அத்தியாயம் 02

அத்தியாயம் 02 

அடுத்த நாள் காலை இளவஞ்சியின் ஃபோன் விடாமல் அடித்ததில் தான் கண் விழித்தாள். 

நேற்றைய மன உளைச்சல், உடல் உபாதை இரண்டும் சேர்ந்து அவளை வாட்ட, உடல் அசதிக்காக மருந்துகள் எடுத்துக் கொண்டு தூங்கியவள், தூங்குவதற்கு முன் தன் தாய்க்கு அழைப்பை எடுத்து, நாளை காலை 6 மணிக்கு எழுப்பி விடுமாறு கூறிவிட்டு தான் படுத்தாள்.

அதேபோல் அவரும் அழைத்திருக்க, ஃபோனை எடுத்து, ஆன் செய்து சோர்வாக “குட் மார்னிங் மாம்…” என்று சொல்ல 

“எதுக்குடி அதிசயத்திலும் அதிசயமா காலையில ஆறு மணிக்கு என்ன எழுப்பி விட சொன்ன?…” 

“வேற எதுக்கு.. இந்த குண்டூர்ல இருக்குற காரமிளகாய கரெக்ட் பண்ண தான்…” என்று சொல்ல 

அந்த பக்கம் மெலிதாக சிரித்த திகாம்பரி “எப்படி இருந்த உன்ன ஒரு காதல் எப்படி எல்லாம் மாத்திடுச்சு இல்ல.. சரி எப்படியாவது நீ நினைச்சது நடக்கட்டும்…” என்று அவரும் ஆருடம் கூறி வைக்க 

இளவஞ்சியும் எழுந்து கொண்டவள், குளித்து முடித்து தயாராகி நேராக சென்று நின்றது என்னவோ வீரேந்திரனின் வீட்டின் முன்பு தான்.

வாயில் கேட்டில் நின்ற காவலாளி அவளை தடுத்து என்னவென்று விசாரிக்க, வீரேந்திரனை பார்க்க வேண்டும் என்று அவளும் சொல்ல 

அவளின் கெட்ட நேரமோ இல்லை வீரேந்திரனின் நல்ல நேரமோ, அவனின் தாய்க்கு விஷயம் தெரியும் முன் தனது உடற்பயிற்சி கூடத்தில் நின்று பயிற்சிகள் செய்து கொண்டிருந்தவன், கண்ணாடி வழி தன் வீட்டின் முன்பு நிற்பவளை கண்டு கொண்டான். 

உடனே அங்கிருந்து காவலாளிக்கு அழைத்தவன் என்ன நடந்தாலும் அவளை உள்ளே விடக்கூடாது என்று கட்டளையிட்டான். 

அழைப்பை ஏற்று பேசிய பின்னர் காவலாளி உள்ளே விட மாட்டேன் என்று மறுக்க, அது யாரின் வேலை என்பது இளவஞ்சிக்கு நன்றாக தெரிய 

அவளுக்கு அது போதுமே, அவன் தன்னை பார்த்து விட்டான் என்றால் இன்று எப்படியாவது அவன் மனதை கரைத்து விட வேண்டும். 

ஒன்று அவன் பிடிவாதம் ஜெயிக்க வேண்டும். இல்லை இவள் பிடிவாதம் ஜெயிக்க வேண்டும் என்ற பெரும் வைராக்கியத்துடன் அங்கேயே நின்றிருந்தாள். 

வீரேந்திரன் அவளை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை. தன் உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு குளிப்பதற்காக அறையை விட்டு வெளியேற 

அவனுடன் தான் தேஜாவும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். அவனும் இளவஞ்சியை பார்த்துவிட்டு “வீரா அந்த பொண்ணு வீட்டுக்கு முன்ன நிற்கிறா…” என்று சொல்ல 

“அவ ரோட்டுல நிற்கிறா.. ரோட்ல யார் வேணாலும் நிக்கலாம்.. அதுக்காக நம்ம என்ன பண்ண முடியும்…” என்று சொல்லி தோளை குலுக்கியவன் சென்று விட 

தேஜாவும் சலிப்பாக தலையை ஆட்டியவன் “அந்த பொண்ணுக்கும் அறிவு இல்ல.. சிங்கத்த சொறிஞ்சு விட சென்னையில இருந்து கிளம்பி வந்திருக்கு…” என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்றான். 

