💓அத்தியாயம் 《27》

அஞ்சலி, விக்ரமுக்காக  சாப்பாட்டை ஒரு தட்டில் எடுத்து மெதுவாக அவர்களின் அறைக்குச் சென்றாள். கதவைத் திறந்து உள்ளே சென்றபோது, விக்ரம் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்திருந்தான். அவனது முகத்தில் இன்னும் வலியின் சாயல் இருந்தது.

“சாப்பிடுங்க…” என்று மெதுவாகக் கூறி தட்டை அவன் முன் வைத்தாள். பிறகு அவளும் அவனருகில் அமைதியாக அமர்ந்தாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த விக்ரம், வீட்டில் யாரும் இல்லாததை கவனித்துவிட்டு,

“என்ன.. வீட்டுல யாரையும் காணோம். காலையிலேயே எல்லாரும் எங்க போயிட்டாங்க?” என்று கேட்டான்.

அஞ்சலி ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு,

“சர்வேஷ்க்கு காய்ச்சல் அதிகமாயிடுச்சு. ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்காங்க. கதிர் அண்ணா ஆதி மாமாவுக்கு கால் பண்ணி சொல்லி இருக்காரு. வீட்டுல இருந்த எல்லாரும் ஹாஸ்பிட்டலுக்குக் கிளம்பி போயிட்டாங்க…” என்றாள்.

“என்னது… ஹாஸ்பிட்டலா?” என்று பதறிய விக்ரம், “இப்ப எப்படி இருக்கான் சர்வேஷ்? நீ யாருக்காவது கால் பண்ணி கேட்டியா?” என்று அவசரமாகக் கேட்டான்.

“அம்மாவுக்குத்தான் இப்போ கால் பண்ணேன்…”

“என்ன சொன்னாங்க?” என்று அவன் பதற்றத்துடன் கேட்டான்.

அஞ்சலியின் அம்மா புஷ்பா, மருத்துவமனையில் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவளிடம் கூறியிருந்தார். டாக்டர் சொன்னது முதல், ஆதிரையின் அழுகை, ஆதிரனின் மனவேதனை, சர்வேஷின் நிலை—எல்லாவற்றையும் அப்படியே விக்ரமிடம் கூறினாள்.

அவள் பேசி முடித்ததும், விக்ரம் சில நொடிகள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

அந்த அமைதியை உடைத்தது அஞ்சலிதான்.

“பேசாம… ஆதி மாமா ஆதிரையை கல்யாணம் பண்ணிக்கலாம். சர்வேஷ்க்கும் அப்பா, அம்மா இருவரும் கூடவே இருப்பாங்க. பாவம் சர்வேஷ்…” என்றாள்.

அந்த ஒரு வார்த்தை விக்ரமுக்குள் மின்னல் போல தாக்கியது.

அவன் திடுக்கிட்டு அவளைப் பார்த்தான்.

அவனது பார்வையில் ஏதோ வித்தியாசம் இருப்பதை உணர்ந்த அஞ்சலி,

“என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.

விக்ரம் சற்றுத் தயக்கத்துடன்,

“ஆதி… ஆதிரைய கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையா?” என்று கேட்டான்.

அஞ்சலி புரியாமல் அவனைப் பார்த்தாள்.

“உங்களுக்கு பைத்தியமா? ஆதி மாமா யாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் எனக்கு என்ன பிரச்சனை?” என்றாள்.

விக்ரம் மெதுவாக,

“இல்ல… நீ அவரை லவ் பண்றதானே…” என்று சொல்லி முடித்தான்.

அந்த வார்த்தை அஞ்சலியின் காதில் விழுந்த அடுத்த நொடியே…

பளார்!

அவளது கை விக்ரமின் கன்னத்தில் ஓங்கி விழுந்தது.

விக்ரமின் கன்னத்தில் அவளது நான்கு விரல்களின் தடம் தெளிவாகப் பதிந்தது.

அவள் கோபத்தில் உடம்பே நடுங்கிக் கொண்டிருந்தாள்.

விக்ரம் அதிர்ச்சியில் கன்னத்தைப் பிடித்தபடி அவளையே பார்த்தான். அவன் கண்களில் வலியை விட அதிர்ச்சிதான் அதிகமாக இருந்தது.

