அத்தியாயம் -24

இரவு ஒன்பது மணி… விதுரன் வீட்டு வாசல்லே அந்த புதர் மண்டின இடத்துலே கொசுக் கடியிலே, வியர்வையிலே கண்ணு சொருக உட்கார்ந்திருந்தா. இடதுக் கையிலே நாலு விரல் கதவிடுக்குலே மாட்டி நல்லா சிவந்து வீங்கி இருந்துச்சு. இங்கே வர்றதைப் பத்தின சலனத்துலே மதியமும் சாப்பிடாம, இப்போ சோறு தண்ணி இல்லாம அலண்டுப் போய் உட்கார்ந்திருந்தா. ஆனா கண்ணு சொருகினாலும் அதுலே “என் நிலையிலே எந்த மாற்றமும் இல்லை” அப்படீ-னு சொல்ற உறுதியும், தீர்க்கமும் ப்ரதீப்பை பயப்படுத்திச்சு. 

மதுரியா விதுரன் ரெண்டுப் பேர் மனசுலேயும் கடும் புயல். மதுரியாக்கு அவனை நெருங்கறதும் பேசறதும் நிச்சயம் சுலபமா இருக்காது-னு தெரிஞ்சு தான் வந்தா. ஒரு வேளை இன்னிக்குப் பார்த்து பேச முடியலேன்னா வேறே வழி யோசிக்கணும்-னு தான் நினைச்சுக் கிளம்பினா. வேறே என்னவெல்லாம் வழியிருக்கு-னு யோசிச்சே மதியம் சாப்பிடலே. ஆனா இலகுவான மனநிலையிலே வந்தவளை இறுக வைச்சு இவன்கிட்ட இன்னிக்கே பேசி சரி கட்டணும். இவனை பழைய நிலைக்கு கொண்டு வரணும்-னு வைராக்கியமா யோசிக்க வைச்சுது மூணு விஷயம். முதல்லெ அந்த செக்யூரிடியோட பேச்சு அவன் கவுரவமான வாழ்க்கை வாழலே-னு சொல்றா மாதிரி இருந்துச்சு. ரெண்டாவது எது மேலேயும் பற்றில்லாம குப்பை மேடு மாதிரி அவன் வாழற சூழ்நிலை. மூணாவது எடுப்பு சாப்பாடு. “சே… சங்கரிம்மா சாப்பாடு சாப்பிட்டு, இப்போ இதை எப்படி சாப்பிடறான்? ஆனா சாப்பிடறான். இல்லேன்னா, மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்காததைப் போல அதே உருவமும், திமிரான சதையும், முரட்டுத் தனமுமா இருக்கானே? விட்டுப் பிடிக்க முடியாது. விடாம பிடிச்சே ஆகணும்”-னு முடிவு பண்ணித் தான் அவன் கிட்ட பேசவே ஆரம்பிச்சா.

இவ மனசுலே இப்படின்னா, விதுரன் வீட்டு வாசல்லே மதுரியாவை பார்த்து ஆடித்தான் போனான். ஒண்ணரை மாசம் முன்னாடி பார்க் வாசல்ல அவளை ஆட்டோலே பார்த்தப்போ மனசு முழுக்க அவ்வளோ வலி.  அதுலேயும் அவ பக்கத்துலே இருந்த ஆண்.. அவன் மேலேயே அவ அதிர்ச்சியிலே மயங்கி சரியவும் மனசு பூரா அவ்வளோ வலி. தனக்கு யாரும் வேண்டாம்-னு நினைச்ச மனம், தன்னை மீறி இவ இன்னிக்கு வருவா… நாளைக்கு வருவா-னு பார்த்து பார்த்து ஏமாந்துப் போச்சு. அந்த ஏமாற்றம் தன் மேலேயே கோபமா மாறுச்சு. அதனால் இந்த ஒரு மாசமும் நிதானத்துலே இல்லாத அளவு குடிச்சான். அப்புறம் அந்த நிலையும் பிடிக்காம குடியை நிறுத்திட்டு வெளியவே போகாம வீட்டோட அடைஞ்சு இருந்தான். கையிலே பண இருப்பு குறையறதை கவனிச்சவன் இன்னும் மூணு மாசத்துக்கு அப்புறம் பட்டினியிலே உயிர் போகப் போகுதுனு நினைச்ச மூணாவது நாள் மதுரியா வாசல்லே வந்து நின்னா. 

