காலையில் சர்வேஷைத் தனது அறைக்குத் தூக்கிச் சென்ற ஆதிரன், அதன்பிறகு அறையை விட்டு வெளியே வரவே இல்லை. அவனும் சர்வேஷுடன் மேலேயே இருந்தான்.
கீழே…
ஆதிரை மட்டும் அழுதுகொண்டே இருந்தாள். அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று வீட்டில் இருந்த யாருக்கும் தெரியவில்லை. “என் மகன் என்னை வெறுத்துவிட்டானோ…?” என்ற எண்ணம் அவள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அந்த எண்ணமே அவளது மனதை நொறுக்கிக் கொண்டிருந்தது.
சிறிது நேரம் கழித்து, நிலாவை அழைத்த ஆதிரை,
“நிலா… சர்வேஷ் இன்னும் சாப்பிடலடி. அவனுக்குப் பசி வந்திருக்கும்…” என்று கவலையுடன் கூறினாள்.
உடனே நிலா,
“அவன் சாப்பிட்டான்… நீ முதல்ல சாப்பிடு,” என்றாள்.
அதை கேட்ட ஆதிரை பதற்றமாக,
“சாப்பிட்டானா? எப்ப? யார் கொடுத்தாங்க?” என்று கேட்டாள்.
“லட்சுமி அம்மாதான் எடுத்துக்கொண்டு போய்க் கொடுத்தாங்க,” என்று நிலா கூறினாள்.
“ம்ம்ம்…” என்று மட்டும் தலையசைத்த ஆதிரை, மீண்டும் அமைதியாகிவிட்டாள்.
“ஆதிரை… நீயும் கொஞ்சம் சாப்பிடுடி,” என்று நிலா எவ்வளவோ வற்புறுத்தினாள்.
ஆனால்,
“எனக்குப் பசிக்கல…” என்று மட்டும் கூறிவிட்டு, தன் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள்.
ஆதிரனின் அறையில்…
சர்வேஷ், ஆதிரனின் மொபைலில் கேம் விளையாடிக்கொண்டிருந்தான். அவனது முழு கவனமும் அதிலேயே இருந்தது.
ஆதிரனோ, அவனைப் பார்த்தபடியே ஆழ்ந்த யோசனையில் மூழ்கியிருந்தான்.
“ஏன் சர்வேஷ் திடீரென்று என்னை ‘அப்பா’ன்னு கூப்பிட்டான்? யாரு அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருப்பாங்க? கண்டிப்பா யாரோ சொல்லிக் கொடுத்திருக்கணும். எப்பவும் அவன் ஆதிரைக்கூடத்தான் இருப்பான். ஆதிரையைத் தாண்டி யார் அப்படி சொல்லி இருப்பாங்க?”
என்று தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தான்.
அப்போதுதான் அவனுக்கு நேற்று கோவிலில் நடந்த சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது.
“நேத்து கோவில்லதான் ஏதோ நடந்திருக்கணும். அப்போதான் அவன் ஆதிரை இல்லாம தனியா இருந்தான். முதல்ல கோகுல்கிட்ட இருந்தான்… அங்கிருந்து என்கிட்ட வந்தான். அதுக்கப்புறம் வேற யார்கிட்டயும் போகல. அப்படின்னா…”
அவன் கண்கள் சுருங்கின.
“இது கோகுலோட வேலையா?”
என்று மனதிற்குள் நினைத்தவன், சட்டென்று சர்வேஷை நோக்கித் திரும்பினான்.
“சர்வேஷ் கண்ணா… போனை கொஞ்சம் தாங்க. அப்பா ஒரு கால் பேசிட்டு தர்றேன்,” என்றான்.
“ஓகே அப்பா…” என்று புன்னகையுடன் கூறிய சர்வேஷ், உடனே மொபைலை ஆதிரனிடம் நீட்டினான்.
அதை வாங்கிய ஆதிரன், நேராக கோகுலுக்கு அழைத்தான்.
மறுமுனையில் கோகுல் போனை எடுத்ததும்,
“கோகுல்… என் ரூமுக்கு வா.”
