அத்தியாயம் 03
ஆடையகத்திலிருந்த சேல்ஸ் பெண்ணோ ஒவ்வொரு சேலையாக எடுத்துப் போட்டு அகமேந்தியிடம்,
“மேடம் இந்த சாரி உங்களுக்கு பொருத்தமா இருக்கும்” என்று ஒரு தங்க ஜரிகை கொண்ட மெரூன் நிற சேலையை காட்ட அகமேந்தியோ,
அரசு தலைமறைந்ததை கண்டதும்,
“இங்கே பாருங்க எனக்கு ஒன்னும் வேணாம் உறவில்லாத உரிமையில்லாத ஒரு இடத்துல குண்டுமணிய கூட உரிமைக் கொண்டாடுறது பழக்கம் எனக்கில்ல”
என்று விட்டு கேஷாவை பார்த்தவள், “உரிமைப்பட்டவங்க உரிமைப்பட போறவங்க அவங்க தான் அவங்களுக்கு காட்டுங்க” என்றவள் கேஷாவிடம்,
“என்னம்மா உன் வருங்கால புருஷன்கிட்ட ஏன் இவள கூட்டிட்டு வந்தனு கேட்க கூட முடியாம தான் இருக்கியா? முதல்ல இந்த கல்யாணத்துல உனக்கு இஷ்டம் தானா?”
என்றவள் கேஷா வாயை திறக்கும் முன், “இதெல்லாம் எனக்கு தேவையில்லாத விஷயம் என்னவும் பண்ணுங்க ஆனா ஒன்னு உன் பியான்ஸே கிட்ட சொல்லி வை இனி என்ன பார்க்கவோ உரிமை கொண்டாடவோ வந்தா செருப்பு பிய்ஞ்சு போகும்”
என்று ஆங்காரமாக பேசி விட்டு ஆற்றலரசு வரும் முன் இடத்தை காலி செய்ய எத்தனித்த சமயம், அவனது உரமேறிய மார்பில் முட்டிக் கொள்ள அவனோ உக்கிரமாக அவளை உறுத்து விழிக்க,
இச் சமயம் தானும் அவனை எதிர்க்க துணிந்தவளாக அவனை முறைத்தபடி அசராது நின்றாள்.
ஆனால் இவர்களுக்கிடையில் மாட்டிக் கொண்டு பேந்த பேந்த விழித்தது என்னவோ கேஷா தான் அவளது காரியம் ஆகவேண்டுமென்றால் இனி அவனது ‘ஆடுறா ராமாவுக்கு’
ஆடியாக வேண்டிய இக்கட்டான சூழ்நிலை என்ன செய்ய முடியும்? வாயை இறுக பசைப்போட்டு ஒட்டிக் கொண்டவள் சேலையை தெரிவு செய்வது போல் பாவ்லா செய்ய,
இங்கு சேல்ஸ் பெண்ணுக்கும் கிடுகிடுவென கை நடுங்கியது. அரசுவோ அங்கிருந்த சேலைக் குவியலை பார்த்தவன் தாடியை நீவியபடி,
“செருப்பால அடிப்பியா? இப்போ காட்டுறேன்டி எப்படி உரிமை எடுக்குறேன்னு”
என்று அவள் காதுக்குள் முணுமுணுத்து விட்டு அவளை கடந்து சென்று அங்கிருந்த புடவை குவியலில் அவளுக்கு விருப்பமான மயில் வண்ண நிறத்தில் பட்டு புடவையை எடுத்தவன், சற்றும் அவகாசம் கொடுக்காது அவளது மேனியில் வைத்து,
“ம்ம் சூப்பரா இருக்கு” என்றபடி வேண்டுமென்றே அவளது உடலில் யாரும் அறியாது ஆங்காங்கே அத்துமீற அதில் எரிச்சலுற்றவளோ,
“நான் ஒரு முறை ட்ரையல் பார்த்துட்டு வாரேன்” என்று அச் சேலையை எடுத்துக் கொண்டு நகர அரசுவோ அவள் பின்னால் போக கேஷாவோ,
“இதை எடுக்குறேன்” என்று கூற அவனோ,
“எதையாவது எடு ஆனா ஐம்பதாயிரத்துக்கு குறையாம எடு அப்பறோம் குறைச்சி எடுத்தா உன் அப்பன் சும்மா கத்துவான் அப்பறோம் எனக்கு கோபம் வந்துச்சு”
என்று ஆள்காட்டி விரலை நீட்டியவன், “தொலைச்சிருவேன் பார்த்துக்க”
என்று விட்டு அவன் அகமி பின்னால் போக இங்கு அவளும் அவன் வருகைக்காக காத்திருந்தவள் போல் கன்னத்தில் ஒரு அறை ஓங்கி வைத்திருந்தாள்.
