-னு பயந்து பயந்து ஸ்விட்ச் மேலே கை வைச்சு எடுத்துட்டு இருந்தான். அதே நேரம் மதுரியாவும் ப்ரதீப்பும் போகவும் டக்-னு பெல்லை அடிச்சா மதுரியா. அந்த பையன் பயந்து அவங்க பின்னாடி போய் நின்னான். அது வித்தியாசமா இருக்கவும், “யார் நீ?”-னு கேட்டா மதுரியா. “நான் நைட் சாப்பாடு குடுக்க வந்தேன்கா. பெல் அடிச்சு கூப்பிட்டா திட்டுவார்கா”-னு பயந்துக் கிட்டே சொல்லவும், “பெல் அடிக்காம எப்படி கூப்பிட முடியும். அதோட பெல் அடிச்சே இன்னும் வரலியே”-னு சொல்லிட்டு இன்னொரு முறை பெல் அடிச்சா.
கொஞ்சம் பொறுத்து வேகமா கதவை திறந்தான் விதுரன். “என்னடா?”-னு சள்னு விழுந்தவன் அங்கே மதுரியாவை பார்த்து திகைச்சு போனான். “நீயா?”-னு கேட்டவன், “நைட் சாப்பாடுண்ணா”-னு அந்த பைய்யன் நீட்டவும் “கொண்டா.. போ..”-னு வாங்கினவன், அலட்சியமா “யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?”-னு மதுரியாவையும் ப்ரதீப்பையும் பார்த்து கேட்டான். ப்ரதீப் ஆடித்தான் போனான். அவன் கண்ணுலே இருந்த உண்மையான வலியை பார்த்து, அவன் மதுரியாவை பார்த்த உடனே அக்செப்ட் பண்ணிட்டான், ஆறுதலுக்கு அவளை கெட்டியா பிடிச்சுப்பான்-னு தான் எதிர்பார்த்தான். இந்த அலட்சியத்தை, திமிரை எதிர்பார்க்கலே. “ஓஹோ… யாரு-னு தெரியாம தான் நீயா-னு கேட்டீங்களா?”-னு அவனுக்கு சற்றும் குறையாத திமிரோடு கேட்டா மதுரியா. “உனக்கென்ன வேணும்?”-னு கேட்டான் விதுரன். “உங்க கூட கொஞ்சம் பேசணும்”-னு அவ சொல்லவும், “தேவை இல்லை. எனக்கு யாரையும் பார்க்கவும் வேண்டாம், பேசவும் வேண்டாம். கெட் அவுட்”-னு கத்தி கதவை மூடப் போனான். கதவுக்கும், நிலவுக்கும் நடுவிலே கையை குடுத்து மாட்ட வைச்சு வலியால துடிச்சா மதுரியா.
“விது…. கை… விடுங்க..”ன்னு கதறவும், “ரியா..”-னு பதறினான் ப்ரதீப். “போ… கெட் அவுட்”-னு கத்தினான் விதுரன். வலியிலே துடிச்சாலும் கையை விடுவிக்காம, “முடியாது விது. உங்கக்கிட்ட பேசாம போக மாட்டேன்… உங்க வீட்டு வாசல்லே தான். அன்ன ஆகாரம் தண்ணி இல்லாம இருக்கப் போறேன்”-னு சொல்லி கண்ணுலே தண்ணி வழிய கையை விடுவிச்சுக்கிட்டா. கதவை அறைஞ்சு சாத்திட்டு போனான் விதுரன்.