என்று மட்டும் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
இங்கே…
ஆதிரனின் குரலைக் கேட்ட கோகுலின் அடிவயிறே கலங்கிவிட்டது.
“ஐயையோ… சர்வேஷ் எல்லாத்தையும் போட்டுக்கொடுத்துட்டான் போலயே! இன்னைக்கு நாம செத்தோம்…”
என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டே மாடிப்படிகளை ஏறினான்.
ஆதிரனின் அறை வாசலுக்கு வந்து நின்றவன்,
“கடவுளே… நீதான் என்னைக் காப்பாத்தணும். ஊருக்குப் போனதும் சொந்த செலவுல உனக்குத் திருவிழா நடத்துறேன்…”
என்று மனதார வேண்டிக்கொண்டான்.
பிறகு கதவைத் தட்டிவிட்டு,
“மச்சான்…” என்று வழக்கம்போல் சிரித்த முகத்துடன் உள்ளே நுழைந்தான்.
அவனைப் பார்த்த ஆதிரன், ஒரு கணம் சர்வேஷைத் திரும்பிப் பார்த்தான்.
அவன் இன்னும் மும்முரமாக கேம் விளையாடிக்கொண்டிருந்தான்.
மீண்டும் கோகுலை நோக்கித் திரும்பியவன்,
“வா…”
என்று கூறிவிட்டு பால்கனிக்குச் சென்றான்.
கோகுலும் பயத்துடன் அவன் பின்னால் நடந்தான்.
பால்கனிக்கு வந்ததும், சில நொடிகள் அமைதியாக நின்ற ஆதிரன், பிறகு திரும்பி கோகுலைப் பார்த்து,
“ஏன் இப்படி பண்ணுன?” என்று கேட்டான்.
அந்த ஒரு கேள்வியிலேயே கோகுலுக்கு எல்லாம் புரிந்துவிட்டது.
“சரி… முடிஞ்சுச்சு. இனி அவ்வளவுதான்…”
என்று மனதிற்குள் நினைத்தவன்,
“நான்… நான் என்ன மச்சான் பண்ணேன்?” என்று தடுமாறியபடி கேட்டான்.
ஆதிரன் அவனை எரிப்பது போல் பார்த்தான்.
அந்தக் கூர்மையான பார்வையைத் தாங்க முடியாமல் பயந்துபோன கோகுல், இனி மறைக்க முடியாது என்பதை உணர்ந்தான்.
“நான் தான் மச்சான்… சர்வேஷ்கிட்ட உங்களை ‘அப்பா’ன்னு கூப்பிடச் சொன்னேன்…” என்று உண்மையை ஒத்துக்கொண்டான்.
ஆதிரன் அமைதியாக அவனைப் பார்த்துவிட்டு,
“அது எனக்குத் தெரியும். ஆனா ஏன் அப்படி சொல்லிக் கொடுத்த? உன்னாலதான் இன்னைக்கு ஆதிரை அவன் அடிச்சா. அதையெல்லாம் நீயும் பார்த்துட்டுத்தானே இருந்த?” என்று வருத்தமும் கோபமும் கலந்த குரலில் கேட்டான்.
ஆதிரனின் முகத்தில் தெரிந்த கோபத்தைப் பார்த்த கோகுல், குற்ற உணர்ச்சியுடன் தலையைக் குனிந்தான்.
“சாரி மச்சான்… ஆத்ரா தங்கச்சி இவ்வளவு கோபப்படுன்னு நான் நினைக்கல. அவ்வளவு பெரிய விஷயமா ஆகும்னு கூட எதிர்பார்க்கல,” என்றான் மெதுவாக.
அவனை முறைத்துப் பார்த்த ஆதிரன், “சரி… ஏன் அப்படி சொல்லிக் கொடுத்த? என்று கேட்டான்.
“அது… மச்சான்…” என்று தயக்கத்துடன் இழுத்தான் கோகுல்.