“என்ன தைரியம் இருந்தா கண்டபடி தொடுவ நான் ஒன்னும் உன் பொண்டாட்டி இல்ல ஏதோ மிரட்டுனதும் வந்துட்டா இதை வச்சே காரியம் சாதிக்கலாம் என்ன பண்ணுவானு யோசிச்ச அவ்ளோ தான் பார்த்துக்க”
என்று மிரட்ட அவனோ அதை எதிர்ப்பார்த்தவன் போல், “அட அட இந்த நிமிர்வு இந்த திமிரு இந்த கோபம் தான் அரசு பொண்டாட்டிக்கு அழகு சேர்க்குது”
என்றதும் அவளோ, “நான் ஒன்னும் உன் பொண்டாட்டி கிடையாது உனக்கு தெளிவா சொல்லிட்டேன் இப்டியே பேசிட்டு இருந்த ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள்”
என்று விழிகளை உருட்டி மிரட்ட ரசனையாக பார்த்தவன் மீண்டும் அவள் இதழ்களை சிறை செய்திருந்தான். அவனை காட்டிலும் மெல்லிய உடல்வாகு கொண்ட பெண்ணின் முயற்சியெல்லாம் தோல்வியில் முடிய அவன் இஷ்டம் போல தான் அத்தனையும் நடந்தது.
அவனது செயலில் கோபமுற்றவள், “ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவ உடம்புல கைவைக்கிறவன் சரியான ஆண்பிள்ளை இல்ல அது அவனோட பொண்டாட்டியா இருந்தா கூட”
என்று திட்ட அவனோ ஒரு கணம் அவளை தலையை சரித்து பார்த்தவன், “நானே அரசியல்வாதி என்கிட்டயே உன் பேச்சு திறமைய காமிக்கிற பார்த்தியா, சபாஷ்!”
என்றவன் ஆழமான குரலில், “அதுக்குன்னு வெண்ணையாட்டம் பொண்டாட்டி இருக்கும் போது அதுவும் அவ புருஷன் அவ மேல கொள்ளைப் பிரியம் வச்சிருக்கும் போது அவள சீண்டாம தீண்டாம இருக்குறது ஒரு ஆண்மகனுக்கு அழகா சொல்லு”
என்றதும் அவளோ, “போடா காட்டான்” என்று திட்டி விட்டு மீண்டும் கேஷாவின் அருகே நின்றுக் கொள்ள அவனுக்கு தான் அச் சொல்லை கேட்பதில் எத்தனை இஷ்டம்,
அதே சமயம் அரசுவுக்கு முக்கியமான அழைப்பேசி அழைப்பு வர அதில் காரசாரமான பேச்சு வார்த்தை நடத்தியவன் அழைப்பை துண்டித்தபடி கேஷாவிடம் வந்து
“என்ன ஆச்சா?” என்று கேட்க அவளோ, “எடுத்தாச்சுங்க”
என்று ஒரு புடவையை காட்ட அவனோ அதை ஒழுங்காக கூட பார்க்கவில்லை., பார்க்கவும் தோன்றவில்லை.,
“சரி சரி பேக் பண்ணு”
என்றவன் அதனை தொடர்ந்து தனது அடியாளிடம்,
“சங்கர் உங்க சின்ன அண்ணிய கொண்டு போய் வீட்டுல விடு நான் உங்க பெரிய அண்ணி கூட சின்ன வேலை இருக்கு முடிச்சுட்டு ஹார்பருக்கு வாரேன்”