அவளைப் பார்த்து அவனுக்கு எல்லா உணர்வும் கலந்துச்சு. ஆனா குற்றவுணர்வு, ‘தான் ஒரு ஃபெயிலியர்’, தாழ்வு மனப்பான்மை, தனக்கு யாரும் தேவையில்லை-னு முடிவு பண்ணி அவளை வெளியே தள்ளி கதவை சாத்த வைச்சுது. கையை சிக்க வைச்சு கதவை மூடியது தன்னோட கடுமையால எப்படியாவது தன்னை விட்டு போகட்டும்-னு தான். ஆனா அவ போகமாட்டேன்-னு சொல்லி 5 மணி நேரமா அங்கேயே இருக்கறது அவன் மனசை ஆட்டிப் பார்த்துச்சு.

ஏதோ தோணவும் அப்போ தான் மேல் மாடிக்கு போய் அவங்க ரெண்டு பேருக்கும் தெரியாம நோட்டம் பார்த்தான். உறுதியா உட்கார்ந்து இருந்த மதுரியா, அவ கிட்ட கெஞ்சற அந்த ஆள்.. அன்னிக்கு பார்த்தப்போவும் சரி, இப்போ பார்க்கறப்போவும் சரி அவங்க ரெண்டு பேருக்குள்ளே நட்புக்கான நெருக்கம் தெரிஞ்சதே தவிர, காதலுக்கான அந்நியோன்யம் இல்லையே? யார் இவன்? ஆனா யாரோ என்னமோ.. இவனும் தான் அவளோட சேர்ந்து 5 மணி நேரமா எதுவும் சாப்பிடாம உட்கார்ந்து இருக்கான். “எந்திரிச்சு போ டீ. எனக்கு யாரும் வேண்டாம். எனக்கு தனிமைதான் வேணும்… போ”-னு மானசீகமா சொல்லிட்டே கீழே வந்து ஹால்லே அவங்களை பார்க்கற மாதிரி அவங்க பார்க்க முடியாதபடி உட்கார்ந்தான். 

ஒரு மனசு இவ சீக்கிரம் கிளம்பட்டும்னும் இன்னொரு மனசு ஒரு வேளை போயிடுவாளோன்னும் யோசிக்க உட்கார்ந்தான். அதிக குடியினால குடல்லே புண்ணு இருக்கு-னு டாக்டர் சொல்லவும், அப்போ தான் குடியை நிறுத்திட்டு வேணுமோ வேண்டாமோ-னு சாப்பிட ஆரம்பிச்சான். பெரிய பிடிப்பெல்லாம் ஒண்ணுமில்லே. இன்னொரு வாட்டி எங்கேயாவது மயங்கி விழுந்தா வீட்டுலே இருந்து வந்துடுவாங்க-னு எரிச்சல் மட்டும் தான். இப்போவும் அதனால தான் வேண்டா வெறுப்பா சாப்பிட்டான். அதோட எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துலே கிளம்பி போகப் போறா-னு (அவ)நம்பிக்கை வேற. அதை பார்க்க தைரியமில்லாம, சாப்பிட்டு எந்திருச்சு மாடியிலே இருக்கற ரூமுக்கு போய் கதவடைச்சு படுத்துட்டான். ஆனா தூக்கம் வந்துச்சாங்கிறது வேறே கதை.