“நீங்க என்ன மனுஷன்? கட்டின பொண்டாட்டிக்கிட்ட யாராவது இப்படிக் கேப்பாங்களா? உங்களுக்கு அறிவே இல்லையா?”

அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது.

“ஆமா… நான் ஆதி மாமாவை லவ் பண்ணேன். அது நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி! ஆனா நம்ம கல்யாணம் ஆன அன்னையிலிருந்து என் மனசுலயும் சரி… ஆதி மாமா மனசுலயும் சரி… அப்படி ஒரு எண்ணமே இல்லை. அவரை நான் என் மாமாவா மட்டும்தான் பார்த்தேன்.”

அவள் குரல் நடுங்கியது.

“அப்படியிருக்க… இவ்வளவு நாளா என்னைப் பற்றி இப்படித்தான் நினைச்சுட்டு இருந்தீங்களா? அதனாலதான் என்னை விட்டு விலகி இருந்தீங்களா?” என்று வேதனையுடன் கேட்டாள்.

“அஞ்சலி… அது வந்து…” என்று விக்ரம் ஏதோ சொல்ல முயன்றான்.

“போதும்!”

அவள் கையை உயர்த்தி அவனை நிறுத்தினாள்.

“இதுக்கு மேல ஒரு வார்த்தையும் பேச வேண்டாம். நான் அப்பா வீட்டுக்குப் வந்ததும் பேசுறேன். இனிமேல் நீங்க எனக்கு வேண்டாம். நாம டைவர்ஸ் பண்ணிக்கலாம்.”

அந்த வார்த்தையைக் கேட்ட விக்ரம் பதறிப்போனான்.

“அஞ்சலி… ஏன் இப்படியெல்லாம் பேசுற?” என்று அவசரமாகக் கேட்டான்.

அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு,

“வேற எப்படி பேசச் சொல்றீங்க? என்னைப் பற்றி இவ்வளவு கேவலமா நினைக்கிற ஒருத்தரோட என்னால ஒரு நிமிஷம் கூட வாழ முடியாது.”

அவள் குரலில் இருந்த வலி விக்ரமின் இதயத்தையே கிழித்தது.

“நீங்க மும்பைக்குப் போறேன்னு சொன்னப்போ கூட, இதுக்குப் பின்னாடி ஏதாவது காரணம் இருக்கும்னு நான் நினைக்கல. ஆனா இப்போ புரியுது… என் மேல சந்தேகப்பட்டதாலதான், என்னை விட்டு விலகிப் போகணும்னு நினைச்சுருக்கீங்க. சொல்லுங்க… நான் சொல்றது உண்மைதானே?” என்று கோபமும் கண்ணீரும் கலந்த குரலில் கேட்டாள்.

அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல், விக்ரம் தலைகுனிந்து அமைதியாக நின்றான்.

அவனது அந்த அமைதியே… அவள் நினைத்தது உண்மைதான் என்று காட்டியது 

அந்த நொடியே அஞ்சலியின் இதயம் சுக்குநூறாக உடைந்து போனது.

 

அஞ்சலியின் கண்களில் வலியும் வேதனையும் கலந்த கண்ணீர் இடைவிடாமல் வழிந்துகொண்டே இருந்தது. அவள் அழுவதைப் பார்த்த விக்ரமின் மனம் குற்றவுணர்ச்சியில் துடித்தது.

மெதுவாக அவளருகில் சென்றவன், அவளது இரு கைகளையும் பிடித்துக்கொண்டு,

“அஞ்சலி… சாரி…” என்று உடைந்த குரலில் கூறினான்.

ஆனால் அஞ்சலி, அவன் கைகளை வேகமாகத் தட்டிவிட்டாள்.

“என்னைத் தொடாதீங்க… இனிமேல் என் முகத்திலேயே முழிக்காதீங்க…” என்று கோபமும் வேதனையும் கலந்த குரலில் கூறிவிட்டு, ஒரு நொடியும் அங்கு நிற்காமல் அறையை விட்டு வெளியேறினாள்.