என்று விட்டு கேஷாவிடம், “இங்கேபாரு வேறு ஏதும் வேணும்னா வாங்கிக்கோ சேலை மட்டும் தான் என் காசு மத்ததெல்லாம் உன் அப்பன் சொட்ட மண்ட பதுக்கி வச்சிருக்க காசுல இருந்து வாங்கிக்கோ சும்மா உனக்கு செலவழிக்க உங்க அப்பன் ஒண்ணும் எனக்கு கொடுத்து வைக்கல”
என்று கூற கேஷாவின் தலையோ ஆமோதிப்பாக அசைந்தது. கேஷாவை அங்கிருந்து கிளப்பியவனை புரியாது பார்த்த அகமியோ,
‘பதவிக்காக கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லுறான் ஆனா முதல்லயிருந்து அந்த பொண்ணுகிட்ட எரிஞ்சு எரிஞ்சு விழுறான் இதுல ஏதாவது விஷயம் இருக்குமோ? அப்டி இருந்தா அத வச்சு இவன பெருசா அடிக்கணும்’
என்று மனதுக்குள் உருப்போட, அரசுவோ, “என்னடி என்னைய எப்படி சாய்க்கலாம் எனக்கு எப்படி வலிக்க வலிக்க அடிக்கலாம்னு பிளான் போடுறீயா? அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் விளையாட்டு”
என்று கன்னத்தை கிள்ளியவன் ஆழ்ந்த குரலில், “இந்த ஆற்றலரச அழிக்க இன்னொருத்தன் பிறந்து தான்டி வரணும், அப்படியில்ல அழிக்கனும்னு கங்கணம் காட்டினா ஒரே ஒரு க்ளூ தாரேன் எனக்கும் பலவீனம் இருக்கு,
அது இங்கே என் கூட எப்போவும் இருக்கு அது எதுன்னு தேடி கண்டுப்பிடிக்கிறது உன் வேலை தான் முடிஞ்சா கண்டுபிடி”
என்று நெஞ்சில் கைவைத்துக் காட்டியவன் பிறகு அவளை பார்த்தபடி ஒய்யாரமாக கைகளை கட்டியபடி விசிலடிக்க அவளுக்கு தான் ஒன்றுமே புரியவில்லை.,
அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அங்கிருந்து நகர்ந்திருந்த அரசுவோ,
அவளது உடலை உறுத்தாத வகையில் ஐந்து பருத்தி புடவைகள் மற்றும் அழகிய வேலைப்பாடுடன் கூடிய மூன்று பட்டுப் புடவைகள் மற்றும் அகமி எடுத்த மயில் வண்ண புடவை என அத்தனைக்கும் பில் போட,
சேல்ஸ் பெண் தான் ‘பே’ என விழித்திருந்தாள். ஏனென்றால் அவன் கேஷாவிடம் கதைக்கும் போதும் பழகும் போதும் மனைவியாக வரப்போகிற பெண் மீது காட்டும் கரிசனை இல்லை அன்பும் இல்லை அக்கறையில்லை ஒரு வித கடுமையுடன் விலகி நில் என்ற தோரணை தான் இருந்தது.
இதே அகமியிடம் அதீத நெருக்கம் அவள் விலக விலக அவளை ஒட்டி நின்று தொல்லை செய்து இன்பம் காண்கிறான்., இவன் என்ன ரகம் என்று எல்லோருக்கும் குழப்பம் தான் எஞ்சியது. கேட்டால் முதல் மனைவி முன்னாள் மனைவி என்பான்.