மணி ஒன்பதை தாண்டவும் மதுரியா போன் விடாம அடிச்சு அடிச்சு நிக்க ஆரம்பிச்சுது. ப்ரதீப்புக்கு நிலையோட தீவிரம் புரிய ஆரம்பிச்சுது. இன்னும் விதுரன் வீட்டு காம்பவுண்டுக்குள்ளே இருந்ததால செக்யூரிடினால ப்ராப்ளம் வரலே. அதோட அவன் வீட்டுக்குப் பக்கத்து வீடு பூட்டி இருந்துச்சு. அதனாலேயும் அவளோட நடத்தை இதுவரைக்கும் பேசுப் பொருள் ஆகலை. இல்லேன்னா மதுரியா இன்னிக்கு ஒரு காட்சிப் பொருளாகியிருப்பது உறுதி. மணி ஒன்பதாச்சு. இந்த இருட்டுலே இப்படியே இருக்க முடியாது-னு உணர்ந்தவன், அவ பக்கத்துலே மண்டியிட்டு, “ரியாம்மா… லேட் ஆச்சு கிளம்பலாம்”-னு சொல்லவும், எதுவும் பேசாம இல்லை-னு தலை ஆட்டினா. “ரியா… ப்ளீஸ்… நாளைக்கு வந்து பேசிக்கலாம். நீயும் கோபமா இருக்கே… விதுரனும் கோபமா இருக்கார். கொஞ்சம் ஆறப் போட்டுப் பேசலாம். சொன்னா கேளு. பார்! வீட்லே இருந்து போன் பண்றாங்க”-னு சொல்லும் போதே மதுரியா போன் திரும்ப அடிச்சுது. எடுத்துப் பார்த்தா அது நித்தியவாசன். “அப்பா…”னு கூப்பிடவும், “என்னடா.. இன்னும் வீட்டுக்கு வரலே? அம்மா போன் பண்ணியும் எடுக்கலே-னு டென்ஷன் ஆயிட்டா”-னு சொன்னார். “கொஞ்சம் வேலை இருக்கப்பா. ரா… ராத்திரியும் வர முடியாது”-னு சொன்னா. “என்னடா எமர்ஜென்சி கேசா? ம்ம்ம்.. பார்த்துடா… பத்திரமா இரு. முடிஞ்சதும் வந்துடு”-னு சொன்னார் நித்தியவாசன். “சரிப்பா.. அம்மா கிட்ட சொல்லிடுங்க”-னு அவ முடிக்கவும், “நான் பார்த்துக்கறேன் டா.. நீ பத்திரமா இரு.. எதுவானாலும் போன் பண்ணு”-னு சொன்னார் நித்தயவாசன். “கவலைப் படாதீங்கப்பா.. நான் ரொம்ப சேஃபா இருக்கேன்”-னு போனை வைக்கவும் கொந்தளிச்சு போனான் ப்ரதீப்.

“ஹேய்… நீ என்ன லூசா? ராத்திரி முழுக்க இங்கே இருக்க போறியா? பைத்தியக்காரி.. இப்படியே சோறு தண்ணி இல்லாம ராத்திரி பூரா அக்னி நட்சத்திரம் சூட்டிலே இருந்தா, காலையிலே சமாதி ஆயிடுவே. மரியாதையா எந்திரி”-னு கத்தினான் ப்ரதீப். “வாய்ப்பே இல்லை தீப். நீங்கக் கிளம்புங்க… என்னால வர முடியாது. ஒரு வேளை விதுரன் வந்து என் கூட பேசலேன்னா நான்… நான்.. என் உயிரை விடவும் தயார்.. அவருக்காச்சு எனக்காச்சு… அம் நாட் கிவிங் அப்”-னு தெளிவா சொல்லவும் ஆடியேப் போனான் ப்ரதீப். “ரியாம்மா… ப்ளீஸ்… சொல்றதைப் புரிஞ்சுக்கோம்மா.. கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம். கண்டிப்பா அவருக்கு புரிய வைச்சு பேசலாம்”-னு ஏறக்குறைய கெஞ்சினான். “விட்டுப் பிடிக்கறதா? வாய்ப்பே இல்லை தீப். நானும் அப்படி நினைச்சுத்தான் வந்தேன். ஆனா இப்போ விட்டா பிடிக்கவே முடியாது-னு புரிஞ்சுக்கிட்டேன். அவர் கூட பேசாம நான் ஒரு அடிக் கூட நகர மாட்டேன். நீங்க கிளம்புங்க”-னு சொல்லவும் இன்னும் ரௌத்திரமாகி அவளை எழுப்பி நிறுத்தினான் ப்ரதீப். அதைப் பார்த்து எப்படியும் அவளை இழுத்துப் போவான்-னு நம்பி அதைத் தன்னால பார்க்க முடியாது-னு வேகமா தன்னோட ரூமுக்கு போயி படுத்துட்டான் விதுரன்.