“இழுக்காம தெளிவா சொல்லு. ஏன் அப்படி சொன்ன?” என்று ஆதிரன் அதட்டியதும், இனி மறைத்துப் பயனில்லை என்று உணர்ந்த கோகுல், ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு நேற்று கோவிலில் நடந்த சம்பவத்தைச் சொல்லத் தொடங்கினான்.
நேற்று பெண்கள் அனைவரும் கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்த பிறகும், சர்வேஷ் கோகுலுடன் இருந்தான்.
“கொஞ்ச நேரம் இங்கயே நில் டா மாமா. உனக்குக் குடிக்க ஜூஸ் வாங்கிட்டு வந்துடுறேன்,” என்று கூறிவிட்டு அருகில் இருந்த கடைக்குச் சென்றான் கோகுல்.
சில நிமிடங்களில் ஜூஸுடன் திரும்பி வந்தவன், சர்வேஷ் ஒரே திசையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தான்.
“என்னடா இப்படி பார்த்துட்டு இருக்க?” என்று கேட்டுக்கொண்டு அவன் அருகில் வந்தான்.
கோகுலின் குரல் கேட்டதும் திரும்பிப் பார்த்த சர்வேஷ், தூரத்தில் இருந்த சில குடும்பங்களைச் சுட்டிக்காட்டி,
“மாமா… பாருங்க. அந்தப் பசங்கள எல்லாம் அவங்க அப்பா தோள்ல தூக்கி வச்சிட்டு போறாங்க…” என்றான்.
“எனக்கு மட்டும் ஏன் மாமா அப்பா இல்ல? என்னோட அப்பா சாமிகிட்ட இருக்காங்கன்னு அம்மா சொன்னாங்க. எல்லாரோட அப்பாவும் அவங்க பசங்க கூட இருக்காங்க. என் அப்பா மட்டும் ஏன் மாமா சாமிகிட்ட போனாரு?” என்று கேட்டான்.
அந்தக் கேள்வியைக் கேட்ட நொடி, கோகுலின் மனம் உடைந்து போனது.
ஒரு தந்தையின் அரவணைப்பிற்காக, இந்தச் சிறு மனம் இவ்வளவு ஏங்குகிறதா என்று நினைத்தவனுக்கு கண்கள் கலங்கின.
உடனே சர்வேஷைத் தூக்கிக்கொண்டவன், அவன் தலையை வருடியபடி,
“உன் அப்பாவ சாமிக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும் டா. அதனாலதான் அவரைத் தன்னோட கூட்டிட்டுப் போயிட்டாரு,” என்றான்.
அதை அப்பாவியாகக் கேட்ட சர்வேஷ்,
“அப்போ… சாமி என் அப்பாவ திருப்பி அனுப்ப மாட்டாரா?” என்று கேட்டான்.
கோகுலால் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
அந்தப் பிஞ்சு மனதை காயப்படுத்தவும் முடியவில்லை. பொய் சொல்லவும் மனம் வரவில்லை.
சில நொடிகள் யோசித்தவன்,
“அந்த அப்பாவ திருப்பி அனுப்ப மாட்டாரு… ஆனா அதுக்குப் பதிலா உனக்கு வேற ஒரு நல்ல அப்பாவ கொடுப்பாரு,” என்றான்.
அந்த வார்த்தையைக் கேட்டதும் சர்வேஷின் முகம் மலர்ந்தது.
“வேற ஒரு அப்பாவா? நிஜமாவா மாமா? எனக்குப் புது அப்பா கொடுப்பாரா சாமி?” என்று கண்களில் ஆயிரம் நட்சத்திரங்கள் மின்னுவது போல ஆர்வமாகக் கேட்டான்.
அவனது மகிழ்ச்சியைப் பார்த்த கோகுலும் புன்னகைத்தான்.
“கண்டிப்பா கொடுப்பாரு. நீ சாமி கிட்ட மனசார வேண்டிக்கோ,” என்றான்.
“சரி மாமா…” என்று மகிழ்ச்சியுடன் தலையாட்டினான் சர்வேஷ்.
சில நொடிகள் அமைதியாக இருந்த கோகுல், அவனது மனதை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்,
“சரி… உனக்கு எந்த மாதிரி அப்பா வேணும்?” என்று சிரித்தபடி கேட்டான்.