அவன் வாங்கிய பொருட்களை கவனித்து அதிர்ச்சியடைந்த அகமியோ, “இதெல்லாம் எதுக்கு எடுத்து தர்ற?, எங்க அப்பா மட்டும் உனக்கு கொடுத்து வச்சாரா?”
அவனோ, “இங்கே பாரு என் பொண்டாட்டிக்கு நான் செய்றேன் செய்வேன் அதுல தலையிட எவனுக்கும் உரிமையில்ல ஏன்னு கேட்க உனக்கே உரிமையில்லை”
என்றவனை பார்த்ததும் அவளுக்கு சுர்ரென்று ஏறியது. திருமணமான புதிதில் இதெல்லாம் நடக்காத என்ற ஏக்கம் அவளுக்கு இருந்தது தான், ஆனால் இப்போது அத்தனையும் வெறுமையாய் போன சந்தர்ப்பத்தில் அவன் கொடுக்கும் எதையும் பெற அவள் மனம் விரும்பவில்லை.
“இங்கே பாரு காசு இருக்குன்னு வெட்டி செலவு பண்ணறதுன்னா பண்ணு நான் எதையும் எடுத்துட்டு போக மாட்டேன், அடுத்து இன்னொரு விஷயம் நான் உன் பொண்டாட்டி கிடையாது மாஜி பொண்டாட்டி அத நல்லா மண்டையில ஏத்திக்கோ”
என்றவள் அவளது கைப்பையை தூக்கிக் கொண்டு வெளியேற போக, அவளது கையை இறுக பற்றி இழுத்து தனது கைவளைவுக்குள் கொண்டு வந்தவன்,
“பரவால்லையே போலீஸ்காரன் நல்லா ட்ரெயின் பண்ணிருக்கான் போல முன்ன இருந்த அழுகுணிய விட இந்த திமிரழகிய ரொம்ப ரொம்ப பிடிக்குது நீயும் ஒன்ன
மண்டையில ஏத்திக்கோ பத்து பக்கம் கொண்ட பேப்பரோ இல்லாட்டி ஒரு ஜட்ஜ்ஜோ நம்ம உறவை தீர்மானிக்க முடியாது. நான், இந்த அரசு தான் தீர்மானிக்கனும் புரிஞ்சுதா?”
என்றதும் அவளோ திமிறிக் கொண்டு விலக எத்தனிக்க அவனோ அவளை இன்னும் இறுக பற்றிக் கொண்டு, “ஓவரா துள்ளதடி எங்க போனாலும் உன் முடிவிடம் இந்த அரசு தான்”
அவளோ, “மண்ணாங்கட்டி அன்னைக்கு கோர்ட்டுல அத்தனை பேருக்கு முன்னாடி என்ன அசிங்கப்படுத்தும் போதும் என்ன குறை பேசும் போதும் தெரியலையா இந்த வியாக்கியானம் தத்துவமெல்லாம்,
நீ கூப்பிட்டதும் ஓடி வர நான் என்ன உன் வீட்டு நாயா? நீ வாங்கி தர புடவைக்கும் நகைக்கும் சோரம் போக ஆயிரம் பொண்ணுங்க இருக்கலாம் முடிஞ்சா அவளுககிட்ட போய்”
என்றதும் அவனது கைகள் அவளது தாடையை இறுக பற்றி இருந்தது. “இங்கே பாரு நான் நல்லவனா இருக்க ட்ரை பண்றேன் தேவையில்லாம வார்த்தைகள விட்டு என் கோபத்த கிளறுற வேலை வச்சிக்காத”
என்றவன் அவளை விட்டுவிட்டு தள்ளி சென்று கொஞ்ச நேரம் குறுக்கும் நெடுக்குமாக நடந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு புடவைகள் அடங்கிய பைகளை காரில் போட்டவன் ஏதோ யோசனையில் நின்றவளை,