“ஓங்கி அறைஞ்சிடுவேன். நான் உன்னை தனியா விட்டுட்டு போறதா? நான் மாதுரிக் கிட்டக் கை ஓங்கினதில்லை ரியா! மிரட்டினாலே பயப்படுவா.. உனக்கு அந்த பயம் வரலேன்னா அடிக்க யோசிக்க மாட்டேன். எனக்கு அந்த உரிமை இருக்கு”-னு உலுக்கினான். அவன் கையை மெதுவா விலக்கி, “ரிலேக்ஸ் தீப். நான் நம்ம உறவை யாரும் தப்பா பேசிடக் கூடாது-னு தான் போக சொல்றேன். நம்ம ரெண்டுப் பேரும் இங்கே இருந்தா வேறே மாதிரி. நான் மட்டும் இருந்தா வேறே மாதிரி. அது மட்டுமில்லே. அந்த விசிட்டர் புக்லே சைன் ஆஃப் பண்ணலேன்னா செக்யூரிடி இங்கே வந்து இன்னும் டர்ட்டி சீன் ஆகும்… ப்ளீஸ் தீப்.. இது சினிமா இல்லே. நடைமுறை சிக்கல்களையும் பார்த்துத்தான் ஆகணும். ப்ளீஸ் கிளம்புங்க. நாளைக்குக் காலையிலே வாங்க. அது மட்டுமில்லை. அப்பா நான் ஹாஸ்பிடல்லே இருக்கேன்-னு நினைக்கிறார். ஒரு வேளை உண்மை தெரிஞ்சா கூட நீங்க என் கூட இருக்கறதை விட வெளியே இருந்தா தான் சமாளிக்க முடியும்… ப்ளீஸ்”-னு கெஞ்சலா சொன்னா. “ஆனா ரியா.. இவ்வளோ போராடி விதுரன் கிட்ட பேசியே ஆகணும்-னு ஏன் இந்த பிடிவாதம்?”-னு கேட்கவும், ‘யாருமில்லாத அன்னக்காவடி’ங்கற விக்கியோட வார்த்தை மதுரியாவோட காதுலே ஒலிச்சுது. “செஞ்சு தான் ஆகணும் தீப். நல்லவங்க கீழே விழுந்துடக் கூடாது”-னு அழுத்தமா சொல்லவும் என்னவானாலும் மதுரியா தன்னோட முடிவை மாத்திக்கப் போறது இல்லே-னு தெரிஞ்சுக்கிட்டான். “ஆனா உன்னை எப்படி ரியா தனியா விட முடியும்? நீ ஒண்ணும் சாப்பிடலே..  தண்ணியை கூட ஒதுக்கறே. கையிலே அடி… வீங்கி ப்ளட் க்ளாட் ஆகி இருக்கு.. இப்படி இருக்கறப்போ இந்த வெக்கையிலேயும் புழுதியிலேயும் எப்படி விட்டுட்டு போக முடியும்?”-னு கேட்டான் ப்ரதீப்.