சர்வேஷ் சற்று நேரம் யோசித்தான்.
பிறகு கோகுலின் முகத்தைப் பார்த்து மிகவும் இயல்பாக,
“எனக்கு… ஆதிரன் அங்கிள் மாதிரி அப்பா வேணும்,” என்றான்.
அந்தப் பதிலைக் கேட்டதும் கோகுல் ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்துவிட்டான்.
“ஆதிரனா?” என்று மனதிற்குள் நினைத்தவன், அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு,
“ஏன் டா… ஆதிரன் அங்கிள் மாதிரி உனக்கு அப்பா வரணும்னு நினைக்கிற?” என்று மெதுவாகக் கேட்டான்.
சர்வேஷின் முகத்தில் ஒரு அழகான புன்னகை மலர்ந்தது.
“அவர் ரொம்ப நல்லவர் மாமா. என்ன ரொம்ப பாசமா பாத்துக்குறாரு. எனக்கும் அவர ரொம்பப் பிடிச்சிருக்கு. என்று சொன்னான் சர்வேஷ்
அந்த வார்த்தைகளைக் கேட்ட கோகுலின் மனம் ஒரு கணம் நெகிழ்ந்து போனது.
அந்த நொடியில், சர்வேஷின் ஆசை வெறும் குழந்தைத்தனமான ஆசையல்ல… ஒரு தந்தையின் அரவணைப்பிற்காக தினமும் ஏங்கும் ஒரு சிறு இதயத்தின் அமைதியான ஏக்கம் என்பதை கோகுல் நன்றாகவே உணர்ந்தான்.
சர்வேஷ் கூறிய வார்த்தைகள் கோகுலின் மனதில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தன. அந்தச் சிறுவனின் கண்களில் தெரிந்த ஏக்கமும், ஒரு தந்தையின் அரவணைப்பிற்காக அவன் மனம் ஏங்கிய விதமும் அவனை ஆழமாக யோசிக்க வைத்தது.
சில நொடிகள் அமைதியாக இருந்தவன், நிதானமாக யோசித்தான். அவன் பார்வையில், சர்வேஷின் ஆசையில் எந்தத் தவறும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆதிரனின் குணம், அவன் காட்டும் அன்பு, பாசம் எல்லாமே சர்வேஷுக்கு ஒரு தந்தையாக இருக்கத் தகுதியானவை என்று அவனுக்குத் தோன்றியது.
அதனால் சர்வேஷை அன்பாகப் பார்த்து,
“உனக்கு ஆதிரன் அங்கிள் மாதிரி அப்பா வேணும்… அவ்வளவுதானே?” என்று கேட்டான்.
“ஆமாம் மாமா!” என்று வேகமாகத் தலையாட்டினான் சர்வேஷ்.
அவனது பதிலைக் கேட்ட கோகுல் மெதுவாகச் சிரித்தான்.
“அப்போ சரி… இனிமே ஆதிரன்தான் உன்னுடைய அப்பா,” என்றான்.
அதைச் சற்றும் எதிர்பார்க்காத சர்வேஷ், கண்களை விரித்தபடி,
“என்ன மாமா சொல்றீங்க?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.
“ஆமாடா… நான் உண்மையாத்தான் சொல்றேன். உனக்கு ஆதிரன் அங்கிள் மாதிரி அப்பா வேணும்… அவ்வளவுதானே? அப்போ இனிமே ஆதிரன்தான் உன்னுடைய அப்பா,” என்றான். இனிமே அவரை அப்பான்னே கூப்பிடு,” என்று தெளிவாகக் கூறினான்.
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் சர்வேஷின் முகம் மலர்ந்தது.
“நிஜமாவா சொல்றீங்க? அப்போ நான் இனிமே அவரை ‘அப்பா’ன்னு கூப்பிடலாமா?” என்று குழந்தைத்தனமான மகிழ்ச்சியுடன் கேட்டான்.