“வெத்தலை பாக்கு வைக்கணுமா? உனக்கு வா கிளம்பலாம்” என அழைத்துச் சென்றவன் அடுத்து நிறுத்தியது என்னவோ நகைக்கடையில் தான்
அவளோ, “இங்கே என்னத்துக்கு வந்திருக்கோம்?” என்றதும் அவனோ,
“ஹான் பூமாலைக்கு ஆர்டர் பண்ண அடச்சே! இறங்கு, தாலி என்ன உங்கப்பனா வாங்குவான்? கல்யாணத்துக்கு தாலி வாங்கி பூசை பண்ண வேணாம் அப்போ தானே உன் புருஷன் பதவி பந்தோபஸ்த்தோட கெத்தா வாழலாம்”
என்று காலரை தூக்கி விட அவளோ, “இல்ல கேட்குறேன் உனக்கு மனசாட்சின்னு ஒன்னு இருக்கா? யாராவது மாஜி பொண்டாட்டிய அதுவும் அவ்ளோ அசிங்கப்படுத்தி அனுப்பிட்டு இப்போ வந்து அவ கூட ரெண்டாவது கல்யாணத்துக்கு ஷாப்பிங் வருவாங்களா? உனக்கு கொஞ்சம் கூட உறுத்தல”
அவனோ, “அச்சச்சோ மனசாட்சியா அதெல்லாம் தூக்கி பரண் மேல போட்டு பத்து வருஷத்துக்கு மேல ஆகுது., அதனால உறுத்தலடி அடுத்து உறுத்துறதுக்கும் குற்றவுணர்ச்சிப்படுறத்துக்கும் தான் அவசியம் என்ன? நான் என்ன உனக்கு துரோகமா பண்ணுறேன்?”
என்றதும் அவளோ புருவ முடிச்சுடன் அவனை ஏறிட்டு, “இல்ல புரியல” என்று அவனது ஆக்கப்பூர்வமான விளக்கத்தை கேட்க எரிச்சலுடன் அவனை பார்க்க,
“துரோகம்னா உனக்கு தெரியாம இன்னொரு கல்யாணம் பண்ணுறது பொண்டாட்டி, ஆனா இப்போ பாரு உனக்கு தெரிஞ்சு தான் தாலியே எடுக்குறேன் அது மட்டுமா? நீயும் என்னோட சேர்ந்து தான் எல்லாம் பார்த்து பார்த்து எடுத்துக் கொடுத்து முன்ன நின்னு எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போற இது துரோகமா? சொல்லு”
என்றதும் அவளுக்கோ, ‘என்னடா உன் நியாயம் என்று தோன்ற’ அவளோ சட்டென எதையோ சிந்தித்தபடி தெளிவான குரலில்,
“இங்கே பாரு அரசு நான் தெளிவா இருக்கேன் உனக்கும் எனக்குமான பந்தம் முடிஞ்சு போனது கானல் நீரா கரைஞ்சும் போச்சு இப்போ கூட நீ செய்றதுல என் மனசுக்குள்ள எந்த பாதிப்பும் இல்ல ஏன்னா நான் தெளிவா இருக்கேன் நீ எதையோ எதிர்ப்பார்த்து இதெல்லாம் பண்ணுற ஆனா அந்த விஷயத்த என்னால தர முடியாது தரவும் மாட்டேன்”
என்று கூறி விட்டு முகத்தை திருப்ப அவனோ, “அது எவ்வளவு நாளைக்குன்னு நானும் பார்க்குறேன்”
என்று இறங்கஅவளது மனமோ, அவனது பலவீனம் எது? என்ற ஆராய்ச்சியில் இறங்கியது. இன்னும் அவனுடன் இருக்கும் நேரங்களை அவனது பலவீனத்தை அறிய பயன்படுத்த வேண்டுமென்று முடிவெடுத்தும் கொண்டாள்.