நண்பர்கள் இருவரும் குளித்து முடித்து சாப்பிட்டவர்கள், அலுவலகம் செல்ல வெளியேறினர். 

அப்போது கூட வீரேந்திரன் பார்வை அவள் மீது படியவில்லை. தேஜாதான் நண்பனை பற்றி தெரிந்ததால் இளவஞ்சியை பரிதாபமாக பார்த்தான். 

அவர்களைத் தொடர்ந்து ராமகிருஷ்ண ராவும் தனது அலுவலகம் செல்ல கிளம்பி வந்தார். அவரது கண்ணிலும் இளவஞ்சி விழ, முதலில் இவள் எதற்கு இங்கு வந்தாள் என்று திகைத்துப் பார்த்தவர், பின் அவளை கண்டு கொள்ளாமல் சென்று விட்டார். அவருக்குமே இளவஞ்சி மீது அத்தனை கோபம் இருந்தது. 

அங்கு உள்ளவர்களில் லட்சுமி தேவி மட்டுமே இரக்க குணம் கொண்டவர். என்னதான் இளவஞ்சியால் தன் மகன் மொத்தமாக உடைந்து, மேலும் இறுகிப்போய் இருந்தாலும், ஒரு பெண் தன் வீட்டு வாசலில் நிற்கின்றாள் என்றால், கண்டிப்பாக கருணை காட்டி உள்ளே அழைத்து அனுசரணையாக பேசியிருப்பார். 

ஆனால் அவரும் கோயிலுக்கு செல்வதை தவிர்த்து பெரிதாக வீட்டை விட்டு வெளியே வர மாட்டார். அதனால் தன் வீட்டின் வெளியே ஒரு பெண் அமைதி போராட்டம் செய்வது தெரியவில்லை. 

அதே சமயம் இளவஞ்சியும் அங்கேயே நிற்கவில்லை. வீரேந்திரனின் தந்தை தன்னை கண்டு கொள்ளாமல் சென்று விட்ட பின்னர், நிச்சயமாக வீட்டினுள் சென்று அவன் தாயை பார்க்க முடியாது. 

இவர்கள் இருவரும் அவளுக்கு இரக்கம் காட்டினாலும், இறங்கி வரவேண்டியது என்னவோ வீரேந்திரன் தானே. எனவே அந்த வழியால் வந்த ஆட்டோவை பிடித்துக் கொண்டு வீரேந்திரன் அலுவலகம் வந்து சேர்ந்தாள். 

அங்கேயும் அவளை செக்யூரிட்டி உள்ளே அனுமதிக்கவில்லை. 

அவனது அலுவலக அறையில் இருந்து பார்த்தால், அவள் தெரியும் அளவிற்கு ரோட்டில் ஓரிடத்தில் சென்று நின்று கொண்டாள். 

அவள் எதிர்பார்த்தது போன்று தனது அலுவலக அறையில் இருந்து இளவஞ்சியை வீரேந்திரன் கண்டு கொண்டான். 

அவனுக்கு கோபம் தான் கட்டுக்கடங்காமல் வந்தது. அவன் வெறியை தூண்டி விடுகின்றோம் என்று புரியாமல், அவன் தன்னிடம் வந்து பேசும் வரை அவனை விட்டு விலகுவதில்லை என்ற எண்ணத்தில் அங்கேயே நின்றாள். 