அவனது ஆர்வத்தைப் பார்த்த கோகுலும் சிரித்துவிட்டு,
“தாராளமா கூப்பிடலாம். நீதான் இனிமே அவரை ‘அப்பா’ன்னு கூப்பிடணும். அவர் உன்னுடைய அப்பாதானே?” என்றான்.
அந்த வார்த்தைகளைக் கேட்ட சர்வேஷின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
உடனே கோகுல்,
“ஆனா… ஒரு கண்டிஷன்,” என்றான்.
உடனே சர்வேஷ்,
“என்ன மாமா?” என்று ஆர்வமாகக் கேட்டான்.
“யாராவது, ‘ஏன் ஆதிரனை அப்பான்னு கூப்பிடுற?’ன்னு கேட்டா… ‘எனக்குத் தோணுச்சு, அதனாலதான் கூப்பிட்டேன்’ன்னு சொல்லணும்.”
சர்வேஷ் புரியாமல் அவனைப் பார்த்தான்.
“நான் சொல்லிக் கொடுத்தேன்னு மட்டும் யார்கிட்டயும் சொல்லக்கூடாது. சரியா?” என்று கோகுல் எச்சரித்தான்.
சிறுவனோ அப்பாவியாக,
“ஏன் மாமா? பொய் சொல்லணுமா?” என்று கேட்டான்.
அந்தக் கேள்வியைக் கேட்ட கோகுல் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தான்.
“உனக்கு அப்பா வேணும்தானே?” என்று மெதுவாகக் கேட்டான்.
“ஆமாம்…” என்று உடனே தலையாட்டினான் சர்வேஷ்.
“அப்போ நான் சொல்ற மாதிரி செய். கண்டிப்பா ஆதிரன் அப்பா உனக்குத்தான். நீ அவரை அப்பான்னு கூப்பிடு. அவர் உன்னை விட்டு எங்கயும் போக மாட்டாரு,” என்று நம்பிக்கை அளிக்கும் விதமாகக் கூறினான்.
சர்வேஷும் குழந்தை மனதோடு அதை முழுமையாக நம்பினான்.
“சரி மாமா… நான் யார்கிட்டயும் நீங்க சொல்லிக் கொடுத்ததுன்னு சொல்ல மாட்டேன். இனிமே ஆதிரன் அப்பான்னுதான் கூப்பிடுவேன்,” என்று சந்தோஷமாகச் சொல்லிவிட்டு கோகுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டான்.
அவனைத் தழுவிக்கொண்ட கோகுலின் மனதிற்குள் ஒரு சிறிய குற்ற உணர்வு இருந்தாலும், அதைவிட சர்வேஷின் முகத்தில் தெரிந்த அந்த மகிழ்ச்சி அவனுக்கு நிம்மதியைத் தந்தது.
“இந்தப் பிஞ்சு மனசு இவ்வளவு சந்தோஷமா இருக்கே… ஒருநாள் உண்மையாவே ஆதிரன் இந்தக் குழந்தைக்கு அப்பாவா கிடைச்சா, அதைவிட பெரிய சந்தோஷம் வேற என்ன இருக்க முடியும்?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் கோகுல். அந்த எண்ணமே அவனது இதயத்தில் ஒரு இனிய நம்பிக்கையை விதைத்தது.
கோவிலில் நடந்த அனைத்தையும் கோகுல் ஆதிரனிடம் கூறினான். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்ட ஆதிரனின் மனதில், ‘சர்வேஷ் தந்தை பாசத்திற்காக இவ்வளவு ஏங்குகிறானா?’ என்ற எண்ணமே தோன்றியது. காலையிலிருந்தே குழப்பத்தில் தவித்தவன், அந்த நொடியிலேயே ஒரு உறுதியான முடிவை எடுத்தான். எது நடந்தாலும், யார் என்ன சொன்னாலும், இனி சர்வேஷுக்கு நான்தான் அப்பா இனிமேல் சர்வேஷ் ஆதிரனின் மகன் என்று முடிவெடுத்தான் ஆதிரன்
🤔 இந்த விஷயம் ஆதிரைக்கு தெரிய வந்தால் என்ன நடக்கும்? காத்திருந்து பார்ப்போம்…