ஆனால் அவனது பலவீனத்தை ஒரு போதும் அவள் அறிய மாட்டாள். என்பது அரசுவின் கணிப்பு அது தான் நிதர்சனமான உண்மையும் கூட,
அதையெண்ணி கொடுப்புக்குள் சிரித்துக் கொண்ட அரசுவோ அவளது கையை பற்றி பிடித்தபடியே நகைக்கடைக்குள் நுழைந்து,
“தாலி செய்யனும்” என்று மேலாளரிடம் மொட்டையாக கூற அவரோ இவனது வரலாறு புவியல் எல்லாம் அறிந்தவர் ஆயிற்றே,
“என்ன மாதிரி டிசைன் வேணும் சார்?”
என்று பவ்யமாக கேட்க அவனோ கண்களால் அகமியை அளந்தபடியே அழுத்தமாக,
“ரெண்டு தாலி வேணும் ஒன்னு நல்லா பத்து சவரனுக்கு டாலடிக்குற மாதிரி, இன்னொன்னு கேரளா ஸ்டைல்ல சின்னதா கண்ணுக்கு உறுத்தாம கருகமணி போட்டு வேணும் ஆனா ஒரு தடவை கட்டுனா கீழ இறங்காத மாதிரி ஸ்ட்ராங்கா வேணும்”
என்றவனை விசித்திர ஜந்துவை பார்ப்பது போல் பார்த்த மேலாளரோ அவனிடம் எதையாவது கேட்டு வாங்கிக் காட்டிக்கொள்ளாமல், “சார் மெஷர்மண்ட்”
என்று இழுக்க அகமியை இழுத்து முன்னே விட்டவன்,
“இவள உட்கார வச்சு மெஷர் பண்ணிக்கோங்க”
என்றவன் அங்கிருந்த கதிரையில் அமர்ந்தபடி, அவளை உறுத்து விழிக்க,
அவளோ கோபமாக, “நீ என்ன பைத்தியமா? உனக்கு இதெல்லாம் தப்பா தெரில”
என்றதும் அவனோ சர்வசாதாரணமாக தோளை குலுக்கியபடி, ” சாத்தியமா தப்பா தெரில அண்ட் அஃப்கோர்ஸ் ஆமா உன்மேல பைத்தியமா இருக்கேன் உட்காருடி”
என்றவனிடம் ஏதோ சொல்ல வாயெடுக்க அதற்கு மேல் வாதம் செய்ய அவனங்கில்லை. கேஷா தான் அழைத்திருந்தாள். அழைப்பையேற்றுக் கொண்டு அங்கிருந்த மெட்டிகள் முத்து கொலுசுகள் என்பவற்றை பார்த்துக் கொண்டே
அவனுக்கேயுரிய கம்பீர குரலில், “என்ன விஷயம்?” என்று அழுத்தமாக கேட்க,
அவளோ,”வீட்டுக்கு வந்துட்டேன்” என்றவள் தயங்கியபடியே,
“அப்பறோம் ரொம்ப நன்றி நீங்க செய்ற எதையும், அதாவது எந்த உதவியையும் நான் வாழ்நாள்ல மறக்கமாட்டேன்”
என்றதும் அவனோ அகமியை பார்த்தபடி அழுத்தமான குரலில்,
“நான் ஒண்ணும் சேவையா பண்ணல என்னோட சுயநலத்துக்காக தான் பண்றேன் சும்மா எல்லா நேரமும் போனும் கையுமா திரியாத உன் அப்பன் சொட்ட மண்டை கண்கொத்தி பாம்பா பார்த்திட்டு இருப்பான்”
என்று விட்டு அவள் பதிலை எதிர்ப்பாராது அழைப்பை துண்டித்திருந்தான்.
இதே சமயம் துரியோதனன் அவனது அலுவலகத்தில் கோபத்துடன்,
“ஒரு விஷயத்தையும் உருப்படியா உங்களால பண்ண முடியாதாடா? என்ன ஜென்மங்களோ ச்சைக்,
உங்கள எல்லாம் வேலைக்கு வச்சிருக்க என்ன சொல்லனும் அந்த ஏ.சி.பியே எங்க எங்கனு இருப்பான் அவன்கிட்ட போய் வாலன்டியரா மாட்டி இருக்கீங்க அறிவில்லையாடா?”