தேஜாவும் இளவஞ்சி அலுவலகம் வரை பின்தொடர்ந்து வந்து, அங்கேயே நிற்பதை பார்த்துவிட்டு 

“வீரா என்னனு ஒரு வார்த்த கேட்டுக்கலாமே…” என்று சற்று தயக்கத்துடன் தான் சொன்னான். 

நண்பனை பற்றி நன்கு தெரியுமே, இருக்கும் ஆத்திரத்தில் அவன் மண்டையை அடித்து உடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையே. 

“என்னடா கேக்கணும்?.. என்ன சொல்லிட போறாளுங்க பெருசா.. தெரியாம தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சிடுங்க இதுதானே.. இவளுங்க செய்றதையும் செஞ்சிட்டு கண்ணுல தண்ணிய வச்சிட்டு மன்னிப்பு கேப்பாளுங்க.. ஊருக்கு தெரியிற மாதிரி சிம்பதி கிரியேட் பண்ணுவாளுங்க.. நான் எல்லாத்தையும் மறந்துடனுமா.. பிளடி இடியட் ட்ராமா குயின்ஸ்…” என்று பல்லை கடிக்க 

“ஓகே கூல், கூல்…” என்று நண்பனை ஆற்றுப்படுத்தியவனுக்கு, வீரேந்திரன் அதிகப்படியான வெறுப்பை பெண்கள் மீது கொட்டுவதாகவே தோன்றியது. 

தேஜாவிற்கு புரியவில்லை பெண்கள் வாயில் இருந்து காதல் என்ற வார்த்தை வந்தால் கூட கொன்று போடும் வெறியில் இருக்கின்றான் வீரேந்திரன் என்று. 

இளவஞ்சியோ நின்ற இடத்தை விட்டு நகரவே இல்லை. எதுவும் சாப்பிடவும் இல்லை, மதியத்தை கடக்கும் போது வானம் இருட்டி மழையை கொட்டி விடுவேன் என்று காலநிலை வேறு பயமுறுத்தியது.

என்ன நடந்தாலும் என் மனதின் திடத்தை நிருபித்து, வீரேந்திரனை தன் வழிக்கு கொண்டு வருவேன் என்பதில் உறுதியாக இருந்தாள் பெண்ணவள்.

அப்படி ஒரு ஜீவனை தனக்கு தெரியாது என்பது போல் வீரேந்திரன் அலுவலகம் விட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

இளவஞ்சியும் அவனை பின்தொடர்ந்தது வந்து மீண்டும் அவன் வீட்டின் முன்பு நின்றாள். 

இதற்காக தான் காத்திருந்தேன் என்பது போல் இருண்டு, திரண்ட மேகங்கள் இடி மின்னலுடன் பூமிக்கு இறங்க, கொஞ்சமும் அசராமல் மொத்த மழையையும் தன் மென் தேகத்தில் வாங்கிக் கொண்டாள் பெண்ணவள். 

இரவு மணி ஒன்பதை தொட்டு இருந்தது. எந்த சலனமும் இல்லாமல் இரவு உணவை எட்டு மணிக்கே முடித்துக் கொண்ட வீரேந்திரன், எப்போதும் காஃபி அருந்தாதவன் இப்போது வேண்டும் என்றே காஃபி கப்புடன் பால்கனி வந்தவன், 

நான்கு மணிநேரமாக விடாது பெய்த மழையில் நனைந்து, குளிரில் தேகம் நடுங்க, இரு கைகளையும் குறுக்காக கட்டிக்கொண்டு பாவமாக அவன் அறையையே பார்த்திருந்த இளவஞ்சியை பார்த்துக் கொண்டே சூடான காஃபியை ரசித்து அருந்தினான். 

அவன் முகத்தில் இருந்த அந்த இதம், சூடான பானம் அருந்தியதால் இல்லை என்பது அவன் கொடூர புன்னகையிலேயே புரிந்தது இளவஞ்சிக்கு. 