அவள் சென்ற திசையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த விக்ரம், தலையில் கையை வைத்துக்கொண்டு அப்படியே கட்டிலில் அமர்ந்துவிட்டான்.

“நான் என்ன பண்ணிட்டேன்…” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு,

 

இங்கு மருத்துவமனையில்…

அந்த அறை முழுவதும் அமைதியே ஆட்சி செய்தது.

டாக்டர் வந்து சர்வேஷை பரிசோதித்துவிட்டு, உடல்நிலை இப்போது சீராக இருக்கிறது என்று கூறிச் சென்றிருந்தார்.

ஆனால் அறையில் இருந்த யாருக்கும் நிம்மதி இல்லை.

யாரும் எதுவும் பேசவில்லை.

ஆதிரையும் யாரிடமும் பேசாமல், ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளது கண்கள் வீங்கியிருந்தன. அழுது அழுது கண்ணீரே வற்றிப்போனது போல தோன்றியது.

சிறிது நேரம் கழித்து…

சர்வேஷ் மெதுவாகக் கண்களைத் திறந்தான்.

கண் விழித்தவுடன், தன் அருகில் நின்றிருந்த ஆதிரனைப் பார்த்தான்.

அடுத்த நொடியே அவனது முகம் மலர்ந்தது.

“அப்பா…” என்று அழைத்தபடியே எழுந்து அமர முயன்றான்.

அதைப் பார்த்த ஆதிரன் பதறியபடி அவன் அருகில் சென்று,

“படுத்துக்கோடா கண்ணா…” என்று சொல்லிக்கொண்டே அவனை அன்போடு அணைத்துக்கொண்டான்.

ஆதிரனின் மார்பில் முகம் புதைத்த சர்வேஷ் அழுதுகொண்டே,

“அப்பா… ஏன் என்னைப் பாக்க வரல? அம்மா சொன்னாங்க… இனி நீங்க வரமாட்டீங்கன்னு…” என்றான்.

அந்த வார்த்தைகள் ஆதிரனின் இதயத்தை நொறுக்கின.

அவன் சர்வேஷின் தலையை மெதுவாக வருடிக்கொண்டு,

“இல்லடா கண்ணா… அப்பாவுக்கு கொஞ்சம் வேலை இருந்துச்சு. அதனாலதான் உன்னைப் பார்க்க வர முடியல. பாரு… இப்போ வந்துட்டேன்ல. இனிமேல் என் செல்லத்தை விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன்…” என்றான்.

அதை கேட்ட சர்வேஷ் இன்னும் இறுக்கமாக ஆதிரனை கட்டிப்பிடித்தான்.

அந்த காட்சியைப் பார்த்த அனைவரின் கண்களும் கலங்கின.

ஆதிரனும் சர்வேஷும் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த ஆதிரை, திடீரென்று எழுந்து நின்றாள்.

“அண்ணா… நான் வீட்டுக்குக் கிளம்புறேன்…” என்றாள்.

அவளது குரலில் உயிரே இல்லாத வெறுமை மட்டுமே இருந்தது.

அவள் பேசுவதை கேட்ட கதிர் உடனே அவளருகில் வந்து,

“என்னம்மா சொல்ற? சர்வேஷ்…” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.

ஆனால் அவன் பேச்சை இடைமறித்த ஆதிரை,

“அவனுக்கு இப்போ நான் தேவை இல்லை…” என்று வலியுடன் கூறிவிட்டு, யாருடைய பதிலுக்கும் காத்திருக்காமல் வேகமாக அங்கிருந்து நடந்து சென்றாள்.

அவள் பின்னால் கதிர் செல்ல முயன்றான்.

ஆனால் ஸ்ரீராம் அவனது தோளில் கை வைத்து தடுத்தார்.

“விடு கதிர்… இப்போ அவளை தனியா இருக்க விடு. இந்த நேரத்தில் அவளுக்கு அமைதிதான் தேவை…” என்று மெதுவாகக் கூறினார்.

கதிரும் வேறு வழியில்லாமல், வேதனையுடன் ஆதிரை சென்ற திசையையே பார்த்துக்கொண்டு அங்கேயே நின்றுவிட்டான்.