“பயப்படாதீங்க தீப். எனக்கு ஒண்ணும் ஆகாது. எனக்கு நானும் முக்கியம் தான். நீங்க நினைக்கறா போல ஒண்ணும் ஆகாது. தைரியமா போங்க. விதுவையும் எனக்குத் தெரியும். அப்படி ஆபத்து ஏதாவது வந்தாலும் சும்மா பார்த்துட்டு இருக்கற அளவுக்கு கல்லில்லை. போயிட்டு வாங்க”-னு அனுப்பினா. “ஏன் ரியா இப்படி பிடிவாதம் பிடிக்கறே?”-னு அவன் கேட்கவும், “வேண்டாம் தீப்.. நம்ம அழகான உறவை யாராவது அசிங்கமா சொல்லிட்டா அந்த நிமிஷமே என் உயிர் போயிடும்.. ப்ளீஸ்”-னு சொல்லவும் ப்ரதீப் கிளம்பினான். “சரி.. பார்த்துக்கோ… பத்திரமா இரு. எப்போன்னாலும் என்னவானாலும் கூப்பிடு. விதுரன் உன்னை உள்ளே கூப்பிட்டுக்கிட்டாலும் போன் பண்ணு. காலையிலே எவ்வளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளோ சீக்கிரம் வர்றேன். உன் ஸ்கூட்டியை நான் அடையாறு பேக்கரி பெய்ட் பார்க்கிங்லே விட்டுட்டுப் போறேன். ஒரு வேளை வீட்டுக்கு போகணும்னா தனியா போகாதே. கால் மீ..”-னு ஆயிரம் பத்திரம் சொல்லிட்டுக் கிளம்பினான். ப்ரதீப் மட்டும் தான் போனான். அவனோட எண்ணமும் நினைப்பும் மதுரியா கூடத்தான் இருந்தது.

மூணு பேருக்கும் தூக்கமில்லாத இரவா போச்சு. மதுரியாவுக்கு கொஞ்சம் கூட தூக்கமே இல்லேன்னா, விதுரனுக்கும் ப்ரதீப்புக்கும் பின் போது ஒரு 4 மணிநேரம் தூங்கி இருப்பாங்க. ப்ரதீப் காலையிலே எப்போ விடியும்-னு காத்திருந்து ஒரு 7 மணி ஆனதும் ஓடி வந்தான். செக்யூரிடி ஆஃபீஸ்லே முகத்தை சாதாரணமா வைச்சு எண்ட்ரி போட்டுட்டு வர்றதுக்குள்ளே போதும் போதும்-னு ஆயிடுச்சு. முந்தின நாள் ராத்திரி ஷிஃப்ட் மாறினதுனால யாரும் மதுரியாவை கேட்கவுமில்லை. அவன் ஸ்கூட்டியை விட்டுட்டு வந்து அவன் காரை எடுத்ததும் வித்தியாசமா தெரியலே. இன்னிக்கு காலையிலே அவன் வரவும், அவன் மட்டும் தான் வந்திருக்கறதா நினைச்சாங்க. அவங்க பார்வை மறைஞ்சதும் ஓடோடி வந்தான். வந்தவன் விதுரன் வீட்டு வாசல்லே பார்த்துட்டு பேயறைஞ்ச மாதிரி நின்னுட்டான். ராத்திரி அவன் விட்டுட்டு போன நிலையிலேயே, இப்போ கண்ணு சொருகி மயங்க தயாரான நிலையிலே இருந்தா மதுரியா. அதைப் பார்த்து வேகமா அவ கிட்டே ஓடி வர்றதுக்குள்ளே ஒரு கை அவளை தாங்கிப் பிடிச்சு தன்னோட சேர்த்துப் பிடிச்சுத் தூக்குச்சு.