(அவர மாதிரி பொண்ணுங்கள பாத்துக்க யாராலயுமே முடியாது) என்றோ ஒரு நாள் அவனை பற்றி சொல்லப்பட்ட வார்த்தைகள். ஆனால் இன்று! 

பெண்ணவளின் இதழ்களும் விரக்தியாக வளைந்தன. 

இளவஞ்சியால் சுத்தமாக முடியவில்லை. இருந்தும் ஏதோ ஒரு நம்பிக்கை வீரேந்திரன் சற்று இறங்கி வந்து, அவளின் வார்த்தைகளை காது குடுத்து கேட்பான் என்று. 

எனவே மயக்கத்தில் சொறுகும் விழிகளை இழுத்து பிடித்து அங்கேயே நின்றிருந்தாள். 

தேஜாவும் தனது அறையில் இருந்து இளவஞ்சியை தான் பார்த்துக் கொண்டிருந்தான். இதற்கு மேல் அவனால் அவள் படும் வேதனையை சகிக்க முடியாது என்று நண்பனை தேடி வந்தான். 

வீரேந்திரன் அறைக்கு வந்தவனுக்கு அவனுமே இரக்கமே இல்லாமல் இளவஞ்சி படும் கஷ்டங்களை ரசித்துக் கொண்டிருக்கின்றான் என்றதுமே கோபமாக வந்தது. 

“டேய் வீரா.. பாவம் டா அந்த பொண்ணு.. எதுக்குடா இப்படி பண்ற.. இருட்டுல மொழி தெரியாத ஊர்ல இப்படி வந்து கஷ்டபடுறாளே கொஞ்சமாச்சும் உனக்கு இரக்கம் வரலயா?…” என்று கேட்க 

“வரலயே.. கோபம் தான் வருது.. இன்னும் ஏதாவது பண்ணலாமானு தான் தோணுது.. எல்லாமே ட்ராமா.. நாளைக்கே ஊர விட்டு ஓடிடுவா.. நீ ரொம்ப பொங்காம போயி படு…” என்றவன் சென்று கட்டிலில் படுத்துக் கொள்ள 

‘ச்சே இவன பத்தி தெரியாம அந்த பொண்ணு வேற பிடிவாதமா இருக்கு…’ என்று கவலை பட்டவன் இளவஞ்சியை தான் பார்க்க வந்தான். 

அவன் அருகில் வரவும், இளவஞ்சி அதற்கு மேல் நிற்க முடியாமல் கீழே சரியவும் நேரம் சரியாக இருந்தது. 

உடனே விரைந்து அவளை தாங்கி கொண்டவன் “இளா!.. இளா!…” என்று அவள் கன்னம் தட்ட 

மயக்கம் இல்லை என்றாலும், சரிவர அவன் முகம் பார்க்க முடியாத அளவிற்கு பசி மயக்கமும், மழையின் குளிரும், நாள் முழுவதும் நின்ற சோர்வும் என்று அவளை மொத்தமாக சரித்து இருந்தது. 

கை தாங்கலாக அவளை அழைத்து வந்து, வீதியில் இருந்த ஒரு பென்ஞ்சில் சாய்த்து இருக்க வைத்தவன், அருகில் இருந்த ஒரு சாப்பாட்டு கடைக்கு சென்று முதலில் இரண்டு காஃபி வாங்கி வந்தான்.

ஒன்றை அவளிடம் கொடுத்து “ம்ம் முதல்ல இத குடிச்சு உன் போராட்டத்த முடிச்சுக்க…” என்று குடிக்க சொல்ல 

அதை வாங்க கூட முடியாமல் பெண்ணவளின் கை நடுங்கியது. எனவே அவனே “இரு நானே தர்றேன்…” என்று அவளின் அருகில் அமர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு பருக கொடுக்க, அவளும் காய்ந்து இருகி இருந்த தொண்டைக்கு இதமாக பருகினாள்.