என்று சரமாரியாக திட்ட அவனது பினாமி செல்வமோ, “வழமையா அந்தபக்கம் செக் போஸ்ட் இருக்காது அண்ணாத்த, அப்படியே இருந்தாலும் நம்ம ஆளுங்க யாரவது நிற்பாங்க இன்னைக்குன்னு ஏ.சி.பி ரோந்துக்கு வருவாருன்னு நாங்களும் எதிர்ப்பார்க்கல”
துரியனுக்கு அவன் கூறும் காரணங்களில் எரிச்சல் தான் கூடியது., “ஆமா நொண்டி குதிரைக்கு சறுக்குனது சாக்கு, டேய் மாட்டுன கண்டெய்னர் ஒவ்வொன்னும் அறுபது கோடி ரூபாடா”
என்றவன் கண்ணை மூடி எதையோ சிந்தித்து விட்டு நிதானமாக,
“எக்காரணம் கொண்டும் என் பெயர் அடிப்பட கூடாது நம்ம பசங்க யாரையாவது, ம்ம் இல்ல வேணாம் உன் தம்பி சிவத்த சரண்டர் ஆக சொல்லு ஒரு வாரத்துல பெயில்ல
எடுத்துரலாம் நான் அங்கிளையும் அரசுவையும் வச்சு நான் மூவ் பண்றேன் இனி நானா கூப்பிட மட்டும் கால் பண்ணாத”
என்று விட்டு அழைப்பை துண்டித்தவன் இருக்கையில் கண் மூடி அமர, அவனது இன்டர்காம் ஒலிக்க அதையேற்று காதில் வைக்க அப்பக்கம் அவனது மேலாளரோ,
“சார், ரிப்போர்ட்டர் பானுமதி மேடம் வந்திருக்காங்க” என்றதும் அவனோ மனதுக்குள்,
‘ஒரு பிரச்சனை இப்போ தான் முடிஞ்சது, அதுக்குள்ள அடுத்த ஏழரை வருது’
என்று திட்டியபடி, “உள்ள அனுப்பு” என்று விட்டு அழைப்பை துண்டிக்க அனுமதி கேட்காமல் உள்ளே தடாலடியாக நுழைந்தவளை,
பார்த்தவன் முகத்தில் கண்ணுக்கு தெரியாத சிறுபுன்னகை சாந்தமான லக்ஷ்மி கடாட்சமான முகம், பெரிய நெற்றி, அளவான உதடுகள் என்று சொல்ல முடியாது மேலுதட்டை காட்டிலும் கீழுதடு சற்று பெரிது தான், அதனால் தான் அதிகம் வாயாடுகிறாள். என்பது அவனது எண்ணம்,
மூக்கில் ஒற்றை வளையம் செதுக்கி வைத்த உடல்வாகு தான் முதுகளவே வளர்ந்திருந்த முடியை பின்னலிட்டிருந்தாள். முகத்திலும் நடையிலும் ஒரு கம்பீர தோரணை நெற்றியில் சற்று பெரிய கருப்பு பொட்டு மாநிறம் தான் அவள் ஆனால் அவன் பார்த்த பேரழகிகளில் இவள் தான் அவனை சுண்டி இழுத்தாள் என்றால் மிகையாகாது.,
அவளது துணிவு தான் அவனுக்கு பிடித்த விடயமே ஆனால் அதை வெளிப்படையாக சொன்னால் துரியோதனன் கிடையாதே, அவன் நினைத்திருந்தால் இந்நேரம் அவள் மண்ணுக்கடியில் நிரந்தரமாக உறங்கியிருப்பாள்.,
ஆனால் முடியவில்லையே அவளை கொல்லவும் முடியவில்லை., எங்கேயாவது போய் வாழ்ந்துக் கொள் என்று விடவும் முடியவில்லை., அது தான் இத்தனை காலம் விவாகரத்து வழக்கை இழுத்தடிக்கிறான்.,
“என்ன விஷயம்?” என்றான் ஒற்றை புருவமுயர்த்தி அவளோ,