 

ஆதிரை அறையை விட்டு வெளியேறியதும், சில நொடிகள் அனைவரும் அமைதியாகவே நின்றனர். அந்த அமைதியை உடைத்தது ஸ்ரீராம்தான்.

ஆழமாக ஒரு மூச்சை இழுத்தவர், கதிரை நோக்கிப் பார்த்து,

“கதிர்… நாங்க இதைப் பற்றி உன்கிட்ட வீட்டுக்கு வந்து அமைதியா பேசணும்னுதான் நினைச்சிருந்தோம். ஆனா இப்படி ஒரு சூழ்நிலையில, ஹாஸ்பிட்டல்ல வெச்சு பேச வேண்டிய நிலை வரும் என்று கொஞ்சம்கூட எதிர்பார்க்கல…” என்றார்.

அவர் பேசிக்கொண்டே, ஆதிரனின் மடியில் அமைதியாக சாய்ந்திருந்த சர்வேஷை ஒரு கணம் பார்த்தார். பிறகு மீண்டும் கதிரின் முகத்தை நோக்கி,

“கதிர்… ஆதி ,ஆதிர கல்யாணத்த பற்றி உன்கிட்ட பேசனுமா என்றார்.

அந்த வார்த்தையைக் கேட்டதும், கதிர் அதிர்ச்சியில் உறைந்து போனான்.

“அங்கிள்… என்ன சொல்றீங்க?” என்று பதற்றத்துடன் கேட்டான்.

ஸ்ரீராம் அமைதியாகச் சிரித்துவிட்டு,

“நாங்க நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கோம், கதிர். இது அவசரப்பட்டு எடுத்த முடிவு இல்ல.”

“ஆதிரன்கிட்டயும் நாங்க இதைப் பற்றி பேசிட்டோம். அவனுக்கும் இதுல எந்த மறுப்பும் இல்லை. ஆதிரை எங்க வீட்டுக்கு மருமகளா வந்தா, அதைவிட எங்களுக்கு வேற சந்தோஷம் எதுவும் இருக்காது…” என்றார்.

கதிர் சில நொடிகள் என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் நின்றான்.

“அங்கிள்… இப்படி திடீர்னு சொல்றீங்க. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. ஆனா… ஆதிரை இதுக்குச் சம்மதிக்க மாட்டா. அவ மனநிலையே இப்போ சரியில்லை…” என்றான் தயக்கத்துடன்.

“அப்படி சொல்லாத கதிர்…” என்று ஸ்ரீராம் அவன் தோளில் கை வைத்தார்.

“நீதான் அவளை சம்மதிக்க வைக்கணும். உன் பேச்சை அவள் கேட்பா.”

சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், குரல் தழுதழுக்க,

“அவளுக்காக இல்லன்னாலும்… சர்வேஷ்க்காக இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கச் சொல்லு.”

அவர் பேசும்போது, ஆதிரனின் மடியில் இருந்த சர்வேஷ், ஆதிரனின் சட்டையை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தான்.

அந்தக் காட்சியைப் பார்த்த ஸ்ரீராம் மீண்டும் பேசினார்.

“இந்தக் குழந்தைக்கு இப்போ அம்மாவும் வேணும்… அப்பாவும் வேணும். அவன் இனிமேலும் இப்படியே ஏக்கத்தோட வளரக்கூடாது. அவனுக்கு ஒரு முழுமையான குடும்பம் கிடைக்கணும். அதுக்கு ஆதிரை  இந்த கல்யாணத்துக்கு  சம்மதிக்கனும் 

 

ஸ்ரீராமின் ஒவ்வொரு வார்த்தையும் அங்கிருந்த அனைவரின் மனதுக்கும் சரி என்றே பட்டது.  

கதிரோ ஆழ்ந்த யோசனையில் மூழ்கினான்.

ஒருபுறம் தங்கையின் மனவேதனை…

மறுபுறம் சர்வேஷின் எதிர்காலம்…

இரண்டிற்கும் நடுவே சிக்கிக்கொண்டு, எந்த முடிவை எடுப்பது என்று தெரியாமல் அவன் அமைதியாக நின்றான்.  

தொடரும் 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top