காஃபியை முழுமையாக குடித்து முடித்த பின்னர் தான் இளவஞ்சிக்கு கண்களையே திறக்க முடிந்தது. 

தன் தோளில் கையை போட்டு சாய்த்து பிடித்து காஃபி பருக தந்தவனை இப்போது தான் கேள்வியாக பார்த்தாள். 

அவள் தெளிந்து விட்டாள் என்றதும் அவள் தோளில் இருந்த கையை எடுத்தவன் சற்று தள்ளி அமர்ந்து மற்றைய காஃபியையும் அவளிடம் நீட்டி “ இதையும் குடி…” என்று சொல்ல 

“தேங்க்ஸ்…” என்று வாங்கி கொண்டவள் “நீங்க?…” என்று கேள்வியாக நிறுத்த 

“தேஜா.. வீரேந்திரன் பிரெண்ட்.. உங்க விசயம் எனக்கும் தெரியும்…” என்று சொல்ல 

“ஓ…!” என்றவளுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. காஃபியை ஒரு மிடறு விழுங்கினாள். 

“எதுக்கு இவ்வளவு பிடிவாதம்.. அவன் உன்கிட்ட காட்டுற கடுமை அதிகம் தான்.. ஆனா அவன் கோபம் நியாயமானது.. கண்டிப்பா அவன சரி பண்ண முடியாது.. அந்த நிகழ்வுகள் உங்களுகுள்ள நடக்காம இருந்திருக்கலாம்…” என்று தேஜா சொல்ல 

“ம்ம்.. அவரும் எதிர் பாக்கல நானும் எதிர் பாக்கல.. ஆனா இப்போ அவரோட நேசம் உண்மையானு சந்தேகமா இருக்கு.. அவரால ஒரு பொண்ணு மசுக்குள்ள காதல் என்ற விதை ஆழமா ஊடுருவி அதோட வேர் உயிரின் ஆழம் வர பரவிடுச்சு.. அது அவருக்கு தெரியாதா..? இப்போ எதுவுமே வேணாம்னு பிடுங்கி எடுக்க சொன்னா வேரோட சேத்து இதயமும் சிதைஞ்சு வந்துடாதா.. பாசம் வச்ச இடத்துல வெறுப்ப காட்ட முடியுமா?.. அப்போ அந்த பாசம் பொய்ன்னு தானே அர்த்தமாகுது…” என்று சொல்ல 

“இதுக்கு பதில் அவன் தான் சொல்லணும்.. ஆனா ஒன்னு மட்டும் என்னால சொல்ல முடியும்.. அவன் வச்ச நேசம் எந்தளவுக்கு ஆழமா இருந்திருந்தா அவனுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அவனோட முதல் காதலையே வெறுக்குற அளவுக்கு கொண்டு போயிருக்கும்.. அவன் பாசம் உண்மை என்றதால தான் நம்பிக்கை துரோகத்தையும் ஏமாற்றத்தையும் தாங்கிக்க முடியாம இப்போ மனிதாபிமான இல்லாத மிருகமா மாறி நிக்குறான்…” என்று தேஜா நண்பனை விட்டு கொடுக்காமல் பேச 

“ஏமாற்றம் தான்.. ஆனா நம்பிக்கை துரோகம்னு சொல்லாதீங்க.. சூழ்நிலை கைதியா இருக்கிற ஒரு பொண்ணால தன்னோட காதல தக்க வச்சுக்க வேற என்ன பண்ணியிருக்க முடியும்.. தன்னோட காதல பத்தி யோசிக்கிறவரு காதலியோட இடத்துல இருந்து யோசிக்க மாட்டாரா.. அப்போ தன்னோட உணர்வுகள் மட்டும் தான் உசத்தினு நினைக்குற சுயநல காதலா அவரோடது…” என்று இளவஞ்சி கேட்க 

“இப்பவும் நான் பதில் சொல்ல முடியாது.. பட் நீ இப்படி பண்றது அவன் கோபத்த அதிக படுத்துமே தவிர குறைக்காது…” என்று மட்டும் உறுதியாக கூடியவன் 