“நெக்ஸ்ட் வீக் கோர்ட்டுல ஹியரிங் இருக்கு” என்றதும் அவனோ,
“சரி, இப்போ அதுக்கென்ன பண்ணனும்? வழமையா நடக்குறது தானே”
என்றவனை எரிச்சலுடன் ஏறிட்டவள், “எனக்கு இந்த முறை டைவர்ஸ் வேணும் மியூச்சுவலா பிரிஞ்சிருவோம்னு சொல்லுறேன் எதுக்கு ரெண்டு பேர் வாழ்க்கையும் வீணா போக”
அவனோ ஒற்றை புருவத்தை நடுவிரலால் நீவியபடி, “நல்ல ஐடியா தான், எனக்கும் ஓகே ஆனா அதுக்கு நீ ஒரு ஆறு மாசம் பொறுமையா இருக்கணும்”
என்றதும் அவளோ, “எதுக்கு?” என்றதும் அவனோ,
“ஏன்னா ஆறு மாசம் என்னோட வாழ்ந்து என்ன பிடிக்கலைன்னா ரெண்டு பேரும் டைவர்ஸ் பண்ணிக்கலாம், ஆனா ஒரு கண்டிஷன் எல்லா புருஷன் பொண்டாட்டி மாதிரி நார்மலா வாழனும் இந்த பகை வஞ்சம் வன்மம் எதுவுமில்லாம வாழ்ந்து பார்த்துட்டு டைவர்ஸ் பண்ணிக்கலாம்”
என்றதும் பானுமதியோ புருவம் சுருக்கி யோசித்தவள், “ஏதும் பிளான் பண்ணுறீயா? என்ன லாக் பண்ண பார்க்குறீயா?”
என்றதும் அவனோ ஒரு கோப்பை அவள் முன் தூக்கிப் போட்டு, அவனோ,
சாத்தியமா கிடையாது நான் கெட்டவன் தான் ஆனா கொடுத்த வாக்கு தவறமாட்டேன் இந்த அக்ரீமண்ட் படி ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு ஆறுமாசம் கழிச்சு வாழ பிடிக்கலைன்னா கூட கண்டிப்பா டைவர்ஸ் பண்ணிக்கலாம்னு இருக்கு, நல்லா வாசிச்சுட்டு சைன் பண்ணு”
என்றதும் அவளோ கண்களை ஓட்டியபடி, “என்ன இது?” என்று ஒரு இடத்தை காட்ட
அவனோ, “சாதாரண புருஷன் பொண்டாட்டியா வாழனும்மா, நம்மக்கிடையில எந்த பகையும் பழியுமில்ல”
என்று அழுத்தமாக கூற அவளோ, “அப்போ என்ன குழந்தைய கொடுத்து லாக் பண்ண பார்க்குறீயா?”
என்றதும் அவன் மனதுக்குள் ஒரு வித வலி விரவி பரவியது., தன் குழந்தையை சுமக்க தயங்குகிறாள். என்றால் எந்த அளவு காயப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தவனுக்கு நெஞ்சினோரம் வலித்தாலும் குரலை செருமிக் கொண்டு
“கீழ உள்ளதையும் சேர்த்து வாசி” என்றதும் அவள் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது.
அதற்கு பிறகும் சற்று தயங்கியவள், “ஏமாத்திர மாட்டியே?” என்று அவனை ஏறிட அவனோ முதுகு காட்டி நின்றபடி,
“சொன்ன சொல் மாற மாட்டான் இந்த துரியோதனன்” என்று உறுதியாக கூற
ஆறு மாதம் தானே சமாளித்து விடலாம் என்று அவளும், ஆறு மாதத்துக்குள் அவள் மனதை மாற்ற வேண்டுமென அவனும் மனதுக்குள் உறுதியாக இருக்க யார் எண்ணம் ஜெயிக்கும் என்பதின் பதில் காலத்தின் கையில் தான்..
தொடரும்…