ராத்திரி மதுரியா கிளம்பிட்டா-னு உளைச்சல்லே இருந்த விதுரன் ரொம்ப நேரம் புரண்டு புரண்டு படுத்து எப்போ தூங்கினானோ அவனுக்கே தெரியாது. ஆனா காலையிலே ஆறரை போல முழிப்பு வந்தது அதிசயம் தான். எப்போவும் பத்து மணிக்குத் தான் விடியும். “சே..”-னு சலிப்போட எந்திரிச்சு மெதுவா காலைக் கடனெல்லாம் முடிச்சு, கிச்சனுக்கு போயி காபியும் போட்டு குடிச்சுட்டு வந்து ஹால் ஸ்கிரீன் விலக்கினதும் அவன் தலையிலே இடியே இறங்குச்சு. “இவ விடிய விடிய இங்கேயே இருந்தாளா? அவன் போனானே?”-னு வாய்விட்டே யோசிக்கும் போதே மதுரியா மயங்கி சரியற நிலைக்கு போனா. “ஓ… காட்… மதூ.”-னு அலறலோட கதவை திறந்துட்டு ஓடினான். ஓடிப் போயி அவ சரிஞ்சு விழறதுக்கு முன்னாடி அவளைத் தன்னோட வயித்தோட சேர்த்து பிடிச்சான். “பைத்தியக்காரி… ஐயோ.. இப்படி பண்ணிட்டியேடீ லூசு?”-னு அவளை திட்டிட்டே அவளை தூக்கினான். அதே நேரம் ப்ரதீப்பும் அவ கிட்ட ஓட்டி வந்தான். “என்னங்க.. இப்படி நைட் அவளை தனியா விட்டுட்டு போயிட்டீங்களே?”-னு ப்ரதீப் மேலே பாய்ஞ்சான். “ஏது? என்னடா நடக்குது இங்கே?”ன்னு பார்த்தான் ப்ரதீப். அவளை தூக்கினவன் வேகமா வீட்டுக்குள்ளே போனான். அந்த நிலையிலேயும் ப்ரதீப்பை “உள்ளே வாங்க..”ன்னு கூப்பிட மறக்கலே.

விதுரனோட வீடு பெரிசா நவீனமா இருந்தாலும் உள்ளே பராமரிப்பு இல்லாம ரொம்ப பரிதாபமா இருந்துச்சு. மதுரியாவை படுக்க வைக்க, சோஃபாலே இறைஞ்சு கிடந்த பேப்பரை எல்லாம் ப்ரதீப் விலக்கி வைக்க வேண்டி இருந்துச்சு. அவளை படுக்க வைச்சு, அவளை தன் நெஞ்சோட சேர்த்துப் பிடிச்சு கன்னத்தை மெதுவா தட்டினான். “மது… மதும்மா! என்னை பார்டா… கண்ணைத் திற”-னு கூப்பிட்டான் விதுரன். ப்ரதீப் அவன் பதட்டம் அக்கறை இதெல்லாம் சுவரசியமா பார்த்திட்டிருந்தான். “விது… கொ.. கொஞ்சம் பேசணும்”-னு அரை மயக்கத்திலே உளறினா. 

அவளை படுக்க வைச்சுட்டு வேகமா உள்ளே போய் ஃப்ரிட்ஜ்லே இருந்து தண்ணி எடுத்துட்டு வந்து, துணியை ஈரம் பண்ணி துடைச்சான். மெல்ல கண்ணை திறந்தவளுக்கு தண்ணி  குடிக்க வைச்சான். ஓரளவுக்கு தெளிவாகவும், திரும்ப உள்ளே போய் ஐஸ் பேக் எடுத்துட்டு வந்து அவ விரல்கள்லே வைச்சு சேர்த்துக் கட்டினான். “ஆ.. வலிக்குது விதுரன். விடுங்க”-னு கையை இழுத்துக்கவும், “மூளையிருக்கா உனக்கு? படிச்சவ தானே? நான் தான் அறைஞ்சு சாத்தறேனில்லே? அப்புறம் எதுக்குடீ கையை கொண்டு இடையிலே வைச்சே. இதோட போச்சு. கையே போயிருந்தா என்ன பண்ணுவே? மண்டையிலே என்ன களிமண்ணா?”-னு சரமாரியா திட்டிட்டே ஐஸ்பேக்கை டைட்டா கட்டினான். “எனக்கு உங்க கிட்ட பேசணும்”-னு அதையே சொன்னா. “அதுக்காக உன்னையே காயப் படுத்திப்பியா?”-னு விதுரன் கேட்கவும், “மேடம் உயிரை விடவே ரெடியா இருக்காங்க… நீங்க வேறே?”-னு போட்டுக் குடுத்தான் ப்ரதீப்.