“எங்க தங்கி இருக்க.. முதல்ல ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு.. நாளைக்கு பேசிக்கலாம்…” என்று அவள் நலனைப்பற்றி சொல்ல 

அவளும் தான் தங்கி இருக்கும் ஹோட்டலை சொல்ல “ஓகே, இரு நானே கொண்டு வந்து விடுறேன்…” என்றவன் உள் சென்று தன் காரை எடுத்தால் வீரேந்திரனுக்கு தெரிந்து விடும் என்று, அந்த வழியாக வந்த டாக்ஸி ஒன்றை நிறுத்தி இளவஞ்சியுடன் ஏறிக்க கொண்டான். 

அவளை ஹோட்டல் ரூம் வரை சென்று விட்டவன் “சரி டேக் கேர்.. முடிஞ்சா ஊருக்கு கிளம்பி போயிடு.. நீ கஷ்டபடுறத பாக்க முடியல…” என்று சொல்ல 

“இல்ல இந்தர் கிட்ட நியாயம் கேக்காம போக மாட்டேன்…” என்று இளவஞ்சி சொல்ல 

“அதுவரைக்கும் இங்கேயேவா தங்க போற…” என்று அவன் கேட்க 

“அதுதான் உங்க கிட்ட ஒரு ஹெல்ப் கேக்கலாம்னு நினைச்சேன்…” 

“என்ன?…” 

“இல்ல தங்குறதுக்கு வேற இடம் பாத்து தர முடியுமா?…” என்று இளவஞ்சி கேட்க 

சிறிது யோசித்தவன் “ம்ம்.. ஒரு இடம் இருக்கு.. உனக்கு ஓகேனா அங்கேயே தங்கிக்க.. காலையில வந்து கூட்டிட்டு போயி காமிக்கிறேன்…” என்று தேஜா சொல்ல 

“ரியலி!.. தேங்க்யூ ஷோ மச்!…” என்று அவள் சொல்ல 

“சரி மார்னிங் பாக்கலாம்…” என்ற தேஜா கிளம்பி விட 

உள்ளே வந்தவளுக்கு அப்போது தான் உடலின் உபாதைகளே தெரிந்தது.

முயன்று குளித்து முடித்தவள் தலையை கூட துவட்டாமல் அப்படியே படுத்து உறங்கி போனாள். 

இங்கோ டாக்ஸியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தேஜாவிற்கு இளவஞ்சியை பற்றிய யோசனை தான். அதோடு நண்பனை பற்றி சிந்தனைகளும் ஓடியது. 

ஆனால் வீரேந்திரனோ தேஜாவின் முன் தூங்குவது போல் படுத்துக் கொண்டாலும், அவன் அறையை விட்டு வெளியேறிய மறு நொடி, எழுந்து வேறு ஒரு அறைக்கு வந்தவன், ஒரு பக்க சுவற்றின் அளவிற்கு இருந்த திரையில் எதையோ பார்த்தவாறு அமர்ந்து விட்டான். 

விடியும் வரை அந்த திரையை விட்டு விழிகளை அசைக்கவில்லை. சென்னையில் இருந்து வந்ததில் இருந்து இது தான் நடக்கிறது. இரவில் தூக்கத்தை தொலைத்து, பகலில் அவனைத் தொலைத்து என்று வாழ காரணம் அந்த பொல்லாத காதல் தான். அதனால் தான் அதை வெறுக்கின்றான். அந்த காதலை தந்த வஞ்சியையும் வெறுக்கின்றான்.

வெறுப்பு விருப்பமாக மாறலாம், ஆனால் விருப்பு வெறுப்பாக மாறிய பின்னர் மீண்டும் நேசம் துளிர்க்க வாய்ப்பு உள்ளதா என்ன!

❤️ Loading reactions...
1 Comment
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top