விதுரன் அதிர்ந்து போனான். “சே.. நீ எல்லாம் மாறவே மாட்டியாடீ? இரு வரேன்”-னு உள்ளே போனான். அவன் உள்ளே போனதும் “இப்போ திருப்தியா? எனக்குன்னு வருவீங்களா?”-னு ப்ரதீப் மேலே பாயவும் கிச்சன்லே இருந்த விதுரன் முகத்துலே தன்னை மீறி ஒரு சிரிப்பு. ரெண்டு நிமிஷத்துலே வந்தவன் ரெண்டு கப்போட வந்தான். “இந்தா குடிச்சுத் தொலை முதல்ல”-னு டீயை குடுத்தான். இன்னொரு கப்பை ப்ரதீப்கிட்ட குடுத்து, “இந்தாங்க.. பை தி வே! ஐ அம் சாரி… உங்களை இன்சல்ட் பண்ணணும்கிறது என் இண்டென்ஷன் இல்லே. உட்காருங்க”-னு எந்த உணர்வும் இல்லாம சொல்லி இழுக்கவும், “என் பேர் ப்ரதீப்… நான் ரியாவோட காலேஜ்லே தான் படிக்கிறேன். சைக்கியாட்டிரி. அவளுக்கு ரெண்டு வருஷம் சீனியர்”-னு இண்ட்ரோட்யூஸ் பண்ணிக்கிட்டான். தலையாட்டி அதை ஏத்துக்கிட்டு, “என் பேர் விதுரன். மத்தபடி சொல்லிக்கிற அளவுக்கு என்கிட்ட ஒண்ணும் கிடையாது”-னு தோளை குலுக்கினான். “ஏன்?அந்த அளவுக்கு என்ன ஆச்சு?”-னு மதுரியா பேசறதுக்குள்ளே, “ஸ்டாப் இட் மது.. ப்ளீஸ் ஸ்டாப்”-னு அலறினான்.

மதுரியா திகைச்சுப் போனா. அதுக்குள்ளே அவனே சுதாரிச்சு, “சாரி.. எனக்குப் பழசை பேச வேண்டாம். இன் ஃபாக்ட் எதுவுமே பேச வேண்டாம்.. யார் கிட்டேயும் பேச வேண்டாம். யாரையும் பார்க்க வேண்டாம். எனக்கு யாரும் வேண்டாம் டீ. நான் ஒரு ஃபெயிலியர்.. யூஸ்லெஸ்.. என் கர்வத்துக்கும் தலைக் கனத்துக்கும் திமிருக்கும் சரியான அடி வாங்கிட்டேன். ஸ்டஃப் இருந்து இவ்வளவும் இருந்து இருந்தா கூட வலிக்காது… எதுவுமே இல்லாம ஆடிட்டேன். ஐ டிசர்வ் இட். போதும்… எனக்கு யாரும் வேண்டாம். இன் ஃபாக்ட் மரணத்துக்கு காத்திருக்கேன் நான். எனக்கு வாழ்ந்த வரைக்கும் போதும்”-னு விரக்தியா சொல்லவும் மதுரியா கோபாவேசமா போயி “என்ன சொன்னே?”-னு கேட்டா. “எனக்கு சீக்கிரமா சாவு வரணும்”-னு விதுரன் முடிக்கறதுக்குள்ளே மதுரியாவோட கை இடி மாதிரி அவன் கன்னத்துலே இறங்குச்சு.

❤️ Loading reactions...
1 Comment
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top